Tuesday, September 3, 2013

வெளிவந்துவிட்டது ‘என்றென்றும் சுஜாதா’ - சுஜாதா பற்றிய புத்தகம்.



 மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழ் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொட்டுப்பார்ப்பதாக இருந்ததுதான் நிறையப்பேர் வியக்கவும் விரும்பவும் காரணமாக இருந்தது. தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு அவருடைய பங்கு எத்தகையது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

தமிழில் விஞ்ஞானத்தை சுஜாதா அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் வேறு யாருமே எழுதியதில்லை. விஞ்ஞானத்தைக் கட்டுரைகள் வாயிலாக மட்டுமல்லாமல் கதைகளிலும் புகுத்தி தமிழில் விஞ்ஞானக் கதைகளைப் பிரபலமாக்கியவரே அவர்தான். இந்த ஒன்றுக்காகவே தமிழ் நல்லுலகம் அவரை என்றென்றைக்கும் கொண்டாட வேண்டும்.

புதுடெல்லியிலிருந்து 1969 அல்லது 1970-ல் பெங்களூரில் குடியேறியதிலிருந்து 1993-ல் குமுதம் ஆசிரியராகப் பணியேற்று சென்னைக்குச் செல்லும் நாள்வரை அவர் பெங்களூர்வாசியாகத்தான் இருந்தார்.

அவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் பிரமுகராகவும் உயர்ந்த வேளையில் அவரது வேர்கள் பெங்களூரில்தான் பதிந்திருந்தன. அந்த நாட்களில் அவருடன் எழுத்து, இலக்கியம், பத்திரிகை, சினிமா சார்பாகப் பேசிப் பழக பெங்களூரில் அவருக்குக் கிடைத்த ஒரே நபர் நான் மட்டும்தான்!

அந்த நாட்களின் படிப்படியான அவரது வளர்ச்சியை, மகிழ்ச்சியை, சில பொழுதுகளில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை என்னுடன் மனம்விட்டுப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். அந்த நாட்களில் எல்லாம் நான் அவருடன் இருந்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த மிக அரிய வாய்ப்பு.

ஏறக்குறைய இருபத்தி மூன்று ஆண்டுகள் அவருடன் நெருக்கமாகவும் அவர் சென்னை சென்றபிறகும் கடைசிவரையிலும் தொடர்பு விட்டுவிடாமலும் பழகிய அந்த ஈர நினைவுகளை அந்த அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறேன்.

நடிகர் கமலும் சுஜாதாவும் முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை ஏற்கெனவே என்னுடைய இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அந்த ஒரு கட்டுரைக்கே மிகுந்த வரவேற்பிருந்தது. சுஜாதா வாசகர்களும் கமல் ரசிகர்களுமாக மிகவும் ரசித்த அந்தக் கட்டுரையின்போதே சுஜாதாவின் நினைவலைகளை முழுவதும் புத்தகமாக எழுதப்போவதாகச் சொல்லியிருந்தேன். அதைப் படித்ததிலிருந்தே நிறைய இணைய நண்பர்கள் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரப்போகிறது? எழுதிவிட்டீர்களா, எழுத ஆரம்பித்துவிட்டீர்களா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 
  
சுஜாதாவுக்கும் எனக்கும் இருந்த நட்பு பற்றி அறிந்த பெங்களூர் நண்பர்களும் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரும் என்று கேட்டபடியே இருந்தனர்.

இதோ வந்துவிட்டது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

‘சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன்.

சுஜாதா மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப்பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதிவிடாமல் க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது………………………………………………..

சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும் ஒரு படத்தில் அவர் நடித்தது அவரை நடிக்கவைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச்சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதவை. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து’ என்று முன்னுரையில் சொல்கிறார் விகடன் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தை முடித்ததும் முதலில் படிக்கக்கொடுத்தது திருமதி சுஜாதா அவர்களிடம். “அப்படியே ஒரு முன்னுரையும் எழுதித் தந்துவிடுங்கள்” என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். முழுவதும் படித்துப் பார்த்து “இந்த நூலில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கீங்க. என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூலுக்கு நானே முன்னுரையும் தருவது நன்றாயிருக்காது” என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் திருமதி சுஜாதா. நூலை முழுவதுமாகப் படித்துப் பார்த்து ஒப்புதல் தந்த திருமதி சுஜாதா அவர்களுக்கு நன்றி.

பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ‘சுஜாதா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன்.

“அப்படியா நான் கூட அவருடைய ஓவியம் ஒன்றை வரைஞ்சு வச்சிருக்கேன். அவரிடமே தரலாம்னு வரைஞ்சது. அதுக்கான சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டது. அதுக்குள்ள மறைஞ்சிட்டார். இன்னமும் எந்தப் பத்திரிகைக்கும் அதைத் தரலை. பத்திரமா நானே வைச்சிருக்கேன். அவங்க துணைவியாரிடம் தரலாம்னு இருக்கேன்” என்றார்.

இந்த புத்தகம் முடிந்ததும் விகடனிடம் சேர்ப்பிக்கும்போது திரு மணியம் செல்வன் சொன்னதை விகடன் பிரசுரத்தின் முதன்மை உதவி ஆசிரியர் திரு அன்பழகனிடம் சொன்னேன். “அப்படியா இதுவரையிலும் பிரசுரமாகாத படம் அவரிடம் இருக்கா? அப்படின்னா அதையே வாங்கி அட்டைப்படமாப் போட்டுடலாம்” என்றார் அன்பழகன். சொன்னபடியே அந்த அழகிய ஓவியம்தான் முகப்புப் பக்கமாய் ஜொலிக்கிறது.

இந்த நூலில் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. சுஜாதா பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது குறிப்பாக மூன்றுபேரைத்தான் எந்த நாளும் குறிப்பிட்டுப் பேசுவார். ஒருவர் குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி, அடுத்தவர் விகடனின் முன்னாள் ஆசிரியரும் சேர்மனுமான எஸ்.பாலசுப்பிரமணியம், அடுத்தவர் ஆசிரியர் சாவி. இவர்களில் விகடன் முன்னாள் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்பிரமணியத்தைப் பற்றிய தகவல்களை எழுதியபோது நிறையவே தயக்கம் இருந்து. 

இவற்றை எல்லாமே அடித்துவிடுவார்கள்; எப்படியும் பிரசுரிக்கப்போவதில்லை எடிட் செய்துவிடுவார்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன். காரணம், நீண்ட நாட்களுக்கு விகடனில் அப்படியான நிலைமைதான் இருந்தது. நடிகர் சிவகுமாரே பல பேட்டிகளில், கட்டுரைகளில் திரு பாலன் அவர்களைப்பற்றிச் சொன்னதை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். விகடன் நிறுவனர் எஸ்எஸ் வாசன் அவர்களைப் பற்றியும்  திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றியும் எந்தப் பாராட்டுக் குறிப்புகளும், புகழுரைகளும் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் இந்த நூலிலும் அதுதான் நடக்கப்போகிறது என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் நிகழாமல் திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி சுஜாதா சொன்னதெல்லாம் வெட்டப்படாமல் வந்திருக்கிறது.

அந்தவகையில் எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.

சுஜாதா எழுதியதை நிறையப் படித்திருப்பீர்கள். சுஜாதாவைப் பற்றி இதில் படித்துப்பாருங்கள்.

விகடன் பிரசுரம் என்பதால் எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

24 comments :

Yaathoramani.blogspot.com said...

அருமையான அறிமுகம்
எங்களூரில் புத்தகத் திருவிழா
நடைபெற்றுக் கொண்டுள்ளது
அவசியம் வாங்க்கிப் படித்துவிடுவேன்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Amudhavan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி. படித்துவிட்டுத் தங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வணக்கம், தங்கள் இல்லத்திருமண விழாப்பற்றி வெகுதாமதமாகவே அறிந்துக்கொண்டேன்,இணைய இணைப்பு கிடைக்காத சூழலில் சிக்கிக்கொண்டதே காரணம், மன்னிக்கவும். சிறப்பாக நடைப்பெற்றதென "பாகவதர்"ஜெயதேவ் பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன், மணமக்களுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்!

இவ்வளவு கடுமையான திருமண வேலையிலும் ஒரு நூலினையும் உருவாக்கி இருக்கிறீர்களே வாழ்த்தவும் ,பாராட்டவும் நமக்கு தகுதி இல்லை எனினும் வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும்.ஹி..ஹி நானெல்லாம் ஒரு மணி நேரம் பஸ் டிராவல் செய்தால் ரெண்டு மணி நேரத்துக்கு ஷ்ஷ்ப்பானு படுத்துப்பேன் அம்புட்டு சோம்பேறி அவ்வ்!

கண்டிப்பாக உங்கள் நூலினை வாசித்து விடுகிறேன்,எனக்கு தனிப்பட்ட முறையில் சுஜாதா அவர்களின் மீது பெரும் அபிப்ராயமெதுவும் இல்லை எனினும்,உங்கள் நூல் மூலமாக மாறுதானு பார்ப்போம் :-))

காமக்கிழத்தன் said...

சுஜாதா, கொஞ்சமும் புகழை விரும்பாதவர் என்பது தாங்கள் அறியாததல்ல.

அவரை உரிய முறையில் பெருமைப்படுத்தத் தமிழ் உலகம் தவறிவிட்டது.

அக்குறையைப் போக்கும் வகையில் தங்களுடைய இந்த நூல் அமைந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

மிகச் சில நாட்களில் இந்நூலை வாங்கிப் படித்துவிடுவேன்.

நூல் எழுதியதற்கு மட்டுமல்ல, மறவாமல் பதிவிட்டமைக்கும் நன்றி.

Amudhavan said...

வவ்வால் said...
\\ஹி..ஹி நானெல்லாம் ஒரு மணி நேரம் பஸ் டிராவல் செய்தால் ரெண்டு மணி நேரத்துக்கு ஷ்ஷ்ப்பானு படுத்துப்பேன் அம்புட்டு சோம்பேறி அவ்வ்!

கண்டிப்பாக உங்கள் நூலினை வாசித்து விடுகிறேன்,எனக்கு தனிப்பட்ட முறையில் சுஜாதா அவர்களின் மீது பெரும் அபிப்ராயமெதுவும் இல்லை எனினும்,உங்கள் நூல் மூலமாக மாறுதானு பார்ப்போம் :-)) \\
இணைய இணைப்பு இல்லாத இடத்திலிருந்ததால் திருமண அழைப்பு நேரத்துக்குக் கிடைக்காமல் போய் வரமுடியாமல் ஆகியிருக்கிறது. நீங்களும் திரு காரிகனும் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். எனினும் தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஒருமணி நேரப் பயணத்துக்குப்பின் இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கும்போதே பின்னூட்டங்களில் போட்டுப் பின்னியெடுக்கிறீர்கள். இன்னமும் நேரம் கிடைக்கப்பெற்றால் வலைப்பதிவர்களின் நிலைமை அதோ கதிதான்.
சுஜாதா பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் வைத்திருப்பவர்களின் அல்லது அபிப்பிராயமே இல்லாதிருப்பவர்களை மாற்றும் விதமாகவெல்லாம் நூல் எழுதவில்லை. என்னுடைய அனுபவங்களையும் நினைவலைகளையும் நூலில் எழுதியிருக்கிறேன். அந்த நூல் உங்கள் அபிப்பிராயத்தை மாற்றுமா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் சுஜாதா ஒரு அற்புதமான நல்ல மனிதர்.பழகுவதற்கு இனியவர். மற்றவர்களை ஆச்சரியப்படவைக்கும் அறிவாளி.

Amudhavan said...

காமக்கிழத்தன் said...
\\அவரை உரிய முறையில் பெருமைப்படுத்தத் தமிழ் உலகம் தவறிவிட்டது.\\
வருகைக்கு நன்றி காமக்கிழத்தன். அவரை மிகமிகப் பிரபலமானவராகத் தமிழ் உலகம் கொண்டாடியது உண்மை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அவரைப் பெருமைப்படுத்தத் தவறிவிட்டது என்பது நிஜம்தான். அந்த வருத்தம் அவரிடம் இருந்ததையும் நான் அறிவேன்.

நம்பள்கி said...

வாழ்த்துக்கள்! சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்து இருக்கிறேன். Closing statement or final punch கொடுப்பதில் அவர் கெட்டிக்காரர்.

ஆங்கிலத்தில், ஒரு கட்டுரையை கதையை படிக்க வைக்க opening statement and closing statement ரொம்ப முக்கியம். மேலும், ஆங்கில கட்டுரையில் இரு பக்க விவாதங்களை வைத்து விட்டு தான் அவர்கள் கருத்தை வைப்பார்கள்.

நான் அறிந்த வரையில் தமிழில் ஒரு சார்பு விவாதங்களையே அல்லது ஆசிரியரின் கருத்து தரப்படுகிறது. மக்களும் விரும்பவதில்லை போல.

தமிழில் "இரு பக்க விவாதங்களை" கட்டுரையில் எப்படி வைப்பது, எழுதுவது என்று ஏதாவது புத்தகம் உள்ளதா?
தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்!

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
உங்களின் சுஜாதா-கமல் முதல் சந்திப்பு பதிவு என்னை வெகுவாக கவர்ந்த ஒரு கட்டுரை. சுஜாதா பற்றிய உங்கள் அனுபவங்களை இன்னும் சற்று விரிவாக எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சுஜாதா பற்றிய மாயை இப்போது என்னிடம் கணிசமாக குறைந்துபோய் விட்டாலும் வாங்கிப் படிக்கவேண்டிய ஆர்வம் இருக்கிறது.

Amudhavan said...

வாருங்கள் நம்பள்கி, தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் கேட்கிறமாதிரியான புத்தகங்கள் தமிழில் இல்லையென்றே நினைக்கிறேன். இது மாதிரியான பேலன்சிங் ஓரளவு நீங்கள் எழுதும் பதிவுகளில்தான் தமிழில் பார்த்திருக்கிறேன்.

Amudhavan said...

நன்றி காரிகன் படித்துவிட்டு எழுதுங்கள்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//இணைய இணைப்பு இல்லாத இடத்திலிருந்ததால் திருமண அழைப்பு நேரத்துக்குக் கிடைக்காமல் போய் வரமுடியாமல் ஆகியிருக்கிறது. நீங்களும் திரு காரிகனும் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். எனினும் தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.//

2009-10 காலக்கட்டங்களில் பெங்களூரில் தான் இருந்தேன் எனவே ஓரளவு ஊர் அறிமுகம் உண்டு என்பதால் ஒரு அனானியாகவாது வந்திருப்பேன், அதுவும் சாப்பாடு வேற விதம் விதமானு பாகவதர் பதிவில் சொல்லவும் சாப்பாடு போச்சேனு ஃபீலிங்க்ஸ் ஆகிட்டேன் அவ்வ்!
நியூ பெல் ரோட்டில் நடக்கும் போதெல்லாம் சுஜாதா ஏதோ ஒரு கட்டுரையில் "லேசாக இருட்டியதுமே நியூபெல் சாலை ஆள் அரவமற்று விடும்,அதில் சென்றதாக" எழுதியதை நினைத்துக்கொள்வதுண்டு, ஏன்னா இப்போ அந்த ஏரியா அவ்ளோ பிசி!ஆரம்பகாலங்களின் சுஜாதாவின் எழுத்துக்களை ரசித்து பின்னர் காரிகன் சொன்னார் போல "மாயை போயிட்டது" :-))

# //பின்னூட்டங்களில் போட்டுப் பின்னியெடுக்கிறீர்கள். இன்னமும் நேரம் கிடைக்கப்பெற்றால் வலைப்பதிவர்களின் நிலைமை அதோ கதிதான்.//

"கைப்புள்ள" கணக்கில் இதை சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் அவ்வ்! நன்றி!

# //சுஜாதா பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் வைத்திருப்பவர்களின் அல்லது அபிப்பிராயமே இல்லாதிருப்பவர்களை மாற்றும் விதமாகவெல்லாம் நூல் எழுதவில்லை. //

சில அறியாத தகவல்கள் தெரியவரும் போது நமது மதீப்பீடுகள் மறுப்பரிசீலனைக்குள்ளாகும், உங்கள் எழுத்தில் அப்படி நடக்க அனேக சாத்தியங்கள் இருப்பதால் , சில புதிய தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

எம்.ஜிஆர் பெரும்பாலான திரைப்பட பாடல்களின் போது "ஒரு துள்ளல் ஓட்டம் ஓடுவார்" எனக்கு சிரிப்பாக இருக்கும், ஒரு முறை இசை தெரிந்த நண்பர், பாடலில் வரும் அந்த "டாடன்டானானா' போல டியூனுக்கு டான்ஸ் ஸ்டெப் வைப்பது கடினம் , அதனை எளிமையாக ஓடி சமாளித்திருப்பார், அதுவே ஸ்டைலாக போய் எல்லாப்படத்திலும் வைக்கிறார்கள் என ,அப்பொழுது தான் ஓ இதில் இப்படியும் ஒரு சூட்சமம் இருக்கானு பிடிபட்டது.

அது போல டியூனுக்கு சூப்பர் ஸ்டார், மற்றும் அஜித் போன்றவர்கள் வாக்கிங் போயிடுவாங்க :-))

எனவே நமக்கு யாராவது விளக்கினால் தான் விளங்கும், இல்லையெனில் பழைய மதிப்பீடுகளுடன் தான் வாழனும்.
---------------

வவ்வால் said...

நம்பள்கி,

//மேலும், ஆங்கில கட்டுரையில் இரு பக்க விவாதங்களை வைத்து விட்டு தான் அவர்கள் கருத்தை வைப்பார்கள்.//

அது எப்படி ஆங்கிலத்தில் மட்டும் அப்படி இருக்குனு ஒரு தீர்க்கமான நம்பிக்கை?

நான் படித்த வரையில் ஆங்கில பத்திரிக்கைகள் போல (அயல் நாடும் சேர்த்து தான்) ஒரு பக்க சார்பாக எழுதி நம்ப வைக்கும் வேலையை தமிழ் பத்திரிக்கைகளின் கட்டுரைகள் திறம்பட செய்வதில்லை.

இப்போ அமெரிக்காவில் நடக்கிற நிதி நெருக்கடிக்கு நம்ம ஊரா இருந்தா இன்னேரம் ஓபாமாவை பதவி விலக்க சொல்லி ஆயிரக்கணக்கில் எழுதி குவிச்சு இருப்பாங்க, ஆனால் அமெரிக்க பத்திரிக்கைகளில் பட்டும் படாமல் விமர்சிக்கின்றன.

பல கட்டுரைகள் எல்லாமே உலக பொருளாதார மந்த நிலை தான் அமெரிக்கா என்னா செய்யும் பாவம்னு நம்ப வைக்கும் விதமாகவும் எழுதி வருகின்றன.

எனவே ஒரே கட்டுரையில் "பேலன்ஸ் இருப்பதில்லை" ஒரு கட்டுரையில் பாராட்டினா இன்னொரு கட்டுரை போட்டு விமர்சித்து ஹி ஹி நாங்க ரெண்டுபக்கமும் கருத்து சொல்லி இருக்கோம்னு காட்டிக்கிறாங்க, இதுல வேற கடைசில இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆசிரியருடையது, இதற்கும் பத்திரிக்கைக்கும் தொடர்பில்லைனு ஒரு டிஸ்கி வேற அவ்வ்!

வரும் அக்டோபர் மாதத்துடன் அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு எல்லை 67.6 டிரில்லியன் டாலர் என்ற அளவை கடக்கப்போவுது இன்னும் சில பில்லியன் டாலர்கள் வித்தியாசம் தான் இருக்கு, அதனை சமாளிக்க அமெரிக்க செனட்டில் ஒரு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் வாங்கனும், ஒரு அதிபரின் செயல்படா தன்மைக்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.

இந்த நிலையிலும் சிரியா மேல போர் தொடுப்பேன்னு டைவர்ட் பண்ணிட்டு தான் இருக்கு அமெரிக்கா அரசாங்கம்.

நம்ம ஊருல அமெரிக்காவுக்காக இந்தியா ரூபாயை காவுக்கொடுத்திட்டு இருக்காங்க,ஆனாலும் நம்ம மன்னு,ப.சி எல்லாம் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை.

மன்ன்னு,பசி எல்லாம் ஆசைப்பட்டாலும் இந்திய பொருளாதாரம் குடி மூழ்கிடாது என்பது இதில் ஒரு ஆறுதலான விடயம்.

//நான் அறிந்த வரையில் தமிழில் ஒரு சார்பு விவாதங்களையே அல்லது ஆசிரியரின் கருத்து தரப்படுகிறது. மக்களும் விரும்பவதில்லை போல//

தட்ஸ் தமிழ் மட்டுமே படித்துக்கொண்டிருந்தால் அப்படித்தான் தோன்றும் :-))

Umesh Srinivasan said...

தமிழில் (கதை,கட்டுரை)எழுத மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் எழுத்துலகப் பிதாமகன் திரு.ரங்கராஜன் (சுஜாதா) அவர்களுடனான உங்கள் நினைவுகளைப் படிக்க ஆசை.பணிக்கால விடுமுறையில் சென்னை வரும்வேளையில் கண்டிப்பாக வாங்கிப், படித்துப் பத்திரப்படுத்துகிறேன்.

Amudhavan said...

வவ்வால் நீங்க பெங்களூரிலெல்லாம் இருந்திருக்கிறீர்களா?
எம்ஜிஆர் டியூனுக்கு ஓடுவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் படித்தால் மட்டும் போதுமா? படத்தின் மாமா மாப்ளே பாடலில் நடிப்பதற்கு எப்படித் தயாரானார்கள் என்பது பற்றி திரைத்துறை நண்பர் ஒருவர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் சொன்னார்.
இவர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தகவல்களை இத்தனை வருடங்கள் கழித்தாவது பேசுகிறோம். பேசுவதற்கான தகவல்களாக அவை இருக்கின்றன. இப்போது வருபவர்களைப் பற்றி இப்போதைக்குப் பேசுவதற்கே ஒன்றுமில்லாமல் போய்க்கொண்டிருப்பது பரிதாபம்தான்.

மற்றபடி நம்பள்கி பற்றிய விவாதங்களை நான் வெறும் வேடிக்கை மட்டும்தான் பார்க்கமுடியும்.

Amudhavan said...

Umesh Srinivasan said...
\\தமிழில் (கதை,கட்டுரை)எழுத மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் எழுத்துலகப் பிதாமகன் திரு.ரங்கராஜன் (சுஜாதா) அவர்களுடனான உங்கள் நினைவுகளைப் படிக்க ஆசை.பணிக்கால விடுமுறையில் சென்னை வரும்வேளையில் கண்டிப்பாக வாங்கிப், படித்துப் பத்திரப்படுத்துகிறேன்.\\
வாங்க உமேஷ், தங்கள் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.

Jayadev Das said...

சூப்பர் சார், வீட்டுக்கு வரேன், அந்த புத்தகம் இருந்தா குடுங்க!!

Jayadev Das said...

[நான் சும்மா குடுத்தா வாங்க மாட்டேன்!! ஹி ................ஹி ..........ஹி ..............]

Amudhavan said...

நன்றி ஜெயதேவ், வீட்டுக்கு வாருங்கள் மழை கொஞ்சம் ஓய்ந்ததும்.

ஜோதிஜி said...

மின் நூல் படிப்பதில் ஆர்வம் இல்லாதவன் நான். சில வாரங்களாக இணையத்தில் கிடைத்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்துக் கொண்டே இருக்கின்றன். இன்று வரையிலும் அவர் மேல் உள்ள பிரமிப்பு மாறாமல் உள்ளது.

நீங்க கொடுத்து வைத்தவர்.

Amudhavan said...

நன்றி ஜோதிஜி நீங்கள் மற்ற பதிவுகளுக்குப் போட்ட பின்னூட்டங்களும் பார்த்தேன்.
ஒத்த சிந்தனைகள் உள்ளன என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.
முடிந்தால் என்றென்றும் சுஜாதா படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

Umesh Srinivasan said...

அமுதவன் அவர்களுக்கு வணக்கம், சென்ற மாதம் விடுமுறையில் சென்னை சென்றபோது ஹிக்கின்பாத்தம்ஸில் 'என்றென்றும் சுஜாதா' வாங்கினேன். நேற்று உடல் நலக்குறைவினால் அறையிலிருக்க நேர்ந்தமையால் முழுநூலையும் படிக்கக் கிடைத்தது. எழுத்து நடை கூடவே இருந்து பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியதென்னவோ 100 % உண்மை. இறுதியில் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். பெங்கலூரு வரும் சந்தர்ப்பம் அமைந்தால் உங்களை நேரில் காண ஆவல். நன்றி.

Amudhavan said...

வாங்க உமேஷ், தொடர்ந்துவந்து சுஜாதா பற்றிய புத்தகத்தையும் படித்து, கருத்தையும் எழுதியமைக்கு, மிக்க மகிழ்ச்சி. முந்தைய வார இந்து ஆங்கில நாளிதழில் இந்த நூல் பற்றிய விமரிசனமும் வந்திருந்தது.
பெங்களூர்ப் பக்கம் வரநேர்ந்தால் வாருங்கள் சந்திப்போம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Amudhavan said...

நீங்கள் சொன்னபிறகுதான் சென்று பார்த்தேன். தங்களின் இப்படிப்பட்ட பொதுத் தொண்டுகளுக்கு நன்றி தனபாலன்.

Post a Comment