சோவைப் பொறுத்தவரை அவருடைய
அரசியல், மொழி, இலக்கியம், இனம், சமூக நலன், இட ஒதுக்கீடு சார்ந்த கருத்துக்களில் நமக்கு
உடன்பாடு இல்லையே தவிர வேறு பல்வேறு விஷயங்கள் சார்ந்த கருத்துக்களில் உடன்பாடு உண்டு.
பொதுவாக சினிமாவைப் பற்றிய அவரது பல்வேறு கருத்துக்கள் ஒப்புக்கொள்ளுகிற மாதிரிதான்
இருக்கும்.
அவரது பழகும் சுபாவம் ஒரு
ஆச்சரியம். அவருடைய கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் நேர் விரோதமான கொள்கை கொண்டவர்களுடனும்
அதுபற்றிய எந்தவித விரோதமும் பாராட்டாமல் அவர் பாட்டுக்குக் கலகலப்பாகப் பழகுவார்.
எவ்வளவு தீவிரமான கருத்தோட்டம் கொண்டவர்களுடனும் ‘தன்னுடைய கருத்துக்கு ஒத்துவராதவராயிற்றே
இவர், இவரிடம் எப்படிப் பேசுவது?’ என்பது போன்ற சங்கோஜங்கள் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எந்த விஷயம் வேண்டுமானாலும் அவரிடம் பேச முடியும். தமக்குப் பிடிக்கவில்லையென்றால்
தமது கருத்தை முகத்திலடித்தமாதிரி சொல்லிவிடுவார். நாம் மறுத்துப் பேசினால் அவரும்
விவாதிப்பாரே தவிர அதற்காக நம்மீது விரோதம் பாராட்ட மாட்டார். இத்தகைய சுபாவம் கொண்டவராக
இருப்பதனால்தான் அவரால் பொதுவாழ்க்கையில் ஐம்பது வருடங்கள் தாண்டியபிறகும் இன்னமும்
நிலைத்து நிற்க முடிகிறது. ‘பார்மகளே பார்’ படம் வந்ததிலிருந்து இதுவரைக்கும் புகழுடன்
இருக்க முடிகிறது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்தபோதிலும் இன்னமும் அரசியல் பத்திரிகையான
துக்ளக்கைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க முடிகிறது.
தலைவர் காமராஜர் போன்றவர்கள்
எல்லாம் ஒரு மனிதரை அருகில் சேர்க்கிறார்கள் என்றால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம்
இல்லை. ஒரே பார்வையிலேயே ஒரு மனிதரை எடைபோட்டுவிடும் வல்லமை காமராஜருக்கு உண்டு. காமராஜருடன்
மிக நெருங்கிய நட்பைப் பேணியவர் சோ. இதே கருத்தை மொரார்ஜி விஷயத்திலும் சொல்லலாம்.
திரையுலகில் சிவாஜியுடனும்
எம்ஜிஆருடனும் ஒரே சமயத்தில் சோவால் பழக முடிந்தது. இருவருடனும் சேர்ந்து படங்களில்
நடிக்க முடிந்தது. இருவருக்கும் எதிரான கருத்துக்களை அவர்களிடமே பேசிக்கொண்டு, அவர்கள்
சார்ந்த கட்சிகளை அவர்களிடமே கிண்டல் செய்துகொண்டெல்லாம் இருந்தவர் சோ. இருவரும் இவரது
பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிரித்துவிட்டு விட்டுவிடுவார்கள். எம்ஜிஆர்
மட்டும்தான் கட்சி தொடங்கிய சமயத்தில் இவர் கருத்துக்களுக்காக இவர் மீது கோபம் கொண்டவர்.
ஆனாலும் அது அரசியல் சார்ந்த ஒன்றே தவிர தனிப்பட்ட முறையில் எப்போதும் போல அதே நட்புடன்தான்
எம்ஜிஆருடனும் பழகி வந்திருக்கிறார்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்
மிகமிக முரட்டுத்தனமான வாதங்களை வைக்கக்கூடியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரிடமும்
நெருங்கிய நட்புடன் இருப்பவர் சோ. ஜெயகாந்தனைத் தமது பத்திரிகையில் தொடர்ந்து எழுதச்செய்தவர்.
சுஜாதா உச்சத்தில் இருந்தபோது “சுஜாதா எழுத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
என்று ஒருமுறை சோவிடம் கேட்டேன்.
“ஒண்ணு சொல்லட்டுமா? இப்போ
எல்லாப் பத்திரிகைகளிலும் பிரபலமா எழுதிட்டிருக்கவர் சுஜாதா. அவர் எப்படி எழுதுகிறார்
என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவருடைய சில எழுத்துக்களைப் படிச்சிருக்கேனே தவிர தொடர்ந்து
படிப்பதில்லை. இவர்னு இல்லை. எந்த எழுத்தாளருடைய எழுத்தையுமே முழுமையாகப் படிப்பதில்லை.
இதை ஒரு குறைன்னு நினைச்சா நினைச்சுக்கங்க. அதான் என்னுடைய சுபாவம். இப்பவும் எனக்குப்
பிடிச்ச எழுத்தாளர் கல்கிதான். படிக்கணும்னு தோணுச்சின்னா என்னுடைய டேஸ்ட்டே வேற. நான்
பாட்டுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசங்க பக்கம் போயிருவேன். நவீன எழுத்துக்கள்
என்னைக் கவர்வதில்லை. ஜெயகாந்தன் பூராவும் படிச்சிருக்கேன். அகிலன் நாபா எல்லாம்கூடப்
படிச்சிருக்கேன். பாரதி, கண்ணதாசன் படிச்சிருக்கேன். கண்ணதாசனை ரொம்பவும் பிடிக்கும்.
உரைநடைன்னு பார்த்தால் கல்கிதான். இப்பவும் தோணுச்சின்னா பொன்னியின் செல்வன் வேணும்னா
படிக்க ஆரம்பிச்சிருவேன்” என்றார்.
சோவின் தீவிரமான அரசியல்
கருத்துக்களில் பலருக்கு உடன்பாடில்லை. அதற்காக நிறையப் பேருடைய எதிர்ப்பைச் சேர்த்து
வைத்திருப்பவர்தான் சோ. கலைஞருக்கு சோ எந்த அளவு அரசியல் எதிரி என்பது எல்லாருக்கும்
தெரிந்ததுதான். அவ்வளவு மோசமாக கலைஞரை விமர்சித்து எழுதுபவர். ஜெயலலிதாவின் அதி தீவிர
விசுவாசி. சென்னையில் நடந்த ஒரு பெரிய திருமணத்திற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர்
வந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சோ சட்டென்று எழுந்தார். மடமடவென்று
கலைஞரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்தார். மறுகணம்
கலைஞர் குலுங்கிச் சிரித்தபடி பதிலுக்கு அவரும் ஏதோ இவரிடம் சொல்லிவிட்டுச் சிரிக்க……
நிறைய காமிராக்கள் இந்தப் படங்களை உள்வாங்கிக்கொண்டன. மொத்த விருந்தினர்கள் இந்தக்
காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எவ்வளவு தீவிரமான அரசியல் எதிர்ப்பு கொண்டிருந்தபோதும்
தனிப்பட்ட முறையில் எப்படிப் பழகுவது என்ற கலை சோவுக்கு அத்துப்படி.
எந்த நாளிலும் எந்த நேரத்திலும்
நகைச்சுவையுடனேயே பேசும் திறமை எல்லாருக்கும் வந்துவிடாது. சோவின் கேள்வி பதில்களில்
இரண்டு பதில்களை மறக்க முடியாது. ஒரு முறை துக்ளக் கேள்விபதிலில் ஒரு வாசகர் ‘மழை ஏன்
சோவென்று பெய்கிறது?’ என்று கேட்டிருந்தார். அவரது பெயர் காட்டான் புதூர் மாணிக்கமோ
என்னவோ. ‘பின்னே என்ன காட்டான்புதூர் மாணிக்கம் என்றா பெய்யும்?’ என்று பதிலளித்திருந்தார்
சோ.
இன்னொரு சமயம் ஒரு வாசகர்
‘இந்திரா காந்திக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?’ என்று கேட்டிருந்தார். இந்தக்
கேள்விக்கு பதில் சொல்வது ரொம்பவும் சிரமம். வேறு யாராயிருந்தாலும் இந்தக் கேள்வியையே
தவிர்த்திருப்பார்கள். தூக்கிக் குப்பையில் போட்டிருப்பார்கள். சோ பதில் சொல்லியிருந்தார்.
‘நடந்து முடிந்த தேர்தலில் நான் அலகாபாத்தில் போட்டியிட்டிருந்தால் நானும் தோற்றிருப்பேன்
என்பதைத் தவிர அவருக்கும் எனக்கும் வேறெந்த
ஒற்றுமையும் இருக்க வாய்ப்பில்லை என்றே
நினைக்கிறேன்’
சினிமா பற்றிய, நாடகங்கள்
பற்றிய, நண்பர்கள் பற்றிய, தனி மனிதர்கள் பற்றிய சோவின் கருத்துக்களில் பாசாங்குகள்
இருக்காது. நேர்மையுடன் தமது மனதிற்குப் பட்டதைத் துணிச்சலுடன் சொல்லிவிடுவது அவர்
வழக்கம். கல்வி கேள்விகளில் சிறந்த அவருடைய அரசியல் சார்பான கருத்துக்களில் முரண்பாடுகள்
இருக்கலாமே தவிர அவருக்கு அந்த விஷயங்கள் தெரியாது என்றெல்லாம் யாராலும் சொல்லமுடியாது.
தவிர, இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இசை பற்றிய ஞானம் அவருக்கு
நிறைய உண்டு.
தற்போது குமுதம் வார இதழில்
தாம் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதி வருகிறார் சோ. இந்தத் தொடரிலும்
அவ்வளவுதான். எவ்வித பாசாங்குகளும் அற்று தம்முடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து
வருகிறார் அவர். சமீபத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து
கொண்டிருக்கிறார். பல சுவாரஸ்யமான தகவல்களுடனும் திரை இசையைப் பற்றிய, எம்எஸ்வியைப்
பற்றிய தமது கருத்துக்களுடனும்……………….!. அதில்
சில கருத்துக்களும் தகவல்களும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகவும்
உள்ளன. அவர் சொல்கிறார்;
(இதில் சோ சொன்னவையெல்லாம் வண்ணத்தில் உள்ளன)
“கவிஞர் கண்ணதாசனைப் பற்றி
நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ்
விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்.
அவரைப் பொறுத்தவரை இசைதான்
அவருக்கு எல்லாம். இசையைத் தவிர மற்றவற்றைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து
கொள்வதிலும் விருப்பம் காட்டமாட்டார்.
அவருக்குக் குருநாதர் இசையமைப்பாளர்
எஸ்எம் சுப்பையா நாயுடு. அவருக்காக எம்எஸ்வி ஒரு விழா எடுத்தார். அந்த விழா நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்க என்னை அழைத்திருந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த விழாவில் எம்ஜிஆர்,
சிவாஜி உட்பட பல நடிகர்கள் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வதாக தகவல் தெரிய
வந்ததும் விஸ்வநாதனிடம் கேட்டேன். “நான் திமுகவைக் கடுமையா விமர்சனம் பண்ணிண்டிருக்கேன்.
திமுகவை விமர்சிக்கிறதை எம்ஜிஆர் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்(அப்போது அவர் திமுகவில்
இருந்த சமயம்). நான் அவரோட சினிமாவில் நடிச்சாலும் இந்த மேடையில் நான் தொகுத்து வழங்கறப்போ
என்ன பேசுவேனோன்னு அவர் நினைக்கலாம். சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்க என்னைத்
தொகுத்து வழங்கச் சொல்லாமல் வேறு யாரையாவது பண்ணச் சொல்லுங்க. நான் வேண்டாம். உங்களுக்கும்
இது நல்லதில்லை”.
விஸ்வநாதன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
“அதெல்லாம் பத்தி எனக்கென்ன?
நான் ஒரு விழா எடுக்கறேன். எனக்கு சோ ஃபிரண்ட். எனக்கு அவர் வேணும். கலந்துக்கணும்.
இதனாலே எல்லாம் எம்ஜிஆருக்குக் கோபம் வராது. நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும்
நடக்காது. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு என்னிடம் “நீங்க
அங்கே அரசியல் பேசுவீங்களா?” என்று கேட்டார்.
“நான் எந்த இடத்தில் எதைப்
பேசறதுன்னு எனக்குத் தெரியாதா? நான் அரசியல் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.
“சரி அது போதும்” என்று
சொல்லிவிட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுவந்து காண்பித்தார்.
எம்ஜிஆரின் பெயர் முதலில்
போடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் இருந்தது.
“எம்ஜிஆரிடம் இதைக் காண்பிச்சுட்டீங்களா?”
“இல்லை இனிமேல்தான் காண்பிச்சுட்டு
சொல்லப்போறேன்” சொல்லிவிட்டு எம்ஜிஆரைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அழைப்பிதழை வாங்கியதும் அதிலுள்ள பெயர்களை எல்லாம்
பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.
“இந்த இன்விடேஷன்ல இருக்கறவங்ககிட்டே
எல்லாம் சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன்”
“சோ கிட்டே சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன்”
“என்ன காரியம் பண்ணியிருக்கீங்க
நீங்க? சோ திமுகவை எதிர்க்கிறவர். அவர் ஏதாவது திமுகவைப் பத்திப் பேசினா எனக்குத் தர்மசங்கடமாப்
போகும். என் கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா?”
“இதில் பிரச்னை இருக்கும்னு
தோணலை” – தயக்கத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார் எம்எஸ்வி. “உங்க படங்களில்கூட
சோ நடிக்கிறாரே?”
“அது வேற. இது வேற”
“நான் வேணும்னா சோ கிட்டே
போய் ‘எம்ஜிஆர் வேணாம்ங்கிறார். அதனால் நீங்க வேணாம்னு சொல்லிடுறேன்”
“இன்னும் இதைக் கெடுக்கறதுக்கு
என்ன வழியுண்டோ அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்” என்று எம்எஸ்வியைக் கண்டித்தாலும்
சொன்னபடி விழாவுக்கு வந்து விட்டார் எம்ஜிஆர்.
சிவாஜியும் வந்துவிட்டார். மேடை நிறைந்துவிட்டது. முன்னால் நல்ல கூட்டம். விழா நிகழ்ச்சிகளைத் தொகுக்க
வந்த நான் முதலில் மைக்கைப் பிடித்தேன். போனதும் உரத்த குரலில் “வாத்தியார்” என்று
சொல்ல, கூட்டத்தில் ஒரே கைத்தட்டல்.
“இது வாத்தியாருக்கான விழா.
இங்கே ஒரு வாத்தியார் வந்திருக்கார். அது மட்டுமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வாத்தியார்
சுப்பையா நாயுடுவுக்காக நடத்துற விழா இது” என்று வாத்தியார் என்கிற சொல்லை வைத்து ரொம்பவும்
விளையாடினேன். எதிரில் இருந்த கூட்டத்திற்கும் திருப்தி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த
எம்ஜிஆருக்கும் பரம திருப்தி.
அடுத்த நாள் சிவாஜியுடன்
ஷூட்டிங். நான் போனதுமே “சரியான அயோக்கியன்டா நீ. வாத்தியார்ங்கற ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு
எப்படியெல்லாம் சமாளிச்சே” என்று கிண்டல் பண்ணினார் அவர்.
******************** ********************* ********************
எம்எஸ்வி, கண்ணதாசன், வாலி,
டிஎம்எஸ் என்று இவர்களுடைய ஒருங்கிணைப்பில்
உருவான பாடல்களை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் இவர்கள் இணைந்து இயங்கிய காலம் சினிமாவின் பொற்காலம்
சில சமயம் இசையமைக்க எம்எஸ்வி
உட்கார்ந்துவிட்டால் குறிப்பிட்ட டியூனுக்குத்தான் பாட்டெழுத வேண்டும் என்று கண்ணதாசனிடம்
உரிமையுடன் சொல்லிவிடுவார். சில சமயம் கண்ணதாசனைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு அதற்கு
ட்யூன் போடுவார். இரண்டையும் அவரால் பண்ணமுடியும். அவருடைய கையில் அந்த அளவுக்கு வித்தை
இருந்தது.
இசையமைக்கும்போது ரிகர்சலில்
பத்து வயலின்களை இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்கள். அதை உன்னிப்பாக கவனித்து
ஏழாவது வயலின்காரர் வாசித்ததில் உள்ள தவறை மிகச் சரியாக சுட்டிக்காட்டுவார். அவ்வளவு
விரிந்த துல்லியமான ஞானம் உள்ளவர் எம்எஸ்வி. அவரை மாதிரி ஒரு இசையமைப்பாளர் அதற்குப் பிறகு வந்த மாதிரி
எனக்குத் தெரியவில்லை……………அதாவது என்னுடைய
ரசனையின்படி.” என்கிறார் சோ.
(இப்படிப்பட்ட தகவல்கள் இரட்டையர் காலத்தில் மிக அதிகமாகவே
சொல்லப்பட்டன. பத்து, பதினைந்து, இருபது, நூறு வயலின்கள்…………. என்றாலும் அத்தனை வயலின்களும்
இசைக்கப்படும்பொழுது அது ஒரே வயலினிலிருந்து வந்த இசைபோல இருக்கவேண்டும் அத்தனைத் துல்லியமாக
அந்த நோட் வாசிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் டி.கே ராமமூர்த்தி என்றும்
சொல்வார்கள்).
மேலும் தொடர்கிறார் சோ.
“அவர் சம்பந்தப்பட்ட பாடல் கம்போசிங் நடக்கும்போது பலமுறை போயிருக்கிறேன். இசையமைக்கும்போது
எம்எஸ்வி அந்தப் பாடலை எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக்காட்டுவார் பாருங்கள். அவருடைய
குரல் கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த அளவுக்குப் பாடக்கூடியவர் ஏன் படத்தில்
பாட மறுக்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கும். டிஎம்எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு
முன்னால் இவர் பாடிக்காட்டுவதைப் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய குரலை அந்த
அளவுக்கு ரசித்ததால் அதை சரிவரப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது.
அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது.”
இந்த இடத்தில் சோ, முகம்மது
பின் துக்ளக் படத்தில் எம்எஸ்வி பாடி மிகப் பெரிய ஹிட்டான அல்லா அல்லா பாடல் உருவான
கதையைச் சொல்லவருகிறார். பொதுவாகவே எம்எஸ்வி, படங்களில் தமக்குப் பாட வாய்ப்பு இருக்கும்
இடத்திலும் மற்றவர்களைப் பாடவைத்து அழகு பார்க்கும் சுபாவம் கொண்டவர். அவரே பாடியிருக்கிறார்
என்றால் அதற்கு நிச்சயம் இயக்குநர் அல்லது முக்கியமான வேறொருவரின் பிடிவாதம்தான் காரணமாக
இருந்திருக்கவேண்டும். பாசமலர் படத்தில் டைட்டில் சாங்காக வரும் ‘அன்புமலர் ஆசைமலர்
இந்த மலர்களிலே…’ என்ற பாடல் அந்த நாட்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல். அந்தப் படத்துக்
கதையின் தொனி அந்தப் பாடலைக் கேட்டமாத்திரத்திலேயே மனதில் புகுந்து ஏதோ ஒருவிதமான உணர்வை
எழுப்பிவிடும் மாயத்தை அந்தப் பாடல் செய்துவிடும். அதற்குப்பின் ‘இக்கரைக்கு அக்கரைப்
பச்ச’ பாடல் கண்ணதாசன் வற்புறுத்தியதால் அவரே பாடினார் என்று சொல்வார்கள். பாடல் பாடுவதற்குத்தான்
அதிகமாக முன்வரமாட்டாரே தவிர ஹம்மிங்குகளை விரும்பிச் செய்வார் என்று சொல்லப்படுவதுண்டு.
பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் வரும் ஹம்மிங்குகள் ஓஹோ,
ஆஹா, ம்ம்ம் என்பவையும் இன்னமும் பல பாடல்களில் வரும் ஹம்மிங்குகளையும் அவரே செய்துவிடுவார்.
குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் ‘நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே
கொண்டு வந்ததற்கு’ பாடலில் வரும் ஹம்மிங் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அது காதல் பாடல்தான்
என்றாலும் அந்த டியூனும் சுசீலாவின் குரலும் எம்எஸ்வியின் ஹம்மிங்கும் சேர்ந்து ஒரு
கொண்டாட்டமான குதூகலமான மறக்கமுடியாத பாடலாக அந்தப் பாடலைச் செய்துவிடும்.
இப்போது ‘அல்லா அல்லா’
பாடலை எம்எஸ்வியையே பாடவைத்த சம்பவத்தைச் சொல்கிறார் சோ.
“நான் இயக்கிய ‘முகம்மது பின்
துக்ளக்’ படத்தில் வாலி எழுதிய பாடல் அல்லா அல்லா. இந்தப் பாடலை விஸ்வநாதன்தான் பாடவேண்டும்
என்று நான் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் அவரோ “இந்தப் பாட்டு நல்லா வரும். இதை நான்
பாட வேண்டாம். முகமது ரஃபி தமிழில் இதைப் பாடட்டும்” என்று ரஃபியைத் தானே கூப்பிட்டு
வருவதாகவும் சொன்னார்.
எனக்கு என்னவோ இது உடன்பாடாக
இல்லை.
“நீங்கதான் சார் பாடணும்.
மற்றவங்களைப் பாட வைக்க வேணாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவரோ “அதெல்லாம் முடியாது.
உங்க பிடிவாதத்துக்காக எல்லாம் என்னால் ஒத்துக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்தப் படத் தயாரிப்பாளரான நாராயண அய்யரோ தவித்துக் கொண்டிருந்தார். விவாதம் நீண்டு
கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நாராயண அய்யர் சொன்னார் “திருவுளச் சீட்டு போட்டுப்
பார்த்திருவோம்”
முகமது ரஃபி, டிஎம்எஸ்,
எம்எஸ்வி- இந்த மூன்று பேரின் பெயர்களையும் திருவுளச்சீட்டில் எழுதிப் போடுவதாக முடிவெடுத்தோம்.
விஸ்வநாதனையே அதில் ஒரு சீட்டை எடுக்கச் சொன்னேன்.
அவரும் எடுத்தார். “என் பெயரே வந்திருக்கு”
என்று ஏமாற்றமாய் முகத்தை வைத்திருந்தார் எம்எஸ்வி.
“சார் கடவுளுக்கு அதான்
இஷ்டம். நீங்கதான் பாடணும்னு முடிவாயிருச்சு” என்று நான் சொன்னேன்.
“சரி என்ன செய்யறது? சீட்டே
வந்துருச்சி. நானே பாடிடறேன்” என்றதும் நான் புகுந்தேன்.
“சார் பாடுறதுன்னு முடிவெடுத்துட்டீங்க.
இனி அதிலிருந்து மாற மாட்டீங்களே?”
“அதெப்படி மாத்துவேன்?
ஒத்துண்டுட்டேன்”
“நிச்சயமாக மாற மாட்டீங்கள்லே?”
“நிச்சயமா மாற மாட்டேன்”
என்று எம்எஸ்வி சொன்னதும் கையில் இருந்த மற்ற திருவுளச் சீட்டுகளை அவரிடம் கொடுத்தேன்.
பிரித்துப் பார்த்தார். அவற்றிலும் எம்எஸ்வி பெயர்தான் எழுதப்பட்டிருந்தது.
“இதென்ன மோசடி வேலை” என்று
புலம்ப ஆரம்பித்துவிட்டார் எம்எஸ்வி.
“நீங்க உறுதியா முடிவை
மாத்த மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க” என்றதும் பிறகு அந்தப் பாடலை அவரே பாடினார். அதை
அவர் பாடிய விதம், அவருடைய குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை
உயர்த்திவிட்டது” – என்று இந்த சம்பவத்தை விவரித்திருக்கும் சோ அதே படத்தின் இன்னொரு
தகவலையும் தருகிறார்.
‘முகமது பின் துக்ளக் படத்தில்
இசையமைத்த எம்எஸ்வியைக் கூப்பிட்டு “திமுகவுக்கு எதிரான படம் இது. இந்தப் படத்தில்
நீ எப்படி மியூசிக் போடலாம்?” என்று கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.
மியூசிக் போடக் கூப்பிட்டாங்க. ஒத்துண்டேன்”
“இப்போ நீ போய் முடியாதுன்னு
சொல்லிடு”
“இசையமைக்கிற வேலைகள் பாதி
முடிஞ்சிருச்சி. நான் இப்போ போய் முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்காது”
“அதெல்லாம் இல்லை……………..நீ
முடியாதுன்னுதான் சொல்லணும்”
“நீங்க சொல்ற மாதிரி நான்
போய்ச் சொன்னா அது தெய்வக்குத்தம் மாதிரி ஆயிடும். நான் செய்ற தொழிலுக்குத் துரோகம்
பண்ண மாட்டேன். நீங்க வேணும்னா சோவைப் பத்தி ஒரு படம் எடுங்க. அதுக்கு நான் வந்து மியூசிக்
பண்றேன்”
எம்எஸ்வி சொல்லிமுடித்ததும்
எம்ஜிஆருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்தப் படத்தில் கடைசிவரை இருந்து அசராமல், எந்த
மிரட்டலுக்கும் பணியாமல் தான் எடுத்துக்கொண்ட வேலையைச் சரிவர செய்துகொடுத்தார் எம்எஸ்வி.”
– இப்படிச் சொல்லும் சோ, முடிவாக எம்எஸ்வியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
‘தோல்வியை எப்படியாவது
தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்வது கஷ்டம். தலைக்கனம் ஏறாமல்,
கர்வம் புகுந்து விடாமல், அகம்பாவம் படிந்துவிடாமல், வெற்றியைச் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள
வேண்டும். அப்படி எத்தனையோ வெற்றிகளைச் சந்தித்தும் தன்னைப் பற்றி மிகையாக நினைக்காமல்,
தொழில் சிரத்தையோடு இப்போதும் இருப்பவர் விஸ்வநாதன். அவருடைய வெற்றிகள் அவரிடம் வெற்றி
காண முடியவில்லை என்று சொல்லலாம்……………….தான் செய்கிற தொழில்மீது வைத்திருக்கிற பக்தி,
ஈடுபாடு என்று எத்தனையோ வார்த்தைகளில் அதை விளக்கலாம். ஆனால் இதுதான் எம்எஸ்வியின்
இயல்பு.’



