Friday, July 1, 2011

சாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு!


சாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்கிலீக்ஸ் முதலிய டேப்கள் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டனவோ அதைவிடவும் பரபரப்பான விஷயமாக இந்த சாட் பேச்சுக்கள் தமிழ் இணையதளங்களில் இன்றைக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. நீரா ராடியா மற்றும் விக்கிலீக்ஸ் விவகாரங்களைப் படிக்கிறவர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமே பிரதானமாக இருந்தது. இந்த ஆபாச உரையாடல்களில் அதிர்ச்சியுடன் குற்றமனப்பான்மையும் சேர்ந்துகொண்டு வதைப்பதுதான் முக்கியம். இதில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய குற்றமனப்பான்மை ஏற்பட்டதோ இல்லையோ படிக்கிற நமக்கு ஏற்படுகிறது. காரணம் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இருவரில் ஒருவர் நம்முடைய வீடுகளில் இருக்கநேரும் இளம்பெண்களில் ஒருவர். மற்றவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் இடத்தில் வைக்கப்படவேண்டிய எழுத்தாளர்களில் ஒருவர்.

இது புறக்கணிக்கப்படவேண்டிய விஷயமா அல்லது விவாதிக்கபடவேண்டிய விஷயமா என்பதிலேயே நிறைய கருத்துமோதல்கள் இருக்கின்றன. நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது இந்த அருவெறுப்பான விஷயத்திற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் இன்றைக்கு இணையத்தில் நடைபெறும் இம்மாதிரியான வாதங்கள் தமிழுலகம் இதுவரையிலும் காணாத ஒன்று. இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எந்தப் பத்திரிகைகளும் இம்மாதிரியான விவாதக்களங்களை ஏற்படுத்தப்போவதில்லை. அப்படியே ஏற்படுத்தினாலும் இவற்றில் வருகிறமாதிரியான சொல்லாடல்கள் நிச்சயம் பத்திரிகைகளில் சாத்தியமில்லை. அதிலும் இணையத்தில் புழங்கும் அளவு கெட்டவார்த்தைகளுக்கு இடமில்லை.இணையத்தில் யாரும் யாருக்கும் தடைவிதிக்க முடியாது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதற்கான சுதந்திரம் என்பதே புரிபடாத அளவுக்கு இணையம் உபயோகிப்பவர்கள் தங்கள் பாட்டுக்கு புகுந்துவிளையாடுகிறார்கள். எத்தனை ஆபாசமான வக்கிரமான சொற்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் உபயோகித்து சமர் புரிகிறார்கள்.

எதற்குத் தெரியுமா? ஒன்றுமில்லாத விஷயத்திற்கு!

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரிடம் பேஸ்புக் தொடர்பில் சாட் செய்வதற்கு ஒரு பெண் முயற்சி செய்கிறார். இத்தனைக்கும் அந்தப்பெண் சாருநிவேதிதா எழுதிய எந்த ஒரு நூலையும் படித்தவரில்லை. ஆக, ஒரு வாசகியாகவோ ஒரு ரசிகையாகவோ அந்தப்பெண் சாருவை அணுகவில்லை. வெறும் முகநூலில் தொடர்புகொண்டு இன்றைக்குத் தம் காலத்தையும் வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்களில் ஒருத்தியாகத்தான் அந்தப்பெண்ணும் சாருவை அணுகுகிறார். அப்படி தாம்அணுகுபவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இருப்பதில் அந்தப்பெண்ணுக்கு ஒரு பெருமை அவ்வளவுதான்.
இங்கே இதனைத் தவறென்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் இன்றைக்கு தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அகிலன் ஜெயகாந்தன் நாபா முவ திஜா இவர்கள் காலத்திற்குப்பின்பு சுஜாதாதான் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவருக்குப்பின் யாருக்கும் அந்த இடம் வாய்க்கவில்லை.

ஏனெனில் புகழ்பெற்ற வெகுஜனப்பத்திரிகைகளுக்கு இன்றைக்கு ‘படைப்பு எழுத்தாளர்கள்’ என்ற ஒரு இனமே தேவையில்லாமல் போய்விட்டது.

பேருக்குச் சில சிறுகதைகளை எப்போதாவது வெளியிடுகிறார்களே தவிர, படைப்பிலக்கியத்துக்கான எந்த ஒரு சிரத்தையையும் வெகுஜன இதழ்கள் காட்டுவதில்லை. குழந்தை இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளிவிளையாடினானாம் என்பதுமாதிரி இடையில் புகுந்தன சிற்றிதழ்கள் என்ற வரிசையில் சில இதழ்கள். இவற்றில் காலச்சுவடும் உயிர்மையும் முன்னணியில் இருக்கின்றன. சந்தடி சாக்கில் கடையை விரித்த இந்த இதழ்கள் கருத்துருவாக்கத்தில் அதகளம் பண்ண ஆரம்பித்தன.

காலச்சுவட்டைப் பொறுத்தவரை தமிழில் எழுத்தாளர் என்றாலேயே இரண்டுபேர்தாம்.

கவிஞர் என்றாலும் இரண்டுபேர். ஒருவர் பாரதியார், இன்னொருவர் பசுவய்யா.

அதாவது சுந்தர ராமசாமி. எழுதாளர்கள் என்றால் இரண்டுபேர். அதாவது, போனால் போகிறதென்று புதுமைப்பித்தன். அவருக்குப்பிறகு தமிழில் தோன்றிய ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி மட்டும்தான் தமிழுக்கு இலக்கிய அந்தஸ்து தேடித்தந்தவர். தமிழில் சிறுகதைகள் எழுத வழிவகுத்தவர். தமிழில் ‘முதல் நாவல்’ எழுதியவர். தமிழில் கட்டுரைகள் எழுதுவது எப்படி என்று சொல்லித்தந்தவர். அவருடைய சிஷ்யப்பரம்பரை ஒன்றை உருவாக்கி தமிழுக்கு விட்டுச்சென்றிருப்பவர்............இதுதான் காலச்சுவடு கட்டமைத்துகொண்டிருக்கிற பிம்பம்.

அதற்கடுத்து உயிர்மை..... உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் காலச்சுவட்டிலிருந்து வெளியில் வந்தவர். உண்மையில் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். இவர் கட்டமைத்திருக்கும் எழுத்தாளர்களில் சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உண்டு. மற்ற இருவரையும்விட சாருநிவேதிதாவை விளம்பரத்திற்காகவும் வியாபார உத்திக்காகவும் இவர் பயன்படுத்துவதும் உயிர்மையை சாருநிவேதிதா பயன்படுத்துவதும் என இரண்டுமே மாறிமாறி நடைபெறும் நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன.
இவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனைத் தவிர்த்து ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் இணையத்தையும் இளைஞர்களையும் மிகச்சரியாகப்புரிந்துவைத்துக்கொண்டு செயல்படுபவர்கள் எனலாம். இணைய வீச்சு எத்தகையது, அதன் வாசகத்தளம் எத்தகையது அவர்களுக்கு என்னமாதிரியான stuff ஐ வழங்கினால் எடுபடும், தம்முடைய எழுத்துவியாபாரம் பிரமாதமாக நடக்கும் என்பதையெல்லாம் கணக்குப்போட்டு இணையத்தை வளைத்துப்போட்ட புத்திசாலிகள்.

சென்ற தலைமுறை வாசகத்தளம் என்பது, எது படிக்கக் கிடைக்கிறதோ அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கு முந்தைய தலைமுறை எழுத்து எப்படி இருந்தது அதற்கும் முந்தைய தலைமுறை எப்படி இருந்தது என்றெல்லாம் தேடிப்போகும் தேடல் கொண்டிருந்தது. அதனால்தான் கிடைத்ததைப் படித்ததோடு நின்றுவிடாமல் பைண்ட் செய்து வைக்கப்பட்ட பழைய இதழ்களையெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கும்போக்கு இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் குப்பை. இவர்களுக்கு எல்லாமே நெட்டில் வேண்டும். தினசரி செய்தியும் சரி விமர்சனமும் சரி படைப்பாக்கங்களும் சரி எல்லாம் நெட்தான். நெட்டிலே பிறந்து, நெட்டிலே வளர்ந்து, நெட்டிலேயே முடிந்துபோகும் பரிதாபநிலைக்கு வந்துவிட்டது இன்றைய இளையதலைமுறை.

இந்தவகையில் இன்றைக்குப் ‘படுபிரபலமாக இருக்கும்’ முன்னணி எழுத்தாளர் சாருநிவேதிதா பற்றிய சர்ச்சை இது. ஒரு சாதாரணப்பெண்ணிடம் இன்றைக்குத் தமிழின் பிரபல எழுத்தாளர் என்று சொல்லப்படும் ஒருவர்- அல்லது சொல்லிக்கொள்ளும் ஒருவர்- அதாவது அவர் தம்முடைய பெருமை இந்தத் தமிழ்நாட்டிற்கு இன்னமும் தெரியவில்லை என்கிறார். தமக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையும் விருதுகளும் அங்கீகாரங்களும் இன்னமும் தரப்படவில்லை என்கிறார். தமிழுக்கு நோபல் பரிசு பெற்றுத்தரக்கூடிய ஒரே எழுத்தாளர் தாம்தான் என்றும் சொல்லிக்கொள்கிறார்- அப்படிப்பட்ட ஒருவர் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கான சம்பவமே இது. என்ன நடந்திருக்கிறது என்பதும் அவர் எப்படியெல்லாம் அந்தப் பெண்ணிடம் உரையாடியிருக்கிறார் என்பதையும் வினவு தளம் விரிவாகவே வெளியிட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை முதலில் தமிழச்சி வெளிப்படுத்துகிறார். பின்னர் ராஜன் தம் பதிவில் எழுதுகிறார். அதனைத்தொடர்ந்து சர்ச்சைகள் உருவாகின்றன. கடுமையான கண்டனங்களுடன் சாருவை எதிர்ப்பவர்களும், இது அவருடைய இமேஜைக் குலைக்க நடைபெறும் சதி என்பதான எதிர்வினைகளும் வரிசைக்கட்டுகின்றன. இது ஏதோ சதி, மர்மம் என்பதுபோன்ற பாவனைகளுடன் பல்வேறு பதிவுகளும் கருத்துரைகளும் வருகின்றன. அந்தப்பெண் முதலில் ஒரு பெண்ணே அல்ல; அவர் ஒரு ஆண்...வேண்டுமென்றே சாருவை மாட்டிவைப்பதற்காகச் செய்யப்பட்ட சதி என்று சீறலுடன் கருத்திடுகிறார்கள் சிலர். ‘அந்தப்பெண் வேறுயாருமல்ல; பாரீஸிலிருக்கும் தமிழச்சிதான் வேறொரு பெயரில் இப்படியெல்லாம் பேசி சாருவை வம்பில் மாட்டிவைத்திருக்கிறார். ஹிட்ஸுக்காக இப்படிச் செய்யக்கூடியவர்தான் அந்தத் தமிழச்சி’ என்று பேசுகிறார்கள் சிலர்.

‘இல்லை அந்தப்பெண் எனக்குத்தெரிந்தவர்தான். நான் நடத்திய பதிவர் சந்திப்பிற்குக்கூட தமது தாயாருடன் வந்து கலந்துகொண்டவர். அவருடைய தாய்மொழிகூடத் தமிழ்அல்ல; தெலுங்கு’ என்று விவரம் தெரிவிக்கிறார் பிரபல பதிவர்களில் ஒருவரான வால்பையன்.

அப்போதும் சர்ச்சைகள் அடங்காதுபோகவே “இல்லை இல்லை அந்தப்பெண் ஏற்கெனவே என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். நான்தான் இதனை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் வாளாவிருந்துவிட்டேன்” என்று மனநல மருத்துவர் ஐயாருத்ரன் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டிவந்தது.

அதற்குப்பின்னரும் வேறு வகையில் சர்ச்சைகளைத் தொடர்ந்தனர் சாருவை ஆதரித்தவர்கள். அவர்களுடைய வாதமெல்லாம் ஒன்றை நோக்கியே இருந்தது. அதாவது சாரு எப்படிப்பட்டவர் என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே, அவர் கொஞ்சம் ஆபாசமாகப் பேச ஆரம்பித்ததுமே தொடர்பைத்துண்டித்துவிட்டு இந்தப்பெண் வேறு வேலையைப் பார்க்கப் போகவேண்டியதுதானே, தொடர்ச்சியாக ஏன் அவரிடம் பேசவேண்டும்? தப்பு இந்தப்பெண்ணிடமும் இருக்கிறது என்று ஒருசிலரும், இல்லைஇல்லை தப்பு இந்தப் பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது என்று சிலருமாக கச்சை கட்ட ஆரம்பித்தார்கள். வாதங்களில் பெண்ணாதிக்கம் ஆணாதிக்கம் என்ற வார்த்தைகளெல்லாம்கூடப் புழங்க ஆரம்பித்தன. அந்தப்பெண் மீது குற்றம் சுமத்தின யாருமே சாரு போன்ற ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசலாமா என்பதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

சாருநிவேதிதாவின் உரையாடல்களைப் படிக்கும்போது மனப்பிறழ்ச்சி கொண்ட காமாந்தகன் ஒருவன் பிதற்றிய பிதற்றல்களாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. நாகரிக வரம்புகள் எதற்குமே அவர் உட்பட்டவராகத் தெரியவில்லை. சாதாரணமாக ஒரு காரிலோ அல்லது சைக்கிளிலோ செல்ல வேண்டிவந்தால்கூட சாலைகளில் நாம் இஷ்டத்துக்கு ஓட்டிக்கொண்டு போகமுடியாது. சில கட்டுப்பாடுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டாக வேண்டும். உடனே, காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி? எழுத்தாளனுக்குப்போய் கட்டுப்பாடா? வரம்புகளா? என்ற வாதங்களையெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாது. ஒரு எழுத்தாளன் என்றால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு கவுரவம் இருக்கிறது. அவனுக்கென்று சில கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் சில வரையறைகளும் உள்ளன. ஒரு சாதாரணக் குடிமகனைவிட, ஒரு சாதாரண வாசகனைவிட ஒரு எழுத்தாளன் பொறுப்புணர்வோடும், கவுரவத்தோடும் மரியாதையோடும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமூகம் இது. அவற்றில் எதையுமே கருத்தில்கொள்ளாமல் எப்படி வேண்டுமானாலும் நான் நடந்துகொள்வேன் என்று யாரும் நடந்துகொள்ள முற்பட்டால் சாரு படுவதுபோன்ற அவமானங்களைப் பட்டுத்தான் ஆகவேண்டும்.

சாருவைக் கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒருசில அன்பர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அவர்கள் எடுத்துவைத்த வாதங்களும் சாருவின் செயல்களைவிட மோசமானதாக இருந்தன. ராஜனின் தளத்தில் சிம்மக்கல் என்ற ஒருவர் படு காத்திரத்துடன் உரையாற்றிக்கொண்டிருந்தார். மாறிமாறி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். வினவு தளத்திலும் ஜோஅமலன் என்ற ஒருவர் அங்கே சிம்மக்கல் சொன்னதையே இங்கே தம் பங்குக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அல்லது இரண்டுபேருமே ஒருவராகவேகூட இருக்கக்கூடும்.

சாருவை நீங்கள் எப்படிக் குறை சொல்லலாம்? யாரும் செய்யாததையா சாரு செய்துவிட்டார்? எம்ஜிஆர் ஜானகி அம்மாளை கணபதிபட்டிடமிருந்து பிரித்து கூட்டிவைத்துக் கொள்ளவில்லையா? சிவாஜி தேவிகாவுடன் என்ன செய்தார்? ஜெமினிகணேசன் புஷ்பவல்லியை வைத்துக்கொள்ளவில்லையா, அதற்குப்பின்னும் வேறொரு பெண்ணை வைத்துக் கொள்ளவில்லையா? கருணாநிதியின் கதை என்ன, எம்ஆர்ராதா ராதிகாவின் அம்மாவை எப்படி வைத்துக்கொண்டார்.....ஆகவே கலைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களே..இதில் சாருவை மாத்திரம் எப்படிக்குறை சொல்லலாம்? என்ற பாணியில் இவர் பாட்டுக்கு தமிழகத்தின் அத்தனைப் பிரபலங்களையும் இழுத்துவைத்து சகட்டுமேனிக்கு அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்.

இந்த அன்பருடைய பிரதான கோபம் கண்ணதாசன்மீது. கண்ணதாசன் கடைசிக்காலத்தில் ரசிகையாய் வந்த கல்லூரி மாணவியைக் கூத்தியாராக வைத்துக்கொள்ளவில்லையா? பாரதி என்ன நார்மலாக நடந்துகொண்ட மனிதனா அவனை ஏன் கொண்டாடுகிறீர்கள்? சாருவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பது அவர் கேள்வியாக இருந்தது. கூடவே பெண்கள் விஷயத்தில் மற்ற பிரபலங்கள் எல்லாரும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களையெல்லாம் கொண்டாடுவீர்கள்; கேள்விகேட்க மாட்டீர்கள். காரணம், தமிழர்கள் ஹீரோ ஒர்ஷிப் ஆசாமிகள். பாரதி, கண்ணதாசன் என்று எல்லா எழுத்தாளர்களையும் தெய்வமாக்கிவிடுகிறீர்கள் என்று குறைபாடியிருந்தார் அவர்.

நல்லவேளை இந்த மனிதரிடம் திருவிக, ராயசொ, முவ, ஆறுமுக நாவலர் கவிமணி, நாமக்கல் கவிஞர் இவர்களெல்லாம் சிக்கவில்லை. இன்னமும் ரோமன் போலன்ஸ்கி, பில்கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி, கென்னடி-மர்லின்மன்றோ என்ற சில பெயர்களும் நினைவுக்குவரவில்லை போலிருக்கிறது. அதிலும் பெரிய தமாஷ் என்னவென்றால் இவர்கூறுவதைக் கேட்கவோ ஆமோதிக்கவோ உடன்சேர்ந்துகொள்ளவோ யாரும் ஆள் இல்லை என்றபோதும் சொன்ன ஒரே வாதத்தை, அதுவும் ஒரேவகையான வாதத்தை மீண்டும் மீண்டும் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். தாம் எடுத்த வாந்தியை தாமே வழித்துத் தின்றுவிட்டு மறுபடியும் மறுபடியும் அதே வாந்தியை எடுத்துக்கொண்டிருந்தது போன்ற பரிதாபத்தையே தோற்றுவித்தது அவரது வாதங்கள்.

ஹீரோ ஒர்ஷிப் என்பது எப்படி வருகிறது? சராசரி மனிதனால் செய்யமுடியாததை அது அறிவோ கலையோ விளையாட்டோ படிப்போ எவனொருவன் செய்கிறானோ அவனை வியந்து பாராட்டுவது இயற்கைப் பண்பு. அந்த செயற்பாடு ஒரே சமயத்துடனோ அல்லது ஒரேயொரு வித்தையுடனோ முடிந்துபோய்விட்டால் சின்ன ஆச்சரியத்துடன் அவனைக் கடந்துவிடும் மனிதசமுதாயம் அதே காரியத்தை அவன் தொடர்ந்தாற்போல்- அதுவும் மக்களுக்குப் பிடித்தவகையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும்போது- வியப்பு ஈர்ப்பாக மாறிப்போய் அவனைக் கொண்டாடவும் ஆரம்பித்துவிடுகிறான். வியப்பாக இருந்தது ஈர்ப்பாக மாறி ஈர்ப்பு பிரியமாகவும் வடிவெடுத்துவிடுகிறது. கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டுவீரர்கள், நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற ஹீரோ ஒர்ஷிப் என்பது இந்த வகையினதுதான். இவற்றில் சில போலிகளும் உள்ளன என்பது வேறுவிஷயம்.

இப்படி மக்களின் வியப்பிற்கு உரியவராக மாறிய ஒருவரை நான் வியப்பாகப் பார்ப்பதற்கில்லை, எனக்கு அவர்களெல்லாம் சாதாரணம் ஏனெனில் நான் மேதாவி- என்று எவனொருவன் சொல்கிறானோ அவனிடம் சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டியவற்றுள் ஏதோ ஒன்று குறைந்திருக்கிறது என்று பொருள். அவனுக்காக நாம் பரிதாபப்படலாமே தவிர அவன் கருத்துக்களை சிலாகிப்பதற்கில்லை.
பிரபலங்களிடம் அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரபலங்களிடம் பெண்கள் தாங்களாகவே போய்விழுவதென்பது எம்கேடி காலத்திலிருந்து நடைபெற்றுவரும் ஒன்றுதான். திரைப்படத்துறையில் யார்யாருக்கு யார்யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதெல்லாம் எப்போதுமே பத்திரிகைகளில் அடிபடுகின்ற மக்களுக்கும் தெரிந்த ரகசியங்கள்தாம். திரைப்படத்துறை அப்படித்தான் இருக்கும் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டுதான் அவர்களுக்கு ஆதரவும் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் மக்கள் மதிக்கும் வேறுசில துறைகளில் உள்ள பிரபலங்கள் இப்படிப் பாலியல் குற்றங்களைச் செய்கிறார்கள் எனும்போது மக்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மனைவியைத் தவிர இன்னொருவருடன் தொடர்பு என்பதை ஒருவாறாக ஏற்றுக்கொண்டாலும் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் முன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது.

இன்னொரு பெண் தொடர்பு என்பது எத்தனையோ பிரபலங்களின் வாழ்க்கையில் இருப்பதுதான். அதனைப் பெரும்பாலோர் ஒரு நாகரிக வரம்புக்கு உட்பட்டு அந்தரங்கம் என்ற அளவில் காப்பாற்றிக்கொள்கிறார்கள். இந்த நண்பர் சொன்ன பலரும்கூட இந்தவகையான அந்தரங்கத்தைக் கடைப்பிடித்தவர்களே. அதனால் அவையெல்லாம் ஒரு ரகசியக்கிசுகிசு என்ற அளவுக்குத்தான் ஒரு ரசிகனை அடைந்த விஷயங்கள். இம்மாதிரியான விஷயத்தைத்தொட்டு ஜெயகாந்தன் ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ‘அந்தரங்கம் புனிதமானது’ என்பது கதையின் பெயர். சம்பந்தப்பட்ட நண்பர்கள் அதனை ஒருமுறை படித்துப்பார்ப்பது நல்லது.

மனைவியைத்தவிர வேறொரு பெண்ணுடன் சாருவுக்குத் தொடர்பு இருக்கிறது என்றுமட்டும் ஒரு செய்தி இங்கே பரவியிருந்தால் யாரும் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கப்போவதில்லை. சாரு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என்று வந்திருந்தால் யாரும் அதுபற்றி விவாதம் செய்தோ பதிவு எழுதியோ தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கப்போவதில்லை. இது அப்படிப்பட்ட விஷயம் அல்ல; சாட் செய்யவந்த ஒரு பெண்ணிடம் எவ்வளவு அசிங்கமாய் எவ்வளவு கேவலமாய் எவ்வளவு ஈனத்தனமாய் ஒரு தமிழ் எழுத்தாளர் நடந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். அதுவும் அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும் அவரது நோக்கங்களும்...................

ஒருவனுடைய சுதந்திரம் எந்த அளவுக்கு என்பதுபற்றி ஆங்கிலத்தில் சொல்வார்களே, நீ உன்னுடைய கையில் இருக்கும் தடியை எப்படிவேண்டுமானாலும் சுழற்றலாம் ஆனால் அது அடுத்தவன் மூக்கில் படாமல் இருக்கவேண்டும் என்று. மூக்கை அல்ல முகரையையே பேர்க்கின்ற காரியத்தை சாரு செய்யும்போது கண்டுக்காமல் போகவேண்டும் என்பதும் குப்பன் செய்யவில்லையா குட்டையன் செய்யவில்லையா என்று கேட்பதும் என்ன நியாயம்?
சரி..சாருவுக்காக வாதாட வருகிறார்களே அவர்கள், ‘நானே அப்படித்தான். அப்படியிருக்க சாருநிவேதிதா ஏன் அப்படியிருக்கக்கூடாது?’ என்று தங்கள் வாதத்தை வைத்திருந்தாலாவது பரவாயில்லை. பாரதியார் யோக்கியமா, சிவாஜிகணேசன் யோக்கியமா, எம்ஜிஆர் யோக்கியமா,எம்ஆர்ராதா யோக்கியமா,கண்ணதாசன் யோக்கியமா என்று கேட்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அதிலும் குறிப்பாக கண்ணதாசனைத்தான் சுழற்றிச் சுழற்றிச் சாடுகிறார் இந்த அன்பர். வள்ளியம்மையுடனான அவரது திருமணம் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தேதான் நடைபெற்றது. அதுபற்றிய புகைப்படத்துடனான கட்டுரைகள் அப்போதே குமுதம் முதல் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. காமராஜர் கண்டித்தார் என்பதுபோல்கூட ஒரு செய்தியைப் படித்ததாக நினைவு. வேறுமாதிரியான சமூக நிர்ப்பந்தங்களும் தார்மிக நெறிமுறைகளும் ஒருபுறம் இருக்க அந்தப் பெண்மணியும் கண்ணதாசனும் இசைந்தே இந்த ஒப்பந்தம் நடைபெற்றது என்பதில் சந்தேகமில்லை. கண்ணதாசனைப் பற்றி மிகக் கேவலமான கேள்விகளை முன்வைக்கும் அந்த நபர் ‘அவனுக்கு மட்டும் மவுண்ட் ரோட்டில் வெண்கலச்சிலை வைத்துக் கொண்டாடுகிறீர்களே ஏன்?’ என்ற கேள்வியை நான்கைந்துமுறை கேட்கிறார்.

ரொம்ப நல்லது. அந்த மகாகவிஞனுக்கு இந்த நண்பரின் வாய்முகூர்த்தப்படி மவுண்ட் ரோட்டிலும் ஒரு சிலை வைத்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கவிஞருக்கு மவுண்ட் ரோட்டில் சிலை இல்லை. சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டித்தெருவில்தான் வாணிமகாலுக்கு அருகில் கவிஞரின் சிலை உள்ளது. இன்னொரு சிலை காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்து வாசலில் உள்ளது. அதுதவிர மேலும் சிலைகள் ஜெயலலிதா ஆட்சியில் வைத்தால்தான் உண்டு. ஏனெனில் கலைஞர் அவருக்கு சிலையோ அல்லது வேறு எந்தச் சிறப்புக்களுமோ செய்யமாட்டார். சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு கண்ணதாசனைப் படுகேவலமாக விமர்சிக்கும் அந்த நண்பருக்கு கவிஞர் என்பதற்கு அப்பாற்பட்டு கண்ணதாசன் எத்தனை அற்புதமான மனிதர் என்பது தெரியுமா? மற்றவர்களுக்கு உதவுவதிலும் பழகுவதிலும் எந்தளவு மனிதாபிமானம் கொண்டவர் என்பது தெரியுமா? எத்தனை மனித நேயம் கொண்டவராக எவ்வளவுபேருக்கு உதவியிருக்கிறார் என்பது தெரியுமா? அவரது நல்ல சுபாவத்தைப் பயன்படுத்திக்கொண்டு எத்தனைப்பேர் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியுமா? இது ஒரு பக்கம்- மறுபுறம் அவரது துறையை எடுத்துக்கொண்டால் அவர் ஈடுபட்டிருந்த துறையில் எத்தனை விற்பன்னர் தெரியுமா அவர்? எவ்வளவு வேகத்துடன் இலக்கியநயம் சார்ந்த வார்த்தைகள் வந்துவிழும் தெரியுமா அவருக்கு? மெட்டுக்கான பாடலாகட்டும், கவிதைகளாகட்டும் நயாகரா அருவியைப்போல் கொட்டும் மகத்துவம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா அவர்? தம்முடைய மூன்றாவது திருமணம் பற்றி “இப்படி நடந்திருக்கக்கூடாது. ஆனால் விதிவசத்தால் நடந்துவிட்டது. என்னுடைய சில பலவீனங்களே இதற்குக் காரணம்” என்று கருத்துத் தெரிவித்திருந்த கவிஞர், அந்த அம்மையாரை எப்படியெல்லாம் வைத்துப் பாராட்டினார் சீராட்டினார் என்பது தெரியுமா? அவருக்கு எந்தக் காலத்திலும் பொருளாதாரச்சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வானதி திருநாவுக்கரசு மூலமாக என்னவிதமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்பது தெரியுமா?

இந்தத் ‘தமிழ்ப்பொண்ணு’ விவகாரத்தில்(தெலுங்குப்பொண்ணு என்று சொல்லவேண்டுமா வால்பையன்?) சாருநிவேதிதா இப்படித்தான் நடந்துகொண்டாரா, அல்லது நடந்துகொள்ளத் தயாரா? இந்தப் பெண் சம்மதித்தால் கண்ணதாசனைப்போல் திருமணம் செய்துகொள்வாரா இந்தப் பின்நவீனத்துவம்? அறுபதுகளிலிருந்தே இன்றைக்குவரை ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நூல்கள் விற்றுத்தீர்ந்து போயிருக்கும் கண்ணதாசன் எங்கே, ஒரு வருடத்திற்கு எண்பது பிரதிதான் விற்றிருக்கிறது என்று புலம்பும் சாரு எங்கே? ஒப்பீடு செய்வதற்குக் கொஞ்சமாவது சமச்சீர் வேண்டாமா? வார்டு கவுன்சிலருடன் பிரதமரையை ஒப்பிட்டுப்பேசுவது?

போகட்டும்....கண்ணதாசனோ அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கும் மற்றவர்களோ பெண்பித்தர்கள் இல்லையா அவர்களை ஏன் கொண்டாடவேண்டும்? என்பது வெளிப்படையாகப் பார்க்கும்போது நியாயமான கேள்விதான். இந்த அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டால் எந்தத் துறையிலும் எந்தப் பிரபலமும் தேறமாட்டார்கள். நாம் பாட்டுக்கு வறட்டுத்தனமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துப் பாயைப் பிறாண்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டியதுதான். அப்புறம் என்னதான் தீர்வு? புத்திசாலிகளுக்கு வள்ளுவன் வழி சொல்லுகிறான்.

ஒருவன் பற்றிய நல்ல தன்மைகளை-குணங்கள் மற்றும் திறமைகளை- ஒரு பக்கம் வை; அவனுடைய தீய தன்மைகளை- தீய குணங்கள் மற்றும் பலவீனங்களை- இன்னொரு பக்கம் வை. எது அதிகமாக இருக்கிறதென்று பார். எது அதிகமோ அதுதான் அவன் என்று தீர்மானித்துக்கொள் என்பதுதான் வள்ளுவர் காட்டும் வழி.

குறள் இதுதான் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ இந்த பார்முலாவை வைத்துக்கொண்டு நாம் யாரை வேண்டுமானாலும் மிகச்சரியாகவே எடைபோட்டுவிட முடியும். இப்படிப் போடப்படும் எடையில் கவிஞரின் பலவீனங்கள் சிறிதுதான். அவருடைய பெருமைகளும் உயர்வுகளும் மிகமிகப் பெரிது. இதே பார்முலாதான் சிவாஜிக்கும் இதே பார்முலாதான் எம்ஜிஆருக்கும்.,மற்றவர்களுக்கும். இந்த பார்முலாபடி பார்த்தால்கூட சாரு தேறமாட்டாரே. அவருடைய பாலியல் அசிங்கங்கள்தானே அவரது ‘நல்ல’ எழுத்துக்களை விடவும் அதிகமாக உள்ளன.....

சாருநிவேதிதா முன்பிருந்த எழுத்தாளர்களை விடவும் இணைய வாசகர்களிடம் பாப்புலராக இருப்பதற்கு ஒரே காரணம் மற்ற எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய பாலியல் பற்றிய விஷயங்களை அப்பட்டமாகவும் வக்கிரமாகவும் தயக்கமின்றி எழுதினார் என்பதால்தான். இதற்காக அவரைத் தமிழ் சமூகம் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாட முடியாது. எழுத்து என்பது பாலியலைத் தாண்டி இன்னமும் பல்வேறு தளங்களைக் கொண்டது. எழுத்தில் செக்ஸ்எழுதுவது என்பதும்கூட ஒரு பரிணாம வளர்ச்சியாக வருவதுதான்.

பாலியல் எழுத்துக்களை அந்தக்காலத்தில் முதன்முதல் படைப்பிலக்கியத்தில் எழுதத் தொடங்கியவர் குபரா தான்.அவரது படைப்புக்களில் ஊடாக பாலுறவு இருக்கும். சொற்களில் வக்கிரம் இருக்காது. இதேபோல் அடிநாதமாக உளவியல் கண்ணோட்டத்துடன் பாலியலைத் தொட்டவர் தி.ஜானகிராமன். திஜா இந்த விஷயத்தில் பெரிய சிரக்கம்பமே செய்திருப்பார். ஜெயகாந்தன்தான் முதன்முதலாக சில வசவுச்சொற்களை தைரியமாகப் பயன்படுத்தியவர். அடுத்து ஜி.நாகராஜன் இன்னமும் கொஞ்சம் முன்னேறினார். கி.ராஜநாராயணன் கிராமியம் கலந்து பலபடி முன்னேறினார். இன்றைக்கு சாருவுடன் சேர்ந்து நிறையப்பேர் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு எழுதுகிறார்கள். இதுவும் ஒருவகையில் சினிமா மாதிரிதான். எம்கேடி பியூசின்னப்பா காலத்தில் சினிமாக்காதலர்கள் பத்தடி தூரத்தில் நின்று காதலித்தார்கள். சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கட்டியணைத்து காதல் புரிந்தார்கள். கமலஹாசன் காலத்தில்தான் பட்டும் படாமலுமாக உதடு உரசிய முத்தம் வந்தது. இப்போது சிம்பு தனுஷ் போன்றவர்களெல்லாம் உதட்டோடு உதடு பொருந்திய முத்தமெல்லாம் மிகவும் சாதாரணம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். அவ்வளவு இயல்பு ஆகிவிட்டது. இதற்காக புரட்சி செய்தவர்கள் என்று தனுஷையும் சிம்புவையும் ஒரு சமூகம்
தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட முடியுமா என்ன?

தன்னுடைய கதைகளில் செக்ஸ் எழுதும் ஒரு எழுத்தாளன் முகநூல் போன்ற ஒரு பொதுத்தளத்தில் ஒரு பெண்ணிடம் மிகமிக வக்கிரமாகவும் ஆபாசமாகவும் நடந்துகொள்வதை தமிழுலகின் எல்லா பிரபலங்களையும் சான்றுகாட்டி நியாயப்படுத்துவதுபோன்ற செய்கைகளை அங்கீகரிக்கலாகுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

இந்த ஆள் தவறாகப்போகிறார் என்று தெரிந்தபின்னாலும் அந்தப்பெண் அவருடன் ஏன் தொடர்ச்சியாகப் பேசவேண்டும்? என்று கேட்கப்படும் கேள்வி நியாயமானதுதான். ஆனால், இது ஒருவகையில் சாருநிவேதிதாவின் அலப்பரையான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கருதிய சிலரின் கைங்கரியமாகக்கூட இருக்கலாம். ஒரு சில பதிவர்கள் இதற்கான சரியான சந்தர்ப்பம் கருதி காத்திருந்திருக்கூடும் என்றே படுகிறது.
அதாவது இவரது பிராபல்யம் கருதி தொடர்பில் பேசுவதை பெருமையாகக் கருதிய அந்தப்பெண் இவர் வழிதவறுகிறார் என்று தெரிந்ததும் திடுக்கிட்டுப்போய் தனக்குத் தெரிந்த சில பதிவர்களிடம் முறையிட்டிருக்கலாம். அவர்களும் மொத்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சரி அந்த ஆள் எதுவரை போகிறார் பார்த்துவிடலாம் என்று அந்தப்பெண்ணை இப்படியெல்லாம் நடந்துகொள் என்று வழிநடத்தியிருக்கலாம். யாரையாவது கடத்திப்போய் வைத்துக்கொண்டு போன் செய்து மிரட்டுகிறவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களை கடத்தல்காரர்கள் போக்கின்படியே நடக்கச்சொல்லி வழிநடத்தி கடைசியில் கடத்தல்காரர்களைச் சுற்றிவளைத்துப் பிடிக்கிறதே காவல்துறை அதுபோல் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் அந்தப்பெண்ணை வழிநடத்தி இந்த ஆசாமி முழுக்க மாட்டும்வரையிலும் காத்திருந்து இப்போது கையும் களவுமாய்ப் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

உண்மையில் அப்படி நடந்திருந்தால் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே. மொத்த விவகாரத்தையும் இணையத்தின் முன்வைத்து சந்திசிரிக்கவைத்த வினவு தளமும் பாராட்டிற்குரியதே.

சாருநிவேதிதாவின் இந்த முகநூல் உரையாடலில் ஆபாசம் அசிங்கம் வக்கிரம் என்பதையெல்லாம் தாண்டி திருமதி கனிமொழி போன்றோரின் பெயர்களும் இழுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டியது திமுக இயக்கம் மற்றும் கனிமொழி குடும்பத்தினரின் பொறுப்பு. ஆனால் விவஸ்தை தெரியாமல் நவீன இலக்கியவாதிகள் என்று தவறாக நம்பிக்கொண்டு இம்மாதிரியான ஆட்களையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்துக்கொண்டிருந்ததற்கு கனிமொழிக்குக் கிடைத்த வெகுமதி இது என்றுதான் பரிதாபப்படவேண்டியிருக்கிறது.

எதற்காக இந்த விஷயத்திற்கு இவ்வளவு பெரிய பதிவு என்று கேட்கலாம். எல்லாவற்றையுமே நாம் கவனம் செலுத்தாமல் தவிர்த்துவிடுவோம் என்று கடந்துபோய்விட முடியாது. சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் பார்த்தீனியச்செடிகள் மிக வேகமாய் எல்லா இடங்களிலும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது.

Tuesday, June 14, 2011

ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் கண்ணதாசனும்.......!


முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அந்தப் பாடலுக்கான விளக்கத்தை மிக விரிவாகவும் விடாப்பிடியாகவும் அடிக்கோடிட்டுச் சொல்லுவது போன்ற தொனியிலும் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடல் விவகாரம் எப்போதோ நடந்து முடிந்த ஒன்று. இன்னமும் சொல்லப்போனால் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட ஆகியிருக்கலாம். கடந்த சட்டமன்ற நிகழ்வுகளின்போது என்றைக்கோ ஒருநாள் சட்டமன்றத்திற்கு வந்த ஜெயலலிதா இந்தப் பாடலையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு உடனடியாக சபையைவிட்டு வெளியேறினார் என்பது அன்றைய பத்திரிகைகளின் செய்தி. அவர் போனபிறகு அவர் பேச்சைப்பற்றிக் குறிப்பிட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி “இந்தப் பாடலில் எம்ஜிஆர் பாடியிருப்பது என்னைப்பற்றித்தான் ஏனென்றால் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்றுதான் அவர் பாடியிருக்கிறார். தலைவி என்று பாடவில்லை.” என்று வழக்கம்போல் அவருக்கேயுரிய பாணியில் பதில் சொல்லியிருந்தார்.

கலைஞரின் பாணியே இப்படிப்பட்டதுதான். பேசுபவர்களின் வார்த்தைகளை வைத்தே அதில் லேசாக சிரக்கம்பம் செய்து சமத்காரமாகச் சொல்லும் பதில்கள் சம்பந்தப் பட்டவர்களின் வாயை அடைக்கும்விதமாகவும் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்ற விதமாகவும் இருக்கும். இந்தப் பாணியில் வேறொரு ஆபத்தும் உண்டு. சமயங்களில் ஆபாசத்தைத் தொட்டுவிடவும் செய்யும். கலைஞர் பதில்களிலேயே இப்படியும் நடந்திருக்கிறது. நல்ல வேளை இந்த விஷயத்தில் ஆபாசமெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கான அவருடைய பதில் இத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் வருடங்களே ஆகியும் சம்பந்தப்பட்டவரின் மனதில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி இவ்வளவு நாட்கள் ஆனபிறகும் அவர் அந்த விஷயத்தை அப்படியே மனதிற்குள் பத்திரமாய் வைத்திருந்து சட்டமன்றத்திலே வந்து அதனை வெளிப்படுத்துகிற அளவுக்கு அவரைப் பாதித்திருக்கிறது என்பது இங்கே முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

என்ன பாடல், என்ன விவகாரம் என்பதை முதல்வர் ஜெயலலிதா வார்த்தைகளிலேயே பார்க்கலாம்............´´இதே சட்டமன்றப் பேரவையில் கடந்த 5 ஆண்டுக்காலத்தில் ஒருமுறை நான் இங்கே பேசியபோது எம்ஜிஆரின் பாடல்வரிகளைக் குறிப்பிட்டேன். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று நான் சொல்லிவிட்டு அதன் பிறகு நான் வெறியேறிவிட்டேன். நான் சென்றபிறகு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இந்தப் பாடல் எம்ஜிஆர் பாடியது தன்னைத்தான். ஏனென்றால் ஒரு தலைவி இருக்கிறாள் என்று சொல்லவில்லை. ஒரு தலைவன் இருக்கிறான் என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆகவே, ஜெயலலிதாவை அவர் குறிப்பிடவில்லை என்று அவர் சொன்னார். நான் வெளியே சென்றபிறகுதான் இதைக் கேள்விப்பட்டேன். அதற்கு பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். புரட்சித்தலைவர் என்னைப் பார்த்து ‘திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று பாடியிருக்கிறார். ஆகவே அதில் என்னைத்தான் குறிப்பிடுகிறார். அவருடைய அரசியல் வாரிசு நான்தான் என்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டியிருக்கிறார் என்று நான் பதிலடி கொடுத்தேன்.

ஆனால் இது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. இப்படி புத்திசாலித்தனமாகச் சொன்னதற்கு உடனடியாக ஜெயலலிதா பதிலடி கொடுத்துவிட்டாரே என்று அனைத்துப் பத்திரிகைகளையும் மிரட்டி, இந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்று கட்டாயப்படுத்தி, என்னுடைய அறிக்கை எந்தப் பத்திரிகையிலும் வெளியிடப்படவில்லை என்பதுதான் உண்மை.” என்று பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா பேச்சின் இரண்டாவது பகுதி எந்தளவு உண்மை என்பது நமக்குத் தெரியாது. அது தேவையும் இல்லை. ஏனெனில் உப்புச்சப்பில்லாத இப்படியொரு அறிக்கையை வெளியிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் அறிவுகூட இல்லாமல்தான் பத்திரிகையாசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் இங்கே யோசிக்கப்படவேண்டிய விஷயம்தான். இந்த ஒரு அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதற்கே பத்திரிகை ஆசிரியர்களெல்லாம் மிரட்டப்பட்டார்கள் என்றால் நாளொரு மேனியும் ‘அங்கே விளக்கு எரியவில்லை அதற்காகப் போராட்டம்; இங்கே குழாயில் தண்ணி வரவில்லை அதற்காகப் போராட்டம்’ என்றெல்லாம் தினந்தோறும் எல்லாப்பத்திரிகைகளிலும் இவரது அறிக்கைகள் வந்துகொண்டிருந்ததன் மர்மம் என்னவென்பதும் புரியவில்லை. இதையெல்லாம் கருணாநிதி மிரட்டி நிறுத்தவில்லையா என்பதும் புரியவில்லை. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.

ஜெயலலிதா குறிப்பிட்ட பாடல் ‘பணத்தோட்டம்’ படத்தில் வருகிறது. பணத்தோட்டம் படத்தில் வந்த ‘ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்ற பாடல் இது. பணத்தோட்டம் படம் வெளியான ஆண்டு 1963. சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்தின் இயக்குநர்;கே.சங்கர். கதை பி.எஸ்.ராமையாவுடையது. வசனம் பா.சு.மணி. நடித்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி. இசை;விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இத்தனை விவரம் எதற்காகவென்றால் இந்தக் குழுவினர் தயாரித்த அந்தப் படத்தின் பாடலில், பின்னால் எப்போதோ வரப்போகிற ஜெயலலிதா பற்றியோ அல்லது கருணாநிதி பற்றியோ தலைவர் என்ற அடைமொழியுடன் சங்கேத தகவல்கள் சொல்லப்பட்டிருக்குமா என்பதற்கான சந்தேகம்தான்.

இன்னமும் சொல்லப்போனால் இந்தப் படத்தின் இன்னொரு பாடலும் மிகவும் புகழ்பெற்ற பாடல்தான். (அந்தக் காலத்திலெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து கண்ணதாசன் எழுதுகிறார் என்றாலேயே அத்தனைப் பாடல்களும் அமுதகானமாக,புகழ்பெற்ற பாடலாக இருந்ததுதானே அற்புதம்!) ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா’ என்ற பாடல் ஒன்று இருக்கிறது. இந்தப் பாடலிலே கவிஞர் கண்ணதாசனின் குறும்பு தெரியும் என்று சொல்வார்கள். பாடலின் இடையில் ‘பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா’ என்று ஒரு வரி வரும். கண்ணதாசனுடைய நுட்பம் இதுதான். ரொம்பவும் soft ஆகத்தான் மற்றவர்களைப் புகழ்வார். இலைமறை காயாகத்தான் மற்றவர் பற்றிய புறவியல் அறிமுகம் வரும். நேரடியாக முகத்துக்கு நேராக பாராட்டுவது அவர் பாடல்களில் கிடையாது. அதெல்லாம் வாலி வந்தபிறகு ஆரம்பித்துவைக்கப்பட்டவைதாம் அப்பட்டமான புகழுரைகள். கண்ணதாசனில் அது கிடையாது. அடுத்த வரி வரும் பாருங்கள்....’சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்று! சேரனுக்கு உறவு என்று எம்ஜிஆரை விளிப்பதில் கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறதா? எம்ஜிஆருடைய படத்தில் அவர் நடிக்கும் பாடலிலேயே இப்படி எழுதும் தைரியம் கவிஞரைத்தவிர யாருக்கு வரும்? என்று கேட்பார்கள். இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரின் அரசியல் கோட்பாடுகளுக்கேற்ப அவர் பற்றிய மக்களுக்கான பிம்பத்தை பாடல்கள் மூலம் சொல்லும் பாணி இங்கே இந்தப் பாடலில்தான் ஆரம்பித்துவைக்கப்படுகிறது, கண்ணதாசனால்! பிற்பாடு இதுவே ஒரு அப்பட்டமான பிரச்சாரமாக அவருடைய கடைசிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்வரை பல்வேறு கவிஞர்களாலும் தொடரப்படுகிறது. இதற்குத் தலைமை தாங்கியவர் வாலி.

மறுபடியும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலுக்கு வருவோம். இந்தப் பாடலை எனக்காகத்தான் எம்ஜிஆர் பாடியிருக்கிறார் என்று ஜெயலலிதா சொல்ல, இல்லையில்லை அதில் ஒரு தலைவன் இருக்கிறான் என்று சொல்லியிருப்பதால் அவர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என்று கலைஞர் சொல்ல இரண்டுமே செம காமெடியாய் இருக்கிறது. அவர்கள் இருவருமே இந்த இடத்தில் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஒரு விஷயத்தை எல்லாரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எம்ஜிஆர் படமோ, சிவாஜி படமோ, ஜெமினி கணேசன் படமோ யாருடைய படமாக இருந்தாலும் ஒரு படத்தில் கண்ணதாசன் பாடல் எழுதுகிறார் என்றால் முதலில் அது அவருடைய பாட்டு. அப்புறம்தான் அதில் நடிக்கும் நடிகர்களின் பாட்டு. ‘மாலைஇட்ட மங்கை’ படத்தின் வெற்றியும், அந்தப் படத்தில் வந்த ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலும், ‘எங்கள் திராவிடப்பொன்னாடே’ பாடலும் அவருக்குக் கொடுத்த கௌரவம் அது. இந்த இரண்டு பாடல்களுமே ஒரு கதாநாயகனுக்குரிய இடத்தை அன்றையிலிருந்தே கண்ணதாசனுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் கட்சி என்பதைத் தாண்டி கல்லூரிகளின் தமிழ் அமைப்புகளுக்கும், இலக்கிய விழாக்களுக்கும் தமிழகமெங்கும் நடைபோட ஆரம்பித்துவிட்டார் கண்ணதாசன். அவருடைய முப்பதாவது வயதிலேயே தமிழகத்தில் மட்டுமின்றி தமிழர் வாழ்ந்த பிறபகுதிகளிலிருந்த இலக்கிய அமைப்புகளும் அவரைக்கூப்பிட்டுக் கொண்டாடியிருக்கின்றன. பெங்களூரில் உள்ள டெலிபோன் தொழிற்சாலை 50-களில் தமிழ் மன்றத்தையே அவரைக்கூப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறது என்கிற செய்திகளெல்லாம் காணக்கிடைக்கின்றன.

கண்ணதாசனின் இத்தனைப் பரவலான புகழுக்கும் ஆளுமைக்கும் காரணம் அவருக்கிருந்த பன்முகத்தன்மைதான். அவர் வெறும் கவிஞராக மட்டும் இருக்கவில்லை. அரசியல்வாதியாக, இலக்கியவாதியாக, பெரிய பேச்சாளராக, திமுகவிலிருந்து ஒரு பெரிய பிளவை ஏற்படுத்திப் பிரியும் மறைமுக அரசியல் தலைவராக, எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை முதலாளியாக, திரைப்பட நடிகராக, திரைப்படத் தயாரிப்பாளராக என்று சகல துறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். வேலை பார்த்த பத்திரிகைகள்போக, முல்லை, தென்றல், கடிதம், கண்ணதாசன் என்ற நான்கு பத்திரிகைகளை அவரே ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் போக, இறுதியில் ஆன்மிக இலக்கியவாதியாக அவர் தோற்றம் கொண்டதும் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதி உலகிலுள்ள அத்தனைத் தமிழர்களின் வீடுகளிலும் நுழைந்ததும் வரலாறு.

ஆகவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர், சிவாஜி, எம்ஜிஆர் என்ற ஆளுமைகளுக்கு என்ன இடமோ அந்த இடத்தில் இருப்பவர்தான் கண்ணதாசன். வேண்டுமானால் ஒரு பத்துவருடங்களின் குமுதம் ஆனந்தவிகடன் பத்திரிகைகளை எடுத்துப் புரட்டிப்பாருங்கள். ஒரு மூன்று அல்லது நான்கு இதழ்களுக்கு ஒருமுறையாவது கண்ணதாசனைப்பற்றிய செய்தியோ புகைப்படமோ வராமல் இருக்காது. அந்த அளவு தமிழக மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட பெயர் கண்ணதாசனுடையது.

எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்துவிட்டாரென்றதும் இங்கே பல்வேறு பிம்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அவைகளில் ஒன்றுதான் திரைப்பட உலகிலும் எம்ஜிஆர்தான் முதன்மையானவராக இருந்தார் என்பது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அன்றைய நிலையில் எம்ஜிஆரின் படங்கள் வசூலில் கொஞ்சம் அதிகமான பணத்தை வசூலித்தன என்பதைத்தவிர தரத்தின் அடிப்படையில் திரையுலகில் முதன்மையாக மதிக்கப்பட்டவர் சிவாஜிதான். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமும் சிவாஜியைத்தான் அதிகமாக மதித்தது. ஆங்கிலப்பத்திரிகைகளும், வெளிநாட்டுப் பத்திரிகைகளும்கூட சிவாஜியைத்தான் புகழ்ந்தன. வசூல் நிலையிலும்கூட மிகச்சிறிய வித்தியாசம்தான் இருக்கும் இருவரது படங்களுக்கும். பாமர மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தவர் எம்ஜிஆர். படித்தவர்களின் ஆதரவு சிவாஜிக்கு என்கிற நிலைமைதான் இருந்தது.

சிவாஜி ரசிகர்கள் மிகவே தெளிவாக இருப்பார்கள். அவரது படங்களில் வந்த புகழ்பெற்ற பாடல்களான ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, ஏன்பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, நான் என்ன சொல்லிவிட்டேன்- போன்ற எந்தப் பாடலாயிருந்தாலும் அது கவிஞரின் பாடல் என்றுதான் சொல்வார்களே தவிர, சிவாஜி பாடல்கள் என்று சொல்லமாட்டார்கள்.

எம்ஜிஆர் பாடலுக்கும் படித்தவர்கள் மத்தியில் அப்படித்தான் பெயர் உண்டு. ‘தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்பது முதலில் பட்டுக்கோட்டையின் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அதே போல்தான் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்பது முதலில் கண்ணதாசன் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அச்சம் என்பது மடமையடா என்பது முதலில் கண்ணதாசன் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அதேபோல்தான், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது முதலில் கண்ணதாசன் பாடல், அப்புறம்தான் எம்ஜிஆர் பாடல். இதுதான் படித்தவர்களின் கருத்து. பாமர மக்களுக்கு வேண்டுமானால் இந்த வித்தியாசம் தெரியாமல் திரையில் வரும் எல்லாமே எம்ஜிஆர் பாடல் என்று அவர்கள் நினைக்கலாம்.

ஆனால்-

அன்றைய நிலையில் எம்ஜிஆர் படப்பாடல்களையும் பிரித்தறியும் வித்தியாசம்கூட நிறையப்பேர் மத்தியில் இருந்தது. எம்ஜிஆரின் படங்களில் வந்ததாகவே இருந்தாலும் இது பட்டுக்கோட்டை பாடல், இது கண்ணதாசன் பாடல் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
கண்ணதாசனுடைய சுபாவம் அந்தக் காலத்திலேயே நிறையப்பேரிடம் சண்டைப்பிடித்துக்கொள்ளும் சுபாவமாக இருந்திருக்கிறது. சிவாஜிக்கும் அவருக்கும் தகராறு. எம்ஜிஆருக்கும் அவருக்கும் தகராறு என்கிற காலகட்டங்கள் நிறைய இருந்திருக்கின்றன. சிவாஜி ஆரம்ப காலத்தில் தகராறு ஏற்பட்டபொழுது தமது படங்களுக்கு கண்ணதாசன் எழுதவேண்டாம் என்று தீர்மானித்த காலங்கள் உண்டு. ஆனால் மிகக் குறைவான நாட்கள்தாம் அவை. சிவாஜியின் குணம் மற்றும் அன்றைய வணிகரீதியான எதிர்பார்ப்புகள் இவற்றுக்கேற்ப தமது படங்களுக்கு மறுபடியும் கண்ணதாசனே எழுதவேண்டும் என்று பணித்தார் சிவாஜி. அது கடைசிவரை தொடர்ந்தது.

எம்ஜிஆருடைய மனநிலை வேறுமாதிரியானது. தமக்குப் பிடிக்கவில்லையென்றால் தமது படத்தில் மட்டுமல்ல வேறுபடங்களிலும் இருக்கக்கூடாது என்று செயல்படும் மனநிலை அவருடையது. அவருடைய பிம்பத்தைச் சிதறவைக்கும் இம்மாதிரியான விஷயங்களைப் பேசும் பதிவல்ல இது என்பதனால் இந்த ஒரு வரியோடு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம். தமக்குப் பிடிக்கவில்லையென்றபோதும் வேறு வழியில்லாமல் இயக்குநருக்காகவோ, அல்லது தயாரிப்பாளருக்காகவோ அல்லது வணிக நிர்ப்பந்தங்களுக்காகவோ கண்ணதாசனை எம்ஜிஆர் ‘பொறுத்துக்கொண்ட’ சம்பவங்களும் உண்டு. அதன் பிறகுதான் அவர் கண்ணதாசனுக்குப் போட்டியாக வாலியைக் கொண்டுவந்தார். பிறகு வாலியுடனும்கூட மனக்குறை ஏற்பட்டபோதுதான் புதுமைப்பித்தனையும் நா.காமராசனையும் ஆதரித்தார். இவ்வளவும் கடந்து ஆட்சிக்கு வந்தபின்னர் அந்த நாட்களில் தம்மை மிகத்தீவிரமாகத் தாக்கி எழுதிக்கொண்டிருந்த கண்ணதாசனை அரசவைக்கவிஞராக எம்ஜிஆர் நியமித்தார். கவிஞரே வேண்டாம் என்றபோதும் ‘இல்லை இது உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பதவி. நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்று சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தார். எம்ஜிஆர் ஏன் இப்படிச் செய்தார் என்பதெல்லாம் அரசியல் சூட்சுமங்கள் அடங்கிய விஷயம். ஆனால் கண்ணதாசனைத் தவிர்க்கமுடிவதில்லை என்பதுதான் இங்கே கருத்தில் கொள்ளப்படவேண்டியது.

எம்ஜிஆர் தம்மைப்பற்றிய விஷயங்களிலும் தம்முடைய இமேஜ் பற்றிய விஷயங்களிலும் எவ்வளவு கவனமாக இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ரகசியம்தான். எனவே, தம்முடைய படத்திற்கு கண்ணதாசன் வேண்டாம் என்று எம்ஜிஆர் முடிவெடுப்பதற்கான இன்னொரு காரணமே தம்முடைய படமாகவே இருந்தாலும் கண்ணதாசன் எழுதினால் அது ‘கண்ணதாசன் பாட்டு’ என்றுதான் ஆகிவிடுகிறது! அதுவே வேறு யார் எழுதினாலும் அதற்கு ‘எம்ஜிஆர் பாட்டு’ என்ற லேபிள் கிடைக்கிறது என்பதற்காகத்தான்!

இந்தப் பின்புலத்தில் இன்னொரு பாடலைப் பற்றியும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. பாசம் படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்றொரு பாடல் வரும். மிக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் ஒரு இளைஞனுக்கேயுரிய வேகத்துடனும் மலர்ச்சியுடனும் இயற்கை வெளிகளில் எம்ஜிஆர் பாடி ஆடிக்கொண்டு வரும் பாடல் அது. ஒரு எம்ஜிஆர் ரசிகனுக்கு மிகவும் உவப்பான காட்சியாய் அது படம்பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் நடிப்பும் இசையும் கண்ணதாசன் வரிகளுமாக பார்க்கிறவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் பாடலாக அது இருக்கும். அந்தப் பாடலின் வரிகள் இவை;

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக-அன்னை
மடியை விரித்தாள் எனக்காக.... ஆஹா, எம்ஜிஆருக்கேற்ற அருமையான வரிகள் என்றுதானே தெரிகின்றன? சரணம் வருகிறது பாருங்கள்-

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகைப் பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்......

ஆரம்ப காலத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் இலக்கியப்பரிச்சயம் எல்லாம் ஏற்பட்டபிறகு இந்தப் பாடலைக்கேட்ட மாத்திரத்தில் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் தவழும் நிலவும் தங்கரதமும் தாரகைப்பதிக்கப்பட்ட மணிமகுடமும் குயில்கள் வாழும் கலைக்கூடமும் ஒரு கவிஞனுக்கு மட்டுமே சொந்தமான கற்பனை வடிவம். பாரதி காணிநிலம் வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோல் கவியரசரின் ஆசைக்கனவு இந்த வடிவம். அதனை அடுத்த வரியில் தெளிவாகவே சொல்கிறார் கவிஞர்- இவை அத்தனையும் கொண்டது ‘எனது அரசாங்கம்’ என்று!

எம்ஜிஆரை அந்தக் கதாபாத்திரத்தில் இயற்கையை வர்ணிக்கும் நாயகனாக உருவகித்துப் பாடல் புனையப்பட்டிருக்கிறது அதனால் அப்படிச்சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரும் பூசிமெழுக முடியாது. ஏனெனில் எம்ஜிஆர் படங்களில் அதற்கெல்லாம் இடமில்லை. அது எம்ஜிஆரின் voice – ஆகத்தான் இருக்குமே தவிர வேறு யாருடைய வாய்ஸுக்கும் அங்கே இடமில்லை. அப்படி எதையும் அனுமதிக்க மாட்டார் எம்ஜிஆர். ஏனெனில் வசனம் பாடல்வரிகள் உட்பட யாவும் எம்ஜிஆரால் ஒப்புதல் தரப்பட்டே படமாக்கப்படும். அப்படிப் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இதுவும். விஷயம் என்னவென்றால் தன்னுடைய பாடலில் தன்னுடைய ‘ஆளுமையை’ நிலைநிறுத்தும் வலிமையும் கம்பீரமும் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.

1970-களில் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் கவிஞரைச் சந்தித்தபோது இந்தப் பாடல் பற்றிக்கேட்டேன். “எம்ஜிஆர் பாடும் பாடலில் நீங்கள் உங்களைப்பற்றிப் பாடிக்காட்டியிருக்கிறீர்களே இது எப்படி சாத்தியமாயிற்று? அவர் எப்படி இதனை அனுமதித்தார்?” என்றேன்.

கவிஞர் சிரித்தார். “அதெல்லாம் பாடவேண்டியதுதான். என்னுடைய பாடல்கள்ள எம்ஜிஆர் இதை மாற்று அதை மாற்றுன்னெல்லாம் சொல்லமாட்டார். ஆனா இந்தப் பாட்டுல இருக்கிற இந்த விஷயத்தை ரொம்பப்பேர் கவனிக்கலை. நீங்க கவனிச்சிருக்கீங்க” என்றார்.
ஆக, படத்தில் யார் பாடும் பாடலாக வந்தாலும் அங்கே முதலில் கண்ணதாசன்தான் நிற்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலும் அந்த வகையானதுதான். வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நிறைய பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களை அதிகமாக எழுதியவரே இவர் மட்டும்தான். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, வாழநினைத்தால் வாழலாம், மயக்கமா கலக்கமா, அச்சம் என்பது மடமையடா, உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால், எங்களுக்கும் காலம்வரும் என்று நிறையப் பாடல்கள் உள்ளன. இதில் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது வாழ்க்கையின் பிரச்சினைகளை ஒரு அலட்சியமான மனநிலையில் எதிர்கொள்ளச் சொல்லித்தரும் பாடல். இந்தப் பாடலின் நீட்சிதான் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்ற பாடல். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலில் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்ற வரிகளை கண்ணதாசன் இறைவனைக் குறிப்பிட்டே சொல்கிறார். திமுகவில் இருந்தவரை நாத்திக வாதம் பேசிய போதிலும் இறைவன் பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்தது என்பதை அவரே பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். கடவுள் பற்றிய சிந்தனை கருக்கொண்டிருந்த காலத்தில்தான் ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்- அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்’ என்று பாடினார்.
இந்தப் பாடலும் மிகத்தெளிவாகவே இருக்கிறது.
‘பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!’ என்கிறார்.

தத்துவார்த்தமாக இறைவனை முன்னிறுத்தும் பாணியைத்தான் அவருடைய நிறையப் பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். பின்னாலே தெரிவது அடிச்சுவடு..அதாவது நீ நடந்துவந்த பாதை, அதையும் கவனத்தில் வைத்துக்கொள..முன்னாலே இருப்பது ‘அவன் வீடு’ என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்..நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு என்கிறார். இந்த விளக்கத்துடன் பார்த்தோமானால் சுலபமாக கவிஞர் சொல்லவருவது புரியும். இறைவனைக் குறிப்பிட்டுத்தான் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’என்று பாடுகிறார். இந்த வரிகளை மறந்துவிட்டு அந்தப்பாடலில் உள்ள ஆரம்ப வரிகளை வைத்துக்கொண்டு இத்தனை வருடங்கள் ஆனபின்பும் அது என்னைத்தான் குறிக்கிறது என்கிறார் ஜெயலலிதா. இல்லையில்லை என்னைத்தான் குறிக்கிறது என்கிறார் கருணாநிதி.

அதைவிடவும் வேடிக்கை வேறொரு பாடலில் ‘திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று எம்ஜிஆர் பாடுகிறாராம். ஆகவே கண்ணதாசனின் ‘இந்த’ வரிகள் தன்னைத்தான் குறிக்குமாம். சொல்கிறார் தமிழக முதல்வர்.

இல்லாத ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு எதற்காக இப்படி வாதாடுகிறார்கள் என்பது புரியவில்லை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலைச்சொல்லி அதுபோல் நான் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை என்ற அர்த்தத்தில் முதல்வர் பேசியிருப்பாரேயானால் நாம் இங்கே எழுதுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தம்மைப்பற்றித்தான் அந்தப் பாடல் என்று சொல்லுவதில்தான் சிக்கல். அதுவும் சட்டமன்றத்திலேயே விடாப்பிடியாக பிடிவாதமாகப் பேசுகிறார். ஒன்றும் புரியவில்லை-

நல்லவேளை, ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா’ என்று சரோஜாதேவியைப் பார்த்துப் பாடியிருக்கிறார் எம்ஜிஆர். அதே எம்ஜிஆர் இன்னொரு படத்தில் ‘நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’ என்று அதே சரோஜாதேவியைப் பார்த்துப் பாடுகிறார். அதே படத்தில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று இன்னொரு பாடலையும் பாடியிருக்கிறார். இதையெல்லாம் வைத்துக்கொண்டு அல்லது, இன்னமும் நிறையப் பாடல்வரிகளும் கிடைக்கக்கூடும் – சரோஜாதேவிக்கு! அவர் உடனடியாக “பாருங்கள் எம்ஜிஆர் என்னைத்தான் ராணி என்கிறார். பெண்ணரசி என்கிறார். அவருடைய பார்வை என்பக்கம்தான் என்றும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் பார்த்த பெண்களிலேயே என்னைத்தான் அழகி என்கிறார். அதுவும் ஒருமுறை இல்லாமல் இரண்டுமுறை ‘நல்ல அழகி என்பேன்;நல்ல அழகி என்பேன்’ என்கிறார். ஆகவே எம்ஜிஆரின் உண்மையான வாரிசு நான்தான்’ என்பதுபோன்று சரோஜாதேவி பித்துக்குளித்தனமான அறிக்கை எதுவும் தராமல் இருக்கிறாரே என்பதற்காகத் தமிழர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

வேறென்ன செய்ய.....?

Monday, May 30, 2011

நான்கு பிரபலங்கள்-திடீர் சந்திப்புகள்!


பிரபலமானவர்களுடன் முன்கூட்டியே ஏற்பாடுசெய்துகொண்டு சந்திக்கச் செல்லுவது என்பது ஒருவகை. சற்றும் எதிர்பார்க்காத இடத்திலும் சூழ்நிலையிலும் சந்தர்ப்பத்திலும் அவர்களை சந்திக்கநேர்வது என்பது ஒருவகை. இந்த இரண்டாவது வகையான சந்தர்ப்பங்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் சந்திக்கநேர்ந்த நான்குபேரைப்பற்றிய தகவல்கள் இவை. இந்த சந்திப்புக்களின் மொத்த நேரமே இரண்டொரு நிமிடங்கள்தாம்; இரண்டொரு வார்த்தைகள் மட்டும்தான் பேச முடிந்திருக்கிறது. அவ்வளவுதான் பேசவும் முடியும். ஆனாலும் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டிருக்கிறது.

அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஒளிப்பதிவு என்பதுபற்றிய சிந்தனையையே ஏற்படுத்தியவர் அவர்தான். ஸ்ரீதரின் முக்கால்வாசிப்படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். இன்றைய பாலுமகேந்திரா, ஸ்ரீராம், ஜீவா, ரத்னவேலு, கே.வி.ஆனந்த் போன்றவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னோடி அவர்தான். தமிழில் தொழில்நுட்பங்களுக்காகப் பேசப்பட்ட முதல் இயக்குநர் ஸ்ரீதர்தான். அதுவும் குறிப்பாக ஸ்ரீதர் படங்களில் வின்சென்டின் பங்களிப்பு கணிசமானது. காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை போன்ற படங்களைப் பார்த்தோமானால் முக்கியமான பாடல் காட்சிகளிலெல்லாம் ஒவ்வொரு பிரேமையும் அப்படியே பிரதியெடுத்து கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டிவைத்துக்கொள்ளலாம். அப்படி ரவிவர்மா பாணியில் ஓவியம் தீட்டியதுபோன்ற டச் ஒன்றைத் தந்திருப்பார். ஆனால் வேடிக்கை பாருங்கள், பாலுமகேந்திரா உட்பட எந்த ஒளிப்பதிவாளரும் வின்சென்டின் பெயரை மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. அது போகட்டும்.
நாம் விஷயத்திற்கு வருவோம்.

வின்சென்ட் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதுதெரிந்து அவரைச் சந்திக்க வரட்டுமா என்று கேட்டதற்கு “இரவு ஏழு மணிக்கு அறைக்கு வந்துவிடுங்களேன்” என்றார். அவர் சொல்லியிருந்தபடி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்(தற்சமயம் krishnathreya blogspot-என்று வலைப்பூ எழுதிக்கொண்டிருக்கிறார்) உட்லண்ட்ஸ் சென்றிருந்தோம்.

வின்சென்ட்டைச் சென்று சந்தித்ததும் அறைக்குள்ளிருந்து வெளிவந்தவர், “வாங்க உள்ளே ஒரே கூட்டமாயிருக்கு. டைரக்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தான்னு எல்லாரும் நாளைய படப்பிடிப்புக்கான ஆலோசனையில இருக்காங்க. நாம இங்கே உட்கார்ந்தே பேசுவோம்” என்றுசொல்லி வராந்தாவிலேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும். வாசலில் சர்ர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. கார் நின்றதும் நிற்காததுமாக அதிலிருந்து ஒருவர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே ஓடிவந்தார். பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி.

ஓடிவந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.

“என்ன வின்சென்ட் டைரக்டர் இருக்காரா, தயாரிப்பாளர் இருக்காரா?” என்று கேட்டபடி புயல்போல உள்ளே நுழைந்தார்.

“இருக்காங்க இருக்காங்க வாங்க” என்று அவருக்கும் “ஒரு நிமிஷம் வந்துர்றேன்” என்று எங்களுக்கும் சொல்லிக்கொண்டே எழுந்து உள்ளே ஓடினார் வின்சென்ட்.

உள்ளே போனவர் திரும்பிவந்து எங்களிடையே உட்கார்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். எங்களுடைய கவனம் பூராவும் திரும்ப எப்போது கதவு திறக்கும் சிவாஜி எப்போது வெளியே வருவார் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்குமா என்பதிலேயே இருந்தது

ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்.. கதவு திறந்தது. “என்ன என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று கேட்டபடியே சிவாஜி வெளியே வந்தார்.

“பத்திரிகைக்கான பேட்டி ஒண்ணு. பேசிட்டிருக்கேன்” என்று சொன்ன வின்சென்ட் எங்களை அறிமுகம் செய்துவைக்க “சரி ராஜா சந்தோஷம் வர்றேன்” என்று கைகூப்பியபடியே ஓடிச்சென்று காருக்குள் ஏறிக்கொண்டார் நடிகர் திலகம்.

ஒரு மின்னல் சந்திப்புதான். இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது!
********
இது நடந்தது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு...! பெங்களூர் கன்டோன்மென்ட்டின் மையப்பகுதியில் கோல்ஸ் பார்க் என்றொரு பூங்கா இருக்கிறது. அதற்கு சற்றே பக்கத்தில் சவேரியார் கோவில் என்ற மிகப்பெரிய சர்ச் ஒன்று இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய சர்ச் அது. மொத்தமும் கருங்கற்களால் ஆன பிரமாண்ட கட்டடம்.

அந்த சர்ச்சின் பெரிய வளாகத்திலிருந்து நாராயணபிள்ளை தெருவுக்குப்போக சர்ச்சின் வெளிவாசல் வழியாக வெளியேறியபோது ஒரு பெரிய லாரி ஒன்று கடந்து சென்றது. அது போகட்டும் என்பதற்காக நின்றபோது அந்த லாரி சடன்பிரேக் போட்டு நின்றது. யாரோ ஸ்கூட்டரில் குறுக்கே போயிருக்கிறார்கள். அந்த லாரிக்குப் பின்னே வந்துகொண்டிருந்த வெள்ளை நிறத்து அம்பாசிடர் கார் ஒன்றும் சடாரென்று நின்றது. இப்போது இந்தக்கார் நின்றிருப்பது எனக்கெதிரில். அதாவது வெறும் இரண்டடி எதிரில்.

உள்ளே பார்த்தால் ஆச்சரியம். ஜன்னலோரத்தில் சத்ய சாய்பாபா உட்கார்ந்திருக்கிறார். நான் பார்க்க அவரும் என்னைப் பார்க்கிறார். கனிவான பார்வை. சட்டென்று என்ன செய்வது என்று தெரியவில்லை. வணக்கம் தெரிவித்தேன். சிரித்துக்கொண்டே கையை உயர்த்தினார். கார் சென்றுவிட்டது.

அப்போதெல்லாம் சாய்பாபாவின் கீர்த்தி உச்சத்தில் இருந்த நேரம். ஆசிரமத்தில் துப்பாக்கிச்சூடு, விபூதி வரவழைப்பது வெறும் மாயாஜாலம் என்பதுபோன்ற யூடியூப் விவகாரங்கள் எதுவும் வராத நேரம். நண்பர்களிடம் சொன்னபோது “பாரேன் நாங்கள்ளாம் எத்தனையோ செலவழித்து புட்டபர்த்திக்கும் ஒயிட்ஃபீல்டுக்கும் போய் தூரத்தில் நின்று அவரைத் தரிசித்து ஆசி பெற்று வருகிறோம். உனக்கு போகும் வழியில் அவராகவே வந்து தரிசனமும் ஆசியும் கொடுத்துட்டுப் போறார்னா சம்திங் கிரேட்” என்றார்கள். எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு திடீர் சந்திப்பு அவ்வளவுதான்!
*************
இந்த சந்திப்பும் முந்தையது போலவே சாலையில் ஏற்பட்ட சந்திப்புதான்.

பெங்களூர் மகாத்மா காந்திசாலைக்கு அடுத்த கப்பன்சாலை. ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக பிஆர்வி தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். மாலை ஆரம்பித்திருந்த நேரம். நான்கு மணி இருக்கலாம்.

எதிர்புறத்திலிருந்து பாஆஆஆஆங் என்று கூவிக்கொண்டு படுவேகமாக ஒரு பைலட் ஜீப் வந்தது. பின்னேயே நான்கைந்து கார்கள் மிக வேகமாக வந்துகொண்டு இருந்தன. கவர்னர் மாளிகையிலிருந்து வரும் சாலை இது. எனவே யாரோ ஒரு விவிஐபி வருகிறார் என்று தெரிந்தது. சர் சர்ரென்று நான்கைந்து கார்கள் போய்விட மறுபடி ஒரு ஜீப்பும் இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்தபோதே பிஆர்வி முனையிலிருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்துவிட சடன் பிரேக் அடித்து கிரீச்சிட்டுக்கொண்டு நின்றது அந்த விவிஐபியின் கார். எனக்கு நேர் எதிரில்..இரண்டடி எதிரில்.

முன்னால் போன ஜீப்களும் கார்களும் நிறுத்தப்பட்டு அதிலிருந்து குதித்து ஓடி வந்த அதிகாரிகள் சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்த போலீஸைக் காய்ச்சி எடுக்க அவர் என்னவோ சொல்லி சமாளிக்கப் பார்க்க.. அதற்குள் குறுக்கு வெட்டாகப் போகவேண்டிய வாகனங்கள் போக ஆரம்பிக்க...இந்தக் களேபரங்களுக்கு இடையில் என் எதிரில் இருந்த காரில்

சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தவர் வாஜ்பேயி.

கார் நிறுத்தப்பட்டதற்கு டிரைவர் ஏதோ சமாதானம் சொல்ல முற்பட ‘டீக்கே டீக்கே’ என்று அவரை சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பியவரிடம் ஒரு அடி முன்னே சென்று ‘நமஸ்தே சார்’ என்றேன். சிரித்துக்கொண்டே தலையாட்டியவர் என்னைப் பார்த்து ஏதோ கேட்டார் இந்தியில். எனக்குப் புரியவில்லை. “பார்டன் சார்” என்றேன். அவர் தாம் சொன்னதையே மறுபடியும் சொன்னார் அதே இந்தியில். நான் ஒன்றும் புரியாமல் நிற்க அதற்குள் காருக்குள்ளே இருந்த வேறு யாரோ அவரது கவனம் கலைக்க.. இந்தச் சந்தடியில் டிராபிக் சரியாகி பச்சை விழுந்துவிட கார் நகர ஆரம்பித்துவிட்டது. வாஜ்பேயியைக் காருக்குள் பார்த்த நான்கைந்துபேர் ஓடிவர கார் வேகம் பிடித்துவிட்டது. இது அத்தனையையும் கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரர் அவசர அவசரமாக ஓடிவந்து “சார் என்ன பேசினீங்க அவர்ட்ட?” என்றார். “அவர்ட்ட என்னங்க பேசமுடியும் வெறும் நமஸ்தே சொன்னேன் அவ்வளவுதான்” என்றேன்.

இது நடந்த அடுத்த மாதமே அவர் பிரதமராகிவிட்டார்.

அவர் இந்தியில் என்ன கேட்டிருப்பார் என்பது இப்போதும் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.
************
மறுபடியும் ஹோட்டல்!

பெங்களூர் பேலஸ்கிரவுண்டில் கிரானைட்ஸ் எக்ஸிபிஷன் நடந்துகொண்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களில் குறிப்பிட்ட ஒருவரைச் சந்திப்பதற்காக லீ மெரிடியன் ஹோட்டலுக்கு நானும் நண்பர் கிருஷ்ணசாமியும் சென்றிருந்தோம். கிருஷ்ணசாமி இப்போது காதிகிராமயோத் பவன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். லீமெரிடியன் ஹோட்டலின் வரவேற்பறையைக் கடந்து லிஃட்டுக்குச் சென்றோம். லிஃப்டில் ஏறி பொத்தானை அழுத்தி கதவு மூடப்பார்த்திருக்கும்போது “ஒன்மினிட் ஒன்மினிட் பிளீஸ் வெய்ட்” என்றபடி ஒரு பெண்மணி லிஃப்ட்டை நோக்கி ஓடிவருவது தெரிய லிஃப்ட்டை நிறுத்தினோம். அந்தப் பெண்மணி தாம் மட்டும் ஓடிவரவில்லை. தம்முடன் மிகப்பெரிய இரண்டு சூட்கேஸ்களையும், கூடவே தூக்கமுடியாத இன்னொரு லெதர் பையையும் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார். அவர் வேகத்துக்கு அந்த சூட்கேஸ்கள் ஒத்துழைப்பவையாக இல்லை. ஒவ்வொன்றும் அவ்வளவு கனம்; அவ்வளவு பெரியது. அவற்றைத் தூக்கி லிஃப்ட்டுக்குள் வைக்கவும் அவரால் இயலவில்லை. “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லி நாங்கள் இருவரும் வெளிவந்து அவரது எல்லா லக்கேஜ்களையும் எடுத்து உள்ளே வைத்தோம்.

“தேங்க்யூ தேங்க்யூ” என்று நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னவர், அதற்குள் வியர்த்துவிட்ட தம்முடைய முகத்தைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் வந்தது. யார் என்பது மனதில் சிக்கவில்லை.

“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு நீங்களே எடுத்து வர்றீங்க? ரூம் பாய்ஸ் எடுத்து வந்திருப்பாங்களே” என்றார் நண்பர்.

“ரிசப்ஷன்லயும் சொன்னாங்க..ஆனா வெய்ட் பண்ணனும்னு சொன்னாங்க. கொஞ்சம் அர்ஜண்ட் அதான் நானே வந்துட்டேன்” என்று சிரித்தார். ஒன்று வெளிநாட்டிற்கு இங்கிருந்து புறப்படுவதாக இருக்கவேண்டும். அல்லது வெளிநாட்டிலிருந்து நேரடியாக வந்திருக்கவேண்டும். அவ்வளவு பெரிய பெட்டிகள்...”ஐந்தாம் மாடி” என்று தாம் போகவேண்டிய தளத்தையும் சொன்னார். அவர் போகவேண்டிய தளம்தான் நாங்களும் போவதால் “எந்த அறை சொல்லுங்க கொண்டுவந்து தர்றோம்” என்றோம்.

“நோ..நோ.. நீங்க இப்ப செய்த ஹெல்ப்பே போதும். ரொம்ப தேங்ஸ். கீழருந்து போன் பண்ணியிருக்கேன். எங்க ஹஸ்பெண்ட் லிஃப்ட்டுகிட்டேயே வெய்ட் பண்ணுவார். நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றார்.

ஐந்தாம் தளம் வந்ததும் கதவு திறந்தது. அந்தப் பெண்மணியின் ஹஸ்பெண்ட் கருப்புச் சட்டையும் ஜீன்ஸுமாக லிப்ட் அருகிலேயே நின்றிருந்தார்.

அட, ரஜனி!

நாங்கள் எதுவும் பேசுவதற்கு முன்பாக திருமதி ரஜனி முந்திக்கொண்டு “இவங்கதான் லக்கேஜ் எல்லாம் கொண்டுவருவதற்கு ரொம்பவும் ஹெல்ப் பண்ணவங்க” என்றார்.

“தேங்க்யூ தேங்க்யூ...,தேங்க்யூ வெரிமச்” என்று அவசரமாய்ச் சொல்லியபடியே ஒருகையில் சின்ன சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு மறுகையால் பெரிய சூட்கேஸை இழுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார் ரஜனி.

ரஜனி விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள்.

Thursday, May 19, 2011

கலைஞரின் தோல்வி-சில அடிப்படைக் காரணங்கள்



தமிழகத்தேர்தல் முடிவுகளைப் பத்திரிகைகளும் இணையத்துப் பதிவுலகமும் பிய்த்துப்போட்டு ஆய்ந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் திமுகவுக்கு மட்டுமல்ல; அதிமுகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளே இவை. தமிழக வாக்காளன் இப்படித்தான் ஓட்டளிக்கப்போகிறான் என்பது தெரிந்திருந்தால் ஜெயலலிதா பத்துப்பதினைந்து நாட்கள் அலைந்து வேனுக்குள் உட்கார்ந்து பிரச்சாரம் செய்த சிரமத்தைக்கூட மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. இன்னொரு அறிக்கையை மட்டும் கொடுத்துவிட்டுப் பேசாமல் ஓட்டு எண்ணுவதற்கு முந்தின நாள் மட்டுமே கொடநாட்டை விட்டு வந்திருந்தாலே போதுமானது. அப்போதும் இதே முடிவுதான் வந்திருக்கும்.

எந்த விஷயமாயிருந்தாலும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கட்டுரை எழுதும் கலைஞரே இதுவரையிலும் ‘மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்’ என்ற ஒற்றை வரியைத்தாண்டி ஒன்றையும் சொல்லவில்லை. திமுகவின் எந்தத் தலைவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லையா, அதிர்ந்து போயிருக்கிறார்களா, அல்லது கையறு நிலையில் இருக்கிறார்களா என்பது எதுவும் புரியவில்லை.

ஆனால், தமிழ் இன உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் மிகவும் மகிழ்ந்து கருத்துச்சொல்லியிருக்கிறார்கள். ‘ஈழத்தில் தமிழ்இன அழிப்பிற்குக் காரணமாயிருந்த காங்கிரசும் அந்தக் கட்சிக்குத் துணைபோன களவாணிகளான திமுகவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். திமுகவை மிரட்டி அறுபத்துமூன்று இடங்களை வாங்கிய காங்கிரஸ் வெறும் ஐந்து இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறது’ என்று உளம் மகிழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியானதாகத் தோன்றினாலும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும்போது இது வேறுமாதிரியானதாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

உண்மையில் காங்கிரஸ் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம்.

இந்த உண்மை நிச்சயம் சுடும். சுடுகிறது.

கலைஞர் என்ற பெயர் மக்கள் மத்தியில் தனியானதொரு இடத்தைப் பெற்றிருந்தது. இளைஞர்களுக்குப் பெரிதாக இவர் மீது அபிமானம் இல்லையென்ற போதிலும் கோபமோ வெறுப்போ இருந்ததில்லை. அதுவும் நடுநிலையாளர்கள் எப்போதுமே அவர் மீது மிகுந்த நல்லெண்ணமும் மரியாதையும் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.எல்லாமே ஈழ விவகாரத்தில் மாறிப்போயின. இவர் பெரிதாக எதையோ செய்வார் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் மனதில் தீயைக்கொட்டிய சம்பவம் உண்ணாவிரதக் காட்சிதான். சிதம்பரத்திடமிருந்து போன் வந்துவிட்டது, போரை நிறுத்த ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்துவிட்டு இவர் உண்ணாவிரதத்தை முடித்ததும் அதற்கடுத்து நடந்த சம்பவங்களும் அவருடைய நற்பெயரை நடுநிலை மக்களிடமிருந்து துடைத்துப்போட்டுவிட்டன. இதன் தாக்கம் உடனடியாய் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அதனால் கலைஞருக்கு ஏகப்பட்ட பொறிகள் வைக்கப்பட்டன. இந்திய அரசியல்வாதிகளில் கைதேர்ந்த ராஜதந்திரி என்று மதிக்கப்படும் கலைஞர் இந்தப் பொறிகளில் தாமாகவே சென்று விழுந்த காட்சிகள் நிறையக் காணக்கிடைக்கின்றன. ஈழ விவகாரத்திலேயே தமிழினத்தலைவரின் இமேஜ் காணாமல் போய்விட்டதையும் அவர் அந்தக் காலத்தில் மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராடிய, லட்சக்கணக்கான மக்களைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் போராட்டத்துக்குத் தூண்டித் தமது பின்னால் அணிவகுக்கச் செய்யும் தானைத்தலைவராக இல்லாமல் போய்விட்டதையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதனுடைய முதல் அறிகுறிதான் அமைச்சர் பதவி வாங்க டெல்லி சென்றவரைக் காத்திருக்கச்செய்து அதையெல்லாம் ஆங்கில ஊடகங்களில் வரச்செய்து கடைசிவரை சந்திக்கமுடியாது என்று சொல்லி அவமானப்படுத்தி அனுப்பி வைத்தது.


அதற்கடுத்து ஈழ விவகாரங்களிலும் சரி, ஒவ்வொரு முறையும் தமிழகத்து மீனவர்களை இலங்கைக் கடற்படை கொடூரமான முறையில் சுட்டு வீழ்த்தும்போதும் சரி இவரது வேண்டுகோள்களை சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமலேயே நடந்துகொண்டது டில்லி. இவரும் எல்லாப் போர்க்குணங்களையும் இழந்த நிலையில் ஈனஸ்வரத்தில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதையும், இனிமேல் இப்படி ஆகாது என்று அவர்கள் சொல்வதை நம்பி அடுத்த வேலையைப் பார்ப்பதையும் மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தார்- மக்களின் நம்பிக்கையைத் தாம் இழந்துகொண்டே வருகிறோம் என்பதை அறியாமலேயே!

அடுத்து வந்தது மிகமிக முக்கியமான விஷயம். மரணப்படுக்கையிலே இருந்த பார்வதி அம்மாள் சிகிச்சை வேண்டி தமிழகம் வந்தார். உண்மையில் கலைஞர் தமக்குக் கிடைத்த பொன்னான ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கருதியிருக்கவேண்டும். தாம் தெரிந்தோ தெரியாமலோ ஈழ விவகாரத்தில் நடந்துகொண்ட விதத்திற்குப் பிராயச்சித்தமாக நினைத்துச் செயல்பட்டிருக்க வேண்டும். சுயநினைவுகூட இல்லாமல் சிகிச்சை வேண்டித் தமிழகம் வந்த அந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய விதம் இருக்கிறதே மனித நேயம் உள்ள அத்தனை மக்களையும் பதறித்துடிக்கவைத்த சம்பவம் அது. விடுதலைப்புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட அனுதாபப்பட்ட விவகாரம் அது. ‘மத்திய அரசின் இலங்கைப் பற்றிய வெளிவிவகாரக்கொள்கை எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். நான் இதனை மனித நேயத்துடன்தான் அணுகுவேன். அவர்கள் இங்கே தாராளமாக சிகிச்சைப் பெறலாம்’ என்று மட்டும் அறிவித்திருந்தாரானால் தமிழ் உணர்வாளர்களின் வெறுப்பெல்லாம்கூட வடிந்துவிட்டிருக்கும். ‘இலங்கையிலிருந்து திரும்பும் அமைதிப்படையை வரவேற்கப்போகமாட்டேன்’ என்று அறிவித்தாரே அன்றைக்கு ஏற்பட்ட மரியாதைக்கு சற்றும் குறையாத மரியாதையை இந்த விவகாரத்திலும் பெற்றிருக்கலாம். தவிர இலங்கை விவகாரத்தில் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் வரமாட்டேன் என்ற செய்தியை மத்திய அரசுக்கு அறிவிக்கும் செயலாகவும் இதனைச் செய்திருக்கலாம். ஆனால் மத்திய அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாறாக மனிதநேயச் செயலைக்கூடச் செய்யமாட்டேன் என்று உணர்த்துவதில்தான் அவர் கவனமாக இருந்தார். மாற்றி மாற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் மாறாத கோபத்தையும் வெறுப்பையும் இவர்மீது ஏற்படுத்தவே செய்தது .

ஈழ விவகாரம் பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது என்பது பொய்த்துப்போனது. இளைஞர்கள் அதுவும் ஐடி இளைஞர்கள் இவர்மீது மாறாத கோபத்தில் இருந்திருக்கின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகளும் இணையத்தில் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களும் மெய்ப்பிக்கின்றன. இதற்கு ஆதரவாக ஒரு செய்தியை இங்கே குறிப்பிடவேண்டும். பெங்களூர் நகரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் ஐடியில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. தேர்தலுக்கு முந்தைய தினம் பெங்களூர் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம். என்ன காரணம்? எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு ஓட்டுப்போடுவதற்காகப் புறப்பட்டிருந்தனர். கிடைக்கிற பஸ்ஸைப்பிடித்துப் போய்விடலாம் என்று சில்க்போர்டு அருகே மாலை ஐந்து மணிக்கு நின்றசிலருக்கு ஒரு பேருந்திலும் இடம் கிடைக்காமல் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சாட்டிலைட் பஸ்நிலையம் வந்து அங்கிருந்து ஏதோ பஸ்ஸை எப்படியோ பிடித்து ஊர்களுக்குச் சென்று திமுக அணிக்கு எதிராக ஓட்டுப்போட்டு வந்தார்களாம். போய் வந்த ஒருவர் சொன்னார். “அங்கே வந்திருந்த பலபேருக்கு தங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்ற விஷயம்கூடத்தெரியாது. அவர்கள் விசாரித்துத் தெரிந்துகொண்டதெல்லாம் இங்கே திமுக அணியை எதிர்த்து நிற்பது யார்? அதிமுகவா அதன் கூட்டணியா என்பது மட்டும்தான். இந்த மொத்தக்கூட்டமும் இவர்களுடைய கைக்காசைச் செலவழித்துப்போய் திமுகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டுவிட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.” புதிய வாக்காளர்களின் மற்றும் இளைஞர்களின் ஓட்டு நூறு சதவிகிதமும் கலைஞருக்கு எதிராகத் திரும்பியது இப்படித்தான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் சாதாரண விஷயமல்ல என்பதை இவர் ஏன் கவனிக்கதவறினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஒரு லட்சத்து எழுப்பத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்றே தெரியவில்லை’ என்ற ஒரு வார்த்தை மந்திரம்போல் தமக்கு எதிராகச் சுழலப்போகிறது என்பதை அறியாதவராகவே இவர் நடந்துகொண்டார். அத்தனைப் பெரிய ஊழல் – அது எப்படியெல்லாம் தம்மையும் தமது குடும்பத்தையும் பின்னி வளைக்கப்போகிறது என்பதையோ அதில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நடவடிக்கையையோ எதையுமே மேற்கொள்ளாமல் தம்மை எப்படியும் சோனியா காந்தி பாதுகாத்துவிடுவார் என்று வெள்ளந்தியாக நம்பிக்கொண்டிருந்ததையும் எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை.

‘என்ன செய்தாலும் இந்த மனிதர் ஒன்றும் சொல்லாமல் தாங்கிக்கொள்கிறாரப்பா; மிச்சமிருக்கிற எல்லாவற்றையும் தூக்கி இவர் மேலேயே போடு. நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்’ என்பதுபோன்ற எண்ணத்தை மேலேயிருப்பவர்களுக்குத் தருவதுபோலவே எல்லாவற்றுக்கும் பேசாமல் இருந்தார்.

இவரது தற்காப்பு ஆயுதங்கள் ஒன்றுமே இல்லாமல் போய்க்கொண்டேயிருந்தன. கூட்டணியின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் இவருக்கான எதிர்ப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தீவிரமாகத் தொடங்கியது. மாநிலத்தலைவர்கள் மாறிமாறி இவரைக் கேவலமாகப் பேச ஆரம்பித்தனர். அத்தனையையும் மறுவார்த்தைப் பேசாமல் பொறுத்துக்கொண்டார் இவர். யுவராஜ் போன்ற ‘மக்கள் தலைவர்களை’ உருவாக்கி வசை பாட வைத்தார்கள். ‘ம்மா இந்தப் பையன் என்னை கேலி செய்யறாம்மா’ என்று அம்மாவிடம் முறையிடும் சின்னக்குழந்தைகள்போல் சோனியா காந்தியிடமும் குலாம்நபி ஆசாத்திடமும் முறையிட்டாரே தவிர ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட இவர் காட்டவில்லை. அவர்களும் இவர் சொன்னாரே என்பதற்காக ஒரு வாரம் பேசாமல் இருக்கச்சொல்வார்கள். மறுவாரமே இன்னொருவர் வசையை ஆரம்பிப்பார். தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கின்றவரையிலும் திட்டமிட்டு காங்கிரஸ் இதனைச் செய்தது. ‘பொறுமையின் சிகரம் கலைஞர்தான்’ என்ற பட்டத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ அத்தனை வசைகளையும் பேசாமலேயே தாங்கிக்கொண்டார். ‘கலைஞர் மிகவும் பலகீனப்பட்டுவிட்டார்’ என்ற கருத்து மக்களிடம் வருவதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோர்ட்டின் பிடி இறுகிக்கொண்டே வர தேர்தல் நெருங்கியது. ராசா உள்ளே போய்விட தயாளு அம்மாள், கனிமொழி என்று கிடுக்கிப்பிடி போடப்பட்டது. அறிவாலயத்தின் ஒரு தளத்தில் சிபிஐ விசாரணை இன்னொரு தளத்தில் தேர்தல் பேச்சு வார்த்தைகள் என்று காங்கிரஸின் பலே வியூகங்கள் கச்சிதமாக வகுக்கப்பட்டன. அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் கலைஞர்.

காங்கிரஸின் நீக்குப்போக்குகளைத் தெரிந்த அவர் சீட்டுகள் விஷயத்தில் எப்படிக்கேட்பார்கள் என்பதை ஊகித்திருக்க முடியாதா என்ன, அதனால் அவர்களை முந்திக்கொண்டு மற்ற கட்சிகளை அழைத்து அவர்களே கேட்காத எண்ணிக்கையில் சீட்டுகளை வழங்கி அவர்களைத் திக்குமுக்காட வைத்து அனுப்புகிறார். ‘இருப்பதே குறைச்சல்தான். அதனால் அதிகம் கேட்காதீர்கள்’ என்று காங்கிரஸுக்கு சேதி சொல்லலாம் என்று இவர் நினைக்க இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏடாகூடமான எண்ணிக்கை ஒன்றைச் சொல்கிறது.

முடியாது என்று சிலிர்த்து எழுகிறார் கலைஞர். மத்திய அரசின் மந்திரிப்பதவிகள் ராஜினாமா என்று அறிவிக்கிறார். அத்தனை மந்திரிகளும் ராஜினாமாக்கடிதங்களுடன் டெல்லி போகிறார்கள் என்று அறிவிக்கிறார். வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு என்று அறிவிக்கிறார். திடுக்கிட்டுப்போன திமுக தொண்டன் ‘அப்பாடா இத்தனை வருடங்களுக்குப் பிறகு தலைவர் இப்போதாவது சரியான முடிவை எடுத்தாரே’ என்று துடித்து எழுகிறான். தலைவர்னா தலைவர்தான் என்று கொண்டாடுகிறான். தலைவர் இந்த முடிவில் உறுதியா இருக்கணும். நிச்சயமா காங்கிரஸையும் ஜெயலலிதாவையும் எப்பாடு பட்டாவது தோற்கடித்துக்காட்டுவோம் என்று கூடிக்கூடிப்பேசுகிறான். நீண்ட நாட்களுக்குப்பிறகு திமுக தொண்டன் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அது.

மறுநாளே எல்லாமே புஸ்வாணமாகிறது. நெஞ்சை நிமிர்த்தி டெல்லி சென்றவர்கள் அங்கே “ம்ம் என்ன இதெல்லாம்?”என்ற ஒரேயொரு கேள்வி கேட்கப்பட, சர்வநாடியும் ஒடுங்க, கூனிக்குறுகி சலாம்போட்டுவிட்டு ராஜினாமாக் கடிதத்தைப் பாக்கெட்டிலிருந்தே எடுக்காமல் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துவிட்டுத் திரும்பியபோது கலைஞர் முதல்முறையாக நிராயுதப்பாணியாக மக்கள் முன்னால் பரிதாபத்துக்குரியவராக நின்றார்.

உண்மையில் பதின்மூன்றாம் தேதி வந்த தேர்தல் முடிவின் முதல் பாகத்தின் ரிசல்ட் அன்றைக்கே வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கலைஞருடைய வீரம் வெளிப்படும் என்று கொஞ்சநஞ்சம் நம்பிக்கொண்டிருந்தவனெல்லாம் சுருண்டு விழுந்தது அன்றைக்குத்தான்.

குடும்ப ஆதிக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டுப் பிரச்சினை போன்ற இவையெல்லாம் பொதுவாகவே கருணாநிதியைப் பிடிக்காத ஊடகங்களும் மற்றவர்களும் முன்வைக்கும் வாதங்களாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில் இவற்றில் எதுவுமே தமிழகத்தை மட்டும் சார்ந்த பிரச்சினை அல்ல; நேரு, இந்திரா காந்தி, பெரோஸ்காந்தி, சஞ்சய்காந்தி, ராஜிவ்காந்தி, சோனியாகாந்தி, மேனகா காந்தி, வருண்காந்தி, ராகுல்காந்தி அவ்வப்போது பிரியங்கா காந்தி என்று மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பதை மக்கள் அனுமதித்துத்தான் வந்திருக்கிறார்கள்., வடநாட்டிலே வழிவழியாகப் பல குடும்பங்கள், கர்நாடகத்திலே தேவே கௌடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி, குமாரசாமியின் மனைவி என்று நான்குபேர் பதவியில்தான் இருக்கிறார்கள். இதோ இப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகனும் அவருடைய அம்மாவும் ஒருசேர தேர்தலில் நின்று இருவருமே பெருவாரியான முறையில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். எடியூரப்பா முதல்வர், அவரது மகன் எம்.பி, இன்னொரு பெண் அமைச்சர் முதல்வருக்கு நட்பு ரீதியிலே உறவு.....என்று நிறைய குடும்பங்கள் கோலோச்சிக்கொண்டுதான் இருக்கின்றன. இவை எதுவுமே ஊடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் ஒரேயொரு முறை செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் கருணாநிதி விஷயத்தில் மட்டும் நாள்தோறும் போட்டுப்போட்டு மக்களை மறந்துவிடாமல் செய்வதை வாழ்க்கை நியதியாகவே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

தமிழகத்தில் எந்த அளவு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமான மின்வெட்டு கர்நாடகத்திலும் ஏன் பெங்களூரிலும்கூட இருக்கிறது. தற்சமயம் நிலைமை பரவாயில்லை, சில மாதங்கள் முன்புவரை ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் ஐந்து மணிநேரம்கூட மின்வெட்டு இருக்கும். அல்லது, ஐந்துமணி நேரம்தான் மின்சாரமே இருக்கும். காரணம் புதிதுபுதிதாக அத்தனைத் தொழிற்சாலைகள், வீட்டு உபயோகத்திற்கென அத்தனை மின்சாதனங்கள், தவிர இந்தியாவெங்கும் குவிந்திருக்கும் கோடிக்கணக்கான செல்போன்கள். இத்தனை செல்போன்களின் செயல்பாடுகளுக்கும் சார்ஜ் செய்துகொள்வதற்கும் மின்சாரத்திற்கு எங்கிருந்து போவது? மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துக்கொண்டே போக உற்பத்தி அதே அளவில்தான் இருக்கிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது சர்வதேசப்பிரச்சினை. ஆனால் எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வீராசாமியும் கருணாநிதியும் மட்டுமே பலிகடாவாக்கப்பட்டனர். இங்கே கர்நாடகத்தில் மின்பற்றாக்குறையைப்பற்றிய சிந்தனைகள் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் ஊடகங்களால் வைக்கப்படுகிறதே தவிர எடியூரப்பாவைக் குறிபார்த்து வீழ்த்தும் ஆயுதமாக அதனைப் பயன்படுத்தவில்லை.

அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சொத்து சேர்த்தனர் என்ற விவகாரமும் அப்படித்தான். இன்றைய இந்தியாவில் டாட்டா சுமோவும் இன்னோவாவும் தம்மைச் சுற்றிலும் எந்நேரமும் ஒரு பத்துப்பேர் இல்லாத கவுன்சிலர் யாராவது இருக்கிறார்களா என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். சில தலைநகரங்களைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மாத வருமானமே ஒரு கோடிக்குக் குறையாமல் வருகிறது என்று புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது.

ஆகவே கருணாநிதியைத் தோற்கடிக்க மக்களுக்கு ஏற்பட்ட கோபத்துக்கான உண்மைக்காரணத்தை விட்டு மக்களை வேறுபக்கம் நகர்த்தி மாற்றுக்காரணங்கள்தாம் இவரை வீழ்த்தியிருக்கிறது என்று வாதங்களை முன்வைக்கும் அரசியலும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. ஈழ விவகாரத்தில் இவர் நடந்துகொண்ட விதம், முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது இவர்காட்டிய அசிரத்தை, மீனவர்களை அடுத்தடுத்து சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோது இவர் கடிதங்கள் மட்டும் எழுதிவிட்டுப்பேசாமல் இருந்தது, இறுதியாக பார்வதி அம்மாள் விஷயத்தில் இவர் அடித்த பல்டிகள் என இளைஞர்களின் கோபம் இவர்மீது கட்டுக்கடங்காமல் திரும்பியபோது இந்த வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் இவருக்கு எதிராகத் திரட்டிப்போடவைக்கவேண்டும் என்று இவரை எந்நாளுமே வெறுக்கும் கூட்டம் வகையாகத் திட்டமிட்டு காய் நகர்த்திய செயல்கள்தாம் இத்தகு முடிவுகளுக்குக் காரணமாயிருக்கின்றன.

ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள், ஒரு பத்து சதவிகித ஓட்டு இளைஞர்களுடையதே. இன்னொரு ஐந்து முதல் பத்து சதவிகித ஓட்டு நடுநிலையாளர்களுடையது. ஆனால் கலைஞருக்கு எதிராகச் செயல்பட்ட ஊடகங்களும் சரி; வேறு சக்திகளும் சரி இவரை எதிர்ப்பதற்குக் காரணமாக மறந்துகூட தமிழ், இன உணர்வு, ஈழம், பார்வதிஅம்மாள் என்பது சார்ந்த எதையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் மிக சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்சாரவெட்டு, குடும்ப ஆதிக்கம், திரைப்படத்துறையில் ஆதிக்கம், ஊழல், ரியல் எஸ்டேட், ஆடம்பர விழாக்கள் போன்ற பொதுவான காரணங்களையே முன்வைத்து அதற்கான பரப்புரைகளை மட்டுமே தொடர்ச்சியாக அதுவும் மிகவும் தொடர்ச்சியாக செய்துகொண்டுவந்து அவர்கள் விரும்பிய முடிவுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். அடிப்படையில் ஆதார சுருதியாக ஓடிக்கொண்டிருந்த காரணங்களை வெளிப்படுத்தாமலேயே கலைஞரின் இந்தத் தோல்வி கொண்டாடப்படுமேயானால் இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்தக் காரணத்துக்காக ஒரு ஆட்சியைப் பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்து லீவு போட்டுவிட்டு கைக்காசைச் செலவழித்துப்போய் ஓட்டைப் போட்டுவிட்டு வந்தார்களோ அந்தக் காரணம் ஒன்றுமேயில்லாமல் போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

சரி, பதிவின் ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க காங்கிரஸின் கணக்கு என்று சொல்லியிருந்ததைப் பார்ப்போம். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைப் பார்த்தபின்னர்தான் இனிமேல் இந்தக் கட்சியை அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பது இந்திரா காந்தி குழுவினருக்குப் புரிந்தது. இதை வேறு வழியில் செய்யவேண்டும் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் திமுகவிலிருந்து எம்ஜிஆரைப் பிரித்தெடுத்து வேறு கட்சி அதுவும் அதே சாயல்கொண்ட கட்சி ஆரம்பிக்கவைத்தது; பின்னர் அந்தக் கட்சியுடன் கூட்டுவைத்து திமுகவை பலவீனப்படுத்தியது காங்கிரஸ் இயக்கம். கலைஞரையும் அவர் குடும்பத்தையும் கேவலமான முறையில் பலவீனப்படுத்தினார்கள். பின்னர் எம்ஜிஆர் அரசியலில் மிக வலிமையானவராக ஆனபின்னர் அவரைக் கலவரப்படுத்த திரும்பவும் கலைஞருடன் கூட்டுவைத்தார்கள். பஞ்சாபில் பிந்தரன்வாலேயை உருவாக்கிவிட்டுப் பின்னர் அவரையே எதிர்த்ததும், இங்கே பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வளர்த்துவிட்டுவிட்டு பின்னர் தாங்கள் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லையென்றதும் கடுமையாக எதிர்க்கத்துவங்கியதும் காங்கிரஸுக்கு வழக்கம்தான்.
மம்தா விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. காங்கிரஸிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட துண்டுதான் திரிணமூல் காங்கிரஸ். அரசியல் பௌதீக விதிகளின்படி காங்கிரஸுக்கு எதிரான மனநிலை இருக்கும்போது காங்கிரஸுக்கு எதிராகத் துவங்கப்பட்ட கட்சி நிச்சயம் மக்களின் ஆதரவைப் பரபரப்பாகப் பெறும். நன்றாக வளர்கிறவரைக்கும் வளர்த்துவிட்டுப் பிறகு நாம் மேலாதிக்கம் செலுத்தலாம். அங்கங்கே அவர்களுக்குத் தெரியாமலேயே நிறையப் பொறிகள் வைக்கப்பட்டிருக்கும். பணிய மறுக்கும்போது நிச்சயம் மாட்டிவிட்டுக் கதையை முடித்துவிடலாம்.

இத்தனையும் செய்துவிட்டு காங்கிரஸுக்கு அதிகபட்ச சீட்டுக்களை வாங்கியதே எப்படியும் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறாது கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் அதிமுகவிடம் பேரம்பேசி அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற கணிப்புதான். அதுவும் குறிப்பாக அவர்கள் இளைஞர்களின் ஓட்டுக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இளைஞர்கள் அதுவும் கம்ப்யூட்டர் படித்த இளைஞர்கள் அடிப்படையைப் பற்றியோ வேர்களைப்பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத கூட்டம். ஐபிஎல் கிரிக்கெட்டிற்கும், பப் கலாச்சாரத்திற்கும், மால்களுக்கும், இன்னோவேட்டிவ் தியேட்டர்களுக்கும், நவீன மோட்டார் சைக்கிள்களுக்கும் அடுத்ததுதான் குடும்பம், சமூகம் உட்பட மற்ற எல்லாமே அவர்களுக்கு. அவர்கள் எப்படியும் ஓட்டுப்போடவும் வரப்போவதில்லை என்று காங்கிரஸும் நினைத்தது; திமுகவும் நினைத்தது. இரண்டு கட்சிகளும் கவிழ்ந்துபோக இந்த நினைப்பு ஒரு மிகப்பெரிய காரணம்.

இலவசம் என்ற பெயரில் கிராம மக்களுக்கும் ஏழைகளுக்கும் சென்ற அரசு செய்த உதவிகள் ஏராளம். அவர்களும் அத்தனைச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டுவதற்கில்லை. உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டால் அடித்தட்டு மக்களிடையே ஒரு வருடத்திற்குப் பத்துக்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே முன்னேறிவந்தன. அந்தப் பத்துக்குடும்பங்களில்தான் அன்றாட வாழ்வுமுறையில் மாறுதல் வரும். கலர் டிவி, கியாஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் அந்தப் பத்துக் குடும்பங்களுக்குத்தான் வரும். மிக மெதுவான ஆமை வேக முன்னேற்றம்தான் இவர்களுக்கு. இவர்களுடைய அடிப்படைத் தேவையை மீறி பணம் கிடைத்தபோதும் மது அருந்தியும் வேறு வழிகளிலும் செலவு செய்துவிட்டு ஒரே விதமான வாழ்க்கையைத்தான் வாழ்வார்களேயன்றி தங்கள் வாழ்க்கைநிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களின் அத்தனைக் குடும்பங்களிலும் அதிரடியாக உள்ளே புகுந்து மிகப்பெரிய மாறுதலைச் செய்தது திமுக அரசாங்கம்.

இலவச காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்ததுவும், விவசாயக்கடனை ரத்து செய்ததுவும், இலவச மனைப்பட்டா வழங்கியதுவும், 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியதுவும், மகளிர் சுய உதவிக்குழுவை முறைப்படி பயன் பெறுமாறு செய்ததுவும் நிச்சயம் எந்த அரசாங்கமும் இதுவரையிலும் செய்யாத பணிகளே. இதற்கு நன்றி காட்டாத மக்களைப் பாராட்டுவதற்கில்லை. அவரென்ன சொந்தப் பணத்திலிருந்தா செய்தார்? மக்களின் வரிப்பணத்திலிருந்துதானே செய்தார்? என்ற கேள்வி
தார்மிக நியாயமற்றது. எல்லா அரசுகள் செயல்படுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான். அதனை எப்படி முறைப்படுத்தி மக்களுக்கே பயன்பெறுமாறு செய்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் திறமை வெளிப்படுகிறது.

இந்த விஷயத்தில் மக்கள் மனநிலையோடு எப்படி ஒத்துப்போக முடியவில்லையோ அதே போல கருத்துக்கணிப்புகள் விஷயத்திலும் மக்கள் மனநிலையோடு ஒத்துப்போக முடியவில்லை. எல்லா மாநிலங்களின் கருத்துக்கணிப்புகளும் சரியாக வந்துகொண்டிருக்க எப்போதுமே தமிழகம் பற்றிய கருத்துக்கணிப்புகள் மட்டும் தவறாகவே வரும். அல்லது பத்துக் கணிப்புகள் வந்தால் ஏதோ ஒன்று அல்லது இரண்டு கணிப்புகள்தாம் சரியானதாக இருக்கும். இதற்கும் மக்களைத்தான் குறை சொல்லத்தோன்றுகிறது.

என்ன காரணம் தெரியுமா? கருத்துக்கணிப்புகள் எல்லாமே மற்றவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று அந்த பதில்களிலிருந்து அவன் மன நிலையைக் கணித்துப்போடப்படும் ஒரு சாதாரண கணக்கு. தான் யாருக்கு ஓட்டளிக்கப்போகிறோம் என்பதையோ யாருக்கு ஓட்டளித்தோம் என்பதையோ சரியாகச் சொன்னால்தானே சரியான முடிவுகள் வரும்? இவன் பாட்டுக்கு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினால் முடிவுகள் எப்படி சரியாகவரும்? கேட்பவனிடம் கள்ளத்தனமாக பதில் சொல்லிவிட்டு அவனை வேடிக்கைப் பார்ப்பதில் நம்ம ஆள் மிகவும் எக்ஸ்பர்ட்! ஆக, கணிப்புகள் கதி அதோ கதிதான்.

மக்களை அவ்வளவு சுலபமாக எடை போட்டுவிட முடியாது. அவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்து சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை அளிப்பார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது மற்ற மாநிலத்தவருக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர, தமிழர்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. அப்படிப்பார்த்தால் 67-ல் காமராஜரையும் கக்கனையும் மஜீத்தையும் இன்னபிற எளிமையான தலைவர்களையும் தோற்கடித்திருப்பார்களா என்ன?

எமர்ஜென்சி கொடுமை இந்தியா பூராவிலும் இருந்தது. தமிழகம் மிக அவலமான முறையில் கொடுமைகளை அனுபவித்தது. பீகார் போன்ற படிப்பறிவு அதிகம் இல்லாத மாநிலங்கள்கூட காங்கிரஸைத் தோற்கடித்தது. ஆனால் தமிழகம் மட்டும் காங்கிரஸையும் அதனை ஆதரித்த எம்ஜிஆரையும் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தது.

சாதாரண நடிகர்களெல்லாம் நிறைய தடவை வென்றிருக்கிறார்கள். சிவாஜி கணேசனை ஒரு மரியாதைக்காகவாவது வெற்றிபெற வைத்திருக்கிறார்களா தமிழக மக்கள்?

இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோற்கடித்திருக்கலாமா?

ஆக, தமிழ்நாட்டு வாக்காளனும் சிலபல கருத்துருவாக்கங்களில் தொடர்ந்தாற்போல் இழுத்துச் செல்லப்பட்டு வாக்களிப்பவனாகத்தான் இருக்கிறானே தவிர புத்திசாலித்தனமாக வாக்களிப்பதில் முன்நிற்கிறான் என்பது தவறான வாதம்.

ஜெயலலிதாவுக்காக இங்கே நாடாளும் அதிர்ஷ்டம் எந்நேரமும் கைகட்டிக் காத்துக்கொண்டிருக்கிறது. ராஜிவ்காந்தி மரணத்தில் பயனடைந்தவர் ஜெயலலிதா. மூப்பனார் கலைஞர் மீது கொண்ட கோபத்துக்கு இரண்டாவது முறையாகப் பயனடைந்தவர் ஜெயலலிதா. இதோ இப்போது இளைய சமுதாயமும் நடுநிலை வாக்காளர்களும் கருணாநிதி மீது கொண்ட கோபத்துக்குப் பயனடைந்தவரும் ஜெயலலிதாவேதான்.

கலைஞர் மீதான எதிர்மறை எண்ணங்கள் மக்களிடையே எப்படி, எங்கிருந்து எழுந்து எப்படியெல்லாம் உருமாறி கிளைபரப்பி மொத்த வெறுப்பாக ஒன்று திரண்டு இப்போது பதவியைவிட்டு இறக்கியிருக்கிறது என்பதைத்தான் இங்கே அலசியிருக்கிறோம். இந்த எதிர்ப்புணர்வை ஊதி மிகப்பெரிதாக ஆக்கி இதற்கு வேறொரு வடிவம் கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டு. ஆதாரமான காரணத்தை மக்களுக்குக் காட்டாமல் வேறொரு திசைக்கு மக்களை மிக எளிதாக ஏமாற்றி கூட்டிச்செல்லும் வித்தையை ஊடகங்கள் இன்றைக்கு மிக சாமர்த்தியமாகச் செய்துவருகின்றன. கலைஞருடைய தோல்விக்கும் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் சூத்திரதாரிகளாய் சோ மாதிரி நபர்களை முன்னிறுத்தும் கைங்கரியமும் இன்று நடைபெறுகிறது. சோ வேண்டுமானால் ஷோ காட்டலாமே தவிர உண்மைகள் வேறுமாதிரியானவை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றக்கட்டடத்தை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். கருணாநிதி கட்டினார் என்பதற்காக மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தால் என்னென்ன ஆகும் என்பதை ஊகிக்க முடியவில்லை. கருணாநிதியால் வழங்கப்பட்ட எல்லா டிவிக்களையும் திரும்பப் பெறுவாரா?

எல்லா கியாஸ்டவ்களும் திரும்பப் பெறப்படுமா? விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட கடன்களைத் திரும்ப கட்டச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஆபரேஷன் செய்துகொண்டவர்களுக்கு அந்தத் தொகையை செலுத்தச்சொல்லி பில் அனுப்பப்படுமா? ஒன்றும் புரியவில்லை.

தமிழ்நாட்டு அரசியல் என்பது தாய விளையாட்டு போல் ஆகிவிட்டது. தாயக்கட்டைகளை உருட்டிப்போடும்போது சமயங்களில் என்ன விழும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. இன்னதுதான் விழ வேண்டும் என்று திட்டமிட்டு உருட்டவும் முடியாது. ஒரு சில அதிர்ஷ்டக்காரர்களுக்கு எவ்வித முயற்சிகளும் இல்லாமலேயே அதிர்ஷ்ட எண்கள் அடிக்கடி விழுவதுண்டு.

அதிர்ஷ்டக்காரர்கள் இளைய சமுதாயத்தினரை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

Sunday, April 24, 2011

வீடுகட்டிப் பார்த்தேன்.










பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம் ஒன்றை ஒரு வார இதழில் வாசிக்க நேர்ந்தது. படிப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அனுபவம் அது. அந்த அனுபவம் இது;

‘சமீபத்தில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லட்டுமா?....பெங்களூரில் எனது பழைய-சிறிய வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்திப் புதுப்பிக்க ஆறு லட்சம் ரூபாய் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தேன். அந்த வீட்டின் மதிப்பு பெங்களூர் நிலவரப்படி ரூ.25 லட்சம். அதை அடமானமாகக் காட்டியும், எனது சம்பளத்தில் இருந்து 60 மாதத் தவணையில் பிடித்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்தும், முப்பது செக்குகளில்
கையொப்பமிட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தும்கூட,கிட்டத்தட்ட 10 முறை அலைந்தபின்பே கடனின் முதல் தவணை கிடைத்தது.

ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை என்னிடம்தான் இருந்தது...வங்கியிடமல்ல. வங்கியில் இருக்கும் நடைமுறைகள் அப்படி.

இதில், அவர்களுக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்ததை நான் அறிவேன். ஏன்.... எல்லாம் முடிந்த பின் அதே வங்கிக்கிளை ஒன்றை என்னை வைத்து ரிப்பன் வெட்டித் திறந்தார்கள்.
அப்போது நான் சொன்னது,’’இந்த வங்கியில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கும்.

ஏனெனில் என்னையே பலமுறை சோதித்தபின்தான் பணம் கொடுத்தார்கள். அதுவும் நான் வீட்டை உண்மையிலேயே அவர்களிடம் வரைபடத்தில் காட்டியபடிதான் கட்டுகிறேனா என்பதை பல கட்டங்களில் வந்து பார்த்துவிட்டு, நான்கு தவணையில் தொகையைக் கொடுத்தார்கள்.அப்படி இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய வங்கிகள் திவாலாகியும் இந்திய வங்கிகளில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கிறது.
இந்திய ஜனநாயகமும் வங்கியும் மிகவும் பலமானதே. என்ன...கொஞ்சம் பொறுமையுடனும் பொறுப்புடனும் அணுகவேண்டும்.”

இதனை வாசித்த போது ஒருபுறம் நெஞ்சு கனத்தது. நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுகிறவர்களுக்கு வங்கிகளிடமிருந்தும், வேறு அரசு நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கின்ற அனுபவம் இதுதான். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாகவும் எத்தகைய சாதனையாளர்களாகவும் இருந்தாலும் சட்டதிட்டங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் சொல்லி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் அலுவலர் கொஞ்சம் மனசாட்சி உள்ளவராக இருந்தால் கூடுதலாக ஒரு அனுதாப வார்த்தையையும் சேர்த்து அனுப்பிவைப்பார்.’’என்ன பண்றது சார், உங்களுக்கே இந்த நிலைமை. ரொம்ப வருத்தமாயிருக்கு. நம்ம சட்டதிட்டங்கள் அப்படி. ஒண்ணும் பண்றதுக்கு இல்லை.’’
ஆனால் இந்தியா பூராவிலும் நகரங்களில் ஒரு அங்குலம் பாக்கியில்லாமல் வானளாவ உயர்ந்துகொண்டிருக்கிறதே கட்டிடங்கள் அவையெல்லாம் என்னவாம்? எந்த வணிக நிறுவனம், எந்த அபார்ட்மெண்ட், எந்த தொழில் நிறுவனம், எந்தக் கல்லூரி நிறுவனம், எந்தத் தனியார் நிறுவனம் சொந்தப் பணத்தில் எழுகிறது? எல்லாமே வங்கிக் கடனில் எழும் கட்டிடங்கள்தானே? அவையெல்லாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, வரைபடங்களுக்கு உட்பட்டு நியதி நெறிமுறைகளுக்கு உட்பட்டுக் கடன் பெற்றுக் கட்டப்படுபவைதானா?

வேடிக்கையாயிருக்கிறது....விஷயம் என்னவென்றால் நீதி நேர்மை நியாயம் என நமக்கென்று பிறப்பித்துக்கொண்ட நெறிமுறைகளுடன் வாழ நேரும்போதுதான் இம்மாதிரியான சோதனைகளையெல்லாம் சந்திக்க நேர்கிறது. இன்றைய உலகில் வெற்றிபெற்றவர்களாய் வாழ்வதற்கு வேறுமாதிரியான சட்டதிட்டங்களும் வழிமுறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. இதனை நடத்துவது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். பணநாயகத்தின் ஆட்சிக்குட்பட்டே இங்கு பல காரியங்கள் நடைபெறுகின்றன. அதில் சிக்கி அடிபடாமல் வெளியே வரும் அப்பாவி பொதுஜனம் வெகு சொற்பமே. இந்தப் பிரிவினர்க்குப் ‘பிழைக்கத்தெரியாதவர்கள்’ என்று பெயர்! இதற்கு அப்பாற்பட்ட ‘பிழைக்கத்தெரிந்த’ பொதுஜனம்தான் சுகபோகங்களுடன் வாழ்பவர்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்த வங்கிவிவகாரம் வீடு கட்டிய எனக்கும் ஏற்பட்டது. பல வங்கிகளில் சட்டதிட்டங்களைச் சொல்லியே திருப்பியனுப்பினார்கள். ஒரு கோரிக்கையை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு நிறைய சட்டப்பாயிண்டுகள் கிடைத்துவிடுகின்றன. நியாயப்படுத்துவதற்கு நம்மிடம்தான் சட்டக்குறிப்புகள் எதுவும் இருப்பதில்லை. நிலத்தை வாங்கிவைத்துக்கொண்டு வங்கிக்கடனுக்காக அலைந்துகொண்டிருந்தேன். என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்த நண்பரொருவர் சிரித்துவிட்டு “சார் இப்படியெல்லாம் நீங்களே போய் அணுகினால் எந்த வங்கியிலும் கடனெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அதற்கென்று ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால்தான் நீங்கள் கடனெல்லாம் வாங்கமுடியும். வாங்க நான் கூட்டிப்போறேன்” என்று சொல்லி ஒரு ஏஜெண்டிடம் கூட்டிச்சென்றார்.

அவர் நான் வைத்திருந்த பத்திரங்களை எல்லாம் வாங்கிப்பார்த்தார். பிறகு கடனுக்கு வேண்டிய சான்றிதழ்கள் எவையெவை குறைந்திருக்கின்றன என்தைச்சொன்னார். பிறகு ‘அவையெல்லாம் உங்களுக்கு அரசாங்கத்திலோ கார்ப்பரேஷனிலோ கிடைக்காது. அவற்றெயெல்லாம் வேறு வழிகளில் வாங்க வேண்டும்’ என்றார். ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்?” என்றார்.

“இருபது லட்சம்” என்றேன். என்னுடைய மகள் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுவதால் அவள் பெயரில் கடன் பெறுவதற்கான வாய்ப்பிருந்தது.

அந்த மனிதர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நாம் அதிக பணத்தை எதிர்பார்க்கிறோமோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

“என்ன சார் இவ்வளவு கொறைச்சலா கேட்கறீங்க? உங்க மகள் சம்பளத்துக்கு இன்னமும் அதிகமாக நீங்கள் கேட்கலாம். ஒரு இருபத்தைந்து லட்சம் கேளுங்க” என்றார்.

“வேண்டாம். அப்புறம் நாங்கதானே கட்டணும்..இது கிடைச்சாலே போதும்” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களுக்குத் தெரியாதுசார். வீடு கட்ட ஆரம்பிச்சா கடைசியிலதான் பயங்கரமா இழுத்துரும். அந்தச் சமயத்துல என்ன செய்வீங்க? இருப்பதஞ்சு போடறேன்” என்றார்.

கடன் கிடைப்பதே பெரிது என்றிருக்கும் இந்த நேரத்தில் இவர்பாட்டுக்கு இன்னமும் அதிகமாக வாங்கித்தருகிறேன் என்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு.
கொஞ்சம் தயங்கியபடியே “சரி” என்றேன்.

“எதுக்கும் இருபத்தாறாவே போடறேன்” என்றார். என்ன இப்படி வாரிக்கொடுக்கிறேன் என்கிறாரே என்று யோசித்தபோதுதான் அவர் பேசிய அடுத்த வார்த்தையின்போது அதற்கான சூட்சுமம் தெரிந்தது. “எத்தனை லட்சமோ அத்தனை லட்சத்துக்கும் நாலு பெர்சன்ட் கமிஷன் தந்துரணும். இந்த பத்திரங்களெல்லாம் ரெடிபண்ண இருப்பஞ்சாயிரம் தந்துரணும்” என்றார்.

“எல்லார்ட்டயும் ஐந்து பெர்சன்ட்தான் வாங்குறது..நண்பர் கூட்டிட்டு வந்திருக்காரே என்பதற்காக உங்களிடம் நாலு பெர்சன்ட்” என்றார். கூட்டிக்கழித்துப் பார்த்தபோது ஒண்ணேகால் லட்சம் வெறும் கமிஷனாகவே தரவேண்டும் என்பது புரிந்தது.

ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டேன். பலரிடமும் பேசிப்பார்த்தபோது இது சாதாரணம்தான் என்று புரிந்தது. கமிஷன் தொகை அங்கங்கே வேறுபடுகிறது என்பதுதான் வித்தியாசம். இந்த வரிசையில் இன்னொரு புரோக்கர் சொன்னதுதான் வியப்பின் உச்சம். எல்லாம் பேசிவிட்டு ‘எந்த வங்கி?’ என்றேன். “உங்களுக்கு எந்த வங்கி வேண்டுமோ அந்த வங்கியில் வாங்கித்தருகிறேன்” என்றார் கூலாக.

புரோக்கர் சமாச்சாரமே வேண்டாம் என்று தள்ளிப்போட்டு சில மாதங்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தொடர்பு ஏற்பட்டு கடனுக்கு வழி பிறந்தது.

கடன் கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா என்ன? வீட்டைக் கட்டிக்கொடுக்க நல்லதொரு காண்ட்ராக்டர் கிடைக்கவேண்டுமே! என்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய நெருங்கிய நட்பில் இருப்பவர் திரு. கோ.தாமோதரன். பெங்களூரின் குறிப்பிடத்தக்க காண்ட்ராக்டர்களில் ஒருவர். பெரிய தொழில் நிறுவனங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி, விஜய் மல்லய்யாவின் ஒரு கட்டிடம் என்று பல பெரிய பெரிய கட்டுமானங்களைக் கட்டியவர். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்ற நிறைவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பொதுச்சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்து தற்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று சத்தமில்லாமல் தமிழ்த்தொண்டு புரிந்துகொண்டிருப்பவர். இவரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி, ஆனாலும் கேட்டுவிட்டேன்.

“அட, அதுக்கென்ன தாராளமா கட்டித்தர்றேன்” என்று முன்வந்தார். முக்கிய விஷயம், ஒரேயொரு ஒற்றைப் பைசாகூட வாங்கவில்லை. தம்மிடமுள்ள ஆட்களை அனுப்பினார். அவர்களுக்கான கூலி, மற்றும் கட்டட வேலைக்கான பொருட்கள் வந்து இறங்கினால் அவற்றுக்கான விலை-அவ்வளவுதான். வாரத்திற்கு இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை என்று வந்து மேற்பார்வையிட்டு யோசனைகள் சொல்லி மொத்த வீட்டையும் முடித்துகொடுத்துவிட்டார்.

கணக்குப்போட்டுப் பார்த்த நண்பர்கள் எப்படியும் காண்ட்ராக்ட் விட்டிருந்தால் ஐந்துமுதல் ஆறு லட்சம்வரைக்கும் அதிகமாகியிருக்கும் என்று சொல்கின்றனர். இப்படி நல்ல மனம் கொண்ட நண்பர் ஒருவர் கிடைத்ததில் இலகுவாக அழகிய வீடு ஒன்று உருவாகிவிட்டது.

அடுத்தது புதுமனைப் புகுவிழா!

என்னுடைய திருமணத்திலிருந்து எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக்கொடுத்தவர் நடிகர் சிவகுமார். வாழ்க்கையில் சில அதிர்ஷ்டங்கள் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அப்படியொரு அதிர்ஷ்டம் சிவகுமார் அவர்களின் நட்பு. எந்த ஜென்மத்திலோ செய்த நற்பயன் அவருடைய நட்பாக இன்றும் தொடர்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, புதுவீட்டை அவரும் திருமதி சிவகுமாரும் வந்திருந்து குத்துவிளக்கேற்றித் துவக்கிவைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவான ஒன்று.

அவர்களுடன் யார் வருவது?

நான் சொன்னேன்,’’சார் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் பேராசைப் பிடித்தவன். எனக்கு சூர்யா, ஜோதிகா, குழந்தைகள், கார்த்தி, பிருந்தா, குழந்தைகள் என்று எல்லாரும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்றேன்.

சிவகுமார் சிரித்துவிட்டுச்சொன்னார்.’’அதெல்லாம் சரி, ஆனால் நடைமுறைக்கு அதெல்லாம் ஒத்துவரணுமான்னு பார்க்கணும். குட்டிக்குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாது. சூர்யா கார்த்தியைப் பொறுத்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்ந்தாற்போல வீட்டுல வச்சிப்பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. ஒருத்தர் இருந்தா இன்னொருத்தர் வெளில இருப்பாங்க. பார்க்கலாம்.. ரெண்டு பேர்ல யார் ஃப்ரீயாக இருக்காங்களோ அவங்களை மட்டும் கூட்டிவர்றேன். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.

சூர்யாவா கார்த்தியா யார் வருவார்கள் என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம் இருக்க நாட்கள் நகர்ந்தன. செய்தியை வெளியில் கசிய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.. ஆனால் நிகழ்ச்சிக்கு அழைத்த அத்தனைப் பேரும் முதலில் கேட்ட கேள்வி “சிவகுமார் வருகிறாரா?” என்பதுதான். பூசிமெழுகினாற்போல் பதில் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தால் அவர்களின் அடுத்த கேள்வி-“சூர்யா வர்றாரா இல்லை கார்த்தி வர்றாரா?” என்பது.

மிக நெருங்கிய நட்பு வட்டத்தையும் உறவினர்களையும் மட்டுமே அழைப்பது மிக எளிமையாக நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவானது. மூலிகைமணி டாக்டர் வெங்கடேசன் தமது கனவுத்திட்டமான ஷாங்ரீலாவை முழுமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு பெரிய மூலிகைப்பண்ணை, மூலிகைத்தொழிற்சாலை, காட்டேஜ்களுடன் கூடிய மருத்துவமனை என்று மிகப்பெரிய திட்டம். அதனை முடிப்பதில் தீவிரமாக இருந்தவரை என்னுடைய அழைப்பு தொடவும் “குடும்பத்துடன் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

கவிஞர் அறிவுமதியை அழைக்க,” எந்த நிகழ்ச்சி இருந்தாலும் விட்டுட்டு பெங்களூருக்கு ஓடிவந்துருவேன்” என்றார்.

எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி. “காலையிலேயே வந்துர்றோம்” என்றார். தென்காசியைச் சேர்ந்த பிரபல மூட்டு எலும்பு சிகிச்சை சர்ஜன் டாக்டர் சந்திரன் ‘தவறாமல் கலந்துக்கறேன்’என்றார். தொழிலதிபர் ஈஸ்வர் “இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டுக்கங்க” என்றார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் புதிய விளக்கம் எழுதுவதில் ஈடுபட்டிருக்கும் திரு கே.பத்மநாபன் ‘’ஞாயிற்றுக்கிழமைத்தானே எல்லோருமே வந்துர்றோம்” என்றார்.

மேலும் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவர் சேலம் ஜெயராமன், அவரும் அவருடைய நண்பர் பேராசிரியர் டாக்டர் ரமணிகோபாலும் சேலத்திலிருந்து காரிலேயே வந்துவிடுகிறோம் என்றனர்.

இரண்டு நாட்கள் இருக்கும்போது சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. அவரது உறவு அம்மாள் ஒருவர் மிகவும் உடல்நலிவுற்றிருப்பதால் கோவைக்குப் போகவேண்டியிருக்கிறது. “நானும் வீட்டம்மாவும் போகிறோம். அங்கிருந்து நாங்கள் எப்படியாவது பெங்களூர் வந்து கலந்துகொள்கிறோம். சூர்யாவையோ கார்த்தியையோ கோவை பெங்களூர் என்றெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாமற்போகலாம்” என்றார்.

அடுத்த தகவல் “அந்த அம்மாள் இப்போது கொஞ்சம் தேவலை. பிளைட் டிக்கெட் கான்சல் செய்துட்டோம். கோவை போறதாயிருந்தாலும் பெங்களூர் வருவதாயிருந்தாலும் காரிலேயே வந்து செல்வதாக ஏற்பாடு. சூர்யா வரலை.வெளியூர் சூட்டிங். கார்த்தியைக் கூட்டிவர்றேன்” என்றார்.

அடுத்த தகவல், “கார்த்தி வருவதும் சந்தேகம். அவனுக்கு முதுகு பிடிச்சிருக்கு. அத்தனை தூரம் கார்ல டிராவல் பண்ணமுடியுமான்னு தெரியலை. டாக்டர்ட்ட போயிருக்கான். டாக்டர், பயணம் பண்ணலாம்னு சொன்னால்தான் வருவான்” என்றார்.
இன்னொரு அரைமணி நேரம் கழித்து அவரிடமிருந்து வந்த குறுந்தகவல்-‘karthi is coming’ என்றது.

ஆக, நாங்கள் நினைத்தது போலவே சிவகுமாரும் திருமதி சிவகுமாரும் கார்த்தியுடன் வந்திருந்து அத்தனைப்பேரின் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் காரணமாயினர்.
வீட்டிற்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருந்தோம். அந்த உணர்வு எல்லாருக்கும் கிடைத்தது.

இந்தத் தகவல்களை வலைப்பூவில் எழுதுவதாக எண்ணம் எதுவும் இருக்கவில்லை. சொந்த விஷயங்களை கடைவிரிக்கக் கூடாது என்ற நினைப்பு எனக்கு உண்டு. ஆனால் இங்கே இதனை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம்தான். வங்கிக் கடன்கள்பற்றி அப்பாவியாக அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களையொட்டி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் நிகழ்ச்சி நடந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே இதுபற்றி இங்கே எழுத நேர்ந்திருக்கிறது.

நேர்மையும் நாணயமுமாக நடந்துகொள்ள நினைக்கும் அத்தனைப்பேரையும் சட்டங்களைக்காட்டி நிராகரிக்கும் சமூக அமைப்புதான் பரவலாக இருக்கிறது. ‘இதெல்லாம் வேற ரூட்ல போய்ப் பண்ணிக்கணும்சார்’ என்ற பிழைக்கத்தெரிந்த மனிதர்களின் பஞ்ச் டயலாக்தான் இங்கே வெற்றிக்கான ஃபார்முலா.

கூடவே, வேறொரு கருத்தும் தோன்றியது. வலைப்பூவில் சமூகம் சார்ந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய கோபங்களை, எரிச்சல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் மகிழ்ச்சியையும் நிறைவான தருணங்களையும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இது எனக்கானது மட்டுமே என்று கமுக்கமாக இருந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் மகிழ்ச்சி அலைகளையும் பரவச்செய்யலாமே என்று தோன்றிற்று.

எனவே பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, April 11, 2011

கலைஞரா...? ஜெயலலிதாவா...?


தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கலைஞரா ஜெயலலிதாவா என்ற கேள்வி நான்குபுறமும் தகித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களும் வலைத்தளங்களும் தெளிவான இறுதியான முடிவை எடுத்துவிட்டு அதனைப் பெருங்குரலில் பரப்பிக்கொண்டும் இருக்கின்றன. ‘கலைஞர் உடனடியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜெயலலிதா உடனடியாக அரியணை ஏறியாகவேண்டும்’ என்ற முடிவை தொண்ணூறு சதம் ஊடகங்களும், தொண்ணூற்றொன்பது சதம் வலைப்பூக்களும் பேரொலியாக உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கின்றன.

கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களாக ஈழ விவகாரத்தில் அவர் நடந்துகொண்டவிதம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், குடும்ப ஆதிக்கம் என்ற மூன்று விஷயங்கள் பிரதானமாக வைக்கப்படுகின்றன.

இலவசங்களை அள்ளிக்கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டு தேர்தல்களில் வெல்கிறார் என்பதும் இவர்மீது வைக்கப்படும் மேலும் சில குற்றச்சாட்டுகள்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இவை அத்தனையுமே தவறுகள்தாம் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதே சமயம் ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றத்துடிக்கும் அறிவுஜீவிகள் அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்கு எந்த வலுவான காரணத்தையும் கூறுவதாக இல்லை. கருணாநிதி தோற்கடிக்கப்படவேண்டும், ஜெயலலிதா அரியணை ஏற வேண்டும் என்பதுமட்டும்தான் அவர்களுடைய வாதமும் எதிர்பார்ப்பும். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் மீது இவர்கள் இப்போது சொல்லும் ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்கள் இல்லாமல் இருந்திருந்தால்கூட இவர்கள் ‘கருணாநிதி தோற்கவேண்டும்’ என்ற வாதத்தை முழக்கமாக்கிக்கொண்டு வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்களில் ஒரேயொரு பிரிவினர்தான் புதிதாகச் சேர்ந்திருப்பவர்கள்.
எதிர்ப்பாளர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.

1) இன மத துவேஷம் காரணமாக கருணாநிதியை எப்போதுமே எதிர்ப்பவர்கள்....சோ ராமசாமி, குருமூர்த்தி, இந்து, தினமலர், ராமகோபாலன் போன்றவர்கள் இதில் அடக்கம்.

2) எம்ஜிஆரின் ஏகாதிபத்திய ரசிகத்தன்மைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட ரசிகர்கள், அரசியல் மற்றும் கட்சி சார்ந்தவர்களும் இதில் அடக்கம்.

3) தமிழ் உணர்வில் ஈர்க்கப்பட்டு அண்ணா, கலைஞர் என்று நெஞ்சில் வைத்திருந்து..பின்னர் பிரபாகரன் விசுவரூபம் எடுத்ததும் தங்களின் தலைவனாக பிரபாகரனை வரித்துக்கொண்டவர்கள்... இவர்கள்தாம் புதிய பிரிவினர்.

4) தினசரிகளையும் செய்திச்சேனல்களையும் பார்த்து தங்களுக்கான பொதுவாழ்வு மற்றும் அரசியல் கூர்மைகளை தினசரி பெறுகிறவர்கள்.. என்று இந்த நான்கு விதத்தினர்தாம் கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் இரண்டு வகையினர் எந்தக் காரணத்திற்காகவும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறவர்கள் அல்ல. தாங்கள் சார்ந்த அரசியல் பற்று காரணமாகவும், எம்ஜிஆர் மீதுள்ள அதீதமான மோகம் காரணமாகவும் கடைசி வரைக்கும் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்ஜிஆரின் விசுவாசிகளாகவும்தாம் இரண்டாவது வகையினர் எப்போதுமே இருப்பார்கள்.

இவர்களில் முதல்வகையினரின் எதிர்ப்பும் ஆற்றலும்தாம் விபரீதமானவை. தாங்கள் நினைத்ததை மக்களிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும், மக்களையோ ஒட்டுமொத்த சமுதாயத்தையோ தங்களின் இசைவுக்கு ஏற்ப எப்படியெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அரசியலமைப்பு ஆட்சித்துறை அதிகார மையங்கள் சட்டத்துறை ஊடகங்கள் என்று மக்களை ஆட்டுவிக்கும் அத்தனைத் துறைகளும் இவர்கள் கைவசம் இருப்பதால் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளும் வல்லமை இவர்களுக்கு அபரிமிதமாக உண்டு.

கருணாநிதிக்கு எதிரான மிகப்பெரிய கரும்புள்ளியாய் ஆ.ராசாவை மக்களுக்கு இன்றைக்கு காட்டியிருப்பதில் இவர்களின் பங்கு மிகப்பெரியது. ராசா குற்றமற்றவர் என்றோ, ஸ்பெக்ட்ரமில் ஊழல் நடக்கவில்லையென்றோ சொல்லவரவில்லை. அல்லது இன்றைய அமைச்சர்களில்- அமைச்சர்கள் என்றால் நமது மாநிலத்தில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல; மத்தியிலே ஆளுகிறவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் ஆளும் அமைச்சர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் ஒரேயொரு வார்த்தைதான் சொல்லமுடியும். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையின் தலைப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடர்கள் அல்ல;’ ராசா அகப்பட்டுக் கொண்டார் அவ்வளவுதான்!

இந்தியாவில் உள்ள பரிசுத்தவான்களின் அத்தனைத் துப்பாக்கிகளும் இன்றைக்கு ராசாவை நோக்கியும் கருணாநிதியை நோக்கியும் திருப்பப்பட்டுவிட்டன. இதில் அரைவேக்காட்டுத்தன புத்திகொண்ட காங்கிரஸ்காரனின் கைங்கர்யம் வேறு.

சோ போன்றவர்கள் கருணாநிதியை எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. சோவுக்கு அதிமேதாவி என்றதொரு பிம்பம் இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் தமிழகத்து அரசியலைப்பற்றிக் கருத்துச்சொல்லும் மேதையாக இன்றைக்கும் சோவைத்தான் கருதுகிறார்கள். சோவை விட ஆழமாகவும் அழகாகவும் கருத்துரைக்க எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிட்ட நட்பு அல்லது வேறுசில தொடர்புகள் காரணமாக இன்றைக்கும் சோவைத்தான் ஆங்கில ஊடகங்கள் நாடுகின்றன. கருணாநிதி எதிர்ப்பை விட்டுவிடுவோம். இவற்றில் ஒரேயொரு முறைகூட தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் என்றவற்றைச் சார்ந்தோ அல்லது தமிழனுக்கு ஆதரவான ஒற்றை வார்த்தையையோகூட சோ இதுவரை தவறியும்கூட உச்சரித்ததில்லை.

கருணாநிதி பற்றிக் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது அறிவுக்கூர்மை குறித்தோ, அரசியலில் அவருக்கிருக்கும் ராஜதந்திரம் குறித்தோ, அவரது இலக்கிய மேதைமை குறித்தோ, படைப்பாற்றலில் அவருக்கிருக்கும் திறமை குறித்தோ எவரும் வியக்கவே செய்வர். இந்த விஷயங்களில் யாரையும் அவருக்கிணையாகச் சொல்வதற்கில்லை. ஆனால் சோ போன்றவர்கள் இப்படிப்பட்ட கருணாநிதியைக் கொச்சைப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் விஷயம் மிகவும் அற்பமான ஒன்று.

எப்போது பார்த்தாலும் அல்லது அடிக்கடி இவரே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வார். ‘கருணாநிதியைவிட ஜெயலலிதா எந்த வகையில் மேலானவர்? அல்லது சிறந்தவர்?’ என்பது
கேள்வி.

இந்தக் கேள்விக்கு சோ சொல்லும் பதில்-‘கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜெயலலிதாவுக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். எனவே இந்த வகையில் கருணாநிதியைவிட ஜெயலலிதா எவ்வளவோ மேலானவர்.’

இதைவிட அபத்தமான ஒரு பதிலை அற்பபுத்தி படைத்தவன்கூடச் சொல்லமாட்டான். நீண்ட காலத்துக்குச் சோ இந்த பதிலையே சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் சொல்லுவதில்லை. ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதிகமில்லாமல் இருந்தபோது சொன்ன பதில் இது. இப்போதெல்லாம் கருணாநிதி வீட்டுச் சின்ன குழந்தைகள் எல்லாம்கூட ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டனர். நம்முடைய வீட்டிலும் பிள்ளைகள் எல்லாம் சோவைவிட நல்ல ஆங்கிலம் பேசுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொதுவாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மிக அழகிய ஆங்கிலம், ஜெயலலிதாவை விடவும் அழகாகப் பேசுகிறார். வடக்கத்திய ஊடகங்கள் அடிக்கடி ஜெயந்தி நடராஜன் ஆங்கிலத்தில் பேசும் பேச்சுக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டதும் இனிமேல் இந்தப் பருப்பு வேகாது என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தவிர்த்துவிட்டார் சோ.

இது என்னவிதமான ஆங்கில மோகம் என்னவிதமான அடிமைத்தனம் என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்தார். பத்திரிகைகள் எல்லாம் சார்லஸ் வருகையைப்பற்றி அதிகமான செய்திகளை வெளியிட்டன. உடனே வந்ததே கோபம் சோவுக்கு. பேனாவைத் திறந்து கொட்டித் தீர்த்துவிட்டார். ‘இன்னமும் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சியின் மோகமும் அடிமைத்தனமும் போகவேயில்லை. அவர்கள் விட்டுச்சென்ற மிச்சங்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். எப்போதுதான் இவர்களுக்கெல்லாம் புத்திவருமோ?’ என்றெல்லாம் போட்டுக்காய்ச்சி எடுத்திருந்தார். பரவாயில்லையே மனிதர் பல விஷயங்களில் ஒருபக்கச் சார்புடன் இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் சரியான வாதங்களையே முன்வைக்கிறாரே என்று தோன்றிற்று.

அடுத்து வந்தது கிரிக்கெட் மேட்ச் சீசன்...அடாடா அதே இங்கிலாந்து நம்மிடம் விட்டுச்சென்ற அந்த ஆட்டத்தை சிலாகித்தும் அதற்குத்தான் பரம ரசிகராக இருந்து அந்த ஆட்டத்துக்கும் ஆட்டக்காரர்களுக்கும் துதிபாடுவதையும் ஆரம்பித்தார் பாருங்கள்..அப்போதுதான் இந்த மனிதரின் மனதிலும் படிந்துவிட்டிருந்த ஆங்கிலேய மோகமும் அடிமைத்தனத்தின் எச்சங்களும் பல்லையிளித்தன. இவர் கருத்துப்படி கருணாநிதியைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்தான் நாட்டை ஆள தகுதியானவர் என்றால் ஜெயலலிதாவைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்த சிறுமிகள் ஒவ்வொரு கான்வென்டிலும் நூறுபேராவது தேறுவார்கள்.
சோவைப்பற்றி இந்த அளவுக்கு இங்கே எடுத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு காரணம் பல தேர்தல்களின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் தம்மை வரித்துக்கொண்டு செயல்படுவதும், பல சமயங்களில் அவை செயல்வடிவமும் பெற்றுவிடுவதாலும்தான்.

இதோ, இந்தமுறைகூட கருணாநிதியின் அணியை எதிர்த்து எம்மாதிரி அணி அமையவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக சோ தான் இருந்திருக்கிறார். ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.

விஜயகாந்த்தின் இன்றைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது சோ அவரை அறியாமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் செய்திருக்கிறாரோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
எம்ஜிஆரைப்பற்றி விரிவாகப்பேசாமல் சிறு குறிப்புடன் நிறுத்திக்கொள்வோம். எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியிலே இருக்கும் பிம்பம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அவர்
ஏழைப்பங்காளன் என்பதும் கொடைவள்ளல் என்பதும் வாரிவாரி வழங்குபவர் என்பதும்தான். இதுபற்றிய விரிவான விவாதங்களைப் பிறிதொரு சமயத்தில் வைத்துக்கொள்வோம். அதனால்தான் அவர் ஆட்சிக்கு வந்ததும் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த இலவச மதிய உணவு திட்டத்தை மறுபடியும் கொண்டுவந்தார். அதுவும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற செய்தி முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டு எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாக மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த இலவச உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு வந்த தேர்தல்களில் அவர் கட்சிக்கான ஓட்டு கணிசமாக உயர்ந்தது. கூடவே, அவர் ஆட்சிபுரிந்த சமயங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்களுக்குப் பணமும் இலவசங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. இவையெல்லாவற்றையும் அந்த நாட்களின் தினசரிகளைப் படித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். லட்டுக்குள் மூக்குத்தி, எவர்சில்வர் குடங்கள் என்றெல்லாம் அப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்ட தகவல்கள் அத்தனையும் அன்றைய பத்திரிகைகளில் பிரசித்தம். அல்லது ஜூனியர் விகடன் பழைய இதழ்களின் கோப்புக்களைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஆக, இதெல்லாம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது மாத்திரமின்றி மக்களின் மன இயல்பும் அவர்களின் எதிர்பார்ப்பும் இதுதான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன.

வெறும் கொள்கை, கோட்பாடு, தமிழர்க்கான உரிமைகள், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் என்று மட்டுமே பேசியும் எழுதியும் இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதைக் கலைஞர் புரிந்துகொண்ட தருணம் இதுவே. பேச்சைக்கேட்டுவிட்டு, உடன்பிறப்புக்கான கடிதத்தைப் படித்துவிட்டு ஓட்டுப்போட்ட காலம் மலை ஏறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார் அவர். இலவசங்களை எடுத்துவிட்டார். ஸ்டாலின் மூலம் மகளிர் அணியினருக்குப் போய்ச்சேரவேண்டிய பலன்களை முடுக்கிவிட்டார்.

மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ, வள்ளலாரின் வாரிசுகளோ இல்லை. கொஞ்சம் முரட்டுத்தன அரசியலுக்குப் பெயர்போனவர்கள். இவரகளின் கையிலிருக்கும் மதுரையை மீட்க வேண்டும் என்ன செய்யலாம்? அனுப்பு அழகிரியை அங்கே...என்று முடிவெடுத்து அழகிரியை அங்கே அனுப்பிவைக்கிறார்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரை அந்தப் பிடிகளிலிருந்து முழுவதுமாக மீட்கப்படுகிறது. முற்றாக அழகிரியின் கைகளுக்குள் வருகிறது.

அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல;

சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல. சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.

ஆக, இலவசங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் மற்ற அரசியல்வாதிகளைப்போன்றே இத்தனைக்காலமும் அரசியல் நடத்திக்கொண்டிருந்த கலைஞரை இலவசங்களை நோக்கித் தள்ளியதும்,
முரட்டுத்தனம் காட்டித்தான் மதுரையில் அரசியல் நடத்த முடியும் வேறுவழியில்லை என்பதும் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இவற்றிற்கான பங்களிப்பு கணிசமாக எம்ஜிஆரின் அரசியலுக்கும் அவர் காலத்தில் கலைஞர் பெற்ற தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இருக்கிறது.

அடுத்து, இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் குறித்து எந்தத் தமிழனும் அவரைப் பாராட்டமாட்டான். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவரும் மத்திய அரசும் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதற்காக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் போக்கையும் நியாயப்படுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் நியாயமற்றது என்று சொல்லும் அதே நேரத்தில் வேறு சில விஷயங்களையும் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கை விவகாரம் ஒன்றிற்காக மட்டுமே அவர் இரண்டுமுறை ஆட்சியை விட்டு இறங்கியிருக்கிறார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அப்படி ஆட்சியை அவர் பறிகொடுத்த சமயத்தில் அவர் பின்னால் அத்தனைத் தமிழ் சமூகமும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பதும் அவருக்குப்பின்னால் ஒரே குரலில் அணிசேரவில்லை என்பதையும் சௌகரியமாக மறந்துவிடக்கூடாது.

இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தனித்தனிக் குழுக்களாகப் போராளிக்குழுக்கள் தமிழகம் வந்து ஆதரவு திரட்டியபோது யார்யார் எந்தெந்தத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்களோ அவரவர் அந்தந்தத் தலைவர்களுடனேயே நட்பைத் தொடர்ந்தார்கள். அப்படித்தான் முகுந்தனும், பாலகுமாரும், சிறீசபாரத்தினமும், பத்மநாபாவும், பிரபாகரனும் வெவ்வேறு தலைவர்களுடன்தான் நட்பு பூண்டார்கள். பின்னாளில் இவர்களில் பிரபாகரன் மட்டுமே வானளாவிய வலிமையுடன் உயர்ந்து நின்றார். ஆனால் பிரபாகரன் ஆரம்பத்திலேயே எம்ஜிஆருடன் நட்புகொண்டுவிட்ட காரணத்தால் கலைஞரைப் பிரபாகரன் புறக்கணித்ததும், பிரபாகரனைக் கலைஞர் புறக்கணித்ததும் மாறி மாறி நடந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் நிலைகள் மாறியபோது பிரபாகரனுடனான கலைஞரின் தொடர்புகளோ அல்லது கலைஞருடனான பிரபாகரனின் தொடர்புகளோ நிச்சயம் மறுபரிசீலனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தகவல்கள் இல்லை. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு. பிரபாகரனுக்கு வேண்டியவர்களாக இங்கு இருந்த சில தலைவர்களும் கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அல்லது பிரபாகரன் தரப்பில் வெளிநாடுகளில் இருந்தாவது கலைஞரிடம் ஒரு நல்ல நட்பைப் பேணியிருக்கவேண்டும். அதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து ராஜிவ் காந்தியின் மரணம். குற்றவாளிகள் யாரோ பழி என்னவோ கலைஞர் தலையில் விழுந்தது. தேர்தல் முடிவு என்னவென்றால் 234 தொகுதிகளில் திமுகவுக்கு ஒரேயொரு இடம்.

என்ன செய்யலாம் கருணாநிதி?

ராஜிவ் மரணத்தின் தாக்கமெல்லாம் குறைந்து இலங்கையில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருக்கும் நிலைமைகள் இருந்தபோது மறுபடி கலைஞர் இங்கே ஆட்சிபீடம் ஏறினார். அதன்பிறகாவது பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நல்லதொரு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். அதற்குபதில் அவருக்கும் இவருக்குமான ego clash ஐ உருவாக்கிவிட்டு இரண்டுபேருக்கும் எவ்விதமான புரிதலும் ஏற்படாமல் இங்குள்ள தலைவர்கள் சிலர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து வந்துவிட்டது முள்ளிவாய்க்கால். விளைவுகள் இத்தனை மோசமாக இருக்கும் என்பதை கருணாநிதியே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தம்முடைய கடிதங்களுக்கோ, அல்லது ‘உண்ணாவிரதத்துக்கோ’ மத்திய அரசு செவி சாய்க்கும் என்றுதான் நினைத்தார் அவர். இலங்கை விவகாரத்தில் இவருடைய வார்த்தைகளுக்கு சல்லிக்காசு மரியாதையும் இல்லை என்ற அதிர்ச்சியான பதிலைத்தான் ‘சென்ட்ரல்’ இவருக்குத் தெரிவித்தது. இவர் கையில் இருந்தது ஒரேயொரு அஸ்திரம்தான். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் கோரக்கொடுமைகள் நின்றிருக்குமோ இல்லையோ, இவரது பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அதன் தொடர்ச்சியாக இங்கிருக்கும் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொண்டு தன்னையும் தன்குடும்பத்தையும் படுத்தப்போகும் பாட்டை அவர் யோசித்துப் பார்த்திருக்கவேண்டும். மத்திய அரசுடன் ஒத்துப்போய்விடுவது என்ற தவறான முடிவுக்குத்தான் அவரால் வரமுடிந்தது.

சகோதர யுத்தம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்ற பலவீனமான காரணத்தைச் சொல்லத்தொடங்கினார். முரசொலியை நாள்தவறாமல் அறுபது வருடங்களுக்கும் மேலாகப்படித்துக்கொண்டிருக்கும் கடைநிலை உடன்பிறப்புக்கூட இதை ஒப்புக்கொள்ளமாட்டான் என்று அவருக்கே தெரியும்.

அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ஒருமுறை சொன்னார். “நான் சூழ்நிலைகளின் கைதி” என்று. இன்று அது இவருக்குத்தான் நூறு சதம் பொருந்துகிறது.

இலவசங்கள், இலங்கைப் பிரச்சினைக்கடுத்து குடும்ப ஆதிக்கம் என்ற ஒன்றும் கருணாநிதிக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாம் மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கு அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் எல்லாரும் டீக்கடையோ அல்லது பெட்டிக்கடையோதான் வைத்திருக்கிறார்கள். அசாமிலும் குஜராத்திலும் அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் மூட்டை தூக்கித்தான் பிழைக்கிறார்கள். இங்கே கர்நாடகத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் எல்லோரும் கட்டடம் கட்டும் இடத்தில் கொல்லத்து வேலைதான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, செங்கோட்டையன், பன்னீர்செல்வம், வளர்மதி, மதுசூதனன் இன்னபிறரும் அவர்களது உறவினர்களும் தினக்கூலிக்குத்தான் வேலைப்பார்க்கிறார்கள். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆட்சியை உபயோகித்து கோடிகளில் புரள்கிறார்கள்.....

உண்மை என்னவென்று பார்த்தோமானால் சாதாரண ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் மிகப்பெரிய ‘கல்வித்தந்தைகளாக’ உருமாற்றம் கொண்டது எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் ஏகப்பட்ட கல்வித்தந்தைகள் உருவாகி நாடெங்கும் கல்விக்கோவில்களைப் பெருக்கினார்கள். மணல் ராஜாக்கள் உருவானார்கள். அந்த பிசினஸ் இந்த பிசினஸ் என்று கல்லா கட்டினார்கள். இவையெல்லாம் பொதுமக்களின் விவாதத்திற்கு வராத விஷயங்கள். ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. சினிமா என்பதும் பத்திரிகை என்பதும் சேனல்கள் என்பதும் பொதுமக்களின் கண்முன்னாடியே இருக்கின்ற விஷயங்கள். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனைப்பேரும் இதே தொழிலில் இறங்கியதும், ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகனுடனும் கதாநாயகியுடனும் சேனலில் தோன்றி பேட்டி கொடுத்ததுவும் இன்று இவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறது அவ்வளவுதான்.

மற்றபடி உறவினர்களின் ஆதிக்கம் என்பது என்னதான் இருந்தாலும் வளர்ப்பு மகன் திருமணத்தை மைசூர் தசரா ஊர்வலம் போல் நடத்திக்காட்டினாரே ஜெயலலிதா அப்படியெல்லாம் தறிகெட்டுப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம். (அதிலும் அந்தத் திருமணத்தின்போது உலகப்புகழ்பெற்ற அந்த மகாநடிகன் சிவாஜிகணேசன் எழுந்து நின்று ஜெயலலிதாவைப் பார்த்து முதுகு வளைந்து ஒரு கூழைக்கும்பிடு போடும் போட்டோவைப் பார்த்து-அந்த மனிதனுக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்திய ஜெயலலிதாவை நினைத்து நெஞ்சுபிளக்காத சிவாஜி ரசிகர்கள் இருக்கமுடியாது.)

இப்போது தேர்தல்!

கலைஞரின் தவறுகள் தெரிகின்றன. சரி கலைஞரைத் தோற்கடித்துவிடுவோம். ஆனால் அவருக்குப்பதில் யார்? என்பதைச் சொல்லவேண்டிய கடமையும் கட்டாயமும் இருக்கிறது.
கலைஞரைத் தோற்கடித்த இடத்திற்கு எளிமையும் பண்புமாய் இந்த நாட்களிலும் வலம்வரும் தலைவர் நல்லகண்ணு வருவாரா?

எம்எல்ஏக்களிலேயே இவர்போல் யாரும் இவ்வளவு எளிமையாய் இருந்ததில்லை. சட்டமன்ற விடுதியைக் காலி செய்யும்போது ஒரு காட்டன் பையில் வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் நன்மாறன் என்று இன்னொரு கம்யூ. உறுப்பினரைப்பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அந்த நன்மாறன் வருவாரா?

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை உலகிலுள்ள தொண்ணூறு சதம் தமிழர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரே தமிழகத் தலைவர் ஐயா நெடுமாறன். அந்த நெடுமாறன் வருவாரா?
இல்லை. ஜெயலலிதாதானே வருவார்?

கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப அவர்களின் ஏற்றத்தாழ்வில் பங்கு பெறும் தலைவராக அவர் இருப்பாரா மாட்டாரா என்பதை முடிவு செய்பவர்களாகவே மக்கள் இருக்கவேண்டும். பதினான்கு வயதுமுதல் மக்களோடு மக்களாகவே அவர் இருக்கிறார். ஸ்டாலினும் அழகிரியும்கூட மக்களுக்கு எந்த நேரமும் கிடைக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனைப் படித்துக்கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும், அல்லது இதனை எழுதும் நான் வேண்டுமானாலும் எப்போது நினைத்தாலும் கலைஞரையோ அல்லது ஸ்டாலினையோ அழகிரியையோ, பேராசிரியர் அன்பழகனையோ சென்று சந்தித்துவிட முடியும்.

ஜெயலலிதாவை அப்படிச்சென்று சந்திப்பது சாத்தியமா?

குறைந்தபட்ச மனிதப்பண்புகளோ, தனிமனித நாகரிகமோ அவரிடம் காணக்கிடைக்கிறதா?
மற்ற மக்கள் தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்துப் பேசும் மனப்பான்மை அவரிடம் சாத்தியமா?

சாத்தியமில்லையெனில் அப்படிப்பட்ட ‘மக்கள்தலைவர்’ மக்களுக்கு எதற்கு? அவர்பாட்டுக்கு ராஜவாழ்க்கை வாழ்வதற்கும், அவரது கோபதாபங்களுக்கு ஏற்ப எல்லாரையும் தண்டிப்பதற்கும், பந்தாடுவதற்கும் மட்டுமே முதல்மந்திரி பதவி என்பது ஜனநாயகத்திற்கு இழுக்கு அல்லவா?

எல்லாம் போகட்டும்.. தோல்விக்குப்பின்னர் தன்னுடைய போக்குகளை அவர் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்டிருக்கிறாரா?

வைகோ போன்ற ஒரு தலைவனை அவர் நடத்தியவிதம் அரசியல் பண்புகளுக்கு உகந்ததுதானா? ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவியாகவாவது கடந்த ஐந்தாண்டுகளில் அவர் நடந்துகொண்டிருக்கிறாரா?

நாம் எப்படியாவது ராஜயோக சுபவாழ்க்கை நடத்திக்கொண்டு ஜாலியாக இருப்போம். கொடநாட்டில் குளுகுளு பிரதேசத்தில் மொத்தநாட்களைக் கழிப்போம். சட்டமன்றத்துக்குப் போகவேண்டியதில்லை. மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தவேண்டியதில்லை. தேர்தல் சமயத்தில் சென்னைக்குப்போய் ஒரு பிரச்சாரவண்டியில் ஏறிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடித்து எழுதிவைத்த அட்டைகளை வாசித்துக்காட்டிவிட்டு வந்தோமானால் பதவிக்கு வந்துவிடலாம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ராஜவாழ்க்கை மற்றும் எதிர்த்தவர்களைப் பந்தாடுவதற்கு வாய்ப்பு உறுதி என்று அந்த அம்மையார் நினைத்தால் அது தப்பு என்று உணர்த்தும் கடமை தமிழ்மக்களுக்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை.