Thursday, May 9, 2013

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் – பிஜேபி தோற்றது ஏன்?

                                                                            

 கர்நாடகத் தேர்தல் முடிவுகள் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. ‘மோடி பிரச்சாரத்துக்கு வந்தும் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லையே’ என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்துச்சொல்ல ‘ராகுல் வந்தும் வெற்றிபெற்றிருக்கிறார்களே என்பதுதான் என்னுடைய ஆச்சரியம்’ என்று இல.கணேசன் பளீரென்று திருப்பியடித்ததை ரசிக்கமுடிந்தது.
                                                   
தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு மாநிலத்தை பாரதிய ஜனதா  பிடித்திருந்தது அதனையும் இப்போது இழந்துவிட்டதே என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. பாரதிய ஜனதா இரண்டாவது இடத்திற்குக்கூட வரவில்லை. மூன்றாவது இடமா இரண்டாவது இடமா என்று தீர்மானிக்கமுடியாமல் ஐக்கிய ஜனதா தளத்துடனான சமமான இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இதற்கும் கீழே இருக்கவேண்டியதுதான் 

கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவின் நிலைமை. கட்சிப் பாகுபாடுகளின்படி அரசியல் சிந்தனை ஓட்டம் பரவியிருக்கும் யதார்த்த நிலைமை இதுதான். அப்படியானால் போனமுறை பாரதிய ஜனதா எப்படி ஆட்சியைப் பிடித்தது?

இதுதான் அலசி ஆராயப்படவேண்டிய கேள்வி.

இப்போது அல்ல; எப்போதுமே கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவுக்கான இடம் முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்தான். போன தேர்தலிலும் இப்படித்தான் வந்திருக்கும். கர்நாடகத்தில் வலிமையுள்ள கட்சிகள் என்றால் ஜனதா தளமும் காங்கிரஸூம்தாம். அதுவும் ஜனதா தளத்திற்கான அடித்தளம் இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசரநிலை காலத்தில் போடப்பட்டது. இந்திரா காந்தியின் அவசரநிலைக்காலக் கொடுமைகளை மக்கள் உணர்ந்தார்கள். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பெங்களூர் நகரின் பொதுத்துறை நிறுவனங்களின் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் எமர்ஜென்சி கால கெடுபிடிகளில் வாட்டிவதைக்கப்பட்டதை அனுபவபூர்வமாய் உணர்ந்தார்கள். பெங்களூர் ஜெயிலில் அடைத்துவைக்கப்பட்ட தேசத்தலைவர்களின் துயரங்கள் சிறையைத் தாண்டி அவ்வப்போது கசிந்துகொண்டிருந்தன.

தமிழ்நாட்டில் எமர்ஜென்சியைக் காப்பாற்றிக்கொண்டிருந்த அயோக்கிய ஊடகங்களும் எம்ஜிஆரைப் போன்று ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்த மக்களின் அமோக ஆதரவு பெற்ற அடிவருடித் தலைவர்களும் இங்கு இருக்கவில்லை. தேசம் பூராவும் நடைபெற்ற அட்டூழியங்கள்  உடனுக்குடன் மக்களிடம் பரப்பப்பட்டன. இந்திரா காந்திக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்ற கோபம் மக்களிடம் இருந்தது. அதனால் எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் இங்கே தோற்கடிக்கப்பட்டது. ஹெக்டே போன்ற மக்கள் தலைவர்கள் ஜனதா கட்சியின் மூலம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக உலா வந்தார்கள். ஜனதா கட்சிக்கான அடித்தளம் மிக ஆழமாகவே போடப்பட்டது.

அதுவரை உதிரிக்கட்சிகளாக இருந்த பிரஜா சோஷலிஸ்ட், ஜனசங்கம் இன்னும் நிறையக் கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சி மக்களிடம் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றது. இளைஞர்களிடம் மிகப்பெரும் சக்தியாகவே வளர்ந்தது. ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, ஜே.எச்.பட்டேல், தேவே கௌடா போன்ற தலைவர்கள் மக்களிடம் புகழ்பெற்றவர்களாக வலம்வந்துகொண்டிருந்தனர். முதல்வராக வந்த ஹெக்டே கர்நாடகத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் புகழ் பெற ஆரம்பித்தார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவும் அவருடைய புகழை அதிகரிக்கவே செய்தது.

இந்த நிலையில் கட்சிக்குள்ளேயே குழு மனப்பான்மையை ஆரம்பித்தார் தேவே கௌடா. அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றதும் அடுத்த முதல்வர் என்பது மக்கள் கண்ணோட்டத்தில் ஹெக்டே என்றிருக்க, தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜாதி அரசியலைத் தொடங்கினார் தேவேகௌடா. ஹெக்டே சுயமரியாதைப் பார்க்கிறவர் என்பதால் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றுவது இந்தக் கூட்டத்திற்கு சுலபமானதாக இருந்தது. முதல்வர் தேர்வுக்காக ஹெக்டே வந்தபோது செருப்பால் அடிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளில் ஜனதா பிளவுபடுவது தவிர்க்கமுடியாமல் போயிற்று. ஹெக்டே காலத்திலேயே இரண்டாகப் பிளவுபட்ட ஜனதா அவருடைய மறைவுக்குப்பிறகு முழுக்க முழுக்க தேவேகௌடாவின் கைகளுக்கு முழுவதுமாகப் போய்விட்டது.

ஜனதா கட்சியிலிருந்து தனியே பிரிந்த ஜனசங்கம் பாரதிய ஜனதா என்ற பெயரில் தனியாக எடியூரப்பா தலைமையில் அதுபாட்டுக்கு ஒரு ஓரமாகச் செயல்பட்டுவந்தது. இதற்கிடையில் ஹெக்டேவை ஒழித்துக்கட்டிவிட்டு முதல்வராகப் பதவி வகித்த தேவேகௌடாவுக்கு அதிர்ஷ்ட தேவதை இரு கரங்களை அல்ல, இருநூறு கரங்களை விரித்துவந்து அவரை அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பிரதமர் பதவியில் உட்காரவைத்தது. பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட போதிலும் அவர் கர்நாடக முதலமைச்சர் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்றே பத்திரிகைகள் கார்ட்டூன் போட்டன. ஒரு மேயர் கூட கலந்துகொள்ள மறுக்கும் சாதாரண திறப்பு விழாக்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த தேவேகௌடா கலந்துகொண்டு திறந்துவைத்துக்கொண்டிருந்தார். “சார் எங்க தெருவுல குழாய் கனெக்ஷன் கொடுத்துட்டாங்க. திறப்பு விழாவுக்கு எப்ப வர்றீங்க”” என்ற கார்ட்டூன் ரொம்பவும் பிரபலம்.
தமிழகத்தில் ராமதாசைப் போலவே கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை முழுக்க முழுக்க சாதிக்கட்சியாகத்தான் நடத்துகிறார் தேவேகௌடா. தவிர இந்த மாநிலத்தில் எப்போதுமே அரசியலில் ஜாதிதான் பிரதானம். ஆனால் அது நீறுபூத்த நெருப்பாய்த்தான் இருக்கும். தேவேகௌடா குடும்பம் ஒக்கலிகா என்றால் இன்னொரு பெரிய எண்ணிக்கையில் உள்ள ஜாதி லிங்காயத்துகள். அதனைச் சேர்ந்தவர் எடியூரப்பா. அன்றையிலிருந்து பார்த்தோமானால் நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல், ஜே.எச்.பட்டேல் என்று லிங்காயத்துகளும், ஒக்கலிகரும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள். இரண்டே இரண்டுமுறைதான் இந்தக் கணக்கு மாறியது. ஒருமுறை சஞ்சய் காந்தியின் புண்ணியத்தால் குண்டுராவ் என்ற பிராமணர் ஆட்சிக்கு வந்தார். அடுத்தமுறை மக்கள் எழுச்சி மற்றும் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஹெக்டே என்ற பிராமணர் முதல்வராக வந்தார். பங்காரப்பா போன்ற குருபர்கள் ஆட்சிக்கு வந்ததும் நடந்திருக்கிறது.(இந்தமுறை சித்தராமையா முதல்வராக வருவாரா பார்க்கவேண்டும். இவரும் குருபர்தான், மல்லிகார்ஜூன கார்கே பெயரும் அடிபடுகிறது. இவர் தற்சமயம் டெல்லி மந்திரியாக இருக்கிறார். தலித் என்பதனால் இவர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, சித்தராமையா தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர். தனித்தன்மையுடன் இயங்கக் கூடியவர் என்பதனால் தங்களுக்கு ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கமாட்டார் இவர் என்றும் டெல்லி தலைமை கருதக்கூடும்.)

அடுத்துவந்த தேர்தல் ஹெக்டே இல்லாமல் ஜனதா தளக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபின்னர் வந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளத்திற்குத் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தது. அப்போதுதான் தேவேகௌடா அந்தக் காரியம் செய்தார். வலியப்போய் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கண்டார். அதற்கு முன்பு பாரதிய ஜனதாவில் கட்சிமாறி புகழ் முன்னாள் முதல்வர் பங்காரப்பா போய்ச் சேர்ந்திருந்ததால் பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்திருந்தது. ‘நீயும் நானும் சேர்ந்து ஆட்சி அமைப்போம். இருபது மாதங்கள் நான் ஆட்சி செய்கிறேன். அதற்கடுத்த இருபது மாதங்கள் நீ ஆட்சி செய்’ என்கிறமாதிரியான ஒப்பந்தம் பிஜேபிக்கும் ஜனதா தளத்திற்கும் இடையில் போடப்பட்டது.

தன்னுடைய மகனான எச்.டி.குமாரசாமியை முதல்வராக்கினார் தேவேகௌடா. எச்.டி. குமாரசாமியின் பதவிக்காலம் முடிந்ததும் முறைப்படி பாரதிய ஜனதாவுக்கு,  அதன் தலைவராக இருந்த எடியூரப்பாவுக்கு பதவியை விட்டுக்கொடுத்திருக்கத்தானே வேண்டும்? விட்டுத்தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணினார் குமாரசாமி. (விட்டுத்தந்து விடலாம் என்று குமாரசாமி சொல்லியபோதும் அவரை அப்படிச் செய்யவேண்டாம் என்றவர் தேவேகௌடாதான் என்றும் சொல்கிறார்கள்)

மக்கள் எச்.டி.குமாரசாமியின் மீது கோபம் கொண்டது இப்போதுதான். உண்மையில் குமாரசாமியின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது.  எத்தனை சிறப்புகள் இருந்தபோதும் சொன்ன சொல் தவறுவது நேர்மையோ நியாயமோ அல்ல என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.

இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டவர் எடியூரப்பா. தனக்கு ஒப்பந்தப்படி விட்டுத்தந்திருக்கவேண்டிய ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை இது குமாரசாமியும் ஜனதாதளம் கட்சியும் தனக்குச் செய்த துரோகம் என்பதாக அவர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தது மக்களிடம் மிக நன்றாகவே எடுபட்டது. பாரதிய ஜனதாவுக்கு ஜனதா தளம் விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதையும் தாண்டி, எடியூரப்பாவுக்கு குமாரசாமி விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதாகவே மக்களிடம் அனுதாப அலை உருவானது. 

அந்த அனுதாப அலையை வைத்துக்கொண்டு தேர்தலை பாரதிய ஜனதாவின் கோணத்தில் இல்லாமல் வேறொரு புதிய கோணத்தில் சந்திக்க முடிவு எடுத்தார் எடியூரப்பா. இதற்கு அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அத்தனைப் பணமும் சுரங்கத் தொழில் புரிந்துவந்த ரெட்டி சகோதரர்கள் மூலம் களமிறக்கப்பட்டது.

கோடிகள் கரை புரண்டு ஓடின.

இந்தக் கோடிகளைத் தாண்டி தேவைப்பட்ட இன்னும் பல கோடிகள் குஜராத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் மாதிரி மாநிலமாகவும் இருக்கும் குஜராத்திலிருந்து எப்படி அத்தனைக் கோடிகள் கரைபுரள முடியும்?

அந்த முதலமைச்சர்தான் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மைக்குப் பேர்போனவர் ஆயிற்றே! அங்கிருந்து எப்படி கோடிகள் வரமுடியும்?

தெரியவில்லை. ஆனால் வந்ததாகச் சொன்னார்கள்.

இந்தப் பணத்தில் என்ன நடந்தது தெரியுமா? கர்நாடகம் பூராவும் அங்கங்கே உள்ளூரில் இருந்த ஜனதா தளத்தைச் சேர்ந்த அத்தனைக் “குட்டித்தலைவர்களும்” தொண்டர்களும் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இவர்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு எல்லா ஊர்களிலும் தொண்டர்களும் குட்டித்தலைவர்களும் புதிதாகக் கிடைத்தார்கள். முக்கியமாக குடிசைப் பகுதிகளிலும் சேரிகளிலும் ஜனதா தளம் என்ற போர்டு ‘பாரதிய ஜனதா’ என்று மாற்றப்பட்டது. நெற்கதிர் சுமந்த பெண் மாற்றப்பட்டு தாமரைப்பூப்போட்ட கொடி ஏற்றப்பட்டது.

எதற்கென்றே தெரியாமல் காவி நிறம் தாழ்த்தப்பட்டவர்களின் பிற்படுத்தப்பட்டவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்தது.

பாரதிய ஜனதா கட்சி படித்தவர்களுக்கானது. பிராமணர்களுக்கானது. அறிவு சார்ந்தவர்கள்தான் அந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பார்கள். அந்தக் கட்சி இன்டலக்சுவல்களின் கட்சி. என்றிருந்த நிலைமை அடியோடு மாறிற்று.

படித்த தொண்டர்கள், கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள்தாம் பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடி பிடிப்பார்கள் அவர்கள்தாம் கட்சிக்குத் தேர்தல் வேலைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை தலைகீழாக மாறிப்போய் பாரதிய ஜனதாவுக்குத் தேர்தல் வேலைப்பார்த்தால் பிரியாணி, சாராயம், கையில் சுளையாக இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் என்று பணம் இறைக்கப்பட்டது.

ஜனதா தளத்திலிருந்து புதிதாக வந்த ஐம்பது சதவிகித தொண்டர்களின் துணையுடன் தேர்தலைச் சந்தித்த பாரதிய ஜனதா-

முட்டி மோதி ஆட்சியைப் பிடித்துவிட்டது!


ஓட்டளித்தவர்கள் அத்தனைப்பேரும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், வாழ்க்கையின் கடைநிலையைச் சேர்ந்தவர்கள்………………….. இவர்களுடைய ஓட்டுக்கள் மூலம்தான் பதவிக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் எடியூரப்பா ஒருவர்தான். மற்ற எல்லாத் தலைவர்களுமே பிஜேபி தன்னுடைய கொள்கையைக் கர்நாடகத்தில் வேரூன்றித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றே குருட்டுத்தனமாக நினைத்தனர்.

எடியூரப்பா பாரதிய ஜனதாவின் காவி நிறத்தைக் கூடுமானவரை ஒதுக்கிவைத்துத்தான் ஆட்சி புரிந்தார்.

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மந்திரிசபை அமைப்பதிலிருந்து ஆட்சியின் தினசரி நடவடிக்கைகள் உட்பட தாங்கள் நினைத்தபடிதான் நடக்கவேண்டும் என்று ரெட்டி பிரதர்ஸ் நினைத்தனர்.

இதனை உடைக்கவேண்டும் , ரெட்டி சகோதரர்களிடமிருந்து ரிமோட் கண்ட்ரோலைப் பிடுங்கிவிட வேண்டும் என்று நினைத்தார் எடியூரப்பா.

அடுத்தது, கர்நாடக பாரதிய ஜனதா என்றாலேயே என்னதான் முதல்வர் எடியூரப்பா என்றாலும் பிராமணரான அனந்தகுமார்தான் இங்கே எல்லாம். அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வதைத்தான் டெல்லி கேட்கிறது. அவர் நினைத்தபடிதான் சின்னச்சின்ன அசைவும் நடக்கிறது.  இதிலிருந்து வெளிவர வேண்டும். அனந்தகுமாரின் மேலாதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்றும் முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்தார் எடியூரப்பா.

பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

பாரதிய ஜனதா தலைமைக்கும் எடியூரப்பாவுக்குமான நிழல் யுத்தங்கள் ஆரம்பமாயின. இவர் அவர்களை மாட்டிவிட, அவர்கள் இவரை மாட்டிவிட என்று அசிங்கமான அரசியல் நிகழ்வுகள் நாளும் நடைபெற ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் ஊழல் புரிந்துதான் அரசியல் நடத்துகிறார்கள் என்பதால் இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவர் மாட்டிவிட சுலபமான ஆதாரங்கள் கிடைத்தன.

ரெட்டி சகோதரர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய எடியூரப்பாவின் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. ஈஸ்வரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். மற்ற மந்திரிகள் சட்டமன்றம் நடைபெறும்போதே ப்ளூபிலிம் பார்ப்பது, நர்ஸ் ஒருவருடன் அனிருத் ஆண்ட்ரியா வகையில் முத்தமிட்ட காட்சி லீக் ஆனது என்பதுபோல் பாரதிய ஜனதாவின் புகழைச் செம்மையாக வளர்த்தனர்.

இந்த லட்சணத்தில்தான் பிஜேபி ஆட்சி ஓடிக்கொண்டிருந்தது.

எடியூரப்பாவை விலக்கிவிட்டால் அவர் சும்மா அடங்கிவிடுவார் என்று பிஜேபி மேலிடம் தப்புக்கணக்குப் போட்டது.

எடியூரப்பாவைத் தவிர மக்களிடம் செல்லுபடியாகின்ற தலைவர்கள் பிஜேபியிடம் கிடையாது.
அனந்தகுமார் சாதி ரீதியாக மேலிடத்தின் செல்வாக்குப் பெற்றவர்.

ஈஸ்வரப்பா என்ற தலைவர் ஒருவர் இருக்கிறார். கர்நாடக பிஜேபியில் நேற்றுவரைக்கும் மாநிலத்தலைவராக இருந்தவர் இவர்தான். காடுவெட்டி குரு பேட்டி தந்தால் எப்படியிருக்குமோ அதைவிட மோசமான மொழிநடை இவருடையது. இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுத் தோல்வி அடைந்திருக்கிறார் ஈஸ்வரப்பா. கர்நாடக மக்களில் பெரும்பான்மையோர் மகிழ்ந்தும் சிலாகித்தும் கொண்டாடும் தோல்வி இவருடையதுதான்.

அடுத்த ஒன்றரை வருடத்தில் இரண்டு முதல்வர்கள் வந்தார்கள். உண்மையில் சதானந்த கௌடாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள்தாம். ஓ.பன்னீர்செல்வம் போன்று இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது முதல்வராகக் கொஞ்ச நாட்கள் இருந்தார்கள், அதிர்ஷ்டம் முடிந்தது வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த அரசியல் சூழலில் மறுபடியும் ஒரு தேர்தல் வந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பதை சுலபமாகவே ஊகிக்கமுடியும்.

இந்த நிலையில் எடியூரப்பா புதுக்கட்சி ஆரம்பித்து ஜனதா தளத்திலிருந்து வந்து பிஜேபியில் சேர்ந்திருந்த அத்தனைப் பேரையும் மறுபடியும் தம்முடன் அழைத்துவந்துவிட்டார். ஆக பிஜேபி, தான்இருந்த தன்னுடைய பழைய இடத்திற்கு மீண்டும் போய்விட்டது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கங்களால் பிஜேபி இன்னமும் அதிகமாகத் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருக்கவேண்டும். இன்னமும் பத்து சீட்டுக்களாவது அதிகம் பெற்றிருக்கவேண்டும். அது நடைபெறவில்லை.

பல மாவட்டங்களில் பிஜேபியின் கணக்குக்கு ஒரு சீட்டுக்கூட இல்லை. வெறும் சைபர்தான். குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நான்கு ஐந்து என்று வந்திருப்பதால் நாற்பது இடங்கள். அதிலும் பெங்களூர் நகரில் பன்னிரெண்டு இடங்கள் பிஜேபிக்குக்

கிடைத்திருக்கிறது. காரணம் தமிழர்களின் ஓட்டு.

தமிழர்கள் காங்கிரஸூக்குப் போடாமல் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டி எடுத்த முடிவு. வள்ளுவர் சிலைதிறப்பு போன்ற விவகாரங்களும் பிஜேபிக்கு சாதகமாய் எடுக்கப்பட்டன. வள்ளுவர் சிலை திறந்தது எடியூரப்பாதானே. அவருக்குத்தானே போயிருக்கவேண்டும் தமிழர்கள் ஓட்டு? என்ற கேள்வி வரலாம். பெங்களூரில் இருந்த கணிசமான தமிழ்க் கவுன்சிலர்களின் கட்டுக்கோப்பான செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி இது. நிறைய தமிழ்க் கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள். இதுதான் இப்போதைய தேர்தல் முடிவின் கதை.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் கர்நாடக அரசியலில் மறுபடியும் மாற்றங்கள் வரலாம். எடியூரப்பாவை டெல்லி மேலிடம் மறுபடி ‘தாய்க்கட்சிக்கு’ வரச்சொல்லி அழைப்பு விடுக்கலாம். எடியூரப்பாவும் மூட்டை முடிச்சுக்களுடன் கேஜேபியை மூடிவிட்டு பிஜேபியுடன் போய்ச்சேரலாம்.


அப்படிப்போய்ச் சேர்ந்தாலும் மறுபடியும் சட்டமன்றத் தேர்தல் வரும்போது பாரதிய ஜனதாவுக்கு ஐம்பது இடங்கள் கிடைக்கலாம். குமாரசாமி பரந்த கண்ணோட்டத்துடன் சாமர்த்திய அரசியல் நடத்தினாரென்றால் ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம்.

Friday, May 3, 2013

தமிழ்திரை இசையின் பொற்காலம்




தமிழ்த்திரை இசையின் வணிக விற்பனை இன்றைக்கு எங்கேயோ போயிருக்கிறது. அதனால்தான் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்கு எந்த அளவு விளம்பரங்கள் செய்கிறார்களோ அதற்குச் சிறிதும் குறையாத அளவுக்கு இசை வெளியீட்டிற்கும் விளம்பரங்களும் வித்தியாசமான விழாக்களையும் ஏற்பாடு செய்கிறார்கள்.


இருக்கிற அத்தனைப் பிரபலங்களையும் கலந்துகொள்ளவைத்து இசை வெளியீட்டை எந்த அளவுக்கு முக்கியமானதாகச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு முக்கியமானதாகச் செய்யத் துடிக்கிறது திரையுலகம்.

 ஒரே நாளில் மூன்று பெரிய நகரங்களில் இசை வெளியீடு என்று அறிவித்து தமிழகத்தின் மூன்று பெரிய நகரங்களுக்குப் பறந்து பறந்து சென்று விழாக்களில் கலந்துகொண்டு தம்முடைய படத்தின் பாடல்களை வெளியிட்டார் கமல்ஹாசன்

ஒரே நாளில் நூறு இடங்களில் இசை வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள் ஒரு புதிய படத்தயாரிப்பாளர்கள்

இசை குறுந்தகடுகள் வெளியீட்டையும் தாண்டி பண்பலை வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு, செல்போன்களின் ரிங்டோனுக்கு என்று பலவகைகளிலும் செலவாணியாகிக்கொண்டிருக்கின்றன திரைப்படப்பாடல்கள்.

திரைப்பட பாடல்களை மக்களிடம் ஒரு நீங்காத செல்வமாக பிரிக்க முடியாத உறவாகக் கொண்டுவந்து சேர்த்தவர்களைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டு இன்றைக்கும் நேற்றைக்கும் அதன்மூலம் யார் யார் பலன் பெற்றார்களோ அவர்களை மட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற சமூகமாக இருக்கின்றது இன்றைய உலகம்.

 

இந்தக் களேபரங்களிலிருந்து சற்று பின்னே சென்று இதற்காக உழைத்த, நிலம் வெட்டிச் சீர்படுத்தி விதை விதைத்து வேலிகட்டி அறுவடையும் செய்துகாட்டிவிட்டுப் போனவர்களை- அந்தச் சாதனையாளர்களை நினைவுபடுத்தி அவர்கள் செய்த சாதனைகள் என்னவென்பதை ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அணுகி ஒரு தொடர் பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறார் பதிவர் திரு காரிகன்.

ஏற்கெனவே பல்வேறு இசைகுறித்த பதிவுகள் வரும்போதும் அவற்றில் தவறுகள் இடம்பெறும்போது அதனைச் சுட்டிக்காட்டி அறிவார்ந்த வாதங்கள் புரிந்துவரும் அதே காரிகன் இன்றைக்கு அவருடைய தளத்தில் விருப்பு வெறுப்பற்று தமிழில் பல்வேறு சாதனைகள் புரிந்த இசையமைப்பாளர்கள் பற்றியும் அவர்கள் சாதித்த விவரங்கள் குறித்தும்  வியக்கத்தக்க சான்றுகளுடன் அருமையான பதிவுகள் எழுதி வருகிறார்.

இன்றைக்கு அவர் எழுதியிருக்கும் இந்தப் பதிவு தமிழ் இணையத்தில் நான் படித்த மிக முக்கியமான பதிவுகளில் ஒன்று.

தமிழ்த்திரை இசையை வளர்த்தவர்கள் நிறையப்பேர் என்றாலும் அதனை இன்றைக்கு இருக்கும் நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள். இணையத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்று பார்க்கும்போது இவர்களைப் பற்றிய மிகமிக முழுமையான பதிவு என்று இதனைச் சொல்லலாம். எத்தனை முழுமையாகச் சொல்லப்போனாலும் சில விஷயங்கள் விடுபட்டுப்போகும். அப்படி விடுபட்டுப்போன இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்றைக்கு இளையராஜா கானடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சென்று இசைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டிருக்கிறாரே, ஏ.ஆர்.ரகுமான் உலகமெல்லாம் சென்று இசைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டிருக்கிறாரே, இன்னிசைப் பறவைகள் என்றும் அபஸ்வரங்கள் என்றும் மெல்லிசை மெலடி என்றும் இன்னமும் என்னென்னவோ பெயர்களில் அங்கங்கே ஆர்க்கெஸ்டிராக்கள் வைத்துக்கொண்டு மக்கள் முன்னிலையில் மேடைகள் அமைத்து இசைக்கச்சேரிகளை பலரும் நடத்திக்கொண்டிருக்கிறார்களே அதனை முதன்முதலாக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தாம். இன்னிசைக் கச்சேரிகளை மக்கள்முன் கொண்டுவந்து நட்சத்திரப் பாடகர்களைக் கூட்டிவந்து மேடையிலேயே பாடவைத்தவர்கள் இவர்கள்தாம்.

தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தது மட்டுமின்றி பம்பாய்க்கும் (இன்றைய மும்பை) சென்று இன்னிசைக் கச்சேரிகளை நடத்தினார்கள். அப்படி நடத்தப்பட்ட ஆர்க்கெஸ்ட்ராக்களுக்கு அன்றைய இந்திப்படவுலகின் உச்ச நட்சத்திரங்களும் இசையுலகின் மகாமேதைகளும் வந்திருக்கிறார்கள். தாம் வந்தது மட்டுமின்றி தமக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றைப் பாடவேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி மேடைக்குக் கொடுத்தனுப்பியர் இசையமைப்பாளர்களில் மாமுனி என்றழைக்கப்படும் நௌஷத்.

உலகப்புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் தமக்குப் பிடித்த பாடல் என்று பலமுறை மீடியாக்களில் சொல்லியிருக்கும் பாடல் ‘அத்தான் என்அத்தான்’
இன்னமும் நிறைய எழுதவேண்டியிருக்கிறது. பிறிதொரு சமயம் எழுதலாம்.
இப்போதைக்கு தமிழ் திரைஇசைப் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகளில் ஒன்று இது. உங்களுக்காக இதனை இங்கே சிபாரிசு செய்கிறேன்.




http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/