Sunday, March 31, 2013

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!



பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். தலைமைச் செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.

பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள்  அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை. மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்ல அனுமதி கிடைக்கிறது.

அடுத்தநாள்………. நேற்று தமது காரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர். குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார்.  சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது. குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறு இடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.

இவரும் பயந்துகொண்டே போய்ச் சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன்? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகை காட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லி அவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.

நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

ஒன்று மட்டும் நிச்சயம்.


தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!

Monday, March 18, 2013

ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ஏழு புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று அவர் பாணியில் எல்லாப் புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார் அவர். தப்பித்தவறி ஒரேயொரு புலிக்குட்டிக்காவது தமிழில் பெயர் சூட்டியிருக்கவேண்டாமா? இத்தனைக்கும் அந்தப் புலிகள் அத்தனையும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கிடையில்தானே வாழப்போகின்றன…..! அதைப் பராமரிக்கப்போவதும் தமிழ் ஊழியர்கள்தானே? பின்னே எதற்காக அத்தனைப் புலிகளுக்கும் சமஸ்கிருதப்பெயர்கள்?

வேறொன்றுமில்லை அவர் மனதிலே என்ன இருக்கிறதோ அது வெளியில் வந்திருக்கிறது. உடனே “வீடுகளில் இம்மாதிரி பெயர்கள் வைப்பதில்லையா? நீரஜா என்றும் சதீஷ் என்றும் ஷைலஜா என்றும் பெயர்கள் வைப்பதில்லையா? நீ என்ன தூய தமிழ் ஆதரவாளனா நீ எழுதும் பதிவுகளில் தூய தமிழ்தான் எழுதுகிறாயா, வடமொழி கலந்து எழுதுவதில்லையா?’  என்றெல்லாம் மொக்கை கமெண்டுகளுடன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். தூய தமிழ் எனக்குப் பிடிக்குமே தவிர நான் தூய தமிழில் “மட்டுமே” எழுதுகிறவன் அல்ல. ஆனால் தனிப்பட்ட எனக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் வித்தியாசம் உண்டு. நான் செய்யும் தனிப்பட்ட செய்கைக்கும் ஒரு மாநில முதல்வரின் செயல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு மாநிலத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழியைக் காப்பாற்றுகின்ற, மேலெடுத்துச் செல்லுகின்ற பொறுப்பும் கடமையும் ஒரு முதல்வருக்கு உண்டு.

இந்த விஷயத்தில் இதே இடத்தில் கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்கிற எண்ணத்தைப் புறந்தள்ள இயலவில்லை. ஒரு புலிக்குட்டிக்கு நிச்சயம் பழக்கதோஷத்தில் ‘உதயசூரியன்’ என்றோ அல்லது சூரியன் என்றோ பெயர் வைத்திருப்பார். மற்ற புலிகளுக்கு எல்லாம் மாதவி, பரிதி, எழில், பாண்டியன், செங்குட்டுவன்…என்று இப்படி நிச்சயம் தமிழ்ப்பெயர்களாகத்தான் வைத்திருப்பார். – இந்த எண்ணம் இந்த சிந்தனை அலைகள் நிச்சயம் கலைஞரிடம் இருக்கின்றன. இதுபோன்ற உணர்வுகளோ ‘தமிழ்ச்சிந்தனைகளோ’ ஜெயலலிதாவிடம் இல்லை.

இந்தக் கருத்துக்களைப் பொதுத்தளத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று பார்த்தோமானால் வைக்கக்கூடாது என்றுதான் நிறையப்பேர் அல்லது ஒரு சாரார் விரும்புகிறார்கள்.  ஜெயலலிதா என்றால் எதுவும் விமரிசனமே செய்யக்கூடாது. கருணாநிதி என்றால் எந்த விதத்திலும் அவரை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

கருணாநிதி என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என்பதைச் சொல்லிவிட்டு இப்போது சில சரியான முடிவுகளை எடுத்துச் செயல்பட ஆரம்பித்திருக்கிறார் இது சரியான பாதையாகத்தான் இருக்கிறது என்று எழுதினாலும் அதனை மிக நிர்தாட்சண்யமாக மறுக்கிறார்கள். முரட்டுத்தனமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

‘வைகோவும் சீமானும் இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிற என்னுடைய முந்தைய பதிவில் கருணாநிதி செய்த தவறுகளை வரிசையாகச் சொல்லியிருந்தேன். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் இறுதி நாட்களில் அவர் நடந்துகொண்ட முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதைச் சொல்லிவிட்டு –

நடந்து முடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடு செய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இதையே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று –

என்பதைச் சொல்லி மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட இயக்கங்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே சில நிகழ்வுகளை நிகழ்த்த முடியும். கருணாநிதி அன்றைக்குத் தவறு செய்துவிட்டார் என்பதை மட்டுமே சொல்லி அந்தப் பெரிய இயக்கத்தைப் புறக்கணிக்கவேண்டாம். என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
அதில் இப்படியும் எழுதியிருந்தேன்-

‘அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத்தமிழர்களிடம் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்கமுடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்.’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்வளவும் சொல்லிவிட்டு  அவர் தற்சமயம் மேற்கொண்டுள்ள இப்போதைய செயல்கள் பற்றிக்குறிப்பிட்டு ‘இந்த முறை இவ்வளவு தீவிரமான நிலைப்பாட்டை எடுத்த பின்னர் வேறு காரணங்களுக்காக அவர் மாறுவார் என்று சொல்வதற்கில்லை. அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும் இணைய நண்பர்களுக்கு ஒப்புதல் இல்லை. பெயரில்லாமல் வந்த ஒரு நண்பர் ‘You are a complete DMK supporter. I can”t expect neutral views from your writing. Good luck and Good bye” என்று எழுதியிருந்தார்.

திரு அழகர் ராஜா கோவிந்த் என்ற நண்பர் You are a good writer but its not enough for this generation என்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லிவந்த நான் ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களுக்கு வேண்டுமானால் நான் அரண் அமைத்துக்கொள்ள முடியுமே தவிர கலைஞரைக் காப்பாற்றுவது என்னுடைய வேலை அல்ல; ஒவ்வொருவரும் வண்டி வண்டியாய் அவர் மீது குரோதம் வைத்துக்கொண்டு அதனை வந்து இங்கே கருத்துக்களாகக் கொட்டும்போது  அவருடைய ஆதரவாளர்கள்தாம் அவர்களுடைய தலைவரை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும். நான் என்னுடைய கருத்துக்களை எழுதிவிட்டேனே தவிர அவரை defend பண்ணுவது என்னுடைய வேலை அல்ல.

சில நண்பர்கள் மிக ஆபாசமாகவே கருத்துச் சொல்லியிருந்தார்கள். ஆபாசங்களுக்காக அவற்றை வெளியிடவில்லை.

ஆனால் நான் என்ன சொல்லவந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு நிறையப்பேர் பாராட்டி எழுதியிருந்தார்கள். திரு ராஜநடராஜன், திரு வவ்வால் உட்பட பலர் சரியான தீர்வுகளைச் சொல்லியிருந்தார்கள்.

குறிப்பாக பதிவர் செந்தழல் ரவி சரியான கருத்துக்களை முன்வைத்திருந்தார். ‘திடீர் குபீர் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் அவர்களின் உணர்ச்சிமயமான வார்த்தை மாய்மாலங்களுக்கு மயங்கி அரை மயக்கத்தில் இருந்து கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதைத்தான்……………’ என்று ஆரம்பித்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சிந்தனைக்கு மட்டுமல்ல அதைத்தொடர்ந்த செயல்பாட்டுக்கும் உரியன.

மற்றொரு பெயரில்லாத நண்பர் பிரபாரனின் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய கருணாநிதியின் செயலைக் குறிப்பிட்டு மிகக் கோபமான வார்த்தைகளில் கருத்து தெரிவித்திருந்தார். பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய சம்பவத்தைப்பற்றியெல்லாம் ஏற்கேனவே வேறு பதிவுகளில் எழுதிவிட்டதனால் இங்கே குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்.

ஒன்றுமட்டும் புரிகிறது.

இணையத்தில் ‘நியாய அநியாயங்களுக்கென்று’ தனியான டிக்ஷனரி இருக்கிறது. நடுநிலை என்பதற்கும் தனியான அளவுகோல்கள் உள்ளன.

இங்கே நியாயம் என்பது பிரபலத்துக்குப் பிரபலம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிரபலத்துக்கும் குழுக்கள் இருக்கின்றன. சிலபேருக்கு நிறைய இருக்கிறார்கள். சிலருக்கு மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி இங்கே பேசக்கூடாது. விமரிசிக்கக்கூடாது.

இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் உலகமெலாம் புகழ்பெற்று ஆஸ்கார் வாங்கினபோதிலும் இசை என்றால் இளையராஜாதான் என்பதற்கு மாற்றாக இங்கே பேசக்கூடாது.

தமிழ்ப்பட இயக்குநர்கள் என்றால் ‘கணக்கு’ மணிரத்தினத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதர் பீம்சிங் பாலச்சந்தர் எல்லாம் இயக்குநர்களே இல்லை. வேண்டுமானால் ரொம்ப யோசனைக்குப் பின்னர் பாரதிராஜாவை ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்வோம்.

அதேபோல ஒளிப்பதிவாளர்கள் என்றால் ‘கணக்கு’ ஸ்ரீராமிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வின்சென்ட்டெல்லாம் இங்கே பட்டியலிலேயே இல்லை. (வின்சென்ட் என்பது யார்? கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா?)

தமிழ் எழுத்தாளர்கள் மூன்றுபேர்தான். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன். வேண்டுமானால் ஒரு ஓரத்தில் சுந்தர ராமசாமியைச் சேர்த்துக்கொள்ளலாம்.(அதுகூட காலச்சுவடு பத்திரிகை வந்துகொண்டிருப்பதால்தான். இதில் இன்னொரு வேடிக்கை, காலச்சுவடுக்கென்று ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. அதன்படி தமிழின் படைப்பாளிகள் மூன்று பேர்தாம். 1) பாரதி, 2)புதுமைப்பித்தன், 3)சுந்தர ராமசாமி)

இதுபோல ஒவ்வொரு துறையிலும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே கருத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது வெளிவரும் பத்திரிகைகளும் இதுபோல்தான் இருக்கின்றன. காரணம் என்னவென்றால் இன்றைய இளைஞன் தான்எங்கிருந்து பயணம் தொடங்குகிறானோ அங்கிருந்து மட்டுமே எல்லாவற்றிலும் தன்னுடைய கணக்கைத் தொடங்குகிறான். அதற்கு முந்தைய சாதனையாளர்களை அவன் கணக்கிலேயே வைத்துக்கொள்வதில்லை. இது அவனுடைய ரசனைக்கு வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் இது என்பது அவனுக்குப் புரிவதே இல்லை.

சாதாரணமாகத் தெரிந்திருக்கவேண்டிய குறைந்தபட்ச (அறிவு என்பது பெரிய வார்த்தை) குறிப்புகள்கூட அவனுக்குத் தெரிவதில்லை என்பதை இன்றைய இளைஞர்களிடம் நான்கைந்து பொதுவான கேள்விகள் கேட்டாலேயே தெரிந்துவிடுகிறது. டிவியில் வரும் சில நிகழ்ச்சிகள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. பியூசி படித்த ஒரு மாணவனுக்கு அண்ணா உட்பட நான்கு தலைவர்களின் பெயரைப்போட்டு அதில் காஞ்சிபுரம் யார் பிறந்த ஊர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த இளைஞனுக்கு பதில் தெரியவில்லை. கடைசியில் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம் என்ற விவரத்தைச் சொல்லி அண்ணா யார் தெரியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோது “அவர் பேரைக் கேட்டிருக்கேன். யார்னு தெரியாது” என்று அந்த இளைஞன் சொன்னதை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிறையப்பேர் பார்த்திருக்கக்கூடும்.

 இப்போது வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் சரி, இமான் அண்ணாச்சி(அந்த நிகழ்ச்சியின் தரம் எப்படி என்பது வேறு விஷயம்) நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சரி நம்முடைய தமிழ் இளைஞர்களின் பொது அறிவுக்குறிப்புக்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பொதுவாக இத்தகைய இளைஞர்கள்தாம் இணையங்களில் வலம்வரப்போகிறார்கள். முந்தைய தலைமுறைக்கு இணையத்துடன் தொடர்பு கிடையாது. அப்படியே இருந்தாலும் ‘படிப்பதோடு’ நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் ‘எழுதும்’ ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு சதவிகிதம் இருந்தாலேயே அதிகம். இதனால்தான் இணையம் பயன்படுத்தும் நிறையப்பேருக்கு சிவாஜிகணேசன் என்றால் அவர் வெறும் ஓவர் ஆக்டிங் செய்த ஒரு நடிகர்; கத்திக்கத்திப் பேசிய ஒரு நடிகர் என்பதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

இவர்கள் என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதனை ஒட்டியே எல்லாரும் எழுதவேண்டும். அதனை ஒட்டியே பேச வேண்டும் அதனை ஒட்டியே செயல்பட வேண்டும் என்ற கருத்து மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

தமிழ் வலைப்பூக்களில் திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒரு கருத்து ‘இசை என்றால் இளையராஜா’ என்பது. தமிழ்த்திரை இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது என்றே இவர்களில் இன்னமும் பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் ஒரேயொரு கேள்வியைத்தான் முன்வைத்தேன். அந்தக் கேள்விக்கு இதுவரையிலும் இளையராஜாவின் ரசிகர்கள் யாருமே உரிய பதிலைச் சொல்லவேயில்லை என்பதுதான் பரிதாபம்

நான் வைத்த கேள்வி இதுதான்.
1) 
  தமிழில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள்
2)   பி.சுசீலாவின் பாடல்கள்
3)   கண்ணதாசன் பாடல்கள்
4)   சிவாஜிகணேசன் பாடல்கள்
5)   எம்ஜிஆர் பாடல்கள்
6)   சந்திரபாபு பாடல்கள்
7)   பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்
8)   எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள்
9)   சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
10)  டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்
11)  வாலி பாடல்கள் ……………………இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ………இப்படியெல்லாம் வகைப் பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?
இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், டிஎம்எஸ், பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப்பாடல்?

பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’
-  
  இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி. 
-     
-    இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.

கருத்து எழுதும் பெரும்பாலான இளைஞர்கள் எந்த சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண்டித்தான் இந்த உதாரணத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

நண்பர் மணிசேகர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘உலகத்திலே ஒற்றுமைப் படுத்த முடியாத இனம் தமிழினம்தானா? எத்தனை வேறுபாடுகள் தலைவர்களிடையில்……….?’என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

தலைவர்களை விடுங்கள். இங்கே கருத்துத் தெரிவிப்பவர்களில்தாம் எத்தனை வகை தெரியுமா?

கருணாநிதியை எதிர்ப்பவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், வைகோவை ஆதரிக்கிறவர்கள், சீமானை ஆதரிக்கிறவர்கள், இருவரையும் எதிர்ப்பவர்கள், பிரபாகரனை ஆதரிப்பவர்கள், பிரபாகரனை எதிர்ப்பவர்கள் மேதகு தேசியத்தலைவர் என்று சொல்கிறவர்கள், பிரபாகரனால்தான் இத்தனைப் பெரிய அழிவு பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று சொல்கிறவர்கள்………………எங்கிருந்துவரும் கருத்தொற்றுமை? 


ஒரு விஷயம் தெரியுமா?

ஒரு ஓட்டலுக்கு ஐந்தாறு நண்பர்கள் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். காபியும் டிபனும் தேவை. ஆறு பிளேட் இட்லி. ஆறு காபி. என்று சொல்லிவிடமுடிகிறதா?

ஒருத்தருக்குப் பொங்கல், இன்னொருத்தருக்கு இட்லி வடை, ஒருத்தருக்கு தோசை, மற்றவருக்குப் பூரி கிழங்கு, வேறொருவருக்கு மசால் தோசை, இன்னொருத்தருக்கு வெறும் இட்லி. இதாவது போகட்டும். அவரவருக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளலாம்.

இப்போது காபி முறை. வெறுமனே ஆறு காபி என்று சொல்லமுடிகிறதா என்று பாருங்கள்.

ஒருத்தருக்கு சர்க்கரை இல்லாமல். இன்னொருத்தருக்கு பாதி சர்க்கரை. ஒருத்தருக்கு டிகாக்ஷன் அதிகமாய். மற்றவருக்கு கொஞ்சம் லைட்டாய். இன்னொருத்தருக்கு ஒன் பை டூ. அடுத்தவருக்கு பாலே சேர்க்காமல்……….. ஒரு சாதாரண காபியிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை எங்கிருந்து வரப்போகிறது?

காபிக்கும் மசால்தோசைக்கும் வராவிட்டால் போகிறது. இனப்படுகொலை நடக்கிறது என்னும்போது அதனைத் தடுத்துநிறுத்த எல்லாரும் ஒன்று சேரும் விஷயத்தில்கூடவா கருத்தொற்றுமை ஏற்படக்கூடாது? என்பதுதான் நமது ஆதங்கம்.

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல் இலங்கை விவகாரத்தில் தவறுசெய்யாத தலைவர்கள் கிடையாது. ஒரு பிரபல கவிஞர் சொன்னதுபோல் “ஈழ விவகாரத்தில் எல்லாருடைய கைகளிலும் கறை படிந்துதான் இருக்கிறது”

ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல் ‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி பிரபாகரனை தவறாக வழிநடத்தியது வைகோவின் மிக தவறான சொதப்பல் என்பதை யாரும் பேசினாதாகத் தெரியவில்லையே. இதனை எரிக் சோல்கம்மே சொல்லியிருக்கிறார்’

இவற்றுக்கெல்லாம் பதிலே தேடாமல் வெறும் கருணாநிதியைப் போட்டுத் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டுமே அடையப்போகும்  பலன் என்ன என்பது தெரியவில்லை.
அதே சமயம் ஜெயலலிதாவைப் பாராட்டியும் புகழ்ந்தும் நான் ஏற்கெனவே எழுதியிருக்கும் சில பதிவுகளை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவே தெரியவில்லை. ‘தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா’ என்ற பதிவிலும் இன்னும் சில இடங்களிலும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து எழுதவேண்டும் என்று தோன்றியபோதெல்லாம் புகழ்ந்தும் பாராட்டியும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கவியரசர் கண்ணதாசன் விஷயத்திலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் விஷயத்திலும் கலைஞர் நடந்துகொண்ட விஷயங்களை, தற்காலத் தமிழ் இலக்கியவாதிகள் விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விஷயங்களை எப்போதுமே எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது?

ஈழ மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தலைவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. டெல்லித் தலைவர்களை விட்டுவிட்டுத் தமிழகத் தலைவர்களை எடுத்துக்கொண்டாலும் அனைவருமே கலைஞருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஒற்றைத் தீர்மானத்தில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர அங்கு நடக்கும் அவலத்தைத் தடுக்க எதுவும் சிந்திப்பதுபோல் தெரியவில்லை.

மாணவர்களின் போராட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இதனை யார் எப்போது எப்படி ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.

மாநில அரசும் மத்திய அரசும் இதனை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பார்கள். அதனையும் தாண்டி போராட்டம் தீவிரமானால் இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் முனைவார்கள்.

பாவம் பத்திரிகையாளர்களும் பதிவர்களும்! 


இரு அரசுகளின் இந்தச் செயல்களுக்கு கருணாநிதியைக் குறைசொல்லத்தான் இவர்களால் முடியாது.

Sunday, March 10, 2013

வைகோவும் சீமானும் என்ன செய்யப்போகிறார்கள்?

 
மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வற்புறுத்துவோம் என்று என்னென்னமோ சொல்லி பிரச்சினையை இப்போதைக்கு நீர்த்துபோகச் செய்வதற்கு படாதபாடு படுகிறார்கள்.

திமுகவையும் கருணாநிதியையும் ஆயிரம்தான் இந்த விஷயத்தில் குறை சொன்னாலும் தற்போது மொத்த இந்தியாவின் கவனத்தையும் பாரதிய ஜனதா உள்பட மொத்தக் கட்சிகளின் கவனத்தையும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தையும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருப்பது டெசோவின் சாதனைதான். மற்ற கட்சிகளெல்லாம் எத்தனைக் கூப்பாடு போட்டாலும் நடைபெறாத ஒன்று (அப்படி எந்தக் கட்சியும் கூப்பாடு போடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) இப்போது இவர்களின் முயற்சியால் நடைபெற்றிருக்கிறது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்டவர்கள் சரியான, முறையான விவாதங்களையே வைத்திருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசும்போது “தமிழர்களுக்கு எதிராக இலங்கை தொடுத்த போரில் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் தங்களது கணவன்மாரை இழந்துள்ளனர். இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். மத்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான்!

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமையும்” என்று பேசியிருக்கிறார். இது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு முட்டுச்சந்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இல்லை. பாராளுமன்றத்தில் அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் பாலு.

அதிமுகவின் எம்பி தம்பித்துரை பேசும்போது “இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உண்மையிலேயே இது இனப்படுகொலைதான். 
 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்றிருக்கிறார்.

தயாநிதி மாறன் பேசும்போது “இலங்கைப் பிரச்சினையில் எவ்வளவோ பேசியும் எழுதியும்கூட பல்லாண்டு காலமாக நிலைமை அப்படியேதான் உள்ளது” என்றார்.

காங்கிரசைச் சேர்ந்த அழகிரி, இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், லிங்கம், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது “நாம் நினைக்கிறபடி ஒருநாளும் இலங்கை நட்புநாடாக இருந்ததில்லை. இலங்கை நமது நட்பு நாடு என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். இந்தியா இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. “பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றைக் கொரித்துக்கொண்டிருந்த காட்சியும் அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்துகிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும்…..2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகிவிட்டது. தேவைப்பட்டபோது இந்தியா செயல்படத் தவறிவிட்டது. இனப்படுகொலை நடந்தபோது மத்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது.
புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

தீர்மானத்தின் மீது இந்தியா வெறுமனே ஓட்டுப்போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் பாரதிய ஜனதாவின் யஷ்வந்த் சின்ஹா.

பிரதமர் கனவில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில் “தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள்(மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? ‘மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்’ என்று ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார். இந்தக் கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதன் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதைத் தெளிவு படுத்துங்கள். (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத் துறை மந்திரியையும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல” என்று குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுக்கத்தா ராய் நேரடியாக திமுக எம்பிக்களை நோக்கி இந்தக் கேள்வியை முன்வைத்தார். “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலைஉயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்” என்று நாம் நினைக்கும் கருத்தை முகத்துக்கு நேராகவே திமுக எம்பிக்களைப் பார்த்துக்கூறினார் அவர்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் பேசும்போது “இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தாராசிங் பேசும்போது “இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்தப் பிரச்சினையத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தலையிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆக, இந்தியாவின் அத்தனைப் பெரிய அரசியல்கட்சிகளின் கவனத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உணர்த்தப்பட்டு, அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பது சொல்லப்பட்டு, இத்தகைய கொடுமைகளுக்கும் இலங்கை அரசின் அநீதிகளுக்கும் எதிராக இந்திய அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதை அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்தில் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தது நிச்சயம் ஸ்டாலினும் பாலுவும் திருச்சி சிவாவும் டிகேஎஸ் இளங்கோவனும் அவர்கள் சார்ந்துள்ள திமுகவும்தான் என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

அட்டூழியமும் கொடுமையும் இனப்படுகொலையும் நடைபெறும்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இது என்ன நாடகம்? என்று திமுகவைப் பார்த்துக் கேள்வி எழுப்பினால் நிச்சயம் அதற்கு பதிலில்லை.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றபோது கருணாநிதி என்ன செய்துகொண்டிருந்தார்? என்ற கோபக்கேள்விகளுக்கும் நம்மால் உரிய பதிலை நிச்சயம் சொல்வதற்கில்லை.

இது சம்பந்தமாய் இத்தனை நாட்கள் கழித்து அவர் கொடுத்துள்ள நீண்ட விளக்கமும் (போரை நிறுத்திவிட்டதாக ராஜபட்சே பொய் சொன்னதும் ஒரு போர்க்குற்றமே) எந்தத் தமிழ் உணர்வாளரையும் திருப்திப்படுத்தவில்லை.

நடந்துமுடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடுசெய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இப்படியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.

‘கருணாநிதி துரோகி, கட்டுமரக்காரனை நம்புவதற்கில்லை, 
 குடும்பத்தைத்தவிர வேறு சிந்தனை தாத்தாவுக்கு இல்லை. ஏ! பெரிசு நீ ஒதுங்கிக்கோ மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட் போட்டுவிட்டு விலகிவிடுவதனால் ஒரு புல்லும் இங்கே அசைந்துவிடுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.

இனிமேலாவது எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏற்கெனவே நடைபெற்றதுபோன்ற அக்கிரமங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் நம் தொப்புள்கொடி சமூகம் அங்கே உயிர் பயம் இன்றி வலம்வரவும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்படாமல் மானத்துடன் வாழவும், அவர்களுக்கு உறைவிடம் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளுடன் வாழவும் வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அதற்காக அந்த கொடுங்கோல் அரசாங்கத்தைப் பணியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் கடமையை நமது நாட்டிற்கும் நாட்டை ஆளுகிறவர்களுக்கும் உடனடியாக உணர்த்தும் நிகழ்வுகளை நாம் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம்.
அத்தகைய ஒரு நிகழ்வாக இந்த நாடாளுமன்றத்தின் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

இரண்டாவதாக-

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக-

திமுக நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி “நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான். இலங்கைப் பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமைய முடியும்” என்பதை நோக்கி நகரவேண்டும்!

இந்த அறிவிப்பை ஏதோ டி.ஆர்.பாலு சொன்னதாக எடுத்துக்கொள்ளாமல் திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவருடைய ஒப்புதல் இல்லாமல் சாதாரண டி.ஆர்.பாலுவால் இவ்வளவு பெரிய ‘ஸ்டேட்மெண்ட்டை’ நாடாளுமன்றத்தின் முக்கிய விவாதத்தின்போது இவ்வளவு அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் சொல்லியிருக்கமுடியாது.

ஆகவே அது கலைஞரின் அறிவிப்புதான்!

இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிடாமல் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக டெசோ அமைப்பு எடுத்துச் செல்லவிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாமே மத்திய அரசாங்கத்தை ‘மிரட்டுவதற்கு’ திமுக கைக்கொள்ளும் உத்தியாகக்கூட இருக்கலாம்.
இருந்துவிட்டுப் போகட்டுமே………………..

மத்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு வழியில் மிரட்டி சரியான திசைக்கு அவர்களைக் கொண்டுசெல்லும் எந்த உத்தியும் இந்த காலகட்டத்தில் வரவேற்கப்படவேண்டியதே!

டெல்லியில் டெசோ சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்திற்று என்று பார்த்தோமானால் தமிழ்நாட்டில் சில பத்திரிகைகளும் வெறும் பத்துப்பதினோரு பேர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விவகாரம் இன்றைக்கு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது என்பதே ஒருவகையில் வெற்றிதான்.
 
குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், சர்வதேச பொதுமன்னிப்பு அவையின்
 இந்தியச் சார்பாளர் அனந்த பத்மநாபன் போன்றவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினர் என்பது முக்கியமான ஒன்று.

இதனால் உடனடி லாபம் என்று பார்த்தோமானால் முன்பெல்லாம் செய்ததைப்போல அண்டை நாடு இறையாண்மை என்றெல்லாம் போலி வெளியுறவுக் கொள்கை பேசிக்கொண்டு தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுப்பதும் மேலும் இன அழிவை நடத்துவதும் கொடூரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிச்சயம் முடியாது.

அதேபோல ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் ‘தமிழ்த்தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மகிழ்ச்சி’ என்பது போன்ற பொறுக்கித்தனமான செய்திகளை ஒளிபரப்ப நிச்சயம் தயங்குவார்கள்.

இது கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி எழுதப்படும் பதிவு அல்ல; 

2009-ல் நடைபெற்ற பேரழிவைத் தடுத்து நிறுத்தும் கடமை அவருக்கு நிச்சயம் இருந்தது. 

அப்படி அந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் நிலைமை அன்றைக்கு இல்லாமல் போயிருக்கும் நிலையில் உடனடியாகப் பதவியைத் துறந்துவிட்டு தெருவில் இறங்கிப் போராடியிருக்கவேண்டும் அவர் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு.
அதனை அவர் செய்யவில்லை.

அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத் தமிழர்களிடம் அவர் சேர்த்துவைத்திருந்த புகழ் ஒரே வாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்க முடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்…………

சரி; இந்த நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஒரு கணம் யோசியுங்கள்.

ஆயிரம்தான் இருந்தாலும் ‘இலங்கைத் தமிழர்’ பிரச்சினைக்கோ அல்லது ‘ஈழத்தமிழர்’ பிரச்சினைக்கோ இந்தியாவிலுள்ள மத்திய அரசாங்கத்தின் துணையுடன்தான் எந்த ஒரு தீர்வும் கண்டாகவேண்டும். இப்போதைக்கு இதைத்தவிர வேறு வழியே இல்லை.

நினைவில் வையுங்கள். மத்திய அரசை அடிபணியச் செய்ய மக்கள் சக்தி அவசியம்.

பெரும்பாலான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தால் மட்டுமே அடிப்படையான சில நகர்வுகளாவது சாத்தியம். வெறும் வாய்க்கூச்சல் போடும் ஆயிரம் உணர்ச்சிகரப் பேச்சாளர்களை வைத்து திரும்பத்திரும்ப கூட்டங்கள் போட்டு கூடிக்கொண்டும் ராஜபட்சேவையும் கருணாநிதியையும் சோனியாவையும் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டும் ஒரு துரும்பு கூட அசையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.

இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித  மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆ,ர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எம்ஜிஆர் ஆதரவாக இருந்தாரே தவிர அந்த இயக்கமோ அல்லது அந்த இயக்கத்தொண்டர்களோ ஆதரவாக இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இன்னமும் சொல்லப்போனால் தீவிரமான ஒரு அதிமுக தொண்டனுக்கு ஈழப்பிரச்சினை என்னவென்பதும் அதன் அடிநாதம் என்னவென்பதும் தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது.

ஆனால் திமுகவின் நிலைமை அப்படியல்ல;

திமுகவின் தொண்டன் என்பவன் ஒரு தீவிரமான உணர்வுமயமான மொழி ஆதரவாளன். கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தே தமிழ்மொழியின் காதலன் அவன். இலங்கை விவகாரத்தில்கூட ‘தலைவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார்?’ என்று தொண்ணூறு சதம் தொண்டன் மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்தவன்தான். தங்கள் தலைவன் மேற்கொண்டிருக்கிற தவறான பாதையை வெளியில் சொல்லமுடியாமல் வேதனையில் தவித்தவன்தான் அவன். அதானால்தான் இன்றைக்கு டெசோ என்று கலைஞர் குரல் கொடுத்ததும் இருக்கிற வேலையை எல்லாம் போட்டுவிட்டுத் தெருவில் இறங்கி நிற்கிறான் அவன். இல்லையென்றால் இத்தனைக்கூட்டம் எங்கிருந்து வந்தது?

இலங்கை விவகாரத்தில் தலைவர்கள் தவறாக நடந்துகொண்டார்களே தவிர திமுகவின் தொண்டர்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இங்கே இன்னொரு முக்கியமான கோணமும் உள்ளது. கலைஞர் தவறான முடிவை எடுத்து மத்திய அரசின் நடவடிக்கை எல்லாவற்றிற்கும் வாய்பேசாது மௌனியாக இருந்தாரே தவிர, இதுநாள்வரையிலும் ஈழத்தமிழர்களைப் பற்றியோ அந்தத் தமிழர்களுக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியோ தப்பித்தவறி ஒரு வார்த்தைக்கூடப் பேசாதவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே.

ஆனால் மற்றொரு பெரிய இயக்கமான அதிமுக அப்படி அல்ல; அதன் தலைவியான ஜெயலலிதா என்றைக்குமே ஈழம் பற்றியோ அதற்குப் போராடிய போராளிகளைப் பற்றியோ உயர்வான கருத்தையோ நல்ல கருத்தையோ கொண்டிருந்தவர் அல்ல; அவரை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரால் போற்றப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, உதவிகள் புரிந்து பேணப்பட்ட பிரபாரன் மீது என்றைக்குமே நல்ல அபிப்பிராயத்தை அந்த அம்மையார் சொன்னதே இல்லை.

வாயைத் திறந்தாலேயே பிரபாகரனைப் பிடித்துவரவேண்டும்; கோர்ட்டிலே நிறுத்தவேண்டும்; தண்டனை தரவேண்டும்; தூக்கிலே போடவேண்டும் என்றுதான் பேசியிருக்கிறார். “ஸ்ரீலங்காவிலே நடைபெற்றுவரும் செயல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தது……இந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக சம்பந்தம் உள்ளவை. இது குறித்துத் தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள்.”

“நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.

அம்மையாரின் ஆவேசம் இன்னும் தொடர்கிறது. “தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது”

“என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இயக்கம் 14-5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.”

“எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவுப்பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன” (‘நமது எம்ஜிஆர்’ 3-10-2008)

“14-10-2008 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி’ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது” (16-10-2008)
இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.”

இறுதிக்கட்ட போரின்போது அம்மையார் என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் பார்ப்போமா?

நிருபர் ; “ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?”

ஜெயலலிதா ; “அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடைபெறுகிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களைக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்”
ஆக, ஈழம் பற்றியும் ஈழப்பிரச்சினைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஈழப்போராளிகள் பற்றியும் ஜெயலலிதாவின் ‘நிரந்தர’ நிலைப்பாடு என்பது இதுதான்.
 
ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கித்தருவேன் என்றும் கச்சத்தீவை மீட்டுத்தருவேன் என்றும்  வீராவேசம் பேசியதெல்லாம் தேர்தலுக்காகத்தான் என்பதையும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இலங்கை அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதும், கச்சத்தீவை மீட்டுத்தரவேண்டுமென்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதும் போதும் என்பதுபோல் பேசாமல் அமைந்துவிட்டார் அம்மையார்.

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று வாக்கு சேகரித்த சீமான்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

உள்ளத்தில் தமிழ் உணர்வு எதுவுமே இல்லாமல் எப்போதோ ஆட்சிக்கு வருவதற்காக இரண்டொரு கூட்டங்களில் மட்டும் ‘மெக்கானிகலாக’ தமிழ் உணர்வு பற்றிப் பேசும் ஒருவரையும், தமிழ் உணர்வாலேயே வளர்ந்துவிட்டு, தமிழ் உணர்வை லட்சோப லட்சம் இளைஞர்களின் மனதில் விதைத்துவிட்டு வேறு ஏதோ நிர்ப்பந்தங்களுக்காக இன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்து இப்போது மீண்டும் தமிழ் உணர்வைக் கையில் எடுத்திருக்கும் ஒருவரையும் தலைவராகக் கொண்ட இருவேறு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஆயிரம்தான் பேசினாலும் இந்த இரு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டின் அரசியலை நகர்த்தும் இயக்கங்களாக இருக்கின்றன. 

இவற்றில் ஒன்று தீவிரமாக களத்தில் இறங்கி செயலாற்றினால் மட்டுமே மத்திய அரசாங்கத்தை சில விஷயங்களிலாவது பணியவைக்க முடியும். 

காரணம் மக்கள் சக்தி. 

மக்கள் சக்திக்கு மட்டுமே அரசுகள் செவிமடுக்கும்.

இந்த இரு இயக்கங்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் உணர்வுபேசும் மற்ற இயக்கங்களையோ தமிழ்த் தலைவர்களையோ பார்த்தோமானால் எந்தத் தலைவரும் சொல்லிக்கொள்கிறமாதிரியான மக்கள்சக்தியைத் தமக்குப் பின்னால் கொண்டவர்கள் அல்ல; அதுவும் ஈழப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் பழ.நெடுமாறனிலிருந்துதான் பட்டியல் ஆரம்பிக்கிறது. மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களுக்காக இரவு பகல் பாராமல் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றிவரும் மூத்த தலைவர் இவர்தாம். ஈழத்தமிழர் ஆதரவுக்கூட்டமும் இளைஞர்கள் கூட்டமும் ஓரளவு இவர் பின்னே அணிதிரளுமே தவிர இவருக்கென்று தனியான கூட்டமெல்லாம் இல்லை. இவர் பின்னால் திரளும் கூட்டம்தான் வைகோவுக்கும் போகும். அதில் ஒரு பகுதிதான் சீமான் அழைத்தாலும் போகும்.

திருமா அழைத்தாலும் போகும் கூட்டமும் இது மட்டும்தான்.

திமுகவிலிருந்த தமிழ் உணர்வும் ஈழ ஆதரவு மனப்பான்மையும் கொண்ட பெருவாரியான இளைஞர்கள் ஈழ ஆதரவு விஷயத்தில் கலைஞர் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக அல்லது தீவிரமான ஆதரவு எடுக்கவில்லையென்பதனால்தான் வைகோ பின்னால் அணிதிரண்டார்களே தவிர வைகோ புதிய கொள்கைகளையும் புதிய சிந்தனைகளையும் அமைத்து இயக்கம் ஆரம்பித்தார் புதிய சமுதாயம் படைக்க இருந்தார் என்பதானால் எல்லாம் அவர்பின்னால் யாரும் சென்று சேரவில்லை.

சீமான் மிகவும் உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய இளைய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மிகப்பெரும் புரட்சி இவரால் நடைபெற இருக்கிறது என்பது போன்ற பிம்பம் இவர் அரசியல்கட்சி ஆரம்பித்ததும் கட்டமைக்கப்பட்டது. 

ஆனால் சிறிது நாட்களிலேயே அது கலகலத்துவிட்டது. 

பெரியார் தொண்டர்களுக்கும் இவருக்கும் நடைபெறும் கொள்கை விளக்கங்களிலேயே இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் இவரைவிட்டு அகன்றுகொண்டிருக்கிறது.

வைகோ ஒருவர்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதுபோன்ற தோற்றம் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டாலும் அந்த நம்பிக்கையை உடனடியாகச் சிதற அடிக்கும் காரியத்தை வைகோவே கச்சிதமாக செய்துமுடித்துவிடுவார்.

ஒவ்வொரு பெரிய இயக்கங்களிலும் ஒவ்வொரு விஷயம் பற்றிப்பேச ஒவ்வொருவரை வைத்திருப்பார்கள். அப்படி ஈழம் பற்றிப் பேச திமுகவின் போர்வாளாக, கலைஞரின் போர்வாளாக நியமிக்கப்பட்டிருந்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் ஈழம் பற்றிப்பேசவும், ஈழம் பற்றிய பல்வேறு கருத்தரங்குகளில் திமுகவின் ‘குரலைப்’ பேசவும் பரிந்துரைக்கப்பட்டவர், கட்சி சார்பாக அனுப்பிவைக்கப்பட்டவர் வைகோ. ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் இடறும். கட்சித்தலைமைக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைக்கும். இனிமேலும் இந்தத் தலைமையின் கீழ் இந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நம்மால் செயல்பட முடியாது என்று தோன்றும். அப்போது வெளியேறிப்போய் இன்னொரு இயக்கத்தில் சேருவதோ அல்லது புதிய இயக்கம் ஆரம்பிப்பதோ நடைபெறும். அதுதான் வைகோ விஷயத்திலும் நடந்தது.
வைகோவின் செயல்பாடுகளை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருபவர்கள், அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறமாட்டார்கள். 

அது கலைஞர் வைகோவுக்குக் கொடுத்திருந்த இடமும் முக்கியத்துவமும்.

திமுகவில் அவ்வளவு வருடங்களுக்குத் தொடர்ந்து நியமன எம்பியாக யாரையும் கட்சி நியமித்தது இல்லை. தன்னுடைய தம்பிகளில் வைகோவுக்குத் தனியிடம் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். கட்சியை விட்டுப்போய் வேறுகட்சி அமைத்து எதிரணிக்குப் போய்விட்ட பின்னாலும் மறுபடி தம்மிடம் வந்தபோது அதே முக்கியத்துவத்தை அவருக்குத் தந்தார். இதே இலங்கைப் பிரச்சினைக்காக வைகோ சிறை படுத்தப்பட்டபோது வேலூருக்கு ஓடிச்சென்று சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர் அவர். 

இவற்றையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்தபடிதான் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்டவருடன் வைகோ எப்படி நடந்துகொள்கிறார் என்பதையெல்லாம் ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு’ கவனிக்கிறார்கள். ‘நான் அவருக்காகத் தூங்காமல் ரயில் பயணம் செய்தேன்; அதிமுக அமைச்சர் கலைஞர் பயணம் செய்த ரயில் கோச்தான் தனக்கு ஒதுக்கப்படவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தபோது நான் தூங்காமல் அந்தப் பெட்டிக்கு வெளியே காவலிருந்தேன்’ என்பதெல்லாம் ஒரு பெரிய தலைவனுக்குச் செய்த ஒப்பற்ற தியாகம் என்று மக்கள் நினைக்கவேண்டும் என்று வைகோ நினைப்பது பரிதாபத்திற்குரியதுதான்.

இதுதான் மிகப்பெரிய தியாகம் என்று வைகோ நினைத்தாரென்றால் இதைவிடவும் பெரிய தியாகங்களை ‘இன்னோவா கார் புகழ்’ நாஞ்சில் சம்பத் வைகோவுக்குச் செய்திருக்கிறார் என்பதையும் அவருக்கு ஏன் உரிய முக்கியத்துவத்தை வைகோ தரவில்லை என்பதையும் சம்பத் இவரைவிட்டுவிட்டு ஏன் போனார் என்பதையும் மக்களுக்குச் சொல்லவேண்டிய நிலையில்தான் வைகோ இருக்கிறார்.

கலைஞர் மீதான மிக அதிகபட்ச முறைப்பையும் விறைப்பையும் சரி; பாதையோர ஒரு நிமிட விசாரணைக்காக ஜெயலலிதா மீதான மிக அதிக பட்சக் குழைவையும் பணிவையும் சரி மக்கள் ரசிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் நிலையில் வைகோ இருக்கிறாரா என்பதே சந்தேகத்துக்குரியது.

இதுமாதிரியான தலைவர்கள்தாம் நம்மைச் சுற்றிலும் இருக்க இந்திய அரசும் சரி இலங்கை அரசும் சரி தங்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை வைத்துத்தான் தங்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றித் தீர்மானிக்கிறார்கள்.

‘திரளான மக்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் வரவில்லையா? 
 தொடர்ந்து செய்; மக்கள் பெருவாரியாக எதிர்க்கிறார்களா? நிறுத்திவிடு’ என்பதுதான் அரசுகள் செயல்படும் முறை.

மத்திய அரசுக்கும் சரி இலங்கை அரசுக்கும் சரி மண்டபக்கூட்டங்கள், எரிதழல் அறிக்கைகள், ‘ஏ ராஜபட்சே எங்களிடமிருந்து நீ தப்பிக்கமுடியாது; நாங்கள் ஒன்றுதிரண்டால் என்ன ஆகும் தெரியுமா?’ என்பது போன்ற வாய்ச்சவடால்கள் எல்லாம் எந்தவித துரும்பையும் அசைக்காது என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். 

மிகப்பெரும் மக்கள் சக்தியைக்கொண்ட எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களும், அரசியல் ரீதியான அணுகுமுறைகளும், நிர்வாக ரீதியான காய் நகர்த்தல்களும்தாம் ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல உதவும்.

ஐநா சபையிலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்களை நேரில் ஒப்படைத்தது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று அவற்றின் தூதர்களைச் சந்தித்து பிரச்சினை என்ன என்பதை எடுத்துச்சொல்லி விளக்கம் அளித்தது, நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து இதுபற்றிப் பேசுமாறு கேட்டுக்கொண்டது என்று சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது டெசோ.

இம்மாதிரியான காரியங்களையெல்லாம் சிறு கட்சிகளோ சிறு குழுக்களோ அதன் தலைவர்களோ செய்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறு குழுக்களின் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக தூதரகங்களுக்குள் சென்று வெளிநாட்டுத் தூதுவர்களையெல்லாம் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவிட்டெல்லாம் வரமுடியாது.

ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ஈழம் தொடர்பாகப் பேசியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான குழு.

இதை இவ்வளவு நாட்கள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி வருமானால் நிச்சயம் அந்தக் கேள்விக்கு பதிலில்லை. இப்போதாவது செய்கிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

டெசோவின் இந்தச் செயல்கள் எல்லாம் கலைஞர் நடத்தும் ‘போலிநாடகம்’ என்றிருக்கிறார் வைகோ. ஏறக்குறைய இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்கள் பழ.நெடுமாறனும் சீமானும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே, உங்களின் ‘நிஜநாடகங்களில்’ நடைபெறாத ஒன்று இவரின் ‘போலி நாடகத்தால்’ நடைபெறுகிறது என்றால் நடந்துவிட்டுப் போகட்டுமே.

உள்ளூர் அரசியலுக்காக, இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக இங்கே குளறுபடிகள் செய்து ‘எந்த விஷயத்திலும் நாங்கள் ஒன்றுபட மாட்டோம்’ என்பதை உலகுக்கு உணர்த்தினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
  
இத்தனைச் செய்தும் மத்திய அரசாங்கத்தின் பதில் சாதகமாக இல்லை. இதனைக் கலைஞரும் உணர்ந்திருக்கிறார். வழக்கம்போல் அடிபணிந்து
இருந்துவிடப்போவதில்லை என்பது அவர் அறிவித்திருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ‘காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைகளை எடுத்து ஒருவது கவலை தருவதாக உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநா அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்துகொண்ட குலாம்நபி ஆசாத் “அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்போம்” என்பதாக உரையாற்றினார். ஆனால் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல் தமிழ் ஈழத்தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினை தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் நடைபெற்றே தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வைகோவும் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

மக்கள் திரள் அதிகரிக்கும்போது அதில் இணைந்துகொள்ளப்போகிறார்களா, அல்லது குறுக்குசால் ஓட்டப்போகிறார்களா அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையெடுத்து அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனைச் செய்யப்போகிறார்களா, அல்லது பேசாமல் இருந்துவிடப்போகிறார்களா என்பது இந்த நேரத்தின் மிக முக்கியமான கேள்வி.

இதற்கு முந்தைய கட்டம் எப்படியோ கலைஞரின் இன்றைய நிலைப்பாடுகள் சரியானவையாகத்தான் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சரியான திசையில் பயணம் செய்ய அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவர் இப்படி அப்படி நழுவிவிடாமல் தமிழர்களுக்காகப் பாடுபடவேண்டிய அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் அவருக்குத் தரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் சரியான வழிமுறையாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தமுறை இவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தபின்னர் வேறு காரணங்களுக்காக அதிலிருந்து மாறுவார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது!

இந்த நேரத்தில் உள்ளடி வேலைகள் செய்து அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் அப்படித் தடுப்பவர்களையும் தமிழ்ச்சமுதாயம் மன்னிக்காது.