பிரபலமானவர்களுடன் முன்கூட்டியே ஏற்பாடுசெய்துகொண்டு சந்திக்கச் செல்லுவது என்பது ஒருவகை. சற்றும் எதிர்பார்க்காத இடத்திலும் சூழ்நிலையிலும் சந்தர்ப்பத்திலும் அவர்களை சந்திக்கநேர்வது என்பது ஒருவகை. இந்த இரண்டாவது வகையான சந்தர்ப்பங்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் சந்திக்கநேர்ந்த நான்குபேரைப்பற்றிய தகவல்கள் இவை. இந்த சந்திப்புக்களின் மொத்த நேரமே இரண்டொரு நிமிடங்கள்தாம்; இரண்டொரு வார்த்தைகள் மட்டும்தான் பேச முடிந்திருக்கிறது. அவ்வளவுதான் பேசவும் முடியும். ஆனாலும் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டிருக்கிறது.
அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஒளிப்பதிவு என்பதுபற்றிய சிந்தனையையே ஏற்படுத்தியவர் அவர்தான். ஸ்ரீதரின் முக்கால்வாசிப்படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். இன்றைய பாலுமகேந்திரா, ஸ்ரீராம், ஜீவா, ரத்னவேலு, கே.வி.ஆனந்த் போன்றவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னோடி அவர்தான். தமிழில் தொழில்நுட்பங்களுக்காகப் பேசப்பட்ட முதல் இயக்குநர் ஸ்ரீதர்தான். அதுவும் குறிப்பாக ஸ்ரீதர் படங்களில் வின்சென்டின் பங்களிப்பு கணிசமானது. காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை போன்ற படங்களைப் பார்த்தோமானால் முக்கியமான பாடல் காட்சிகளிலெல்லாம் ஒவ்வொரு பிரேமையும் அப்படியே பிரதியெடுத்து கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டிவைத்துக்கொள்ளலாம். அப்படி ரவிவர்மா பாணியில் ஓவியம் தீட்டியதுபோன்ற டச் ஒன்றைத் தந்திருப்பார். ஆனால் வேடிக்கை பாருங்கள், பாலுமகேந்திரா உட்பட எந்த ஒளிப்பதிவாளரும் வின்சென்டின் பெயரை மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. அது போகட்டும்.
நாம் விஷயத்திற்கு வருவோம்.
வின்சென்ட் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதுதெரிந்து அவரைச் சந்திக்க வரட்டுமா என்று கேட்டதற்கு “இரவு ஏழு மணிக்கு அறைக்கு வந்துவிடுங்களேன்” என்றார். அவர் சொல்லியிருந்தபடி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்(தற்சமயம் krishnathreya blogspot-என்று வலைப்பூ எழுதிக்கொண்டிருக்கிறார்) உட்லண்ட்ஸ் சென்றிருந்தோம்.
வின்சென்ட்டைச் சென்று சந்தித்ததும் அறைக்குள்ளிருந்து வெளிவந்தவர், “வாங்க உள்ளே ஒரே கூட்டமாயிருக்கு. டைரக்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தான்னு எல்லாரும் நாளைய படப்பிடிப்புக்கான ஆலோசனையில இருக்காங்க. நாம இங்கே உட்கார்ந்தே பேசுவோம்” என்றுசொல்லி வராந்தாவிலேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும். வாசலில் சர்ர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. கார் நின்றதும் நிற்காததுமாக அதிலிருந்து ஒருவர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே ஓடிவந்தார். பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி.
ஓடிவந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.
“என்ன வின்சென்ட் டைரக்டர் இருக்காரா, தயாரிப்பாளர் இருக்காரா?” என்று கேட்டபடி புயல்போல உள்ளே நுழைந்தார்.
“இருக்காங்க இருக்காங்க வாங்க” என்று அவருக்கும் “ஒரு நிமிஷம் வந்துர்றேன்” என்று எங்களுக்கும் சொல்லிக்கொண்டே எழுந்து உள்ளே ஓடினார் வின்சென்ட்.
உள்ளே போனவர் திரும்பிவந்து எங்களிடையே உட்கார்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். எங்களுடைய கவனம் பூராவும் திரும்ப எப்போது கதவு திறக்கும் சிவாஜி எப்போது வெளியே வருவார் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்குமா என்பதிலேயே இருந்தது
ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்.. கதவு திறந்தது. “என்ன என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று கேட்டபடியே சிவாஜி வெளியே வந்தார்.
“பத்திரிகைக்கான பேட்டி ஒண்ணு. பேசிட்டிருக்கேன்” என்று சொன்ன வின்சென்ட் எங்களை அறிமுகம் செய்துவைக்க “சரி ராஜா சந்தோஷம் வர்றேன்” என்று கைகூப்பியபடியே ஓடிச்சென்று காருக்குள் ஏறிக்கொண்டார் நடிகர் திலகம்.
ஒரு மின்னல் சந்திப்புதான். இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது!
********
இது நடந்தது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு...! பெங்களூர் கன்டோன்மென்ட்டின் மையப்பகுதியில் கோல்ஸ் பார்க் என்றொரு பூங்கா இருக்கிறது. அதற்கு சற்றே பக்கத்தில் சவேரியார் கோவில் என்ற மிகப்பெரிய சர்ச் ஒன்று இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய சர்ச் அது. மொத்தமும் கருங்கற்களால் ஆன பிரமாண்ட கட்டடம்.
அந்த சர்ச்சின் பெரிய வளாகத்திலிருந்து நாராயணபிள்ளை தெருவுக்குப்போக சர்ச்சின் வெளிவாசல் வழியாக வெளியேறியபோது ஒரு பெரிய லாரி ஒன்று கடந்து சென்றது. அது போகட்டும் என்பதற்காக நின்றபோது அந்த லாரி சடன்பிரேக் போட்டு நின்றது. யாரோ ஸ்கூட்டரில் குறுக்கே போயிருக்கிறார்கள். அந்த லாரிக்குப் பின்னே வந்துகொண்டிருந்த வெள்ளை நிறத்து அம்பாசிடர் கார் ஒன்றும் சடாரென்று நின்றது. இப்போது இந்தக்கார் நின்றிருப்பது எனக்கெதிரில். அதாவது வெறும் இரண்டடி எதிரில்.
உள்ளே பார்த்தால் ஆச்சரியம். ஜன்னலோரத்தில் சத்ய சாய்பாபா உட்கார்ந்திருக்கிறார். நான் பார்க்க அவரும் என்னைப் பார்க்கிறார். கனிவான பார்வை. சட்டென்று என்ன செய்வது என்று தெரியவில்லை. வணக்கம் தெரிவித்தேன். சிரித்துக்கொண்டே கையை உயர்த்தினார். கார் சென்றுவிட்டது.
அப்போதெல்லாம் சாய்பாபாவின் கீர்த்தி உச்சத்தில் இருந்த நேரம். ஆசிரமத்தில் துப்பாக்கிச்சூடு, விபூதி வரவழைப்பது வெறும் மாயாஜாலம் என்பதுபோன்ற யூடியூப் விவகாரங்கள் எதுவும் வராத நேரம். நண்பர்களிடம் சொன்னபோது “பாரேன் நாங்கள்ளாம் எத்தனையோ செலவழித்து புட்டபர்த்திக்கும் ஒயிட்ஃபீல்டுக்கும் போய் தூரத்தில் நின்று அவரைத் தரிசித்து ஆசி பெற்று வருகிறோம். உனக்கு போகும் வழியில் அவராகவே வந்து தரிசனமும் ஆசியும் கொடுத்துட்டுப் போறார்னா சம்திங் கிரேட்” என்றார்கள். எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு திடீர் சந்திப்பு அவ்வளவுதான்!
*************
இந்த சந்திப்பும் முந்தையது போலவே சாலையில் ஏற்பட்ட சந்திப்புதான்.
பெங்களூர் மகாத்மா காந்திசாலைக்கு அடுத்த கப்பன்சாலை. ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக பிஆர்வி தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். மாலை ஆரம்பித்திருந்த நேரம். நான்கு மணி இருக்கலாம்.
எதிர்புறத்திலிருந்து பாஆஆஆஆங் என்று கூவிக்கொண்டு படுவேகமாக ஒரு பைலட் ஜீப் வந்தது. பின்னேயே நான்கைந்து கார்கள் மிக வேகமாக வந்துகொண்டு இருந்தன. கவர்னர் மாளிகையிலிருந்து வரும் சாலை இது. எனவே யாரோ ஒரு விவிஐபி வருகிறார் என்று தெரிந்தது. சர் சர்ரென்று நான்கைந்து கார்கள் போய்விட மறுபடி ஒரு ஜீப்பும் இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்தபோதே பிஆர்வி முனையிலிருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்துவிட சடன் பிரேக் அடித்து கிரீச்சிட்டுக்கொண்டு நின்றது அந்த விவிஐபியின் கார். எனக்கு நேர் எதிரில்..இரண்டடி எதிரில்.
முன்னால் போன ஜீப்களும் கார்களும் நிறுத்தப்பட்டு அதிலிருந்து குதித்து ஓடி வந்த அதிகாரிகள் சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்த போலீஸைக் காய்ச்சி எடுக்க அவர் என்னவோ சொல்லி சமாளிக்கப் பார்க்க.. அதற்குள் குறுக்கு வெட்டாகப் போகவேண்டிய வாகனங்கள் போக ஆரம்பிக்க...இந்தக் களேபரங்களுக்கு இடையில் என் எதிரில் இருந்த காரில்
சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தவர் வாஜ்பேயி.
கார் நிறுத்தப்பட்டதற்கு டிரைவர் ஏதோ சமாதானம் சொல்ல முற்பட ‘டீக்கே டீக்கே’ என்று அவரை சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பியவரிடம் ஒரு அடி முன்னே சென்று ‘நமஸ்தே சார்’ என்றேன். சிரித்துக்கொண்டே தலையாட்டியவர் என்னைப் பார்த்து ஏதோ கேட்டார் இந்தியில். எனக்குப் புரியவில்லை. “பார்டன் சார்” என்றேன். அவர் தாம் சொன்னதையே மறுபடியும் சொன்னார் அதே இந்தியில். நான் ஒன்றும் புரியாமல் நிற்க அதற்குள் காருக்குள்ளே இருந்த வேறு யாரோ அவரது கவனம் கலைக்க.. இந்தச் சந்தடியில் டிராபிக் சரியாகி பச்சை விழுந்துவிட கார் நகர ஆரம்பித்துவிட்டது. வாஜ்பேயியைக் காருக்குள் பார்த்த நான்கைந்துபேர் ஓடிவர கார் வேகம் பிடித்துவிட்டது. இது அத்தனையையும் கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரர் அவசர அவசரமாக ஓடிவந்து “சார் என்ன பேசினீங்க அவர்ட்ட?” என்றார். “அவர்ட்ட என்னங்க பேசமுடியும் வெறும் நமஸ்தே சொன்னேன் அவ்வளவுதான்” என்றேன்.
இது நடந்த அடுத்த மாதமே அவர் பிரதமராகிவிட்டார்.
அவர் இந்தியில் என்ன கேட்டிருப்பார் என்பது இப்போதும் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.
************
மறுபடியும் ஹோட்டல்!
பெங்களூர் பேலஸ்கிரவுண்டில் கிரானைட்ஸ் எக்ஸிபிஷன் நடந்துகொண்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களில் குறிப்பிட்ட ஒருவரைச் சந்திப்பதற்காக லீ மெரிடியன் ஹோட்டலுக்கு நானும் நண்பர் கிருஷ்ணசாமியும் சென்றிருந்தோம். கிருஷ்ணசாமி இப்போது காதிகிராமயோத் பவன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். லீமெரிடியன் ஹோட்டலின் வரவேற்பறையைக் கடந்து லிஃட்டுக்குச் சென்றோம். லிஃப்டில் ஏறி பொத்தானை அழுத்தி கதவு மூடப்பார்த்திருக்கும்போது “ஒன்மினிட் ஒன்மினிட் பிளீஸ் வெய்ட்” என்றபடி ஒரு பெண்மணி லிஃப்ட்டை நோக்கி ஓடிவருவது தெரிய லிஃப்ட்டை நிறுத்தினோம். அந்தப் பெண்மணி தாம் மட்டும் ஓடிவரவில்லை. தம்முடன் மிகப்பெரிய இரண்டு சூட்கேஸ்களையும், கூடவே தூக்கமுடியாத இன்னொரு லெதர் பையையும் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார். அவர் வேகத்துக்கு அந்த சூட்கேஸ்கள் ஒத்துழைப்பவையாக இல்லை. ஒவ்வொன்றும் அவ்வளவு கனம்; அவ்வளவு பெரியது. அவற்றைத் தூக்கி லிஃப்ட்டுக்குள் வைக்கவும் அவரால் இயலவில்லை. “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லி நாங்கள் இருவரும் வெளிவந்து அவரது எல்லா லக்கேஜ்களையும் எடுத்து உள்ளே வைத்தோம்.
“தேங்க்யூ தேங்க்யூ” என்று நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னவர், அதற்குள் வியர்த்துவிட்ட தம்முடைய முகத்தைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் வந்தது. யார் என்பது மனதில் சிக்கவில்லை.
“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு நீங்களே எடுத்து வர்றீங்க? ரூம் பாய்ஸ் எடுத்து வந்திருப்பாங்களே” என்றார் நண்பர்.
“ரிசப்ஷன்லயும் சொன்னாங்க..ஆனா வெய்ட் பண்ணனும்னு சொன்னாங்க. கொஞ்சம் அர்ஜண்ட் அதான் நானே வந்துட்டேன்” என்று சிரித்தார். ஒன்று வெளிநாட்டிற்கு இங்கிருந்து புறப்படுவதாக இருக்கவேண்டும். அல்லது வெளிநாட்டிலிருந்து நேரடியாக வந்திருக்கவேண்டும். அவ்வளவு பெரிய பெட்டிகள்...”ஐந்தாம் மாடி” என்று தாம் போகவேண்டிய தளத்தையும் சொன்னார். அவர் போகவேண்டிய தளம்தான் நாங்களும் போவதால் “எந்த அறை சொல்லுங்க கொண்டுவந்து தர்றோம்” என்றோம்.
“நோ..நோ.. நீங்க இப்ப செய்த ஹெல்ப்பே போதும். ரொம்ப தேங்ஸ். கீழருந்து போன் பண்ணியிருக்கேன். எங்க ஹஸ்பெண்ட் லிஃப்ட்டுகிட்டேயே வெய்ட் பண்ணுவார். நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றார்.
ஐந்தாம் தளம் வந்ததும் கதவு திறந்தது. அந்தப் பெண்மணியின் ஹஸ்பெண்ட் கருப்புச் சட்டையும் ஜீன்ஸுமாக லிப்ட் அருகிலேயே நின்றிருந்தார்.
அட, ரஜனி!
நாங்கள் எதுவும் பேசுவதற்கு முன்பாக திருமதி ரஜனி முந்திக்கொண்டு “இவங்கதான் லக்கேஜ் எல்லாம் கொண்டுவருவதற்கு ரொம்பவும் ஹெல்ப் பண்ணவங்க” என்றார்.
“தேங்க்யூ தேங்க்யூ...,தேங்க்யூ வெரிமச்” என்று அவசரமாய்ச் சொல்லியபடியே ஒருகையில் சின்ன சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு மறுகையால் பெரிய சூட்கேஸை இழுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார் ரஜனி.
ரஜனி விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள்.
7 comments :
மிகவும் சுவாரசியமான பதிவு..
நடை மிக அருமையாக இருக்கிறது..
நன்றி; வாழ்த்துக்கள்.
அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஒளிப்பதிவு என்பதுபற்றிய சிந்தனையையே ஏற்படுத்தியவர் அவர்தான்.
அதிலும் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் , என்ன நினைத்து என்னை என்ற பாடலில் கேமரா தேவிகவிளிருந்து தொடங்கி முத்துராமனை கடந்து அவரின் காட்டலின் கீழே பயணிக்குமே அந்த காட்சி அருமை
""அவர் இந்தியில் என்ன கேட்டிருப்பார் என்பது இப்போதும் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.""
எனக்கும் கூடத்தான் சார்
ரொம்ப சுவையான பதிவு சார்
சார்,
ரெய்கியை பற்றி உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும், உங்கள் தொடர்பு என் அல்லது மின்னஞ்சல் முகவரியை கொடுக்கிறீர்களா..
நன்றி
க்ருஷ்
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கண்பத். கமெண்ட் பாக்ஸின் மக்கரால் உடனடியாக நன்றி தெரிவிக்கமுடியவில்லை. தாமதத்திற்கு அதுதான் காரணம்.
பதிவுகள் எழுதும்போதும் சரி; பதிவுகளுக்கான மறுமொழிகள் எழுதும்போதும் சரி, போகிறபோக்கில் எதையோ அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்றில்லாமல் உண்மையாக அனுபவித்து எழுதுகிறீர்கள். உங்களின் இந்தப் பாணி பிடித்திருக்கிறது.நன்றி ஏஆர்ஆர்.
இந்த ஈ மெயிலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம் க்ருஷ். amudhavan6@gmail.com
அன்றே எழுத நினைத்து....! நாம் இருவரும் சேர்ந்து எவ்வளவு வி.ஐ.பி க்களைச் சந்தித்திருக்கிறோம்! இன்று நினைவாக மாறிவிட்ட அந்த அனுபவங்கள் இன்றும் இனியவை!
Post a Comment