Sunday, November 4, 2012

ரெயில்வேக்குச் சில கேள்விகள்



ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால் சென்னை சென்றுவிட்டு பிருந்தாவன் ரெயிலில் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயில் மிகச்சரியான நேரத்திற்கே சென்ட்ரலைவிட்டுப் புறப்பட்டது. வாணியம்பாடி வரும்வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. ஒரு இரண்டு நிமிடம் கழித்துப் புறப்படும்போலும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போகவே சரி ஏதோ கிராஸிங்கிற்காக நிறுத்தியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டிருந்ததும் பொய்யானது. நீண்ட நேரமாகியும் ரயில் புறப்படவில்லை.

எல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கீழே இறங்கி நிற்பதுவும் கிராஸிங்கிற்காக சிக்னல் எதுவும் மாறுகிறதா என்று தூரத்தில் எட்டிப் பார்ப்பதுவுமாக இருந்தனர். இப்படியே இன்னமும் சிறிது நேரம் சென்றது. இதற்குள் அடுத்த மார்க்கத்திலிருந்த பாதையிலிருந்து நான்கைந்து ரயில்கள் சென்னை நோக்கிச் செல்லும் திசையில் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிப்போகவே கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாருக்கும் பொறுமை விடைபெற்றுக்கொண்டு இருக்க கூடைகளுடன் வண்டிக்குள் ஏறும் சிறு வியாபாரிகளுக்கான வியாபாரம் படு விமரிசையாக நடைபெற்றபடியே இருந்தது. என்ன ஆனது என்று ரயில்வே ஊழியரைப்போல் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது மனிதர் கேள்வியையே கண்டுகொள்ளாதவர்போல் அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.

இன்னமும் சிறிது நேரக் காத்திருப்பு..... சென்னை நோக்கிச் செல்லும் இன்னும் சில ரயில்களின் ஒரு வழிப்போக்குவரத்து என்று இன்னொரு அரைமணி நேரம் செல்ல ஒரு வழியாக பிருந்தாவன் ரயில் பெங்களூரை நோக்கிப் புறப்பட்டது. செல்போன் மகானுபாவர்கள் யாவரும் வீட்டிற்கு போன் போட்டு வண்டி ஒன்றரை மணி நேரம் லேட் என்ற செய்தியைச் சொன்னோம்.

வாணியம்பாடியிலிருந்து தடதடத்து ஓடிவந்த ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் நின்றது. ஜோலார்ப்பேட்டையில் வழக்கமாக இரண்டு நிமிடங்கள்தானே நிற்கவேண்டும்? இரண்டு நிமிடம் ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று. ஒரு மணி நேரம் ஆயிற்று. வண்டி கிளம்புகிறபாடாகத் தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்ப்புறம் போகின்ற வண்டிகள் வருகின்ற செய்தியையும் நின்று புறப்பட்டுப் போகின்ற செய்தியையும் அறிவித்துக்கொண்டே இருக்க அதன்படி அந்த வண்டிகள் யாவும் போய்க்கொண்டே இருந்தன. பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இத்தனையாவது பிளாட்பாரத்துக்கு வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்தான் எல்லாருக்கும் சந்தேகம் முளைத்தது. ஏனெனில் அந்த ரயில் இத்தனை நேரம் சென்னை சென்ட்ரலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கப்போகிறது.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. சம்திங் ராங் என்ற எண்ணம் பயணிகள் எல்லாருக்கும் ஏற்பட்டது. இதற்குள் பெங்களூரில் இறங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் வண்டி எப்போது புறப்படும் எத்தனை மணிக்குப் போய்ச்சேரும் என்ற தகவலும் தெரியவில்லை. பசி எடுக்கிறது. ஏதாவது வாங்குங்களேன் என்ற ஒரு பெண்ணிற்கு இரும்மா இங்கிருந்து சரியாக இரண்டுமணி நேரம்தானே பெங்களூர்? வீட்டிற்கே போயிரலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு கணவர்.

நேரம் ஆகிக்கொண்டே இருக்க நாங்களிருந்த பெட்டிக்குள் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு டிக்கெட் பரிசோதகரை நிறுத்தி என்ன ஆச்சு சார்? எதுக்காக லேட்? என்றேன்.

வேறொரு வண்டி டீரெயிலாயிருக்கு

எங்கே சார்? எந்த வண்டி?

நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்க அவர் தயாரில்லை. எதிரே நடந்துகொண்டிருந்தவர்களைத் தள்ளாத குறையாக முட்டி மோதிக்கொண்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார். பெட்டிக்குள்ளிருந்தவர்கள் எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் சொன்னதை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. எங்கேயாம்? எந்த வண்டியாம்? இந்த வண்டி எப்போது புறப்படுமாம்? என்று சுற்றிலுமிருந்த பயணிகளின் எந்தவிதமான கேள்விக்கும் என்னிடம் எப்படி பதிலிருக்க முடியும்? ஆனால் எல்லாரும் அதைத்தான் என்னிடம் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நான் ஒரு யோசனை செய்தேன். வீட்டிற்கு போன் போட்டு சன் நியூஸ் கலைஞர் செய்திகள் புதிய தலைமுறை என்று ஏதாவது செய்தி சேனல்களைப் பார்த்து ரயில் ஏதாவது எங்காவது தடம் புரண்ட செய்தி இருக்கிறதா பார்த்துச் சொல்லுஎன்று சொன்னேன். இரண்டாவது நிமிடத்தில் மகளிடமிருந்து போன் வந்தது. ஆமாம்ப்பா குப்பத்துக்கு அருகில் மைசூர்-சென்னை காவிரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டிருக்கிறதாம். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சென்னை மார்க்கமாகச் செல்லும் எல்லா வண்டிகளும் தாமதாமாக் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள் இந்தச் செய்தியை நான் சொல்லவும்தான் அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அதற்கு அடுத்த பெட்டியிலிருந்த பயணிகள் என்று இந்தச் செய்தி மளமளவென்று பரவத்தொடங்கிற்று.

இப்போது வண்டி நின்றிருப்பதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. வண்டி எப்போது கிளம்பும், பெங்களூர்ப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும் இதுபோன்ற தகவல்களெல்லாம் தெரியவேண்டாமா? என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் நண்பர் தம்முடைய மனைவிக்கு போன்செய்ய காருடன் பெங்களூர் சிடி ரெயில்நிலையத்தில் காத்திருக்கும் அந்தப் பெண்மணி ஓரளவு சரியானத் தகவல்களைத் தெரிவித்தார். சென்னை மார்க்கத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் எல்லா ரயில்களும் தாமதமாக வந்துகொண்டிருப்பதாகவும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஐந்து மணிநேரம் தாமதமாக மாலை ஆறுமணிக்குத்தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிடி ரெயில் நிலையத்தில் அறிவிக்கிறார்கள் என்ற செய்தியைப் பெற்று எல்லாருக்கும் தெரிவித்தார் அவர்.

ஆக, இரண்டு மணிநேரம் தாமதம் மூன்று மணி நேரம் தாமதம் என்பதையெல்லாம் கடந்து ஆறு மணிக்கோ ஏழு மணிக்கோ தான் இந்த வண்டி பெங்களூர்ப் போய்ச்சேரும் என்பது தெரிந்தவுடன் அவரவர்களுக்கும் முதலில் வயிற்றுப்பிரச்சினைக்கு வழி தேடுவது முதன்மையான காரியமாக மாறிப்போனது. சாப்பாடு ஏதாச்சும் இருக்காப்பா? என்று கேண்டின் சிப்பந்தியிடம் கேட்டபோது எல்லா சாப்பாடும் தீர்ந்துருச்சி. பஜ்ஜியும் மசால்தோசையும்தான் இருக்கு என்றார்.

கட்டையிலப் போறவனுங்க. வண்டி லேட்டாப் போகும்ன்றதை அறிவிச்சுத் தொலைச்சா என்ன? நாம் ஏதாவது வாங்கி சாப்பிட்டிருக்கலாமே என்று சாபமிட்டார் ஒரு பெரியம்மா.
அவரவர்களும் வண்டியிலிருந்து இறங்கி ஓடுவதும் பழங்களையும் பிஸ்கட்டுகளையும் வாங்கிவருவதுமாகவும் இருந்தனர். என்னதான் பிருந்தாவனில் பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டிருந்தாலும்   வீட்டிற்குப்போய்த்தான் சாப்பிடுவது என்று பிடிவாதமாக இருப்பவர்கள் ஒவ்வொரு ரயிலிலும் என்னைப்போல் நூறுபேராவது இருக்கக்கூடும். ஆனால் இம்மாதிரி சமயங்களில் என்ன செய்வது? எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

அடுத்த அரை மணி நேரத்தில் சூடாக ஏராளமான எலுமிச்சை சாதத்தை சமைத்து பொட்டலம் கட்டி எல்லாப் பயணிகளுக்கும் கிடைக்கிறமாதிரி செய்த அந்த கேண்டின் சமையல்காரப் புண்ணியவானுக்குக் கோடி நமஸ்காரம். அத்தனைச் சூடாகவும் அவ்வளவு நன்றாகவும் இருந்தது அந்த எலுமிச்சை சாதம்.

ஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் ஜோலார்ப்பேட்டையிலிருந்து கிளம்பிய ரயில் அதற்கு அடுத்து காடுபோலிருந்த ஏதோ ஒரு ஸ்டேஷனில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நின்றது. அந்த நீண்ட காத்திருப்பிற்குப்பின் அங்கிருந்து கிளம்பி இரவு ஏழு மணிக்கு பெங்களூரை வெற்றிகரமாக வந்து அடைந்தது.

இப்போதைய கேள்வியெல்லாம் வண்டிகள் ஓடுவதும் தடம் புரளாமல் மோதிக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று சேருகின்ற மாதிரி திறம்பட நிர்வகிப்பதும் பயணிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும் ரயில்வே துறையின் மகத்தான சேவைதான் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இம்மாதிரி தாமதங்கள் ஆகும்போது எதற்காக இப்படியொரு தாமதம்? என்ன நடந்திருக்கிறது? என்ன நடக்கவேண்டி இருக்கிறது? தாமதம் சரியாக இன்னமும் எவ்வளவு நேரமாகும்? போன்ற தகவல்களை பயணிகளுக்கு அறிவிக்க வேண்டுமா வேண்டாமா? அதனைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒரு பயணிக்கு இல்லையா என்ன?

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலோ வழியில் எங்காவது நிறுத்திவைத்திருக்கும் ரயிலிலோ அறிவிப்பிற்கான வழிவகைகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு ரயில் ஜோலார்ப்பேட்டை போன்ற சகல வசதிகளும் நிறைந்த ஜங்ஷனில் நின்றிருக்கும்போது கூடவா அறிவிக்கக்கூடாது? அதாவது போகட்டும். செய்தி தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய பெட்டியில் இருப்பவர்களிடம் கூடவா இத்தகைய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது? இல்லை இதெல்லாம் ராஜ ரகசியங்களா?

நாட்டிலிருக்கும் பொதுமக்களுக்கெல்லாம் டிவி செய்திகள் மூலம் அந்தத் தகவல்கள் தெரியும்போது குறிப்பிட்ட அதே வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் அதுவும் எத்தனையோ வேலைகளை முடிப்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருக்கும் பயணிகளுக்கு அந்தத் தகவல்கள் தெரியக்கூடாதா? ரயில் குறிப்பிட்ட ஊர் போய்ச்சேர நீண்ட நேரம் ஆகும் என்றால் எத்தனையோ பேர் சில ரயில்வேஸ்டேஷன்களில் இறங்கி பஸ் பிடித்தோ அல்லது தனி டாக்சி வைத்துக்கொண்டோ போகிறவர்கள் இருப்பார்கள். குறைந்தபட்சம் வயிறைப் பட்டினிபோடாமல் பார்த்துக்கொள்ளவாவது இத்தகைய தகவல்கள் உதவும் இல்லையா?

என்ன பொறுப்பற்றதனம் இது?

இன்னமும் ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்பதை வாணியம்பாடியிலேயே தெரிவித்திருந்தால் நான் அங்கேயே இறங்கி ஒரு டாக்ஸி வைத்து பெங்களூர்ப் போயிருப்பேன். சாயந்திரம் மகளுக்கு கல்யாண ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கேன். இப்படி ஆகிவிட்டதே என்று அழாத குறையாய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு தந்தை.

நான் நாலரை மணிக்கு ஒரு இன்டர்வ்யூவில அட்டெண்ட் பண்ணுவதற்காகப் போய்க்கிட்டிருக்கேன் சார் என்று பரிதாபமாகச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

ரயில்வேத்துறை இம்மாதிரி சம்பவங்களின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறது?

9 comments :

தமிழ் டிஜிட்டல் சினிமா said...

அட போங்க சார்... காமெடி பண்ணாதீங்க... இவங்களாவது... இதையெல்லாம் கத்துக்கிறதாவது...

திண்டுக்கல் தனபாலன் said...

எதையும் பேச முடிவதில்லை... ...ம்...

Amudhavan said...

வாங்க தமிழ் டிஜிட்டல் சினிமா, என்ன செய்வது சீரியஸான விஷயங்களைக்கூட நாம்தான் சகித்துக்கொண்டு போகவேண்டியிருக்கிறது. இந்தச் செய்தியைக்கூடச் சொல்லக்கூடாது என்கிற அளவுக்கு அப்படியென்ன பொறுப்பின்மை என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

Amudhavan said...

என்ன தனபாலன், எதையும் கேட்க மறுப்பவர்களின் பிடரியைப் பிடித்து உலுக்கி கேட்கச் செய்யவேண்டும் என்பதுதானே இளைஞர்களின் நோக்கமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

Ganpat said...

அன்பின் அமுதவன்,
மிகவும் அருமையான,அவசியமான, பொறுப்பான பதிவிற்கு என் முதற்கண் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
தமிழில் "உப்பு போறாத விஷயம்" என்று ஒரு சொலவடை உண்டு.அப்பேற்பட்ட ஒன்றுதான் ஒரு மின்வண்டி காலதாமதமாக செல்லும் விஷயத்தை அதில் பயணிக்கும் நபர்களுக்கு சொல்வது.அதை வைத்து அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றால் போல முடிவெடுக்க முடியும்.ஆனால் இதைக்கூட செய்ய துப்பில்லாதவர்கள் நாம்.இந்த பதிவை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது.ஆனாலும் இன்னும் நம்மிடையே மனிதம் சுத்தமாக செத்துவிடவில்லை என நிரூபித்த அந்த கேண்டீன் புண்ணியவானிற்கு என் வணக்கம்.
முடிந்தால் இந்தப்பதிவை தென்னக ரயில்வேயின்
PRO அனுப்பிவையுங்கள்.ஒரு நப்பாசைதான்.
வணக்கம்.

Amudhavan said...

திரு கண்பத் அவர்களுக்கு, தங்களின் அருமையான கருத்திற்கு நன்றி. தங்கள் யோசனையை செயற்படுத்தப் பார்க்கிறேன்.நல்லது ஏதாவது நடந்தால் எல்லார்க்கும் நல்லதுதானே.

Ganpat said...

திரு.அமுதவன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

அமுதவன் இந்த இடுகையை இப்போது தான் படித்தேன். தென்னக ரயில்வே மேல் அதிகாரிகளுக்கும் ரயில்வே அமைச்சருக்கும் இது பற்றி தெரியப்படுத்துங்கள். இனிமே இம்மாதிரி நடந்தால் பயணிகளுக்கும் தாமதத்திற்கான காரணத்தை தெரிவித்தாலும் தெரிவிக்கலாம்.

Anonymous said...

PLEASE ALSO COMPLAIN ABOUT THE NON-RESERVED
PASSENGERS STANDING IN THE AISLE OF RESERVED
COACHES CAUSING INCONVENIECE TO RESERVED
PASSENGERS IN DAY TRAINS TO BANGALORE AND VICE-VERSA AND THE TTE'S INDIFFERENCE.

Post a Comment