ஒளிப்பதிவாளர் ஆர் என் கே பிரசாத்தை நினைக்கும் போதெல்லாம்
அவரது நெடிதுயர்ந்த தோற்றமும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் முகமும்தாம்
நினைவுக்கு வரும். எப்போதும் கலகலப்பாகவே இருப்பார். கன்னடம் கலந்த தமிழில் ஏதாவது
ஜோக்குகள் உதிர்த்துக்கொண்டே இருப்பார். அவர் இருக்கும் இடம் எப்போதுமே சிரிப்பால்
அதிர்ந்துகொண்டேதான் இருக்கும்.
மிகவும் சாத்வீக குணம். யாரையும் எடுத்தெறிந்து
பேசமாட்டார். யாரிடமும் விரோதம் பாராட்ட மாட்டார். எதையாவது பிடிக்கவில்லை என்று சொல்லவேண்டிவந்தாலும்
சம்பந்தப்பட்டவரின் மனம் நோகாத வண்ணம் பூவை மேலே எறிவது போல்தான் மிகவும்
நாசுக்காகத் தமது கருத்தை வெளிப்படுத்துவார்.
தமிழில் அவ்வளவாக எல்லாருக்கும் தெரிந்த முகமாக இவர்
இல்லையே தவிர கன்னடத்தில் மிகமிகப் பிரபலம். இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே
மக்கள் மத்தியிலும் கன்னடத் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் மட்டுமல்ல ;
மிகவும் மரியாதைக்குரியவர்களாகவும் மதிக்கப்பட்டவர்கள்.
கன்னடத்திரைப்படங்களின் தந்தையர் என்று அழைக்கப்படுபவர்கள்
இரண்டு பேர். ஒருவர் குப்பி வீரண்ணா. இன்னொருவர் ஆர். நாகேந்திர ராவ். குப்பி
வீரண்ணா நம்முடைய சிவாஜி கணேசன், ராஜ்குமார் போன்றவர்களைத் தம்முடைய நாடகக்
கம்பெனி மூலம் உருவாக்கியவர். அடுத்தவர் கன்னடத்திரைப்படங்களுக்கு முன்னோடியாகவும்
வழிகாட்டியாகவும் இருந்து பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தவர்-
ஆர்.நாகேந்திர ராவ். அவரது மூத்த மகன்தான் ஆர்என்கே பிரசாத்.
பிரசாத் மூத்த மகன் என்பதோடு முடிந்துவிடவில்லை.
ஆர்.நாகேந்திர ராவுக்கு மூன்று மகன்கள். மூவருமே கன்னடத்திரைப்பட உலகில் பிரபலம்.
ஆர்என்கே பிரசாத் – ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர், அவரது இளவல் ஆர் என்
ஜெயகோபால்தான் கன்னடத்திரை உலகின் கண்ணதாசன்.
மிகப்பிரபலமான திரைஇசைக் கவிஞர்.
கடைசித்தம்பி சுதர்சன் மிகப்பெரிய வில்லன் நடிகர்.
மற்ற சகோதரர்கள் இருவரும் கன்னடத்திலேயே நின்றுவிட
(சுதர்சன் ஓரிரு தமிழ்ப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி
ஷைலஸ்ரீயும் ஒரு நடிகையே.) பிரசாத் மட்டும் தமிழிலும் ஒரு சுற்று வலம் வந்தவர்.
மொத்தம் எண்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்என்கே பிரசாத்
அன்னக்கிளியின் வெற்றிக்குப் பின்னர் தேவராஜ் மோகன் இயக்கிய பல படங்களில்
ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்து பணியாற்றியவர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில்,
சிட்டுக்குருவி, பூந்தளிர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
“கமலஹாசன் படத்துல ஒளிப்பதிவாளராகப் பணியாற்றணும்னு
மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்தது. இதை அவரிடமும் சொல்லியிருந்தேன். ஆமா உங்களோடு
பணிபுரியணும்னு எனக்கும் ஆசை இருக்கு. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்னு கமல்
சொல்லியிருந்தார். திடீர்னு கமல் ஒரு நாள் போனில் கூப்பிட்டார். நாம இணைந்து ஒரு
படம் பண்ணுவோம்னார். சரிதான் ஒளிப்பதிவுக்கு நல்ல வேலையிருக்குன்னு நினைச்சி
விவரம் கேட்டா “சார் நீங்க மட்டுமில்லை. நீங்களும் உங்க மத்த இரண்டு சகோதரர்கள் என்று
மூன்று சகோதரர்களும் என்னோட நடிக்கிறீங்க. மூணுபேரும் மிகப்பெரிய வில்லனுங்க.
தாதாவுங்க..என்ன சரிதானே?” என்கிறார். ஒரு கணம்
ஒன்றுமே புரியவில்லை. நான் பரவாயில்லை. சுதர்சனும் பரவாயில்லை.
ஜெயகோபால்
கன்னடத்தில் பெரிய கவிஞர். அவர் எப்படி வில்லனாக என்று தயங்கினேன். “அதெல்லாம்
ஒண்ணும் பாதிக்காது. இது பாருங்க ஒரு புது மாதிரியான அனுபவத்தைத்தரும்” என்றார். கமல் எப்போதுமே இப்படி குறும்பாக வித்தியாசமாக
எல்லாம் சிந்திக்கக் கூடியவர். அவர் சொன்னபடியே நாங்க மூணுபேரும் நடித்தோம்.
எங்களுக்கு அது வித்தியாசமாக இருந்ததுடன் பட்டி தொட்டியெல்லாம் எங்களைப்பற்றிய
அறிமுகம் கிடைத்தது ஒரு பெரிய அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்” என்று போனில் அவர் உற்சாகமாக நாயகனிலும் மைக்கேல் மதன
காமராஜனிலும் ‘நடித்த’ அனுபவத்தைச் சொன்னது
இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது.
இவர் ஒளிப்பதிவாளராக ஆரம்பித்தது என்னவோ அவரது தந்தையார்
இயக்கிய ‘பிரேம புத்ரி’ என்ற படத்தின்
மூலமாகத்தான். ஆனால் அதற்குப்பின்னர் புட்டண்ண கனகல், லட்சுமி நாராயண்
போன்றவர்களின் படங்களில் பணியாற்றி ஒளிப்பதிவுக்காக நிறைய விருதுகள்
வாங்கியிருக்கிறார். நாந்தி, பெள்ளிமோடா, விஜயநகரத வீரபுத்ரா மூன்றும் இவருக்கு
விருதுகள் வாங்கித்தந்த படங்கள்.
இவரே இயக்கி ஒளிப்பதிவும் செய்த ‘நகுவ ஹூவு’(சிரிக்கும் மலர்) என்ற படம் ஜனாதிபதியின் தங்கப்பதக்கம்
பெற்றது. ஒளிப்பதிவு குறித்து இவர் எழுதியிருக்கும் புத்தகம் இன்றைக்கும்
ஒளிப்பதிவு கற்பிக்கும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும்
கொஞ்சமும் அலட்டலோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல்தான் பழகுவார்.
இவரது சகோதரர் ஆர் என் ஜெயகோபால் எழுதி இயக்கிய ‘கெசரின
கமலா’ படத்திற்கு இவர்
ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்தப் படத்தின் மீது அசாத்திய நம்பிக்கை இருந்தது
இவருக்கு. ஒரு விலைமாது பற்றியது அந்தப் படம். கன்னடத்தில் அப்போது உச்ச
நட்சத்திரமாக இருந்த கல்பனா கதாநாயகியாய் நடித்திருந்தார். கெசரின கமலா என்றால்
சேற்றுத் தாமரை என்று அர்த்தம். அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு
அழைத்திருந்தார். கல்பனாவும் வந்திருந்தார். படம் முடிந்ததும் ‘எப்படியிருக்கிறது?’ என்று கேட்டார். “கல்பனா நன்றாக நடித்திருக்கிறார்.
உங்களுடைய ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. மற்றபடி படம் ரொம்பவும் சுமாராகத்தான்
இருக்கிறது.” என்றேன். அவர் முகம்
வாடிவிட்டது. “என்ன சார் இது? நாங்க பிரசிடெண்ட் அவார்டு, உலகத்திரைப்பட விழா
என்றெல்லாம் கற்பனையில் இருக்கிறோமே” என்றார். அந்தப்
படம் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. தவிர ஓட்டமும்
வெகு சுமாரானதாகவே இருந்தது. தவிர இந்தப் படம் வெளிவந்து சில மாதங்களிலேயே கல்பனா
தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டார். அடுத்த சந்திப்பில் கல்பனாவுக்காக அவர்
வருத்தப்பட்டது ஒரு உண்மையான மனிதாபிமானியை மிக உருக்கமான முறையில் வெளிக்காட்டிய
நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.
என்னுடைய நண்பர் மாருதி சிவராம் இயக்கிய மகாதியாகா என்ற
கன்னடப் படத்திலிருந்துதான் ஆர்என்கே பிரசாத் எனக்கு அறிமுகம். மாருதி சிவராம்
ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் ஒரிஜினல் படமான பரசங்கத கெண்டே திம்மா என்ற
கன்னடப்படத்தின் இயக்குநர். சந்தித்தவுடன் என்னுடைய விலாசம் பெற்றுக்கொண்டு
சென்றார் பிரசாத். அடுத்த வாரத்தில் ஒரு கடிதம் வருகிறது. பிரித்தால் இவர் தமிழில்
எழுதியிருக்கும் கடிதம். ‘என்னுடைய தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும்.
மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு தமிழ் எழுத்தாளருக்குத் தப்பும் தவறுமாய் கடிதம்
எழுத எவ்வளவு தைரியம் வேண்டும் எனக்கு? ஆனால் தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் நான்
தொடர்ந்து தங்களுக்கு இந்தத் தப்பைச் செய்யப்போகிறேன்’ என்று தொடங்கி மூன்று பக்கங்களுக்கு எழுதியிருந்தார்.
இந்தக் கடிதப்போக்குவரத்து ஒரு நான்கைந்து ஆண்டுகள் தொடர்ந்து பின்னர் அப்படியே
நின்றுவிட்டது. இதற்குள் ஒரு பத்துக்கடிதங்களாவது அவரிடமிருந்து வந்திருக்கும். சந்தர்ப்பங்களில் நல்ல தமிழில் எழுதப்படும்
கடிதங்களைவிடவும் இம்மாதிரி தமிழ் மீது ஆர்வம்கொண்ட மற்ற மொழிக்காரர்கள் சிற்சில
எழுத்துப்பிழைகளுடன் எழுதும் கடிதங்கள் மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கும் என்பது இவரின் கடிதங்களைப் பார்க்கும்போதுதான்
விளங்கும்.
பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதியிலேயே
கட்டப்பட்டிருந்தது இவரது வீடு. அண்ணனும் தம்பியும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில்
குடியிருந்தனர். நானும் அகிலன் கண்ணனும் மற்றொரு நண்பருமாக இவரது வீட்டிற்கு ஒரு
மாலை சென்றிருந்தபோது எங்களை அத்தனைப் பிரியமாய் உபசரித்து இரவு உணவு
உட்கொள்ளவைத்து அனுப்பிவைத்த பாங்கினை இப்போதும் நெகிழ்ச்சியாய் நினைத்துக்கொள்ளத்
தோன்றுகிறது.
சிட்டுக்குருவி படத்தின்போது மைசூரில் படப்பிடிப்பு
முடித்து சென்னை திரும்புகிற வழியில் வீட்டிற்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார்.
அவருடன் ஒரு இனிய ஆச்சரியமாக ஆர்.என்.கே.பிரசாத். “பார்த்தீங்களா? நீங்க
வீட்டிற்கு வரச்சொல்லிக் கூப்பிட்டப்ப எல்லாம் என்னால வரமுடியலை. இப்ப நீங்களே
எதிர்பாராதவிதமா வந்து நின்னுட்டேன்” என்று சிரித்தார்.
சிவகுமார் வந்திருப்பது தெரிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வீட்டில் ஏராளமான
கூட்டம் கூடிவிட்டது. இந்தக் களேபரத்தில் ஆர்என்கே பிரசாத்தின் செருப்பை யாரோ
திருடிக்கொண்டு போய்விட்டார்கள். தேடிப்பார்த்துக் கிடைக்காமல் விமானத்துக்கு
நேரமாகிறது என்பதால் கிளம்பிப் போய்விட்டார்கள். சென்னை போனதும் கடிதம்
எழுதியிருந்தார்.
‘உங்கள் வீட்டிற்கு வந்து சென்றது ஒரு மறக்கமுடியாத ஆச்சரியமான
அனுபவம். இதுவரை வெறுங்காலுடன் விமானத்தில் பயணம் செய்ததில்லை. அன்றைக்கு அந்த
வாய்ப்பு கிடைத்தது. எனக்கு என்ன வருத்தம் என்றால் அந்தச் செருப்பை
எடுத்துக்கொண்டு போன ரசிகன் நிச்சயம் அது என்னுடையது என்பதற்காக
எடுத்துச்சென்றிருக்க மாட்டார். சிவகுமாருடையது என்று நினைத்துத்தான்
எடுத்துச்சென்றிருப்பார்.
சிவகுமாருடையதை எடுத்துச் சென்றிருந்தாலாவது அதனை அவரால்
உபயோகித்திருக்க முடியும். என்னுடைய கால் சைஸ் ரொம்பவும் பெரியது. நிச்சயமாக அதனை
அவரால் உபயோகிக்க முடியாது. இதற்காக நிச்சயம் நான் அந்த நண்பர் மீது
பரிதாபப்படுகிறேன்’.....இப்படித்தான்
எல்லாவற்றையும் சுலபமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்வது அவரது பாங்கு.
ஆரம்பத்தில் ஒருநாள் அவரது அப்பாவைப் பற்றி விசாரித்தேன்.
“அப்பாவும் அம்மாவும் பெங்களூர்ல இருக்காங்களா அல்லது சென்னையில இருக்காங்களா?” என்றேன்.
“அம்மா எங்களோட இருக்காங்க.... அப்பா
அவரது மனைவியைப் பார்த்துக்கொண்டு பெங்களூர்ல இருக்கார்” என்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒருநாள்
சென்னைக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரசில் வந்துகொண்டிருக்கும்போது ஏதோ காரணத்திற்காக
வண்டி ஜோலார்பேட்டை ஜங்ஷனில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காலாற இறங்கி
நிற்கலாம் என்று நின்றிருந்தபோது பக்கத்து ஏசி பெட்டியின் அருகில் நின்றிருந்தார்
ஆர்என்கே. “ஹலோ சார்” என்று அருகில் சென்றபோது பிளாட்பாரம் என்றும் பார்க்காமல் அப்படியே
கட்டிப்பிடித்துக்கொண்டார். “நிறைய இளைஞர்கள் வந்துட்டாங்க...எல்லாரும் நல்லா
செய்யறாங்க...உங்க கமல் நம்மளை திடீர்னு நடிகரா மாத்திட்டார். கொஞ்ச நாள்
இப்படியெல்லாம் பிளாட்பாரத்துல நிற்க முடியாம எல்லாம் இருந்துச்சி. இப்ப பரவால்லை
ஜனங்க கொஞ்சம் மறந்துட்டாங்க. அதனால தாராளமா நிற்க முடியுது” என்று சுவாரஸ்யம் குறையாமல் பேசினார்.
அவரைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான்.
ஆர்என்கே பிரசாத்தின் நகைச்சுவையான
பேச்சுக்களில் ஒன்றை மறக்கமுடியாது. கவிக்குயில் படத்தின் படப்பிடிப்பு சிக்மகளூர்
மலைப்பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்தது. சிவகுமாரும் ஸ்ரீதேவியும் தூரத்தில்
நின்று நடித்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு பாடல் காட்சி. மலையின் ஒரு சரிவான
பகுதியில் காமெராவை வைத்துப் படம்பிடித்துக்கொண்டிருந்தனர். அடுத்த காட்சிக்கான
ஆங்கிளை டைரக்டர் தேவராஜ்(மோகன்) விளக்கினார். “இம்மாதிரியான ஷாட் வேண்டும் எனக்கு” என்றார்.
“அதெல்லாம் சரி அந்தச் சரிவுல காமெராவை
வைக்கிறதுன்னா நான் எங்க நின்னு ஆபரேட் பண்றது?” என்று கேட்டார் பிரசாத்.
“எங்க நிற்பீங்களோ தெரியாது. ஆனா இந்த
ஆங்கிள்தான் சரியா இருக்கும்” என்றார் தேவராஜ்.
டைரக்டரின் உதவியாளர் ஒரு யோசனை
சொன்னார். “இத பாருங்க சார்..இந்தக் கட்டை மேல இப்படி உட்கார்ந்துகிட்டு நீங்க
படமெடுக்கலாம்” என்று உட்கார்ந்து காண்பித்தார்.
“ரொம்ப ரிஸ்க்..அப்படி உட்கார முடியாது” – இது பிரசாத்.
“என்ன நீங்க? ஹாலிவுட் காமெராமேனுங்க
எல்லாம் எவ்வளவு மோசமான இடத்துல எல்லாம் உட்கார்ந்து படமெடுக்கறாங்க......நீங்க
இதுக்குப்போய்த் தயங்கறீங்களே” என்று தேவராஜ் சொல்ல அவருக்கு பிரசாத் சொன்ன பதிலால் அங்கிருந்த
படப்பிடிப்புக் கூட்டமே சிரிப்பில் அதிர்ந்தது.
அவர் சொன்ன பதில் “ஹாலிவுட் காமிராமேன்
உட்காருவான் சார். ஏன்னா அவனுடைய பட்டக்ஸ் மேட் இன் அமெரிக்கா. அது தாங்கும்.
என்னுடைய பட்டக்ஸ் மேட் இன் இந்தியா. தாங்காது. கிழிஞ்சிரும்”
இந்த நகைச்சுவையை இன்றைக்கும் என்னால்
மறக்க முடியவில்லை. ஈரமான நினைவுகளில் ஆர்என்கே பிரசாத் என்றும் வாழ்கிறார்.