Sunday, September 6, 2015

எம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2


பாக்கியலட்சுமிக்கு வருவோம். ‘கண்ணே ராஜா’ பாடலில் ஒரு விசேஷம். அந்தப் பாடல் முதலில் சந்தோஷப் பாடலாகவும் பிறகு சோகப்பாடலாகவும் படத்தில் ஒலிக்கும். அந்தக் காலத்தில் பல படங்களில் இந்தப் பாணி இருந்தது. ஒரே மெட்டு மகிழ்வாகவும் பின்னர் கதையின் போக்குக்கேற்ப அதே மெட்டு சோகமாகவும் ஒலிக்கும். ஒரு இசையமைப்பாளரின் அற்புதத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பாணியும் நிறையவே உதவிற்று.
இந்தவகையில் புகழ்பெற்ற பாடல்கள் நிறைய உண்டு.
  1.        வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே..
  2.         கண்ணே ராஜா கவலைவேண்டாம்……
  3.       மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்..
  4.    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்……….
  5.     இந்த மன்றத்தில் ஓடிவரும்…………
  6.     அன்றுவந்ததும் அதே நிலா………….
  7.      உன்னை ஒன்று கேட்பேன்………….
  8.      ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி……………
  9.     அன்றொருநாள் இதே நிலவில்….
  10.          அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசு…….. என்று பட்டியல் பெரியது. 

இம்மாதிரியான சோகப்பாட்டுக்களை மட்டுமே, அதுவும் அன்றைக்கிருந்த ஒலித்தட்டு ரிகார்டுகளையே தேடித் தேடி சேகரித்து வைத்திருந்த ரசிகர்கள் நிறையவே உண்டு.
பாக்கியலட்சுமி’ படத்திற்குப் பின்னர் ‘பாசமலர்’ வருகிறது. பாசமலரில் ஏழு பாடல்கள் ஹிட். பாசமலருக்கு அடுத்து ‘பாலும் பழமும்’. பாலும் பழமும் படத்தில் ஏழு பாடல்கள். அதற்கடுத்து ‘பாவமன்னிப்பு’. பாவமன்னிப்பில் ஆறு பாடல்கள் ஹிட்.(புகழ்பெற்ற பாடலான ‘அத்தான் என் அத்தான்’ இந்தப் படத்தில்தான். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதைகளில் ஒருவரான நௌஷத் “ஒரு பாடலை இப்படியெல்லாம் கம்போஸ் பண்ணமுடியுமா என்ன?” என்று ஆச்சிரியத்தில் வியந்த பாடல் அது. தனக்கு மிகவும் பிடித்த பாடலாக லதா மங்கேஷ்கர் இன்றும் சொல்லிவரும் பாடல் அது) இப்படி….. தமிழ் நெஞ்சங்களில் தொடர்ச்சியாகத் தேன்மழையைப் பொழியும் காரியத்தை மெல்லிசை மன்னர்கள் செய்கிறார்கள்.

அதற்கடுத்து டி.ஆர்.ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருகிறது. இந்தப் படத்திலும் பி.சுசீலாவை வைத்து வர்ணஜாலம் புரிகிறார்கள். அவர் பாடிய ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, ‘ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல்’ இரண்டு மட்டுமில்லாமல் பிபிஸ்ரீனிவாஸின் ‘உடலுக்கு உயிர் காவல்’ தத்துவப் பாடலும் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.

அடுத்து வருகிறது ‘ஆலயமணி’. சிவாஜியின் இந்தப் படத்தில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘சட்டி சுட்டதடா’ மூன்றும் சிவாஜிக்கானவை. இந்த இடத்தில் ஒரு சின்னக் குறுக்கீடு. என்னுடைய நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பெரிய அளவுக்குப் படித்தவர். திருச்சியைச் சேர்ந்த அவருக்கு அவருடைய சொந்தத்திலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டாரோ பெரும் செல்வந்தர்கள். என்னதான் மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும் அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. அதனால் பெண்ணைத் தரமுடியாது என்று கடிவாளம் போட்டார் மாமனார். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்து இவரைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று இவரையே மணமுடித்தாராம். அந்தச் சமயத்தில் வந்த படம் ஆலயமணி. ‘பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே –புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே’ என்று “எனக்காகவே கண்ணதாசன் எழுதி சிவாஜி பாடிய மாதிரிதான் அன்றைக்கு இந்தப் பாடல் அமைந்திருந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனைவி வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பாடல் இது. நாங்கள் இறக்கும்வரை இந்தப் பாடலை மறக்கமாட்டோம்” என்று மனம் உருகிச் சொல்வார் ராமனாதன் என்ற என்னுடைய நண்பர். என்று இப்படி தனிப்பட்டவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களாகத்தான் அந்தக் கால பாடல்கள் அமைந்திருந்தன.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, சுசீலா பாடுகிறார். ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’ பாடல் சீர்காழி சுசீலா டூயட்டாக மலர்கிறது. இந்தப் படத்தில் வரும் இன்னொரு புகழ்பெற்ற பாடல் எஸ்.ஜானகி பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’.

இந்தப் பாடல் பற்றிய முக்கியமானதொரு செய்தியை இங்கே சொல்லியாக வேண்டும்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்த பாடலாகச் சொல்லியிருக்கும் வெகுசில பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவல்ல விஷயம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி; விஸ்வநாதன் தனித்திருந்தபோதும் சரி எஸ். ஜானகியை அவ்வளவாகப் பாடவைத்தவர்கள் கிடையாது.

மிகமிக அரிதாகத்தான் வாய்ப்புகள் வழங்குவார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பைத்தான் ஜானகிக்கு வழங்குவார்கள். அந்தக் காலத்தில் பெண் குரல் என்றாலேயே பி.சுசீலாதான். அதற்கடுத்த இடமும் ஜானகிக்கு அல்ல, எல்.ஆர்.ஈஸ்வரிக்குத்தான். அதனால் ஜானகி புத்திசாலித்தனமாக (அல்லது அப்படித்தான் அமைந்ததோ என்னவோ) கன்னடத்தின் பக்கம் போய்விட்டார். கன்னடத்தில் பிபிஎஸ்ஸூம் ஜானகியும்தாம் பெரிய முன்னணிப் பாடகர்கள். ஜி.கே.வெங்கடேஷ் கன்னடத்தில் நிறையப் படங்கள் பணியாற்றி வந்தமையால் அவருடைய உதவியாளராக இருந்த இளையராஜாவுக்கு பி.சுசீலாவை விடவும் ஜானகியிடம்தான் பணிபுரிந்த அனுபவம் அதிகம். எனவே இளையராஜா தமிழில் முன்னணிக்கு வந்ததும் அவருடைய ‘சாய்ஸ்’ இயல்பாகவே சுசீலாவாக இல்லாமல் ஜானகியாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயேகூட இந்தச் செய்தியை அணுகலாம்.

                                            

சில வருடங்களுக்கு முன்னர் விகடனிலோ குமுதத்திலோ எஸ்.ஜானகியின் பேட்டி வந்திருந்தது. அதில் அவர் ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டம். ஏதோ காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் கலாட்டா ஆரம்பமாகிறது. மேடையிலிருப்பவர்கள் என்ன சொல்லியும் ரகளை குறைவதாகத் தெரியவில்லை. அந்த நாட்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடத்துவங்குகிறார் ஜானகி. கூட்டம் கட்டுப்படவில்லை. சட்டென்று பாடலை நிறுத்தும் ஜானகி உடனடியாக ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்ற ஆலயமணி பாடலை ஆரம்பிக்கிறார்.

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் சட்டென்று கூச்சல் குழப்பம் அடங்கி கட்டுக்குள் வருகிறது கூட்டம்.

இந்த வித்தை எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது.. “இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது” – என்று சொல்லியிருந்தார் ஜானகி.
இதே போன்ற அனுபவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தது பெங்களூரில். மிகப் பிரபலமான பாடகர்கள் வருவார்கள் என்று சொல்லி ஏகப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ஒரு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணியினர் யாரும் வரவில்லை என்றதும் ரகளையில் இறங்கியது கூட்டம். மேடைக்கு வந்த ஜானகி பாடிய முதல் பாடல் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’. மொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் அடங்கியதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பும் பெங்களூர் சிவாஜிநகர் ஸ்டேடியத்தில் கிடைத்தது.

ஜானகியின் பேட்டி வெளிவந்தது 2000 ஆண்டுகளில். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ வந்தது 1962 ம் ஆண்டில். இதற்குள் ஜானகி வெவ்வேறு தளங்களில் பயணித்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடி ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். அதில் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கும். ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு இருக்கும் மெஸ்மரிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆலயமணிக்கு அடுத்து இன்னொரு புகழ்பெற்ற படமான ‘காத்திருந்த கண்கள்’. ஜெமினி, சாவித்திரி நடித்த படம். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறு பாடல்களும் அடித்துக்கொள்ள முடியாதவை. ‘கண்படுமே பிறர் கண்படுமே’ (இதை கண் badume என்றே பிபிஎஸ் பாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் இன்றுவரையிலும் அடித்துக்கொள்ள முடியாத பாடல் அது)  பாடலும் ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ பாடலும் பிபிஎஸ்ஸின் ஹிட் லிஸ்டில் அடக்கம். அவர் சுசீலாவுடன் பாடிய ‘காற்றுவந்தால் தலைசாயும் நாணல்’ பாடலும், ‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலும் தமிழின் நிரந்தர இனிமையான பாடல்களில் அடக்கம்.
            
                                            


பி.சுசீலா தனியாகப் பாடிய ‘வா என்றது உருவம்’ ஒரு தேன் வழியும் பாடல் என்றால் சீர்காழியின் வெண்கலக்குரலில் வந்த ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ பாடல் நிலைத்து நின்றுவிட்ட சீர்காழியின் பாடல்களில் ஒன்று. இயக்குநராக இருந்து நடிகராக மாறிவிட்ட மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். “டைவர்ஸுக்கு விண்ணப்பித்திருக்கும் தம்பதியர் எல்லாரையும் வரவழைத்து அவர்களை ஒரு அறையில் உட்காரவைத்து ஒரேயொருமுறை ‘வளர்ந்தகலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலைக் கேட்கும்படிச் செய்தால் போதும். நிச்சயம் பாதிப்பேர் டைவர்ஸ் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தம்பதி சமேதராய் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று குடும்ப கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கும் ஒருவர் சொன்னார்” என்று.

ஒரு பாடலின் தாக்கம் என்பது இதுதான். சமூகத்தில் இறங்கி அந்தப் பாடல் ஒரு மாறுதலைச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர ‘பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’ என்று எழுதப்படும் தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் எல்லாம் ஒரு பாடலைச் சிறந்த பாடலாக தனிப்பட்ட அவர்கள் அளவுக்குக் கருதிக்கொள்ளலாமே தவிர சமூகத்தின் முன் நிறுத்திவிடாது.

இந்தப் பெரிய பட்டியல்களுக்கு மத்தியில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்றைக்கு நம்பர் ஒன் லிஸ்டில் இருந்தவர்கள். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஏவிஎம், ஸ்ரீதர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இவர்கள்தாம் இசை. ஆனால் இவர்களுக்குப் பெரிய படம் சிறிய படம் என்ற பேதமெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களாக அன்றைக்குக் கருதப்பட்ட பல படங்களில்- குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பாதகாணிக்கை, மணப்பந்தல், மணியோசை, வீரத்திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களில் அற்புதமான, மிக அற்புதமான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பத்து சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் போடப்படுமேயானால் (உலகிலேயே மிகவும் சிரமமான பட்டியல் இதுவாகத்தான் இருக்கமுடியும்) அதில் மூன்றாவதற்குள் வந்துவிடக்கூடிய படம் பாதகாணிக்கை. 

இந்தப் படங்களில் எல்லாம் உயிரை உருக்கும் பாடல்கள் உள்ளன.

அதுவும் வீரத்திருமகனில் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் இதில் கதாநாயகன். கதாநாயகி சச்சு.) வரும் ‘பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்’ பாடலும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலும் தமிழ்நாடு முழுக்கச் சுழன்றடித்த பாடல்கள். பிபிஎஸ்ஸின் மகுடத்தில் என்றைக்கும் இருக்கும் பாடல்கள். கடைசியாக சந்தித்தபோது பிபிஎஸ் சொன்னார் “ஐயோ அந்த ரெண்டு பாடல் பத்தியும் ஏன் கேக்கறீங்க? பிரபலம் என்றால் இப்படி அப்படிப் பிரபலம் இல்லை. நான் கலந்துகொள்ளும் தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளில்கூட இந்த இரு பாடல்களையும் தவறாமல் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”

அடுத்து சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் - என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொன்னெழுத்துப் பட்டியல் நீண்டு 1965 டன் ஒரு முடிவுக்கு வருகிறது.

நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இங்கே குறிப்பிட்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. 

இந்தப் படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களைத் தவிர பாக்கி அத்தனைப் பாடல்களும் – ஆமாம் அத்தனைப் பாடல்களும், சதவிகிதக் கணக்குப் போட்டால் தொண்ணுற்று ஒன்பது சதம் வரக்கூடிய அத்தனைப் பாடல்களும்- அதனை இயற்றியவரின் பெயர் சொல்லும், அதனைப் பாடியவரின் பெயர் சொல்லும், அதில் நடித்தவர்களின் பெயர் சொல்லும் தமிழின் நிரந்தர இனிமைப் பட்டியலில் இருக்கப்போகும் என்றென்றும் இனிக்கும் இறவாப் பாடல்களே.

இத்தனை இனிமையாய், இத்தனை சுவைகளில், இவ்வளவு அமுதத் தமிழில், இத்தனை விதவிதமான குரல்களில், இத்தனை விதவிதமான உணர்வுகளில், இத்தனை வித வாத்தியங்களின் இனிமையில் இதுவரை யாரும், ஆமாம் யாரும்- இத்தனைப் பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்ததில்லை.

இனிமேல் கொடுக்கப்போகிறவர்களும் யாரும் இல்லை.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி, தனியாக விஸ்வநாதன் பிரிந்து இசையமைத்துக்கொண்டிருந்தபோதும் சரி இவர்களின் தாரகமந்திரம் ஒன்றேஒன்றுதான். அதாவது இனிமை, இனிமை, இனிமை!

பாடல்களில், அது எப்பேர்ப்பட்ட பாடல்களாக இருந்தபோதிலும் இனிமையைக் குழைத்துக்கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். இனிமை அடிப்படை. அதன்பிறகு புதுமை, காலமாற்றம், அதற்கேற்ற மாறுதல்கள், விதவிதமான வாத்தியக்கருவிகள், பல்வேறு நாட்டு இசைகளின் கோர்வைகள் லொட்டு லொசுக்கெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. முதல் அடிப்படை இனிமை. இனிமை இல்லையெனில் அது எப்பேர்ப்பட்ட புதுமையாக இருந்தபோதிலும் இவர்களின் கவனம் அங்கே செல்லாது. அவர்களின் தாரக மந்திரம் இது ஒன்றுதான் இனிமை, இனிமை, இனிமை!

அந்த ஒரே காரணத்தினால்தான் எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் இவர்களின் பாடல்களுக்கு மட்டும் வயதாவதும் இல்லை, தேய்ந்து போவதும் இல்லை, மறைந்துபோவதும் இல்லை, ஓரத்தில் ஒதுக்கப்படுவதும் இல்லை. யாரும் இந்தப் பாடல்களை மறப்பதும் இல்லை.

ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா? பாடல் வரிகள் முக்கியமா? என்ற சர்ச்சை எந்தக் காலத்திலும் உண்டு. இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான்.

இதையும் தாண்டி தோண்டித் துருவும் வித்தகர்கள் காலந்தோறும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பாட்டுக்கு இசை மட்டும்தான் முக்கியம். பாட்டுவரிகள் என்பன ஒரு பொருட்டேயில்லை’ என்ற ஒரு வாதமும் சிலர் மூலம் இங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்த வாதத்தை ஒரு இசையமைப்பாளரே முன்நின்று பரப்புவதையும் பார்த்துத்தான் வருகிறோம். அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரை அந்த வாதத்திற்கும் ஒரு மவுசு இருந்தது. அவருக்கு மார்க்கெட் போனபின்பு அந்த வாதத்திற்கான நிழல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரேயொரு வார்த்தை. பாட்டு வரிகளை, எழுத்தின் சக்தியை உணராதவர்கள் எத்தனை பெரிய வித்தகர்களாக இருந்தபோதும் பிரயோசனமில்லை. கம்பராமாயணம் காலத்தில் எத்தனையோ இசை வடிவங்கள் இருந்திருக்கலாம். அந்த இசையெல்லாம் இப்போது எங்கே?

ஆனால் கம்பராமாயணம் மட்டும் இன்னமும் இருக்கிறது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி 1965-ம் ஆண்டுடன் பிரிகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் பிரிவுக்கடுத்து விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் விஸ்வநாதன் மட்டும் நிலைத்து நின்று தனியாகவே அறுநூறு படங்களுக்கும் மேல் இசையமைத்ததையும், ராமமூர்த்தி இருபது படங்களுடன் நின்றுவிட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இருவரும் சேர்ந்து இசையமைத்தபோது இருந்த அந்த ‘ரசவாத வித்தை’ விஸ்வநாதனிடம் தொடர்ந்து பல படங்களில் பயணித்ததையும், ராம மூர்த்தியிடம் பிரதானமாக ஒரு படத்தில்கூட முழுமையாகப் பயணிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான படங்களை, பாடல்களைத் தன்னந்தனியராக விஸ்வநாதன் இசையமைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது படங்களைத் தவிர மற்ற படங்களில் அவரும் குறிப்பிட்ட ஒரு பாடல், அல்லது இரண்டு பாடல்கள்தாம் ஹிட் என்ற அளவுக்குத் தம்மைச் சுருக்கிக்கொண்டார். இது மற்ற இசையமைப்பாளர்களைப் போன்றே அவரும் தம்மை வடிவமைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இருவரும் இணைந்து இருக்கும்போது இந்த நிலைமை இல்லை.

ஒரு படம் என்றால் அதில் வரும் அத்தனைப் பாடல்களும் பிரசித்தம்.

அத்தனைப் பாடல்களையும் ரசிகர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி காலம்பூராவும் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர் இருவரும்.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனை முறியடிக்கக்கூடியது அல்ல என்பது மட்டுமல்ல, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று.

தமிழ் இசையின் பொற்காலம் அது என்றுதான் சொல்லவேண்டும். 

‘குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், கொடிமலர், ராமு, நாடோடி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களின் ஒரு சில பாடல்களில் அல்லது பல பாடல்களில் விஸ்வநாதனுடையது மட்டுமல்ல, ராமமூர்த்தியின் ‘டச்’சும் இருக்கிறது என்று சொல்லும் இசை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்ததால் நிறையப் படங்கள் ஏற்கெனவே புக் ஆகியிருக்கும். ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள், மூன்று பாடல்கள், இரு பாடல்கள், ஒரு பாடல் என்று ஏற்கெனவே இருவராலும் இசையமைக்கப்பட்டு முடிந்திருக்கும். திடீரென்று பிரிந்தவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுக்கும் பொறுப்பு எம்எஸ்வியிடம் வந்துவிட்டதால் ஏற்கெனவே இருவருமாகச் சேர்ந்து இசையமைத்த சில பாடல்களையும் சேர்த்தே தரவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்திருக்கும்.

இரட்டையரின் அந்த ‘மேஜிக் டச்’ விஸ்வநாதனின் பல படங்களிலும் பாடல்களிலும் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
அதேபோல் ராமமூர்த்தியின் கதையும் இதே தான். அப்படி அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ‘மேஜிக் டச்’ எது? என்ன? என்பதற்கான பதில் இதுவரையிலும் நமக்கு கிடைத்தபாடில்லை. அந்த இருவருக்குமே கூட அதற்கான விடைதெரிந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

"இருவரும் இருந்தபோது இருந்த அந்த டச் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறதே அது ஏன்?" என்ற கேள்விக்கு எம்எஸ்வியும் சரி, ராமமூர்த்தியும் சரி ஒரே விதமான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “அது என்ன என்பது தெரியவில்லை. ஏதோ கடவுள் கொடுத்த வரம் போல் இருக்கிறது. அப்போது என்னமாதிரியான சிரத்தையுடன் உழைத்தோமோ அதே போன்ற சிரத்தையுடனும் அக்கறையுடனும்தான் இப்போதும் உழைக்கிறோம். அந்த டச் ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லை” என்பதுபோல்தான் சற்றேறக்குறைய இருவருமே கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

மன்னர்களும் சரி, தனியே விஸ்வநாதனும் சரி ஒரு பாடலுக்கு அடிப்படையான மாறுதல்கள், புதுமைகள் எவ்வளவோ அவ்வளவையும் தங்கள் படைப்புக்களிலேயே செய்துமுடித்துவிட்டார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் செய்ததிலிருந்து அங்கே ஒரு மாற்றம், இங்கே ஒரு மாற்றம் இந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை, அந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை என்பது மாதிரியான மாறுதல்கள்தாம். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ ‘மவுண்ட்ரோட்டில்’ என்ன பெரிய மாறுதல்களைச் செய்துவிட முடியும்?

சுத்தமான கர்நாடக இசையில் மெட்டை மட்டும் உருவி, கமகங்கள் ஆலாபனைகள் வாய்ப்பாடுகளை நீக்கி எளிமைப்படுத்தி அத்தோடு லேசான அளவுக்கு மேல்நாட்டு இசைக் கலவையையும் கலந்து தந்ததுதான் மெல்லிசை மன்னர்களின் பாணி. பிற்பாடு காலத்தின் தேவைக்கேற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தவும் அவர்கள் தவறியதில்லை. எகிப்து இசையைப் ‘பட்டத்து ராணியின்’ மூலமும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய்’ மூலமும், ஜப்பான் இசையை ‘பன்சாயி’ மூலமும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு’ மூலமும், ரஷ்ய இசையை ‘கண்போன போக்கிலே’ மூலமும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ மூலமும் எம்எஸ்வி புகுத்தினார் என்று சொல்வார்கள்.

இவையில்லாமல் பொம்மைகளை வைத்துக்கொண்டு ‘மகராஜா ஒரு மகராணி’, ‘ஜூனியர் ஜூனியர்’ பாடல்களிலும், கிளியை வைத்துக்கொண்டு ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே’ பாடலும் மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்துக்கொண்டு அவள்ஒரு தொடர்கதை படத்திலும் அவர் கட்டமைத்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. (இப்படியொரு பாடலை மேஜர் சந்திரகாந்த் படத்தில் முயன்றவர் வி.குமார். ‘ஒருநாள் யாரோ’ பாடலை அற்புதமாகப் போட்டிருப்பார் அவர்) விசில் அடிப்பதைப் பின்னணியாக வைத்து மட்டும் ஒரு இருபது பாடல்களையாவது அமைத்திருப்பார் விஸ்வநாதன். விசில் மட்டுமல்லாமல் கூடவே ரயில் புறப்படுவது, வேகமாக ஓடுவது, நிற்பது என்ற சத்தங்களில் ‘பச்சைவிளக்கு’ படத்தில் ‘கேள்விபிறந்தது அன்று’ பாடலை அமைத்திருப்பார் அவர். பின்னாட்களில் கே.பாலச்சந்தர் படங்களில் இம்மாதிரியான ஏகப்பட்ட புதுமைகளை நிகழ்த்தியிருப்பார் எம்எஸ்வி.

இன்றைய படங்களின் பாடல்களுக்கு வழியமைத்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடிகளும் இவர்கள்தாம். முதன்முதலாக இந்தியாவிலேயே மேடை நிகழ்ச்சியாக திரைஇசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர்களும் இவர்கள்தாம். இதற்குப் பின்னால்தான் பம்பாயில்கூட இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவர்கள் இணைந்திருந்தபோதும் சரி, விஸ்வநாதன் தனியே இயங்கியபோதும் சரி இனிமைக்கு அடுத்தபடி இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது குரல்களுக்கு. ஆரம்பத்தில் டிஎம்எஸ், சுசீலா, பிபிஸ்ரீனிவாஸ், எல்ஆர்ஈஸ்வரி, சீர்காழி ஆகியோரின் குரல்களை வைத்து விந்தை புரிந்த விஸ்வநாதன் அடுத்து ஏசுதாஸ், எஸ்பிபாலசுப்ரமணியம், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வைத்து விந்தை புரிய ஆரம்பித்தார். ஒரு ஆண்குரல் ஒரு பெண்குரல் என்பதோடு இவரது பரிசோதனை முயற்சிகள் முற்றுப்பெற்றவை அல்ல. மாறாக இரண்டு ஆண்குரல்கள், அல்லது மூன்று நான்கு ஆண் குரல்கள், இரு பெண் குரல்கள் என்று வைத்துக்கொண்டு இவர்கள் புரிந்த ஜாலங்கள் எல்லாம் வேறு எந்த இசையமைப்பாளர்களாலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. 

டிஎம்எஸ்- சீர்காழி, டிஎம்எஸ்-பிபிஎஸ் என்று ஆண்களை வைத்துக்கொண்டு பத்துப் பாடல்களுக்கு மேல் இவர்கள் போட்டிருக்கிறார்கள். எல்லாமே ஹிட்டடித்தவை என்பதுதான் இங்கே முக்கியம். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை’ என்று காலத்தால் அழிய முடியாத ஒரு பாடல். டிஎம்எஸ்ஸும் பிபிஎஸ்ஸும் பாடியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு இனிமையான பாடலை இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளரும் இரு ஆண்குரல்களை வைத்து யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். 

இரண்டு ஆண்குரல்கள்….. அதுவும் சிவாஜியையும் பாலாஜியையும் நீச்சல் குளத்தில் குளிக்கவைத்துப் பாட்டுப்பாடவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்களை நீச்சல்குளத்தில் குளிக்கவைத்துப் படமாக்கும் தைரியம் பீம்சிங்கைத்தவிர உலகில் யாருக்குமே வராது- என்று விமரிசனம் எழுதியது குமுதம். 

கர்ணன் படத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி’ பாடலை டிஎம்எஸ், சீர்காழி, திருச்சிலோகநாதன், பிபிஎஸ் ஆகிய நான்குபேரை வைத்துப் பாடவைத்திருந்தார்கள்.
(விஸ்வநாதனுக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் இரண்டு ஆண்குரல்களை வைத்து சில பாடல்களை முயன்றிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ராகமே இல்லாமல் வசனம் ஒப்பிப்பதுபோல் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும் அவை.)

                                         

இதுஒரு புறமிருக்க பி.சுசீலாவையும், எல்ஆர்ஈஸ்வரியையும் இணைத்து இரு பெண் குரல்களைப் பாடவைத்து இவர்கள் செய்திருக்கும் இசை ஜாலத்திற்கு இணையே கிடையாது. இருவருக்கும் ஒரு போட்டியே ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இருக்கும். இந்தவகைப் பாடல்களின் எண்ணிக்கையும் பதினைந்து இருபதைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.

மன்னர்கள்  வாத்தியக்கருவிகளைக் காட்டிலும் குரல்களைத்தாம் முக்கியமென்று நினைத்தனர். அதனால்தான் பாடும் குரல்களோடு இயைந்துவரக்கூடிய ராகத்திற்குத் துணையாக ஹம்மிங் என்ற குரல்களையே பல பாடல்களில் பயன்படுத்தினர். எம்எஸ்வியே நிறைய ஹம்மிங் தந்திருக்கிறார். அவருக்கடுத்து சீர்காழி, சுசீலா, ஜானகி எல்லாருமே ஹம்மிங் தந்திருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திய இன்னொரு ஹம்மிங்கிற்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவருடைய பல பாடல்களுக்கான ஹம்மிங் விசேஷமானது. இவர்கள் அளவுக்கு அல்லது எம்எஸ்வி அளவுக்கு இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பது தெரிந்த எந்த இசையமைப்பாளர்களும் இந்த ஏரியாவுக்குள் எல்லாம் நுழையவே இல்லை என்பதையும் நுழையவே பயந்து தவிர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்எஸ்வி முக்கியத்துவம் கொடுத்த இன்னொன்று விசில். விசிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமான பல பாடல்களைப் போட்டிருக்கிறார் அவர். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், கேள்விபிறந்தது அன்று.......... என்று பல பாடல்கள். வாசிப்புக் குழுவினில் இருந்து எம்எஸ் ராஜூ என்ற ஒருவர் மிகப் பிரமாதமாக விசிலடிப்பார் என்பதை அறிந்து அவரை உபயோகித்துப் பல படங்களில் விசில் பாடல்கள் போட்டார் என்று சொல்வார்கள். 

நல்ல வேளையாய் இதிலும் கைவைக்கும் 'தைரியம்' எந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை.

எம்எஸ்வி பாடுவதைப் பற்றியும் நடிப்பதைப் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் சொல்லாத ஒரு தகவல்……. அந்தக் காலத்திலிருந்து எம்ஜிஆர், சிவாஜி. ஸ்ரீதர் மற்றும் சில படங்களில் பியானோ வாசிக்கும் குளோஸப் விரல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான். பாசமலர் படத்தின் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ பாடலில் சிவாஜிக்கான விரல்களாகவும், வெண்ணிற ஆடை படத்தின் ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் ஸ்ரீகாந்தின் விரல்களாகவும் காட்டப்படும் மந்திர விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான்.

எம்எஸ்வி மறைந்த சோகம் ஒருபுறமிருக்க, அச்சு ஊடகங்களும் சரி, மின் ஊடகங்களும் சரி அவருடைய மறைவுக்கு அளித்த முக்கியத்துவமும், அவரைப் பற்றி மக்களுக்கு என்னென்ன சேரவேண்டுமோ, எப்படி எப்படிச் சேரவேண்டுமோ அத்தனையையும் சரிவர வகைப்படுத்தி, முறைப்படுத்தி, தோண்டித் துருவியெடுத்து மக்கள் முன் வைத்த விதமும் சரி, அந்தப் பெருங்கலைஞர் நினைவுகூறப்பட்ட விதமும் சரி பாராட்டுக்குரியவை.

கடைக்கோடித் தமிழனுக்கும் அவர் யார் அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் ஐயம் திரிபற சொல்லப்பட்டுவிட்டன. 

இனிமேல் இணைய பிஸ்கோத்துகளின் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கேயும் எடுபடப்போவதில்லை. இவர்கள் பாட்டுக்கு இணையச்சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.

எல்ஆர்ஈஸ்வரி மனதில் பட்டதை அங்கேயே அப்படியே கொட்டிவிடும் சுபாவம், நாசுக்கெல்லாம் தெரியாது. எம்எஸ்வியின் இறுதி ஊர்வல நேரலையின்போது புதிய தலைமுறை டிவியில் எம்எஸ்வி போட்ட ஒரு வித்தியாசமான பாடலைச் சொல்லும்போது ‘இளையராஜாவும் அப்படிப் பின்னால் போட்டார்’ என்று மற்றவர் சொல்லப்போக “எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது.

ஜெயா டிவியில் சுதாங்கன் நடத்திய ‘என்றும் நம்முடன் எம்எஸ்வி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா ஒரு கேள்வி எழுப்பினார். 


“எல்லாம் சரி; எம்எஸ்வி வாசித்த ஆர்மோனியம் இப்போது எங்கிருக்கிறது? அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்? அதனை எங்கே வைக்கப்போகிறார்கள்? அதனை உபயோகிக்கும் அருகதையோ தகுதியோ இங்கே யாருக்குமே இல்லையே, அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்?” என்றார்.


மில்லியன் டாலர் கேள்வி இது.

Friday, August 21, 2015

எம்எஸ்வி – ஒரு சகாப்தம் நிறைந்தது! – பகுதி 1

 
இனிமேல் இப்படி ஒருத்தர் பிறக்கப்போவதில்லை’- இந்த வார்த்தையை எல்லாருக்கும் சொல்லிவிடமுடியாது. இம்மாதிரியான வார்த்தைக்கு வெகு சிலர் மட்டுமே தகுதியானவர்களாக இருப்பார்கள். அப்படியொரு தகுதிக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1930 களிலிருந்து பேசும்படம் என்ற திரைப்படம் மக்களைக் கவருகின்ற நிலைமைக்கு வந்தபோது நடிப்பு, பாடல் வசனம் என்ற மூன்று அம்சங்களே தியேட்டரை விட்டு வந்தபிறகும் திரைப்பட ரசிகனை பித்துப்பிடித்துப் போகச் செய்யும் நிலைமைக்குத் தள்ளியது. தியேட்டருக்குப் போனவனை மட்டுமல்ல, போகாதவனையும் இழுத்துக் கட்டிப்போட்டது பாடல். அவனே அறியாதவண்ணம் அவன் முணுமுணுக்கும்படி அவனுடைய மனதிலும் உதட்டிலும் தானாகவே வந்து உட்கார்ந்துகொண்டது பாடல். பாடலை வைத்து மக்களை முதலில் கவர்ந்தவராக எம்கேடியைத்தான் சொல்லமுடியும். எம்கேடிக்காக எப்படிக் காத்திருந்தார்கள், எப்படிக் குவிந்தார்கள், எப்படி முண்டியடித்தார்கள், எப்படிப் பித்துப் பிடித்து அலைந்தார்கள் என்பதையெல்லாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.

ஆரம்பத்தில் புராண இதிகாசத் திரைப்படங்களின் மூலம் வளர்ந்த இசை பெரிதும் கர்நாடக சங்கீதத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கர்நாடக சங்கீதம் குதிரைவண்டி ஓட்டுபவர்களையும், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களையும்கூடக் கவர்ந்திருந்தது என்பதைக் கல்கி சுப்புடு போன்றவர்களின் விமர்சினங்களிலிருந்து அறிகிறோம். நாற்பதுகளில் இந்தவகையான இசையின் மூலம் எம்கேடி, பி.யூ.சின்னப்பா, தண்டபாணி தேசிகர், எம்எஸ்சுப்புலட்சுமி போன்றோர் மிகமிகப் புகழ்பெற்றவர்களாக பவனி வந்தனர்.

அதற்கடுத்து சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்சௌந்தரராஜன் என்ற நீட்சி ஏற்பட்டது. கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் உலா வந்துகொண்டிருந்தபொழுது அதற்கேற்ப அதனை இயற்றுபவர்கள் மற்றும் இசையமைப்பாளர்களாக பாபநாசம் சிவனும் எஸ்விவெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் போன்ற இசையமைப்பாளர்களும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். கால மாறுதலுக்கேற்ப முழுக்க முழுக்க கர்நாடகப் பாணியிலிருந்த இசையைக் கொஞ்சம் கொஞ்சமாக எளிமைப்படுத்தி ஜனரஞ்சக நிலைமைக்குக் கொண்டுவரும் காரியத்தை ஜி.ராமனாதனே ஆரம்பித்துவிட்டார். இந்த மாற்றம் அவரை ‘ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்’ என்ற ஆங்கில இசையைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட்டிச்சென்றது.

இதே கால கட்டங்களில் இந்தித் திரையுலகிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. சைகல், பங்கஜ் மல்லிக் போன்றோரால் பாடப்பட்ட ஜனரஞ்சகப் பாடல்கள் இந்தியா முழுக்கப் புகழ் பெற்றுவந்தன. இதன் தாக்கம் தமிழ்ப் படங்களையும் விட்டுவைக்கவில்லை. பல திரைப்படங்களில் இந்தி மெட்டுக்களில் தமிழ் வார்த்தைகளை உட்காரவைத்து இயற்றப்பட்ட பாடல்களேகூட வந்துகொண்டிருந்தன.

ஏறக்குறைய இந்த சமயத்தில்தான் விஸ்வநாதனின் திரைப்பிரவேசமும் நடந்தேறுகிறது. முதலில் திரைத்துறையில் ஒரு சாதாரண ஆபீஸ்பையனாகத்தான் சேருகிறார் விஸ்வநாதன். தன்னுடைய எஜமானர் எஸ்எம்சுப்பையா நாயுடு உபயோகப்படுத்தும் ஆர்மோனியப் பெட்டியில் அவர் இல்லாத சமயத்தில் திருட்டுத்தனமாகத்தான் சில டியூன்களை வாசித்துப் பார்க்கிறார். மறுநாள் தமது ஆர்மோனியப்பெட்டி இடம் மாறியிருப்பதை அறிந்த எஸ்எம்எஸ் காரணம் கேட்கிறார். 

உதவியாளராக இருந்த ஜிகேவெங்கடேஷ் போட்டுக்கொடுத்து விடுகிறார். “நீங்க நேத்து எத்தனை முயற்சி பண்ணியும் வரலையே அந்த டியூனை இந்தப் பையன் நீங்க இல்லாத சமயத்தில் எடுத்து வாசிச்சான்”

“அப்படியா எதோ வாசிச்சுக்காட்டு” என்று உறுமுகிறார் எஸ்எம்எஸ்.

பயந்தபடியே ஆர்மோனியத்தை எடுத்து வாசிக்கிறார் விஸ்வநாதன்.

“சரி அப்படியே இந்த டியூனை நீதான் வாசிச்சேன்னு யாருகிட்டேயும் சொல்லாதே” என்கிறார் எஸ்எம்எஸ்.

இப்படி ஆரம்பமாகிறது விஸ்வநாதனின் இசை உலகம்.

அதன்பிறகு அவர் சி.ஆர்.சுப்பராமனிடம் சேர்ந்ததும் சிஆர்எஸ் திடீரென்று மரணமடைந்துவிட அவரால் முடிக்கப்படாமல் இருந்த மூன்று திரைப்படங்களை விஸ்வநாதனும் அதே குழுவில் வயலினிஸ்டாக இருந்த ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்ததும் அதைப் பார்த்த கலைவாணர் என்எஸ்கே அவர்கள் இருவரையும் ஒன்றிணைத்து “நீங்கள் இருவரும் சேர்ந்து இந்தியில் சங்கர் ஜெய்கிஷன் மாதிரி இங்கே ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ இரட்டையர்களாக இருந்து பணியாற்றுங்கள்” என்று சொல்லி அவரது ‘பணம்’ படத்திற்கு முதன்முதலாக இவர்களை அறிமுகப்படுத்தியதும் வரலாறு.

உண்மையில் வரலாறு என்பது இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

இப்படி ஆரம்பமான வரலாறு சாதாரண வரலாறு அல்ல. தமிழ் சினிமாவிற்கு 1952-ம் ஆண்டு என்பது ‘பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய’ என்றெல்லாம் சொல்வார்களே அப்படிப்பட்டதொரு ஆண்டுதான்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜிகணேசன் என்ற மாபெரும் கலைஞன் இந்த ஆண்டில்தான் திரைத்துறைக்கு வருகிறார்.

அதற்கு முன்பே எழுத ஆரம்பித்துவிட்டாலும் கலைஞர் கருணாநிதி என்ற திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போட்ட வசனகர்த்தா, பராசக்தி படத்தில் சிவாஜிக்கான வசனங்களை எழுதுகிறார்.

ஒரு வசனகர்த்தாவாக சில படங்களிலும் கவிஞராக ஒன்றிரண்டு பாடல்களைச் சில படங்களிலும் எழுதிவந்த கவிஞர் கண்ணதாசன் முழுப் படத்திற்கும் பாடலாசிரியராக அறிமுகமானதும் இந்த 1952ல்தான். அதுவும் இவர்கள் இசையமைத்த பணம் படத்தில்தான்.

பணம் படத்தில் மொத்தம் பனிரெண்டு பாடல்கள். அவற்றில் ‘பசி என்று வந்தால்’ என்ற பாடலை மட்டும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுத மீதி பதினோரு பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.

அந்தப் பாடல்களில்குடும்பத்தின் விளக்கு நல்ல குடும்பத்தின் விளக்கு’ என்று எம்எல்வி பாடிய பாடலும், ‘எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்” என்ற கலைவாணர் பாணிப் பாடலும் அந்தக் காலத்திலேயே சூப்பர் ஹிட். இன்னும் இரண்டு பாடல்களும் பிரபலம்.

‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன்’ என்று தமிழ்நாட்டின் அடுத்த ஏழேழு ஜென்மங்களுக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்களை இயற்றும் கூட்டணி 52ம் ஆண்டே ஏற்பட்டுவிட்ட போதிலும் ஏற்கெனவே இருக்கும் ஜாம்பவான்களுடன் ஈடுகொடுக்கும் காரியத்தைத்தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியால் செய்துவர முடிந்தது.

அவர்களின் சண்டிராணி, மருமகள், ஜெனோவா, சொர்க்கவாசல், சுகம்எங்கே, காவேரி என்ற படங்களிலெல்லாம் ஓரிரு பாடல்களை மட்டும்தான் பிரபலமான பாடல்களாக உருமாற்ற முடிந்தது. குலேபகாவலியில் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ’ பாடல் கேவிமகாதேவனுடையது. தயாரிப்பாளரின் நிர்ப்பந்தத்தால் அந்தப் பாடலை இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட கேவிஎம்மும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். 

ஆனாலும் இந்தப் படத்தில் ஜமுனா ராணி பாடிய ‘ஆசையும் என் நேசமும்’ பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல்களில் ஒன்று.

1957ல் பிஎஸ்ரங்காவின் பக்த மார்க்கண்டேயா புராணப்படத்திற்கு பதினைந்து பாடல்களை அமைக்கிறார்கள். அத்தனையும் சுத்தமான கர்நாடக மெட்டில் அமைந்த பாடல்கள்.

அதே ஆண்டில் சிவாஜி பத்மினி நடித்து வருகின்ற புதையல் படம்தான் பளீரென்று இவர்கள் மீது வெளிச்சத்தை வாரி இறைக்கிறது.

பால்மணம் மாறாத முகத்துடனும் சின்ன வயதுத் துள்ளல்களுடனும் சிவாஜியும், கொள்ளை அழகுடனிருக்கும் பத்மினியும் கடற்கரையில் துள்ளிக்குதித்து ஓடிப் பாடும் பாடல் ஆத்மநாதன் எழுதி சிதம்பரம் ஜெயராமன் பி.சுசீலா பாடும் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ தமிழ் நல்லுலகெங்கும் பட்டையைக் கிளப்புகிறது.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தின் ‘சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி’ என்ற பாடலும், ‘தங்கமோகனத் தாமரையே’ என்று சுசீலாவின் இன்னொரு பாடலும் ஒருபுறம் பிரபலமாக, சந்திரபாபுவின் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ பாடலும் ‘ஹல்லோ மைடியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி’ பாடலும் ஹிட்டடிக்கின்றன.

அடுத்து கண்ணதாசன் வசனத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்துகிற படம் எம்ஜிஆர் நடித்த மகாதேவி. தஞ்சை ராமையா தாஸ், மருதகாசி, பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் ஆகிய பெரிய கவிஞர்கள் எழுதியிருந்தபோதிலும் கண்ணதாசனின் ‘சிங்காரப் புன்னகைக் கண்ணாரக் கண்டாலே சங்கீதவீணையும் ஏதுக்கம்மா?’, ஏ.எம்.ராஜா-பி.சுசீலாவின் ‘கண்மூடும் வேளையிலும் கலை என்னக் கலையே’, டி.எஸ்.பகவதியின் ‘மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு’ மூன்று பாடல்களும் பெரிய அளவில் பிரபலமாகின்றன.

இதற்கு அடுத்த வருடம்தான் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ‘பொற்கால ஆண்டு துவங்குவதற்கான’ கால்கோள் போடப்பட்ட ஆண்டாகச் சொல்லவேண்டும். ஆமாம் 1958 ல்தான் பிற்காலத்தில் பாவன்னா வரிசைப் படங்களின் மூலம் யாராலும் விஞ்சமுடியாத பாடல்களைத் தந்த பீம்சிங்குடன் முதன்முதலாக இணைகிறார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. அதற்கான முதல் படம் பதிபக்தி. சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சந்திரபாபு நடித்த இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்தப் படத்தில் வீடுநோக்கி ஓடிவந்த நம்மையே, இரைபோடும் மனிதருக்கே, ராக்ராக்ராக் ராக்அண்ட் ரோல், வீடுநோக்கி ஓடிவந்த என்னையே(சோகம்) இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம், கொக்கர கொக்கரக்கோ சேவலே, சின்னஞ்சிறு கண்மலர் என்று ஏழு எட்டுப் பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.
                                        

இந்தப் படத்திலிருந்து அவர்களுக்கு ஏதோ ஒரு சூட்சுமம் கிடைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதே ஆண்டில் வெளிவந்த ‘மாலை இட்ட மங்கை’ விஸ்வநாதன் ராமமூர்த்தியை மட்டுமல்ல, கண்ணதாசனையும் கோபுர உயரத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. தயாரிப்பு, வசனம், பாடல்கள் என்று களமிறங்குகிறார் கவிஞர். டி.ஆர்.மகாலிங்கத்தின் உச்ச ஸ்தாயிக் குரலில் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே, திங்கள் முடி சூடும் மலை, செந்தமிழ்த் தேன்மொழியாள்’ மூன்று பாடல்களும் தமிழ்நாட்டைக் கலங்கடிக்கின்றன. அது திமுக வளர்ச்சிப் பாதையில் இருந்த காலகட்டம். நாடெங்கும் வீடெங்கும், தெருவெங்கும் திமுக பற்றிய பேச்சும் தாக்கமும் இருந்த காலகட்டம்.

தமிழ், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என்று தமிழர்கள் மத்தியில் உணர்வுகள் முளைத்தெழுந்த ஆரம்ப நாட்கள்………….. அந்தச் சமயத்தில் வந்த ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடலும், ‘திங்கள்முடி சூடும் மலை’ ஆகிய பாடல்களும் கட்டி எழுப்பிய உணர்வுகளை சாதாரணமாகச் சொல்லமுடியாது. அந்த எழுச்சிமிக்க கொந்தளிப்பான உணர்வுகளுக்குத் தேன்பூசுவதுபோல் அமைந்த பாடல்தான் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்……………’
இந்தப் பாடல்கள் எல்லாம் ஏதோ சில பாடல்கள் எழுப்பும் உணர்வுகளைப்போல் ‘என்னுடைய காதல் கனவுகளை மீட்டெடுத்தது, நடுவில் வரும் ட்ரம்பெட்டும் கிடாரும் மனோலயத்தில் பதிந்தது, அந்தப் பாடலின் இசை என்னை எங்கோ கூட்டிச்சென்றது’ என்று யாருக்குமே தோன்றாமல் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் எழும்பும் சோலோ உணர்வல்ல.

மொத்தத் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டுப் புரட்டியெடுத்த பாடல்கள் இவை.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

கண்ணதாசன் என்ற ஒரு கவிஞர் தமிழ்நாட்டின் ஏனைய பெரிய பிரபலங்களுக்கு நிகராக உருவெடுக்கிறார்.

நாடு பூராவும் அவரை அழைத்துக் கூட்டங்கள் போடுகிறார்கள். திமுகவின் அரசியல் கூட்டங்களை மட்டும் இங்கே சொல்லவில்லை. தமிழ்நாடு பூராவிலும் இருக்கும் கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை அழைக்கின்றன. நாடு பூராவிலும் படிப்பகங்களும், இலக்கியக்கூட்டங்களும் அவரை அழைத்து அவரது கையால் துவங்கப்படுகின்றன.

மிகப்பெரிய நிறுவனங்கள் சார்பாக அவரை அழைத்து தமிழ்ச் சங்கங்களும் தமிழ் அமைப்புக்களும் ஆரம்பிக்கப் பெறுகின்றன. பெங்களூரின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிஐ என்ற இந்தியன் தொலபேசித் தொழிற்சாலைக்கூட அவரை அந்தச் சமயத்தில் அழைத்துத்தான் தங்கள் ‘தமிழ்ச் சங்கத்தை’த் துவக்குகிறது.

அதிகபட்சமாக அவருக்கு அன்றைய நிலையில் இருபத்து மூன்றோ இருபத்து நான்கோ வயதிருக்கலாம். அந்த இளம் வயதில் ஒருவரை அழைத்து தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புக்களும், மாணவர் அமைப்புக்களும் பெரிய நிறுவனங்களின் சார்பில்கூடத் துவங்கும் பணிகள் நடைபெறுகின்றன என்றால் – அதுவும் ஒன்றோ இரண்டோ அல்ல, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் துவகப்படுகின்றன என்றால் அந்தப் பாடல்களின் தாக்கமும் வீச்சும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் அவருக்குப் பிறகு இதுநாள்வரைக்கும் அம்மாதிரியான தாக்கம் எந்த ஒரு கவிஞருக்கும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.

அவருடைய இந்தப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசென்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவர்தாம்.

அந்தப் பாடல்கள் கண்ணதாசனை மக்கள் மத்தியில் கொண்டுசென்றதோடு நின்றுவிடவில்லை. 

அந்தப் பாடலைப் பாடிய டி.ஆர்.மகாலிங்கமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

அன்றைய தினத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற திமுக கூட்டங்களில் தோன்றி மூன்று பாடல்களையும் அவர் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாடினார். திமுக கூட்டங்களுக்கு இந்தப் பாடல்கள் அறிவிக்கப்படாத கொள்கை முழக்கப் பாடல்கள்போல் ஆயிற்று. இந்தப் பாடல்களைப் போட்டுத்தான் திமுக பொதுக்கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

                                     

திங்கள்முடி சூடும்மலை பாடலும், எங்கள் திராவிடப் பொன்னாடே பாடலும் தமிழ்நாட்டின் சிறப்புகளை மட்டும் எடுத்தியம்பும் கொள்கைப் பாடல்களாக இருப்பதாகக் கருதிய இலங்கை வானொலியும் நம் நாட்டு ஆகாசவாணியும் இரண்டு பாடல்களுக்கும் தடை விதித்தன. ஆனாலும் என்ன? மக்கள் மத்தியில் பரவிவிட்ட இரு பாடல்களையும் எந்த சக்தியாலும் தடுக்கமுடியவில்லை.

இந்த நிலைமை கண்ணதாசன் திமுகவில் இருக்கும்வரைக்கும் தொடர்ந்தது. அவரது விலகலைத் தொடர்ந்து முதல் இரு பாடல்களும் பரவலாக ஒலி பரப்புவது தடைபெற்றதே தவிர செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் ரசிக்கத் தகுந்த பொதுப் பாடல்கள் வரிசையில் சேர்க்கப்பட்டு இன்று வரைக்கும் எல்லாராலும் விரும்பப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் இத்தனை விரிவாகச் சொல்லுவதற்குக் காரணம், ஏதோ சில பாடல்கள் ஏதோ காரணங்களால் சிலரால் விரும்பப்பட்டு அவர்களால் திரும்பத் திரும்ப டேப்பிலோ ஐபாடிலோ நிரப்பப்பட்டு திரும்பத் திரும்ப ‘அவர்களால் கேட்கப்படுவதால் ‘மட்டுமே’ மிகச்சிறந்த பாடல் என்ற அபிப்ராயத்துக்கு அவர்கள் தாமாகவே வந்து அதனையே கிளிப்பிள்ளைபோல் பொதுத் தளங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பெரிய தாக்கம் என்பது இம்மாதிரியான தாக்கங்கள்தாம். இம்மாதிரியான தாக்கங்கள் ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் நிகழலாம் இம்மாதிரித் தாக்கத்தைச் செய்த இன்னொரு பாடலாக எம்ஜிஆர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது தெருவெல்லாம் முழங்கிய ‘இறைவா உன் காலடியில்’ என்ற வாலி எழுதிய பாடலைத்தான் சொல்லமுடியும். 

ஆனால் இதன் தாத்பர்யம் வேறு மாதிரியானது. எப்படி இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் ஒரு பெரிய  தாக்கத்தை உருவாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலும் எம்எஸ்வியால் இசையமைக்கப்பட்டதுதான் என்பதையும் இங்கு சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.

“பதிபக்தி”யில் ஆரம்பிக்கப்பட்ட விஸ்வநாதன் ராமமூர்த்தி பயணம் எப்படி வெற்றிமேல் வெற்றியை மட்டுமே தந்துகொண்டிருந்ததோ அதுபோலவே “மாலையிட்ட மங்கை”யில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணதாசனின் பயணமும் அவரை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டுசென்று கொண்டே இருந்தது. “மாலைஇட்ட மங்கை”யில் மொத்தம் பதினேழு பாடல்கள்.

எடுத்த எடுப்பிலேயே ஏழரைக் கட்டையில் பாடத்துவங்கும் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து மிகமிக கீழ் ஸ்தாயியில் பாடுவதுபோல் ஒரு பாடல் ‘நானன்றி யார் வருவார்?’ என்ற பாடலைக் கம்போஸ் பண்ணிப் பாடவைக்கிறார்கள் வி.ரா குழுவினர். அந்தச் சமயம் ரிகார்டிங் தியேட்டர் பக்கம் வந்த இசையமைப்பாள ஜாம்பவான் ஜி.ராமனாதன் இந்தப் பாடலைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டாராம். 

“என்ன இந்தப் பசங்களுக்கு புத்தி பேதலித்துப் போய்விட்டதா? டி.ஆர்.மகாலிங்கம் தொண்டை எப்பேர்ப்பட்ட தொண்டை? எடுத்த எடுப்பிலேயே ஏழரைக் கட்டையில் சீறிப்பாயும் தொண்டை அது. 

அவரைப் போய் கீழ் ஸ்தாயியில் பாட வைத்து சோதனை செய்திருக்கிறார்களே………… இவர்களும் கவிழ்ந்து மகாலிங்கத்தையும் ஒன்றுமில்லாமல் செய்யப்போகிறார்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.

ஆனால் முடிவு வேறுமாதியாய் வந்தது. டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘நான் அன்றி யார்வருவார்’ பாடலும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலுக்கு இணையாக ஹிட் அடித்தது. இந்தப் பாடலின் வெற்றியைப் பார்த்த ஜி.ராமனாதன் “அடே இவங்க ரொம்பப் பெரிய ஆளா இருக்காங்கப்பா” என்று வி.ரா ஜோடியைப் பார்த்து வியந்தாராம். இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய ‘இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார்’ பாடலும் செம பிரசித்தமாயிற்று. எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ‘மழைகூட ஒருநாளில் தேனாகலாம்’ பாடல் கண்ணதாசனின் பிரபல தாலாட்டுப் பாடல்களுக்குக் கட்டியம்கூறிய பாடலாக விளங்கிற்று.

அடுத்த படம் ‘அமுதவல்லி’. இதிலும் டி.ஆர்.மகாலிங்கத்தின் ராஜ்ஜியம்தான். அவரது புகழ்பெற்ற பாடலான ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ இந்தப் படத்தில்தான். அதற்கடுத்து மறுபடியும் கண்ணதாசன் புரொடக்ஷனில் ‘சிவகங்கைச் சீமை’. சீமைக்கு அடுத்த படம் ‘தங்கப் பதுமை’. அதற்கடுத்து எஸ்எஸ்ஆரின் ‘தலைகொடுத்தான் தம்பி’ – இந்தப் படத்திற்கு அடுத்து வந்த படம்தான் ‘பாகப்பிரிவினை’. மறுபடியும் சிவாஜி மற்றும் பீம்சிங்.

மிகப் புகழ் பெற்ற ‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்’ பாடலும், ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ பாடலும் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’ பாடலும் இந்தப் படத்தில்தான். ‘தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து’ பாடலும் இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்திற்குப் பல்வேறு சிறப்புக்கள் உண்டு. இந்தப் படத்தின் சிவாஜிகணேசன் நடிப்பைப் பார்த்துத்தான் ‘பதினாறுவயதினிலே’ கமல் சப்பாணி வேடத்தில் நடித்தார் என்று சொல்வார்கள். மிகக் குறைந்த மூன்றே மூன்று இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலை வி.ரா போட்டார்கள் என்று சொல்வார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதிய கடைசிப் படம் இதுதான். ‘பிள்ளையாரு கோவிலுக்குப்’ பாடலும், ‘ஆட்டம் ஆட்டம் ஆட்டம்’ பாடலும் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டவை. கண்ணதாசன் பற்றியும் ஒரு சிறப்பான தகவல் உண்டு.

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான (இவருக்குப் பின்னர் நாட்டுப்புறப் பாடல்களைச் சிறப்பாக எழுதிய கவிஞர் யாருமில்லை) கவிமணி என்ற கொத்தமங்கலம் சுப்பு – அதுதான் தில்லானா மோகனாம்பாள் எழுதியவர் – அந்தக் காலத்தில் எஸ்எஸ்வாசன் குழுவினரில் ஒருவராக இருந்தவர். ‘ஔவையார்’ படத்தின் சிறப்புக்கு எஸ்எஸ்வாசனை விடவும், கொத்தமங்கலம் சுப்புவே பெரிதும் காரணம் என்று புகழப்பட்டவர். ஜெமினியின் கதை இலாகாவுக்குத் தலைவரும் இவர்தான். அவர், தாம்சிறப்பாகப் பணியாற்றிய ‘ஔவையார்’ படத்தில் ஒரேயொரு காட்சியில் கவிஞராகவே வருவாராம். புலவர் பெருமக்கள் ஒரு குழுவாக நடந்துவரும் ஒரு காட்சி படத்தில் உண்டாம். படம் பார்த்த தமிழறிஞர்கள் சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்திருக்கிறார்கள். ஔவையார் படைப்புக் குறித்துச் சிலாகித்தவர்கள் “அந்தப் படத்தின் ஒரு காட்சியில் நீங்கள் ‘கவிஞராக’ நடந்து வருகிறீர்கள் பாருங்கள். அது அபாரம். ஒரு கவிஞனின் ‘ராஜநடை’ என்பது அதுதான். உங்கள் நடையில்தான் ஒரு கவிஞனுக்குரிய கம்பீர நடையைக் கண்டோம்” என்றார்களாம்.

அதற்கு கொத்தமங்கலம் சுப்பு சொன்னாராம் “ஐயா ஔவையார் படத்தில் நான் நடந்து வருவது ஒரு சாதாரண நடைதான். ஒரு கவிஞனின் ‘கம்பீர நடையை’ நீங்கள் பார்க்கவேண்டும்  என்றால் பாகப்பிரிவினை படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து’ என்று என்று ஒரு பாட்டு வரும். நம்ம கவிஞர் கண்ணதாசன் ‘பாட்டாலேயே ஒரு நடை’ போட்டிருப்பார் பாருங்கள். ஒரு கவிஞனின் ‘ராஜநடை’ என்பதும் அதுதான். ‘கம்பீர நடை’ என்பதும் அதுதான்” என்றாராம்.

1960-ம் ஆண்டு ‘ஆளுக்கொரு வீடு’ படத்துடன் வெற்றி தொடங்குகிறது விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு. சிலோன் வானொலியில் அந்த நாட்களில் பட்டுக்கோட்டையாரின் பாடலான ‘அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா’ பாடல் ஒலிக்காத நாளே இல்லை. சுருதி சுத்தமான டூயட் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குக் கண்களை மூடிக்கொண்டு இப்பாடலை ஒரு இலக்கணமாகச் சொல்லலாம். பிபிஸ்ரீனிவாசும் பி.சுசீலாவும் மயிலிறகால் காதுகளையும் நெஞ்சத்தையும் தடவிக்கொடுக்கும் பாடல் இது. ‘செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்’ அந்தப் படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல்.

மறுபடியும் கண்ணதாசன் புரொடக்ஷனில் ‘கவலை இல்லாத மனிதன்’ சந்திரபாபுவைக் கதாநாயகனாகக் கொண்டு வருகிறது. மொத்தம் எட்டுப் பாடல்கள். எட்டுப் பாடல்களிலும் பிரித்துப்போட்டு விளையாடியிருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். சந்திரபாபு பாடிய மிகவும் புகழ்பெற்ற பாடலான ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்’ இந்தப் படத்தில்தான். கண்ணதாசன் தத்துவப் பாடல்களில் முக்கியமான இடம்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ‘கவலையில்லாத மனிதன்’ பாடலையும் சந்திரபாபு பாடியிருப்பார். ‘நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா?’ டி.ஆர்.மகாலிங்கத்தின் மற்றொரு புகழ்பெற்ற பாடல். பெண்களின் குரல்களில் ‘சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்’ பாடலை பி.சுசீலாவும், ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ மற்றும் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடல்களை ஜமுனா ராணியும், ‘கண்கொடுத்தது போலே’ பாடலை டிஎம்எஸ்ஸும் ஜிக்கியும் பாடியிருப்பார்கள். ‘கண்ணோடு விண்பேசும் ஜாடை’ என்றொரு கூட்டிசைப் பாடலும் உண்டு.

அடுத்து வந்தது ‘மன்னாதி மன்னன்’. எம்ஜிஆருக்கு உயர்வையும் ஏற்றத்தையும் தந்த படங்களில் இதுவும் ஒன்று. கதை வசனம் கண்ணதாசன். ‘அச்சம் என்பது மடமையடா’ இந்தப் படத்தில்தான். தாறுமாறாக ஹிட் அடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெளிநாடுகளில் மட்டுமே டேப் ரிகார்டர் வந்திருந்து இந்தியாவுக்குப் பரவலாக வருவதற்கு முன்பு எம்ஜிஆர் சிவாஜி போன்று வெகு சிலரே டேப்ரிகார்டரெல்லாம் வாங்கிவைத்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் டேப்பில் இந்தப் பாடலைத்தான் முதன்முதலாகப் பதித்துக்கொண்டாராம் எம்ஜிஆர். பின்னர் அவர் முதலமைச்சரான பிற்பாடும் கோட்டைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போதெல்லாம் இந்தப் பாடலைத்தான் காரில் ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டே வருவாராம். கண்ணதாசன் அஞ்சலிக்கூட்டத்தில் எம்ஜிஆரே இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல “என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளும் பிரச்சினைகளும் வந்தபோதெல்லாம் நான் என்னைத் ‘தயார்ப்படுத்திக்கொள்ள’ இந்தப் பாடலைத்தான் போட்டுக் கேட்பேன்” என்று சொன்னதுடன் “அந்தப் பாடலை இதோ இப்போது நீங்களும் கேளுங்கள்” என்று சொல்லி அந்த மேடையிலேயே அச்சம் என்பது மடமையடா பாடலை இசைக்கவும் செய்தார் எம்ஜிஆர்.

எம்எல்வசந்தகுமாரி, டிஎம்எஸ் டூயட்டாக வந்து இன்றளவும் கர்நாடக இசை ரசிகர்களால் விரும்பப்படும் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும்’ என்ற அழகிய மெட்டைக்கொண்ட மருதகாசியின் பாடல். ‘கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ என்று பி.சுசீலாவும் டிஎம்எஸ்ஸும், ‘நீயோ நானோ யார் நிலவே’ என்ற பி.சுசீலா, ஜமுனாராணி, பிபிஸ்ரீனிவாஸ் பாடும் புகழ்பெற்ற பாடல்களும் உண்டு. ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ என்ற பி.சுசீலாவின் பாடலை சென்னை வானொலி தனது நேயர் விருப்பத்தில் பல வருடங்களுக்கு – ஆமாம் பல வருடங்களுக்குத்- தொடர்ச்சியாக ஒரு வாரம்கூடத் தவறாமல் ஒலிபரப்பிற்று.

இதுவரையில் இன்னொரு பாடல் இந்த அளவுக்கு சென்னை வானொலியால் ஒலிபரப்பப் பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. 

இந்தப் படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள்.1961-ம் ஆண்டில் வந்த ‘பாக்கியலட்சுமி’ படம் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வழித்தடங்கள் எப்படியிருக்கப்போகின்றன என்பதை பட்டவர்த்தனமாக அறிவித்த படம். நாராயணன் கம்பெனி சார்பில் கே.வி.சீனிவாசன் கதைவசனம் இயக்கத்தில் வந்த படம் இது. விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைப் பதித்த படங்களில் இதுவும் ஒன்று. மொத்தம் பதினோரு பாடல்கள். கிட்டத்தட்ட ஒன்பது பாடல்கள் சூப்பர் ஹிட். மற்ற இரு பாடல்கள் கர்நாடக சங்கீத ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற பாடல்கள். பாபநாசம் சிவனின் இரண்டு பாடல்களும் இந்தப் படத்தில் உண்டு..

பி.சுசீலாவின் புகழ் மகுடத்தில் எந்நாளும் அமர்ந்திருக்கும் ஐந்து பாடல்கள் இந்தப் படத்தில். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘காணவந்த காட்சிஎன்ன வெள்ளி நிலவே’, ‘காதலெனும் வடிவம் கண்டேன்’, ‘கண்ணே ராஜா கவலை வேண்டாம்’, ‘அம்மா அம்மா கவலை வேண்டாம்’ என்று ஐந்து பாடல்கள். ஐந்தும் ஐந்து தேன் ஆறுகள்.

சிங்காரச் சோலையே உல்லாச வேளையே’, ‘காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ’, ‘பார்த்தீரா ஐயா பார்த்தீரா’ என்ற மூன்று பாடல்களையும் ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரை வைத்துப் பின்னியிருப்பார்கள்.

‘வரலட்சுமி வருவாயம்மா’ ராதா ஜெயலட்சுமி பாடிய இந்தப் பாடல் கர்நாடக சங்கீத ரசிகர்களின் சொத்து. இன்றைக்கும் வரலட்சுமி விரதம் கொண்டாடும் வீடுகளில் இந்தப் பாடலுக்கு நிரந்தர இடம்.

இந்தப் படத்தில் வரும் ‘காணவந்த காட்சியென்ன வெள்ளிநிலவே’ பாடலைத் தனியாகக் குறிப்பிட வேண்டும்.

திரைப்படத்தில் பாடல்களும் அதற்கேற்ப காட்சிகளும் அமைக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் கதை, அதற்கேற்ப காட்சி, அந்தக் காட்சிக்கேற்ற பாடல் இவை அத்தனையையும் ஒருங்கிணைக்கும் இசை என்று எல்லாமே ஒரு புள்ளியில் அமைவது மிகச் சில படங்களிலும் மிகச்சில பாடல்களிலும் மட்டுமே சாத்தியம். படத்தின் இயக்குநர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அத்தனைப் பேரின் திறமையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் இது.
இந்த அபூர்வ இடம் அவ்வளவு சுலபத்தில் படங்களில் அமைந்துவிடாது. பிற்காலத்தில் அப்படி அமைந்த பாடலாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த ‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ பாடலைச் சொல்லுவார்கள். ‘பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் மூன்றுபேரும் ஒரே இடத்தில் கைகுலுக்கிக்கொண்ட இடம் இது’ என்று புகழ்ந்து எழுதியிருந்தது குமுதம்.

சிவாஜி நடித்த ‘குலமகள் ராதை’ படத்தில் ஒரு காட்சி வரும். அந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் சந்திரன். அவர் சர்க்கஸ் கலைஞராக வருவார். சரோஜாதேவி அவரது முன்னாள் காதலி. காதலியைப் பிரிந்து நாயகன் சென்று விடுவார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் பங்குபெறும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் சரோஜாதேவி வசிக்கும் ஊருக்கு வரும். சர்க்கஸில் தன்னுடைய காதலன் பங்கேற்றிருப்பதை அறிந்து அவரைச் சந்திக்க சர்க்கஸ் கூடாரத்திற்கு வருவார் சரோஜாதேவி. இதற்குள் சர்க்கஸில் பங்குபெறும் இன்னொரு பெண் சிவாஜியைக் காதலிக்க ஆரம்பித்திருப்பார். இந்த நிலையில் அங்குவரும் சரோஜாதேவி அந்தப் பெண்ணைச் சந்தித்து “சந்திரனைப் பார்க்கவேண்டும்” என்பார்.

சந்திரன் பங்கு பெறும் பார் நிகழ்ச்சி அன்று மாலையில்தான் இடம்பெறும். “எனவே நீ மாலை வந்தால் சந்திக்கலாம்” என்பாள் அந்தப் பெண். மாலையில் அங்கே செல்வார் சரோஜாதேவி. பார் விளையாட்டு நடந்துகொண்டிருக்கும். சிவாஜி மேலே பாரில் விளையாடிக்கொண்டிருப்பார். அந்தச் சூழல் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புவார் சரோஜாதேவி. இது காட்சி. இந்தக் காட்சியில் ஒரு பாடல். கவிஞரின் பாடல். இசை கே.வி.மகாதேவன். அகிலன் கதையை இயக்கியிருந்தவர் ஏ.பி.நாகராஜன். பாடல் இப்படித் துவங்குகிறது.

பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடந்தேன் – அவன்
எல்லார்க்கும் தெரியும்படி உயரத்தில் இருந்தான்…………
சந்திரன், இரவு என்ற இரு விஷயங்களை வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார் கண்ணதாசன். 

காட்சி அருமையையும் பாடல் வரிகளையும் இணைத்து ரசித்தனர் இலக்கிய ஆர்வலர்கள்.
இதுபோல பாக்கியலட்சுமியில் ஒரு காட்சி.

ஜெமினிகணேசனுக்கும் சௌகார் ஜானகிக்கும் சிறுவயதில் பால்யவிவாகம் நடைபெறுகிறது. எப்படியோ பிரிந்துவிடுகின்றனர். தனக்குக் குழந்தை வயதில் திருமணமாகி கணவனை இழந்துவிட்டோம் என்ற நினைப்பில் வெள்ளைச் சேலை அணிந்து ஒரு விதவையாகவே வாழ்வைத் தொடர்கிறார் சௌகார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்கிறார் சௌகார் ஜானகி. அந்த வீடு ஜெமினிகணேசனுடையது. ஜெமினி இப்போது வேறொரு பெண்ணான ஈ.வி.சரோஜாவின் கணவர். இந்த விவரம் சௌகாருக்குத் தெரியாது. அந்த வீட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு பழைய புகைப்படம் மூலம் ஜெமினிதான் தன்னுடைய கணவர் என்ற உண்மை தெரியவருகிறது சௌகாருக்கு. அந்தப் பரவசத்தை ஜெமினியிடம் பகிர்ந்துகொள்ள பயங்கர சந்தோஷத்துடன் மாடிக்கு ஓடி வருகிறார் சௌகார் ஜானகி. அங்கே தன்னுடைய முன்னாள் கணவர் ஜெமினியும் தற்போதைய மனைவியும் காதலில் ஈடுபட்டிருக்கும் காட்சிதான் காணக்கிடைக்கிறது.

அதிர்ந்து உறைந்துபோய் அப்படியே அங்கேயே நிற்கிறார் சௌகார். இது காட்சி.

இதனை அந்தப் படத்தின் இயக்குநர் கே.வி. சீனிவாசன் அற்புதமாகச் செதுக்கியிருப்பார். புதிய தகவல் கிடைத்த மகிழ்ச்சியிலும் அதனைத் தன் ‘கணவனிடம்’ பகிர்ந்துகொள்ளப்போகும் பரவசத்திலும் ஒரு சந்தோஷத் துள்ளலுடன் மாடிப் படிகளில் ஏறி ஓடுவருவார் சௌகார். அந்த மாடிப்படிகளில் அவர் ஏறுவதற்கும் அந்த சந்தோஷத்திற்கும் ஏற்ப டொங் டொங் டொங் என்று விறுவிறுவென்று துவங்கும் ஆரம்ப இசை. மாடியின் விளிம்பிற்குச் சென்றதும் பார்த்த காட்சியில் அதிர்ந்து உறைந்துபோய் சௌகார் நிற்பதற்கு ஏற்ப இசையும் சட்டென்று நிற்கும். அங்கே அந்தப் பெண் ஜெமினியிடம் மேலே உள்ள நிலவைக் காட்டிப் பாடுவதாய் பாடல் விரியும் சுசீலா குரலில்.

காணவந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே.
ஓடிவந்த வேகம் என்ன வெள்ளிநிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளிநிலவே….. என்று இடம் பார்த்து இலக்கியம் தீட்டுவார் கண்ணதாசன்.

சௌகாரின் அதிர்ச்சியை, ஈ.வி.சரோஜாவின் ஏகாந்த மகிழ்ச்சியை, ஜெமினியின் அப்பாவித்தனத்தை குழைத்துக் குழைத்துத் தரும் மெல்லிசை மன்னர்களின் இசை.

பாடல் பூராவிலும் படத்தின் காட்சிக்கான கதை விரவிக்கிடக்கும். ‘நினைத்து நினைத்துச் சொல்லவந்த சேதிகள் என்ன? தன் நினைவு மாறி நின்றுவிட்ட வேதனை என்ன? இங்கு விளையாடும் காதலரைக் காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ?' என்று பாடல் வரிகள் அந்தப் பெண் நிலவைப் பார்த்துப் பாடுவதாகவே அமைந்திருக்கும். ஆனால் அத்தனை வரிகளும் சௌகாரை நோக்கி வீசப்படும் சோகவரிகளாக நமக்கு வந்து சேரும். பலவித உணர்வுகளை ஒன்றாய்த் திரட்டி வடித்தெடுத்த மாதிரியான இசை.

அற்புதமாய் சுசீலாவைப் பாடவைத்த திறன். ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சி அமைவதும் அதற்கு இசை பாடல் கதைக்களன் என்று எல்லாமே ஒன்று சேர்ந்து வியக்கும்வண்ணம் அசாத்தியமாக அமைவதும் சாதாரணமாக நிகழ்ந்துவிடுவதில்லை.

இந்தப் பாடல் அந்தக் காலத்திலேயே இதற்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றது. இன்றைக்கும் விஷயம் தெரிந்து அணுகும்போது வியப்பைத் தரும் பாடலாகவும், விஷயம் தெரியாமல் அணுகும்போது மெல்லிசை மன்னர்களின் தேன் சொட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று என்பதாகவும்தான் இந்தப் பாடல் விளங்கிவருகிறது.

இந்தப் படத்தின் பாடல்களில் ஒன்று ‘கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு’ என்ற தாலாட்டுப் பாடல். தாலாட்டுப் பாடல்கள் என்றாலேயே மெல்லிசை மன்னர்களும் கண்ணதாசனும்தான். ஈடு இணையற்ற தாலாட்டுப் பாடல்களாக ஒரு இருபது பாடல்களையாவது இவர்கள் தந்திருப்பார்கள். ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்துவந்த பின்னர் இந்தப் பட்டியலில் விஸ்வநாதன் தமிழின் ஆகச்சிறந்த தாலாட்டுப் பாடல்கள் இவர்களுடையவைதாம். (வாலி எழுதிய ஒரு ஆறேழு தாலாட்டுப் பாடல்களும் சிறப்பானவை.) திரைப்படத்தில் வராத இன்னொரு அபாரமான தாலாட்டுப் பாடலும் உண்டு. அது –

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ -அவன்
வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ……………. என்ற பாடல்.

இந்தப் பாடல் கண்ணதாசனின் ‘கண்ணன் பாடல்கள்’ தொகுப்பில் இருக்கிறது. இசை எம்எஸ்வி. ‘புல்லாங்குழல் இசைக்கும் மூங்கில்களே’ போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இருப்பதும் இத்தொகுப்பில்தான். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் எது? என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால் சந்தேகமில்லாமல் ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடலைச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குச் சிறப்பான பாடல். – 

(தொடரும்)