Sunday, September 19, 2010

வைரமுத்துவின் சர்ச்சையைத் தூண்டும் பேச்சுக்கள்.


ந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கிறிஸ்தவர்களின் மனதைப் புண் படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ரஜினியை வானளாவப் புகழும் உரிமை வைரமுத்துவுக்கு நிச்சயம் உண்டு. அதற்கான தேவைகள் அவருக்கு இருக்கலாம். அதற்காக அவர் வரம்பு தாண்டிய நிலையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனம்போன போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப்போகலாம் என்று நினைத்துப் பேசியிருப்பது இங்கிதமற்றதாகவே இருக்கிறது.
பிரச்சினையே, தன்னுடைய வழக்கமான விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரங்களைச் சொல்லிப் பேச்சைத்தொடராமல் ரஜினிகாந்த் பாணியில் குட்டிக்கதை சொல்லிப்பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்று வைரமுத்து நினைத்ததுதான் ஏடாகூடமாகப் போய்விட்டது. ரஜினி பிரபலமானவர், மிகமிகப் பிரபலமானவர் என்று சொல்லவந்த வைரமுத்து இதற்காக அமிதாப் பச்சன், ஒபாமா என்று ஆரம்பித்து போப் ஆண்டவர்வரை அத்தனைப் பேரையும் இழுத்து அவர்களின் தலைகளையெல்லாம் உருட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் சாய்த்துவிட்டு இவர்கள் அத்தனைப்பேரையும் விட ரஜினி பிரபலமானவர் என்று முடிக்கிறார். இதற்கென அவர் தேர்ந்தெடுத்தது ஒரு குட்டிக்கதை. இந்தக் குட்டிக்கதையும் கூட இவரது சொந்தச் சரக்கு கிடையாது. ஏற்கெனவே வழங்கி வருகிற ஒன்றுதான். யாருக்காகச் சொல்கிறோமோ அவருடைய பெயரைச் செருகி மற்ற கதாபாத்திரங்களையெல்லாம் அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்ற வகை கதைதான் அது.
அமிதாப் பச்சனும் ரஜினியும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார்களாம். அமிதாப்பை யாரென்று தெரியாததால் ரஜினியை மட்டும் தேநீருக்கு அழைத்தாராம் ஒபாமா. அமிதாப் ஆச்சரியத்தில் அதிர்ந்து போய்விட்டாராம். இதுவாவது பரவாயில்லை. அடுத்து அமிதாப்பும் ரஜினியும் வாடிகன் நகருக்குச் சென்றார்களாம். அங்கிருந்த போப் ஆண்டவர் ரஜினியை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு அவரை மட்டும் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றாராம். அமிதாப் மயங்கிக் கீழே சரிந்துவிட்டாராம். அவர் மயங்கியதற்குக் காரணம் போப் ஆண்டவர் ரஜினியைத் தெரிந்து வைத்திருந்தது அல்ல, மாறாக அமிதாப் பக்கத்திலிருந்த ஒருவர் அமிதாப்பிடம் “மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினி. வெள்ளை ஆடையுடன் நிற்கிறாரே அவர் யார்?” என்று வினவியதுதானாம்.
இதுதான் வைரமுத்துவின் குட்டிக்கதை. போப் ஆண்டவரை இதைவிடவும் மோசமாக அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
ரஜினி என்ற தான் பாட்டெழுதும் படத்துக் கதாநாயகனைப் புகழ வேண்டும் என்பதற்காக உலகத்தலைவர்களெல்லாம் அனுமதி பெற்றுச்சென்று வணங்கும் ஒரு பெரியவரை –ஒரு மிகப்பெரிய மதத்தின் தலைவரை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா?
வைரமுத்துவுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை மட்டும்தானா?
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுபோல் பதில் சொல்வாரெனில் வைரமுத்துவுக்கு ஒரு பணிவான கேள்வி.
இதே கதையை அமிதாப் என்ற கதாபாத்திரத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கலைஞரைக் கதாபாத்திரமாக வைத்து இதே கதையைச் சொல்ல வைரமுத்து தயார்தானா?
அப்படி உருவாகும் இந்தக் கதையில் கலைஞர் பிரபலமானவரா, ரஜினி பிரபலமானவரா?
என்ன பைத்தியக்கார ஒப்புமைக் கதை இது?
இப்படியெல்லாம் அபத்தக்கதைகள் சொல்லக்கூடாது என்பதுகூடவா வைரமுத்துவுக்குத் தெரியாது?
போப் ஆண்டவரை வெவ்வேறு வகைகளில் அவமானப்படுத்திய பிரிட்னி ஸ்பியர்சும், மடோன்னாவும் பிற்பாடு மன்னிப்புக் கேட்ட கதைகளையெல்லாம் வைரமுத்து தெரிந்து வைத்திருக்கக் கூடும். தெரிந்தும் இம்மாதிரிக் கதையைச் சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஆனால் வைரமுத்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசுவது இது முதல் முறை அல்ல. கண்ணதாசனுக்கு அடுத்து இலக்கியச் சாரத்துடன் பாடல் எழுத வந்தவர் புலமைப்பித்தன். அவருக்கு அடுத்து புதுக்கவிதைப் பாசறையிலிருந்து கவனத்துக்குள்ளானவர் வைரமுத்து. கொஞ்சம் பிரபலமானதுமே “ நான் கண்ணதாசனைவிட உயரமானவன். ஏனெனில் நான் கண்ணதாசனின் தோள்மீது உட்கார்ந்திருக்கிறேன்” என்று பேசினார்.
“வைரமுத்து இப்படியெல்லாம் அபத்தமாக உளறக்கூடாது. அப்படியானால் பழனிபாரதி உன்னைவிட உயரமானவன். ஏனெனில் அவன் உன் தோள் மீது உட்கார்ந்திருக்கிறான்” என்று பதில் சொன்னார் ஒரு கவிஞர்.
சில நாட்கள் சென்றதும் “ இவ்வளவு நாட்கள் தமிழ் எனக்குச் சோறு போட்டது; இனிமேல் தமிழுக்கு நான் சோறு போடுவேன்” என்று பேசினார். தமிழ் அறிஞர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். பிறகு வருத்தம் தெரிவித்தார்.
பிறகு திடீரென்று, “ என்னை என்னுடைய மகன் கபிலன் மட்டும்தான் வெல்லமுடியும்” என்று பேசினார்.
பேசி முடிப்பதற்கு முன்பேயே கபிலன் என்ற வேறொரு கவிஞன் புறப்பட்டுவந்து “உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா?” என்ற பாட்டெழுதி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினான். இன்றைக்கும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து வைரமுத்துவை விடவும் அதிகமான நல்ல பாடல்களை எழுதிவருகிறான் அந்தக் கவிஞன்.
இதோ இப்போது போப் ஆண்டவர் பற்றிய பேச்சு. இன்னொரு சர்ச்சைக்கான திரியை வைரமுத்து கொளுத்திப் போட்டிருக்கிறார். என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.

10 comments :

Mathiseelan said...

ரஜினியைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுழலில் வைரமுத்துவும் சிக்கியிருக்கிறார் என்பதற்காக அவர்மீது பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. எம்ஜிஆருக்கு வாலி எனக்கு வைரமுத்து என்று சொன்ன ரஜினிக்கு வைரமுத்துவின் காணிக்கை இது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Unknown said...

அண்ணே ரஜினியைப் பாராட்ட வைரமுத்து அப்படிச் சொன்னாருன்னு நினைக்கீங்களா?
இது ஒரு சர்தார்ஜி ஜோக். அப்படியே உல்டா பண்ணி கலாட்டா பண்ணியிருக்கார் வைரமுத்து. ரஜினியைப் புகழ்வது போல இகழ்ந்து காலை வாரியிறுக்கார்.

ravikumar said...

Mr.Vairamuthu speech was absurd. As u have correctly mentioned he could have compared Mr.Rajni with CM.But he would not have done since it is a sucide.

Unknown said...

அமிதாப் என்ற பாத்திரத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கலைஞரைப் பொருத்தி வைரமுத்து இதே கதையைச் சொல்வாரா? என்ற கேள்வி ரொம்பவும் நியாயமானது. அதே போல வைரமுத்து எப்போதும் விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரங்கள் சொல்பவர்- இப்போது ரஜினி பாணியில் குட்டிக்கதைகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் என்ற கமெண்ட்டையும் ரொம்பவும் ரசித்தேன். கம்பன் பாணியிலும், காளிதாசன் பாணியிலும் பயணிக்க வேண்டிய கவிஞர் இப்படி நடிகர்கள் பாணியில் பயணிக்க ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும்.

goma said...

வைரமுத்து பேசும் பொழுது நிறையவே யோசித்துப் பேச வேண்டும்.

Amudhavan said...

1)நன்றி மதிசீலன்.
2)அல்போன்ஸ் அப்படியா நினைக்கிறீர்கள்.......!
3)நன்றி ரவிகுமார்.
4)நன்றி செந்தில்.
5)நன்றி கோமா.

Unknown said...

Viaramuthu is becoming a popular commercial "Actor". He should know his limitations. He is a well known poet of modern days. He is closely associated with one of the most corrupt political family in the history! VAIYITRU PILAIPPUKAKA PUGAL PADUVATHU PULAVARGAL VADIKKAI!!!!

Thirumalaisamy

Unknown said...

Mr.Sivakumar's views on GOD is adorable. He has written this with wisdom. I appreciate the powerful thoughts of this veteran actor on various aspects of life!!

Thirumalaisamy

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அட இப்படியும் ஒரு கூத்து நடத்தியுள்ளாரா?
ஊரில் "நக்கிற நாய்க்கு செக்கேது ,சிவலிங்கமேது" என்பாங்க ! அதுதான் ஞாபகம் வருகிறது.

J.P Josephine Baba said...

வைரமுத்துவின் பாட்டு தான் என்ன வெளக்கம் கெட்டவார்த்தைகளின் உச்சம். கலையும் அர்த்தவும் அற்று த்மிழை கற்பழிக்கும் காமுகனின் அலறலாகவே பல பாட்டுக்கள் உள்ளன.

Post a Comment