Saturday, March 27, 2010

பெண்ணின் உடல்மொழி ஆபாசமா ?

லீனா மணிமேகலையின் கவிதைகள் பரபரப்பான விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன . நவீன இலக்கியம் என்பதே பாலியல் உறவுகளைப் பச்சையாக எழுதிச்செல்லுதல் என்பதாக மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் பெண் எழுத்தாளர்கள் அதுபோல எழுதும்போது கவனம் ஈர்ப்பது சுலபமாகிவிடுகிறது. (எழுத்தில் ஆண் எழுத்தென்ன பெண் எழுத்தென்ன என்றொரு கிளை விவாதம் வேறு இருக்கிறது.இது அவரவர் சௌகரியத்தையொட்டி அவ்வப்போது லேபிள்களைத் தரித்துக்கொள்ளும்.) பாலியல் அனுபவங்கள் பெரும்பாலும் ஆணின் பார்வை சார்ந்தே இருப்பதால் , பெண்ணின் பார்வையில் அனுபவங்களோ அல்லது விமர்சனங்களோ வெளியாகும்போது கூடுதல் கவனம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பெண்ணின் உடல்மொழியைப் பெண்ணே சொல்லும்போதுதான் யதார்த்தத்தின் பதிவுகள் சரிவரக் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். இதில் இன்னமும் கவனம் பெறுவது அந்த உடல் மொழிகள் எல்லாம் 'தன்னுடைய உடலுடையதே' என்கிற அறிவிப்போடு வருகிற எழுத்துக்கள். இத்தகைய எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும் அருவெறுக்கத்தக்கவை என்றும் தடை செய்யப்பட வேண்டியவை என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறமோ "ஆபாசம் என்று சொல்ல இவர்கள் யார்? இவர்களெல்லாம் என்ன கலாச்சாரக் காவலர்களா? பெண்ணியல் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் குறுக்கே நிற்கும் பிற்போக்குவாதிகள்" என்று பதிலிறுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட எழுத்துக்குரியவரோ "இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றிக் குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. இது தனியொரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சீண்டிப்பார்க்கும் வேலை. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச்சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னிடம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துக்கள் தொடரந்து இதே வீச்சோடுதான் இருக்கும்" என்றிருக்கிறார்.
மேம்போக்காகப் பார்க்கும்போது படைப்பாள இனத்தையே காபந்துபண்ணும் பதில் மாதிரி தோற்றமளித்தாலும் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்களுடன் கூடிய பதிலாகத்தான் இது இருக்கிறது. முதலாவதாக இதைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் இவரைக் கட்டாயப் படுத்தவில்லை. இப்படியா எழுதுவது இப்படியெல்லாம் எழுதலாமா என்பதுதான் கேள்வியே தவிர, நீ இமயமலையைப் பற்றி எழுது, பாஞ்சாலங்குறிச்சிப் போரைப்பற்றி எழுது என்றா சொன்னார்கள்? 'உலகின் அழகிய முதல்பெண் ' என்ற தலைப்பில் 'நான் லீனா, இலங்கை இந்தியா சீனா' என்ற வரிகளுடன் ஆரம்பித்திருக்கும் கவிதைகளைப் பற்றித்தான் ஆட்சேபமே தவிர, ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சுற்றிவளைத்து வந்திருக்கும் ஆட்சேபங்கள் அல்ல. குறிப்பிட்ட அந்தக் கவிதையிலும் சரி தொடரும் இன்னும் சில கவிதைகளிலும் சரி பாலியல் அங்கங்களின் பச்சைக் காட்சிகள் கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, பாலியல் அத்துமீறலின் எந்த 'வேதனை' வெளிப்பட்டிருக்கிறது என்றும் புரியவில்லை.
மாறாக, பாலியல் ரீதியான இத்தகு வெளிப்பாடுகள் அவ்வப்போது சில பெண்களிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சாவித்திரி என்ற பெண் பெங்களூரில் தன்னை நிர்வாணமாக வரைந்துவைத்து ஒரு ஓவியக் காட்சி நடத்தினார். பல்வேறு கோணங்களில் அவர் தன்னுடைய உடலைக் காட்சிப் பொருளாக்கி இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள். நிற்பது, படுப்பது, புரள்வது, உட்கார்ந்திருப்பது என்பதாக அவரின் பல்வேறு நிர்வாணக் கோலங்கள் . பெரிதாக உணர்வின் வெளிப்பாடுகளோ கலையின் பிரதிபலிப்புக்களோ இல்லாத, உடம்பின் அங்க அவயங்களைக் காட்டும் வெற்று ஓவியங்கள்தாம் அவை. “எதற்காக இப்படி வரைந்திருக்கிறீர்கள் இதன் நோக்கம் என்ன?” என்றதற்கு , “என்னை வரைந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது,வரைந்தேன். இரண்டாவதாக ஒரு மாடலை வைத்து இப்படியெல்லாம் வரைவதற்கு பதில் நாமே ஏன் மாடலாக இருக்கக்கூடாது என்று தோன்றிற்று.பெரிய அளவு கண்ணாடி வைத்து கண்ணாடியில் என்னையே நான் பாரத்துக்கொண்டு வரைந்தேன்" என்றார். இதனை ஒருவிதமான மனப்போக்கு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய அங்க அவயங்களைத் திரையில் காட்ட மனதார விரும்பும் நடிகைகளின் விருப்பிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை. பிரஷ்ஷும் கான்வாஸும் ஓவியத்திறமையும் மட்டுமே பெரிதான கலாபூர்வமான பிம்பத்தை ஏற்படுத்தித்தரும் என்றும் சொல்வதற்கில்லை.
உடல்மொழிகளின் உணர்வுகளை எந்த மாதிரியான வார்த்தைகளில் என்ன மாதிரியான வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அவற்றுக்கான முக்கியத்துவமும் அங்கீகாரமும் வரையறுக்கப்படுகின்றன.
சந்துமுனைகளிலும் குழாயடிச்சண்டைகளிலும் பெண்களோடு பெண்கள் சண்டையிடும்போது வெளிப்படும் உடல்மொழி வாக்குவாதங்களையெல்லாம் தடையில்லாத கருத்துச் சுதந்திரம் என்றோ, ஆஹா என்ன அழகாக உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றோ கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அதே சமயம் அவர்கள் தங்கள் மொழிகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதையும் தடுத்து நிறுத்தவும் முடியாது.
அந்த காலக்கவிஞன் கூந்தலின் வாசம் பற்றி எழுதினான். இவர்கள் அந்தரங்க வீச்சம் பற்றி எழுதுகிறார்கள். கூடவே, “ என்னுடைய சிந்தனைகள் இதே பாணியில்தான் இருக்கும் என்னை யாரும் தடுக்க முடியாது" என்றெல்லாம் வீறாப்பு பேசுவதற்கும் சவால் விடுவதற்கும் பின்னணியில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது.
இத்தனைப் பட்டவர்த்தனமாக எழுதத் தொடங்கிவிட்ட பிறகு அதிகமாக எழுதுவதற்கு மேற்கொண்டு ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதுதான் அது.

3 comments :

Jerry Eshananda said...

அழுத்தமான பகிர்தல் ....

? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

Amudhavan said...

பெண்களுக்கு நிகழ்ந்துவிடும் இவ்வகையான கொடூரங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எதிர்ப்புக்குரலாகவும் புரட்சிக்குரலாகவும் அமைந்திருக்க வேண்டிய அந்தக்குரல்,திசை மாறி சுருதி மாறி ஏதோ ஒரு கற்பிதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற தொனியில் தேவையற்று வலிந்து திணித்த ஒரு மொழி நடையில் அமைந்திருப்பது ஏன்? நல்ல படைப்பென்பது தனக்கான மொழிநடையைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும். இது கவிதைத் தேர்ந்தெடுத்த மொழிநடையாகத் தெரியவில்லையே.அழிச்சாட்டியமாய் லீனாவே தேர்ந்தெடுத்த மொழிநடையாக அல்லவா தெரிகிறது.........

Post a Comment