Saturday, September 3, 2011

ஜெயாவின் தீர்மானமும் தலைவர்களின் புகழாரங்களும்......


ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மூன்றுபேரின் தூக்குதண்டனையும் எட்டுவார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தூக்குதண்டனையை நிறுத்தவேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுக்க உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப்போராட்டங்களை சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்தபோதிலும் அவர்களுடைய ஆதரவு எதுவும் தேவை இல்லாமலேயே உணர்வுகொண்ட பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராட ஆரம்பித்த காட்சிகள்தாம் நிதர்சனமானவை. அவர்களுடைய உயிர் பறிப்பு தள்ளிப்போடப்பட்டதற்கு கோர்ட்டின் உத்தரவுதான் காரணமென்றபோதிலும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற சட்டமன்றம் மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் தீர்மானம் அவ்வளவு சாதாரணமாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டாக வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தீர்மானம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பதிலும் அதற்காக மாநிலமுதல்வருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சட்டமன்றம் இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது; அதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்த நிலைமையில்தான் நீதிமன்றத்தில் விவாதம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் ஜெயலலிதா அப்படியொரு சூழலைத்தான் அதற்கு முந்தைய தினம்வரை ஏற்படுத்திவைத்திருந்தார். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் பற்றி பேச யாரையும் அனுமதிக்காத நிலைமை. புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த விஷயம்பற்றிப்பேச அனுமதிகிடைக்காததனால் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறார். 

மக்களெல்லாரும் கொதிக்கின்றனர். தலைவர்களெல்லாரும் வேண்டுகோளுக்குமேல் வேண்டுகோளாய் வைக்கின்றனர். முதல்வர் அசைந்துகொடுக்கவில்லை. ஆனால்-

ஜெயலலிதா வானத்தைக்கீறி வைகுண்டம் காட்டப்போகிறார் என்று நம்பிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த சிறுகட்சித்தலைவர்களும் சில இயக்கங்களின் தலைவர்களும் தங்களுடைய மானசிகத்தலைவி தாங்கள் எதிர்பார்த்ததுபோல எதுவும் செய்யவில்லை என்றதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இன்னமும் தொடர்ந்து அந்தத் தங்கத்தலைவியை எப்படியெல்லாம் மனம்குளிரவைக்கமுடியுமோ அப்படியெல்லாம் மனம் குளிரவைக்க என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் தவறாமல் செய்துகொண்டு இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்! இது அவர்களுக்கு மிக சுலபமான காரியமாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர் மனம் குளிர இரண்டு காரியங்கள்தாம் தேவை.

ஒன்று, கருணாநிதியை மிகக் கேவலமாக வசைபாட வேண்டும்.

இரண்டாவது, தங்கத்தலைவியை மிக அதிகமாகப் புகழவேண்டும்.

இது இரண்டையும் அவர்கள் ஜெயலலிதாவுக்காகச் செய்வதில் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இந்தச் செய்கையை செய்வதற்கு அவர்கள் ஈழத்தமிழர்களின் விவகாரத்தைjfப் பயன்படுத்துகிறார்களே என்பதுதான் நாம் ஆட்சேபிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினார். பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்றும் கோரினார். வானமே இடிந்து சிங்களர்கள் தலையில் விழுந்துவிட்டது என்பதுபோன்ற பிரமை இங்கே இருக்கும் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழீழமே கிடைத்துவிட்டது என்பதுபோன்ற குரலை தமிழ் உணர்வாளர்கள் எழுப்ப ஆரம்பித்தனர். 

தமிழக மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் ஏனெனில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. ஜெயலலிதாவை எதிர்த்து இங்கு எவன் வாலாட்டமுடியும்? என்ற கேள்வி அப்பாவித்தனமாக முன்வைக்கப்பட்டது. ‘ரவுடிகள் கொள்ளையர்கள் கொலைக்காரர்கள் அத்தனைப்பேரும் வெளிமாநிலத்துக்கு ஓடிவிட்டார்கள். நான் வந்துவிட்டேன் இல்லையா? என்ற சுயதம்பட்டத்தை அவரே தனக்குத்தானே வேறு எழுப்பிக்கொண்டார்.

எல்லாமே காமெடியாகப்போயிற்று.

கொலையும் கொள்ளையும் ரவுடியிசமும் எப்போதும்போல் நீக்கமற நடந்தன. போதாததற்கு 
சில சிரிப்புத்திருடர்கள் அவர் கட்சி எம்எல்ஏவும் இலக்கியவாதியுமான பழ கருப்பையா வீட்டிலேயே கொள்ளை நடத்தி ஜெயலலிதாவுக்கு பெப்பே காட்டினர். ஜெயலலிதா என்பது ஒரு ஒப்புயர்வற்ற வீரதீர சக்தி அவரிடம் அவ்வளவு சுலபமாக யாரும் வாலாட்டிவிட முடியாது என்ற பிம்பத்தை சர்வ சாதாரணமாய் உடைத்துக்காட்டினார் பாண்டிச்சேரியின் ரங்கசாமி. தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து வெற்றிபெற்ற முடிவுகள் வந்ததும் ஜெயலலிதாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் புறக்கணித்தார் அந்த மனிதர்.

சிங்களனின் கைவரிசையும்  தமிழக மீனவர்களிடம் வழக்கம்போல் தொடரவே செய்தது. அவன் பாட்டுக்கு மீனவர்களைக் கைதுசெய்வதும், நிர்வாணப்படுத்துவதும், வலைகளை அறுப்பதும், மீன்களைப் பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டுவதும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதாவின் வீரமும் தீரமும் பல்வேறு தோல்விகளாலும் ஊழல் மற்றும் மகளின் சிறைவாசம் ஆகியனவற்றாலும் காங்கிரசின் போங்காட்டத்தினாலும் நொந்து நூலாகிப்போயிருக்கும் கருணாநிதியின் கட்சியினரைத் துன்புறுத்துவதிலும் வேட்டையாடுவதிலும் மட்டுமே தொடர்ந்தது. அவருடைய வீரதீர வேடத்துக்கு ஊடகங்களும் வழக்கம்போல் துணைபுரிந்தன.

கலைஞர் ஏற்கெனவே போட்ட பல்வேறு தீர்மானங்களைப் போன்ற தீர்மானங்களையே ஜெயலலிதாவும் போட்டார் என்றபோதிலும் சந்தர்ப்பங்கள் ஜெயலலிதாவின் தீர்மானத்தைத் தூக்கிப்பிடித்தன. ஆனால் இந்தத் தீர்மானங்கள் மக்களின்- குறிப்பாக இளைஞர்களின் வாக்குகள் தேர்தலில் எந்தக் காரணத்திற்காக விழுந்ததோ அந்தக் காரணத்தைச் சார்ந்ததாகவும் அதற்கு ஆதரவாகவும் இருந்துவிட்டுப்போகட்டுமே என்ற பாவனையில் ஒப்புக்காகப்போடப்பட்ட தீர்மானங்களாகவே இருந்தன என்பதுதான் உண்மையான உணர்வாளர்களின் சந்தேகங்களாக இருந்தது. அந்தச் சந்தேகங்களை உறுதிசெய்வதுபோன்றே இருந்தன ஜெயலலிதாவின் நடவடிக்கைகள். மூன்றுபேரின் தூக்குதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதனை எதிர்த்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளும் வேண்டுதல்களும் பல்வேறு முனைகளில் இருந்துவந்தபோதும் கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அவர். அதுமட்டுமின்றி அதற்குத் தமக்கு அதிகாரமில்லை என்றும் அறிவித்தார்.

கருணாநிதியின் இரட்டைவேடம், பித்தலாட்டம், கபட நாடகம் – இவையெல்லாம் ஜெயலலிதாவின் விமரிசனங்கள். இவை அப்படியே தமக்கும் பொருந்தும் என்பதை அம்மையார் மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை.

ஏனெனில் முதல்வர் முடியாது என்று சட்டமன்றத்தில் சொல்லிவிட, அதுபற்றிக் கவலைப்படாத மக்கள் கூட்டம் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டது. சட்டக்கல்லூரி மாணவர்களும் மற்ற மாணவர்களும் தெருவில் இறங்கிப்போராட ஆரம்பித்துவிட்டனர். ரயில் மறியல்கள் நடைபெறுகின்றன. பெண்கள் தெருவில் இறங்கிவிட்டனர். பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள, மற்ற வக்கீல்கள் நீதிமன்ற வளாகங்களிலேயே போராடத்துவங்குகின்றனர். செங்கொடி என்ற பருவமலர் தீயில் தன்னையே சுட்டுப்பொசுக்கிக்கொண்ட திடுக்கிடும் செய்தி அதிர்ச்சியாய் வந்து பாய்கிறது. முத்துக்குமரன் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் மிகப்பெரிய பாதிப்பாக இந்த மரணம் இருக்குமோ என்ற அச்சம் தீயைப்போலப் பரவுகிறது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றமும் அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வி விஷயத்தில் தலையில் இறக்கிய சம்மட்டி அடியிலிருந்தே மீள்வதற்கு முன்னர் இப்படியொரு விவகாரம் அதுவும் இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் நேரிடையாக தெருவில் இறங்கிப்போராடும் போராட்டத்தை அவர்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கையினால் அடக்கமுடியாது என்ற மிகமிக சாதாரண எளிய உண்மையைத் தெரிந்துகொண்டதனால் ஒரு தீர்மானத்தை அவசர அவசரமாக நிறைவேற்றிப் படித்துவிட்டு அமைகிறார் அம்மையார்.

“நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தவுடன் ஐகோர்ட்டிலும் ஐகோர்ட் வளாகத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி மேலிட முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இப்படியொரு காட்சியை ஐகோர்ட்டு வளாகத்தில் இதுவரை நான் பார்த்தது இல்லை. என்கிறார் வைகோ. ஏறக்குறைய இரண்டாயிரம்பேருக்குமேல் அன்றையதினம் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தார்கள் என்பது செய்தி.

ஆக, இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்த மக்களின் மனோபாவம் என்ன என்பதை விளக்குகிறது இந்தக்காட்சி. இது ஒருங்கிணைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி நிச்சயமாக பெரிய அரசியல் கட்சிகளாலோ அல்லது பெரிய இயக்கங்களாலோ கிடைக்கவில்லை. சிறுசிறு இயக்கங்களாலும் மக்கள் தாங்களாகவே கிளர்ந்து எழுந்து போராடியதாலும் கிடைத்தவெற்றிதான் இது. இன்னமும் சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூரிலும் டெல்லியிலும் மற்ற வெளிநாடுகளிலும்கூட தமிழ்மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையெல்லாம் மறந்துவிட்டு இது ஏதோ ஜெயலலிதா தாமாகவே முன்வந்து தாயுள்ளத்தோடு வாங்கித்தந்த சலுகை என்பதுபோல ஒரு மாயை கற்பிக்கப்படுகிறது. நளினியைத் தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப வைத்ததே கருணாநிதி செய்த மாபெரும் குற்றம் என்பதுதான் ஜெயலலிதாவின் கருத்து.

இதுநாள்வரை ஈழம் பற்றி எதையுமே அவர் சொல்லவில்லை என்றபோதிலும் பழ.நெடுமாறனிலிருந்து பரங்கிப்பேட்டை முனுசாமிவரை கருணாநிதியை எதிர்க்கும் அத்தனைத் தலைவர்களும் நாளை மறுநாளே ஜெயலலிதா ஈழத்தை வாங்கித்தந்துவிடுவார் என்ற தொனியில்தான் பேசிவருகின்றனர். இன்றைய ஈழ உணர்வாளர்கள் அத்தனைப்பேருக்குமே கருணாநிதியின்மீது எத்தனை வெறுப்பு இருக்கிறதோ அதற்கு இணையான பாசமும் நேசமும் ஜெயலலிதாவின்மீது பொங்கிவழிகிறது.

இத்தனைக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா என்றைக்குமே பேசியதில்லை, பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதைத் தவிர. தன்னுடைய அரசியல் வாழ்க்கை பூராவிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருப்பவர் அவர். எதிரான நிலைப்பாடு என்றாலும் பரவாயில்லை. விடுதலைப்புலிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கி அந்தக் கற்பிதத்தை வைத்தே தன்னுடைய பாதுகாப்பிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீசை வைத்துக்கொண்டிருப்பவர் அவர்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இசட் பிரிவு பாதுகாப்புத் தனக்கு வேண்டும் என்பதற்கு அவர் சொல்லும் காரணமே விடுதலைப்புலிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதைத்தான். இந்த ஒரு செயல்பாட்டைக்கூட மாற்றிக்கொள்ளத் தயாரில்லாத அவரை புலிகளின் ஆதரவாளர்கள் விழுந்து விழுந்து கும்பிடுவதைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை. அதுமட்டுமல்ல, முருகன், சாந்தன், பேரறிவாளன் விஷயம் தொடர்பாக எத்தனையோ தலைவர்கள் போராட்டங்களை அறிவித்து தெருவுக்குவந்து போராடிக்கொண்டிருக்கிறார்களே அவர்களில் யாராவது ஜெயலலாதாவை இதுவரையிலும் சந்தித்துப் பேசியதாகவோ அரசின் கருத்தோ அல்லது ஜெயலலிதாவின் கருத்தோ இதுதானென்று மக்களிடம் அறிவித்திருக்கிறார்களா? அப்படியில்லையெனில் அவர்களுக்கு ஜெயலலிதாவின் பேட்டி கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்! ............... அல்லது, ஜெயலலிதாவே இவர்களுக்கு அழைப்பு விடுத்து நீங்கள் யாரும் போராட்டம் எதுவும் நடத்தவேண்டாம் இதற்கான நடவடிக்கைகளை நானே எடுக்கிறேன் என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லவா?

இது எதுவுமே இல்லாமல் அவர்பாட்டுக்குத் தம் வேலையைச் செய்துகொண்டிருக்க சும்மாவே ஆளாளுக்கு எதற்காக ஜெயலலிதா புகழ் பாடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. முதல்வரிடம் வேலையாகவேண்டும் என்பதற்காக அவருடைய புகழ் பாடிக்கொண்டு போகிறவர்கள்பற்றிக் கவலையில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்பதே தெரியாமல் உயிரைக்கையில் பிடித்து வாடிக்கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்திற்கு சாதாரண இரக்கப்பார்வைக்கூட சிந்தாமல் இருக்கும் ஒருவருக்கு எதற்காக பாராட்டு இதிகாசங்கள் என்பதுதான் கேள்வி.

20 comments :

sundarmeenakshi said...

super ponga

கொ. வை.அரங்கநாதன் said...

ஐயையோ நீங்கள் மட்டும் இப்படி உண்மையை எல்லாம் உடைச்சுட்டிங்க! இங்குள்ள சில தலைவர்களுக்கு மட்டுமில்லை ஈழத்தமிழர்களில் பலருக்கும் கூட, திமுகவை ஆதரிக்கும் ஏறத்தாழ 30 சதவீத தமிழ் மக்களின் ஆதரவு தேவை இல்லை என்றுதான் நினைக்கிறார்கள். விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று சொல்லி இன்று வரை Z பாதுகாப்பு பெற்றிருக்கும் அம்மாவால்தான் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

மதுரை சரவணன் said...

intha arasiyal puriyala thalaivaa...

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் முதலில் கலைஞர் கருணாநிதிக்கு செக் வைக்கும் நிலையிலே கூட ஈழப்பிரச்சினையைக் கையாளக்கூடும்.ஆனால் இதுவரைக்கும் சமச்சீர் கல்வி தவிரவும்,வேண்டுமென்றால் புதிய சட்டசபை கட்டிடம் என்ற இரண்டு சிப்பாய்களை கொடுத்தது போக தனது ஆட்டத்தை சிறப்பாகவே ஆடுகிறார் என்றே நினைக்கின்றேன்.தி.மு.க வரும் காலத்தில் எப்படி செயல்படும் என்று இப்போதைய நிலையில் கணிக்க இயலாது.தற்போதைய சூழலில் ஜெயலலிதாவையும்,அ.தி.மு.கவை நம்பியே தமிழர்கள் பிரச்சினைகளை தீர்க்கவோ,போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.காரணம் ஆட்சி என்ற வலு.முந்தைய ஆட்சியில் மத்திய அரசும்,மாநில அரசும் சுமூகமான நிலையில் இருந்தால் மட்டுமே மாநில நலன்கள் தமிழகத்துக்கு வந்து சேரும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சில நன்மைகளை நாம் அடைந்திருக்க கூடும்.உதாரணம் மந்திரி பதவிகளும் அதனால் உருவாகும் தமிழக வளர்ச்சியும்.ஆனால் மந்திரி பதவிகளின் பிரயோகம் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை.தி.மு.க மட்டுமல்ல காங்கிரஸின் ப.சியும் கூடவே.மத்தியில் காங்கிரஸ் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் நிலையில் நடந்து கொள்ளாமலே தீர்மானங்கள் செய்கிறது என்பதால் கூட்டணியை விட எதிர் தரப்பு ஆட்சி முறையில் மட்டுமே இன்னும் சில ஆண்டுகளை நகர்த்த வேண்டியிருக்கும்.மத்தியில் காங்கிரஸ் இனி ஆட்சியை இழக்கும் என்பதை அன்னா ஹசாரேவின் மக்கள் கூட்டம் பிரதிபலித்துள்ளது.

திரும்ப ஜெயலலிதா பற்றிய கருத்துக்கு வந்துடலாம்.சென்ற முறைக்கான ஆட்சியில் பாடங்களை கற்றுக்கொண்டு இந்த முறை அவர் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது.ஜெயலலிதாவுக்காவது ஒரு வலுவான எதிர்க்கட்சியின் தலைவி என்பதால் அரசு பாதுகாப்பு என்று வைத்துக்கொள்வோம்.லெட்டர் பேடு கட்சி சுப்ரமணியன் சுவாமிக்கும் கூட இதுவரை தொடர்ந்த பாதுகாப்பு தரப்படுகிறது:)

ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையின் மீதான விமர்சனமே நல்லது.வரலாற்றில் நிரந்தரமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.உபயோகிப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியாது.இதுவரை பிராண்டவில்லை என்பதால் தமிழர்களுக்கு மகிழ்ச்சியே.

Amudhavan said...

சுந்தர்மீனாட்சி தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

உண்மைதான் அரங்கநாதன் அவர்களே,திமுகவில் இன்றைக்கு சில தலைவர்கள் வேண்டுமானால் வழிபிறழ்ந்து போயிருக்கலாம்.ஆனால் அதன் தொண்ணூறு சதவிகிதத்தொண்டர்கள் தமிழ்உணர்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களே.அவர்களையெல்லாம் கவனத்தில் கொள்ளாமலேயே பெரும்பகுதி அரசியல் நடைபெறுகிறது என்பதுதான் அவலத்திற்குரியது. இதில் திமுகவின் அரசியலையும் சேர்த்தேதான் சொல்லுகிறேன்.தங்களின் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

சரவணன், புரிந்தும் புரியாததுபோல் பாவிக்கிறமாதிரி தெரிகிறதே.

Amudhavan said...

நடராஜன் அவர்களே,உங்களுடைய தீர்க்கமான கருத்துக்களில் எனக்கு எப்போதுமே உடன்பாடு உண்டு.அதேபோல் ஜெயலலிதா பற்றிய என்னுடைய கருத்துக்களிலும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. சுற்றிவளைத்து என்ன செய்தாலும் குறிப்பிட்ட சில புள்ளிகளில் வந்து நின்றுகொள்வார் அவர். அந்தப் புள்ளிகளில் நின்றால்தான் அவரால் அரசியலே செய்யமுடியும் என்பதுதான் காரணம். பார்ப்போம் ஈழ விவகாரத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை.

ராஜ நடராஜன் said...

//கொ. வை.அரங்கநாதன் said...

ஐயையோ நீங்கள் மட்டும் இப்படி உண்மையை எல்லாம் உடைச்சுட்டிங்க! இங்குள்ள சில தலைவர்களுக்கு மட்டுமில்லை ஈழத்தமிழர்களில் பலருக்கும் கூட, திமுகவை ஆதரிக்கும் ஏறத்தாழ 30 சதவீத தமிழ் மக்களின் ஆதரவு தேவை இல்லை என்றுதான் நினைக்கிறார்கள். விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று சொல்லி இன்று வரை Z பாதுகாப்பு பெற்றிருக்கும் அம்மாவால்தான் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.//

நீங்கள் தவறான கணிப்பை சொல்கிறீர்கள்!ஈழத்தமிழர்களோ,ஈழ உணர்வாளர்களோ இது வரையிலும் முன் வைக்கும் விமர்சனம் கலைஞர் கருணாநிதி ஈழப்போரின் இறுதிக்கட்டத்தை கையாணட விதமும்,அவரது தவறுகளை சுட்டிக்காட்டாமல் ஜால்ரா போடும் தொண்டர் மனப்பான்மையை மட்டுமே.தி.மு.கவினரின் தமிழ் உணர்வையோ ஈழநிலைப்பாட்டையோ யாரும் விமர்சனம் செய்வதில்லை.தமிழகத்தின் வளர்ச்சிக்கு கணிசமான பங்கு தி.மு.கவுக்கும்,கருணாநிதிக்கும் உண்டு.ஆனால் முள்ளிவாய்க்கால் கருணாநிதியின் வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளி.இதில் மட்டுமே அவர் மீதான அனைவரின் கோபமும் இப்பொழுது ஜெயலலிதா தீர்வுகளை தருவாரா என்ற எதிர்பார்ப்பும்.

Amudhavan said...

கொ.வை.அரங்கநாதனின் கருத்து ஒரு சாதாரண திமுக தொண்டனின் கருத்து. ராஜநடராஜனின் கருத்து பரந்த சிந்தனையுள்ள எதையும் சீர்தூக்கிப்பார்க்கும் நடுநிலையாளர் ஒருவரின் கருத்து.ஆனால் பத்திரிகைகளிலும் சரி, இணையத்திலும் சரி சரமாரியாக கருத்துத்தெரிவிப்பவர்கள் எல்லாரும் சகட்டுமேனிக்கு கருணாநிதியை மிகக்கேவலமாக வசைபாடுகிறவர்கள்தானே தவிர தராதரம் பார்த்து விமர்சிப்பவர்கள் வெகுசொற்பமே.

Anonymous said...

கலைஞரை தூற்றுவதை ஜெயலலிதாவை போற்றுவதை தொழிலாக கொண்ட கேனயர் கூட்டம் ஈழ தமிழரோ, தமிழக தமிழரோ கிடையாது வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற இலங்கை தமிழன் துன்பத்தில் பிழப்பு நடத்துபவர்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எல்லோரும் விஷயங்களைப் புரியாமலே பேசுகிறார்கள்.
All are playing to the gallery. I will send detailed message by email.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

Amudhavan said...

வாருங்கள் அனானிமஸ், ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே.

Amudhavan said...

ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி. தங்கள் மெயில் பார்த்தபிறகு பேசுவோம்.

R.S.KRISHNAMURTHY said...

’நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி’ என்று பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது!எந்தவிதமான தேசீய உணர்வோ, ஒரு திட்டமோ, கொள்கையோ இல்லாமல் மக்களை மடையர்களாக்கி, இலவசங்கள் மூலமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை வந்த பிறகு, காலில் விழும் கூட்டத்திடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?!

Unknown said...

ஐயா, பதிவை வாசித்தேன்.பல பரிமாணங்களிலும் ஈழ்ப்பிரச்சனையில் ஜெயாவின் நிலை அலசப்பட்டிருக்கிறது.ராஜநடராஜன் அவர்கள் யதார்த்தத்தை விளக்கியுள்ள்து தெரிகிறது.சில அரசி”யல் விடயங்களில் பொது,இன நலனுக்காக காலம் கருதி கட்டாயங்களால், வேறு வழியில்லை என சமரசம் செய்து போக வேண்டியுள்ளது என்பது என் தாழ்மையான கருத்து.நல்ல பதிவு.

Amudhavan said...

சரியாகச் சொன்னீர்கள் ஆர்எஸ்கே,நன்றி.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இளன்.

Thenammai Lakshmanan said...

மிக விரிவான அலசல் அமுதவன் சார்.. ராஜ நடராஜன் சார் சொன்னது யதார்த்தம். பார்ப்போம் நல்லதே நடக்க வேண்டும்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி தேனம்மை. நல்லதே நடக்கட்டும்.

Post a Comment