Sunday, March 31, 2013

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!



பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். தலைமைச் செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.

பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள்  அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை. மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்ல அனுமதி கிடைக்கிறது.

அடுத்தநாள்………. நேற்று தமது காரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர். குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார்.  சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது. குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறு இடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.

இவரும் பயந்துகொண்டே போய்ச் சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன்? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகை காட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லி அவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.

நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

ஒன்று மட்டும் நிச்சயம்.


தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!

19 comments :

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் எளிமையாக வாழ்ந்த, பெருந்தலைவர் காமராஜ் பற்றிய, இந்தச்செய்தியைப்படிக்கவே மிகவும் இனிமையாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Jayadev Das said...

அப்பேற்பட்ட தலைவரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு மூக்கி போடி உறிஞ்சிக்கொண்டு நாடிகளுடன் சல்லாபம் செய்த ஒருத்தனிடம் ஆட்சியை ஒப்படைத்தோம். அன்னைக்கு ஆரம்பிச்சது நம்ம தரித்திரம் அதுக்கப்புரம் ஒரு மூணு பெண்டாட்டி காரன் வந்தான்........... மொத்தமா முழுங்கிட்டான். நாட்டுக்காக தன்னை ஈந்த தெய்வம் காமராஜர் தன குடும்பத்துக்காக நாட்டை சாப்பிட்டவன் இன்னைக்கு சாகாமல் வாழ்கிறான். எங்கே போய்ச் சொல்லி அழுவது?

வவ்வால் said...

அமுதவன் சார்,

எனக்கு அப்பொல்லோ ஆஸ்பிட்டல் எங்கே இருக்குனு கூட தெரியாது :-))

காமராஜர் கால எளிமை,நேர்மை எல்லாம் இந்திய அரசியலில் இனி என்றுமே காண முடியாத ஒன்று,போனது போனது தான்.

அவர் மட்டும் கொஞ்சம் மாநிலப்பார்வையும் கொண்டுப்பார்த்திருந்தால் அசைக்கமுடியாத தமிழினத்தலைவராக இருந்திருப்பார்.

இந்திய எதிர்க்கிறோம்,காங்கிரசை விரட்டுவோம் என் கொள்கையுடன் அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக ,1967 இல் வென்ற பின் என்ன செய்தது எனப்பார்த்தால் இன்றைய அரசியலின் கொள்கை சீரழிவுக்கு விளக்கம் கிடைக்கும்,

67 இல் கான்கிரஸ் தமிழகத்தில் படு தோல்வி ,மத்தியிலும் பலஹீனமான வெற்றி மட்டுமே ,வெறும் 283 எம்பிக்களே,எனவே காங்கிரசின் கரத்தை வலுப்படுத்த,இந்தியை எதிர்க்கிறோம்,காங்கிரசை விரட்டுவோம்னு சொல்லி 25 எம்பிக்களை வென்ற திமுக நிபந்தனையற்ற ஆதரவைக்கொடுத்தது :-))

இவங்களுக்காக காமராஜர் போன்ற தலைவர்களையே தோற்கடித்தனர் தமிழக மக்கள்:-((

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவர்கள் மனசாட்சி உள்ள மனிதர்களாக இருந்தார்..

தற்போது இருப்பவர்களுக்கு மனசாட்சியும் இல்லை மனிதர்களாகவும் இல்லை....

நானும் பொதுவாகத்தான் சொல்றேன்...

வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

Amudhavan said...

வைகோ சார் உங்களுக்கு இருந்த அதே உணர்வுதான் எனக்கும்.இவர்போன்ற மனிதர்களெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறார்கள்?

Amudhavan said...

என்ன ஜெயதேவ் தாஸ் உங்களுக்கு இன்னமும் பரிணாமக் கோபங்களே ஆறவில்லை போலிருக்கிறது. அதே கோபத்துடன் தலைவர்களைப் பற்றிய கோபங்களும் சேர்ந்துகொள்ள படு காட்டமாக இருக்கிறது விமர்சனம்.

Amudhavan said...

ஆஹா வவ்வால், ஜோர்டான் நாட்டுத் தலைமைச் செயலகத்தில் இன்று காலை என்ன நடந்தது என்கிற அளவுக்கு விவரங்கள் வைத்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது அன்றைக்கு என்ன நடந்தது என்பதெல்லாம் தெரியாது என்பது காமெடியாக இருக்கிறது.
காமராஜர் நீங்கள் சொன்னதுபோல் கொஞ்சம் மாநில உணர்வுடன் இருந்திருக்கலாம்தான். ஆனால் அப்படி இருந்திருந்தாலும் தோற்றுத்தான் போயிருப்பார் என்றே நினைக்கிறேன். காரணம் திமுக அன்றைக்கு ஊட்டிவைத்திருந்த திராவிட மற்றும் தமிழ் உணர்வு அப்படி.

அந்த உணர்வுகளையும் ஒழுங்காக முறைப்படுத்தாமல் போனது மற்றும் சுய ஒழுக்கங்கள் அற்றுப்போனதால்தான் அவர்கள் ரொம்பவும் பாடுபட்டு ஏற்படுத்திவைத்திருந்த அறுவடையை இப்போது சம்பந்தமேயில்லாதவர்கள் எல்லாம் சர்வசாதாரணமாக அறுத்தெடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Amudhavan said...

//தற்போது இருப்பவர்களுக்கு மனசாட்சியும் இல்லை. மனிதர்களாகவும் இல்லை//
சரியாகச் சொன்னீர்கள் சௌந்தர்.

நம்பள்கி said...

18 வயது வரை plus 2 வரை "கட்டாய" இலவச கல்வி எல்லோருக்கும் கொடுக்கும் வரை நம் நாடு இப்படித்தான் இருக்கும். இலவச கல்வி என்பது சொந்தமாக சிந்திக்கும் திறமையை வளர்க்கும் கல்வி. நம் நாட்டில் இருக்கும் நெற்றுபோட்டு படித்து விட்டு அர்த்தம் தெரியாமல் வாந்தி எடுக்கும் கல்வி அல்ல!

சனாதன சக்திகள் இலவச கல்வியை இந்தியாவில் எந்தக் காலத்திலேயும் அனுமதிக்காது. ஏன்? ஏழை இருக்கும் வரை தான் பணம் வைத்திருபவனுக்கு மதிப்பு. படிக்காத தற்குறிகள் இருக்கும் வரை அதான் அரைகுறை ஆங்கிலத்தில் பேசும் அறிவிலிகளுக்கு மதிப்பு.

ஆனால், இப்போ இந்தியா இலவச கல்வியிலிருந்து....கட்டாய இலவச கலவியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது...!

Amudhavan said...

நீங்கள் யதார்த்தம் பேசுகிறீர்களா அல்லது உங்கள் பாணியில் கிண்டலடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. 'கட்டாய இலவசக்' கல்வியா? பெங்களூரிலேயே எல்கேஜி சீட் பிடிக்கவே ஒன்றரை லட்சம் கட்டினேன் என்று நண்பரொருவர் வந்து 'பெருமையாகச்' சொல்லிக்கொண்டிருந்தார்.

நம்பள்கி said...

இல்லீங்க அமுதவன்! கிண்டல் அல்ல.
ஒரு ஜனநாயக நாட்டிற்கு...18 வயது வரை plus 2 வரை "கட்டாய" இலவச கல்வி எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

அதைத்தான் காமராஜர் எங்களுக்கு செய்தார். எங்கள் குடும்பம் பெரியது...காமரஜர் புண்ணியம் கட்டிக் கொண்டார்.

1979 வரை இந்த பத்ம சேஷாத்ரி மாதிரி தனியார் பள்ளிகள் எம்ஜீயார் ஆட்சியில் முளைக்க ஆரம்பிக்கும் வரை...

சென்னையில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இலவசக் கல்வியே. சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளி, டான் பாஸ்கோ உள்பட், சாந்தோம் பள்ளி, P.S. உயர் நிலைப் பள்ளி, ராஜா முத்தையா பள்ளி, பெசன்ட் பள்ளி...வருடத்திற்கு ஸ்பெஷல் பீஸ் ரூபாய் 35 மட்டுமே!

இலவச பள்ளியானா ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் கூட இப்ப காசு; இந்த பள்ளிக்கு 2010 -ல் மூன்று லட்சம்...!

ஒரு "வருட மருத்துவக் கல்லூரி பீஸ்--ஆம் ஒரு வருட பீஸ்" சென்னையில் உள்ள மூன்று கல்லூரிகளில் 275 ரூபாய் மட்டுமே!

பின்குறிப்பு:
இந்தியா ஜனநாயக நாடாக இல்லாததால் இலவசக் கல்வி அவசியம் இல்லை; ஒட்டு போடுவது மட்டும் ஜனநாயகம் என்றால்...I am sorry...!

நம்பள்கி said...

1984 - ல் (தோராயமாக) ராமசந்திரா கல்லூரி வந்தது... எல்லாம் கோவிந்தா கோவிந்தா..! தமிழ்நாட்டின் முதல் சாராய ஆலை எங்கே ஆரம்பித்தது? யார் ஆரம்பித்தது? தெரியுமா???

இடம்: செங்கல்பட்டிலிருந்து மாமன்ட்டூர் செல்லும் போது மணல் ஓடும் (?; இப்ப மணலும் இல்லை)) பாலாறுக்கு முன்னால் இடப்பக்கம்.

அது யாருக்கு சொந்தம்? ஹி! ஹி!! நம் குழந்தைகளின் படிப்பை நாசம் செய்தவரைப் பற்றி ஒன்றும் சொல்லாமல்...சில தமிழர்கள் உண்மையை பேசுவதகாக, கல்யாணம் காது குத்துக்கு குடுத்த நூறு இருநூறு ரூபாய் அனபளிப்பை பார்த்து வள்ளல் என்கிறார்கள்.

கோமதி அரசு said...

பெரிய மனதாய் நடந்து கொண்டதால் தான் அவர் பெருந்தலைவர்.
அவரைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

காரிகன் said...

காமராஜர் "நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்" என்று சொன்னதில் கூட ஒரு திரிக்கப்பட்ட அரசியல் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். உண்மையில் அவர் தேர்தல் சமயத்தில் நோய் வாய் பட்டிருந்ததால் நான் படுத்திருந்தாலும் வெற்றி பெறுவேன் என்ற அர்த்தத்தில் சொன்னதை திராவிட கட்சியினர் காமராஜரின் திமிர் என்கிற அளவுக்கு திரித்து விட்டார்களாம். இது உண்மைதான் என்று படுகிறது.

Amudhavan said...

நம்பள்கி , உங்கள் ஆதங்கங்கள் எல்லாம் ஜனநாயக நாடான இந்தியாவில் எந்த அளவுக்கு சரியான திசையில் செல்லும் என்று தெரியவில்லை. உங்களைப் போன்று மக்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள டாக்டர்களுக்கு எதிர்காலக் கடமைகள் நிறைய இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

வள்ளல் ஒருவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த வள்ளல் பற்றியும் இவரது வழித்தோன்றல் பற்றியும் நினைக்கும்தோறும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தாண்டி அதிர்ஷ்டம் என்பது எவ்வளவு உண்மை என்பதை நம்ப வேண்டியிருக்கிறது. அவர்கள் நடைமுறையில் எப்படி இருந்தபோதிலும் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருந்த போதிலும் அதிர்ஷ்டம் என்பது அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வெற்றியையே தந்துகொண்டிருந்ததா இல்லையா?

Amudhavan said...

கோமதி அரசு அவர்களின் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

ஆமாம் காரிகன், காமராஜர் சொன்னதையெல்லாம் இவர்கள் திரித்து கேலியும் கிண்டலும் பண்ணிக்கொண்டிருந்தது இருக்கட்டும்; முரசொலியில் அவரைத் தொடர்ச்சியாக சில்லவுட்டில் வருகிறமாதிரி மொத்தமும் கருப்பு பெயிண்ட் அடித்துத்தான் வரைந்துவந்தார்கள். பார்க்கவே கோரமாக இருக்கும். இப்போது ஜெயலலிதா கட்சிக்காரர்கள்
கலைஞரை மிக மோசமாகப் பேசுவது போலவே(இதில் நமக்கு ஒப்புதல் இல்லை என்பது வேறு விஷயம்)அன்றைக்கு காமராஜரையும் பக்தவச்சலத்தையும் மிகமிக மோசமாகப் பேசியும் எழுதியும் வந்தவர்கள்தாம் திமுகவினர். காமராஜரை தியாகச்சுடர் என்றெல்லாம் பேசியது கடைசிக்காலத்தில்தான்.

நம்பள்கி said...

ராஜாஜியைப் போற்றியும் காமராஜரை பயங்கரமாக தாக்கியும் கிண்டல் செய்ததிலிலும் சோவுக்கு பெரும்பங்கு உண்டு. பிறகு, கருணாநிதி ஆகாமல் போனவுடன் காமராஜர் புகழ் பாட ஆரம்பித்தார் சோ என்பதே உண்மை...!

குட்டிபிசாசு said...

காமராஜர் ஒரு இடைத்தேர்தலில் எங்க ஊரில் தான் ஜெயித்தார். அவர் ஆட்சியில் கட்டிய பாலம் இன்றும் இருக்கிறது.

…திமுகவினர் மேடைகளில் காமராஜரை மிகவும் தரக்குறைவாகப் பேசியதை என் தந்தையும் குறிப்பிடுவார். இதில் கருணாநிதியிம் ஒருவர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

Post a Comment