Friday, August 21, 2015

எம்எஸ்வி – ஒரு சகாப்தம் நிறைந்தது! – பகுதி 1

 
இனிமேல் இப்படி ஒருத்தர் பிறக்கப்போவதில்லை’- இந்த வார்த்தையை எல்லாருக்கும் சொல்லிவிடமுடியாது. இம்மாதிரியான வார்த்தைக்கு வெகு சிலர் மட்டுமே தகுதியானவர்களாக இருப்பார்கள். அப்படியொரு தகுதிக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1930 களிலிருந்து பேசும்படம் என்ற திரைப்படம் மக்களைக் கவருகின்ற நிலைமைக்கு வந்தபோது நடிப்பு, பாடல் வசனம் என்ற மூன்று அம்சங்களே தியேட்டரை விட்டு வந்தபிறகும் திரைப்பட ரசிகனை பித்துப்பிடித்துப் போகச் செய்யும் நிலைமைக்குத் தள்ளியது. தியேட்டருக்குப் போனவனை மட்டுமல்ல, போகாதவனையும் இழுத்துக் கட்டிப்போட்டது பாடல். அவனே அறியாதவண்ணம் அவன் முணுமுணுக்கும்படி அவனுடைய மனதிலும் உதட்டிலும் தானாகவே வந்து உட்கார்ந்துகொண்டது பாடல். பாடலை வைத்து மக்களை முதலில் கவர்ந்தவராக எம்கேடியைத்தான் சொல்லமுடியும். எம்கேடிக்காக எப்படிக் காத்திருந்தார்கள், எப்படிக் குவிந்தார்கள், எப்படி முண்டியடித்தார்கள், எப்படிப் பித்துப் பிடித்து அலைந்தார்கள் என்பதையெல்லாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.

ஆரம்பத்தில் புராண இதிகாசத் திரைப்படங்களின் மூலம் வளர்ந்த இசை பெரிதும் கர்நாடக சங்கீதத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கர்நாடக சங்கீதம் குதிரைவண்டி ஓட்டுபவர்களையும், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களையும்கூடக் கவர்ந்திருந்தது என்பதைக் கல்கி சுப்புடு போன்றவர்களின் விமர்சினங்களிலிருந்து அறிகிறோம். நாற்பதுகளில் இந்தவகையான இசையின் மூலம் எம்கேடி, பி.யூ.சின்னப்பா, தண்டபாணி தேசிகர், எம்எஸ்சுப்புலட்சுமி போன்றோர் மிகமிகப் புகழ்பெற்றவர்களாக பவனி வந்தனர்.

அதற்கடுத்து சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்சௌந்தரராஜன் என்ற நீட்சி ஏற்பட்டது. கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் உலா வந்துகொண்டிருந்தபொழுது அதற்கேற்ப அதனை இயற்றுபவர்கள் மற்றும் இசையமைப்பாளர்களாக பாபநாசம் சிவனும் எஸ்விவெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் போன்ற இசையமைப்பாளர்களும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். கால மாறுதலுக்கேற்ப முழுக்க முழுக்க கர்நாடகப் பாணியிலிருந்த இசையைக் கொஞ்சம் கொஞ்சமாக எளிமைப்படுத்தி ஜனரஞ்சக நிலைமைக்குக் கொண்டுவரும் காரியத்தை ஜி.ராமனாதனே ஆரம்பித்துவிட்டார். இந்த மாற்றம் அவரை ‘ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்’ என்ற ஆங்கில இசையைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட்டிச்சென்றது.

இதே கால கட்டங்களில் இந்தித் திரையுலகிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. சைகல், பங்கஜ் மல்லிக் போன்றோரால் பாடப்பட்ட ஜனரஞ்சகப் பாடல்கள் இந்தியா முழுக்கப் புகழ் பெற்றுவந்தன. இதன் தாக்கம் தமிழ்ப் படங்களையும் விட்டுவைக்கவில்லை. பல திரைப்படங்களில் இந்தி மெட்டுக்களில் தமிழ் வார்த்தைகளை உட்காரவைத்து இயற்றப்பட்ட பாடல்களேகூட வந்துகொண்டிருந்தன.

ஏறக்குறைய இந்த சமயத்தில்தான் விஸ்வநாதனின் திரைப்பிரவேசமும் நடந்தேறுகிறது. முதலில் திரைத்துறையில் ஒரு சாதாரண ஆபீஸ்பையனாகத்தான் சேருகிறார் விஸ்வநாதன். தன்னுடைய எஜமானர் எஸ்எம்சுப்பையா நாயுடு உபயோகப்படுத்தும் ஆர்மோனியப் பெட்டியில் அவர் இல்லாத சமயத்தில் திருட்டுத்தனமாகத்தான் சில டியூன்களை வாசித்துப் பார்க்கிறார். மறுநாள் தமது ஆர்மோனியப்பெட்டி இடம் மாறியிருப்பதை அறிந்த எஸ்எம்எஸ் காரணம் கேட்கிறார். 

உதவியாளராக இருந்த ஜிகேவெங்கடேஷ் போட்டுக்கொடுத்து விடுகிறார். “நீங்க நேத்து எத்தனை முயற்சி பண்ணியும் வரலையே அந்த டியூனை இந்தப் பையன் நீங்க இல்லாத சமயத்தில் எடுத்து வாசிச்சான்”

“அப்படியா எதோ வாசிச்சுக்காட்டு” என்று உறுமுகிறார் எஸ்எம்எஸ்.

பயந்தபடியே ஆர்மோனியத்தை எடுத்து வாசிக்கிறார் விஸ்வநாதன்.

“சரி அப்படியே இந்த டியூனை நீதான் வாசிச்சேன்னு யாருகிட்டேயும் சொல்லாதே” என்கிறார் எஸ்எம்எஸ்.

இப்படி ஆரம்பமாகிறது விஸ்வநாதனின் இசை உலகம்.

அதன்பிறகு அவர் சி.ஆர்.சுப்பராமனிடம் சேர்ந்ததும் சிஆர்எஸ் திடீரென்று மரணமடைந்துவிட அவரால் முடிக்கப்படாமல் இருந்த மூன்று திரைப்படங்களை விஸ்வநாதனும் அதே குழுவில் வயலினிஸ்டாக இருந்த ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்ததும் அதைப் பார்த்த கலைவாணர் என்எஸ்கே அவர்கள் இருவரையும் ஒன்றிணைத்து “நீங்கள் இருவரும் சேர்ந்து இந்தியில் சங்கர் ஜெய்கிஷன் மாதிரி இங்கே ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ இரட்டையர்களாக இருந்து பணியாற்றுங்கள்” என்று சொல்லி அவரது ‘பணம்’ படத்திற்கு முதன்முதலாக இவர்களை அறிமுகப்படுத்தியதும் வரலாறு.

உண்மையில் வரலாறு என்பது இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

இப்படி ஆரம்பமான வரலாறு சாதாரண வரலாறு அல்ல. தமிழ் சினிமாவிற்கு 1952-ம் ஆண்டு என்பது ‘பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய’ என்றெல்லாம் சொல்வார்களே அப்படிப்பட்டதொரு ஆண்டுதான்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜிகணேசன் என்ற மாபெரும் கலைஞன் இந்த ஆண்டில்தான் திரைத்துறைக்கு வருகிறார்.

அதற்கு முன்பே எழுத ஆரம்பித்துவிட்டாலும் கலைஞர் கருணாநிதி என்ற திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போட்ட வசனகர்த்தா, பராசக்தி படத்தில் சிவாஜிக்கான வசனங்களை எழுதுகிறார்.

ஒரு வசனகர்த்தாவாக சில படங்களிலும் கவிஞராக ஒன்றிரண்டு பாடல்களைச் சில படங்களிலும் எழுதிவந்த கவிஞர் கண்ணதாசன் முழுப் படத்திற்கும் பாடலாசிரியராக அறிமுகமானதும் இந்த 1952ல்தான். அதுவும் இவர்கள் இசையமைத்த பணம் படத்தில்தான்.

பணம் படத்தில் மொத்தம் பனிரெண்டு பாடல்கள். அவற்றில் ‘பசி என்று வந்தால்’ என்ற பாடலை மட்டும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுத மீதி பதினோரு பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.

அந்தப் பாடல்களில்குடும்பத்தின் விளக்கு நல்ல குடும்பத்தின் விளக்கு’ என்று எம்எல்வி பாடிய பாடலும், ‘எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்” என்ற கலைவாணர் பாணிப் பாடலும் அந்தக் காலத்திலேயே சூப்பர் ஹிட். இன்னும் இரண்டு பாடல்களும் பிரபலம்.

‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன்’ என்று தமிழ்நாட்டின் அடுத்த ஏழேழு ஜென்மங்களுக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்களை இயற்றும் கூட்டணி 52ம் ஆண்டே ஏற்பட்டுவிட்ட போதிலும் ஏற்கெனவே இருக்கும் ஜாம்பவான்களுடன் ஈடுகொடுக்கும் காரியத்தைத்தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியால் செய்துவர முடிந்தது.

அவர்களின் சண்டிராணி, மருமகள், ஜெனோவா, சொர்க்கவாசல், சுகம்எங்கே, காவேரி என்ற படங்களிலெல்லாம் ஓரிரு பாடல்களை மட்டும்தான் பிரபலமான பாடல்களாக உருமாற்ற முடிந்தது. குலேபகாவலியில் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ’ பாடல் கேவிமகாதேவனுடையது. தயாரிப்பாளரின் நிர்ப்பந்தத்தால் அந்தப் பாடலை இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட கேவிஎம்மும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். 

ஆனாலும் இந்தப் படத்தில் ஜமுனா ராணி பாடிய ‘ஆசையும் என் நேசமும்’ பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல்களில் ஒன்று.

1957ல் பிஎஸ்ரங்காவின் பக்த மார்க்கண்டேயா புராணப்படத்திற்கு பதினைந்து பாடல்களை அமைக்கிறார்கள். அத்தனையும் சுத்தமான கர்நாடக மெட்டில் அமைந்த பாடல்கள்.

அதே ஆண்டில் சிவாஜி பத்மினி நடித்து வருகின்ற புதையல் படம்தான் பளீரென்று இவர்கள் மீது வெளிச்சத்தை வாரி இறைக்கிறது.

பால்மணம் மாறாத முகத்துடனும் சின்ன வயதுத் துள்ளல்களுடனும் சிவாஜியும், கொள்ளை அழகுடனிருக்கும் பத்மினியும் கடற்கரையில் துள்ளிக்குதித்து ஓடிப் பாடும் பாடல் ஆத்மநாதன் எழுதி சிதம்பரம் ஜெயராமன் பி.சுசீலா பாடும் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ தமிழ் நல்லுலகெங்கும் பட்டையைக் கிளப்புகிறது.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தின் ‘சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி’ என்ற பாடலும், ‘தங்கமோகனத் தாமரையே’ என்று சுசீலாவின் இன்னொரு பாடலும் ஒருபுறம் பிரபலமாக, சந்திரபாபுவின் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ பாடலும் ‘ஹல்லோ மைடியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி’ பாடலும் ஹிட்டடிக்கின்றன.

அடுத்து கண்ணதாசன் வசனத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்துகிற படம் எம்ஜிஆர் நடித்த மகாதேவி. தஞ்சை ராமையா தாஸ், மருதகாசி, பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் ஆகிய பெரிய கவிஞர்கள் எழுதியிருந்தபோதிலும் கண்ணதாசனின் ‘சிங்காரப் புன்னகைக் கண்ணாரக் கண்டாலே சங்கீதவீணையும் ஏதுக்கம்மா?’, ஏ.எம்.ராஜா-பி.சுசீலாவின் ‘கண்மூடும் வேளையிலும் கலை என்னக் கலையே’, டி.எஸ்.பகவதியின் ‘மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு’ மூன்று பாடல்களும் பெரிய அளவில் பிரபலமாகின்றன.

இதற்கு அடுத்த வருடம்தான் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ‘பொற்கால ஆண்டு துவங்குவதற்கான’ கால்கோள் போடப்பட்ட ஆண்டாகச் சொல்லவேண்டும். ஆமாம் 1958 ல்தான் பிற்காலத்தில் பாவன்னா வரிசைப் படங்களின் மூலம் யாராலும் விஞ்சமுடியாத பாடல்களைத் தந்த பீம்சிங்குடன் முதன்முதலாக இணைகிறார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. அதற்கான முதல் படம் பதிபக்தி. சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சந்திரபாபு நடித்த இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்தப் படத்தில் வீடுநோக்கி ஓடிவந்த நம்மையே, இரைபோடும் மனிதருக்கே, ராக்ராக்ராக் ராக்அண்ட் ரோல், வீடுநோக்கி ஓடிவந்த என்னையே(சோகம்) இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம், கொக்கர கொக்கரக்கோ சேவலே, சின்னஞ்சிறு கண்மலர் என்று ஏழு எட்டுப் பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.
                                        

இந்தப் படத்திலிருந்து அவர்களுக்கு ஏதோ ஒரு சூட்சுமம் கிடைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதே ஆண்டில் வெளிவந்த ‘மாலை இட்ட மங்கை’ விஸ்வநாதன் ராமமூர்த்தியை மட்டுமல்ல, கண்ணதாசனையும் கோபுர உயரத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. தயாரிப்பு, வசனம், பாடல்கள் என்று களமிறங்குகிறார் கவிஞர். டி.ஆர்.மகாலிங்கத்தின் உச்ச ஸ்தாயிக் குரலில் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே, திங்கள் முடி சூடும் மலை, செந்தமிழ்த் தேன்மொழியாள்’ மூன்று பாடல்களும் தமிழ்நாட்டைக் கலங்கடிக்கின்றன. அது திமுக வளர்ச்சிப் பாதையில் இருந்த காலகட்டம். நாடெங்கும் வீடெங்கும், தெருவெங்கும் திமுக பற்றிய பேச்சும் தாக்கமும் இருந்த காலகட்டம்.

தமிழ், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என்று தமிழர்கள் மத்தியில் உணர்வுகள் முளைத்தெழுந்த ஆரம்ப நாட்கள்………….. அந்தச் சமயத்தில் வந்த ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடலும், ‘திங்கள்முடி சூடும் மலை’ ஆகிய பாடல்களும் கட்டி எழுப்பிய உணர்வுகளை சாதாரணமாகச் சொல்லமுடியாது. அந்த எழுச்சிமிக்க கொந்தளிப்பான உணர்வுகளுக்குத் தேன்பூசுவதுபோல் அமைந்த பாடல்தான் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்……………’
இந்தப் பாடல்கள் எல்லாம் ஏதோ சில பாடல்கள் எழுப்பும் உணர்வுகளைப்போல் ‘என்னுடைய காதல் கனவுகளை மீட்டெடுத்தது, நடுவில் வரும் ட்ரம்பெட்டும் கிடாரும் மனோலயத்தில் பதிந்தது, அந்தப் பாடலின் இசை என்னை எங்கோ கூட்டிச்சென்றது’ என்று யாருக்குமே தோன்றாமல் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் எழும்பும் சோலோ உணர்வல்ல.

மொத்தத் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டுப் புரட்டியெடுத்த பாடல்கள் இவை.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

கண்ணதாசன் என்ற ஒரு கவிஞர் தமிழ்நாட்டின் ஏனைய பெரிய பிரபலங்களுக்கு நிகராக உருவெடுக்கிறார்.

நாடு பூராவும் அவரை அழைத்துக் கூட்டங்கள் போடுகிறார்கள். திமுகவின் அரசியல் கூட்டங்களை மட்டும் இங்கே சொல்லவில்லை. தமிழ்நாடு பூராவிலும் இருக்கும் கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை அழைக்கின்றன. நாடு பூராவிலும் படிப்பகங்களும், இலக்கியக்கூட்டங்களும் அவரை அழைத்து அவரது கையால் துவங்கப்படுகின்றன.

மிகப்பெரிய நிறுவனங்கள் சார்பாக அவரை அழைத்து தமிழ்ச் சங்கங்களும் தமிழ் அமைப்புக்களும் ஆரம்பிக்கப் பெறுகின்றன. பெங்களூரின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிஐ என்ற இந்தியன் தொலபேசித் தொழிற்சாலைக்கூட அவரை அந்தச் சமயத்தில் அழைத்துத்தான் தங்கள் ‘தமிழ்ச் சங்கத்தை’த் துவக்குகிறது.

அதிகபட்சமாக அவருக்கு அன்றைய நிலையில் இருபத்து மூன்றோ இருபத்து நான்கோ வயதிருக்கலாம். அந்த இளம் வயதில் ஒருவரை அழைத்து தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புக்களும், மாணவர் அமைப்புக்களும் பெரிய நிறுவனங்களின் சார்பில்கூடத் துவங்கும் பணிகள் நடைபெறுகின்றன என்றால் – அதுவும் ஒன்றோ இரண்டோ அல்ல, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் துவகப்படுகின்றன என்றால் அந்தப் பாடல்களின் தாக்கமும் வீச்சும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் அவருக்குப் பிறகு இதுநாள்வரைக்கும் அம்மாதிரியான தாக்கம் எந்த ஒரு கவிஞருக்கும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.

அவருடைய இந்தப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசென்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவர்தாம்.

அந்தப் பாடல்கள் கண்ணதாசனை மக்கள் மத்தியில் கொண்டுசென்றதோடு நின்றுவிடவில்லை. 

அந்தப் பாடலைப் பாடிய டி.ஆர்.மகாலிங்கமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

அன்றைய தினத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற திமுக கூட்டங்களில் தோன்றி மூன்று பாடல்களையும் அவர் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாடினார். திமுக கூட்டங்களுக்கு இந்தப் பாடல்கள் அறிவிக்கப்படாத கொள்கை முழக்கப் பாடல்கள்போல் ஆயிற்று. இந்தப் பாடல்களைப் போட்டுத்தான் திமுக பொதுக்கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

                                     

திங்கள்முடி சூடும்மலை பாடலும், எங்கள் திராவிடப் பொன்னாடே பாடலும் தமிழ்நாட்டின் சிறப்புகளை மட்டும் எடுத்தியம்பும் கொள்கைப் பாடல்களாக இருப்பதாகக் கருதிய இலங்கை வானொலியும் நம் நாட்டு ஆகாசவாணியும் இரண்டு பாடல்களுக்கும் தடை விதித்தன. ஆனாலும் என்ன? மக்கள் மத்தியில் பரவிவிட்ட இரு பாடல்களையும் எந்த சக்தியாலும் தடுக்கமுடியவில்லை.

இந்த நிலைமை கண்ணதாசன் திமுகவில் இருக்கும்வரைக்கும் தொடர்ந்தது. அவரது விலகலைத் தொடர்ந்து முதல் இரு பாடல்களும் பரவலாக ஒலி பரப்புவது தடைபெற்றதே தவிர செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் ரசிக்கத் தகுந்த பொதுப் பாடல்கள் வரிசையில் சேர்க்கப்பட்டு இன்று வரைக்கும் எல்லாராலும் விரும்பப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் இத்தனை விரிவாகச் சொல்லுவதற்குக் காரணம், ஏதோ சில பாடல்கள் ஏதோ காரணங்களால் சிலரால் விரும்பப்பட்டு அவர்களால் திரும்பத் திரும்ப டேப்பிலோ ஐபாடிலோ நிரப்பப்பட்டு திரும்பத் திரும்ப ‘அவர்களால் கேட்கப்படுவதால் ‘மட்டுமே’ மிகச்சிறந்த பாடல் என்ற அபிப்ராயத்துக்கு அவர்கள் தாமாகவே வந்து அதனையே கிளிப்பிள்ளைபோல் பொதுத் தளங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பெரிய தாக்கம் என்பது இம்மாதிரியான தாக்கங்கள்தாம். இம்மாதிரியான தாக்கங்கள் ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் நிகழலாம் இம்மாதிரித் தாக்கத்தைச் செய்த இன்னொரு பாடலாக எம்ஜிஆர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது தெருவெல்லாம் முழங்கிய ‘இறைவா உன் காலடியில்’ என்ற வாலி எழுதிய பாடலைத்தான் சொல்லமுடியும். 

ஆனால் இதன் தாத்பர்யம் வேறு மாதிரியானது. எப்படி இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் ஒரு பெரிய  தாக்கத்தை உருவாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலும் எம்எஸ்வியால் இசையமைக்கப்பட்டதுதான் என்பதையும் இங்கு சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.

“பதிபக்தி”யில் ஆரம்பிக்கப்பட்ட விஸ்வநாதன் ராமமூர்த்தி பயணம் எப்படி வெற்றிமேல் வெற்றியை மட்டுமே தந்துகொண்டிருந்ததோ அதுபோலவே “மாலையிட்ட மங்கை”யில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணதாசனின் பயணமும் அவரை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டுசென்று கொண்டே இருந்தது. “மாலைஇட்ட மங்கை”யில் மொத்தம் பதினேழு பாடல்கள்.

எடுத்த எடுப்பிலேயே ஏழரைக் கட்டையில் பாடத்துவங்கும் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து மிகமிக கீழ் ஸ்தாயியில் பாடுவதுபோல் ஒரு பாடல் ‘நானன்றி யார் வருவார்?’ என்ற பாடலைக் கம்போஸ் பண்ணிப் பாடவைக்கிறார்கள் வி.ரா குழுவினர். அந்தச் சமயம் ரிகார்டிங் தியேட்டர் பக்கம் வந்த இசையமைப்பாள ஜாம்பவான் ஜி.ராமனாதன் இந்தப் பாடலைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டாராம். 

“என்ன இந்தப் பசங்களுக்கு புத்தி பேதலித்துப் போய்விட்டதா? டி.ஆர்.மகாலிங்கம் தொண்டை எப்பேர்ப்பட்ட தொண்டை? எடுத்த எடுப்பிலேயே ஏழரைக் கட்டையில் சீறிப்பாயும் தொண்டை அது. 

அவரைப் போய் கீழ் ஸ்தாயியில் பாட வைத்து சோதனை செய்திருக்கிறார்களே………… இவர்களும் கவிழ்ந்து மகாலிங்கத்தையும் ஒன்றுமில்லாமல் செய்யப்போகிறார்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.

ஆனால் முடிவு வேறுமாதியாய் வந்தது. டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘நான் அன்றி யார்வருவார்’ பாடலும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலுக்கு இணையாக ஹிட் அடித்தது. இந்தப் பாடலின் வெற்றியைப் பார்த்த ஜி.ராமனாதன் “அடே இவங்க ரொம்பப் பெரிய ஆளா இருக்காங்கப்பா” என்று வி.ரா ஜோடியைப் பார்த்து வியந்தாராம். இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய ‘இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார்’ பாடலும் செம பிரசித்தமாயிற்று. எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ‘மழைகூட ஒருநாளில் தேனாகலாம்’ பாடல் கண்ணதாசனின் பிரபல தாலாட்டுப் பாடல்களுக்குக் கட்டியம்கூறிய பாடலாக விளங்கிற்று.

அடுத்த படம் ‘அமுதவல்லி’. இதிலும் டி.ஆர்.மகாலிங்கத்தின் ராஜ்ஜியம்தான். அவரது புகழ்பெற்ற பாடலான ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ இந்தப் படத்தில்தான். அதற்கடுத்து மறுபடியும் கண்ணதாசன் புரொடக்ஷனில் ‘சிவகங்கைச் சீமை’. சீமைக்கு அடுத்த படம் ‘தங்கப் பதுமை’. அதற்கடுத்து எஸ்எஸ்ஆரின் ‘தலைகொடுத்தான் தம்பி’ – இந்தப் படத்திற்கு அடுத்து வந்த படம்தான் ‘பாகப்பிரிவினை’. மறுபடியும் சிவாஜி மற்றும் பீம்சிங்.

மிகப் புகழ் பெற்ற ‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்’ பாடலும், ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ பாடலும் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’ பாடலும் இந்தப் படத்தில்தான். ‘தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து’ பாடலும் இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்திற்குப் பல்வேறு சிறப்புக்கள் உண்டு. இந்தப் படத்தின் சிவாஜிகணேசன் நடிப்பைப் பார்த்துத்தான் ‘பதினாறுவயதினிலே’ கமல் சப்பாணி வேடத்தில் நடித்தார் என்று சொல்வார்கள். மிகக் குறைந்த மூன்றே மூன்று இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலை வி.ரா போட்டார்கள் என்று சொல்வார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதிய கடைசிப் படம் இதுதான். ‘பிள்ளையாரு கோவிலுக்குப்’ பாடலும், ‘ஆட்டம் ஆட்டம் ஆட்டம்’ பாடலும் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டவை. கண்ணதாசன் பற்றியும் ஒரு சிறப்பான தகவல் உண்டு.

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான (இவருக்குப் பின்னர் நாட்டுப்புறப் பாடல்களைச் சிறப்பாக எழுதிய கவிஞர் யாருமில்லை) கவிமணி என்ற கொத்தமங்கலம் சுப்பு – அதுதான் தில்லானா மோகனாம்பாள் எழுதியவர் – அந்தக் காலத்தில் எஸ்எஸ்வாசன் குழுவினரில் ஒருவராக இருந்தவர். ‘ஔவையார்’ படத்தின் சிறப்புக்கு எஸ்எஸ்வாசனை விடவும், கொத்தமங்கலம் சுப்புவே பெரிதும் காரணம் என்று புகழப்பட்டவர். ஜெமினியின் கதை இலாகாவுக்குத் தலைவரும் இவர்தான். அவர், தாம்சிறப்பாகப் பணியாற்றிய ‘ஔவையார்’ படத்தில் ஒரேயொரு காட்சியில் கவிஞராகவே வருவாராம். புலவர் பெருமக்கள் ஒரு குழுவாக நடந்துவரும் ஒரு காட்சி படத்தில் உண்டாம். படம் பார்த்த தமிழறிஞர்கள் சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்திருக்கிறார்கள். ஔவையார் படைப்புக் குறித்துச் சிலாகித்தவர்கள் “அந்தப் படத்தின் ஒரு காட்சியில் நீங்கள் ‘கவிஞராக’ நடந்து வருகிறீர்கள் பாருங்கள். அது அபாரம். ஒரு கவிஞனின் ‘ராஜநடை’ என்பது அதுதான். உங்கள் நடையில்தான் ஒரு கவிஞனுக்குரிய கம்பீர நடையைக் கண்டோம்” என்றார்களாம்.

அதற்கு கொத்தமங்கலம் சுப்பு சொன்னாராம் “ஐயா ஔவையார் படத்தில் நான் நடந்து வருவது ஒரு சாதாரண நடைதான். ஒரு கவிஞனின் ‘கம்பீர நடையை’ நீங்கள் பார்க்கவேண்டும்  என்றால் பாகப்பிரிவினை படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து’ என்று என்று ஒரு பாட்டு வரும். நம்ம கவிஞர் கண்ணதாசன் ‘பாட்டாலேயே ஒரு நடை’ போட்டிருப்பார் பாருங்கள். ஒரு கவிஞனின் ‘ராஜநடை’ என்பதும் அதுதான். ‘கம்பீர நடை’ என்பதும் அதுதான்” என்றாராம்.

1960-ம் ஆண்டு ‘ஆளுக்கொரு வீடு’ படத்துடன் வெற்றி தொடங்குகிறது விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு. சிலோன் வானொலியில் அந்த நாட்களில் பட்டுக்கோட்டையாரின் பாடலான ‘அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா’ பாடல் ஒலிக்காத நாளே இல்லை. சுருதி சுத்தமான டூயட் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குக் கண்களை மூடிக்கொண்டு இப்பாடலை ஒரு இலக்கணமாகச் சொல்லலாம். பிபிஸ்ரீனிவாசும் பி.சுசீலாவும் மயிலிறகால் காதுகளையும் நெஞ்சத்தையும் தடவிக்கொடுக்கும் பாடல் இது. ‘செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்’ அந்தப் படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல்.

மறுபடியும் கண்ணதாசன் புரொடக்ஷனில் ‘கவலை இல்லாத மனிதன்’ சந்திரபாபுவைக் கதாநாயகனாகக் கொண்டு வருகிறது. மொத்தம் எட்டுப் பாடல்கள். எட்டுப் பாடல்களிலும் பிரித்துப்போட்டு விளையாடியிருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். சந்திரபாபு பாடிய மிகவும் புகழ்பெற்ற பாடலான ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்’ இந்தப் படத்தில்தான். கண்ணதாசன் தத்துவப் பாடல்களில் முக்கியமான இடம்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ‘கவலையில்லாத மனிதன்’ பாடலையும் சந்திரபாபு பாடியிருப்பார். ‘நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா?’ டி.ஆர்.மகாலிங்கத்தின் மற்றொரு புகழ்பெற்ற பாடல். பெண்களின் குரல்களில் ‘சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்’ பாடலை பி.சுசீலாவும், ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ மற்றும் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடல்களை ஜமுனா ராணியும், ‘கண்கொடுத்தது போலே’ பாடலை டிஎம்எஸ்ஸும் ஜிக்கியும் பாடியிருப்பார்கள். ‘கண்ணோடு விண்பேசும் ஜாடை’ என்றொரு கூட்டிசைப் பாடலும் உண்டு.

அடுத்து வந்தது ‘மன்னாதி மன்னன்’. எம்ஜிஆருக்கு உயர்வையும் ஏற்றத்தையும் தந்த படங்களில் இதுவும் ஒன்று. கதை வசனம் கண்ணதாசன். ‘அச்சம் என்பது மடமையடா’ இந்தப் படத்தில்தான். தாறுமாறாக ஹிட் அடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெளிநாடுகளில் மட்டுமே டேப் ரிகார்டர் வந்திருந்து இந்தியாவுக்குப் பரவலாக வருவதற்கு முன்பு எம்ஜிஆர் சிவாஜி போன்று வெகு சிலரே டேப்ரிகார்டரெல்லாம் வாங்கிவைத்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் டேப்பில் இந்தப் பாடலைத்தான் முதன்முதலாகப் பதித்துக்கொண்டாராம் எம்ஜிஆர். பின்னர் அவர் முதலமைச்சரான பிற்பாடும் கோட்டைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போதெல்லாம் இந்தப் பாடலைத்தான் காரில் ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டே வருவாராம். கண்ணதாசன் அஞ்சலிக்கூட்டத்தில் எம்ஜிஆரே இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல “என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளும் பிரச்சினைகளும் வந்தபோதெல்லாம் நான் என்னைத் ‘தயார்ப்படுத்திக்கொள்ள’ இந்தப் பாடலைத்தான் போட்டுக் கேட்பேன்” என்று சொன்னதுடன் “அந்தப் பாடலை இதோ இப்போது நீங்களும் கேளுங்கள்” என்று சொல்லி அந்த மேடையிலேயே அச்சம் என்பது மடமையடா பாடலை இசைக்கவும் செய்தார் எம்ஜிஆர்.

எம்எல்வசந்தகுமாரி, டிஎம்எஸ் டூயட்டாக வந்து இன்றளவும் கர்நாடக இசை ரசிகர்களால் விரும்பப்படும் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும்’ என்ற அழகிய மெட்டைக்கொண்ட மருதகாசியின் பாடல். ‘கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ என்று பி.சுசீலாவும் டிஎம்எஸ்ஸும், ‘நீயோ நானோ யார் நிலவே’ என்ற பி.சுசீலா, ஜமுனாராணி, பிபிஸ்ரீனிவாஸ் பாடும் புகழ்பெற்ற பாடல்களும் உண்டு. ‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ’ என்ற பி.சுசீலாவின் பாடலை சென்னை வானொலி தனது நேயர் விருப்பத்தில் பல வருடங்களுக்கு – ஆமாம் பல வருடங்களுக்குத்- தொடர்ச்சியாக ஒரு வாரம்கூடத் தவறாமல் ஒலிபரப்பிற்று.

இதுவரையில் இன்னொரு பாடல் இந்த அளவுக்கு சென்னை வானொலியால் ஒலிபரப்பப் பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. 

இந்தப் படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள்.1961-ம் ஆண்டில் வந்த ‘பாக்கியலட்சுமி’ படம் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வழித்தடங்கள் எப்படியிருக்கப்போகின்றன என்பதை பட்டவர்த்தனமாக அறிவித்த படம். நாராயணன் கம்பெனி சார்பில் கே.வி.சீனிவாசன் கதைவசனம் இயக்கத்தில் வந்த படம் இது. விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைப் பதித்த படங்களில் இதுவும் ஒன்று. மொத்தம் பதினோரு பாடல்கள். கிட்டத்தட்ட ஒன்பது பாடல்கள் சூப்பர் ஹிட். மற்ற இரு பாடல்கள் கர்நாடக சங்கீத ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற பாடல்கள். பாபநாசம் சிவனின் இரண்டு பாடல்களும் இந்தப் படத்தில் உண்டு..

பி.சுசீலாவின் புகழ் மகுடத்தில் எந்நாளும் அமர்ந்திருக்கும் ஐந்து பாடல்கள் இந்தப் படத்தில். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘காணவந்த காட்சிஎன்ன வெள்ளி நிலவே’, ‘காதலெனும் வடிவம் கண்டேன்’, ‘கண்ணே ராஜா கவலை வேண்டாம்’, ‘அம்மா அம்மா கவலை வேண்டாம்’ என்று ஐந்து பாடல்கள். ஐந்தும் ஐந்து தேன் ஆறுகள்.

சிங்காரச் சோலையே உல்லாச வேளையே’, ‘காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ’, ‘பார்த்தீரா ஐயா பார்த்தீரா’ என்ற மூன்று பாடல்களையும் ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரை வைத்துப் பின்னியிருப்பார்கள்.

‘வரலட்சுமி வருவாயம்மா’ ராதா ஜெயலட்சுமி பாடிய இந்தப் பாடல் கர்நாடக சங்கீத ரசிகர்களின் சொத்து. இன்றைக்கும் வரலட்சுமி விரதம் கொண்டாடும் வீடுகளில் இந்தப் பாடலுக்கு நிரந்தர இடம்.

இந்தப் படத்தில் வரும் ‘காணவந்த காட்சியென்ன வெள்ளிநிலவே’ பாடலைத் தனியாகக் குறிப்பிட வேண்டும்.

திரைப்படத்தில் பாடல்களும் அதற்கேற்ப காட்சிகளும் அமைக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் கதை, அதற்கேற்ப காட்சி, அந்தக் காட்சிக்கேற்ற பாடல் இவை அத்தனையையும் ஒருங்கிணைக்கும் இசை என்று எல்லாமே ஒரு புள்ளியில் அமைவது மிகச் சில படங்களிலும் மிகச்சில பாடல்களிலும் மட்டுமே சாத்தியம். படத்தின் இயக்குநர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அத்தனைப் பேரின் திறமையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் இது.
இந்த அபூர்வ இடம் அவ்வளவு சுலபத்தில் படங்களில் அமைந்துவிடாது. பிற்காலத்தில் அப்படி அமைந்த பாடலாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த ‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ பாடலைச் சொல்லுவார்கள். ‘பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் மூன்றுபேரும் ஒரே இடத்தில் கைகுலுக்கிக்கொண்ட இடம் இது’ என்று புகழ்ந்து எழுதியிருந்தது குமுதம்.

சிவாஜி நடித்த ‘குலமகள் ராதை’ படத்தில் ஒரு காட்சி வரும். அந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் சந்திரன். அவர் சர்க்கஸ் கலைஞராக வருவார். சரோஜாதேவி அவரது முன்னாள் காதலி. காதலியைப் பிரிந்து நாயகன் சென்று விடுவார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் பங்குபெறும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் சரோஜாதேவி வசிக்கும் ஊருக்கு வரும். சர்க்கஸில் தன்னுடைய காதலன் பங்கேற்றிருப்பதை அறிந்து அவரைச் சந்திக்க சர்க்கஸ் கூடாரத்திற்கு வருவார் சரோஜாதேவி. இதற்குள் சர்க்கஸில் பங்குபெறும் இன்னொரு பெண் சிவாஜியைக் காதலிக்க ஆரம்பித்திருப்பார். இந்த நிலையில் அங்குவரும் சரோஜாதேவி அந்தப் பெண்ணைச் சந்தித்து “சந்திரனைப் பார்க்கவேண்டும்” என்பார்.

சந்திரன் பங்கு பெறும் பார் நிகழ்ச்சி அன்று மாலையில்தான் இடம்பெறும். “எனவே நீ மாலை வந்தால் சந்திக்கலாம்” என்பாள் அந்தப் பெண். மாலையில் அங்கே செல்வார் சரோஜாதேவி. பார் விளையாட்டு நடந்துகொண்டிருக்கும். சிவாஜி மேலே பாரில் விளையாடிக்கொண்டிருப்பார். அந்தச் சூழல் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புவார் சரோஜாதேவி. இது காட்சி. இந்தக் காட்சியில் ஒரு பாடல். கவிஞரின் பாடல். இசை கே.வி.மகாதேவன். அகிலன் கதையை இயக்கியிருந்தவர் ஏ.பி.நாகராஜன். பாடல் இப்படித் துவங்குகிறது.

பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடந்தேன் – அவன்
எல்லார்க்கும் தெரியும்படி உயரத்தில் இருந்தான்…………
சந்திரன், இரவு என்ற இரு விஷயங்களை வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார் கண்ணதாசன். 

காட்சி அருமையையும் பாடல் வரிகளையும் இணைத்து ரசித்தனர் இலக்கிய ஆர்வலர்கள்.
இதுபோல பாக்கியலட்சுமியில் ஒரு காட்சி.

ஜெமினிகணேசனுக்கும் சௌகார் ஜானகிக்கும் சிறுவயதில் பால்யவிவாகம் நடைபெறுகிறது. எப்படியோ பிரிந்துவிடுகின்றனர். தனக்குக் குழந்தை வயதில் திருமணமாகி கணவனை இழந்துவிட்டோம் என்ற நினைப்பில் வெள்ளைச் சேலை அணிந்து ஒரு விதவையாகவே வாழ்வைத் தொடர்கிறார் சௌகார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்கிறார் சௌகார் ஜானகி. அந்த வீடு ஜெமினிகணேசனுடையது. ஜெமினி இப்போது வேறொரு பெண்ணான ஈ.வி.சரோஜாவின் கணவர். இந்த விவரம் சௌகாருக்குத் தெரியாது. அந்த வீட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு பழைய புகைப்படம் மூலம் ஜெமினிதான் தன்னுடைய கணவர் என்ற உண்மை தெரியவருகிறது சௌகாருக்கு. அந்தப் பரவசத்தை ஜெமினியிடம் பகிர்ந்துகொள்ள பயங்கர சந்தோஷத்துடன் மாடிக்கு ஓடி வருகிறார் சௌகார் ஜானகி. அங்கே தன்னுடைய முன்னாள் கணவர் ஜெமினியும் தற்போதைய மனைவியும் காதலில் ஈடுபட்டிருக்கும் காட்சிதான் காணக்கிடைக்கிறது.

அதிர்ந்து உறைந்துபோய் அப்படியே அங்கேயே நிற்கிறார் சௌகார். இது காட்சி.

இதனை அந்தப் படத்தின் இயக்குநர் கே.வி. சீனிவாசன் அற்புதமாகச் செதுக்கியிருப்பார். புதிய தகவல் கிடைத்த மகிழ்ச்சியிலும் அதனைத் தன் ‘கணவனிடம்’ பகிர்ந்துகொள்ளப்போகும் பரவசத்திலும் ஒரு சந்தோஷத் துள்ளலுடன் மாடிப் படிகளில் ஏறி ஓடுவருவார் சௌகார். அந்த மாடிப்படிகளில் அவர் ஏறுவதற்கும் அந்த சந்தோஷத்திற்கும் ஏற்ப டொங் டொங் டொங் என்று விறுவிறுவென்று துவங்கும் ஆரம்ப இசை. மாடியின் விளிம்பிற்குச் சென்றதும் பார்த்த காட்சியில் அதிர்ந்து உறைந்துபோய் சௌகார் நிற்பதற்கு ஏற்ப இசையும் சட்டென்று நிற்கும். அங்கே அந்தப் பெண் ஜெமினியிடம் மேலே உள்ள நிலவைக் காட்டிப் பாடுவதாய் பாடல் விரியும் சுசீலா குரலில்.

காணவந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே.
ஓடிவந்த வேகம் என்ன வெள்ளிநிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளிநிலவே….. என்று இடம் பார்த்து இலக்கியம் தீட்டுவார் கண்ணதாசன்.

சௌகாரின் அதிர்ச்சியை, ஈ.வி.சரோஜாவின் ஏகாந்த மகிழ்ச்சியை, ஜெமினியின் அப்பாவித்தனத்தை குழைத்துக் குழைத்துத் தரும் மெல்லிசை மன்னர்களின் இசை.

பாடல் பூராவிலும் படத்தின் காட்சிக்கான கதை விரவிக்கிடக்கும். ‘நினைத்து நினைத்துச் சொல்லவந்த சேதிகள் என்ன? தன் நினைவு மாறி நின்றுவிட்ட வேதனை என்ன? இங்கு விளையாடும் காதலரைக் காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ?' என்று பாடல் வரிகள் அந்தப் பெண் நிலவைப் பார்த்துப் பாடுவதாகவே அமைந்திருக்கும். ஆனால் அத்தனை வரிகளும் சௌகாரை நோக்கி வீசப்படும் சோகவரிகளாக நமக்கு வந்து சேரும். பலவித உணர்வுகளை ஒன்றாய்த் திரட்டி வடித்தெடுத்த மாதிரியான இசை.

அற்புதமாய் சுசீலாவைப் பாடவைத்த திறன். ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சி அமைவதும் அதற்கு இசை பாடல் கதைக்களன் என்று எல்லாமே ஒன்று சேர்ந்து வியக்கும்வண்ணம் அசாத்தியமாக அமைவதும் சாதாரணமாக நிகழ்ந்துவிடுவதில்லை.

இந்தப் பாடல் அந்தக் காலத்திலேயே இதற்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றது. இன்றைக்கும் விஷயம் தெரிந்து அணுகும்போது வியப்பைத் தரும் பாடலாகவும், விஷயம் தெரியாமல் அணுகும்போது மெல்லிசை மன்னர்களின் தேன் சொட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று என்பதாகவும்தான் இந்தப் பாடல் விளங்கிவருகிறது.

இந்தப் படத்தின் பாடல்களில் ஒன்று ‘கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு’ என்ற தாலாட்டுப் பாடல். தாலாட்டுப் பாடல்கள் என்றாலேயே மெல்லிசை மன்னர்களும் கண்ணதாசனும்தான். ஈடு இணையற்ற தாலாட்டுப் பாடல்களாக ஒரு இருபது பாடல்களையாவது இவர்கள் தந்திருப்பார்கள். ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்துவந்த பின்னர் இந்தப் பட்டியலில் விஸ்வநாதன் தமிழின் ஆகச்சிறந்த தாலாட்டுப் பாடல்கள் இவர்களுடையவைதாம். (வாலி எழுதிய ஒரு ஆறேழு தாலாட்டுப் பாடல்களும் சிறப்பானவை.) திரைப்படத்தில் வராத இன்னொரு அபாரமான தாலாட்டுப் பாடலும் உண்டு. அது –

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ -அவன்
வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ……………. என்ற பாடல்.

இந்தப் பாடல் கண்ணதாசனின் ‘கண்ணன் பாடல்கள்’ தொகுப்பில் இருக்கிறது. இசை எம்எஸ்வி. ‘புல்லாங்குழல் இசைக்கும் மூங்கில்களே’ போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இருப்பதும் இத்தொகுப்பில்தான். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் எது? என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால் சந்தேகமில்லாமல் ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடலைச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குச் சிறப்பான பாடல். – 

(தொடரும்)


32 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க இனிக்கிறது ஐயா
தொடருஙகள்
காத்திருக்கிறேன்
நன்றி

காரிகன் said...

அமுதவன் ஸார்,

ஒரே மூச்சில் படித்துவிட்டேன். அடடா ! எத்தனை தகவல்கள்! பிரமாதமான கட்டுரை. இன்னும் நிறைய எழுதிவிட்டு தொடரும் போட்டிருக்கலாம். அத்தனை சுவாரஸ்யமான எழுத்து. வாழ்த்துக்கள்.

இந்த 2;34 ஆம் செகண்டில் ஒரு பேஸ் கிட்டார் உறுமல், இரண்டாவது சரணத்தின் முடிவில் வரும் புல்லாங்குழல் போன்ற சக்கையான இசை ரசனைகள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்ளவும். ஒரு பாடல் ஏற்படுத்தும் தாக்கம் என்பது ஒரு சமூகத்தின் ஆன்மாவை தொடவேண்டும். அச்சம் என்பது மடமையடா, திருடாதே பாப்பா திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, போன்ற பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தந்தையாக, கணவனாக, சகோதரனாக, அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, தோழனாக, தோழியாக எம் எஸ் வி யின் பாடல்கள் நம் தமிழ் சமூகத்தின் உள் வேர்கள் வரை பாச ரத்தம் பாய்ச்சியவை. நமது உணர்வுகளோடு தேனும் பாலுமாக பிணைந்தவை. கொண்டாட்டமா, துக்கமா, தத்துவமா வேடிக்கையா காதலா காதல் தோல்வியா நட்பா எல்லாவற்றிக்கும் எம் எஸ் வி தன் இசையின் மூலம் பதில் சொல்லிவிட்டார். சிலர் காதலை மட்டுமே இசையாக வடித்துவிட்டு இசை என் ஆன்மாவில் இருந்து புறப்படுகிறது. இசை ஒரு மோசடி வித்தை என்று சிரித்துக்கொண்டே சொல்வதைப் பார்க்கையில் அந்தப் பாடல்களைக் கேட்ட நம் மீதே கோபம் வருகிறது.

எந்தப் பாடலைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலுக்கு இணையான மற்றொரு துயர இசை என்னைப் பொறுத்தவரை சொன்னது நீதானா பாடலே. கண்டிப்பாக அடுத்த பகுதியில் இன்னும் பல அற்புதமான கானங்கள் இடம் பெறும். காத்திருக்கிறேன்.

எம் எஸ் விக்கு ஒரு சிறப்பான அஞ்சலி செய்திருக்கிறீர்கள். சொல்வனம் என்ற வலைப்பூவில் சுரேஷ் என்பவரும் மிக அழகாக தெளிவாக எம் எஸ் வி பற்றி தொடர் எழுதிக்கொண்டு வருகிறார்.

பகுதி 2 டோடு முடித்துவிட வேண்டாம். நிறைய வரட்டும்.

Unknown said...

\\‘ஆடாத மனமும் உண்டோ கலை அலங்காரமும் அழகு சிங்காரமும்’\\ இதில் "கலை
அலங்காரமும்" என்பது பாடலில் "நடை அலங்காரமும்"என்று வரும். இந்தப் பாடலை நூற்றுக் கணக்கான முறை கேட்டுப் பாடியதால் படித்தவுடன் டக் என்று ஸ்ட்ரைக் ஆகியது!!

\\அவன் வாய்நிறைய வெண்ணெய் உண்டு மண்டலத்தைக் காட்டியபின் \\ கண்ணன் என்றால் வெண்ணைதான் சாப்பிடுவான் என நினைத்திருப்பீர்கள் போல!! யசோதை அவர் வாயைத் திறக்கச் சொன்னது, "மண்ணைத் தானே தின்றாய், எங்கே வாயைத் திறந்து காட்டு" என்று சோதனை செய்யத்தான்!! அவ்வாறு திறந்து காட்டும் போது அதில் இந்த பிரபஞ்சத்தையே யசோதை காண்கிறாள். இதைத்தான் பாடலில் "அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்" என்று வரும்!!
சூப்பர் பதிவு. இரண்டாம் பாகத்துக்கு ஆவலோடு காத்திருக்கிறோம்!!

Amudhavan said...

கரந்தை ஜெயக்குமார் said...
\\படிக்கப் படிக்க இனிக்கிறது ஐயா தொடருஙகள் காத்திருக்கிறேன் நன்றி\\
தங்களின் வருகைக்கு நன்றி ஜெயக்குமார். வெறுமனே அட்டென்டண்ஸ் போடாமல் ஒரு வார்த்தை விமரிசனம் வைத்திருந்தீர்கள் என்றால் நன்றாக இருந்திருக்கும்.



Amudhavan said...

காரிகன் said...
\\தந்தையாக, கணவனாக, சகோதரனாக, அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, தோழனாக, தோழியாக எம் எஸ் வி யின் பாடல்கள் நம் தமிழ் சமூகத்தின் உள் வேர்கள் வரை பாச ரத்தம் பாய்ச்சியவை. நமது உணர்வுகளோடு தேனும் பாலுமாக பிணைந்தவை. கொண்டாட்டமா, துக்கமா, தத்துவமா வேடிக்கையா காதலா காதல் தோல்வியா நட்பா எல்லாவற்றிக்கும் எம் எஸ் வி தன் இசையின் மூலம் பதில் சொல்லிவிட்டார். சிலர் காதலை மட்டுமே இசையாக வடித்துவிட்டு இசை என் ஆன்மாவில் இருந்து புறப்படுகிறது. இசை ஒரு மோசடி வித்தை என்று சிரித்துக்கொண்டே சொல்வதைப் பார்க்கையில் அந்தப் பாடல்களைக் கேட்ட நம் மீதே கோபம் வருகிறது.\\
உண்மைதான் காரிகன்.. அவருடைய சாதனைகள் என்பவை சாதாரண வரிகளில் சொல்லிச்செல்லும் ஒன்றல்ல என்பதுதான் மொத்தமும் எழுதி முடித்தபின் தோன்றியது. அவரைப் பற்றியும், 'அவர்களின்' இசை பற்றியும் எழுத ஒரு பதிவு போதாது என்பதும் புரிந்ததே. நின்று நிதானமாக ஒரு நூலே எழுதலாம்.ஆனாலும் என்ன செய்வது? இரண்டு பகுதிகளுடன் இப்போதைக்கு நிறுத்தியிருக்கிறேன்.



Amudhavan said...

இந்திரா ஜெயதேவ் said...
\\இதில் "கலை அலங்காரமும்" என்பது பாடலில் "நடை அலங்காரமும்"என்று வரும். இந்தப் பாடலை நூற்றுக் கணக்கான முறை கேட்டுப் பாடியதால் படித்தவுடன் டக் என்று ஸ்ட்ரைக் ஆகியது!!\\
\\யசோதை அவர் வாயைத் திறக்கச் சொன்னது, "மண்ணைத் தானே தின்றாய், எங்கே வாயைத் திறந்து காட்டு" என்று சோதனை செய்யத்தான்!! அவ்வாறு திறந்து காட்டும் போது அதில் இந்த பிரபஞ்சத்தையே யசோதை காண்கிறாள். இதைத்தான் பாடலில் "அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்" என்று வரும்!!\\
வாங்க, தங்கள் வருகைக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி. திருத்திவிடுகிறேன்





S.P.SENTHIL KUMAR said...

அருமை அய்யா,
எம்.எஸ்.விஸ்வநாதன் என்றாலே நான் உருகிவிடுவேன். அத்தனை உயர்வான இசை மனிதர். அவரைப்பற்றி தொடர் என்றதும் விடுவேனா. படித்து விட்டேன். எத்தனை எத்தனை நினைவுகள். ஒவ்வொன்றும் எனக்கு புது செய்தி சொன்னது. அதிலும் ஆரம்பகாலத்தில் அவர் பட்டபாடுகள். கொஞ்சம் கொஞ்சமாக திரையில் ஒளிரத்துவங்கியது, என விரிவாக செல்கிறது பதிவு. அதிலும் அன்றைய கலைஞர்கள் எப்படியெல்லாம் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது, மீள முடியாத பிரமிப்பு ஏற்படுகிறது. 'காண வந்த காட்சியென்ன வெள்ளிநிலவே..' பாடலுக்குகான சூழலை சொன்ன போது அந்த பாடலின் தரம் மிக உயரத்துக்கு சென்று விட்டது.
முதல் பகுதியே அபாரமாக இருக்கிறது. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
அபூர்வமான தகவலுக்கு மிக்க நன்றி அய்யா!

S.P.SENTHIL KUMAR said...

தமிழ்மணம் 2

Nagendra Bharathi said...

தகவல் அருமை

நம்பள்கி said...

அமுதவன்:
நிறைய விஷயங்கள் MSV அவர்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள். எனக்கு பிடித்த பல பாட்டுக்களில் இவர் பாட்டு உண்டு. அதற்கு பாட்டு எழுதுபவர்களும் ஒரூ காரணம்! நான் பாட்டில் உள்ள அர்த்தத்தை அவசியம் பார்ப்பேன். எனக்கு பிடித்த பல பாட்டுக்களில் ஒன்று என் தளத்தில் போடுகிறேன்---உங்களுக்காக!

Anonymous said...

காரிகன்,
அமுதவனின் பதவினை படித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் புதிதாக ஒன்றும் தகவல்கள் இல்லாமல் பழைய பஞ்சாகமாய்தான் உள்ளது. எல்லோருக்கும் தெரிந்த விசயங்கள் தான். அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். பகுதி 2 டோடு முடியட்டும் இந்த தொடர்.

Amudhavan said...

S.P. Senthil Kumar said..

\\எம்.எஸ்.விஸ்வநாதன் என்றாலே நான் உருகிவிடுவேன். அத்தனை உயர்வான இசை மனிதர். அவரைப்பற்றி தொடர் என்றதும் விடுவேனா. படித்து விட்டேன். எத்தனை எத்தனை நினைவுகள். ஒவ்வொன்றும் எனக்கு புது செய்தி சொன்னது. அதிலும் ஆரம்பகாலத்தில் அவர் பட்டபாடுகள். கொஞ்சம் கொஞ்சமாக திரையில் ஒளிரத்துவங்கியது, என விரிவாக செல்கிறது பதிவு. அதிலும் அன்றைய கலைஞர்கள் எப்படியெல்லாம் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது, மீள முடியாத பிரமிப்பு ஏற்படுகிறது. 'காண வந்த காட்சியென்ன வெள்ளிநிலவே..' பாடலுக்குகான சூழலை சொன்ன போது அந்த பாடலின் தரம் மிக உயரத்துக்கு சென்று விட்டது.\\

வாருங்கள் செந்தில்குமார். தங்களின் ரசனையான விமரிசனம் மிகுந்த மகிழ்வைத் தந்தது. இதுபோல் அவர்கள் இசையமைத்த சூழல்கள் நிறைய இருக்கின்றன. அவ்வப்போது அசைபோடுவோம்.



Amudhavan said...

Nagendra Bharathi said...........

\\தகவல் அருமை.\\
வாருங்கள் நாகேந்திர பாரதி, தங்களின் பாராட்டிற்கு நன்றி.

Amudhavan said...

நம்பள்கி said...........
\\நிறைய விஷயங்கள் MSV அவர்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள். எனக்கு பிடித்த பல பாட்டுக்களில் இவர் பாட்டு உண்டு. அதற்கு பாட்டு எழுதுபவர்களும் ஒரூ காரணம்! நான் பாட்டில் உள்ள அர்த்தத்தை அவசியம் பார்ப்பேன். எனக்கு பிடித்த பல பாட்டுக்களில் ஒன்று என் தளத்தில் போடுகிறேன்---உங்களுக்காக!\\

சமீபத்தில் ஏதோ ஒரு சேனலில் ரத்தக்கண்ணீர் வந்திருந்தது. அந்தப் படத்தை முன்பு எப்போதோ பார்த்திருந்தாலும் நீங்கள் ஒருமுறை மிகவும் சிலாகித்து எழுதியிருந்ததனால் மறுபடியும் உங்களுக்காக பார்த்தேன்.
எம்எஸ்வி பற்றி நீங்கள் பகிரப்போகும் பாடலுக்கு முன்கூட்டியே நன்றி.


Amudhavan said...

ANONYMOUS Said.....
\\அமுதவனின் பதவினை படித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் புதிதாக ஒன்றும் தகவல்கள் இல்லாமல் பழைய பஞ்சாகமாய்தான் உள்ளது. எல்லோருக்கும் தெரிந்த விசயங்கள் தான். அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். பகுதி 2 டோடு முடியட்டும் இந்த தொடர்\\

அடாடா முகம் காட்டிக்கொள்ள விரும்பாத நண்பரே, வாருங்கள். நானும் உங்களைப் போன்ற மகா மகா அறிவுஜீவிகளுக்காகத்தான் காத்திருக்கிறேன். நமக்குத் தெரிந்தது பழைய பஞ்சாங்கம்தான். உங்களைப் போன்ற அறிவுச்சுடர்களுக்குத்தான் இதுவரை யாருக்குமே தெரிந்திராத தகவல்கள் எல்லாம் தெரிவதற்கு சாத்தியம். என்னுடைய அடுத்த பதிவு அடுத்த வாரம் வருவதற்குள் உங்களுடைய அறிவுபூர்வமான பதிவை எழுதிவிட்டு அதற்கு லிங்க்கையும் கொடுங்கள். எம்எஸ்வி பற்றியெல்லாம் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றிருக்கும் என்னைப் போன்ற பல ரசிகர்களை உய்வித்தவர் ஆவீர்கள்.
ஆனால் அதென்ன முதல்வரியில் 'நன்றாகத்தான் இருந்தது' என்றொரு சொல்லை எழுதிவிட்டு கடைசிவரியில் 'பகுதி 2டோடு முடியட்டும் இந்தத் தொடர்' என்று விட்டேற்றியாய் எழுதியிருக்கிறீர்களே....... உங்கள் அருந்தவத் தமிழுக்கு அர்த்தம்தான் புரியமாட்டேனென்கிறது.
பி.கு. எம்எஸ்வி பற்றிய புதிய தகவல்களுடனான உங்கள் பதிவை மறந்துவிடாதீர்கள்.

காரிகன் said...

அனானி,

எதற்காக என்னை விளித்து உங்களின் புத்திசாலித்தனமான கருத்தை எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் எழுத்தில் இயல்பாக வெளிப்படும் தமிழ்த் தகராறு நீங்கள் யாராக இருப்பீர்கள் என்று காட்டிகொடுத்துவிட்டது. உங்களுக்கென்றே சில தளங்கள் உள்ளனவே? அங்கு போய் ஒரு ஓரமாக விளையாடுங்கள்.

Unknown said...

தமிழ்த் திரையுலக இசை வரலாற்றையே தொகுத்து கூறி விட்டீர்கள் ,தொடரக் காத்திருக்கிறேன் !

Amudhavan said...

காரிகன் said.....
\\உங்கள் எழுத்தில் இயல்பாக வெளிப்படும் தமிழ்த்தகராறு நீங்கள் யாராக இருப்பீர்கள் என்று காட்டிகொடுத்துவிட்டது. உங்களுக்கென்றே சில தளங்கள் உள்ளனவே? அங்கு போய் ஒரு ஓரமாக விளையாடுங்கள்.\\

காரிகன் ஆசாமி யார் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டது. எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எம்எஸ்வி பற்றிய புதுப் புதுத் தகவல்களுடன் ஆவி பறக்க ஒரு புத்தம் புதிய பதிவுடன் வரப்போகும் அறிவுஜீவி அவர். அவர் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

Amudhavan said...

Bagawanjee KA said.....
\\தமிழ்த் திரையுலக இசை வரலாற்றையே தொகுத்து கூறி விட்டீர்கள், தொடரக் காத்திருக்கிறேன்\\
நீங்கள் ஜோக்கடிக்காமல் சொன்ன இந்தப் பின்னூட்டம் மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றி.

Umesh Srinivasan said...

மெல்லிசை மன்னர்களைப் பற்றிய அபூர்வத் தகவல்களுக்கு நன்றி. சுசிலாம்மாவின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றான பாக்யலட்சுமி படப்பாடல் போன்றதுதான் பணம் படைத்தவன் படத்தில் டிஎம்எஸ் அவர்களின் கண் போன்ற போக்கிலே பாடல். மேற்கத்திய பாணியில் இன்றும் மிகவும் சிலாகித்துப் பார்க்கும்/கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கூட்டத்திலிருந்து கல்லெறியும் அனானிகளின் பின்னூட்டங்களுக்கும் பொறுமையாகப் பதில் அளிக்கும் உங்கள் முதிர்ச்சி பிடித்திருக்கிறது ஐயா. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.

கலையன்பன் said...

ஒவ்வொரு பாடலையும் அதன் சிறப்புகளையும் மேன்மையுடன் எடுத்துக் கூறி விறுவிறுப்பாக எழுதியிருந்தீர்கள். படிக்க, படிக்க, ஆர்வம்!

Amudhavan said...

Umesh Srinivasan said....
\\ சுதிலாம்மாவின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றான பாக்யலட்சுமி படப்பாடல் போன்றதுதான் பணம் படைத்தவன் படத்தில் டிஎம்எஸ் அவர்களின் கண்போன போக்கிலே பாடல். மேற்கத்திய பாணியில் இன்றும் மிகவும் சிலாகித்துப் பார்க்கும் \ கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று\\
\\அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்\\

உமேஷ் ஸ்ரீனிவாசன் உங்களின் ரசனை அழகானது. அந்தப் பாடலும் இ.ரா கூட்டணியின் அற்புதமான பாடல்களில் ஒன்றுதான்.
அடுத்த பகுதியை இன்னமும் ஒரு வாரத்தில் வெளியிட முயற்சி செய்கிறேன். நன்றி.

Amudhavan said...

கலையன்பன் said.....
\\ ஒவ்வொரு பாடலையும் அதன் சிறப்புகளையும் மேன்மையுடன் எடுத்துக்கூறி விறுவிறுப்பாக எழுதியிருந்தீர்கள். படிக்க, படிக்க, ஆர்வம்\\

நன்றி கலையன்பன். ஆனால் உண்மையில் நிறையப் பாடல்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் வெறும் பாடலை மட்டும் குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடத்தான் முடிகிறது. அத்தனை முக்கியக் குறிப்புகளுக்கும் சிறப்புகளுக்கும் இடமளிப்பவையாக அவை இருக்கின்றன. ஒரு நூல் எழுதும் அளவுக்கு விஷயங்கள் நிறைந்திருப்பதால் கொஞ்சமாகத்தான் சொல்ல முடிந்திருக்கிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எவ்வளவு தகவல்கள்! ஒரு திரை இசை வரலாற்றையே அறிந்தோம்.எம்.எஸ். வி கண்ணதாசன் இருவரின் படிப்படியான வளர்ச்சியை அற்புதமாக தந்திருக்கிறீர்கள் . இன்னும் அறிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\ஒரு திரை இசை வரலாற்றையே அறிந்தோம். எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரின் படிப்படியான வளர்ச்சியை அற்புதமாக தந்திருக்கிறீர்கள். இன்னும் அறிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்\\

வாருங்கள் முரளிதரன். ஒரு தேர்ந்த பாடலாசிரியர் இல்லாமல் திரை இசை வடிவம் கொள்வதில்லை. ஒத்திசைவுடனும் ஒருமுகச் சிந்தனையுடனும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஒன்றும்போதுதான் காலத்தை வென்ற பாடல்கள் கிடைக்கின்றன என்பதுதான் எம்எஸ்வி கண்ணதாசன் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் பாடம். தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

மிக அருமையான பதிவு. நல்ல ஆழமான அலசல்கள். மிகவும் ரசித்துப் படித்தேன். இன்னும் பலப்பல பதிவுகள் எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அனானிமசுக்கு நீங்கள் கொடுத்த பதில் மிகப்பொருத்தம். :)

Amudhavan said...

வாருங்கள் ஜிரா. உங்கள் தளத்திற்கு வந்து நீங்கள் எம்எஸ்வி பற்றி எழுதியிருந்த அருமையான பதிவைப் படித்தேன். 'மற்றவர்களின் இசையை என் உள்ளம் ரசித்தது; உங்கள் இசையை என் உயிர் புசித்தது' என்று நீங்கள் எழுதியிருந்ததில் இருந்து நீங்கள் எம்எஸ்வியை எந்த அளவுக்கு ரசித்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. உங்கள் பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் பிரமாதம். அந்தத் தளத்தில் என்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டேன். ஏனோ தெரியவில்லை. இரண்டுமுறை பதிவிட்டும் பதிவாகவில்லை. விட்டுவிட்டேன்.
சில அனானிகள் முகம் தெரிவிக்காமல் கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து வீசிவிட்டு ஒளிந்துகொள்ளும் கோழை அனானிகள் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள். அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும். 'நீ உருப்படியாக எதையாவது செய்' என்று மறுமொழியிட்டால் உடனே பதுங்கிவிடுவார்கள். அவர்களின் தரம் என்ன என்பதையும் அவர்களிடமுள்ள சரக்கு என்ன என்பதையும் கேள்வி கேட்டாலேயே ஆசாமிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

சார்லஸ் said...

அமுதவன் சார்

நல்லதொரு பதிவு . நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் . அருமையான பாடல்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் . அவைகளில் 90 சதவீத பாடல்களை நான் ரசித்திருக்கிறேன். இன்னும் நீங்கள் சொல்லப் போகும் பாடல்களையும் நான் ரசித்தவனாகத்தான் இருப்பேன்.

எம்.எஸ்.வி அவர்கள் இசையில் ஒரு பல்கலைக்கழகம் . எல்லாவிதமான உணர்வுகளுக்கும் பாடல்கள் அமைத்தவர். நவரசங்களும் அவர் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது . காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களை கொடுத்தவர்.

கண்ணன் பாடல்கள் தொகுப்பைப் போலவே வேளாங்கண்ணி மாதாவை துதிக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தையும் கொடுத்திருக்கிறார். கிறித்தவர்கள் மத்தியில் அந்தப் பாடல்கள் அனைத்தும் பிரபலம் . அதில் ' குழலும் யாழும் குரலினில் தொனிக்க ' என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. எம்.எஸ்.வி குரலில் ' வண்ண வண்ண லீலி மலர் ' என்ற பாடலும் ' அன்பார்ந்த மாந்தரே ' என்ற பாடலும் சுவையானது. அரசியல் கட்சிகளுக்காகவும் பாடல்கள் படைத்திருக்கிறார். அந்தப் பாடல்களையெல்லாம் சிறுவர்களுடன் சேர்ந்து பாடிக் கொண்டு திரிந்தது ஞாபகம் வருகிறது. அந்தப் பாடல்களையும் நீங்கள் குறிப்பிட்டு எழுதலாம்.

Anonymous said...

// பாடல்தான் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்……………’ இந்தப் பாடல்கள் எல்லாம் ஏதோ சில பாடல்கள் எழுப்பும் உணர்வுகளைப்போல் ‘என்னுடைய காதல் கனவுகளை மீட்டெடுத்தது, நடுவில் வரும் ட்ரம்பெட்டும் கிடாரும் மனோலயத்தில் பதிந்தது, அந்தப் பாடலின் இசை என்னை எங்கோ கூட்டிச்சென்றது’ என்று யாருக்குமே தோன்றாமல் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் எழும்பும் சோலோ உணர்வல்ல.///

செந்தமிழ்த் தேன்மொழியாள் is copy from hindhi song

Amudhavan said...

வாருங்கள் சார்லஸ், உங்களுடைய பதிலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேளாங்கண்ணி மாதா பாடல்களை நானும் கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் நாள்தவறாமல் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் அவை. எல்லாமே பிரமாதமாயிருக்கும். அவரைப் பற்றி எழுதுவதில் இது விடுபட்டுவிட்டதே, அது விடுபட்டுவிட்டதே என்பதுபோன்ற தகவல்கள் நிறையவே காணக்கிடைக்கும். அந்த அளவுக்கு ஏராளமானவைகளை ஏராளமான ஆண்டுகளில் செய்திருக்கும் மகோன்னதர் அவர். தங்களுடைய வாழ்த்துக்களுக்கு அன்றி.

Amudhavan said...

ஆஹா அனானி என்னமாதிரியான கண்டுபிடிப்பு உங்களுடையது? இந்தப் பாடலுக்கு வேறு டியூன் போடுவதாகச் சொன்னபோதும் கவிஞரின் வற்புறுத்தலால்தான் அந்த இந்திப் பாடலின் டியூனை மாற்றி அழகுபடுத்திப் போட்டதாகத்தான் அவரே பலமுறை சொல்லியிருக்கிறாரே. இதில் ஏதோ பெரிய தவறைக் கண்டுபிடித்துவிட்டது போலல்லவா இங்கே சொல்லவந்திருக்கிறீர்கள்.................!

தி.தமிழ் இளங்கோ said...

பொதுவாகவே உங்களுடைய பதிவுகள் என்றாலே நின்று நிதானித்து ரசித்து படிப்பேன். அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று நாட்கள் ஓடி, இன்றுதான் படிக்க முடிந்தது.

கவிஞர் கண்ணதாசன் பாடல்களைப் பற்றி சொல்லும்போது, நீங்கள் குறிப்பிட்ட

// அவருடைய இந்தப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசென்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவர்தாம். //

என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. இந்த இசையின் காரணமாகத்தான், அன்றைய மறக்க முடியாத இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பப்பட்டன.

உங்களது இந்த பதிவினைப் படிக்கும்போது, கூடவே நீங்கள் குறிப்பிட்ட திரைப்படக் காட்சிகளும் தடையின்றி மனதில் விரிந்தன.

Post a Comment