Thursday, February 18, 2010

கேள்வி - பதில்

கே : ஆனந்த விகடன் இப்போதைய வடிவம் எப்படி இருக்கிறது?
: நன்றாக இருக்கிறது. அவர்கள் புதிதாய் அறிமுகப்படுத்தியிருக்கும் பகுதிகளும் , பெரிய அளவிலான வடிவமும் வண்ணமயமாய்க் காட்சியளிக்கும் படங்களும் , பளபள காகிதமும் , புதிய லே-அவுட்டும் ஒரு புதிய இதழைப் படிக்கிறோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகின் றன. இந்த வடிவம் வெற்றியும் பெற்றுவிட்டது. அதனால் அவர்கள் இந்த ஆல்நியூ விகடனை அப்படியே வைத்துக்கொண்டு பழையபடி பழைய விகடனை ஆரம்பிக்கலாம். அதே பழைய பொருளடக்கத்துடன் அதே பழைய சைஸில்!
கே: கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தீர்களா ?
: இல்லை. அவரது முந்தைய படமான தசாவதாரத்தில் பெற்ற அதிர்ச்சியிலிருந்தே இன்னமும் வெளியே வர முடியவில்லை. தான் ஈடுபடும் திரைப்படத்திற்கென கமலின் ஈடுபாடு அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை என்பது வேறு விஷயம். ஒரு கலைஞனின் ஈடுபாடு மற்றும் திறமையை மட்டும் அளவுகோலாக வைத்துப் பலன்களோ தாக்கங்களோ கிடைப்பதில்லை. படத்தின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் வெற்றிகளும் அதற்கான தாக்கங்களும் கிடைக்கின்றன. தசாவதாரத்தைப் பொறுத்தவரை முதல் வேடமான ரங்கராஜநம்பியைத்தவிர, பல்ராம் நாயுடு வேடத்தை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அது கூட அவர் ஏற்கெனவே வேறுசில படங்களில் செய்த வேடங்களின் நீட்சிதான். மற்ற வேடங்களெல்லாம் வேடங்களே அல்ல. இந்த வேடங்களைப் போட்டுவிடுவதற்கு மேக்கப் கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்களாம். நம்ம ஊர் ஒப்பனைக் கலைஞர்களே இதைவிடவும் அருமையான ஒப்பனையைப் போட்டிருப்பார்கள். NDTV-யில் மன்மோகன் சிங், அத்வானி,வாஜ்பாய், லாலு பிரசாத் போன்ற தலைவர்களை மாஸ்க் போட்ட பொம்மை களாகச் சித்தரித்து ஒரு நிகழ்ச்சி வரும். ஏறக்குறைய அதில் வரும் கேரக்டர்கள் மாதிரியே தான் இருந்தன கமலுக்குப் போடப்பட்டிருந்த வேடங்கள். மூன்றங்குல வேடத்திற்கு முகத்தில் மாஸ்க் அளவுக்குப் பூசிவிட்ட பிறகு உணர்ச்சிகளை எங்கிருந்து வெளிப்படுத்து
வது? கமலுடைய நோக்கம் -நவராத்திரியில் சிவாஜி போட்ட வேடங்களை விடவும் அதிகமாகப் போடுவது என்பது.... கமல் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம். ஏனெனில், சிவாஜியின் அந்தச் சாதனை 'தொடப்படாமல்' அப்படியேதான் உள்ளது.

கே: சமீபத்து அதிசயமாக எதைக் கருதுகிறீர்கள்?
: பரபரப்பாக இருக்கும் மனிதர்களைப் பற்றித்தான் பிரபலமான வார இதழ்களில் அடிக்கடி எழுதுவார்கள். சமீபத்திய ஆறு மாதங்களின் குமுதம் அல்லது ஆனந்த விகடன் இதழ்களை எடுத்துப் பாருங்கள். ஒரு இதழ் விட்டு இன்னொரு இதழ், அல்லது சில வாரங்களில் ஒவ்வொரு இதழிலும் என்று தவறாமல் ஒரு மனிதரைப் பற்றின தகவலோ, புகைப்படமோ, துணுக்கோ, கட்டுரையோ, கேள்விபதிலோ, அனுபவமோ ஏதோ ஒரு பதிவு என்று தவறாமல் வந்திருக்கிறது. அந்த மனிதர் ; கண்ணதாசன்! அவர் 1981-ல் மறைந்தார். ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குப் பிறகும் அவரை நாள்தோறும் ரேடியோவும் டி. வி. சேனல்களும் காசெட்டுகளும் சிடிக்களுமாய்த் தமிழ்ச் சமூகம் இடைவெளியே இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த மகத்தான மனிதன் எல்லாருடைய இல்லங் களிலும் இதயங்களிலுமாய் எவ்வளவு வலுவாய்க் குடிபுகுந்திருக்க வேண்டும் பாருங்கள். எங்கேயோ படித்த ஒரு புள்ளிவிவரம் நினைவுக்கு வருகிறது. “ இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேரின் குரல்கள்தாம் இருபத்திநான்கு மணிநேரமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் - லதா மங்கேஷ்கர் , இன்னொருவர் -கண்ணதாசன்!”

கே: தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு ரகுமான்இசையில் கலைஞர் பாடல் எழுதியிருக்கிறாரே ?
: ஏ.ஆர். ரகுமான்இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்று கலைஞர் ஆசைப்பட்டது தவறா என்ன?
கே: நீங்களும் கேள்வி பதில் ஆரம்பித்துவிட்டீர்களே.........?
: இந்தியாவில் கேள்விபதில்களை முதன்முதலில் பிரபலமாக்கியவர் பாபுராவ் படேல். அவருடைய மதர்இந்தியா பத்திரிகை கேள்வி பதில்களுக்காகவே பரபரப்பாக ஓடியது. எதையும் துணிச்சலாக எழுதுவார். இந்திராகாந்தியைக் கூட 'திஸ் கேர்ள்', 'தட் கேர்ள்' என்றெல்லாம் எழுதுவார். சோ கூட பாபுராவ் படேல் அளவுக்கு வரலாம் என்று நினைத்துத் தான் எழுத ஆரம்பித்தார். தமிழில் கேள்வி பதில்களைப் பிரபலமாக்கியவர் தமிழ்வாணன். ஆனால் கேள்விபதில்களை மிகவும் சுவாரஸ்யமாக்கியவர் என்று எஸ்.ஏ.பியைத்தான் சொல்ல வேண்டும். அரசு என்ற புனைப்பெயரில் ஒளிந்துகொண்டு உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் மிகமிக சுவாரஸ்யமாக்கியவர் அரசுதான். பின்னர் அதே குமுதம் இதழில் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்றொரு பகுதி ஆரம்பித்து பிரபலமான
வர்களைக் கொண்டு கேள்வி பதில்களை எழுத வைத்தார்கள். மிகுந்த வரவேற்பைப் பெற்ற பகுதி அது. ஆனால் சில இதழ்களோடு நிறுத்திவிட்டார்கள். அந்த வடிவம் பிடித்துப்போகவே அதே பாணியில் அப்போது பரபரப்பாக வந்து கொண்டிருந்த 'பிலிமாலயா' இதழில் கேள்வியும் நானே பதிலும்நானே என்று ஒரு இதழில் எழுதினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் அந்தப் பகுதிக்கு வரவேற்பு இருக்கவே திரைப்பட பிரபலங்களை வைத்து அந்தப் பகுதியைத் தொடர நினைத்தார்கள். ஒரேயொரு பிரபலம் மட்டுமே பங்குபெற்றார். தொடர்ந்து சரியாக வரவில்லை என்பதனால் பிலிமாலயா ஆசிரியராக இருந்த எம்.ஜி.வல்லபன் மேலும் சில இதழ்களுக்கு அதனைத் தொடர்ந்து எழுதச் சொன்னார். நானும் சில இதழ்களுக்கு எழுதினேன். அவருடைய 'ஜீனியஸ்' பதில்களும் அதே இதழில் வந்துகொண்டிருந்ததனால் ஒரே இதழில் இரண்டு கேள்வி பதில் பகுதிகள் வேண்டாமே என்பதற்காக என்னுடைய பகுதி நிறுத்தப்பட்டது.
கேள்வியும் நானே பதிலும்நானே என்ற வடிவம் ரொம்பவும் சௌரியமான ஒன்று. ஆனால் தொடர்ச்சியான சுவாரஸ்யம் மிகவும் அவசியம். இந்த வடிவத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு 'ரவுண்டு கட்டி' ஆடிக்கொண்டிருப்பவர் கலைஞர். பல வருடங்களாக கேள்வியும் நானே பதிலும்நானே எழுதிக்கொண்டிருக்கிறார் அவர். இப்போது வலைத்தளத்திலும் நிறையப்பேர் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் மறுபடி ஆரம்பித்து விட்டேன்.

கே: இப்போதைய நடிகர்களில் யாருடைய நடிப்பு பிடித்திருக்கிறது?
: 'கார்த்தி... '! விக்ரம் தன்னை நிரூபிக்க 'சேது' வரவேண்டியிருந்தது. சூர்யா, பாலாவின் 'நந்தா'விலிருந்துதான் தம்முடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். இதற்குள் மேற்படி இருவரும் பல படங்களைக் கடந்து வந்திருந்தார்கள். ஆனால் முதல் படமான 'பருத்தி வீர'னி
லேயே மிக அனாயாசமான நடிப்புத் திறமையை நிரூபித்திருந்தார் கார்த்தி. இரண்டாவது படமான ஆயிரத்தில் ஒருவனில், 'நடிக்க ஆரம்பித்த ஒரு நடிகனின் இரண்டாவது படம்' போலவா நடித்திருக்கிறார்? பல படங்கள் நடித்த ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்புக்கு இணையான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கும் கார்த்தி வியக்கவே வைத்திருக்கிறார். தமிழில் இதற்குமுன் முதல் படத்திலிருந்தே அனாயாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஒரேயொருவர்தானே.

No comments :

Post a Comment