Friday, November 5, 2010

பட்டாசு வெடிச்சாச்சா?

தோ இன்னுமொரு தீபாவளி வந்துவிட்டது. முன்னெல்லாம் தீபாவளி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் ஆரம்பித்துவிடும். விடியற்காலையிலேயே பட்டாசு வெடிக்கத் துவங்கிவிடுவார்கள். அதிகாலை ஐந்துமணி ஆவதற்குள்ளாகவே யாராவது ஒருவர் பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி. உடனடியாக அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் காதைப்பிளந்துவிடும். யாராலும் தூங்கமுடியாது. இந்தக் களேபரங்கள் அந்த மூன்று நாட்களும் தொடரும். தீபாவளியன்று உச்சக்கட்டத்தில் இருக்கும். பெரிதான சத்தத்துடன் வெடிக்கும் வெடிக்கு லட்சுமி வெடி என்று பெயர். பாவம் லட்சுமி! காதுகளைச் செவிடாக்கும்....இதய நோயாளிகளைத் தூக்கிவாரிப்போடச்செய்யும்......குழந்தைகளைத் திடுக்கிடச்செய்யும் பயங்கர வெடிக்கு லட்சுமி வெடியென்று அந்தம்மாவின் பெயரை எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதன்முதலாக யாரோ ஒரு கம்பெனிக்காரன் லட்சுமி படத்தைச்சுற்றி அந்த பிராண்டில் இந்த வெடியைக்கொண்டு வந்திருப்பான். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கொண்டாட்டங்களுக்கு மக்கள் வெடிச்சத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சத்தங்களை விரும்புகிறார்கள். திருமண ஊர்வலங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். திருவிழாக்களில் பட்டாசு வெடிக்கிறார்கள். அரசியல் கூட்டங்களுக்கு சரம்சரமாய்ப் பட்டாசு கொளுத்துகிறார்கள். படங்கள் ரிலீசாகும்போதும் பட்டாசு.....சாவு ஊர்வலங்களுக்கும் பட்டாசு..............


நடுத்தரவர்க்கத்துத் தந்தைமார்களின் நிலைமைதான் பரிதாபம். போனஸ் வாங்கி கடன் வாங்கி தீபாவளிச்செலவை எப்படியோ ஒப்பேற்றுகிறார்கள். துணிமணிகள் பலகாரங்களுக்கு ஈடான ஒரு பெரிய தொகை பட்டாசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஆன செலவு இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆகிறது. எத்தனை ஆயிரமாக இருந்தால் என்ன எல்லாமே அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் கரியாகப் புகையாகப் போய்விடுகிறது. இதிலுள்ள பொருளாதார ரீதியிலான சிந்தனை நிறையப் பேருக்கு வந்துவிட்டது. ‘கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஒரு மணி நேரத்துல எதுக்குக் கரியாக்கணும்? இனிமேல் பட்டாசுக்குச் செலவழிக்க மாட்டோம்’ என்று முடிவெடுத்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால் அத்தனைப்பேராலும் இந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடிக்க முடிவதில்லை. தாய்க்குலங்கள் இம்மாதிரியான உறுதிகளுக்கெல்லாம் கணவர்களை அனுமதிப்பதில்லை. “ஊர்பூராவும் பட்டாசு வெடிச்சுக்கொண்டாடும்போது நம்ம பிள்ளைங்க மட்டும் வெடிக்காம இருக்கமுடியுமா? உங்க கஞ்சத்தனத்துக்கு எதுக்காக வெட்டியாய் என்னென்னமோ சால்ஜாப்பெல்லாம் பேசறீங்க?” என்று சொல்லி உறுதியைக் கலைத்துவிடுவார்கள்.
ஆனாலும் ஒன்று நிச்சயம். முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. பொருளாதாரக் கணக்குகளுக்கு அடுத்து பெரியார் போன்றவர்களின் பகுத்தறிவு வாதங்கள்.....நரகாசுரனை எரித்த கதையெல்லாம் ஆரியத்தரப்பின் பித்தலாட்டங்கள். தீபாவளி நம் பண்டிகையல்ல.. அதனைப் புறக்கணிக்க வேண்டும்.” என்பதுபோன்ற தீவிரப்பிரச்சாரங்களின் மூலம் தீபாவளி கொண்டாடுவது அறவே நிற்கவில்லையாயினும் பட்டாசு கொளுத்துவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பட்டாசு மோகம் குறைய நல்லாசிரியர்கள் காரணம். காசு கரியாவது ஒருபுறம், சுற்றுச்சூழல் மாசடைவது ஒருபுறம், குழந்தைத் தொழிலாளர்களையே பெருமளவில் உபயோகித்து வேலை வாங்கப்படுவதால் பட்டாசுகளைப் புறக்கணியுங்கள் என்று சில ஆசிரியர்களின் அறிவுறுத்தல் நல்ல பலன்களைத் தந்துள்ளது
என்னுடைய நண்பர் ஒருவர் செலவில்லாமல் தீபாவளி கொண்டாடுவது பற்றிச் சொல்லுவார். “தீபாவளியன்றைக்குச் சாயந்திரம் ஆறுமணி அளவில் எங்கள் வீட்டு மொட்டைமாடி மீது நானும் என் குடும்பத்தினரும் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவோம். எங்களைச் சுற்றிலும் எல்லா வீடுகளிலும் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் பல்வேறு வாணவேடிக்கைகளையும் கொளுத்துவார்கள். ஒரே கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். பட்டாசு கொளுத்துகிறவனைத்தவிர மற்றவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கிறவர்கள்தானே! நாங்கள் மொத்தப்பேரின் சந்தோஷத்திலும் பங்கேற்ற திருப்தியுடன் தீபாவளியைக் கழிப்போம்” என்பார்.
இந்தியாவின் எல்லாக் கமிஷனர்களும் தீபாவளி தவறாமல் நிருபர்களிடம் பேசுகிறார்கள்...சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் எந்தக்குடிமகனும் எதையும் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடுகிறான். எங்கேயாவது தப்பிதம் நிகழ்ந்துபோக தினத்தந்தியிலும் சன்டிவியிலும் கரிக்கட்டையாகக் காட்சியளித்து அனுதாபம் பெற்று மறைந்துபோகிறான்.

கல்வி வளர வளர பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறையும் என்று மகிழ சந்தர்ப்பம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இடம்பெயர்ந்திருக்கிறதே தவிர மாறவோ குறையவோ இல்லை என்பதைத்தான் இன்னொரு கோணம் காட்டுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் படித்த இளைஞர்கள் பட்டாசுகளை தீபாவளிக்குக் கொளுத்துவதில்லை. அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள். எப்போதெல்லாம் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா பூராவுக்கும் கொளுத்துகிறார்கள். அது விடியற்காலையா நள்ளிரவா என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களுக்கு ஆண்டெல்லாம் தீபாவளிதான். கிரிக்கெட்டிற்காக பட்டாசு கொளுத்துவது பற்றியெல்லாம் சுப்ரீம் கோர்ட் ஒன்றும் சொல்லவில்லை போலிருக்கிறது. அல்லது சொல்லியும் இவர்கள் கேட்பதில்லையா என்பதும் தெரியவில்லை.
பட்டாசுகளுக்கு அடுத்து நமக்கெல்லாம் தீபாவளியென்றாலேயே நினைவுக்கு வருவது தீபாவளி மலர்கள்தாம். அந்தக்காலத்தில் விகடன் கல்கி தீபாவளி மலர்கள் பார்ப்பதற்கே அவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தும். கலைமகளும் அமுதசுரபியும்கூட நல்ல கனமான மலர்களைத் தருவார்கள். கல்கி, விகடன் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஏராளம். இத்தனைக்கும் ஐந்து ரூபாய்தான் விலை. அந்த மலர்களை எல்லாராலும் வாங்க முடியாது. அந்தக்கால பொருளாதார நிலை அப்படி. அதனால் தீபாவளியன்று பத்திரிகைக் கடைகளில் அந்த மலர்களை வாங்கிப்போகிறவர்களை ஒரு ஹீரோ அளவுக்குப் பார்ப்பார்கள் சாமானியர்கள். இப்போதும் கல்கி விகடன் இரண்டு பத்திரிகைகளுமே தீபாவளி மலர்களை வெளியிடுகின்றன. ஆனாலும் அந்தக்கால மலர்களிலிருந்த ‘கனம்’ இப்போதைய மலர்களில் நிச்சயமாக இல்லை. ஏனோ அன்றையிலிருந்தே குமுதம் பெரிய சைஸ் தீபாவளி மலர்களை வெளியிடுவதே இல்லை. ஆனால் ஒருமுறையோ இரண்டு முறையோ கல்கண்டு இதழ் ஒரு ரூபாய் விலைக்கு பெரிய அளவில் தீபாவளி மலர் வெளியிட்டிருந்தார்கள். தமிழ்வாணன் அந்த தீபாவளி மலரை மிக அழகாகவும் சுவாரஸ்யமாகவும் வெளியிட்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம் தீபாவளி மலர்களில் பெரும்பாலும் தீபாவளி சம்பந்தமான சிறுகதைகள் இருக்கும். ஒரு முறை நா.பார்த்தசாரதிதான் “தீபாவளி மலர் என்றால் தீபாவளியன்று வெளியிடப்படும் மலர் என்றுதான் அர்த்தமே தவிர அதில் தீபாவளியைப் பற்றிதான் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைக்கத் தேவையில்லை”என்று சொன்னார். அதன்பிறகுதான் அந்தப்பாணி குறையத்தொடங்கியது.

தீபாவளி மலர்களுக்கு அடுத்து திரைப்படங்கள்தாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. ஒரு கன்னட இலக்கிய நண்பர் ஒருமுறை “தமிழர்களுக்கு தீபாவளியென்றால் பூஜை பண்டிகை பட்டாசு என்பதற்கடுத்து அன்றைக்கு கட்டாயம் ஒரு புதிய சினிமா பார்த்தாகவேண்டும் என்பதாக ஒரு சடங்கு இருக்கிறதாமே” என்று கேட்டார். “சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் கிடையாது. சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அப்படியொரு பழக்கத்துக்கு தமிழர்கள் அடிமையாகி விட்டார்கள் என்பதென்னமோ உண்மைதான்” என்கிறமாதிரி நான் சொன்ன பதிலை அவர் கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை.”இல்லை சார் அப்படி ஒரு சாஸ்திரமே இருக்கிறதாமே” என்று அந்த நண்பர் பிடிவாதமாக இருந்தார். யோசித்துப்பார்த்தால் இதையும் தமிழர்கள் ஒரு சாஸ்திரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பாதித்தமிழர்கள் தியேட்டர்களில் புதுப்படங்களையும் மீதித்தமிழர்கள் தொலைக்காட்சிகளில் நடிக நடிகையர்களின் ஞானோபதேசத்தையும் கேட்டுத்தான் தீபாவளியன்று தங்களை உயிர்ப்பித்துக்கொள்கிறார்கள்.

இதோ இன்னுமொரு தீபாவளியும் வழக்கம்போல் கடந்துவிட்டது.

No comments :

Post a Comment