எப்படி யோசித்தாலும் மணிவண்ணன்
இத்தனை விரைவாக மறைந்துவிடுவார் என்பதை மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இயக்குநராக,
கதை வசனகர்த்தாவாக, நடிகராக. தமிழ்ப்போராளியாக அவர் அழுத்தமான தடயங்களைப் பதித்திருக்கிறார்
என்பதை மறுப்பதற்கில்லை. பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்த திரைக்கலைஞர்களில் தமக்கென்று
தனியிடம் பிடித்துக்கொண்ட கலைஞர் அவர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எழுபத்தெட்டு அல்லது எழுபத்தொன்பது என்று நினைக்கிறேன். நண்பர் மனோபாலாவிடமிருந்து
ஒரு கடிதம் வந்தது. இப்போது போல் அன்றைக்கு டெலிபோன்களோ செல்போன்களோ இல்லாதிருந்த சமயம்.
எந்தவொரு விஷயமும் பெரும்பாலும் கடிதங்கள் மூலம் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த
சமயம் அது. கடிதங்களும் இன்றைக்குப் போட்டால் மறுநாளே சென்று சேர்ந்துவிடும் என்றிருந்த
நாட்கள் அவை. ‘டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் பெங்களூர் வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு
அங்கே தங்கியிருப்பார்கள். நான் வரவில்லை. டைரக்டர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.
உட்லாண்ட்ஸ் ஓட்டலில் தங்குகிறார்கள். சென்று சந்தியுங்கள். நான் உங்களிடம் சொன்ன நண்பர்
மணிவண்ணனும் டைரக்டருடன் வருகிறார். அவரைச் சந்தியுங்கள் மிகவும் சுவாரஸ்யமான நண்பர்
அவர்’ என்றது கடிதம்.
பாரதிராஜாவிடம் உதவியாளராகச்
சேர்ந்தபிறகு அங்கு நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்தையும் மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்
மனோபாலா. அதே விறுவிறுப்புடன் கடிதங்களும் எழுதுவார். பாரதிராஜா பற்றிய தகவல்கள் எல்லாமே
மனோபாலா மூலம்தான் வரும். பாரதிராஜாவையும் இளையராஜாவையும் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன்.
மணிவண்ணனைச் சந்திப்பதுதான் புதிது.
மனோபாலா தற்போது படங்களில்
நடிப்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவருடன் பேசிக்கொண்டிருப்பதே ஒரு தனியான சுகமான
அனுபவம். ஒருமுறை அவர் பேசியதைக் கேட்டாலேயே ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. கண்ணதாசனுடைய
ஒரு பாடல் கம்போசிங்கை மனோபாலா விவரித்து எழுதியிருந்த ஒரு கடிதம் இப்போதும் வரி விடாமல்
நினைவில் இருக்கிறது. அத்தனை வித்தியாசமாக சுவாரஸ்யமாகப் பேசுபவர், எழுதுபவர் அவர்.
இப்போது அவர் ‘நடிகராகிவிட்ட’ பிறகு எப்படியென்று தெரியவில்லை. ஒரே ஒருமுறை சம்பிரதாயமாக
போனில் பேசியதுடன் சரி. திரைப்படத்துறை அந்த வித்தியாசமான மனிதரை அப்படியே வைத்திருக்கிறதா?
அல்லது போட்டுப் புரட்டி மொக்கையாக்கிவிட்டதா என்பது தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, மனோபாலாவே
அந்தக் காலத்தில் ஒருவரைப் புகழ்ந்து பேசுகிறார் என்றால் அவரைச் சந்திப்பதில் ஒரு ஆர்வம்
இருக்கவே செய்தது. நேரில் சந்தித்தபோதுதான் அவரும் என்னைச் சந்திப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்
என்பது புரிந்தது. இதற்கும் காரணம் மனோபாலாதான். “நீங்க எழுதினது எல்லாம் படிச்சிருக்கேன்.
தவிர மனோபாலா உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்காரு” என்றபடிதான் அறிமுகமானார் மணிவண்ணன்.
அப்போது தாடியெல்லாம் கிடையாது. கறுப்பாக, ஒல்லியாக, கெச்சலாக இருந்தார். ஒரு விதமான
பயத்துடன் இருப்பவர்போல் இருந்தார். பயமா பணிவா என்பது தெரியவில்லை.
கமலஹாசன் நடித்த சிகப்பு
ரோஜாக்கள் படத்திற்கான கதை டிஸ்கஷனுக்காகவும், பாடல்கள் கம்போசிங்கிற்காகவும் பெங்களூர்
பயணத்தை மேற்கொண்டிருந்தார் பாரதிராஜா. பாரதிராஜாவுடன் இளையராஜா, இளையராஜாவின் அண்ணன்
பாஸ்கர், சித்ரா லட்சுமணன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வந்திருந்தினர். வந்திருந்தது
என்னமோ சிகப்பு ரோஜாக்களுக்காகத்தான். ஆனால் சிகப்பு ரோஜாக்களுடன் அலைகள் ஓய்வதில்லைக்கான
அடித்தளமும் அங்கேதான் போடப்பட்டது என்பது தனிக்கதை.
கதை டிஸ்கஷன், இசைக்கோர்ப்பு,
சுஜாதாவுடன் சந்திப்பு, ஷாப்பிங் இவற்றோடு சேர்ந்து புது கதாநாயகி தேடுவதிலும் மும்முரமாக
இருந்தார் பாரதிராஜா. இசை கோர்ப்போ அல்லது கதை டிஸ்கஷனோ நடந்து கொண்டிருக்கும். புயல்போல
உள்ளே நுழைவார் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். “சார் வர்றீங்களா மவுண்ட் கார்மல் காலேஜ்
கிளாஸஸ் துவங்கப்போகுது. அங்கே போயிருவோம். கார்லயே உக்காந்து நீங்க அப்சர்வ் பண்ணுங்க.
எந்தப் பொண்ணு வேணுமோ நீங்க தேர்ந்தெடுங்க. நீங்க டிக் பண்ற பொண்ணை நான் சாயந்திரம்
உங்க முன்னாடி கொண்டுவந்து நிறுத்துறேன்” என்று சொல்லி பாரதிராஜாவை அழைத்துச் சென்றுவிடுவார்.
அவர்கள் அங்கே இருந்த ஆறேழு
நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பாரதிராஜாவை இப்படி ஒவ்வொரு இடமாகக்
கூட்டிப் போய்விடுவார் தியாகராஜன். பாரதிராஜாவுடன் பெரும்பாலும் இளையராஜாவின் அண்ணன்
பாஸ்கரும் போய்விடுவார். மணிவண்ணனும் நானும் அறையில் உட்கார்ந்து அவர்கள் திரும்பிவரும்வரைக்கும்
சினிமா, அரசியல், இலக்கியம் என்று சகலமும் பேசிக்கொண்டிருப்போம். சிறுகதைகள், நாவல்கள்,
மொழிபெயர்ப்புகள், பத்திரிகைகள் என்று ஒன்றுவிடாமல் படிக்கும் அவருடைய இலக்கிய ஆர்வம்
அளப்பரியதாய் இருக்கும். கையில் கிடைத்த எல்லாவற்றையும் படிப்பது மட்டும் அல்லாமல்
அவற்றை நினைவு வைத்துக்கொள்வதும் அது பற்றி விவாதிப்பதும் அவருக்குக் கைவந்த கலையாயிருந்தது.
“நாமெல்லாம் கொஞ்சம் கம்யூனிஸ்டுதாங்க. கம்யூனிஸ்ட் சித்தாந்தம்தான் எதிர்காலத்துல
இந்த தேசத்தை வழிநடத்தும்” என்பார்.
“ஒரு தீவிர கம்யூனிஸ்ட்
மனோபாவத்தை வைத்துக்கொண்டு எப்படி திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்தீங்க? அந்தச் சிந்தனைகளுடன்
உங்களால் இங்கே செயல்பட முடியுமா?” என்பேன்.
“கம்யூனிசம் என்பது ஒரு
சிறந்த தத்துவம்தானே? எந்தத் துறையா இருந்தா என்ன? நல்ல தத்துவத்தை நாம சார்ந்திருக்கற
துறையிலே செயல்படுத்த முடியாதா என்ன” என்பார்.
“மலையாளத்திலும் வங்காளத்திலும்
எத்தனையோ வித்தியாசமான கதைக்களன்களுடன் படங்கள் வருகின்றன. நாம்தான் அங்கெல்லாம் போகாமல்
இன்னமும் குடும்ப உறவு முறைகளையே சுற்றிக்கொண்டு படமெடுத்துக்கொண்டிருக்கிறோம். மலையாளப்
படங்கள் போல் தமிழில் படங்கள் வரணும்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.
அவரது கருத்துக்கள் என்னவாக
இருந்தன? அவை கம்யூனிசம் சார்ந்து இருந்தனவா? அவரது இலக்கிற்கு ஏற்ப அவர் செயற்பட்டாரா?
ஒரு கதாசிரியராய், ஒரு இயக்குநராய் அவர் சமூகத்தின் முன்வைத்த இலக்குகள் எப்படிப்பட்டவை?
கம்யூனிசத்திலிருந்து தடம் புரண்டு வேறு பாதைகளில் பயணித்தாரா?
அவர் கருத்தியல் கொண்ட
படங்களைத் தந்தவரா? அல்லது சில இயக்குநர்கள் போல வெறும் அழகின் உபாசகனாக இருந்தவரா?
அல்லது வெறும் கமர்ஷியல் இயக்குநராக இருந்து தமது நிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக
விற்பனையாகும் பண்டம் என்னவோ அதனை மட்டும் உருவாக்கி உலவ விட்டவரா? போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம்
போக விரும்பவில்லை.
திரைப்படத்துறையில் அதன்
சகல சௌகரியங்களையும் அனுபவிக்கிறவனாய் இருக்கவேண்டும்; அதே சமயம் நமக்கென்று ஒரு தனித்த
அடையாளத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போராளி என்ற பிம்பத்தையும் நம்மைச்சுற்றிப்
போட்டுக்கொள்ள வேண்டும் என்ற இலக்குகளுடன் செயல்படும் கலைஞர்கள் திரைபடத்துறையில் கணிசமாக
இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. அவர்களில் ஒருவராய் தம்மை வரித்துக்கொண்டவர்
என்றுதான் மணிவண்ணனைச் சொல்ல வேண்டும்.
மறுநாள் சுஜாதா அங்கு வந்தபோது
பாரதிராஜா, இளையராஜாவைத் தாண்டி அங்கே பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை.
ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராக அங்கே இருந்ததால் சற்று தூரத்திலேயே அமர்ந்து கையைக் கட்டிக்கொண்டு
பேசாமல் இருந்ததுடன் சரி. “சுஜாதா சாரைத் தனியா சந்திக்கணும். டைரக்டர் எதிர்ல ஒண்ணும்
பேச முடியாது. நானும் மனோபாலாவும் தனியாக ஒருமுறை இதற்காகவே வருகிறோம். அப்ப சந்திப்போம்”
என்றார்.
அன்று பகல் அப்போது பெரிதாக
ஓடிக்கொண்டிருந்த ஒரு இந்திப் படத்தைப் பார்க்க விருப்பப்பட்டார் பாரதிராஜா. சிடி மார்க்கெட்
எதிரில் இருக்கும் அப்சரா தியேட்டரில் அந்தப் படம் ஓடுகிறது என்பதனால் போனில் டிக்கெட்
சொல்லிவிட்டு அந்தத் தியேட்டருக்குப் போனோம். அங்கு போனபிறகுதான் படம் துவங்கும் நேரத்தைத்
தவறாகச் சொல்லிவிட்டார்கள் என்பதும் படம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கும்
மேல் இருக்கிறது என்பது புரிந்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் ரசிகர்கள் முன்பு தலைகாட்ட
முடியாது என்பதால் தியேட்டர் மேனேஜர் அவரது அறையில் அமர்ந்து கொள்ளச் செய்தார். எல்லாரும்
உட்கார்ந்து சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். என்னை ரகசியமாய்ச் சீண்டிவிட்டு எழுந்தார்
மணிவண்ணன். “சார் எதிர்லதான் சிடி மார்க்கெட் இருக்கு. நாங்க போய் உங்களுக்குப் பழம்
வாங்கி வர்றோம். அப்படியே சிடி மார்க்கெட் பிற்பாடு நமக்கு ஷூட்டிங்கிற்கு உதவுமா என்பதையும்
லொகேஷன் பார்த்துவிட்டு வந்துர்றோம்” என்று ‘பர்மிஷன்’ வாங்கிக்கொண்டார்.
வெளியில் வந்ததும் “அவங்களோட
அடைஞ்சுபோய் இன்னும் ஒருமணி நேரம் உள்ளே உக்காந்திருக்க முடியாது. பாரதி சாரும், ராஜா
சாரும் பேசுவதை இன்னும் எவ்வளவு நேரத்துக்குக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியும்?
சுதந்திரமா சுத்திப் பார்க்கணும்ன்றதுக்காகத்தான் வந்தேன். வாங்க மார்க்கெட்டுக்குள்ள
போவோம்” என்று சிடி மார்க்கெட்டிற்குள் நுழைந்தார்.
“அடேயப்பா எவ்வளவு பெரிசா
இருக்கு” என்பதும் “என்ன சார் இது வியாபாரிங்க அத்தனைப் பேரும் தமிழர்களாகவே இருக்காங்க”
என்பதும் அவர் ரசித்து வியந்த விஷயங்கள். அவரை மிகவும் கவர்ந்தவை அங்கிருந்த பழக்கடைகள்.
விதவிதமான பழங்கள். “இந்தப் பழங்களையெல்லாம் நான் தமிழ்நாட்டில்கூடப் பார்த்ததில்லை”
என்று ரசித்து ரசித்துப் பார்த்தார். “இது என்ன இது ஊட்டி ஆப்பிள்? ஊட்டியில் பார்த்திருக்கேன்.
சாப்பிட்டுப் பார்த்ததில்லை. எப்படியிருக்குன்னு ருசி பார்த்ததில்லை. சாப்பிட்டுருவோம்.
ஆமா இதுக்குத் தமிழில் பேர் கிடையாதா?” என்று பெங்களூரில் நிறையக் கிடைக்கும் ஊட்டி
ஆப்பிளை வாங்கி எனக்கும் தந்து சாப்பிட்டார். பாரதிராஜா மற்றும் இளையராஜாவுக்காகவும்
வாழைப்பழம் மற்றும் ஊட்டி ஆப்பிள்களை வாங்கிக்கொண்டு தியேட்டருக்கு வந்தோம்.
மணிவண்ணனுக்கு ஆங்கிலத்தின்
மீது ஒரு காம்ப்ளெக்ஸ் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். சின்னச்சின்ன ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம்
அர்த்தங்கள் கேட்பார். அதனை எப்படி உச்சரிப்பது என்று இரண்டு மூன்று முறை சொல்லிப்பார்த்துக்கொள்வார்.
அதற்கு மறுநாள் காலையில்
முறைப்படியான கதை டிஸ்கஷன் ஆரம்பமான பொழுதுதான் மணிவண்ணனின் திறமையைச் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது. ஒரு கதையோ அல்லது காட்சியையோ சொல்லும்போது “இது வேணா நல்லால்லை”
என்பார் பாரதிராஜா. அடுத்த கணம், கணம்தான் நிமிடம்கூட இல்லை. “சார் இதை இப்படி வைச்சுக்கலாம்.
இங்கே ஒரு கூண்டு. அந்தக் கூண்டுல ஒரு கிளி” என்று இன்னொரு காட்சியை ஆரம்பிப்பார்.
“யோவ், அதெல்லாம் வேணாய்யா. கொஞ்சம் மாடர்னாச் சொல்லு”. அடுத்த கணமே இன்னொரு காட்சி.
இன்னொரு சம்பவம்…. என்று இப்படிப் போய்க்கொண்டே இருந்தது அவரது கதை சொல்லும் மற்றும்
காட்சிகள் சொல்லும் திறன். என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்துவிட்டு “கதை சொல்றதிலும்
சரி; காட்சிகள் பிடிப்பதிலும் சரி. இந்தத் தலைமுறையில செல்வராஜ்தான் பெஸ்ட். அதுக்கு
அடுத்து மணிவண்ணன் சொல்லுவான். எத்தனைமுறை ரிஜக்ட் செய்தாலும் அவன்பாட்டுக்கு சலிக்காமல்
அடுத்தடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பான். அதுல எத்தனைத் தேறும்னு சொல்லமுடியாது. ஆனா
அதுக்காக உட்கார்ந்தெல்லாம் யோசிக்காம, gap எடுக்காம, அவன் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே
இருப்பான்” என்றார்.
ஆற அமர யோசித்து அதற்குப்
பின்னர்தான் பேனாவைக் கையிலெடுத்துப் பழக்கப்பட்ட எனக்கெல்லாம் மணிவண்ணனின் கதை சொல்லும்
வேகமும் காட்சிகளை ஜோடனைப் படுத்தும் வேகமும் ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருந்தது. கே.எஸ்.கோபால
கிருஷ்ணன், ஆரூர் தாஸ், தூயவன் போன்றவர்களெல்லாம் கதை சொல்லும் அழகு பற்றியெல்லாம்
கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. மணிவண்ணனின் வேகம் ஆச்சரியப்படுத்தியது.
சில வருடங்களுக்குப் பிறகு………..
பாரதி ராஜாவின் சிஷ்யர்கள்
பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியே வந்து தனிப்பட்ட
முறையில் டைரக்ஷன் செய்ய ஆரம்பிக்கிறார்கள். வெற்றிகளையும் ருசிக்கிறார்கள். இவர்களில்
பாக்கியராஜூக்கு அடுத்து மணிவண்ணன்தான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுகிறவராக இருக்கிறார்.
முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். நான்கைந்து படங்கள் எடுத்து பேசப்படும்
இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார் மணிவண்ணன்.
அவ்வப்போது மனோபாலாவை சந்திக்கிற
வாய்ப்பு இருந்ததே தவிர மணிவண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.
ஒருநாள்……………தொழிற்சாலை
முடிந்து வீட்டுக்குத் திரும்பினால் “ஏம்ப்பா
உன்னைத் தேடிட்டு அந்தத் தம்பி மனோபாலா வந்திருந்துச்சி. கூடவே இன்னும் இரண்டு பேரும்
வந்திருந்தாங்க. அவங்க யாருன்னு தெரியலை. உடனே போன் பண்ணனுமாம். நம்பரும் தங்கியிருக்கும்
இடத்தையும் ஒரு பேப்பர்ல எழுதித் தந்துட்டு போச்சு. மூணு பேரையும் ஒரு காப்பி சாப்பிட்டுப்
போங்கன்னு எத்தனையோ சொல்லிப் பார்த்தேன். ‘இல்லைம்மா இன்னொரு முறை வர்றோம்’னு கிளம்பிட்டாங்க”
என்றார் அம்மா.
பேப்பரில் ‘உட்லண்ட்ஸில்
இந்த நம்பரில் தங்கியிருக்கிறோம். உடனே போன் பண்ணவும். அவசரம். இப்படிக்கு மனோபாலா’
என்றிருந்தது.
மனோபாலா சரி; உடன் வந்திருந்த
அந்த இன்னும் ரெண்டு பேர் யார்?
குழப்பத்துடன் சென்று போன்
செய்தேன். மறு முனையில் எடுத்த மனோபாலா “ஏனுங்க நாங்க வேலை மெனக்கிட்டு அத்தனை தூரத்திலிருந்து
உங்க வீடு தேடி வருவோம். நீங்க பாட்டுக்கு ஆபீசு, பாக்டெரின்னு போயிருவீங்க. நாங்க
வந்து அலைஞ்சிட்டுப் போகணுமாக்கும். உங்க வீட்டுக்கு என்னோட யாரு வந்தாங்கன்னு நினைக்கறீங்க?
இன்னைக்கு பரபரப்பா முன்னணியில இருக்கிற நடிகர்
மோகன், அதே அளவு முன்னணியில இருக்கிற மணிவண்ணன்… மூணுபேரும் வந்தோம். முக்கியமான விஷயம்.
நீங்க என்ன பண்றீங்க, ஆட்டோ பிடிச்சு உடனடியாக இங்கே வர்றீங்க”
நடிகர் மோகன் மிகமிகப்
பரபரப்பாக இருந்த நேரம் அது. மணிவண்ணனும் முன்னணியில் இருந்தார். எங்க அம்மாவைப் பொறுத்தவரை
மனோபாலா என்னுடைய நண்பர் என்பதாலும் வீட்டிற்கு ஏற்கெனவே வந்திருப்பவர் என்பதாலும்
அவரை மட்டும் தெரியும். நடிகர் மோகனையெல்லாம் அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்த
நடிகர்கள் என்றால் சிவாஜி, எம்ஜிஆர், சந்திரபாபு, சிவகுமார் ஆகியோர் மட்டும்தான்.
ஆட்டோ பிடித்து உட்லண்ட்ஸ்
சென்றேன். மனோபாலாவும் நடிகர் மோகனும் மட்டுமே இருந்தார்கள். மணிவண்ணன் இருக்கவில்லை.
மனோபாலாவும் சரி, நடிகர் மோகனும் சரி ஏதோ ஒரு பதட்டத்தில் இருப்பதுபோல் இருந்தார்கள்.
மணிவண்ணன் விஷயத்தில் ஏதோ ஒரு சிக்கல். அதனைச் சரி செய்யவே பெங்களூர் வந்திருக்கிறார்கள்.
ஒரு மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்து அந்தச் சிக்கலைச் சரிசெய்த பின்னரே பெங்களூரை
விட்டுக் கிளம்பப் போகிறார்கள்………………..
“பிரச்சினையை நாங்க பார்த்துக்கறோம்.
நீங்க கூட இருக்கணும்” என்றார் மனோபாலா.
“சரி” என்றேன்.
அடுத்த நாள் ஜெயநகர் சென்று
மணிவண்ணனைப் பார்த்தபோது “சாரி அமுதவன் சார். உங்களோடெல்லாம் ஃப்ரீயாப் பேச, பழக முடியலை.
அடுத்த முறை பெங்களூர் வரும்போது நாம வழக்கம்போல் சந்திக்கலாம்” என்றார்.
மறுபடி ஒரு நீண்ட இடைவெளிக்குப்
பின் மணிவண்ணனைச் சந்தித்தது சிவகுமார் நடித்த ‘இனி ஒரு சுதந்திரம்’ படப்பிடிப்பில், குன்னூரில்! அந்தப் படத்தை ஒரு லட்சிய வெறியுடனும்,
சாதித்து விடுவோம் என்ற தீவிரத்துடனும், உத்வேகத்துடனும் எடுத்துக்கொண்டிருந்தார் மணிவண்ணன்.
சிவகுமாருக்கும் மிகப்பெரிய
ஈடுபாடும் நம்பிக்கையும் அந்தப் படித்தின் மீது இருந்தது. ‘ஐய, இந்தப் படத்துக்குப்
போயி உத்வேகமும்,தீவிரமும், நம்பிக்கையுமா?’ என்று இன்றைய ‘கருத்துவாலாக்கள்’ அலட்சியமாக
ஒப்பீனியனை விசிவிட்டுப் போகலாம். ஆனால் அந்தப் படைப்பு உருவாகும் வேளையில் ஒருவித
அர்ப்பணிப்புடன் அந்தப் படைப்பில் பங்கு கொள்ளும் கலைஞனின் ஈடுபாட்டையும் உழைப்பையும்
சாதாரணமாகக் கருதுவதற்கு இல்லை. வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்குப்
படைப்பின் வலி தெரியாது.
கருத்துச் சொல்கிறவர்களுக்கு
பிரமாத அறிவு தேவை என்பதுகூட அல்ல ; வெற்றி பெற்றுவிட்டால் ‘ஆகா எப்பேர்ப்பட்ட சாதனை’,
தோல்வியடைந்து விட்டால் ‘அட இதுக்குப் போயி……’ இதைத் தவிர அவர்களிடம் என்ன இருக்கிறது?
ஆனால் ‘இனி ஒரு சுதந்திரம்’
மிகப்பெரும் தோல்வியைத் தந்த படம். இந்தப் படத்தின் தோல்விக்கு மணிவண்ணனின் சொதப்பலான
திரைக்கதை அமைப்புதான் காரணம் என்பது படத்தைப் பார்த்தபோதுதான் புரிந்தது. அத்தனை பலவீனமாக
திரைக்கதையை அமைத்திருந்தார் அவர். அரசியல், அதிகார வர்க்கம், ஆளுகின்றவர்களின் போக்கு
என்றெல்லாம் தமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் அந்தப் படத்தில் கொட்டியிருந்தார்.
குன்னூரில் அவரைச் சந்தித்தபோது “உங்களைப் போன்றவங்க எல்லாம் பேசற அளவுக்கு, பாராட்டற
அளவுக்கு இந்தப் படம் இருக்கும். நான் எந்த மாதிரி படங்களை எடுக்க இருக்கிறேன்றதுக்கு
இந்தப் படம் ஒரு மாதிரியாய் இருக்கும். மலையாளத்துல மட்டும்தான் இப்படியெல்லாம் கதை
சொல்ல முடியுமா நம்மாலும் சொல்ல முடியும்னு காட்டறேன்” என்றார்.
ஏகமாய்க் குழம்பிப்போய்
படத்தையும் குழப்பி வைத்திருந்ததைத்தான் பார்க்க முடிந்தது.
‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில்
எதிரொலித்த கருத்துக்கள்தான், அந்த இலக்குதான் நையாண்டியாய் மாறி வேறொரு வடிவம் எடுத்து
அமைதிப்படையாக சத்யராஜ் காம்பினேஷனில் வெளிவந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த
சமயத்திலேயே பி.வாசுவின் படப்பிடிப்பில் இருந்த நண்பர் சத்யராஜ் அமைதிப்படையின் காட்சிகளையும்
வசனங்களையும் சிலாகித்துச் சொல்லும்போதேயே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டிருந்தது.
“நிச்சயமா இந்தப் படத்துல நானும் மணியும் சொல்லி அடிக்கிறோம்” என்றே மிக நம்பிக்கையுடன்
சொன்னார் சத்யராஜ். சொன்னமாதிரியே வெற்றி பெற்றதுடன் ‘மணிவண்ணனின் பாணி இதுதான்’ என்பதையும்
கோடிட்டுக் காட்டியது அந்தப் படம்.
இதோ இப்போது இரண்டாவது
பாகமும் வெளிவந்து வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
மணிவண்ணன் ஒரு நடிகராக
மாறி வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த
நேரம். ஏதோ ஒரு திருமண விழாவில் சந்தித்தபோது “என்ன தளத்தையே மாத்திட்டீங்களே?” என்றேன்.
“இண்டஸ்ட்ரியில நம்மைத்
தக்க வச்சுக்கணும்னா அது போற போக்கில போக வேண்டியிருக்கே. நான் பாட்டுக்கு போயி நிக்கிறேன்.
என்னமோ பேசச்சொல்லித் தர்றாங்க. அதை அப்படியே ஒப்பிச்சிட்டு வராம எம்.ஆர்.ராதா பாணியைச்
சேர்த்து அடிக்கிறேன். இதான் நம்ம கான்ட்ரிபியூஷன். நல்லா கிளிக் ஆயிருச்சு. ஓடறவரைக்கும்
ஓடட்டுமே. சுலபமா பணம் வருது. அதே சமயம் ஃபீல்டுலேயும் சக்சஸ்ஃபுல்லா இருக்க முடியுது.
டைரக்ஷன் மாதிரி எல்லாத்தையும் நம்ம தலையிலேயே தூக்கிப்போட்டுக்கொண்டு டென்ஷன் ஆக வேண்டியதில்லை.
நம்ம நடிப்பையும் ஒத்துக்கறாங்கன்னா நமக்கு சந்தோஷம்தானே” என்றார். “ஆனா அதுக்காக டைரக்ஷனை
எல்லாம் விடப்போறதில்லை. சரியான நேரம் பார்த்து திருப்பி வந்துருவோம் இல்லை” என்றார்.
மறுபடியும் இயக்குகிறார்
என்று தெரியவந்தபோது அந்தப் படைப்பாளியின் நெஞ்சில் உள்ள தீ அவ்வளவு சீக்கிரமாய் அணைந்துவிடாது
என்பது நிரூபமானது. ஆனால் ஐந்தாறு வருடங்களாகவே உடம்பு சரியாக இல்லை என்ற தகவலும் அவ்வப்போது
வந்துகொண்டுதான் இருந்தது.
உடம்பை சரியாக வைத்துக்கொள்வதில்
ஒரு சிலர் எடுக்கும் அக்கறையை நிச்சயம் அனைவரும் எடுப்பதில்லை. திரைப்படத்துறையில்
வெற்றி பெற்றவர்களுக்கு இங்கேயே ஒரு அதிசய சொர்க்கம் திறந்து வைக்கப்பட்டுவிடுகிறது.
இதில் எல்லாருக்கும் நுழைய வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை. வாய்ப்புக் கிடைத்தவர்கள்
‘ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்’ என்று நம்ம
தலைவரே சொல்லியிருக்காருப்பா’ (இந்த இடத்தில் இவர்களின் தலைவர் கண்ணதாசன்) என்று சொல்லி
அனுபவிக்கின்றனர். அதிகபட்ச ‘கொண்டாட்டம்’ உடலிலுள்ள உயிர்சக்தியைப் பறித்து விடுகிறது.
இப்படி ‘உயிர்சக்தி’ பறிபோய் ஐம்பத்தைந்து வயதிலேயே போய்விட்டவர் இவர்களின் தலைவரான
கண்ணதாசனும்தான். இந்தக் கூட்டத்தில் விலகியிருப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே.
அந்த சந்திப்புக்குப்பின்
மணிவண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவரது அரசியல் அரங்கேற்றங்கள்
அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன. வைகோ ஆரம்பித்த கட்சியில் சேர்ந்தார் ; விலகினார்.
ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். சீமான் ஆரம்பித்த கட்சியில் தம்மை
வெகு தீவிரமாக இணைத்துக்கொண்டார் என்பதெல்லாம் மணிவண்ணனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு
இயல்பான விஷயங்களாகவே இருக்கும்.
ஒன்று மட்டும் உறுதி.
அவருக்கு மிகுந்த ஈடுபாடு
இருந்தது அரசியலிலா திரைபடத்துறையிலா என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்வதில்
குழப்பமிருக்கலாம்.
எதில் நமக்கு விருப்பம்
அதிகம் என்பதில் அவருக்கே கூட குழப்பம் இருக்கலாம்.
ஆனால், திரைப்படத்துறையில்
கிடைத்த பிராபல்யத்தையும் புகழையும் வைத்துக்கொண்டு
அரசியலில் இறங்கும் ஒரு சிலரைப் போல இறங்கியவர் அல்ல அவர். தம்மை ஒரு போராளியாக நிலை
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்ப காலம்தொட்டே முனைப்புடன் இருந்தவர்தான் மணிவண்ணன்.
அதனால்தான் “நான் இறந்தால்
என் உடல்மீது புலிக்கொடிதான் போர்த்தவேண்டும்; நாம்தமிழர் கட்சிக்கொடி போர்த்தவேண்டும்’
என்றெல்லாம் அவர் பேசியதில் எந்தவிதக் கள்ளமும் கபடமும் இல்லை. அவையெல்லாம் நேரடியாக
உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.
திரைப்படத்துறையைச் சேர்ந்த
ஒரு தமிழ்ப்போராளி அவர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.
சிடி மார்க்கெட்டைப் பார்க்கும்போதெல்லாம்
உங்கள் நினைவு வராமல் போகாது மணிவண்ணன்.
18 comments :
மணிவண்ணன் மனோபாலா, இளையராஜா, பாரதிராஜா, போலதமிழ் திரையுலகின் பெரிய பெரிய ஆட்கள் கூட தனிப்பட்ட முறையில் தங்களுக்கு நட்பு. சூப்பர் சார்.
தமிழ் மக்களுக்கும் தமிழ் திரையுலகமும் ஒரு மாபெரும் கலைஞனையும் தாண்டி ஒரு நல்ல மனிதனை இழந்து நிற்கிறது.
:(
ஐயா மணிவண்ணன் பற்றிய உங்கள் பதிவு அருமை ....உண்மையில் நெகிழ்ச்சியாகவும் ,வருத்தமாகவும் உள்ளது ....
வாங்க ஜெயதேவ், ரொம்பவும் நன்றி.
ஆமாம் கவின் நல்ல கலைஞர் என்பதையும் தாண்டி பழகுவதற்கும் மிக நல்ல மனிதர் அவர்.
வாருங்கள் பொன்மகேஷ் தங்கள் வருகைக்கு நன்றி.
அருமையான பதிவு மணிவண்ணனைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி
வாங்க சங்கர் தங்கள் கருத்திற்கு நன்றி.
Hello sir, from your words i got an good impression about Manivannan & his talents, affection on Tamil Eelam,... may his soul rest in peace.
தங்கள் வருகைக்கு நன்றி smarttester .
கவின் said...
\\தமிழ் மக்களுக்கும் தமிழ் திரையுலகமும் ஒரு மாபெரும் கலைஞனையும் தாண்டி ஒரு நல்ல மனிதனை இழந்து நிற்கிறது.
:(\\
இவ்வார தினமணி ஞாயிறு மலர் கலாரசிகன் பக்கத்தில் திரு வைத்தியநாதன் பாராட்டியிருப்பது உங்கள் கவிதையைத்தானா கவின்?
அமுதவன் அவர்களே,
சற்றுத் தாமதமாக வந்து விட்டேன் போல. இளையராஜாவைப் பற்றி ஒரு பதிவு எழுதிக்கொண்டிருந்ததில் கொஞ்சம் ஆழ்ந்துவிட்டேன். மணிவண்ணன்,மனோபாலா பாரதிராஜா, இளையராஜா என்று பல சினிமா பிரபலங்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு பற்றி அறிந்ததும் நீங்கள் எழுத்தில் சொல்வதை விட அதிக விஷயங்கள் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றியது. மணிவண்ணன் ஒரு இயல்பான மனிதர் என்பதை உங்கள் பதிவு உறுதி செய்கிறது. எனக்கு அவரின் சிந்தனைகள் மீது நல்ல அபிப்ராயம் உண்டு,
வாங்க காரிகன், உங்களுடைய தாமதத்திற்கான காரணம் நியாயமானதுதான். உங்கள் வலைப்பூவில் இளையராஜா பற்றிய கனமான பதிவைப் படித்தேன்.
அத்தனை விஷயங்களையும் தகவல்களையும் தேடியெடுத்து, தரம்பிரித்து எழுதுவது என்பது சுலபமான ஒன்றல்ல. இளையராஜா ரசிகர்களே சொல்லாத, அவர்களில் பெரும்போலோருக்குத் தெரியாத பாடல்களையெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்.
ராஜாவின் ரசிகர்கள் படிக்கவேண்டிய ஒரு முக்கியப்பதிவு அது.
தங்கள் கருத்திற்கு நன்றி.
சர்வ நிச்சயமாக அவர் தலைசிறந்த படைப்பாளி...இருக்கும்போது யாருமே கொண்டாடவில்லை... நினைவுகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள் சார்...
வாங்க மணிமாறன் தங்கள் வருகைக்கு நன்றி.
அமுதவன் சார், எனக்கு சின்ன வயதில் குமுதத்தில் விபத்து குறுநாவலைப் படித்த ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு ஆசிரியர் பெயரைக் கவனித்து நினைவில் வைத்துக்கொள்ளும் வயது இல்லை. அந்தக் குறுநாவலை உங்கள் தளத்தில் வெளியிட முடியுமா? அல்லது ஏற்கனவே எங்காவது வெளியாகியிருந்தால் சுட்டி (அல்லது புத்தகத்தின் பெயர்) தரமுடியுமா? நன்றி.
விபத்து கதையில் 'சர்க்கரையில் ஈ மொய்க்கக் கூடாது என்று ***** (மறந்துவிட்டது) கலந்து வைப்பான்... இப்ப அவன் மேலேயே ஈ மொய்ப்பது தெரியாமல் கிடக்கிறானே' என்று விபத்தில் இறந்தவனின் தாய் புலம்புவாரே? அந்தக் கதைதானே? அதை எழுதியவர் நீங்களா? சூப்பர் சார்! சுமார் 33 வருடங்கள் ஆகிவிட்டது படித்து--ஏனோ இந்த வரி மட்டும் மனதில் பதிந்துவிட்டது! உங்கள் தளத்தைத் தெரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அமுதவன் அவர்களே.
வாருங்கள் சரவணன், தங்களின் இந்தப் பின்னூட்டம் என்னை மிகவும் மகிழ்வும் நெகிழ்வும் கொள்ள வைத்தது. அந்தக் குறுநாவல் ஒன்றுதான் அன்றைய பரபரப்பான குமுதம் இதழின் முதல் பக்கத்தில் வெளியான குறுநாவல் என்று அதன் உதவி ஆசிரியர்கள் பாராட்டிச்சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சுஜாதா மிகவும் பாராட்டிய குறுநாவல் அது.
நடிகை லட்சுமியும் உங்களைப்போலவேதான். படித்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பு என்னைத் தேடிப்பிடித்துப் பாராட்டினார்.
அந்தச் சமயங்களில் எந்தவிதமான மகிழ்ச்சி அடைந்தேனோ அந்த மகிழ்ச்சியைத் திரும்பவும் அடைய வைத்த உங்களுக்கு என் நன்றி.
விபத்து குறுநாவல் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழில் புத்தகமாகத்தான் இன்னமும் வரவில்லை. எனது கதைகளை புத்தகமாக்கும் முயற்சிகள் பாதிக்கப்பட்டதே தனியொரு கதை.
இப்போது கதைகளல்லாத இரு புத்தகங்களைத்தான் கிழக்கு பதிப்பகமும், விகடன் பிரசுரமும் வெளியிட்டிருக்கிறார்கள்.
விபத்து குறுநாவலும் புத்தகமாக வருமென்று நினைக்கிறேன்.
அப்படியில்லாவிட்டால் இணையத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகளைச் செய்வோம். நன்றி.
Post a Comment