Monday, April 15, 2013

பி.பி.ஸ்ரீனிவாஸூடன் ஒரு சந்திப்பு!



பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸை முதன் முதலாக மிக அருகில் பார்க்கநேர்ந்தது அப்போதைய டிரைவ்இன் உட்லாண்ட்ஸில். இப்போது செம்மொழிப் பூங்கா இருக்கும் இடத்தில் இருந்த டிரைவ்இன் உட்லாண்ட்ஸில் திரையுலக நண்பர்கள் சிலருடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த சமயத்தில் உடன் இருந்த நண்பர் ஒரு மரத்தடியைச் சுட்டிக்காட்டி “அதோ அங்கே அமர்ந்து ஏதோ 

எழுதிக்கொண்டிருக்கிறாரே…அவரைத் தெரியுமா?” என்று கேட்டார்.

பார்த்தால் பி.பி.ஸ்ரீனிவாஸ்!

அப்போது தலைப்பாகை இல்லை. எம்ஜிஆர் அணிந்திருந்த  தொப்பி போன்று ஒரு கலர்த்தொப்பி அணிந்திருப்பார்.

“அடட அவரைப் பார்த்துப் பேசணுமே” என்றேன்.

“அதுக்கென்ன எனக்குப் பழக்கம்தான். சாப்பிட்டு முடித்ததும் போய்ப் பேசலாம்” என்றார். சாப்பிட்டு முடித்து நண்பர் தொடர அவரது அருகில் சென்றோம். அவரது அருகில் போய் “சார்……சார்” என்று இரண்டுமுறை அழைத்தார் நண்பர்.

ம்ஹூம். எழுதிக்கொண்டிருந்ததில் இருந்து அவர் தலைநிமிரவே இல்லை. மீண்டும்  குரலைச் செருமிக்கொண்டு கொஞ்சம் சத்தமாக “சார்” என்றார் நண்பர். அப்போதும் ஏறிடவில்லை அவர்.  அந்தப் பக்கமாக வந்த சர்வர் சிரித்துக்கொண்டே “அவர் அப்படித்தான் சார். தீவிரமாக கவிதை ஏதும் எழுதும்போது எத்தனைக்கூப்பிட்டாலும் ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டார். அதை முடித்தபின்தான் நிமிர்வார். கொஞ்ச நேரம் கழிச்சு பேசிப்பாருங்களேன். குழந்தைப் போல பேசிக்கொண்டிருப்பார்” என்றார்.

சரி அவரை அவரது மூடிலிருந்து தொந்தரவு செய்யவேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று கருதி அப்போது வெளியேறிவிட்டோம்.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சியில் பிபிஎஸ்ஸின் நீண்ட பேட்டியொன்று வெளியாயிற்று. பல நினைவலைகளை மிக உற்சாகமாகப்  பகிர்ந்து கொண்ட பேட்டி அது. 

சாகாவரம்பெற்ற  என்றும் இனிக்கும் பல பாடல்களைப் பற்றிய அருமையான நினைவுகளை மிகவும் நெகிழ்ந்துபோய் பகிர்ந்துகொண்டிருந்தார் அவர். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் அவருக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று தோன்றியது. உடனே ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். கடிதம் எழுதினேனே தவிர  அவரிடமிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மகிழ்ச்சியையும் மரியாதையையும் தெரிவிக்கத்தோன்றியதால் ஒரு கடிதம். அவ்வளவுதான்!
கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்றிருக்கும். அலைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண். எடுத்துப் பேசினால் “இஸிட் மிஸ்டர் அமுதவன்?” என்றது குரல். ஆமாம் என்றதும் “நமஸ்காரம். நான் பி.பி,ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகர், சென்னையிலிருந்து பேசறேன்” என்றார். “சார் வணக்கம் சார். 
 கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம்” என்றேன்.
 “அது என்ன சார் அப்படி ஒரு எழுத்து உங்களுக்கு? உங்களுடைய சில கட்டுரைகளை பிலிமாலயாவில் படிச்சிருக்கேன். அப்போதே மிஸ்டர் வல்லபன்ட்டகூடச் சொல்லியிருக்கேன். ரொம்ப நல்ல கட்டுரைகள்னு. ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்களுடைய கடிதம் கிடைச்சது. ஒரு மாசத்துக்கு மேலாகியிருக்கும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் மூணு நாலு தரம் வாசிச்சிட்டேன். என்ன ஆத்மார்த்தமா எழுதியிருக்கீங்க! ரொம்ப அற்புதமான ரைட்டிங். இப்படியெல்லாம் எழுதமுடியாது. ஃபண்டாஸ்டிக்” என்றார்.

“சார் சார் என்ன சார் நீங்க போய் இப்படியெல்லாம் சொல்றீங்க? உங்க பாடல், உங்க குரல் அதனைக் கேட்கும்போது ஏற்படுற அற்புத அனுபவம் இதையெல்லாம் அப்படியே எழுத்தில் சொல்லும்போது அது நன்றாக இருக்கும்போலிருக்கிறது. அந்தக் கடிதம் நன்றாக இருந்தது என்றால் அதற்குக் காரணம் நீங்கதானே தவிர என்னுடைய எழுத்து இல்லை. உங்க பாடல் என்னுடைய மனசில ஏற்படுத்திய தூண்டுதல். அதனை அப்படியே வெளிப்படுத்தியிருந்தேன். அவ்வளவுதான்” என்றேன்.

“இல்லை உங்க கடிதம் இப்பவும் என் கையில்தான் இருக்கு. நாலைந்துமுறை படிச்சிட்டேன். என்னுடைய சந்தோஷத்தையும் நன்றியையும் சொல்றதுக்குத்தான் போன் செய்தேன். புகழ்றது பாராட்டறது எல்லாம் வேற. நிறைய பாராட்டுக்கள் நிறைய புகழ்மாலைகள் எல்லாம் வாங்கியாச்சு. இப்பவெல்லாம் யாராவது பாராட்டினா கூச்சமாத்தான் இருக்கு. ஆனால் சில பாடல்கள் நாம ரொம்ப முயற்சி செய்து சிரமப்பட்டு பாடியிருப்போம். அது ரசிகர்கள் மத்தியில் என்னவிதமான எஃபெக்டை ஏற்படுத்துது என்பதைத் தெரிஞ்சுக்க விரும்புவோம். விரும்பின எஃபெக்டை ஏற்படுத்தினா அந்தக் கலைஞனுக்கு ஒரு ஆத்ம திருப்தி. பல வருஷங்கள் கழிச்சி சுமார் நாற்பது ஐம்பது வருஷங்கள் கழிச்சும் அன்னைக்கு நாம என்ன நினைச்சோமோ அந்த அனுபவத்தை இப்பவும் ஏற்படுத்துது அப்படின்னா அது எப்பேர்பட்ட அனுபவம். எப்பேற்பட்ட சாதனை. அந்த சாதனைகளைச் செய்தவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட மகானுபாவர்கள். எல்லாம் இசையமைப்பாளர்கள்தாம். அந்தப் பெருமை பூராவும் இசையமைப்பாளர்களுக்குத்தான் சேரணும். விஸ்வநாதன் ராமமூர்த்தி, மகாதேவன், ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு, சுதர்ஸனம் என்றெல்லாம் எத்தனை எத்தனை சாதனையாளர்கள். ஏதோ அவங்க கூட எல்லாம் சேர்ந்து பணியாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். அந்தப் பாக்கியத்துனால எனக்கும் சின்னதா ஒரு இடம் கிடைச்சிருக்கு. இதுக்கெல்லாம் ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார்.

சாதாரண விஷயங்களுக்கே அத்தனை அலட்டிக்கொள்கிறவர்கள் இருக்கும் சினிமாத்துறையில் எவ்வளவோ சாதித்திருந்தும் இவ்வளவு பணிவுடன் இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.
பிறகு அவராகவே குடும்பம் தொழில் பிள்ளைகள் என்றெல்லாம் விவரம் கேட்டார். முன்னர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் சந்திக்க நினைத்து முடியாமற்போனதைச் சொன்னபோது “இதுதான் என் செல் நம்பர். குறிச்சுக்கங்க. அடுத்தமுறை சென்னை வந்தால் போன் பண்ணுங்க. நிச்சயம் சந்திப்போம்” என்றார்.

“சந்திக்கலாம் சார். அதே போல நீங்க எப்பவாவது பெங்களூர்ப் பக்கம் வந்தீங்கன்னா தெரியப்படுத்துங்களேன். சந்திப்போம்” என்றேன்.

“அவசியம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இது நடந்து முடிந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் ஆகியிருக்கும். ஒருநாள் காலை சுமார் பத்தரை மணிக்கு அலைபேசி ஒலித்தது. பெயரைப் பதிவு செய்து வைத்திருந்ததால் பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று காட்டிற்று.

ஆச்சரியத்துடன் எடுத்து வணக்கம் சார் என்றேன்.

“நமஸ்காரம். நான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பேசறேன். பெங்களூருக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வந்துருவேன். பெங்களூர்ல எனக்கு ஏதோ ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலைமையில நடக்கப்போகுது. பெங்களூர்ல ஆனந்தராவ் சர்க்கிள்ள இருக்கிற மௌரியா ஓட்டல்லதான் தங்கறேன். சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் நிகழ்ச்சிக்குப் போகணும். நீங்க ஃப்ரீயா இருந்தா ரூமுக்கு வர்றீங்களா? சந்திப்போம். ஒரு மூணு மணிக்கு வந்தீங்கன்னா நாம பேசிட்டிருக்கலாம். தொந்தரவு இல்லைன்னா வாங்க. எதுக்கும் வர்றதுக்கு முன்னால போன் பண்ணிட்டு வாங்க” என்றார்.

தொந்தரவா? இத்தகைய சாதனையாளர்கள் அவர்களாகவே நினைவு வைத்திருந்து இந்த ஊருக்கு வரும்போது சந்திக்க வரச்சொல்லி அவர்களாகவே அழைக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ஒரு மணி அளவில் போன் செய்தபோது “இப்பதான் வந்து சேர்ந்தேன். லஞ்ச் சாப்பிட்டு  ஒருமணி நேரத்துக்கு ரிலாக்ஸ் செய்துக்கறேன். நீங்க மூணுமணிக்கு வந்திருங்க” என்றார்.

பரபரப்புடன் கிளம்பியபோது என்னுடைய மூத்தமகள் “ப்பா பிபிஎஸ்ஸைத்தானே பார்க்கப்போறீங்க? அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய ‘பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்’தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட். அவரைப் பார்க்க நானும் வர்றேன்” என்றாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜர்னலிஸம் முடித்து பெங்களூரின் பெரிய ஆங்கில தினசரியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களில் இத்தனை ஈர்ப்பு என்பது எனக்கே தெரியாத செய்தியாக இருந்தது.

அவளையும் கூட்டிக்கொண்டு ஓட்டலுக்குச் சென்றேன்.

அறைக்குச் சென்று மணியை அழுத்தியதும் அவரது மகன் எழுந்துவந்து கதவைத் திறந்தார். பெயர் சொல்லியதும் சிரித்தபடி “உள்ளே வாங்க” என்றார். நாங்கள் போனபோதும் ஏதோ ஸ்வரங்கள் சொல்வதும் கைவிரல்களால் அவற்றைக் கணக்கிட்டு எழுதிக்கொள்வதுமாக இருந்தார் பிபிஎஸ். எங்களைப் பார்த்ததும் டேபிள் மீது வைத்திருந்த தலைப்பாகையை எடுத்து அணிந்துகொண்டார். பாக்கெட்டில் இருக்கவேண்டிய ஏகப்பட்ட கலர்ப்பேனாக்கள் டேபிள் முழுக்கப் பரவியிருந்தன.
குரலில் முதுமைக் காரணமாக ஒரு தளர்ச்சி வந்துவிட்டிருந்தாலும் மூக்கும் தொண்டையும் கலந்த ஒரு இளமையான இனிமை அப்படியே பாக்கி இருந்தது. தென்னகத்தையே பல வருடங்களாகக் கட்டிப்போட்டிருக்கிற மெல்லிய இளமையல்லவா அது!

காலங்களில் அவள் வசந்தம் பாடலில் ஆரம்பித்து பாடாத பாட்டெல்லாம், இந்த மன்றத்தில் ஓடிவரும், இளமைக் கொலுவிருக்கும், மனிதனென்பவன் தெய்வமாகலாம், நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், நிலவே என்னிடம் நெருங்காதே, மௌனமே பார்வையால், மாலையில் மலர்ச்சோலையில், கண்படுமே பிறர் கண்படுமே, கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே என்று நினைவுவந்த பல பாடல்கள் பற்றியும் நினைவுபடுத்தியபோது அந்தப் பாடல்களைப் பாட நேர்ந்த சம்பவம், இசையமைத்த விஷயங்கள், பாடல் எழுதிய தருணம் என்று ஏதாவது ஒன்றை நினைவுகூர்ந்து அந்தந்த வரிகளை மிக மெதுவாகப் பாடிக்காட்டினார். தென்னங்கீற்று ஊஞ்சலிலே என்று அடுத்த பாடலைச் சொல்வதற்காக நான் மெதுவாகப் பாடியபோது அவரும் கூடச்சேர்ந்து பாடியது என்னைப் பரவசமடைய வைத்தது. அதற்குப்பின் நிறையப் பாடல்களை என்னுடன் அவரும் அவருடன் நானுமாகப் பாடியதை அவர் அனுமதித்தார் என்பது இப்போதும் நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.

“இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தப் பாடல்களெல்லாம் எப்படி சிரஞ்சீவியாய் இருக்கின்றன” என்று நான் வியந்தபோது அவர் மிகச் சுலபமாக அதற்கான பதிலைச் சொன்னார்.

 “வேறொண்ணுமில்லை. பாடும்போது கேட்பவர்களின் காதுகளைப் போய்ச் சேரணும்னு நினைச்சுப் பாடாம உள்ளத்தைத் தொடணும்னு நினைச்சுப் பாடினோம்னா போதும். சரியா வந்துரும்” 



காக்கிநாடாவிலிருந்து கிளம்பி வந்ததையும் தம்முடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பின்னணிப் பாடகராக வரமுடியாது ஜாதகத்தில் இடமில்லை என்று சொன்ன ஜோஸ்யரின் வார்த்தையைப் பொய்யாக்கியதையும் (என்னுடைய மகளைப் பார்த்து-“இதபாரும்மா உனக்குத்தான் சொல்றேன். எதையாவது சாதிக்கணும்னு இறங்கினா அதைச் சாதிக்கிறவரைக்கும் ஓயாதே. சும்மா ஜோஸ்யன் சொன்னான் ஜாதகம் சொல்லுதுன்னு என்ன சொன்னாலும் முயற்சியை மட்டும் விட்டுராதே”) தெலுங்கிலும் கன்னடத்திலும் கண்டசாலா உச்சத்தில் இருந்தபோது இரு பட உலகிலும் நுழைந்து தன்னுடைய குரலால் தெலுங்கையும் கன்னடத்தையும் வசப்படுத்தியதையும் நினைவுபடுத்திப் பேசினார்.

“ஏ.எம்.ராஜாவுக்கு மாற்றாகத்தானே உங்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி கொண்டுவந்தார்கள்?” என்று கேட்டபோது-

“ஏ.எம்.ராஜா மிகச்சிறந்த பாடகர். அவருடைய பாடும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். ஒரு புதுப்பாடகரைக் கொண்டுவருவதற்கும் அவர்களைப் பிரபலப் படுத்துவதற்கும் ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இதெல்லாம் தொடர்ச்சியாக நடந்துவருபவைதான். என்னுடைய இடத்துக்கு எஸ்பிபியைக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒண்ணும் ஆச்சரியமில்லை. நான் பிபிஎஸ். அவர் எஸ்பிபி. என்னுடைய இனிஷயலை மாற்றிப்போட்டால் அவர். அவ்வளவுதான்.

என்னுடைய இடத்துக்கு மட்டுமல்ல; டிஎம்எஸ் இடத்துக்கும் அவரை வைத்துத்தான் நிரப்பினார்கள். இதெல்லாம் திரையுலகில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒன்றுதான். என்ன விஷயம்னா ஆண்டவன் யார்யாருக்கு என்னென்ன பொறுப்பு கொடுத்திருக்கானோ அதனை சின்சியராச் செய்துவந்தால் போதும். நான் அப்படித்தான் என்னுடைய செயல்களைச் செய்துவந்தேன். அதனாலதான் உச்சத்தில் இருந்தபோது எனக்கு எந்தவிதமான தலைக்கனமும் வரலை. அதேபோல என்னுடைய இடத்துக்கு மத்தவங்க வந்தபோது கவலையோ வருத்தமோ வரலை. ‘அது நமக்கானது; இது அவங்களுக்கானது’ என்று ஏத்துக்கற பக்குவம் இருந்தது. உச்சத்துல இருக்கும்போது ‘நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்’னு கண்ணதாசன் சொன்னாரே அதை நினைவு வச்சிருந்தால் போதும்”

அவருடைய இந்தக் குணம் ரொம்பவும் அபூர்வமானதாக இருந்தது. பிரபலமாயிருந்து இப்போது ஓய்வுபெற்ற பல கலைஞர்கள் ஒருவித வயிற்றெரிச்சலுடன்தான் இருப்பார்கள். இப்போது இருக்கும் கலைஞர்களெல்லாம் தங்களுக்கு இணையானவர்கள் இல்லை என்பதுபோல்தான் பேசுவார்கள். ‘என்ன இருந்தாலும் எங்களுடைய காலம்போல் வருமா?’ என்பார்கள். அதில் உள்ள உண்மையைத் தாண்டி கோபமும் பொறாமையும்தான் மிகுதியாக இருக்கும்.

இவர் பேசிய ‘அந்தக் காலத்தைப் போல் வருமா?’ பேச்சு அந்த ரகம் இல்லை. சரியான மதிப்பீடு. சரியான அளவீடு. ‘அன்றைய டெடிகேஷன் இன்றைக்கு இல்லை. அது வராது. காரணம் காலமாற்றம். இப்போது யாருக்கும் எதற்கும் நேரமில்லை. முன்னைப்போல் ஒரு பாட்டுக்குப் பத்து நாட்கள் பதினைந்து நாட்கள் செலவழிக்க யாரும் தயாரில்லை. இன்றைய பட்ஜெட்டும் அதற்கு இடம் கொடுக்காது. வாத்தியங்களே இல்லாமல் வாத்தியக்கலைஞர்களே இல்லாமல் பாட்டு ரிகார்டிங் பண்ணுகிற காலம் இது. அதற்கேற்பத்தானே எல்லாம் இருக்கும்” என்று சிரித்தார்.

அவரது பாடல்களின் வெற்றிக்குக் காரணமாக விஸ்வநாதன் ராமமூர்த்தியையும், 
 விஸ்வநாதனையும், “மாமா” கே.வி.மகாதேவனையும் மற்ற இசையமைப்பாளர்களையும் சொன்னாலும் “உங்கள் பாடல்களின் வெற்றிக்குக் காரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பை விடவும் நீங்கள் பாடும்போது இயல்பாக வெளிப்படுத்தும் சின்னஞ்சிறு நுணுக்கங்கள். இதயத்தை மயிலிறகால் வருடுவது போன்று வெளிப்படுத்தும் மென்மையான உணர்வுகள். ஸ்டைல் என்ற பெயரில் போலித்தனம் எதுவும் காட்டாமல் ராகத்தின் போக்கிலிருந்து சிறிதும் மாறாமல் அந்தத் தடத்திற்குள்ளேயே நடைபோடுவது; முக்கியமாக நீங்கள் உங்கள் குரலை எந்த இடத்திலும் உதறுவதே இல்லை. ஆற்றொழுக்கு போன்ற மென்மையான நடைதான் உங்கள் ஸ்டைல்.” என்றேன்.

“இருக்கலாம். ஏறக்குறைய இதையேதான் உங்கள் கடிதத்திலும் எழுதியிருந்தீர்கள். என்னுடைய பாட்டில் இயல்பாக வெளிப்படுத்தும் சின்னஞ்சிறு நுணுக்கங்கள் என்று சொல்கிறீர்கள். 
 என்னுடையை பாடல்களை ஒரு முப்பது வருடங்களாக மேடையில் பாடும் பாடகர் ஒருவர் இருக்கிறார்.(அவர் பெயரைச் சொல்கிறார்) ஏறக்குறைய மானசிக குருவாக என்னை ஏற்றவர் அவர். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலை இதுவரைக்கும் ஒரு இரண்டாயிரம் தடவையாவது மேடைகளில் பாடியிருப்பேன். எல்லாம் சரியாக வருகிறது. ஆனால் அந்தப் பாடலில்  ‘நீ’  என்று ஒவ்வொரு முறையும் உச்சரிக்கிறீர்கள் பாருங்கள். அதற்கான பாவம் மட்டும் இதுவரையிலும் ஒருதடவைக்கூட எனக்கு வரமாட்டேனென்கிறது. அந்த ‘நீ’க்கு நீங்கள் கொடுக்கும் feelஐ என்னால் தரமுடியவில்லை என்று சொன்னார் அவர். எல்லாம் ஆண்டவன் கொடுத்தது” என்று மேலே கையைக் காட்டிச் சிலாகித்தார் பிபிஎஸ்.

கண்ணதாசனைப் பற்றிய பேச்சு வந்தபோது நான் அவரிடம் சொன்னேன். “கவிஞர் தமது திரைப்பட வாழ்வில் மூன்று படங்களில் அவரே தோன்றி நடித்து அவரது பாடல்களைப் பாடுகின்ற மாதிரியான காட்சிகள் வருகின்றன. முதல் படம் கறுப்புப்பணம். அந்தப் படத்தில் அவரே தோன்றி ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்று பாடுகிறார். இது சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது; அடுத்த படம் இரத்தத் திலகம். இதில் ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று பாடுகிறார். இது டிஎம்எஸ் பாடியது. மூன்றாவது சூரியகாந்தி படத்தில் ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?” என்று பாடுகிறார். இதுவும் டிஎம்எஸ் பாடியது. ஆனால் இந்த மூன்று பாடல்களில் எதையும் அவர் கலந்துகொள்ளும் இலக்கியக்கூட்டங்களில் பாடியதில்லை. அவர் கலந்துகொள்ளும் எல்லா இலக்கியக்கூட்டங்களிலும் அவரது வேறு இரண்டு பாடல்களை அவரே பாடுவார். அவர் குரல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அந்த இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடி முடிக்கும்போதும் சரி; அந்தப் பாடலிலுள்ள முக்கியமான வரிகள் வரும்போதும் சரி கைத்தட்டல் மண்டபத்தைப் பிய்த்துக்கொண்டு போகும். அந்த இரண்டு பாடல்களும் நீங்கள் பாடியவைதான். தெரியுமா உங்களுக்கு?” என்றேன்.

பிபிஎஸ் பரபரப்பாகிவிட்டார். “அப்படியா அவர் நான் பாடிய பாடல்களை மேடைகளில் பாடினாரா? 
இந்தச் செய்தி இதுவரைக்கும் நான் கேள்விப்படாததாக இருக்கிறதே. இதுவரைக்கும் யாரும் என்னிடம் சொல்லியதே இல்லையே. என்ன பாடல் அவை?” என்றார்.

“ஒரு பாடல்- ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வரத் துடித்தேன் உனைத்தேன் எனநான் நினைத்தேன்’. இரண்டாவது பாடல் ‘எந்த ஊர் என்றவனே அந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?”

உடனே பழைய நினைவுகளில் மூழ்கி அந்தப் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்தார் அவர். “இரண்டும் என்ன அற்புதமான பாடல்கள் சார்; இப்படியெல்லாம் திரைப்படங்களுக்குள்ளும் எழுத முடியும் என்பதை நிரூபித்தவர் கண்ணதாசன் ஒருவர்தான். இத்தனைக் கவிஞர்கள் இருந்தபோதும் கண்ணதாசனுக்கு மட்டும் தனியான இடம் எதுக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்”
“பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அவர் ஒருவர்தான் பாடல் எழுதியிருக்கிறார்” என்றேன்.

“ஆமாமா அது நிஜம்தான். ஆனா இத்தனைப் பெரிய எக்ஸ்பிளனேஷன் தேவையில்லை. சுருக்கமாய்ச் சொல்லிவிடலாம். கவிஞர்களில் அவர் ஒரு மகான். அதனால அவர் விசேஷமானவர்.” என்றார் பிபிஎஸ் மிகச்சுலபமாக.

இம்மாதிரியான தீர்க்கமான, ஆனால் சுலபமான நிறைய ‘முடிவுகள்’ அவரிடம் இருந்தன.
எஸ்பிபியைப் பற்றி எப்படி அவருக்குள் மிக மேலான அபிப்பிராயம் இருந்ததோ அதே போன்று இளையராஜா குறித்தும் ஏ.ஆர்.ரகுமான் குறித்தும்கூட மிகமிக நல்ல அபிப்பிராயங்களே அவரிடம் இருந்தன. அனைவரிடமும் உள்ள சிறப்பான அம்சங்களை மட்டுமே மனதிற்குள் தேக்கி வைத்திருந்தவர் அவர்.

கன்னடத்தில் நம்பர் ஒன் பாடகராக இருந்த இவர் தமது படங்களுக்கான அத்தனைப் பாடல்களையும் ராஜ்குமாரே பாட ஆரம்பித்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஓரம் கட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். அந்த வருத்தம்கூட இவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை ராஜ்குமாரைப் பற்றிச் சொன்னதிலிருந்து உணர முடிந்தது.. “ஒரு ஃபங்ஷனில் ராஜ்குமார் முன்னாடியே போய் உட்கார்ந்துட்டார். நான் கொஞ்சம் லேட்டாகப் போனேன். நான் உள்ளே நடந்து வருவதைப் பார்த்து ராஜ்குமார் கமெண்ட் அடித்தார். ”இதோ பாருங்கள் ராஜ்குமாரின் சரீரம் இங்கே உட்கார்ந்திருக்கிறது. சாரீரம் அங்கே நடந்து வருகிறது. இப்படி அவரே சொன்னார் பாருங்க. அது ஒண்ணே போதும் இல்லையா”

ஐந்து மணி ஆனதும் “சார் உங்க நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்பறேன்” என்றேன்.

“இல்லை. ஏழு மணிக்குத்தான் நிகழ்ச்சி. என்னைக் கூட்டிப்போக ஆறரை மணிக்கு வருவார்கள். அவர்கள் வரும்வரைக்கும் நீங்கள் இருக்கலாம்” என்றார்.

விஸ்வநாதனைப் பற்றிய பேச்சு வந்தபோது “விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒண்ணா இருந்தபோதும் சரி விஸ்வநாதன் தனியாப் போனபோதும் சரி மெலடியில் அவங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. மெல்லிசை மன்னர்கள், சக்ரவர்த்திகள் எல்லாம் அவங்கதான். ஆனால் கே.வி.மகாதேவன் திறமையையும் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. ஒரு சம்பவம் சொல்றேன் பாருங்க. இதுவரை பத்திரிகை எதுக்கும் இதைச் சொன்னதில்லை. எந்த பத்திரிகையிலும் வந்ததில்லை.
ஒரு பாட்டு ரிகார்டிங் பண்ணவேண்டி கூப்பிட்டுருந்தாங்க. காலையிலேயே போயிட்டேன். மகாதேவன் இசைக்குழுவினருடன் உட்கார்ந்திருக்கார். பக்கத்துல அவரது உதவியாளர் புகழேந்தி உட்கார்ந்திருக்கார். டைரக்டர் தயாரிப்பாளர் எல்லாம் வந்துட்டாங்க. கவிஞர்
மட்டும் வரலை. அப்புறம் கேட்டா ஏதோ பெரிய புரொடக்ஷன். பெரிய பேனர். சிவாஜியோ எம்ஜிஆருடையதோ படம். அதுக்கு எழுத அவரைக் கூட்டிப் போயிட்டாங்க. விஸ்வநாதன் இசையமைப்புல பாடல் பதிவு. அங்கே போயிட்டார். அவர் வரமாட்டார்னு சொன்னாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய ஏமாற்றமாயிருச்சி.
என்ன பண்றதுன்னு தெரியலை.

இங்கே ரிகார்டிங்கிற்கு எல்லாம் எல்லா ஏற்பாடும் செய்தாச்சு. பாடல் எழுதப்பட்டு பிராக்டிஸ் முடிஞ்சு இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள பதிவாகிடணும்.  கவிஞர் இல்லாட்டா என்ன பண்றது? வாலியையோ ஆலங்குடி சோமுவையோ கூப்பிட்டு எழுதவைக்கலாம்னு முடிவு பண்ணாங்க. டைரக்டரும் தயாரிப்பாளரும் ஒத்துக்க மாட்டேன்றாங்க.

“இந்தப் பாடலை யாரையாவது வைத்து எழுதிக்கொள்ளலாம். அடுத்த படத்துக்கு கவிஞரைக் கூப்பிட்டுக்கலாம்” என்று கேவிஎம்மும் சொல்லிட்டார்.

ஆனா டைரக்டர் கவிஞர்தான் எழுதணும்னு பிடிவாதமாச் சொல்றார்.

“அப்ப வேற ஒண்ணும் பண்றதுக்கில்லை. இன்னைக்கு எல்லாத்தையும் கேன்சல் செய்துட்டு நாளைக்கு எப்படியாவது கவிஞரைக் கூட்டிவந்து எழுதவைக்கலாம்” என்றார் கேவிஎம்.

“இல்லை இன்னைக்கே முடிச்சாகணும். எங்களுக்கு ஒரு அரைமணிநேரம் டைம் கொடுங்க. நாங்க போய் கவிஞரைச் சந்தித்து பாடல் எழுதி வாங்கிட்டு வந்துர்றோம்” என்று சொல்லி தயாரிப்பாளரும் இயக்குநரும் கிளம்பினார்கள்.

எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘இன்னொரு கம்பெனிக்கு அதுவும் பெரிய பேனர் கம்பெனிக்குப் பாடல் எழுத உட்கார்ந்திருக்கும் அவரிடமிருந்து எப்படி இவங்க பாட்டெழுதி வாங்கிட்டு வரப்போறாங்க? மகாதேவன் இங்கிருக்கார். என்ன செய்யப் போறாங்க அவங்க’ என்ற எண்ணம் எங்களுக்கு எழுந்தது. சரி என்னதான் ஆகிறது பார்க்கலாம் என்றபடி உட்கார்ந்திருந்தோம்.
அங்கே போனவர்களுக்கு எப்படி காரியத்தை முடிக்கப்போகிறோம் என்ற பரிதவிப்பு. பார்த்தால் முழுமையான அளவில் சபை கூடியிருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர், வாத்தியக்காரர்கள் இசையமைப்பாளர்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கிறார் கவிஞர். இவர்களில் ஒருவர் தைரியமாக கவிஞரிடம் போய் “அண்ணே ரொம்ப அவசரமான விஷயம் ஒண்ணு பேசணும். ஒரு ரெண்டு நிமிடம் இப்படி வரமுடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

கவிஞரும் என்னவோ ஏதோ என்ற பரபரப்பில் எழுந்து வெளியே வந்திருக்கிறார். சற்றே ஒதுக்குப்புறமாக அவரைக்கூட்டி வந்திருக்கிறார்கள். விஷயத்தை அவசரமாகச் சொல்லி பணத்தை அவரது கையில் திணித்து “நீங்க மறுக்கவே கூடாது. அங்கே எல்லாருமே உங்களுக்காக வெயிட்டிங். நின்றபடியே நீங்க பாடலைச் சொல்லிடுங்க. இதோ பேப்பர் பேனாவெல்லாம் தயாரா கொண்டுவந்திருக்கேன். மளமளன்னு எழுதிப்பேன். ஐந்து நிமிஷம் போதும். காதலியைப் பார்த்து காதலன் பாடுகின்ற பாட்டுதான். மாமாதான் இசை. பாட்டை எழுதி வாங்கி வந்துருங்க. மெட்டுப் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு. ப்ளீஸ், பாட்டுச் சொல்லுங்க நாங்க எழுதிக்கறோம்” என்று கேட்டிருக்கிறார்கள்.

“என்னப்பா விளையாடறீங்களா? இப்படியெல்லாமா பாட்டு எழுதமுடியும்? நாளைக்குக் கண்டிப்பா அங்கே வந்து எழுதித்தர்றேன்” என்று மறுத்திருக்கிறார் கவிஞர்.

இவர்கள் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே கடைசியில் கவிஞர் “சரி எழுதிக்கோ” என்று சொல்லியபடியே மளமளவென்று அங்கு நின்றபடியே பாட்டு வரிகளைச் சொல்ல அவர்களும் எழுதிக்கொண்டனர்.

எல்லாமே பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டன. நன்றி சொல்லிவிட்டு இவர்கள் அவசரமாகக் கிளம்பி எங்களிடம் வந்தனர்.

இங்கே இந்த அறையில் வாசல் பக்கமாகவே நான்தான் முதல் ஆளாக உட்கார்ந்திருந்தேன். வந்ததும் அந்தப் பேப்பரை வாங்கி நான் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தனியே கூப்பிட்டு ஒரு அவசரச் செய்தி சொல்லுகின்ற கேப்பில் ஒருவரால் ஒரு புதிய பாடல் எழுதிக்கொடுத்துவிட்டுப் போகமுடியுமா? என்ன மாதிரியான அசாத்தியக் கவிஞர் அவர்!
இந்தப் பாடலுக்கு என்னமாதிரியான டியூன் போடமுடியும் என்று யோசித்தேன். இப்படியான முயற்சிகள் அவ்வப்போது செய்வதுண்டு. அப்படி ஏதேனும் தோன்றினால் அதனை இசையமைப்பாளரிடமும் சொல்வேன். இந்த ராகத்தில் இந்த சந்தத்தில் போடலாமே என்று ஐடியா சொல்லுவேன். இந்தப் பாடலுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“எங்கே கொடுங்க இப்படி” என்று வாங்கிப் பார்த்தார் புகழேந்தி. சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தவர் என்னமோ டியூன்களை முணுமுணுத்துப் பாடிப்பார்த்தார். ம்ஹூம் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. தலையை உலுக்கிக்கொண்டும் தொடையில் தாளம் தட்டிக்கொண்டும் என்னென்னவோ ராகங்களைப் பாடிப்பார்த்தார். எதுவும் சரிப்படவில்லை.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கேவிமகாதேவன் அங்கிருந்து எழுந்து வந்தார். “என்ன அது? நீங்க மட்டுமே பார்த்துக்கிட்டிருக்கீங்க? என்ன பாட்டு அது?” என்று கேட்டபடியே புகழேந்தியிடமிருந்து பேப்பரை வாங்கியவர் அதில் என்ன எழுதியிருக்கு பல்லவி என்ன சரணம் என்ன என்று எதுவும் படித்துப் பார்க்காமலேயே ‘ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து…..உன் அழகினைப் பாடவா தமிழைக் கேட்டு’ என்று எடுத்த எடுப்பிலேயே பாட ஆரம்பித்துவிட்டார். பாடலைப் படித்துப் பார்க்கவில்லை, அதற்காக யோசிக்கவில்லை, மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவில்லை, ஒரு சில வினாடிகள்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அதாவது என்ன ராகம் அமைக்கலாம் என்று முதல்முறையாகப் படித்துப்பார்ப்பதே மெட்டுப்போட்டுதான் என்றால் அது என்ன அசாத்தியமான திறமை என்று வியப்பில் அதிர்ந்துபோனோம்.

அந்தப் பேப்பரை அப்படியே கொண்டுபோய் தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியிடம் வைத்துக்கொண்டு மொத்த மெட்டையும் பாடிவிட்டு பேப்பரை என்னிடம் நீட்டினார். “இதான் ராகம். மறுபடி பாடறேன். பிடிச்சுக்கங்க” என்று சொல்லிப் பாடிக்காட்ட நான் ஒரு அரைமணி நேரத்தில் தயாராகிவிட்டேன். நாங்கள் நினைத்தபடியே பகலுக்குள் பாடல் ரிகார்டிங் முடிந்துவிட்டது.
இங்கே இந்த இரண்டு விற்பன்னர்களின் திறமைகளையும் யோசித்துப் பாருங்கள். கூப்பிட்டு அவசரப்படுத்தியவுடன் அங்கே நின்றபடியே ஒரு முழு பாட்டையும் ஒரே மூச்சில் எழுதித்தரும் கவிஞர்; அவர் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாரோ அதே அளவு நேரம் எடுத்து அந்தப் பாடலுக்கு மெட்டுப்போடும் இசையமைப்பாளர்……………….

தங்கள் தங்கள் துறையில் இவர்கள் என்னமாதிரியான சாதனையாளர்கள் என்பதை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியம் தாளவில்லை” என்று சிலிர்ப்புடன் அந்த அனுபவத்தைச் சொல்லி முடித்தார் பிபிஎஸ்.

கதவு தட்டப்பட்டது. பிபிஎஸ்ஸை அழைத்துப்போக விழா அமைப்பினர் வந்தனர்.
நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

அதற்குப்பின்னர் இரண்டொருமுறை அலைபேசியில் பேசினேன். இடையில் ஒருநாள் கையில் கட்டுடன் அமர்ந்து தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி தந்துகொண்டிருந்தார். போனில் கேட்டபோது “குளியலறையில் வழுக்கிவிழுந்துவிட்டதாகவும் இப்போது பரவாயில்லை” என்றும் சொன்னார்.

மீண்டும் ஒருமுறை அவர் பெங்களூர் வந்திருக்கிறார் என்பதை செய்தித்தாள் பார்த்து தெரிந்துகொண்டு அவரிடம் பேசியபோது கன்னட இசையமைப்பாளர் ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்குச் செல்வதாகச் சொன்னார். “அடுத்த தடவை வரும்போது எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்” என்றேன்.

“பார்க்கிறேன். முடிந்தால் வருகிறேன். இப்போதைய என்னுடைய உடம்பை வைத்துப் பார்க்கும்போது முடியும்னு தெரியலை” என்றார்.

சில மாதங்களுக்கு முன் போனில் தொடர்பு கொண்டபோது “நீங்க யாரு தெரியலையே” என்றார்.
பெங்களூர் பிலிமாலயா கடிதம் என்றெல்லாம் நினைவுபடுத்தியவுடன் “ஆ…இப்ப நினைவு வந்துருச்சி. சாரி…சாரி….மன்னிக்கணும். ஆனா இப்படித்தான் எல்லாமே மறந்துபோயிருது. அப்பப்ப நினைவு தவறிடுது. ஒண்ணும் ஞாபகத்துல இருக்கறதில்லை” என்றார். அதன்பிறகு அவரை சிரமப்படுத்தவில்லை.

கோடிக்கணக்கானவர்களின் மனதில் மென்மையான குரல் மூலம் மாபெரும் வசந்தத்தை ஏற்படுத்திய ஒரு சகாப்தத்தின் நாயகன் இதோ தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.



எத்தனையோ சாதனைகள் புரிந்திருந்தபோதும் ஒரு சாதாரண ரசிகனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அளவுக்கு இறங்கிவந்து பழகிய அந்தக் கலைஞனின் பாடல்கள் மட்டுமல்ல பேசிய வார்த்தைகளும் இறுதிவரை நினைவிலேயே இருக்கும்.



Sunday, March 31, 2013

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!



பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். தலைமைச் செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.

பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள்  அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை. மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்ல அனுமதி கிடைக்கிறது.

அடுத்தநாள்………. நேற்று தமது காரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர். குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார்.  சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது. குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறு இடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.

இவரும் பயந்துகொண்டே போய்ச் சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன்? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகை காட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லி அவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.

நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

ஒன்று மட்டும் நிச்சயம்.


தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!

Monday, March 18, 2013

ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ஏழு புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று அவர் பாணியில் எல்லாப் புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார் அவர். தப்பித்தவறி ஒரேயொரு புலிக்குட்டிக்காவது தமிழில் பெயர் சூட்டியிருக்கவேண்டாமா? இத்தனைக்கும் அந்தப் புலிகள் அத்தனையும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கிடையில்தானே வாழப்போகின்றன…..! அதைப் பராமரிக்கப்போவதும் தமிழ் ஊழியர்கள்தானே? பின்னே எதற்காக அத்தனைப் புலிகளுக்கும் சமஸ்கிருதப்பெயர்கள்?

வேறொன்றுமில்லை அவர் மனதிலே என்ன இருக்கிறதோ அது வெளியில் வந்திருக்கிறது. உடனே “வீடுகளில் இம்மாதிரி பெயர்கள் வைப்பதில்லையா? நீரஜா என்றும் சதீஷ் என்றும் ஷைலஜா என்றும் பெயர்கள் வைப்பதில்லையா? நீ என்ன தூய தமிழ் ஆதரவாளனா நீ எழுதும் பதிவுகளில் தூய தமிழ்தான் எழுதுகிறாயா, வடமொழி கலந்து எழுதுவதில்லையா?’  என்றெல்லாம் மொக்கை கமெண்டுகளுடன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். தூய தமிழ் எனக்குப் பிடிக்குமே தவிர நான் தூய தமிழில் “மட்டுமே” எழுதுகிறவன் அல்ல. ஆனால் தனிப்பட்ட எனக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் வித்தியாசம் உண்டு. நான் செய்யும் தனிப்பட்ட செய்கைக்கும் ஒரு மாநில முதல்வரின் செயல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு மாநிலத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழியைக் காப்பாற்றுகின்ற, மேலெடுத்துச் செல்லுகின்ற பொறுப்பும் கடமையும் ஒரு முதல்வருக்கு உண்டு.

இந்த விஷயத்தில் இதே இடத்தில் கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்கிற எண்ணத்தைப் புறந்தள்ள இயலவில்லை. ஒரு புலிக்குட்டிக்கு நிச்சயம் பழக்கதோஷத்தில் ‘உதயசூரியன்’ என்றோ அல்லது சூரியன் என்றோ பெயர் வைத்திருப்பார். மற்ற புலிகளுக்கு எல்லாம் மாதவி, பரிதி, எழில், பாண்டியன், செங்குட்டுவன்…என்று இப்படி நிச்சயம் தமிழ்ப்பெயர்களாகத்தான் வைத்திருப்பார். – இந்த எண்ணம் இந்த சிந்தனை அலைகள் நிச்சயம் கலைஞரிடம் இருக்கின்றன. இதுபோன்ற உணர்வுகளோ ‘தமிழ்ச்சிந்தனைகளோ’ ஜெயலலிதாவிடம் இல்லை.

இந்தக் கருத்துக்களைப் பொதுத்தளத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று பார்த்தோமானால் வைக்கக்கூடாது என்றுதான் நிறையப்பேர் அல்லது ஒரு சாரார் விரும்புகிறார்கள்.  ஜெயலலிதா என்றால் எதுவும் விமரிசனமே செய்யக்கூடாது. கருணாநிதி என்றால் எந்த விதத்திலும் அவரை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

கருணாநிதி என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என்பதைச் சொல்லிவிட்டு இப்போது சில சரியான முடிவுகளை எடுத்துச் செயல்பட ஆரம்பித்திருக்கிறார் இது சரியான பாதையாகத்தான் இருக்கிறது என்று எழுதினாலும் அதனை மிக நிர்தாட்சண்யமாக மறுக்கிறார்கள். முரட்டுத்தனமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

‘வைகோவும் சீமானும் இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிற என்னுடைய முந்தைய பதிவில் கருணாநிதி செய்த தவறுகளை வரிசையாகச் சொல்லியிருந்தேன். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் இறுதி நாட்களில் அவர் நடந்துகொண்ட முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதைச் சொல்லிவிட்டு –

நடந்து முடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடு செய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இதையே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று –

என்பதைச் சொல்லி மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட இயக்கங்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே சில நிகழ்வுகளை நிகழ்த்த முடியும். கருணாநிதி அன்றைக்குத் தவறு செய்துவிட்டார் என்பதை மட்டுமே சொல்லி அந்தப் பெரிய இயக்கத்தைப் புறக்கணிக்கவேண்டாம். என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
அதில் இப்படியும் எழுதியிருந்தேன்-

‘அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத்தமிழர்களிடம் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்கமுடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்.’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்வளவும் சொல்லிவிட்டு  அவர் தற்சமயம் மேற்கொண்டுள்ள இப்போதைய செயல்கள் பற்றிக்குறிப்பிட்டு ‘இந்த முறை இவ்வளவு தீவிரமான நிலைப்பாட்டை எடுத்த பின்னர் வேறு காரணங்களுக்காக அவர் மாறுவார் என்று சொல்வதற்கில்லை. அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும் இணைய நண்பர்களுக்கு ஒப்புதல் இல்லை. பெயரில்லாமல் வந்த ஒரு நண்பர் ‘You are a complete DMK supporter. I can”t expect neutral views from your writing. Good luck and Good bye” என்று எழுதியிருந்தார்.

திரு அழகர் ராஜா கோவிந்த் என்ற நண்பர் You are a good writer but its not enough for this generation என்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லிவந்த நான் ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களுக்கு வேண்டுமானால் நான் அரண் அமைத்துக்கொள்ள முடியுமே தவிர கலைஞரைக் காப்பாற்றுவது என்னுடைய வேலை அல்ல; ஒவ்வொருவரும் வண்டி வண்டியாய் அவர் மீது குரோதம் வைத்துக்கொண்டு அதனை வந்து இங்கே கருத்துக்களாகக் கொட்டும்போது  அவருடைய ஆதரவாளர்கள்தாம் அவர்களுடைய தலைவரை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும். நான் என்னுடைய கருத்துக்களை எழுதிவிட்டேனே தவிர அவரை defend பண்ணுவது என்னுடைய வேலை அல்ல.

சில நண்பர்கள் மிக ஆபாசமாகவே கருத்துச் சொல்லியிருந்தார்கள். ஆபாசங்களுக்காக அவற்றை வெளியிடவில்லை.

ஆனால் நான் என்ன சொல்லவந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு நிறையப்பேர் பாராட்டி எழுதியிருந்தார்கள். திரு ராஜநடராஜன், திரு வவ்வால் உட்பட பலர் சரியான தீர்வுகளைச் சொல்லியிருந்தார்கள்.

குறிப்பாக பதிவர் செந்தழல் ரவி சரியான கருத்துக்களை முன்வைத்திருந்தார். ‘திடீர் குபீர் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் அவர்களின் உணர்ச்சிமயமான வார்த்தை மாய்மாலங்களுக்கு மயங்கி அரை மயக்கத்தில் இருந்து கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதைத்தான்……………’ என்று ஆரம்பித்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சிந்தனைக்கு மட்டுமல்ல அதைத்தொடர்ந்த செயல்பாட்டுக்கும் உரியன.

மற்றொரு பெயரில்லாத நண்பர் பிரபாரனின் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய கருணாநிதியின் செயலைக் குறிப்பிட்டு மிகக் கோபமான வார்த்தைகளில் கருத்து தெரிவித்திருந்தார். பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய சம்பவத்தைப்பற்றியெல்லாம் ஏற்கேனவே வேறு பதிவுகளில் எழுதிவிட்டதனால் இங்கே குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்.

ஒன்றுமட்டும் புரிகிறது.

இணையத்தில் ‘நியாய அநியாயங்களுக்கென்று’ தனியான டிக்ஷனரி இருக்கிறது. நடுநிலை என்பதற்கும் தனியான அளவுகோல்கள் உள்ளன.

இங்கே நியாயம் என்பது பிரபலத்துக்குப் பிரபலம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிரபலத்துக்கும் குழுக்கள் இருக்கின்றன. சிலபேருக்கு நிறைய இருக்கிறார்கள். சிலருக்கு மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி இங்கே பேசக்கூடாது. விமரிசிக்கக்கூடாது.

இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் உலகமெலாம் புகழ்பெற்று ஆஸ்கார் வாங்கினபோதிலும் இசை என்றால் இளையராஜாதான் என்பதற்கு மாற்றாக இங்கே பேசக்கூடாது.

தமிழ்ப்பட இயக்குநர்கள் என்றால் ‘கணக்கு’ மணிரத்தினத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதர் பீம்சிங் பாலச்சந்தர் எல்லாம் இயக்குநர்களே இல்லை. வேண்டுமானால் ரொம்ப யோசனைக்குப் பின்னர் பாரதிராஜாவை ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்வோம்.

அதேபோல ஒளிப்பதிவாளர்கள் என்றால் ‘கணக்கு’ ஸ்ரீராமிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வின்சென்ட்டெல்லாம் இங்கே பட்டியலிலேயே இல்லை. (வின்சென்ட் என்பது யார்? கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா?)

தமிழ் எழுத்தாளர்கள் மூன்றுபேர்தான். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன். வேண்டுமானால் ஒரு ஓரத்தில் சுந்தர ராமசாமியைச் சேர்த்துக்கொள்ளலாம்.(அதுகூட காலச்சுவடு பத்திரிகை வந்துகொண்டிருப்பதால்தான். இதில் இன்னொரு வேடிக்கை, காலச்சுவடுக்கென்று ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. அதன்படி தமிழின் படைப்பாளிகள் மூன்று பேர்தாம். 1) பாரதி, 2)புதுமைப்பித்தன், 3)சுந்தர ராமசாமி)

இதுபோல ஒவ்வொரு துறையிலும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே கருத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது வெளிவரும் பத்திரிகைகளும் இதுபோல்தான் இருக்கின்றன. காரணம் என்னவென்றால் இன்றைய இளைஞன் தான்எங்கிருந்து பயணம் தொடங்குகிறானோ அங்கிருந்து மட்டுமே எல்லாவற்றிலும் தன்னுடைய கணக்கைத் தொடங்குகிறான். அதற்கு முந்தைய சாதனையாளர்களை அவன் கணக்கிலேயே வைத்துக்கொள்வதில்லை. இது அவனுடைய ரசனைக்கு வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் இது என்பது அவனுக்குப் புரிவதே இல்லை.

சாதாரணமாகத் தெரிந்திருக்கவேண்டிய குறைந்தபட்ச (அறிவு என்பது பெரிய வார்த்தை) குறிப்புகள்கூட அவனுக்குத் தெரிவதில்லை என்பதை இன்றைய இளைஞர்களிடம் நான்கைந்து பொதுவான கேள்விகள் கேட்டாலேயே தெரிந்துவிடுகிறது. டிவியில் வரும் சில நிகழ்ச்சிகள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. பியூசி படித்த ஒரு மாணவனுக்கு அண்ணா உட்பட நான்கு தலைவர்களின் பெயரைப்போட்டு அதில் காஞ்சிபுரம் யார் பிறந்த ஊர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த இளைஞனுக்கு பதில் தெரியவில்லை. கடைசியில் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம் என்ற விவரத்தைச் சொல்லி அண்ணா யார் தெரியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோது “அவர் பேரைக் கேட்டிருக்கேன். யார்னு தெரியாது” என்று அந்த இளைஞன் சொன்னதை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிறையப்பேர் பார்த்திருக்கக்கூடும்.

 இப்போது வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் சரி, இமான் அண்ணாச்சி(அந்த நிகழ்ச்சியின் தரம் எப்படி என்பது வேறு விஷயம்) நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சரி நம்முடைய தமிழ் இளைஞர்களின் பொது அறிவுக்குறிப்புக்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பொதுவாக இத்தகைய இளைஞர்கள்தாம் இணையங்களில் வலம்வரப்போகிறார்கள். முந்தைய தலைமுறைக்கு இணையத்துடன் தொடர்பு கிடையாது. அப்படியே இருந்தாலும் ‘படிப்பதோடு’ நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் ‘எழுதும்’ ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு சதவிகிதம் இருந்தாலேயே அதிகம். இதனால்தான் இணையம் பயன்படுத்தும் நிறையப்பேருக்கு சிவாஜிகணேசன் என்றால் அவர் வெறும் ஓவர் ஆக்டிங் செய்த ஒரு நடிகர்; கத்திக்கத்திப் பேசிய ஒரு நடிகர் என்பதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

இவர்கள் என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதனை ஒட்டியே எல்லாரும் எழுதவேண்டும். அதனை ஒட்டியே பேச வேண்டும் அதனை ஒட்டியே செயல்பட வேண்டும் என்ற கருத்து மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

தமிழ் வலைப்பூக்களில் திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒரு கருத்து ‘இசை என்றால் இளையராஜா’ என்பது. தமிழ்த்திரை இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது என்றே இவர்களில் இன்னமும் பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் ஒரேயொரு கேள்வியைத்தான் முன்வைத்தேன். அந்தக் கேள்விக்கு இதுவரையிலும் இளையராஜாவின் ரசிகர்கள் யாருமே உரிய பதிலைச் சொல்லவேயில்லை என்பதுதான் பரிதாபம்

நான் வைத்த கேள்வி இதுதான்.
1) 
  தமிழில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள்
2)   பி.சுசீலாவின் பாடல்கள்
3)   கண்ணதாசன் பாடல்கள்
4)   சிவாஜிகணேசன் பாடல்கள்
5)   எம்ஜிஆர் பாடல்கள்
6)   சந்திரபாபு பாடல்கள்
7)   பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்
8)   எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள்
9)   சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
10)  டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்
11)  வாலி பாடல்கள் ……………………இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ………இப்படியெல்லாம் வகைப் பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?
இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், டிஎம்எஸ், பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப்பாடல்?

பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’
-  
  இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி. 
-     
-    இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.

கருத்து எழுதும் பெரும்பாலான இளைஞர்கள் எந்த சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண்டித்தான் இந்த உதாரணத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

நண்பர் மணிசேகர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘உலகத்திலே ஒற்றுமைப் படுத்த முடியாத இனம் தமிழினம்தானா? எத்தனை வேறுபாடுகள் தலைவர்களிடையில்……….?’என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

தலைவர்களை விடுங்கள். இங்கே கருத்துத் தெரிவிப்பவர்களில்தாம் எத்தனை வகை தெரியுமா?

கருணாநிதியை எதிர்ப்பவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், வைகோவை ஆதரிக்கிறவர்கள், சீமானை ஆதரிக்கிறவர்கள், இருவரையும் எதிர்ப்பவர்கள், பிரபாகரனை ஆதரிப்பவர்கள், பிரபாகரனை எதிர்ப்பவர்கள் மேதகு தேசியத்தலைவர் என்று சொல்கிறவர்கள், பிரபாகரனால்தான் இத்தனைப் பெரிய அழிவு பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று சொல்கிறவர்கள்………………எங்கிருந்துவரும் கருத்தொற்றுமை? 


ஒரு விஷயம் தெரியுமா?

ஒரு ஓட்டலுக்கு ஐந்தாறு நண்பர்கள் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். காபியும் டிபனும் தேவை. ஆறு பிளேட் இட்லி. ஆறு காபி. என்று சொல்லிவிடமுடிகிறதா?

ஒருத்தருக்குப் பொங்கல், இன்னொருத்தருக்கு இட்லி வடை, ஒருத்தருக்கு தோசை, மற்றவருக்குப் பூரி கிழங்கு, வேறொருவருக்கு மசால் தோசை, இன்னொருத்தருக்கு வெறும் இட்லி. இதாவது போகட்டும். அவரவருக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளலாம்.

இப்போது காபி முறை. வெறுமனே ஆறு காபி என்று சொல்லமுடிகிறதா என்று பாருங்கள்.

ஒருத்தருக்கு சர்க்கரை இல்லாமல். இன்னொருத்தருக்கு பாதி சர்க்கரை. ஒருத்தருக்கு டிகாக்ஷன் அதிகமாய். மற்றவருக்கு கொஞ்சம் லைட்டாய். இன்னொருத்தருக்கு ஒன் பை டூ. அடுத்தவருக்கு பாலே சேர்க்காமல்……….. ஒரு சாதாரண காபியிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை எங்கிருந்து வரப்போகிறது?

காபிக்கும் மசால்தோசைக்கும் வராவிட்டால் போகிறது. இனப்படுகொலை நடக்கிறது என்னும்போது அதனைத் தடுத்துநிறுத்த எல்லாரும் ஒன்று சேரும் விஷயத்தில்கூடவா கருத்தொற்றுமை ஏற்படக்கூடாது? என்பதுதான் நமது ஆதங்கம்.

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல் இலங்கை விவகாரத்தில் தவறுசெய்யாத தலைவர்கள் கிடையாது. ஒரு பிரபல கவிஞர் சொன்னதுபோல் “ஈழ விவகாரத்தில் எல்லாருடைய கைகளிலும் கறை படிந்துதான் இருக்கிறது”

ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல் ‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி பிரபாகரனை தவறாக வழிநடத்தியது வைகோவின் மிக தவறான சொதப்பல் என்பதை யாரும் பேசினாதாகத் தெரியவில்லையே. இதனை எரிக் சோல்கம்மே சொல்லியிருக்கிறார்’

இவற்றுக்கெல்லாம் பதிலே தேடாமல் வெறும் கருணாநிதியைப் போட்டுத் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டுமே அடையப்போகும்  பலன் என்ன என்பது தெரியவில்லை.
அதே சமயம் ஜெயலலிதாவைப் பாராட்டியும் புகழ்ந்தும் நான் ஏற்கெனவே எழுதியிருக்கும் சில பதிவுகளை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவே தெரியவில்லை. ‘தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா’ என்ற பதிவிலும் இன்னும் சில இடங்களிலும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து எழுதவேண்டும் என்று தோன்றியபோதெல்லாம் புகழ்ந்தும் பாராட்டியும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கவியரசர் கண்ணதாசன் விஷயத்திலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் விஷயத்திலும் கலைஞர் நடந்துகொண்ட விஷயங்களை, தற்காலத் தமிழ் இலக்கியவாதிகள் விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விஷயங்களை எப்போதுமே எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது?

ஈழ மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தலைவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. டெல்லித் தலைவர்களை விட்டுவிட்டுத் தமிழகத் தலைவர்களை எடுத்துக்கொண்டாலும் அனைவருமே கலைஞருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஒற்றைத் தீர்மானத்தில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர அங்கு நடக்கும் அவலத்தைத் தடுக்க எதுவும் சிந்திப்பதுபோல் தெரியவில்லை.

மாணவர்களின் போராட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இதனை யார் எப்போது எப்படி ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.

மாநில அரசும் மத்திய அரசும் இதனை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பார்கள். அதனையும் தாண்டி போராட்டம் தீவிரமானால் இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் முனைவார்கள்.

பாவம் பத்திரிகையாளர்களும் பதிவர்களும்! 


இரு அரசுகளின் இந்தச் செயல்களுக்கு கருணாநிதியைக் குறைசொல்லத்தான் இவர்களால் முடியாது.