Monday, February 28, 2011

‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது?’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.


உயர்ந்த பண்புகளுடனும் நெறிசார்ந்த செயற்பாடுகளுடனும் தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகர் சிவகுமார். அவரது வாழ்வியல் முறைகளால் மட்டுமின்றி தமது பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் செயற்பாடுகளாலும் கவனிக்கத் தகுந்த மனிதராகவும், நல்லதொரு தந்தையாகவும் விளங்கிவருகிறார் அவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ; “கண்டித்தாலும் தவறு..கண்டுக்காமல் விட்டாலும் தவறு. எப்படி ஐயா குழந்தைகளை வளர்ப்பது?”

அவரது பதில் இங்கே;

“ இனவிருத்தி செய்வதோடு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடமை முடிந்துவிடுகிறது. ஆடு மாடு போன்றவை கொஞ்ச நாட்கள்தாம் குட்டிக்கு-கன்றுக்கு பால் கொடுக்கும். பறவைகள் இரை தேடி எடுத்துவந்து குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும்வரை ஊட்டிவிடும். அதன் பிறகு அதது தன் வாழ்வை வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த மனிதன் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு ஓடிவிட முடியாது. உடல் இன்பத்தின் நீட்சியாக குழந்தைப் பிறந்தது என்ற மனோபாவத்திலிருந்து உயர்ந்து நம் வம்சத்தை விருத்தி செய்ய, தன் பாரம்பரியப் பெருமைகளைத் தூக்கி நிறுத்த, தான் பெறாத சுகத்தை, தான் கற்க முடியாத கல்வியை, தான் அடைய முடியாத புகழை-செல்வத்தைத் தன் வாரிசுகள் பெற்று, பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகளாக அவை வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.

நூற்றுக்குப் பத்துப்பேர்கூட அப்படிப்பட்ட சிந்தனையுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே!

கல்யாணம் நடந்தது, முதல் இரவு முடிந்தது, உடல் சேர்க்கை நிகழ்ந்தது-அதன் விளைவாக ஒரு ஜீவன் பிறந்துவிட்டது. என்ன செய்வது, பெற்றுத் தொலைத்துவிட்டோம். பிறகு வளர்த்துத்தானே ஆகவேண்டும் என்ற அலுப்பு, சலிப்பு பெற்றோர்களுக்கு-குறிப்பாகப் பெற்றவளுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பிள்ளை பிறவியிலேயே சபிக்கப்பட்ட பிள்ளைதான்.

ஆறு மாதம்கூட முழுசாகத் தாய்ப்பால் தராமல், தனக்குத் தூக்கம் கெடுகிறது; அழகு குலைகிறது; உடல் சோர்ந்து விடுகிறது; பிரமோஷன் தாமதப்படுகிறது என்பதற்காக அந்தப் பச்சைக்குழந்தையை அள்ளி எடுத்துப்போய் ‘க்ரீச்’ என்ற குழந்தைக் காப்பகத்தில் ஆயாக்களிடம் ஒப்படைத்து, ‘செரிலாக்’ என்கிற பால்பவுடர், அல்லது புட்டிப்பால் தந்துவிட்டு அலுவலகம் ஓடுகின்ற பெருமைக்குரிய தாய்மார்கள் நிறையப்பேரைப் பார்க்கிறோம்.

அடுத்த ஆறுமாதத்தில் ஆயாக்கள் புஷ்டியாக உடம்பு தேறி வர, குழந்தைகள் சோமாலியா நாட்டு ஊட்டச்சத்தற்ற, எலும்பின்மீது தோல் போர்த்தப்பட்ட குழந்தைகளாக இளைத்துப்போகும் கொடுமைகள் நடக்கின்றது.

ஓராண்டுகூட அந்தப் பச்சைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி பாலூட்டி வளர்க்க முடியாதவர்கள் அந்தக் குழந்தையின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களாகிறார்கள்.

குழந்தை பசிக்கு அழுகிறதா, தொடையில் எறும்பு கடித்ததால் அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, காது வலி எடுத்து அழுகிறதா, மூக்கடைப்பால் அழுகிறதா, எதற்கு அழுகிறது என்பது பெற்ற தாய்க்கும்-அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்குத்தான் எளிதாகப் புரியுமே தவிர, நாற்பது குழந்தைகளுக்கு நடுவில் நாதியற்று, வெயிலில் காய்ந்து, வாய் வறண்டு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ‘டயாஃபர்’ என்ற கோவணம் போன்ற உள்ளாடையில் போய், அது வறண்டு சீந்துவாரற்றுக் கிடக்கும் சூழலில் அக்குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுக்குப் புரியாது.

தாயின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடது கை முழங்கை மடிப்பில் தலை வைத்து இடது மார்பில் குழந்தைக்குப் பாலூட்டும்போது உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் கொஞ்சும்போது- உலகில் அதற்கிணையான பரவசத்தை, பாதுகாப்பு உணர்வை, குழந்தை எங்கும் எப்போதும் பெறமுடியாது.

தேவதை ஒருத்தி பூமிக்குவந்து குழந்தையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சினாலும், தாய் கைப்பட்ட அடுத்த விநாடிதான் குழந்தையின் அழுகை நிற்கும். ஒருமாத குழந்தைக்கூட தாயின் கரங்களில் உள்ள உஷ்ணத்தை இனம் கண்டு பாதுகாப்பை உணர்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் குழந்தையின் உடம்பு மட்டுமல்ல மூளையும், அறிவும், அறிதலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தவறான நிகழ்வுகளோ கண்டிப்பான வார்த்தைகளோ எதுவாயினும் மனத்திரையில் எளிதாகப் பதிவாகிவிடும்.

கணவன் மனைவி தங்களின் குழந்தை முன்பு வாக்குவாதம் செய்வது, வேலைக்காரர்களை குழந்தை முன்பு கடுஞ்சொல்லால் திட்டுவது-எல்லாம் அழிக்கமுடியாத பதிவுகளாகிவிடும்.
குடும்பத்தலைவன் நான், நான் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் ஆனால் குழந்தைகள் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று வறட்டுவாதம் பிடிக்கக் கூடாது. திருமணத்திற்கு முன்பு எல்லைதாண்டி பல தவறுகள் செய்திருந்தாலும் குழந்தைகள் வளரும்போது பெற்றோர் அவர்களுக்கு ‘ரோல்மாடல்களாக’ இருக்கவேண்டும்.
அப்பாவுடைய குணமும் ஆற்றலும், அம்மாவுடைய பொறுமையும் கனிவும், குழந்தைகளை ரொம்பவே கவரும்.

அப்பா தவறு செய்திருந்தாலும், அம்மா தவறுசெய்திருந்தாலும் குழந்தைகளிடம் ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள், தவறு செய்தால் மறைக்கவேண்டிய அவசியமில்லை-அதை உணர்ந்து மன்னிப்புக்கேட்பது நல்லது என்று புரிந்துகொள்ளும்.

குழந்தகள் ரொம்பவும் ‘பொஸஸிவ்’ ஆக, அனைத்தும் தனக்கே சொந்தமானதாக இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள்.

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படத்தில் என் மகளாக மீனா நடிப்பார். உடல்நலமின்றி தாய் மருத்துவமனையில் இருக்க அந்தக் குழந்தைக்கு டைனிங்டேபிளின் அடியில் அமர்ந்து நான் சோறு ஊட்டிவிடுவேன். முதுகில் சுமந்தவாறு மாடிக்குத் தூக்கிச் செல்வேன். மார்புமேல் படுக்கவைத்து தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.

என் மகள் பிருந்தாவுக்கு அப்போது மூன்றுவயது. படத்தைப் பார்த்த குழந்தை வீட்டுக்குவந்ததும் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா, நீங்க என்அப்பாவா? மீனாவோட அப்பாவா? அவளுக்கு மட்டும் சோறு ஊட்டிவிட்டீங்க. உப்புமூட்டைச் சுமந்தீங்க, நெஞ்சுமேலே படுக்கவச்சு தூங்கவச்சீங்க, நான்தானே உங்கபொண்ணு..அதெல்லாம் இப்ப எனக்கும் பண்ணுங்க” என்றாள்.

வாயே திறக்காமல் டைனிங்டேபிள் அடியில் நுழைந்து அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டேன். மாடியிலுள்ள படுக்கை அறைக்கு முதுகில் தூக்கிப்போனேன். படுக்கையில் மல்லாந்து படுத்து மார்மீது அவளைப் படுக்கவைத்துக்கொண்டேன். போதாததற்கு, ஜெயச்சந்திரன் அப்படத்தில் எனக்காகப் பாடிய பாடலை என் கட்டைக்குரலில் பாடி தூங்கவைத்தேன்.

ஆங்கிலேயர் கலாச்சாரம் வேறு; தமிழ் மக்களின் கலாச்சாரம் வேறு. அவர்கள் குழந்தைப்பெற்றவுடனேயே ஆயாக்களிடம் கொடுத்து பக்கத்து அறையில் பச்சைக்குழந்தையைத் தூங்கப் பழக்கிவிடுவார்கள். பசியில், நடுநிசியில் குழந்தை அழுதாலும் பால்தர தாய் போகமாட்டாள்.

மருத்துவரிடம் கேட்டால் அந்த மேதை, “அதை அப்படியே விட்டுவிடுங்கள். பசியில் அழுது ஓய்ந்து பழகிக்கொள்ளும். நீங்கள் போய்ப் பால்கொடுத்தால் இரண்டு மணிக்கு ஒருதரம் அது எழுந்து அழும். இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு மூன்றுமுறை போய் பால்தர வேண்டும். வேண்டாம். விட்டுவிடுங்கள். பசியில் அழுது சோர்ந்து தூங்கிவிடும். ஒன்றும் ஆகாது” என்று கூறுவார்.

இங்கு நம் மண்ணில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரையிலாவது குழந்தை இரவில் பசியால் அழும்போது தாய் எழுந்து பால்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான பழக்கம்.

தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் குழந்தை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போர்டிங் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

குழந்தைகளுக்குத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் ஹாஸ்டல் வாழ்க்கை-அந்தக் கான்வெண்ட் பள்ளிவாழ்க்கை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான். அதற்கு நீங்கள் குறைந்தது குழந்தைக்கு பத்துவயது தாண்டியதும்தான் அனுப்பவேண்டும்.

மூன்றுவயது, நான்குவயது சிறுவர்களை-சிறுமிகளை, பிளேட்டில் போட்ட சாதத்தைக் கையால் எடுத்துச் சாப்பிடத் தெரியாத வயதில், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய்விட்டுக் கழுவத்தெரியாத வயதில், தன் டிராயர் பட்டனைத் தானே போடத்தெரியாத- கழுத்துவழி சட்டை மாட்டிக்கொள்ளத் தெரியாத வயதில், போர்டிங் ஸ்கூலில் போடும் கொடுமையைச் செய்யாதீர்கள்.

நடுங்கி உடல் விறைக்கும் 5 டிகிரி குளிரில் ரத்த ஓட்டமே குறைந்துவிடும். மட்டன் சிக்கன் 2 மணிநேரம் அடுப்பில் வைத்தாலும் வேகாது. அடிப்பக்கம் உஷ்ணம், மேல்பகுதியில் கடும்குளிர் படுவதால் குழம்பு சீக்கிரம் கொதிக்காது.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு சப்பாத்தி-குருமா குழந்தைகளுக்கு பரிமாறப்படும். ஆயிரம் குழந்தைகளுக்கு சப்பாத்தி தயாரிக்க பிற்பகல் 2 மணிக்கே சமையல் அறை பரபரப்பாகிவிடும். 4000 சப்பாத்திகள் சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பிளேட்டிலே அவை விழும்போது விறைத்து குளிர்ந்து நாய்த்தோலைவிட கெட்டியாக இருக்கும். விவரம் தெரிந்த குழந்தைகள் குருமாவில் சப்பாத்தியை ஊறப்போட்டு பிய்த்துச் சாப்பிடும். அப்பாவிக் குழந்தைகள் அந்தச் சப்பாத்தியைப் பிய்க்க நாய் படாத பாடுபடும்.

ஒருவழியாக சாப்பிட்டு பிளேட் அலம்பிவைத்து 50, 100 பேர் படுக்கும் நீண்ட ஹாலில் கருங்கம்பளிக்குள் நுழைந்து சுருண்டு படுத்துக்கொள்ளும்.
இரவு 9.30மணிக்கு குழந்தைக்குப் பசி எடுக்கும். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஒரு வகுப்பில் 25, 30 குழந்தைகள் படிக்கும்போது பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தைத் தீர்க்கவே ஆசிரியருக்கு நேரம் போதாது. இந்த அழகில் இரவு பசி எடுத்ததையோ, வயிற்றுவலி வந்ததையோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையோ ஆசிரியரிடம் சொல்ல குழந்தை அஞ்சும், அவமானப்படும். இரவும் பகலும் ஊமை அழுகையாக அழுது ஆறுமாதப் படிப்பு முடியும்.

அம்மா வந்து ஆறுவயது மகனை அள்ளி எடுத்து வீட்டுக்கு அழைத்துப்போவாள். அந்த ஒரு மாத விடுமுறையில் அக்குழந்தைக்கு ராஜ உபசாரம். வடை பாயாசமென்ன, புத்தாடைகள் என்ன, கார் ரெயில் பொம்மைகள் என்ன, பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் ரயில் சவாரி, துப்பாக்கிச் சுடுதல், குதிரை சவாரி- என்று பூலோக சொர்க்கத்தைக் காட்டுவாள் அம்மா.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிசென்று அந்த சிறைக்கம்பிகளுக்கு ஒப்பான இரும்புக்கதவைத் திறந்து உள்ளே மகனை அல்லது மகளை அனுப்பி அம்மா ‘டாட்டா’ சொல்லும்போது நெஞ்சமெல்லாம் குமுறி கோபத்தின் உச்சத்தில் ‘உன்னைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த ஆறு வயதுச் சிறுவன்/சிறுமி செல்வான்.....என்ன வலி இருக்கவேண்டும்-எப்படிப்பட்ட வேதனை அக்குழந்தைக்கு இருந்தால் அந்த வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்வான்..........! இந்தப் பாவத்தை 10 வயதாகும்வரை குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.

எங்கள் வீட்டில் உறவுக்காரக்குழந்தைகள், வீட்டுக்குழந்தைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அல்லோலகல்லோலப்படும். ஒரு நாள் பிள்ளைகளின் அறையில் ஒரு பீரோ டிராயரை துணைவி திறந்து பார்த்தபோது பிளேபாய் பத்திரிகையில் வெளியாகும் அழகிய பெண்களின் நிர்வாணப்படங்கள் சில கிடந்தன. பதறிப்போனவர் என்னிடம் வந்து ‘இது யார் வேலை தெரியவில்லை’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். “அவர்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருக்கிறார்கள். நான் பதினாறு வயதிலேயே வாத்சாயனம் கொக்கோக சாஸ்திரம் எல்லாம் படித்திருக்கிறேன். இதை நான் பார்த்துக்கொள்கிறேன் போ” என்றேன்.

ஐந்தாறு பிள்ளைகள். எல்லோருக்கும் 14 வயது முதல் 18-க்குள் இருக்கும். என் மகனிடம் “ஓவிய அலமாரிக்குச் சென்று இரண்டு ஸ்கெட்ச் நோட்டுக்கள் எடுத்து வா” என்றேன். குறிப்பிட்ட அந்த நோட்டில் ஓவியக் கல்லூரியில் பெண்களை- பெண்களின் உடலமைப்புகளை- பல கோணங்களில் நிர்வாணமாக வரைந்த ஸ்கெட்ச்கள் தீட்டப்பட்டு இருந்தன.
பிள்ளைகளை அழைத்து ஒவ்வொரு உறுப்பாகக் குறிப்பிட்டுக்காட்டி “இது மார்பகம் குழந்தைகள் பிறந்ததும் பால்சுரக்கும் பகுதி. இதில்தான் நீங்கள் பால் ஊட்டப்பட்டீர்கள். வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே சுருக்கங்கள் தெரிகிறதா? இது குழந்தைகள் அம்மா வயிற்றுக்குள் வளரும்போது வயிறு பெரிதாவதால் ஏற்படுபவை.

குழந்தை பிறந்துவிட்டபின் ஊதிய வயிறு சுருங்கும்போது- காற்றடைத்த பலூனிலிருந்து காற்று வெளியேறிவிட்டால் பலூன் எப்படிச் சுருங்கிவிடுகிறதோ அப்படி வயிறு சுருங்கியுள்ளது.

அதற்குக் கீழே உள்ளது பிறப்புறுப்பு. இதன் வழியாகத்தான் நீங்கள் பிறந்தீர்கள். காக்கா கொண்டாந்து போட்டுட்டுப்போச்சு, தவிட்டுக்கு உன்னை வாங்கிட்டு வந்தேன்-என்று அம்மாக்கள் சிறுவயதில் சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்று தெளிவுபடுத்தினேன்.
மறுநாள் அந்த டிராயருக்குள் இருந்த பிளேபாய் படங்கள் காணாமல் போய்விட்டன.
பிள்ளைகளுக்கு சிலிர்ப்பூட்டுகிற, கிரக்கத்தை ஏற்படுத்துகிற, மர்மமாகத்தோன்றுகிற, விடைகாண முடியாமல் தவிக்கிற டீன்ஏஜ் பிரச்சினைகளை வெளிப்படையாக நீங்கள் பேசி சந்தேகத்தைத் தீர்த்துவிட வேண்டும்.

தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை உன் தோழன்தான். எதையும் மறைக்காமல், மறுக்காமல் பிள்ளைகளோடு விவாதியுங்கள்.

தனித்தனியே என் பிள்ளைகளுக்கு அறைகள் இருந்தபோதிலும் கல்லூரி செல்லும் வரையில்கூட ஒரே படுக்கை அறையில்தான் குழந்தைகள் எங்களோடு தூங்கினார்கள்.
கணவன் மனைவிக்கு ‘பிரைவஸி’ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பெரிதாகக் கருதாமல் குழந்தைகளின் விருப்பப்படியே உடன் தூங்கினோம்.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபின் தனி அறையில் தூங்கவிடாதீர்கள். பாட்டியுடனோ ஆயாவுடனோ அம்மாவுடனோ குழந்தை தூங்குவது வேண்டாத சிந்தனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

பள்ளிக்கூடத்தில் பல் இளித்தவன், பஸ் ஸ்டேண்டில் டாட்டா சொன்னவன், ஆண்டு விழா மேடைகளில் ஆடிப்பாடியவன் இப்படி எவனாவது ஒருவன் பட்டாம்பூச்சியாய் அந்தப் பெண் மனதில் சிறகடித்து தூக்கத்தைக் கெடுப்பான். இப்போது எஸ்எம்எஸ் என்று ஒரு எமன். இப்படி ரகசியமாக அந்தரங்கமாக பட்டாம்பூச்சி பையனை நினைத்து கனவு காண்பதைத் தடுக்க ஒரே வழி அம்மாவுடனோ பாட்டியுடனோ குழந்தை தூங்குவதுதான்.
திருமணத்துக்கு ஆறுமாதம்வரை எங்கள் மகள் எங்களோடுதான் தூங்கினாள்.
இணைய தளம் என்கிற இன்டர்நெட் வலைத்தளம் இன்னொரு போதையான சமாச்சாரம். நல்லது கெட்டது எல்லாம் வெட்டவெளிச்சமாக, மூஞ்சியில் அடித்தாற்போல மனதைப் பாதிக்கின்றன.

கம்ப்யூட்டரை வீட்டு நடு ஹாலில் வைத்துவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. தவறான எண்ணத்துடன் தப்பான காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து எந்தப் பிள்ளையும் பார்க்கமுடியாது.
‘நான்தான் டாக்டருக்குப் படிக்கலே. நீயாவது படி. நம்ம வீட்ல எஞ்சினியர் இருக்கார்,வக்கீல் இருக்கார். எப்படியும் நீ டாக்டராக வேண்டும்’ என்று உங்கள் விருப்பங்களை- அபிலாஷைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் படிக்க அனுமதியுங்கள்.

சூலூர் பள்ளியில் ஐந்தாவது ஆறாவது ரேங்க் படிப்பில் வாங்கிய நான் சென்னைக்கு ஓவியக்கலை படிக்க புறப்பட்டபோது படிப்பறிவில்லாத என் தாய் ‘உன் விருப்பம் எதுவோ அதைச் செய். என்னால் முடிஞ்சவரைக்கும் பாடுபட்டு பணம் அனுப்புகிறேன்’ என்று தைரியமூட்டி அனுப்பினார்
இன்று நான் வரைந்த காந்திஜி, நேரில் சென்று எட்டுமணி நேரம் வரைந்த தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோபுரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற எண்ணற்ற ஓவியங்களை ‘அந்தளவுக்கு உயர்தரத்தில் இருபத்து நான்கு வயதில் வரைந்தவர்கள் இந்திய அளவில் இருபது பேர் கூட இருக்கமாட்டார்கள்’ என்றார் என் ஓவிய ஆசிரியர்.

லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மூன்று பாடங்களில் அரியர்ஸ் வைத்து தடுமாறி பின்னர் தேர்ச்சி பெற்ற சூர்யா, திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது.

பிள்ளைகளின் தனித்திறமை பார்த்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள்.
பணம் சம்பாதிக்கும் மெஷினாக உங்கள் பிள்ளையை உருவாக்கி பெருமைப் படாதீர்கள். அதிகாலைச் சூரியன், தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், குழந்தைகளின் மழலைகள், கோபுரங்களின் அழகு, நதியின் பிரவாகம், நண்பர்களின் அரட்டை, பெற்றோரின் பாசம், இசையின் அருமை, ஏழைக்கு உதவுதல், உள்ளிட்ட வாழ்க்கையின் உன்னதங்களை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் பெறும் வெற்றி- இவைதாம் பெற்றோரை கடைசி மூச்சுவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.

Thursday, February 17, 2011

கலைஞரும் ஜெயகாந்தனும்



எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிப் பேசிய விழாவில் நன்றி தெரிவித்துப்பேசிய ஜெயகாந்தன் கலைஞரின் ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று புகழப்போக, இந்தப் பேச்சு நிறைய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜெயகாந்தன் எப்படி இம்மாதிரிப் பேசலாம். அதே நிகழ்ச்சியில் வைரமுத்து என்னென்னவோ பேசினார். அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஜெயகாந்தன் இப்படிப்பேசலாமா? என்கிற ரீதியில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஜெயகாந்தன் பேசியது சரியா தவறா என்கிற வாதத்திற்குள் இங்கே நுழைய விரும்பவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பேசிய பேச்சிற்கு பதிலளித்து கலைஞர் பேசியிருக்கிறாரே அதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை வருட காலத்தில் கலைஞருக்கு வராத சிந்தனை இது. இதோ கலைஞரின் பேச்சைப் பார்ப்போம்.

“பாரதி விருதைப் பெற்ற அன்புக்குரிய நண்பரும் புரட்சி எழுத்தாளருமான அன்புக்குரிய ஜெயகாந்தன் பேசும்போது, ‘இது ஒரு பொற்காலம்’ என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ-என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் ‘நீ அப்படித்தான் சொல்லிக்கொள்வாய். ஏனென்றால் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அல்லது சொல்லக்கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர்சிக்கக் கூடியவர்-நாணயமாக விமர்சிக்கக் கூடியவர். நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தைவிட, அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களைவிட, சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து, ஜெயகாந்தனைப் போன்ற வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.ஒரு காலத்தில் எங்களைப்போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவை எல்லாம் எங்கள் இயக்கத்தோழர்களால் படிக்கப்பெற்றபோது ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்.

எங்களுடைய எழுத்தை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால் நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி மறுத்து எழுதிய போதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது. உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால் நான் கொடுத்து வைத்தவன். நான் என்னையே பாராட்டிக்கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்கவேண்டுமென்று கருதுகின்ற சிலபேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்துப் பயன்படுமேயானால் இது பொற்காலமாகவும் இருக்கவேண்டாம்; கற்காலமாகவும் இருக்கவேண்டாம். தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தனுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசியிருக்கிறார் கலைஞர்.

ஜெயகாந்தனுக்குக் கொடுக்கப்பட்ட விருதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதல்வரின் இந்தப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் தமிழில் படைப்பிலக்கியவாதிகளை அரசு மதிக்கும் வழக்கம் பல வருடங்களாகவே தமிழகத்தில் இல்லை. நான் பல இடங்களிலும், இந்த வலைப்பூவில் பல பதிவுகளிலும் குறிப்பிட்டுவருவதைப்போல், தற்கால இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அரசு கண்டுகொள்வதே இல்லை. தமிழ் மொழி என்றாலேயே இவர்களுக்கு சங்க இலக்கியம் மட்டும்தான்.

இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த எல்லா உலகத்தமிழ் மாநாட்டிலும் இதுதான் நடந்தது. செம்மொழி மாநாட்டிலும் இதே கதைதான். இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது மிகச்சிறிய மூலை. பொருட்காட்சிகளில் ஒரேயொரு அப்பளக்கடை போட்டுக்கொடுத்த மாதிரி!

தமிழில் படைப்பிலக்கியம் என்றால் திருக்குறளில் இல்லாததா? சிலப்பதிகாரத்தில் இல்லாததா? அகநானூறு சொல்லாத காதலா? புறநானூற்றில் இல்லாத வீரமா? நற்றிணையில் இல்லையா, குறுந்தொகையில் இல்லையா என்று கேட்டு பாரதிதாசன் பாடிய இரண்டு பாடல்களைச் சொல்லி முடித்துவிடுவார்கள்.

தமிழைத் தாண்டிய இலக்கிய உலகின் அங்கீகாரங்களுக்கு இது போதுமானதல்ல என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை.

ஞானபீடம் முதலான இலக்கிய அங்கீகாரங்கள் தற்கால படைப்புக்களுக்குத்தான் கொடுக்கப்படுமேயல்லாமல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் இலக்கியம் இருந்தது என்று சொல்லி அங்கேயே தீபாராதனைக் காட்டிக்கொண்டு இருந்தால் அந்த மொழிக்குக் கிடைக்காது. பழமையைப் போற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும், பெருமை கொள்ளவேண்டும். அதே நேரத்தில் புதுமையை உயர்த்திப் பிடிக்கவும் செய்ய வேண்டும். தமிழக அரசும், அரசு நிறுவனங்களும் இதனைச் செய்யவே இல்லை.

ஒரு மொழி என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியம் படைத்ததோடு நின்றுவிடக்கூடாது. காலந்தோறும் அந்த மொழியில் படைப்பிலக்கியம் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். நாள்தோறும் அந்த மொழி தனக்கான பதிவுகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் தமிழும் நாள்தோறும் தனது இலக்கியங்களைத் தனது படைப்பிலக்கியக் குழந்தைகள் மூலம் அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த படைப்பிலக்கியவாதிகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதுதான் ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையைத் தமிழர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதற்கு பதில்கூற கடமைப்பட்டவர்கள் நாம்.

மலையாளத்திலும் வங்கத்திலும் கன்னடத்திலும் படைப்பிலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் மரியாதைகளும் என்ன? அவர்களை ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் முன்னிலைப் படுத்துவதும் சிறப்பிப்பதும், அவர்கள் பெயர்களை நகரங்களுக்கும் கட்டடங்களுக்கும் சாலைகளுக்கும் சூட்டுவதும் எத்தனை?
எத்தனை எழுத்தாளர்களின், கவிஞர்களின் பெயர்களில் நகர்களும் சாலைகளும் இருக்கின்றன தெரியுமா கர்நாடகத்தில்?

ஒருமுறை தகழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “நான் பலமுறை சென்னை வரும்போது அகிலன் வீட்டில் தங்குவேன். அப்போதெல்லாம் அவரும் நானும் கடற்கரையில் வாக்கிங் போவோம். வீட்டிலிருந்து கிளம்பி திரும்ப வருகிறவரைக்கும் ஒரு இரண்டுபேர் அல்லது மூன்று பேர் மட்டும்தான் அகிலனைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. கேரளத்துல எல்லாம் இம்மாதிரி நாங்கள் ஃப்ரீயா போய்வர முடியாது. அகிலனுக்கே இந்தக் கதி என்றால் மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படி? இங்கேயெல்லாம் வெறும் சினிமாக்காரனுக்கும் அரசியல்காரனுக்கும் மட்டும்தான் மதிப்பு. இதுக்கு உங்க அரசியலும் பெருமளவு காரணம்”
உண்மைதான். கர்நாடகத்தில் சிதானந்த மூர்த்திக்கு டாக்டர் பட்டம் வழங்கி அரசு சார்பிலே கொண்டாடுகிறார்கள். யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தேடி மாநில முதல்வர் வீட்டிற்கே ஓடுகிறார். பல முக்கிய அரசு விழாக்களைக்கூட எழுத்தாளர்கள்தாம் தலைமைத் தாங்கி நடத்துகிறார்கள். எப்படியெல்லாம் சிறப்பிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடி சிறப்பிக்கிறது அரசு.

யோசித்துப் பாருங்கள் புதுமைப் பித்தனுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என்ன? பி.எஸ்.ராமையா எப்படியெல்லாம் போற்றப்பட்டிருக்கிறார்? கு.ப.ராவையும், கு.அழகிரிசாமியையும் இந்த அரசு எப்படி நினைவுகூர்கிறது?கல்கியையும் தி.ஜானகிராமனையும் சாண்டில்யனையும் எப்படிச் சிறப்பித்திருக்கிறார்கள்? அகிலனுடைய பெயரை எதற்குச் சூட்டியிருக்கிறார்கள்?நா.பாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?....அதிகம் போனால் இவர்களின் நூற்றாண்டு விழாக்கள் வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு சில லட்சங்கள் வழங்கி இவர்களின் நூல்கள் தேசியமயமாக்கிவிட்டதாக அறிவிப்பார்கள். அத்தோடு முடிந்தது இவர்களின் கதை.

இந்த நிலைமை தொடர்வதால்தான் இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கு இரண்டே இரண்டு ஞானபீடம்.

இத்தனூண்டு மொழிகளெல்லாம்கூட நோபல் பரிசு பெற்றுவருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான தமிழ்மொழி குறிப்பிட்ட எல்லையைக்கூட தாண்டமாட்டேனென்கிறது. காரணம்- தூக்கிப்பிடித்து உயர்த்த வேண்டியவர்கள் கண்டுகொள்வதேயில்லை. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு இங்கே திராவிடச் சிந்தனைகளும் திராவிட எழுத்துக்களின் தாக்கங்களும் ஏற்பட்டதே காரணம்.

இந்தத் திராவிடச் சிந்தனை நிரம்பியவர்கள் எல்லாம் மற்ற எழுத்துக்களை எழுத்துக்களாகவோ அதை எழுதும் எழுத்தாளர்களை படைப்பிலக்கியவாதிகளாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. திராவிடச் சிந்தனையைப் பரப்பிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் எழுத்தின் வீர்யத்தை எல்லாம் கட்சியின் கொள்கையை ஒட்டியே பரப்பிக்கொண்டிருந்தார்களே தவிர, வாழ்க்கைக்கும் அதற்குமான தொலைவு மிக அதிகமாகவே இருந்தது. அதனால்தான் உலக இலக்கியங்களை ஒட்டி சமூகத்தையும் நிதர்சன வாழ்க்கையையும் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் திராவிட எழுத்தாளர்களை ஒப்புக்கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் இருந்தார்கள். திராவிட எழுத்தாளர்கள், மற்ற எழுத்தாளர்களை ஒப்புக்கொண்டால் தங்களின் இருப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்பதற்காக இவர்களைத் திட்டமிட்டு அங்கீகரிக்காமலேயே இருந்தார்கள்.
அறுபத்தேழில் ஆரம்பித்த திராவிடக் கழகங்களின் ஆட்சி தமிழை இல்லந்தோறும் கொண்டுசென்று வளர்த்துக்கொண்டிருந்த எந்தவொரு தமிழ்ப் படைப்பாளியையும் அங்கீகரிக்கவே இல்லை. இவர்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்ததெல்லாம் வார, மாத, இதழ்கள்தானே தவிர, அரசோ அரசின் நிறுவனங்களோ அல்ல.

அதனால்தான் மற்ற மொழிகளிலெல்லாம் ஓரிரு நூல்கள் எழுதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் கூட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையெல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசிடம் சிபாரிசு செய்து வாங்கித்தந்து அழகு பார்த்திருக்கும்போது இதுவரைக்கும் ஒரு தமிழ் எழுத்தாளருக்குக்கூட இப்படிப்பட்ட விருதுகளையெல்லாம் வாங்கித்தரும் முயற்சிகளை இந்தத் திராவிட அரசுகள் செய்யவே இல்லை என்பது எத்தனைக் கொடுமை என்பதை எண்ணப்பார்க்க வேண்டியுள்ளது. இதுபற்றிய குறைந்த பட்ச சிந்தனைக்கூட சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் சரி, அவர்களை மதிக்கும் வாசகவட்டத்திற்கும் சரி, வரவே இல்லை என்பது இன்னொரு வியப்பான விஷயம்.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களை மட்டுமல்லாது இவர்களை விடவும் பல மடங்கு பிரபலமான கவிஞர் கண்ணதாசனைக்கூட இவர்கள் இதே பட்டியலில் அடைத்து புறக்கணித்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களுக்குக்கூட இந்த விருதுகள் இல்லையென்றால் வேறு யாருக்காக? என்ற கேள்வி இத்தனை நாட்களும் ஊடகங்களால்கூட எழுப்பப்படவில்லை என்பது எத்தனை சோகமான விஷயம்?
எழுத்தாளர்கள் மட்டுமல்ல கௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.

கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்...அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.

ஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.

சிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர்? ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.
தம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.

கலைஞரால் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜெயகாந்தனைப்பற்றிய கலைஞரின் பேச்சு அவர் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். படைப்பிலக்கியவாதிகளையும் மாபெரும் கலைஞர்களையும் மற்ற மாநில அரசுகள் போல் உயர்த்திப்பிடியுங்கள். அவர்களுக்கு வேண்டிய அங்கீகாரங்களை மாநில அரசு வழங்குவதோடு மத்திய அரசிலிருந்து வரவேண்டிய சிறப்புக்களையும் வாங்கித்தருபவர்களாக இருங்கள். இலக்கியத்திலும் கலைத்துறையிலும் கட்சி அரசியல் வேண்டாம்.

இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள்.

சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!

ஜெயகாந்தனைப்பற்றி நீங்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் சாதாரணமானவை அல்ல. படைப்பிலக்கியம் மீது நீங்கள் கொண்டிருந்த பார்வை அடியோடு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.

அரசு முறையில் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்

Friday, January 28, 2011

சாருவும் மிஷ்கினும்


ஒரு நல்ல வாசகனிடம் “இன்றைய பிரபல தமிழ் எழுத்தாளர்கள் யார் யார்? என்ற கேள்வியை முன்வைத்தோமானால் உடனடியாக அவன் தயங்காமல் சொல்லும் பெயர்கள் மூன்று. 1) சாரு நிவேதிதா 2) ஜெயமோகன் 3) எஸ்.ராமகிருஷ்ணன்.

“சரி சாருவின் எந்தெந்த நூல்கள் பிடிக்கும்? ஜெயமோகனின் படைப்புக்களில் பிடித்தது எது? எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களில் சிறப்பானது எது? என்ற கேள்வியைக் கேட்டோமானால் அவனிடம் பதில் இருக்காது.

“இவர்களுடையதை எல்லாம் நான் படித்திருக்கிறேன் என்றா சொன்னேன்? தமிழில் பிரபலமான எழுத்தாளர்கள் யார்? என்று கேட்டீர்கள். அந்தக் கேள்விக்கான பதிலைத்தானே சொன்னேன் என்பார்கள்.

சாரு நிவேதிதாவையோ ஜெயமோகனையோ எஸ்.ராமகிருஷ்ணனையோ படிக்காமலேயே,அவர்களுடைய படைப்புக்கள் பற்றிய பரிச்சயம் இல்லாமலேயே அவர்களைத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களாக ஒரு வாசகன் சொல்லும் நிலைமை இருப்பதை இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகத்தான் சொல்லவேண்டும்.

சுஜாதாவுக்கும் முன்பிருந்த காலகட்டத்தில் இருந்ததைப்போல அகிலனைப் படித்தவர்கள், கல்கியைப்படித்தவர்கள், நாபாவைப்படித்தவர்கள், சாண்டில்யனைப் படித்தவர்கள்,ஜெயகாந்தனைப் படித்தவர்கள், ராகி ரங்கராஜனைப் படித்தவர்கள்,சாவியைப் படித்தவர்கள், மணியனைப் படித்தவர்கள் எல்லாம் மாதக்கணக்கிலும் வாரக்கணக்கிலும் படிப்பதோடு நில்லாமல் பத்திரிகைகளில் வருகின்ற அவர்களுடைய தொடர்களைத் தனியே பைண்ட் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மீண்டும் மீண்டும் படிப்பவர்களாகவும் தனியே அவர்களுடைய நூல்கள் வரும்போது அதனை வாங்கிச் சேகரித்து வைப்பவர்களாகவும் இருந்தனர்.

கதைப் படிப்பது என்பது ஒரு ரசனை சார்ந்த படிப்பனுபவமாக மட்டுமின்றி சில கதைகளின் நாயகர்களைத் தமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் பலர் கொண்டிருந்தனர். கல்கியின் கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியிருப்பவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர். அகிலனுடைய கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளவர்கள் எத்தனையோ பேர். நாபாவின் குறிஞ்சிமலர் நாவலின் கதைமாந்தர்களான அரவிந்தன், பூரணி பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியவர்கள் கணக்கிலடங்காதவர்கள். இந்த வரிசையில் டாக்டர் மு.வரதராசனுக்கும் கணிசமான வாசகர்கள் உண்டு.

சுஜாதாவுக்கு வாசகர்களாக இருந்தவர்கள்கூட அவருடைய அத்தனை எழுத்துக்களையும் தேடித்தேடி வாசித்தவர்களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் மாறிப்போய் விட்டது. இப்போதைய பிரபல பத்திரிகைகள் எதுவும் தொடர்கதைகளையோ சிறுகதைகளையோ முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பது இல்லை. அந்தக் காலத்தில் குமுதத்தில் ஐந்து சிறுகதைகளும் ஐந்து தொடர்கதைகளும் வரும். அதில் நிச்சயமாக ஒன்று சரித்திரத் தொடர்கதை. விகடனும் மூன்று நான்கு தொடர்கதைகளையும் மூன்று நான்கு சிறுகதைகளையும் வெளியிடும். கல்கி தினமணிகதிர் எல்லாமே இந்த வரிசையில்தான் வந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது. மக்களின் ரசனையும் மாறிப்போக படிக்கிற மோகம் ‘பார்க்கிற மோகமாக திரிந்துபோனது. பிரபல வாரப்பத்திரிகைகளெல்லாம் சினிமாப்பத்திரிகைகளாக மாறிப்போயின. விளைவு, சினிமாவுக்கென்றே வந்துகொண்டிருந்த பொம்மை, பேசும்படம், பிலிமாலயா எல்லாமே மூடுவிழா நடத்தின.

வாழ்க்கை அனுபவங்களை கலை நேர்த்தியுடன் கலந்து நாவலாகவும் சிறுகதைகளாகவும் படைத்துக்கொண்டிருந்த பாரம்பர்ய எழுத்தாளர்கள் எல்லாரும் நடப்பது என்னவென்றே புரியாமல் திகைத்துப்போய் நின்றுவிட, சாலையைத் திறந்துவிட்டவுடன் ஓடிவரும் சிறுவர்களைப்போல சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ‘ஓ வென்ற கூச்சலுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள். சிறுபத்திரிகைகளும் இதுதான் நம்ம நேரம் என்று டவலை வீசி நாற்காலியில் இடத்தைப் பிடித்துக்கொண்டன. அவசர அவசரமாகத் தங்களின் கச்சேரியையும் ஆரம்பித்துவிட்டன. இதில் ரொம்பவும் முந்திக்கொண்டது காலச்சுவடு மாத இதழ்.

இவர்களைப் பொறுத்தவரை தற்காலத்தமிழ் இலக்கியம் என்பது பாரதியில் ஆரம்பிக்கிறது. பாரதிக்குப் பிறகு தமிழில் எழுதிய ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு யாருமே எழுதவில்லை. அதற்குப்பின் தமிழ் எழுத்தாளராக அவதாரம் எடுத்த ஒரேயொருவர் சுந்தர ராமசாமி. பாரதி-புதுமைப்பித்தன்-சுந்தர ராமசாமி என்று தமிழ் வளர்ந்த விதம் பற்றியெல்லாம் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்தபோதே அழைத்து பெரிய கருத்தரங்கமெல்லாம் நடத்தித் தீர்த்துவிட்டார்கள். ஒப்புக்காக சில எழுத்தாளர்கள் பெயர்களைச் சொல்வார்களே தவிர, காலச்சுவடு இதழைப்பொறுத்தவரை சுந்தர ராமசாமிதான் தமிழின் ஒரே ஆகப்பெரும் எழுத்தாளர். அவரைப்போற்றும்-ஆராதிக்கும் வேறு சில எழுத்தாளர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்ற ‘எழுத்தாளர்கள்.

காலச்சுவட்டிலிருந்து வெளியேறி வந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை வேறு ஒரு எழுத்தாளர் குழுவைத் தன்வசம் வைத்துள்ளது. அவர்களும் குழு மனப்பான்மையுடனேயே செயல்படவேண்டியுள்ளது. இந்த இரண்டு பத்திரிகைகளிலும் எழுதும் ஒரு சிலர் மட்டுமே இன்றைய பிரபல எழுத்தாளர்களாக வலம்வரும் வித்தையைச் செய்துவருகிறார்கள். ஊடகங்களும் வேறுவழியில்லாமல் இவர்களை மட்டுமே மிகப்பெரும் எழுத்தாளர்களாக முன்நிறுத்தும் காரியத்தைச் செய்துவருகின்றன. இவர்களில் சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையத்தில் அதிகம் உழலுகின்ற அதிகம் புழங்குகின்ற கணிப்பொறி இளைஞர்களின் தேவை என்னவென்பது தெரிந்திருக்கிறது. அவர்களுடைய ரசனை என்னவென்பது தெரிந்திருக்கிறது. என்ன சொல்லி அவர்களை இழுக்கமுடியும் என்பது தெரிந்திருக்கிறது. அதைத் தமிழில் வழங்கவந்த இலக்கிய வள்ளல்களாகத் தங்களைக் காட்டும் கலை தெரிந்திருக்கிறது. ஆகவே, வெற்றிகரமாகத் தங்கள் வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் வரும் எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு சுந்தர ராமசாமியை மிகவும் பிடிக்கும். ஆனால் காலச்சுவட்டின் அரசியல் பிடிக்காது. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. ஒரேயொரு கதை ‘ஊமைச்செந்நாய் மட்டும் படித்திருக்கிறேன். உண்மையில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை அது. என்னுடைய நண்பர் அகிலன் கண்ணன் தாகம் என்றொரு பிரசுரம் ஆரம்பித்தபோது அவரது தந்தையார் அகிலன் அவர்களின் பெயரால் ஒரு நாவல் போட்டி நடத்தினார். அதில் வெற்றி பெற்ற நாவல் என்று ஒரு நாவலைத் தந்தார். வெற்றி பெற்றவர் ஜெயமோகன். எழுதிய நாவல் ‘ரப்பர்.

ரப்பரைக்கூட சில பக்கங்கள் படித்து வைத்துவிட்டேன். பின்னர் ஏதோ ஒரு இணைய தளத்தில் நையாண்டியாகச் சில புனைவுகளை ஜெயமோகன் எழுதினார். படித்ததில் அப்படியொன்றும் பிடிபடவில்லை. விட்டுவிட்டேன். அவர் எழுதிய வேறுசில கட்டுரைகளைப் படித்தபோது ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துத்திறமை வேண்டுமானால் அவருக்கு இருக்கலாம் ஆனால் அவரது சிந்தனைகளில் தார்மீக நெறிமுறைகள் இல்லை என்ற முடிவுக்குத்தான் வர நேர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடும் அருந்ததிராய் இவரது கண்ணோட்டத்தில் ‘அடிப்படையான வரலாற்று உணர்வோ, சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவி மண்டை என்று விளிக்கப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு மொத்த தமிழ் நிலமே ரத்தச்சேறாக மாற்றப்பட்டது பற்றி இவர் திருவாய் மலர்ந்தருளுகிறார் இப்படி; ‘ நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதே போன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் எனப்பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுத வெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒரு சாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள். என்று தமது மேதாவிலாசத்தைக் காட்டுகிறார். அதாவது, இவர் கூற்றுப்படி நம் தெருவில் ஒரு அப்பாவியை நான்கு காடையர்கள் சேர்ந்து அடிக்கிறார்கள் என்றால்கூட நாம் துடிக்கக் கூடாது. கூப்பாடு போடக்கூடாது. காவல்துறையை அணுகக் கூடாது. வடநாட்டில் இப்படியெல்லாம் நடப்பதில்லையா என்ன என்று இருந்துவிட வேண்டும்.

ஒரு அப்பாவிப் பெண்ணை நான்கைந்து ரௌடிகள் சேர்ந்துகொண்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள் அது நமது கவனத்துக்கு வருகிறது என்றால்கூட நாம் பதட்டப்படக்கூடாது. இப்படியெல்லாம் மெக்ஸிகோவில் நடக்கவில்லையா என்று கேட்டுக்கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அவ்வளவு ஏன் இதே சித்தாந்தப்படி நம்முடைய தெருவில் சாக்கடை உடைத்துக்கொண்டு ஓடிற்றென்றால்கூட செயல்படக்கூடாது. கூவத்தில் ஓடாத சாக்கடையா என்று கேட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடவேண்டும். -இப்படியொரு மனநெறியைப் பரப்புகிறவர் எப்படி படைப்புக்கலை இலக்கியத்தில் நல்ல சிந்தனைகளை வித்தூன்றுவார் என்ற கணிப்பில் இவரது எழுத்துக்களைப் படிக்கத்தோன்றவில்லை.

இவர்களிலிருந்து விலகி நிற்கும் ஒரு எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணனை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

அடுத்தது சாருநிவேதிதா.!

ஒரு விஷயத்தை இப்போதே சொல்லிவிட வேண்டும். இவர் என்ன எழுதுகிறார் என்பது ஒருபக்கம் இருந்தபோதிலும் இவரது எழுத்து நடை சுவாரஸ்யமானது. பொதுவாகவே சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எல்லாரும் போரடிக்கும் நடைக்குச் சொந்தக்காரர்கள். வேண்டுமென்றேதான் அப்படி எழுதுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயாரில்லை. ஒரு வித்தியாசம் வேண்டுமென்று யாரோ ஒருவர் இப்படி எழுத ஆரம்பிக்க இவர்களுக்கெல்லாம் அதுவே தொற்றிக்கொண்டுவிட்டது. எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் இலகுவாக எழுதுவதுதான். இலகுவான எழுத்து நடை நிறையப் பேருக்கு வருவதில்லை. அவர்களில் சாரு நிவேதிதா முற்றிலும் வேறுபட்டவர். இலகுவாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுத வருகிறது அவருக்கு. அந்த நடையை வைத்துக்கொண்டு என்ன எழுதுகிறார் என்று பார்த்தோமானால் வேதனையும் கோபமும்தான் மிஞ்சுகிறது.

தற்புகழ்ச்சி என்பது தலைக்குமேல் போய்விட்ட ஒரு பிறவியாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்கிறார் சாருநிவேதிதா. அவரே எழுதியிருப்பதைப் பார்த்தோமானால் நோபல் பரிசெல்லாம் இவருக்கு மிகவும் சாதாரணம் என்ற மனநிலைக்கு அவர் இந்நேரம் வந்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் கலாச்சாரம் பண்பாடு மண்ணாங்கட்டி ஆப்பச்சட்டி எல்லாவற்றையும் எல்லாத் தளைகளையும் உடைத்துக்காட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அவர் செய்யும் அலப்பறைகளும்,அழிச்சாட்டியங்களும் தாங்க முடியாததாக இருக்கிறது. மனித உடம்பில் மூன்று நான்கு அங்கங்கள் தவிர வேறு எந்த அங்கங்களுமே அவருடைய சிந்தனைத்தளத்திலேயே இல்லை என்பது பரிதாபத்துக்குரிய விஷயமாகவே படுகிறது.

இவர் எழுதிய தேகம் நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இவரது நாவலை சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அதற்காக இவர் மிஷ்கினைத் தம்முடைய நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டாராம். நீக்கியவர் சும்மா இருக்கவேண்டியதுதானே, மிஷ்கினுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார். தமிழில் கடித இலக்கியம் என்ற வகை ஒன்று இருக்கிறது. ரசிகமணி டிகேசியின் கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. வ.உ.சியின் கடிதங்கள் புகழ்பெற்றவை. கி.ரா வின் கடிதங்கள் புகழ்பெற்றவை. அரசியலில் எடுத்துக்கொண்டாலும் அண்ணாவின் கடிதங்கள், கலைஞரின் கடிதங்கள், கண்ணதாசனின் கடிதங்கள் ஆகியவை புகழ்பெற்றவை. அகில இந்திய அளவிலும் நேரு தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் மிகவும் புகழ்பெற்றவை.

இப்போது தமிழர்கள் செய்த பூர்வ ஜென்ம பலனாகக் கிடைத்திருப்பவை சாரு நிவேதிதா மிஷ்கினுக்கு எழுதிய கடிதங்கள். நாகரிக எல்லைகள் என்பவையெல்லாவற்றையும் தாண்டி அருவெறுப்பு ஆபாசம் மஞ்சள் எழுத்துக்கள் இவற்றின் உச்சம் நீளம் அகலம் ஆழம் எல்லாவற்றையும் கடந்த குப்பையைத் தமிழில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா. அத்தனைக் கடிதங்களையும் படித்தவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் இருந்தாலேயே பெரிய விஷயம்.

இதுபற்றி இணையத்தில் நிறையப்பேர் கொதித்துப்போய் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில பேர் ‘சாரு ஒரு காமெடி பீஸ் என்றெழுதுகிறார்கள். எனக்கென்னமோ இதனை அப்படியே விட்டுவிடுவதுதான் சரியானதாகப்படுகிறது. ஏனெனில் இது ஒன்றும் நிஜமான சண்டையாகத் தெரியவில்லை. இருவருமே பேசி வைத்துக்கொண்டு செய்யும் நிழல் சண்டைபோல்தான் தெரிகிறது. மிஷ்கினும் சாருவும் சேர்ந்துகொண்டு எல்லாரையும் முட்டாள்காளாக்க விரித்த வலை என்றுதான் படுகிறது. மாட்டிக்கொள்ளாதவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே.

இந்த உண்மை தெரியவரும்போது இந்த இருவரையுமே தமிழர்கள் எப்படிப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

Monday, January 17, 2011

கடவுள் நம்பிக்கை-சிவகுமாரின் மேலும் சில கருத்துக்கள்....!


கடவுள் பற்றித் தமது கருத்துக்களைத் தெரிவித்த சிவகுமாரிடம் “நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா..இல்லையா? நேரடியான பதில் தேவை என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவருடைய பதில்;-

நான் சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டவன். நினைவு தெரிந்த நாளிலிருந்து மொட்டை ஆண்டி முருகன் படத்தை வணங்கி வருபவன். பழக்கமாக இருந்த பக்தி உணர்வு, வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும்போது, நாம் வேண்டியது நடக்கும்போது-இறுக்கமான நம்பிக்கையாகி விடுகிறது.

ஓவியக்கல்லூரியில் சென்னையில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது-‘Mother serious start immediately’ என்று தந்தி வந்தது. எந்த விநாடியிலும் தாயின் உயிர் போகலாம். சென்னையிலிருந்து கோவை பத்து மணிநேர பயணத்தின் போதும் உயிர் போகலாம். உலகில் எனக்குள்ள ஒரே பற்றுக்கோடு என் தாய். அவரை இம்முறை உயிரோடு நான் பார்த்துவிட்டால் சாகும்வரை கடவுள் நம்பிக்கையோடு இருப்பேன் என்று விடிய விடிய ரயில் படிக்கட்டில் அமர்ந்து அழுதுகொண்டே சென்றேன்.

மறுநாள் தாயை உயிரோடு பார்த்தேன்!

ஓவியக் கலையில் ஒரு கட்டத்தை அடைந்தபோது ‘நவீன ஓவியர்கள் உன் ஓவியங்களை ஏற்க மாட்டார்கள். உன்னுடையவை பதினாறாம் நூற்றாண்டு பாணி ஓவியங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது-திரையுலகை நோக்கி என் வாழ்வை திசை திருப்பி விட்டவன் இறைவன் என்று கருதுகிறேன்.

நான் மட்டும் சினிமாவில் இருந்தால் போதும். என் பிள்ளைகள் இதில் இறங்கிச் சீரழிய வேண்டாம். நித்ய கண்டம் பூரண ஆயுசு உள்ள தொழிலில் அவர்கள் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்று ஸ்டுடியோ பக்கமே பிள்ளைகளை அழைத்துப் போகாமல் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.

‘உன்னைவிட உன் பிள்ளைகள் பேர் வாங்க வேண்டாமா? உன்னைவிட சமுதாயத்திற்கு அவர்கள் தொண்டு செய்ய வேண்டாமா? அவர்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்ய நீ யார்? என்று கேள்வி கேட்டு- அவர்களை நான் பயந்த சினிமா உலகிலேயே, நம்பிக்கை நட்சத்திரங்களாக வாழ வைப்பது இறைவன் செயலாகவே நான் நினைக்கிறேன்.

என் மகளுக்குச் சென்னையிலேயே மாப்பிள்ளை கிடைத்தது, தங்கமான பையன் மருமகனாக வந்ததும் இறைவன் செயலே.

சூர்யாவுக்கு, ஜோதிகா என்ற குணவதியை மனைவியாக்கியதும் இறைவன் செயலே.

எந்தச் சூழ்நிலையிலும், புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாடக்கூடாது, பிற மாதர் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது-என்பதில் நான் வைராக்கியமாக இருந்து சென்னை வந்து இந்த ஐம்பத்திரண்டு வருடங்களும் வாழ்ந்துவிட்டேன். இன்று என் குடும்பம், குழந்தைகள்-இந்த அளவுக்குப் புகழ் பெறுவார்கள், மக்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

மனித முயற்சியால் மட்டுமே இவை அனைத்தும் நடந்துவிட்டதாக நான் கருதவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பின்னால் இருந்து வழி நடத்துவதாகவே நான் கருதுகிறேன்.

Monday, January 10, 2011

கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் நடிகர் சிவகுமார்


தமிழ்ச்சமூகம் கூர்ந்து கவனிக்கும் இன்றைய பிரபலங்களில் அப்துல் கலாமுக்கடுத்து பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து சிந்தனையாளராகவும் இலக்கியவாதியாகவும் தம்மை உருமாற்றிக்கொண்ட அவருடைய உரைகளும் எழுத்துக்களும் இன்று தமிழுலகில் மிகப்பிரசித்தமாக உலா வருகின்றன. அவர் பேச்சுக்களின் சிடிக்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சிவகுமாரை மிகுந்த நம்பிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ‘கடவுள் இருக்கிறாரா? அவரை வணங்கினால் அருள் பாலிப்பாரா? என்ற கேள்விக்கு நடிகர் சிவகுமாரின் பதில் இங்கே;

கடவுள் மனிதனைப் படைத்தான். மனிதன் கடவுளைப் படைத்தான்-என்று இதை அழகாகச் சொல்லலாம். இங்கே, முதலில் கடவுள் என்பது இயற்கை என்று வைத்துக்கொண்டால், இயற்கை மனிதனை உருவாக்கியது. பின்னர் அந்த மனிதன் கடவுள் என்ற கற்பனை வடிவத்தை, அந்த இயற்கைக்குக் கொடுத்து-பல கடவுள் கதைகளை எழுதி, மக்களை நல்வழியில், நேர்வழியில், ஒழுக்க நெறியில் வாழ, வழிவகுத்தான்.

‘நன்று புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்

கவிதை மிகநல்லதேனும்-அந்தக்

கதைகள் பொய்எனத் தெளிவுறக் கண்டோம்.

புவிதனில் வாழ்நெறிக்காட்டி-நன்மை

போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்-என்று பாரதி, கடவுள் கதைகள் உண்மையல்ல எனினும்-அந்தக் கதைவழி வாழ்வின் உயர் நெறியை, நாம் பெறுகிறோம் என்கிறான்.

· கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் இரக்கமுள்ளவன் என்பது உண்மையானால், சுனாமி என்கிற ஆழிப்பேரலையை எழுப்பி, குஞ்சும் குளுவானுமாக குழந்தைகளிலிருந்து குடும்பத் தலைவன், தலைவி,ஆடு மாடு கோழி குஞ்சுகள் என்று பல்லாயிரக்கணக்கான உயிர்களை, ஒரே சுழற்றில் கடலுக்குள் அள்ளிப்போய் அவர்கள் கதையை முடித்திருப்பானா?

· குஜராத் பூகம்பத்தில் பல மாடிக்கட்டிடங்களில் பெரிசும் சிறிசுமாகப் பல அப்பாவி உயிர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர்நீத்த கொடுமையை- இரக்கமுள்ள இறைவன் செய்வானா?

· இரண்டாம் உலகப்போரில் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களை ஒரே மனிதன்-இட்லர்- கொன்று குவிக்க, இறைவன் பார்த்துக்கொண்டிருந்தது ஏன்?

· முப்பதாயிரத்துக்கும் மேலான ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து, லட்சக்கணக்கானோர் சாவின் விளிம்பில் தவிக்கும் நிலையை உருவாக்கிய ராஜபக்சே போன்ற கொடியவனை, இறைவன் படைத்தது ஏன்?

-இப்படி, பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘கடவுள் என்று ஒருவன் இல்லையென்றாலும் அப்படி ஒருவனைக் கற்பித்து அவனிடத்தில் உன் வலியையும் வேதனையையும் சொல்லி அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர்.

தனக்கு வேண்டியவர்களுக்கு கடவுள் அருள் பாலிப்பது உண்மையென்றால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை ஆறுகால பூஜை செய்கிற அர்ச்சகர்தானே டாடா பிர்லா ஆகியிருக்க வேண்டும்......

பூஜை முடித்து தீபாராதனைத் தட்டை ஏந்தி நம்மிடம் வந்து “பார்த்துப் போடுங்கோ என்று ஏன் கேட்க வேண்டும்?

திருப்பதி மலை சென்று குடும்பமே மொட்டையடித்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில், திருமலை உச்சியிலிருந்து கார் கர்ணம் அடித்து பூண்டோடு அந்தக் குடும்பமே ஏன் அழிய வேண்டும்?

இதுபோன்ற கேள்விகளுக்கு யாரும் எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘உடைத்த கல்லில் ஒரு பாதி சிலை-மறுபாதி படிக்கட்டு என்றால் இதில் எது கடவுள் என்று சித்தர்கள் கேட்கிறார்கள்.

சராசரி மனிதனால் கடவுளைக் கற்பனை செய்து வணங்கமுடியாது. அவனுக்குக் கதை வடிவில் ஒன்றைச்சொல்லி கற்சிலை வடிவில் கடவுளைக் காட்டினால் எளிதில் புரிந்துகொள்வான் என்பதற்காகவே புராணக்கதைகளையும், கோயில் கட்டி உள்ளே விக்கிரகத்தையும் நம் பெரியவர்கள் நிறுவினார்கள்.

கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னுள்ளும் இருக்கிறான் உன்னுள்ளும் இருக்கிறான் என்பதை உணர்வதற்கு ஒரு வயதும் பக்குவமும் வேண்டும். எல்லாராலும் அதை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியாது.

‘குடியிருக்க வீடு கும்பிட ஒரு கோயில் என்று எல்லாவற்றிலும் நம் முன்னோர் ஒரு ஒழுங்கு கடைப்பிடித்தனர்.

‘கடவுளிடத்திலே வேண்டுகோள் வைக்காதே என்கிறார் ஓஷோ.

உன்னைக் கேட்டுக்கொண்டு காலையில் சூரியன் உதிப்பதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு தென்றல் வீசுவதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு மரம் கனியும் நிழல் கொடுப்பதில்லை. உன்னைக் கேட்டுவிட்டு அவன் உன்னைப் படைக்கவில்லை. எப்போது உன்னைக் கேட்காமல் உன்னைப் படைத்தானோ, நீ சொல்லாமலே உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வான்........

உனக்கு விலையுயர்ந்த ஆடி(Audi)கார், ஒரு கோடி மதிப்புள்ள கார் தர- இறைவன் நினைத்திருப்பான். நீ அல்பத்தனமாக “அம்பாசிடர் கார் கொடு இறைவா என்று வேண்டாதே.

உனக்கு எஸ்டேட் ஒன்று பரிசாகத்தர அவன் முடிவு செய்திருப்பான். நீ “இருபது செண்ட் இடம் வீடு கட்ட வேண்டும் என்று கேட்காதே.

அப்படியென்றால் இறைவனிடத்தில் என்னதான் கேட்பது?

ஒன்றும் கேட்காதே. “அரிதான, அற்புதமான, பிறவிகளுள் உயர்ந்த மானுடப் பிறவி கொடுத்ததற்காக நன்றி நன்றி நன்றி இறைவா என்று மட்டும் சொல்.

கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் கடவுளைக் கும்பிடாமலேயே தொண்ணூற்றாறு வயதுவரை வாழ்ந்தாரே என்று கேட்கலாம்.

அவரையும் படைத்தது கடவுள்தானே..தன் குழந்தையைத் தானே எப்படி வெறுக்க முடியும்! பக்திமானைவிட பாமர மக்களைக் கடைத்தேற்ற வாழ்நாளை அர்ப்பணித்த தன் பிள்ளையை கடவுள் எப்படி வெறுக்க முடியும்?

அந்தப் பெரியாரே, “பக்தி தனிமனிதப் பிரச்சினை, ஒழுக்கம் சமுதாயப் பிரச்சினை. ஒரு மனிதன் ஒழுக்கசீலனாக வாழ்ந்தால் அவன் பக்திமானாக இருக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்.

உயர்ந்த ஒழுக்கநெறியிலேயே ஆன்மிகம் சொல்லும் எல்லா விஷயங்களும் அடங்கிவிட்டன.

கடவுள் இருப்பதும் இல்லையென்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அன்றே பாடிவிட்டார்.

கடவுள் ஆன்மா என்று எதுவுமில்லை என்று புத்தர் கூறுகிறார். மாற்றமே உண்மை, நிலையானது என்று எதுவுமில்லை என்று சொல்லும்போது ஆன்மா மட்டும் நிலையானதாக எப்படி இருக்கமுடியும் என்று புத்தர் கேட்கிறார்.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் பெரியவர்கள், மனிதர்கள் ஒழுக்கசீலர்களாக உயர்ந்த நெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கியவைதான். இறந்த பின் இதே உடலோடு எங்கும் போகமுடியாது. இதே நினைவுகளோடு எங்கும் போக முடியாது.

பிறப்புக்கு முன்னால் நாம் என்னவாக இருந்தோம் இறந்தபின் எங்கு போகப்போகிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது.

‘பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன

எனக்கும் தெரியாது என்று கண்ணதாசனும் சொல்கிறான்.

எனவே, மனித நேயத்துடன், ஒழுக்கத்துடன் இம்மண்ணில் வாழும் வாழ்க்கையே சொர்க்க வாழ்வு. அன்பு, அகிம்சை, அறவழியில் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்து அனைத்து உயிரையும் சமமாக மதித்து, இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய்வதே உயர்ந்த பக்தியின் அடையாளம்.

ஆயிரம் பகுத்தறிவு வாதம் செய்தாலும் ,ஆகாயவிமானம் வங்கக் கடலின் மேலே இருபதாயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது “எஞ்சினில் தீப்பற்றிக் கொண்டது இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் சிதறிக் கடலில் மூழ்கப் போகிறதுஎன்று விமானி சொன்னால், அந்த நேரத்தில் “இறைவா! எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று-என்று ஒருவன் வேண்டவில்லையென்றால் அவனே உண்மையான நாத்திகன்.

நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துவிட்டதா, நுரையீரலைத் துளைத்துவிட்டதா? என்று தெரியாத புரியாத நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழலில், மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடம்பில் கத்திவைக்கும் முன் “இறைவா! எப்படியாவது என்னைக் காப்பாற்று என்று குத்துப்பட்ட மனிதன் கும்பிடவில்லை என்றால் அந்த நாத்திகனை நாமும் கும்பிடலாம்.

நன்றி; ராணி வார இதழ்.

Friday, December 31, 2010

தமிழ் மணம் தேர்வில் ‘அமுதவன் பக்கங்கள்!’

தமிழ் மணம் போட்டியின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்கு என்னுடைய இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. இரண்டு பதிவுகளுக்கும் ஓட்டுப்போட்டவர்களுக்கும் மறுபடி ஓட்டுப்போட இருக்கின்றவர்களுக்கும் எனது நன்றி. உண்மையில் இந்தப்போட்டியில் நான் எழுதிய வேறு சில பதிவுகளைத்தான் சிபாரிசு செய்யவிருந்தேன். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் டெம்ப்ளேட்டை மாற்றப்போக தமிழ்மணம் இணைப்பிற்கான சுட்டியும் அத்துடன் போய்விட்டது. பின்னர் என்ன செய்தும் பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வருகிறதேயல்லாமல் இணைக்க முடியவில்லை.அதனால் திரைப்படம் பற்றியவை அல்லாத வேறு பதிவுகளைக்கூட திரைமணத்தில் இணைத்துப் பின்னர்தான் தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தது. இந்தக் காரணத்தால் ரெய்கி பற்றிய என்னுடைய ஒரு பதிவும், தற்காலத்தமிழ் இலக்கியம் பற்றிய இன்னொரு பதிவையும் தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கப்படாததால் அவர்கள் அனுப்பிய பட்டியலில் இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்க்கப்படவில்லை.

உண்மையில் மாற்று மருத்துவம் பற்றிய ரெய்கி கலைக்கான கட்டுரை போட்டியில் இடம்பெற வேண்டும் என்று நிறைய விரும்பினேன். பரிசு பெற வேண்டும் என்பதற்காக அல்ல; நிறையப்பேரைச் சென்றடையுமே என்பதால்.

போட்டியில் சேர்க்க நினைத்த மூன்று கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகளைச் சேர்க்க முடியாததால் வேறு இரண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் இரண்டாவது கட்டத்துக்கு வந்துள்ளன.
ஒன்று; உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்.

இரண்டு; இளைய ராஜாவா, ரகுமானா...?
இந்த இரண்டு கட்டுரைகளுமே அவசியம் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டிய விஷயங்கள் கொண்டவை என்றே கருதுகின்றேன்.

குறிப்பாக கலைஞர் தமது நுண்ணிய அறிவாற்றலால் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறார் என்பதும், எவ்வாறு தாம் விரும்புவதற்கேற்ப குயுக்தியாக காய்களை நகர்த்தி தந்திரமாகத் தம்முடைய விருப்பத்திற்கேற்ப அவற்றை மாற்றியமைத்து மற்றவர்களையும் அதனை ஒப்புக்கொள்ள வைக்கிறார் என்பதையும் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். கலைஞரைப் பற்றித் துல்லியமாக அறிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும்.

அடுத்ததாக, ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ என்ற கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்துகொண்டிருந்த ‘பிலிமாலயா’ இதழில் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான கட்டுரைகளை எம்.ஜி.வல்லபனும் நானும் எழுதிவந்தோம். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களைப்பற்றி சற்றே வித்தியாசமான கட்டுரைகளை மிகச்சிலர்தான் எழுதிவந்தோம். இன்றைய நிலை போல் நிறையப்பேர்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை. இன்றைய இணையத்திலும் சில சிறு பத்திரிகைகளிலும் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான பார்வைகளை நிறையப்பேர் முன்வைக்கிறார்கள். ஆனாலும் சில அடிப்படையான விவரங்களில் அவர்கள் மேலோட்டமாக மட்டுமே கருத்துச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாக கடந்து சென்றுவிடுவதைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றில் ஒன்று திரை இசைத்துறை. திரை இசையைப் பற்றி ஷாஜி என்பவர் நிறைய எழுதுகிறார். அதுகூட அவர் மலையாளத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி தமிழில் மொழி பெயர்க்கப்படும் எழுத்துக்களாகத்தான் இருக்கின்றன. இசையைப் பற்றியும் திரை இசையைப் பற்றியும் அவருக்கு நிறையத் தெரிந்திருக்கிறதே தவிர, அவர் எடுக்கும் சார்பு நிலைகளை அவரால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மகத்தான ஒரு பாடகரையெல்லாம் மிக மோசமாக அவரால் கேவலப்படுத்திவிட முடிகிறது. இது ஒருபுறமிருக்க, இசை என்றதும் அதுவும் திரைப்பட இசை என்றதும் இது ஏதோ இளையராஜாவிலிருந்துதான் தொடங்கியது என்பது போன்ற ஒரு பிரமை, அல்லது தவறான ஒரு கற்பிதம்-இன்றைய பெரும்பாலானோருக்கு இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு யார் மார்க்கெட்டில் இருக்கிறார்களோ அவர்களையும், அவருக்கு முன்னால் வரிசையில் யார் இருந்தார்களோ அவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது என்ற நோய் பெரும்பாலானவர்களைப் பீடித்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நோய் தமிழர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேகமான நோய்தான். மிகச்சிறந்த பாடகர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். டி.எம்.சௌந்தரராஜனை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். மிகச்சிறந்த பாடகி என்றால் அது சித்ராவும் எஸ்.ஜானகியும்தான். பி.சுசீலாவை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சி செய்யவும் மாட்டார்கள். தங்கள் எதிரில் என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். அதுதான் வரலாறு; அதுதான் சாதனை; அதுதான் உலகம். இந்தக் கண்ணோட்டம் சராசரி ரசிகனுக்கு சரியாயிருக்கலாம். பொதுவில் வந்து நின்று பேசவோ எழுதவோ செய்கிறவன் கொஞ்சமாவது அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். செயற்பட வேண்டும்.

இந்தப் புரிதல் எல்லாம் இல்லாமல் இருப்பதால்தான் இயக்குநர் என்றால் மணிரத்தினம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே இவனால் இருக்க முடிகிறது. பாலச்சந்தரையோ ஸ்ரீதரையோ அவர்களுக்கும் முன்னால் இங்கே சரித்திரம் படைத்தவர்களையோ திரும்பிப் பார்க்கும் பக்குவமோ பட்டறிவோ இவனுக்கு இல்லை. அதனைத் தேடிக்கொள்ளவும் விரும்புவதில்லை. தன் முன் இருக்கும் கலைஞர்களில் மட்டுமே ஆரம்பித்து மொத்த விவகாரத்துக்கும் சேர்த்து ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிடும் தகுதி தனக்கு இருப்பதாகவே பல விற்பன்னர்களும் நினைக்கிறார்கள். கருத்து மன்னர்களாக உலா வந்து இதனையொட்டியே தங்கள் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதாவது, காங்கிரஸ் என்றால் சோனியா காந்தியும் ராஜிவ் காந்தியும்தான். இந்திரா காந்தியையோ,நேருவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளும் பக்குவமோ புரிதலோ இவர்களுக்கு இல்லை; அது தேவையும் இல்லை.

இந்த மனப்பிரமையைப் போக்கும் கட்டுரைதான் ‘இளையராஜாவா...ரகுமானா?’ தேவை கருதி கொஞ்சம் பெரிய கட்டுரையாகவே அது நீண்டிருக்கிறது. தயவு செய்து அதனைப் படித்துப் பாருங்கள். தமிழ் மணம் போட்டியினால் நிறையப்பேரின் கவனம் கவரும் கட்டுரையாக அது அமையும் என்று நம்புகின்றேன். அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

போட்டியின் 20-ம் பிரிவான ‘உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான பதிவுகள்’ என்ற பட்டியலில் ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ கட்டுரையை நீங்கள் பார்க்கலாம்.

Tuesday, December 14, 2010

தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை!




தமிழுக்கு நிறைய செய்து வருவதாக கலைஞர் சொல்லிவருகிறார். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் போக்கிற்குத் தம்மை ஒடுக்கிக் கொண்டுவிட்டார் என்பதைத் தவிர தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் தொண்டுகள் எந்த ஆட்சியாளரும் செய்யாதவை என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, பெங்களூரில் வள்ளுவர் சிலை திறப்பிற்கான முயற்சி, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், செம்மொழி உலகத்தமிழ் மாநாடு, தஞ்சைக் கோவிலின் ஆயிரமாவது விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்கின்ற அணிகலன்கள் தமிழன்னைக்குக் கலைஞரால் அணிவிக்கப்பட்டுள்ளன
ஆனால் –
இது ஒரு பெரிய ‘ஆனால்’-

இவை அனைத்துமே – நூலகம் ஒன்றைத் தவிர – தமிழனது பழம்பெருமைகளைப் பேசும் முயற்சிகளுக்கான அடையாளங்கள்தாமே தவிர இந்த நூற்றாண்டின் - இனிவரப்போகும் நூற்றாண்டுகளுக்கான தமிழை அடையாளப்படுத்தும் , பிரதிநிதித்துவப் படுத்தும் சான்றுகளோ அடையாளங்களோ அல்ல .

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தமிழுக்குச் செந்தமிழ்த் தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கன்னடமும் தெலுங்கும் ஒரேயொரு ‘சாதாரணக் கடிதம்’ மூலம் செம்மொழித் தகுதியைப் பெற்றுவிட்ட காட்சியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம், இந்த நாட்டின் அரசியல்.
அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல்.......தமிழகத்தைப் பொறுத்தவரை வேறு மாதிரியான அரசியல். இந்த அரசியல் மொழி விவகாரங்களிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று – திராவிட இலக்கியம், மற்றொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.
தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி ; அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் , தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் , தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சரி , இன்னொரு பெரிய தவறையும் செய்துவருகின்றன.
தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் – அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா?

சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக்கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றிய ஆய்வுகள் , இது பற்றிய நூல்கள், இது பற்றிய கருத்தரங்குகள் , இது பற்றிய கலந்தாய்வுகள் , இது பற்றிய இலக்கியக் கூட்டங்கள் – இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதாம். இவற்றைக்கூட நமக்குள் பழம்பெருமைப் பேசும் நடவடிக்கைகளைத்தாம் செய்கிறார்களே தவிர இவற்றை மற்ற மொழிகளுக்கோ , உலகுக்கோ , குறைந்த பட்சம் ஆங்கிலம் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கோ கொண்டு சென்று சேர்க்கும் எவ்விதமான முயற்சிகளும் செய்யப்படுவதாகத் தகவல் இல்லை.

இவை ஒருபுறமிருக்க ,தொல்காப்பியத்தில்ஆரம்பித்துபுறநானூறு,அகநானூறு,சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிருதிருமுறை, நளவெண்பா, முத்தொள்ளாயிரம் ,என்று வருவார்கள். இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து பாரதியாரைத் தொடுவார்கள். அங்கேயே ஆணி அடித்தாற்போல் நின்றுவிடுவார்கள் – இலக்கிய வாதிகளில் இவர்கள் ஒருவகை.

இன்னொருவகையினரோ தமிழரின் பெருமை, சங்க இலக்கியம், திருக்குறள் என்று ஆரம்பிப்பார்கள். கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியத்தையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மனப்பாடமாகச் சொல்லிவிட்டு பாரதிதாசனிலிருந்து ஒரேயொரு அங்குலம்கூடக் கீழே இறங்கிவர மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பது பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது. பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை!

இந்த இரண்டாவது கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. இருபது இருபத்தோறாம் நூற்றாண்டைப் பற்றியோ தற்காலத்தமிழுலகம் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது-

தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பாடப்புத்தகங்களை விட்டு வெளியே வந்துதான் தமிழைத் தேடுகிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை வார, மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன? இத்தனை நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன...?
தமிழை – தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா எல்லாக் காலத்துக்கும் பரிமாறிக்கொண்டிருப்பது? “சங்க இலக்கியத்தில் என்ன இல்லை?” என்பார்கள்.
உலகம் புதிது; ஒவ்வொரு நாளும் புதிது ; தினசரி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்‘ என்று மனிதர்களைச் சொல்வதும் அதற்காகத்தான். எல்லாமே புதியதாய் வந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழில் மட்டும் வெறும் பழையதுதான் என்று சொல்லிக்கொண்டிருப்பது எந்தளவு புத்திசாலித்தனம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி; சாதாரணக் கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி, வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள்...! அதுவும் ‘இன்றைய’ படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளையும் முந்தைய படைப்பாளிகளையும் சேர்த்துத்தான் எல்லா மொழிகளும் கொண்டாகின்றன – தமிழைத் தவிர!

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில், வங்காளத்தில் இந்த நிலைமைதான் இருக்கிறது. தமிழில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட ‘இன்றைய’ படைப்பாளிகளுக்குத் தரப்படுவதில்லை.

1)ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்க வேண்டியுள்ளது.

3)ஒரு இலக்கியவாதி புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு தமிழைப் பள்ளி கல்லூரிகளைத் தாண்டி வீட்டுக்குள்ளே கொண்டுசென்று வாழவைத்தவர்கள் யார்?

கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா?

செம்மொழி மாநாட்டில் அந்திகீரனார்,பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கள் அமைத்தபோது, கல்கி, அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயர்களில் அரங்கங்கள் வேண்டாமா ?

செம்மொழி மாநாட்டில் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இடம் என்ன? சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்-73, மொழியியல்- 51, இலக்கணம்- 46, ஒப்பிலக்கியம்-39, ஆவணப்படம்-1, என்ற வரிசையில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிப் படிக்கப்பட்ட கட்டுரைகள் வெறும் மூன்று . மூன்று மட்டுமே!..விளங்குமா படைப்பிலக்கியம்..?

அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்பிலக்கியம் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; கனிமொழி படைப்புக்கள் பற்றி மூன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்; அகிலன் கல்கி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கண்ணதாசன் பற்றியெல்லாம் மருந்துக்குக்கூட ஒரேயொரு கட்டுரைக்கூட இல்லையே...!

இவர்களையெல்லாம் படைப்பிலக்கியவாதிகளாகவே ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது தற்காலப் படைப்பிலக்கியம் பற்றிய சிந்தனேயே அரசுக்கு இல்லையா?
வேறொரு கோணமும் இருக்கிறது. வங்காள மொழிக்கு கலையின் அடையாளமாய் அவர்கள் உலகிற்குக் காட்டுவது சத்யஜித்ரேயை ! கன்னடத்தில் கலையின் அடையாளமாகக்கூட இல்லை, கர்நாடகத்தின் அடையாளமாகவே அவர்கள் காட்டுவது நடிகர் ராஜ்குமாரை ! ஆனால் உலகப்பெரு நடிகர்களுள் ஒருவராக நாம் கொண்டாடவேண்டிய நடிகர் திலகத்தை நாம் நமது கலையின் அடையாளமாகவேனும் சொல்கிறோமா? நேற்று மரித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கெல்லாம் சிலையும் நினைவு மண்டபமும் அமைத்து உத்தரவிடுகிறது கர்நாடக அரசு. இங்கே என்ன நடக்கிறது? சிவாஜியை ‘ஆருயிர் நண்பர்’ என்று கூட்டங்களில் உருகுவதுடன் நிறுத்திக்கொள்கிறார் கலைஞர்.

‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்று புறப்பட்டுத் தென்றலாய் கோடிக்கணக்கான தமிழர்களின் காதுகளுக்குள் நுழைந்து உணர்வாய் உதிரமாய்ப் படிந்து போனவர் கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசனையும் ‘ஆருயிர் நண்பர்’ லிஸ்டில் சேர்த்துவிட்டு கண்ணதாசனுக்குத் தரவேண்டிய எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்காமல்தானே இருக்கிறார் கலைஞர்...!
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலமும் விஞ்ஞானமும் படித்த இளைய தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா, அந்த வித்தக எழுத்தாளருக்கு அரசு தந்திருக்கும் அங்கீகாரம் என்ன?

தமிழ் என்றால் தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்துக்கு வந்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்கள் நிகழ்த்துவதும், இலக்கிய மலர்கள் தயாரிப்பதுவும், கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் நிகழ்த்துவதும் இந்தக் கோணத்திலேயே இலக்கியச் சேவையை முடித்துக்கொள்வதுவும் முறையான தற்கால இலக்கியத்தைப் பற்றிய புரிதலே இன்றி நடந்துகொள்வதுவும்தான் அரசின் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பணியாகவும் இருந்து வருகிறது.

தற்கால இலக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தற்கால இலக்கியப் படைப்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் இந்த நூற்றாண்டு படைப்பாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் விடுவதும் ஒரு மொழியைப் பாதுகாப்பதாகவோ வளர்ப்பதாகவோ ஆகாது.

இத்தகு மோசமான நிலைமைக்கு சில இலக்கிய நாட்டாண்மைகள் சொல்லும் பதில் என்னவென்றால் மற்ற மொழியினருக்கு பழமையான இலக்கியங்கள் கிடையாது. அதனால் அவர்கள் தற்கால படைப்புக்களைத் தூக்கிவைத்துக்கொண்டு பெருமையடைகிறார்கள். ஆனால் நமக்கு சங்க கால இலக்கியங்கள் இருக்கின்றன. அதனால் நாம் பழம்பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இது ஒரு கவைக்குதவாத சொத்தையான வாதம். உலகம் இந்த வாதங்களை எல்லாம் ஏற்பதில்லை. உங்கள் மொழியில் இந்த வருடம் என்ன படைப்பிலக்கியம் வந்தது..சென்ற வருடம் எது வந்தது என்றுதான் பார்த்து பரிசு தந்து கொண்டாடுகிறதேயல்லாமல் உங்களிடம் நானூறு வருடங்களுக்கு முந்தைய கவிதை இருக்கிறதா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு பரிசு தந்து கொண்டாடுவதில்லை. பழைய இலக்கியங்கள் நம்மிடம் உள்ள பூர்விகச் செல்வங்கள். அவற்றை நாம் கொண்டாடுவோம். அதே சமயம் புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் உயர்த்திப் பிடிக்கவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
தங்களின் மொழிகளில் வரும் தற்கால இலக்கியங்களை வெவ்வேறு மொழிகளுக்குக் கொண்டுசென்று அதன் மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளையெல்லாம் ஐரிஷ், ஸ்பானிஷ் போன்ற சின்னச்சின்ன மொழிகளெல்லாம் பெற்று அந்த மொழிகளின் படைப்பாக்கங்கள் உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பயணித்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் “எங்கள் மொழியில் எல்லாம் இருக்கிறது. அதனால் எங்கள் இலக்கியம் பாரதிதாசனோடு நின்றுவிடுகிறது. இதற்குமேல் நாங்கள் பயணிப்பதாக இல்லை” என்று அறிவித்துவிடலாமா?

பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் ஆயிரக்கணக்கான சிலைகளும்,மணிமண்டபங்களும், நூலகங்களும், நகர்களும், வரவேற்பு வளையங்களும் உள்ளன. இனிமேலாவது இலக்கிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகளுக்கும் கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சூட்டுங்கள். படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரித்து கௌரவியுங்கள். கர்நாடகத்தில் இதைத்தான் செய்கிறார்கள். தற்கால படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரிக்கிறார்கள். வெறுமனே அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதில்லை. கர்நாடகத்திற்கும் பெங்களூருக்கும் வந்திருப்பவர்கள் நிஜலிங்கப்பா, ஹெக்டே என்ற பெயர்களையும் சிலைகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மாபெரும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் பண்பு இங்கே இருக்கிறது.
அதனால்தான் கன்னடமொழிக்கு ஏழு ஞானபீடம், வங்காள மொழிக்கு ஐந்து ஞானபீடம், மற்ற மொழிகளுக்கு நான்கு ஞானபீடம் தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு என்ற நிலைமை நீடித்து வருகிறது.
சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ?