Monday, October 12, 2015

மனோரமாவின் இறுதி அஞ்சலி!

                             

நடிகை மனோரமாவின் இறுதி அஞ்சலிக்கூட்டம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் கொடிகட்டிப் பறந்த மிகப்பெரிய நடிகைகளான சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்றோர் இறந்தபோதுகூட இந்த அளவு பிரமாண்டமான அஞ்சலி ஊர்வலங்கள் நடைபெற்றதில்லை. ஏன்? நடிகர் நாகேஷுக்குக்கூட இந்த அளவு பிரமாண்டம் காட்டப்படவில்லை.

இதற்குக் காரணம் இப்போது பெருகிவிட்ட ஊடகங்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் எந்தப் பிரபலம் மண்டையைப் போடுவார் என்று சில சேனல்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமையை இன்று பார்க்கிறோம். முன்பு சன் டிவி மட்டுமே களத்தில் இருந்தபோது இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் அவர்களின் தேர்வு எப்படி என்பதற்குக் காத்திருக்கவேண்டும். சன்டிவிக்கென்று சில கணக்குகள் இருந்தன.

இப்போதைய சேனல்களுக்கு அதெல்லாம் இல்லை.

யாராவது இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும்போதேயே அடியைப் படியைப் போட்டுக்கொண்டு பல செய்திச்சேனல்கள் முந்தி ஓடிப்போய் லைவ் டெலிகாஸ்ட் என்று கடையை விரித்துவிடுகின்றன. பதினைந்து இருபது மணி நேரங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என்று வரும்போது அதற்கேற்ப அந்தப் பிரபலத்துடன் சம்பந்தப்பட்ட ஓரிரு பிரபலங்களைத் தங்கள் தளத்திற்கு வரவழைத்து அவர்களிடம் ‘கடலைப் போடுவதையும்’ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் மனோரமாவிற்கு இத்தகையதொரு பிரமாண்ட இறுதி அஞ்சலி தேவைதானா என்பதைப் பார்க்கும்போது அவரது திறமைக்கு இது நியாயம்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

மனோரமா இறந்த சந்தர்ப்பமும் அப்படிப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த நேரம் என்பதால் இரண்டு கோஷ்டிகளும் தங்களின் கோபம், தாபம், வீராப்பு, ஆக்ரோஷம், சவால்கள், கோர்ட் சம்மன்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு வீடு தொடங்கி மயிலாப்பூர் சுடுகாடுவரை மனோரமாவின் உடலுக்கு அருகே பச்சைத் தண்ணீர்கூடப் பல்லில் படாமல் விடியற்காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை இருந்ததையும் சாவைத் தூக்கிச் சுமந்ததையும் பார்த்தோம்.

சரத்குமார் கோஷ்டியாகட்டும் விஷாலின் கோஷ்டியாகட்டும் உடம்புக்கு அருகில் யார் இடம்பிடிப்பது, இறுதிக்கடனுக்கு வேண்டிய சடங்குகளுக்கு யார் அதிக உதவி செய்வது என்பதில் மிகவும் குறியாக இருந்தார்கள்.

சரத்குமார் கோஷ்டி தங்களின் சாதனைகளாகவும் பிரதாபங்களாகவும் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருந்ததே இதுபோன்ற விஷயங்களைத்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அவர் சாவுக்குக் கூட இருந்தது யார்? இவர் சாவுக்கு உடனடியாய்ப் போய் உடன் இருந்தது யார்?’ என்று சரத்குமார் கோஷ்டி கேட்க,

“சாவுகளுக்குக் கூட இருந்தேன், கூட இருந்தேன் என்று சொல்கிறார்கள். சாவுகளுக்குக் கூட இருப்பது யார்? வெட்டியான்தானே? அப்ப இவங்க என்ன வெட்டியான்களா?’ என்று சிறுபிள்ளைத்தனமாக விஷால் பதில் சொல்லியிருந்தார். (உடனே பக்கத்திலிருந்தவர்கள் ஏதோ சொல்ல “நான் ஒண்ணும் வெட்டியான்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை. சாவுகளைப் புதைப்பது என்பது உத்தமமான பணி என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்லி உடனே மன்னிப்புக் கேட்டார்.) அப்படித் தான் பேசிய அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்தில் தானே ஒரு சாவுக்குத் துணையாகப் பக்கத்தில் நிற்கப்போகிறோம் என்பது பாவம் விஷாலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனோரமாவின் இறுதி அஞ்சலியை சமூக அந்தஸ்து வாய்ந்த ஒரு நிகழ்வாக மாற்றியது அனேகமாக கம்யூனிஸ்டுகளாகத்தான் இருக்கவேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தியது அவர்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரிடமும் மனோரமா நெருங்கிய நட்பு பூண்டிருந்தார் என்பதும், இருவர் உடனேயும் சேர்ந்து நடித்திருக்கிறார் என்ற தகவல்களும் அதற்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இவர்கள் இருவரும் வருவார்கள் அதனால் நாம் போகாவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, முதலில் ஆஜரானது இ. கம்யூனிஸ்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்தான். அவரைத் தொடர்ந்து வீரமணி, திருமாவளவன், தா.பாண்டியன், நல்லகண்ணு, இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், குமரிஅனந்தன் என்று ஆரம்பித்து ஜிகேவாசன் வரைக்கும் வந்து தீர்த்துவிட்டார்கள்.

கலைஞர் உட்பட எல்லாருமே திரண்டிருந்த கூட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வந்து இறுதிமரியாதை செலுத்திவிட்டுப் போய்க்கொண்டிருக்க திடீரென்று மொத்தக்கூட்டத்தையும் காலி செய்து ஈ காக்கை எறும்பு போன்ற ஜந்துக்கள் ஊர்வதற்குக்கூட போலீசார் தடைவிதிக்க ஆரம்பித்ததுமே ஜெயலலிதா வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. 

(மெயின் சாலையிலிருந்து வீடு வரைக்குமான இடத்தைப் பெருக்கிக் கழுவி சுத்தம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் இல்லை) ஜெயலலிதா வந்தார். வருத்தத்துடன் மனோரமா முகத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார். அவர் பின்னால் கம்பீரமாக சசிகலா. முதல்வரின் பேச்சில் எந்தவிதமான பாசாங்குகளோ, செயற்கைத் தன்மையோ அறவே இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மனோரமாவைப் பற்றி இங்கே தனிப்பட்ட அளவில் பதிவு எழுதும் அளவிற்கு நட்போ அனுபவங்களோ இல்லை.

நான்கைந்துமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.

சிவகுமார் நடித்த ‘சிட்டுக்குருவி’ படத்தின் படப்பிடிப்பு மைசூரை அடுத்த தலக்காடு பகுதியில் நடைபெற்றபோது ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகுமாரும் சுமித்ராவும் நடித்துக்கொண்டிருக்க கோவிலுக்கு வெளிப்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி கீழே சப்பணமிட்டு அமர்ந்து அங்கிருந்த செடிகளிலிருந்து பூப்பறித்துக்கொண்டு வந்து அதைச் சிரத்தையுடன் கட்டிக்கொண்டிருந்தார் மனோரமா. பக்கத்தில் எஸ்.என்.லட்சுமி அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவரது கைகள் பாட்டுக்கு அசுரவேகத்தில் பூத்தொடுப்பதிலேயே கவனமாக இருந்தது. . எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எவ்வளவு புகழுக்குரியவர் இப்படி சர்வ சாதாரணமாய்……………….?

இந்தக் காட்சி வித்தியாசமாய் இருக்க நானும் நண்பரும் அருகில் போய் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டோம். அவர் பதறிப்போய் “எதுக்குத் தரையில உட்கார்றீங்க? அதோ பாருங்க சேர்கள் இருக்கே. அதில் உட்காரலாமே” என்றார்.

“நீங்களே தரையில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும்போது நாங்க நாற்காலியில் உட்காரணுமா என்ன?” என்றதற்கு “கோயில் பிரகாரத்துல எதுக்குத்தம்பி சேர்ல உட்காரணும்? இப்படி உட்கார்றதே சௌகரியமா இருக்கு இல்லையா?” என்று சிரித்தார்.

அதன்பிறகு ‘கண்ணாமூச்சி’ என்றொரு படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிருந்தாவனம் தோட்டத்தில் நடைபெற்றது.

அந்தப் படப்பிடிப்பிலும் மனோரமாவைச் சந்திக்க நேர்ந்தது. நினைவு இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகத்துடன் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள முனைந்தபோது “தெரியுமே. நீங்க சிவா தம்பியோட கெஸ்ட் தானே? அதான் எல்லா ஷூட்டிங்கிற்கும் வந்துடுறீங்களே” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார்.

அந்தப் படப்பிடிப்பில் மனோரமாவை வேறொரு கோணத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் படப்பிடிப்பிற்குத் தன் உறவு நபர் ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தார் அவர். அந்த நபருக்குச் சின்ன வயசு. கோட் சூட்டெல்லாம் போட்டு டையெல்லாம் கட்டி ஜம்மென்று வந்திருந்தார். அவரது கோட் சூட்டிற்கும் அவர் செய்த செயல்களுக்கும் தாம் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் இருந்தன அவரது நடவடிக்கைகள்.

சிவகுமாருக்கும் லதாவுக்குமான பாடல் காட்சி சிறிது தூரத்தில் படமாகிக்கொண்டு இருந்தது. வேறொரு புறத்தில் எல்லாரும் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட ஆரம்பித்த சமயத்தில் “எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி எழுந்துகொண்டார் மனோரமாவுடன் வந்திருந்த அந்த நபர்.

எழுந்தவர் பக்கத்திலிருந்த மரத்தின் கிளையிலிருந்து ஒரு நீண்ட கிளையை உடைத்து எடுத்துக்கொண்டார்.

அவ்வளவுதான். 

ஆரம்பித்தது சூரத்தனம்.

சுற்றிலும் அழகழகாய்ப் பூத்துக்குலுங்கிச் செழித்து வளர்ந்திருந்த பூக்களின் தலையைப் பார்த்து ஒரே அடி.

பூக்கள் சிதறித் தெறித்து விழுந்தன. அந்த நபரும் அவருடன் இருந்த அவர் வயதையொத்த ஒரு இளம் நண்பரும் அதனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தனர்.

“டேடேடே என்னடா காரியம் பண்றே?” என்று பதறி எழுந்தார் மனோரமா.

அதட்டி மிரட்டிப் பணிய வைப்பார் என்று பார்த்தால் அவரது செய்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. “வேணாம் ராஜா வேணாம் கண்ணு. அப்படியெல்லாம் செய்யாதேய்யா. வாட்ச்மேன் பார்த்தா திட்டுவாண்டா சாமி. அந்தக் குச்சியை முதல்ல கீழே போட்டுரு” என்று கெஞ்சி மன்றாட ஆரம்பித்தார்.

அந்தப் பையன் எதையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.

அவர் பாட்டுக்குத் தன் செய்கையில் தீவிரமாக இருந்தார். அழகாகப் பூத்திருக்கும் பூக்களையும் இலைகளையும் பார்த்து ஒரே வீச்சு. சடசடவென்று விழுந்துகொண்டிருந்தன பூக்கள். சிறிது நேரத்திற்குள் பிருந்தாவனத்திலிருந்த பல பூக்கள் துவம்சம் ஆகியிருந்தன.

ஏதோ வாள் கொண்டு வீசுவதாகவும், தலைகள் கொய்யப்பட்டு வீழ்வதுபோலவும் அவருக்குள் நினைப்பு இருந்திருக்கவேண்டும். படர்ந்து நீண்டிருந்த பூங்காவில் இவர் ஓடி ஓடிப்போய் பூக்கள் பூத்திருக்கும் இடங்களை எல்லாம் விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார்.

“ஐயா அவம்பாருங்க…….. என்ன செய்யறான்னு? போய்யா நீங்களாச்சும் போய் அவனுக்கு ஏதாவது செய்து அவனை நிறுத்தவையுங்கய்யா. நான் சொன்னால் கேட்க மாட்டான்யா அவன்” என்று எதிரிலிருந்த சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் என்னைப் பார்த்துக் கேட்க நாங்கள் மூவரும் அந்த இளைஞரைத் தேடி ஓடினோம்.

சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் என்னென்னவோ பேசி அந்த நபரின் கவனத்தை திசை திருப்பினார்கள். அதற்குள் தோட்டக்காரனும் பார்த்துவிட்டுக் கத்திக்கொண்டே ஓடிவர சமாதானம் பேசி தோட்டக்காரனை அனுப்பிவைத்தனர் தேங்காயும் சுருளியும்.

இதற்குள் பிருந்தாவனத்துக்குள்ளேயே நீண்ட தூரத்திற்குப் போய்விட்டிருந்தார் அந்த நபர்.

“இதுக்குமேல இவனை நம்மால துரத்த முடியாது. தோட்டக்காரன் பிடிச்சு கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினான்னா சரியாயிரும். விட்ருவோம்” என்று சொல்லிவிட்டார் சுருளி.

அந்தப் பையன் பிறகு கண்காணாத தூரத்திற்குப் போய் மதியம் சாப்பிடுகின்ற நேரத்திற்குத்தான் வந்து சேர்ந்தார்.

அந்தப் படப்பிடிப்பின் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மனோரமாவை மறுபடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்ததில்லை.

இரண்டொரு முறை சில நிகழ்ச்சிகளில் சந்தித்ததுதான். வணக்கம் வைத்தால் சிரித்துக்கொண்டே 
“எப்ப வந்தீங்க தம்பி? நால்லாருக்கீங்களா?” என்று கேட்பார்.

சிவகுமார் சம்பந்தப்பட்ட நூல் ஒன்றிற்காக அவரைச் சந்திக்கவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டபோது “அவர் முன்பைப்போல் நினைவு படுத்திப் பேசும் நிலையில் இல்லை” என்று சொல்லப்பட்டது.

எம்மாதிரியான வேடமாயிருந்தாலும் உடன் நடிப்பவர் யாராக இருந்தாலும், அத்தனைப் பேருக்கும் ஈடு கொடுத்து நடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. ஆனால் அதனை சர்வசாதாரணமாக செய்துவிட்டுப் போயிருக்கும் ஒருவராகத்தான் மனோரமா இருக்கிறார்.

சிவாஜியிலிருந்து தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் எம்ஆர் ராதா என்று பல ஜாம்பவான்களுடன் இணைந்தும் ஈடுகொடுத்தும் நடித்தவர் பின் நாளில் வந்தவர்களான தேங்காய், சுருளிராஜன், கவுண்டமணி ஆரம்பித்து கமல்ஹாசன், ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், சூர்யா, அஜீத், விஜய்,  வடிவேலு என்று இன்றைய விஷால்வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் அம்மாவாகவும், பாட்டியாகவும் அத்தையாகவும் எத்தனை வேடங்கள் உண்டோ அத்தனை வேடங்களிலும் தோன்றி அமர்க்களம் செய்திருக்கிறார்.

நடிப்பு அமர்க்களங்கள் ஒருபுறம் இருக்க, வசன உச்சரிப்பிலும் உச்சம் தொட்டவர் அவர். எந்த மாதிரியான வட்டார பாஷையும் அவருக்குக் கைவந்த கலை. சென்னைத் தமிழை அசால்ட்டாகப் பேசி அமர்க்களம் செய்த ஒரே நடிகை மனோரமாதான்.

‘வா வாத்யாரே வூட்டாண்ட. நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன். ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டைக் கொக்கு’……….. தமிழில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் குத்துப் பாடல். 

அதையும் ஒரு பெண் பாடியிருக்கிறார் என்பதுதான் பாடலில் உள்ள விசேஷம்.

வேடிக்கைக்குச் சொன்னாரோ, மனதில் எந்த கர்நாடக சங்கீதப் பாடகியையாவது வைத்துக்கொண்டு அவருக்கு எதிராகச் சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ பிரபல சங்கீத மேதையான பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் தம்மை மிகவும் கவர்ந்த பாடல் இதுதானென்றும், தன்னை மிகவும் கவர்ந்த பாடகி மனோரமாதான் என்றும் ஒரு பேட்டியில் சொல்லித் தம் பங்கிற்குப் பரபரப்பைக் கிளப்பினார்.

எது எப்படியோ, அசாத்தியத் திறமை இல்லையெனில் திரையுலகிலும் திரைப்படங்களிலும் ஐம்பது வருடங்கள் எல்லாம் ஒருவரால் தாக்குப்பிடிக்க முடியாது.

இத்தனை வருடங்கள் இருந்தபோதும் புகழையும் வெற்றியையும் தம்முடைய தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவரால் இருக்கமுடிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு.



ஆச்சி மனோரமா நம்முடைய மன ஓரமா நீண்ட காலத்திற்கு வாழ்க்கைப் பூராவும் நம்முடன் நடந்து வந்துகொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி. 

41 comments :

”தளிர் சுரேஷ்” said...

மனோரமா தமிழ் திரையுலகின் துருவ நட்சத்திரங்களில் ஒருவர். சிறப்பான நினைவஞ்சலி! நன்றி!

காரிகன் said...

அமுதவன் ஸார்,

--இதற்குக் காரணம் இப்போது பெருகிவிட்ட ஊடகங்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் எந்தப் பிரபலம் மண்டையைப் போடுவார் என்று சில சேனல்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமையை இன்று பார்க்கிறோம்.----

சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இனி எந்த பிரபலத்திற்கும் நமது மின்சார ஊடகங்கள் பெரிய வெளிச்சம் கொடுக்கும் என்று தோன்றுகிறது. மனோரமா போன்ற பெரிய நடிப்புலக ஜாம்பவானுக்கு இத்தனை பிரமாண்டம் தேவைதான். இருந்தும் நாகேஷ் மற்றும் மனோரமா பற்றி அவர்கள் பிற நகைச்சுவை நடிகர்களை வளரவிடாமல் செயல்பட்டதாக ஒரு கருத்து உண்டு. 60, 70 களில் வந்த ஏறக்குறைய எல்லா படங்களிலும் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.

நல்ல வாசிப்புக்கேற்ற பதிவுக்காக பாராட்டுக்கள்.

ஜோதிஜி said...

அந்த பூ மகன் யாரென்று சொல்லவில்லையே? பூபதியா?

வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டே வெளியே சிரித்துக் கொண்டே வாழ்ந்த பெண்மணி இவர்.

திருமணம் ஆன ஒரு மாதத்தில் இவரை விட்டுச் சென்ற கணவர் இராமநாதன் கொடுத்த வலி ஒரு பக்கம் என்றால் வாழ்க்கை முழுக்க வலியைத் தவிர வேறு எதையும் கொடுக்காத பூபதி மறுபக்கம்.

நல்ல வேளை பேத்திகள் மருத்துவராகி நல்ல நிலைமைக்கு வந்துள்ளார்கள்.

வரிகளின் இடையிடையே உள்ள உங்களின் நக்கல் ரசிக்கும்படியாக இருந்தது.

Amudhavan said...

தளிர்’ சுரேஷ் said...
\\மனோரமா தமிழ் திரையுலகின் துருவ நட்சத்திரங்களில் ஒருவர். சிறப்பான நினைவஞ்சலி!\\
தங்களின் வருகைக்கு நன்றி சுரேஷ்.

Amudhavan said...

காரிகன் said...
\\நாகேஷ் மற்றும் மனோரமா பற்றி அவர்கள் பிற நகைச்சுவை நடிகர்களை வளரவிடாமல் செயல்பட்டதாக ஒரு கருத்து உண்டு. 60, 70 களில் வந்த ஏறக்குறைய எல்லா படங்களிலும் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.\\
அறுபது எழுபதுகளில் வந்த எல்லாப் படங்களிலும் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். அது அவர்களது ஆளுமை திறமை மற்றும் மார்க்கெட் வேல்யூ என்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நகைச்சுவையில் தங்கவேலு, சந்திரபாபு என்று இருவரும் கொடிகட்டி அரசாண்டுகொண்டிருந்த வேளையில்தான் நாகேஷ் வருகிறார். தங்கவேலுவுக்கு வயதாகிக்கொண்டிருந்தது. சந்திரபாபு அசாத்திய திறமையுள்ள நடிகர். ஆனால் அவருடைய ஒரேயொரு பேட்டி- அன்றைக்குத் தமிழில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி மூவரையும் ஒருசேர படுமோசமாகத் தாக்கியது. மூன்றுபேர் பற்றியும் தனித்தனியாக அவர் தெரிவித்திருந்த கருத்து இனிமேல் இவர்கள் படங்களில் சந்திரபாபுவைப் போடமுடியாது என்னுமளவிற்குச் செய்திருந்தது. நாகேஷ் உச்சிக்குச் செல்ல அந்தப் பேட்டியும் ஒரு காரணம் எனலாம். அதன்பிறகு ஒருநாளில் ஐந்து ஷிப்டுகளில் எல்லாம் நாகேஷ் நடித்தார். நடித்துவிட்டு வீட்டிற்கே போகமாட்டார் என்று சொல்வார்கள்.
நேரே மெரினா பீச்சிற்குக் காரை ஓட்டிச்சென்று கார்க்கதவைத் திறந்து வைத்தபடி மூன்று மணி நேரமோ நான்கு மணி நேரமோ தூங்கிவிட்டு அப்படியே ஏதாவது ஸ்டுடியோவுக்கு வந்து முகம் கழுவிக் குளித்துவிட்டு ரெடியாகிவிடுவார் என்று செய்தி. அந்த அளவு பிஸி.
மனோரமாவுக்குப் போட்டியாக சச்சு, மணிமாலா என்று யார்யாரோ வந்து முயற்சிகள் செய்தபோதும் இவர் இடத்தை அசைக்கமுடியவில்லை.
பிற்பாடு நாகேஷுக்கும் மனோரமாவுக்கும் ஏதோ சண்டை வந்து நாகேஷூடன் நடிக்கமாட்டேன் என்று சொன்னபோதுதான் நாகேஷுக்கு பதிலாக சுருளியும் தேங்காய்சீனிவாசனும் வந்தார்கள்.
அந்தச் சமயம் பார்த்து நாகேஷ் மனைவியும் ஏதோ கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுவிட நாகேஷ் மார்க்கெட் முழுவதுமாகப் பறிபோனது.

Amudhavan said...

காரிகன், ஒரு விஷயம் விடுபட்டுப் போய்விட்டது. அந்நாட்களில் யாரையும் வரவிடாமலும், வளரவிடாமலும் செய்யக்கூடிய ஆளுமை வெறும் சிவாஜியிடமும், எம்ஜிஆரிடமும் தாம் இருந்தது. இந்த விஷயத்தில் சிவாஜி மிகமிகப் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். அவரையே மிக மோசமாகப் பேசியவர்களை நீக்கிவிடலாமா? என்று தயாரிப்பாளரும் டைரக்டர்களும் கேட்கும்போதுகூட "அட அவன் வயித்துப் பொழைப்புக்காகத்தானே என்னையே தாக்கிப் பேசியிருக்கான். பேசிவிட்டுப்போறான். அதுக்காக அவன் வயித்துல அடிக்கிற வேலை நமக்கு எதுக்கு?" என்பது அவரது பதில்.
ஆனால் எம்ஜிஆர் அப்படியல்ல. தம்முடைய படத்திலிருந்துகூட அல்ல, தமிழ்த்திரைப்படத்திலேயே இல்லாமல் செய்துவிடுவார். நாகேஷ் அப்படி அவருடைய கோபத்துக்கு உள்ளாகி மார்க்கெட் இழந்தவர்தான்.
எம்ஜிஆருடைய கோபம் செல்லுபடியாகாதது கண்ணதாசனிடம் மட்டும்தான். அவரை மட்டும்தான் அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டே வெளியே சிரித்துக் கொண்டே வாழ்ந்த பெண்மணி இவர். திருமணம் ஆன ஒரு மாதத்தில் இவரை விட்டுச் சென்ற கணவர் இராமநாதன் கொடுத்த வலி ஒரு பக்கம் என்றால் வாழ்க்கை முழுக்க வலியைத் தவிர வேறு எதையும் கொடுக்காத பூபதி மறுபக்கம்.
நல்ல வேளை பேத்திகள் மருத்துவராகி நல்ல நிலைமைக்கு வந்துள்ளார்கள்.\\
ஜோதிஜி உங்களைப் போன்ற புத்திசாலிகள் இணையத்தில் நிறையப்பேர் இருக்கிறீர்கள் அவர்களுக்கெல்லாம் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இருக்காது என்பதனால்தான் சிலபெயரை மறைத்து எழுதுவது. அதுதான் சரியாகப் புரிந்துகொண்டீர்களே.
தங்களின் மற்ற கருத்துக்கள் சரியானவையே.
புதுக்கோட்டை பதிவர் மாநாட்டிற்குச் சென்று வந்தீர்களாமே. அதுபற்றிய பதிவு எழுதுவீர்களா?



Arul Jeeva said...

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா அவர்களுக்கான தங்களின் நினைவஞ்சலிக்கு வாழ்த்துக்கள் .நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி விருதுகள் பலவற்றை தன் வசம் தக்கவைத்து பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பேதை மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

ஜோதிஜி said...

இலை மறை காயாக சில விசயங்கள் எழுதியிருக்கீங்க. ஆனால் அதன் உள்ளர்த்தம் பலருக்குப் புரியுமா? என்று சந்தேகம். மேலும் உங்கள் பதிவுகள் பலமாதங்கள் கடந்தும் பலரும் வந்து படிக்கக்கூடியது. ஆழ்ந்து வாசிக்கக்கூடிய அத்தனை பேர்களும் உங்கள் வாசகர்கள். அவர்களுக்காக சில தகவல்களை இங்கே தருகின்றேன் உங்கள் அனுமதியோடு. இந்தத் தகவல்கள் நண்பர் உண்மைத் தமிழன் தனது முகநூல் பதிவில் தந்தவையே. அனைத்தும் இந்தப் பதிவோடு சம்மந்தப்பட்டது. வாசிக்க விரும்புவர்களுக்கு மனோரமா குறித்து மேற்கொண்டு தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதற்காக.

ஜோதிஜி said...

ஆச்சி மனோரமா கடைசிவரையிலும் நடிக்க விரும்பிய ஒரேயொரு கேரக்டர் அரவாணி. அது போன்ற ஒரு கேரக்டர் கிடைத்தால் சம்பளம்கூட வாங்காமல் நடிக்கிறேன் என்றார். ஆனால் கடைசிவரையிலும் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவேயி்லலை..

ஜோதிஜி said...

எந்தவொரு காமெடி நடிகருக்கும் சொந்த வாழ்க்கையில் நிம்மதியிருக்காது. இது உலகளாவிய உண்மை. நம்ம ஆச்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. தன் ஒரே மகன் பூபதியின் அளவுக்கதிமான குடிப் பழக்கத்தினால் தனது ஆயுட்காலம் முழுவதுமே அவர் நொந்து போய்தான் இருந்தார்.
பேரனும், பேத்திகளும் தலையெடுத்த பின்புதான் கொஞ்சம் ரிலாக்ஸானார். ஆனாலும் அவருடைய உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள் சொத்தில் பங்கு கேட்டு கோர்ட் படியேறி அத்தைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சங்கடப்படுத்த.. கடைசி காலம் அவருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது..!

ஜோதிஜி said...

'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் முதலில் மனோரமா கேரக்டரே இல்லை. மனோரமா இதுவரையிலும் ஏவி.எம். நிறுவனத்தின் படங்களில் பெயர் பெறுகிற மாதிரி எதிலும் நடிக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் ஏவி.எம்.சரவணன் 'இப்படியொரு வேலைக்காரி கேரக்டரை வைத்தால் நன்றாக இருக்கும்' என்று கருத்து சொல்ல இயக்குநர் விசுவும் அதை ஏற்றுக் கொ்ண்டார்.
இப்படித்தான் நம்முடைய 'கண்ணம்மா' அந்தப் படத்தில் உட்புகுந்தார். ஆனால் கடைசியில் தன் நடிப்பின் மூலம் வீட்டுக்கு ஒரு கண்ணம்மா இருக்கக் கூடாதா என்கிற ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்திவிட்டார் ஆச்சி.
ஆயுள் காலம் முழுவதும் நம்மால் மறக்க முடியாதது 'கம்முன்னு கெட' டயலாக்கும் அந்த நடிப்பும்..!

ஜோதிஜி said...

விசுவிடம் அப்போது உதவியாளராக இருந்த இயக்குநர் கஜேந்திரன் இன்று காலை தொலைக்காட்சியில் தனது அஞ்சலியில் சம்சாரம் அது மின்சாரம் கிளைமாக்ஸ் சீன் பற்றி ஒரு தகவல் சொன்னார்.

அதன் படி கிளைமாக்ஸில் விசுவின் பிடிவாதத்தை கைவிடும்படியான உணர்ச்சிகரமான வசனங்கள் தொடர்பான காட்சியில் அவரது மனைவியாக நடித்த கமலா காமேஷ்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் கஜேந்திரன்தான் 'இந்தக் காட்சியை மனோரமா நடித்தால் சிறப்பாக இருக்கும்' என்று விசுவிடம் நள்ளிரவு வரை விவாதித்தாராம்.

ஆனால் மறுநாள் நடக்க வேண்டிய படப்பிடிப்பில் மனோரமாவின் கால்ஷீட் இல்லை. திடீரென எடுத்த முடிவு என்பதால் அவர் தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு விட்டன. எனவே அந்த நள்ளிரவில் கஜேந்திரன் மனோரமாவின் வீட்டிற்கு சென்று நிலைமையை விளக்கிச் சொன்னாராம். மறுநாள் காலை வேறு ஒரு படத்திற்கான படப்பிடிப்பு இருந்தாலும் குறுகிய இடைவெளியில் மனோரமா அந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தாராம்.

ஜோதிஜி said...

சில காலம் கலைஞருடன் பிணக்கில் இருந்தார் ஆச்சி மனோரமா. அது அவருடைய மகன் பூபதிக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கேட்டு தருகிறேன் என்றும் சொல்லாமல், தர மாட்டே்ன் என்றும் சொல்லாமல் கடைசிவரையிலும் இழுத்தடித்துவிட்டாராம் கருணாநிதி. இதனால் கடும் கோபத்தில் இருந்தார் மனோரமா. "அவர் நினைச்சிருந்தால் சீட் கொடுத்திரு்ககலாம்.." என்று பின்னாளில் வருத்தத்தோடு பேட்டியும் கொடுத்தார்.
இதனாலேயே இப்போது தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் முதலீடாக வைத்து தனது பேத்தியையும், பேரனையும் மருத்துவர்களாக்கி அவர்களுக்காகவே புதுச்சேரியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்..!
என்னவொரு வைராக்கியம்..!?

ஜோதிஜி said...

மலையாளப் படங்களில் சேலை இல்லாமல் ஜாக்கெட் அணிந்து நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் ஆச்சி மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை.
உடல் கவர்ச்சி காட்டி நடிக்கக் கூடாது என்பதில் முதலிலேயே தெளிவாக இருந்தார். தமிழில் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் அவருக்கென்று ஒரு மார்க்கெட் கிடைத்தவுடன் அதை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
அப்படியிருந்தும் ஒரு ஹிந்தி படத்திலும், 'உண்மையே உன் விலை என்ன' படத்தில் சோவுக்காகவே நடித்துக் கொடு்ததாராம்..!

ஜோதிஜி said...

'மைக்கேல் மதன காமராசன்' படத்தி்ல சிவராத்திரி பாடல் காட்சியை இப்போதைய வெர்ஷன் இல்லாமல் வேறுவிதமாக எடுத்திருந்தார்கள்.
ஆனால் படமாக்கும்வரையில் எதுவும் சொல்லாத மனோரமா இதன் பின்பு கமல்ஹாசனிடம் "அது நல்லாயில்லையேப்பா.. ரொம்ப வல்கரா இருக்கே.." என்று சொல்லியிருக்கிறார். "இல்லம்மா நல்லாத்தான் இருக்கு.." என்று கமல் சமாதானம் பேச.. "உனக்கு ஒண்ணுமில்ல. நானும் கூட நடிச்சிரு்ககனே.. என்னையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..." என்று கேட்டவுடன் ஜெர்க் ஆகி மறுபடியும் அந்த பாடல் காட்சியை வேறு மாதிரி ஷூட் செய்தாராம் கமல்ஹாசன்.!
வேறு மாதிரி ஷூட் செய்தே அந்தப் பாடல் காட்சி இப்படியிருக்கே..? அப்போ ஆச்சி ஆட்சேபித்த முதல் வெர்ஷன் எப்படியிருந்திருக்கும்..?

ஜோதிஜி said...

கலைஞர் மு.கருணாநிதி கட்சிக் கூ்டடத்திற்காக வெளியூர் போய்விட்டு சென்னை திரும்பும்போது விபத்துக்குள்ளாகி செனனை பொது மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார்.
அப்போது அவரைப் பார்க்க மனோரமா ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார். அந்த அறையில் ராஜாத்தியம்மாளும் இருந்திருக்கிறார். மனோரமாவுக்கு ராஜாத்தியம்மாவை நன்கு தெரியும். இருவருமே நாடகங்களில் கருணாநிதியுடன் நடித்தவர்கள். கருணாநிதி அவரை திருமணம் செய்து கொண்டதும் தெரியும்.
சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் தயாளு அம்மாவும் வந்திருக்கிறார். ராஜாத்தியம்மாவை கை காட்டி "யார் இந்த அம்மா..? என்று கேட்டிருக்கிறார் தயாளு அம்மாள். வழக்கம்போல கலைஞர் மு.கருணாநிதி பதில் சொல்லாமல் இருக்க.. மனோரமா வெள்ளந்தியாக "இவங்களைத் தெரியாதா..? இவங்கதான் ராஜாத்தி.." என்று சொல்லிவிட்டு சந்தேகத்தோடு கலைஞரிடம், "என்னங்க நீங்க சொல்லலையா..?" என்றும் கேட்டு பட்டென்று போட்டு உடைத்துவிட்டாராம்..!
இதை கருணாநிதியே ஆச்சி மனோரமா இருந்த ஒரு மேடையில் சொன்னார்.

ஜோதிஜி said...

கலைஞரின் மணிமகுடம் நாடகத்திற்காக ஒத்திகை பார்க்க கைக்குழந்தையோடு வந்திருக்கிறார் ஆச்சி. பக்கம், பக்கமான வசனங்களை கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடியே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு மனப்பாடம் செய்வாராம்.. இப்படித்தான் அவரது நாடக வாழ்க்கை அழுகையோடும், கஷ்டத்தோடும் துவங்கியிருக்கிறது..!

ஜோதிஜி said...

1996 தேர்தலின்போது அதிமுகவில் சேர்ந்த ஆச்சி மனோரமா, அதிமுக மேடைகளில் ரஜினியை வெளுத்துக் கட்டினார். 'மெண்டல்', 'அரை லூஸு', 'கன்னடன்', 'குடிகாரன்', 'பேக்கு பய' என்றெல்லாம் விளாசி தள்ளிவிட்டார்..
தேர்தலில் தோல்வியடைந்து அவரவர் வேலைக்கு திரும்பிய பிறகு அருணாச்சலம் படத்தில் முதலில் பு்ககானவர் மனோரமாதான். அந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் ரஜினியை சந்தித்தபோது சற்றுக் கூச்சத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்..! ஆனால் ரஜனியோ எதையும் கேட்காமலேயே போய்விட்டார்.. இதன் பின்பு யாரைப் பற்றியும் அரசியல் ரீதியாக அவர் தாக்கிப் பேசவே இல்லை..!

ஜோதிஜி said...

'அபூரவ சகோதரர்கள்' படத்தில் முதலில் மனோரமா நடிக்கவே இல்லை. காந்திமதிதான் அந்தக் கேரக்டரில் நடித்திருந்தார். காந்திமதியை வைத்து ராஜா கைய வைச்சா பாடலைகூட ஷூட் செய்துவிட்டார்கள். ஆனால் நடனம் மற்றும் சென்னை பாஷை டயலாக் மாடுலேஷனில் காந்திமதியின் பெர்பார்மென்ஸ் எடுபடாமல் போக இருக்கவே காந்திமதியை நீக்கிவிட்டு மனோரமாவை புக் செய்தார் கமல்ஹாசன்.
இதனால் தான் சாகின்றவரையிலும் மனோரமா மீது பிணக்கில்தான் இருந்தார் காந்திமதி. சின்னக்கவுண்டர் படத்தில் மனோரமாவின் கேரக்டர் காஸ்ட்யூம்ஸ் மேக்கப் பற்றி ஓவராக கிண்டல் செய்து பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார் காந்திமதி.
வழக்கம்போல ஆச்சி கப்சிப்புதான்..!

ஜோதிஜி said...

ஒரு சமயம் எம்.ஜி.ஆரின் படத்தில் நடிக்கும்போது ஆச்சி கால்ஷீட் சொதப்பல் செய்துவிட அதிலிருந்து 3 படங்களுக்கு தொடர்ச்சியாக ஆச்சிக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளிக்வில்லை.
தன்னை புறக்கணிக்கிறார் என்பதை தெரிந்தவுடன் ஆச்சி சோ-விடம் சொல்லி வருத்தப்பட.. சோவும், அசோகனும்தான் எம்.ஜி.ஆரிடம் வாக்குவாதம் செய்து மனோரமாவை நடிக்க வைத்தார்களாம்..
இந்த நன்றிக் கடனுக்காகத்தான் யார் தடுத்தும் கேளாமல் சோவின் தொடர் நாடகங்களில், அரசை கிண்டல் செய்யும் அரசியல் நாடகங்களில்கூட மனோரமா நடித்தார்.
மேலும் 'உண்மையே உன் விலை என்ன' திரைப்படத்திலும், 'முகமது பின் துகளக்'கிலும் அவர் நடித்ததை போல வேறு எந்த நடிகையாவது நடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்..!
- சோவே எழுதியிருக்கும் தகவல்..!

ஜோதிஜி said...

ஒரு படத்தின் டப்பிங்கிற்காக டப்பிங் ஸ்டூடியோவுக்கு போன போது அங்கே இருந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்தித்தார். ஆச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி பேசிய மேஜர், "அற்புதமான படம்.. ஆனா தமிழ்ல வருமான்னே தெரியலை.. விநியோகஸ்தர்கள் யாருமே வர மாட்டேன்றாங்க.." என்று அலுத்துக் கொண்டார்.
ஆர்வம் கொண்ட ஆச்சி மனோரமா "அந்தப் படத்தை நான் பார்க்கணுமே.." என்று சொல்லி படத்தை பார்த்திருக்கிறார். படத்தில் லயித்துப் போன ஆச்சி, "நானே இதை வாங்கி விநியோகம் பண்றேன்..." என்று சொல்லி மேஜரின் உதவியால் படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் அந்தப் பட்ததை வெளியிட்டார்.
ஆச்சி தயாரிப்பு, விநியோகத் தொழிலில் ஈடுபட்டதில்லை. விநியோகத் தொழிலில் ஈடுபட்ட முதலும், கடைசியுமான படம் அதுதான்..
அந்தப் படம் "சங்கராபரணம்"

ஜோதிஜி said...

"பொம்பளைங்க எல்லாம் புருஷனுக்கு முன்னாடியே சாகணும்னு நினைக்காதீங்க. நமக்காவது வீட்டு வேலை செய்யத் தெரியும். சமைக்கத் தெரியும்.. நாலு வீடு வாசல்ல பழகத் தெரியும். நம்ம புருஷன்களுக்கு என்னத்த தெரியும். அதுனால கடைசிவரைக்கும் அவங்க உசிரோட இருக்குறவரைக்கும் அவங்கள பத்திரமா பார்த்துக்கணும்னு நினைங்க. நம்ம சாவு ஆம்பளைக்கு பின்னாடிதான் இருக்கணும். இதைத்தான் ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மனைவியும் நினைக்கணும்.."
- இப்படியொரு முறை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்து பெண்ணிய போராளிகளிடத்தில் கன்னா பின்னாவென்று 'ஓல்டு பார்ட்டி' என்று வாங்கிக் கட்டிக் கொண்டார் ஆச்சி..!

ஜோதிஜி said...

ஒரு தெலுங்கு படப்பிடிப்பு.. 2 மணி நேரமாக கலர் புல்லாக மேக்கப் போட்டு அசத்தலாக செட்டுக்குள் நுழைந்திருக்கிறார் ஆச்சி. இயக்குநரை பார்த்து வணக்கம் சொன்னவுடன்.. "இன்னிக்கு சீன்ஸ் மாத்திட்டோம்மா.. பிளாஷ்பேக் சீன்ஸ்தான் எடுக்கப் போறோம்.. மேக்கப்பையெ்லலாம் கலைச்சிட்டு கொஞ்சம் வயசான மாதிரி வாங்க..." என்று கூலாக சொல்லிவிட்டுப் போனாராம். வேற ஆர்ட்டிஸ்ட்டா இருந்தா கத்திக் குமிச்சிருப்பாங்க. ஆச்சியோ எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் "ஓகே ஸார்.." என்று சொல்லி மேக்கப் அறைக்குத் திரும்பினாராம்..!

ஜோதிஜி said...

ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் தொடர்ச்சியாக தேங்காய் சீனிவாசனையும் ஆச்சியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் ஷூட்டிங்கின்போது இதைப் படித்து கண் கலங்கிப் போய் நடிக்கவே தோணாமல் அமர்ந்திருந்தாராம் ஆச்சி.
எம்.ஜி.ஆர். இதைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். ஆச்சியும் சொல்ல.. "அதை நானும் படிச்சேன்.கண்டுக்காத. இதெல்லாம் இங்க சகஜம். இதையெல்லாம் தாண்டித்தான் நாம போகணும். இல்லைன்னா நாம தொழில் செய்ய முடியாது.." என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்..
சொன்னதோடு இல்லாமல் ஆச்சிக்கு தெரியாமலேயே அந்த பத்திரிகையாளரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து மேக்கப் ரூமில் வைத்து கும்\மியெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.

ஜோதிஜி said...

சின்னத்தம்பி படத்தின் ஷூட்டிங்கிற்காக கிளம்பிய காலைப் பொழுதில்தான் அவருடைய முன்னாள் கணவர் ராமநாதன் காலமான நியூஸ் அவருக்குத் தெரிந்தது. தாயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மகனை அழைத்துக் கொண்டு போய் கணவருக்கு கொள்ளி வைக்க வைத்துவிட்டு தனது கடமையையும் செய்து முடித்துவிட்டுத்தான் வந்தார்.
3 நாட்கள் கழித்து அவர் நடிக்க வந்த முதல் காட்சியே சின்னத்தம்பி படத்தில் ராதாரவி, கிராமத்து நடுவில் அவரைக் கட்டி வைத்து அவருக்கு பொட்டு வைத்து கலர் புடவை கட்டி அவமானப்படுத்தும் காட்சிதானாம்..
இயக்குநர் பி.வாசு சொன்ன தகவல் இது..!

ஜோதிஜி said...

ஆச்சி அதிகப் படங்களில் நடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. எந்தப் படத்தின் தயாரிப்பாளரிடமும் பணத்தை கறாராக வாங்க மாட்டார். அப்படி செய்யவும் அவருக்குத் தெரியாது. அவருடைய தாயார்தான் ஆரம்பக் கட்டத்தில் சம்பளம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாதியைக் கொடுத்துவிட்டு மீதியை கடைசி ஷூட்டிங நாளில் தருவதாகச் சொல்வார்கள். கடைசி நாளில் கண்ணில் படவே மாட்டார்கள். மனோரமாவும் ஆபீஸ் தேடிப் போய் கேட்கவும் மாட்டார். இப்படியே விட்டுக் கொடுத்த பணத்தை இன்னிக்கு எண்ணினா 1 கோடிக்கு மேல வரும்ப்பா.. என்றார் ஒரு பேட்டியில்.. முக்தா சீனிவாசன் மட்டுமே வீடு தேடி வந்து பணத்தை செட்டில் செய்வார் என்றும் சொல்லியிருந்தார்..!

ஜோதிஜி said...

நடிகர் நாகேஷின் சொந்த மைத்துனர் கொலையான வழக்கில் நாகேஷி்ன் மனைவியை போலீஸ் கைது செய்திருந்தது. நாகேஷையும் கைது செய்யப் போவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கைதாகவில்லை.
வழக்கு விசாரணையின்போது தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மனோரமாவை அழைத்தார் நாகேஷ். மனோரமா ஏனோ மறுத்துவிட்டார். அடுத்த படத்தில் இருந்து நாகேஷ்-மனோரமா ஜோடி பிரிந்தது.. நாகேஷ் இதன் பின்பு பல்வேறு நடிகைகளும் ஜோடி போட்டு நடித்தார். அதிகமாக பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது..
கடைசியாக நாகேஷ் காலமாவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விழா மேடையில்தான் மனோரமாவை ஆச்சி என்று சொல்லியும் பெயர் சொல்லியும் அழைத்தார். ஆச்சி மனோரமா அப்போது துளிர்த்த கண்ணீருக்கும் ஒரு விலை இருந்தது. அதுதான் அவரது பொறுமை..!

ஜோதிஜி said...

வீட்டுக்குப் பக்கத்திலேயே கண்ணம்மாபேட்டை சுடுகாடு இருந்தாலும் மின் மயானத்தில் தன் உடலை எரிக்கக்கூடாது. பழைய முறைப்படி விறகுகளால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பது ஆச்சியிின் விருப்பம் என்பதால் தொலைதூரத்தில் உள்ள மயிலாப்பூர் இடுகாட்டிற்கு ஆச்சியை கொண்டு சென்றார்கள். !

ஜோதிஜி said...

கலைஞர் வசனத்தை மனோரமா பேசும் பேச்சைக் கேட்டுப் பாருங்க. 70 வயதில் இந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்க முடியுமா?

https://www.youtube.com/watch?v=8L-uS9Ui-Ig

Amudhavan said...

ஜோதிஜி, மனோரமா பற்றிய பல அரிய தகவல்களை, அவ்வப்போது பல்வேறு சமயங்களில் பத்திரிகைகளில் படித்து ஏறக்குறைய மறந்துபோய்விட்ட பல தகவல்களை உண்மைத்தமிழன் துணையோடு இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள். தங்களின் சிரத்தைக்கு நன்றி.

Amudhavan said...

Arul Jeeva said...
\\நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி விருதுகள் பலவற்றை தன் வசம் தக்கவைத்து பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பேதை மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\\
அருள்ஜீவா, இங்கே ஜோதிஜி தெரிவித்திருக்கும் பல தகவல்களும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ' பேதை மனோரமா' என்பதற்கு ஏற்றாற்போல்தான் இருக்கின்றன.

தி.தமிழ் இளங்கோ said...

மனோரமாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு அருமையான கட்டுரை. பதிவுக்குள் ஒரு பதிவாக ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பகிர்வுகள். எல்லாமே நினைவலைகள்.

Amudhavan said...

தமிழ் இளங்கோ ஐயாவுக்கு நன்றி.

சார்லஸ் said...

சார்

மனோரமா என்ற மாபெரும் ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்ள தங்களின் இந்தப் பதிவு பல நல்ல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. சிறிய வயதில் அவர் நடித்த பல திரைப்படங்களைப் பார்த்து எவ்வளவோ வியந்திருக்கிறேன். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார் . காமெடியில் கலக்கவும் செய்வார்; சில நேரத்தில் கண் கலங்கவும் வைப்பார்.

ஒரு திரைப்படத்தில் ரகரம், லகரம் வாயில் வராத ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார் . " ஒயு பெயிய மயை " என்று கதை சொல்லுவார் . அதாவது ' ஒரு பெரிய மலை ' என்பதைத்தான் அவ்வாறு உச்சரிப்பார். கதை கேட்பவர் மிரண்டு ஓடுவார். படம் பார்ப்பவர்கள் நிறைய பேர் வயிறு புண்ணாகி விடுமளவிற்கு சிரிப்பார்கள். நானும்தான் !

தில்லானா மோகனாம்பாளில் சிவாஜிக்கு ஈடாக ராமநாதபுரத்து வட்டார இழுவைப் பேச்சோடு பேசும் வசனத்தை இப்போது கேட்டாலும் ரசிக்கலாமே! இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாமே !

கின்னஸ் புகழ் பெரும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் நடித்தவர். அந்த சாதனையை யாராலும் இனி தொட முடியாது. பெண் சிவாஜி என்று அவரை அழைத்தாலும் மிகையில்லை. உண்மைதான். அந்த அளவிற்கு திறமைகள் காட்டியவர்.

ஜோதிஜி அவர்கள் கூடுதலாக கொடுத்திருக்கும் அவரைப் பற்றிய செய்திகள் இன்னும் சுவையானவை.

Amudhavan said...

சார்லஸ் said...
\\சிறிய வயதில் அவர் நடித்த பல திரைப்படங்களைப் பார்த்து எவ்வளவோ வியந்திருக்கிறேன். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார் . காமெடியில் கலக்கவும் செய்வார்; சில நேரத்தில் கண் கலங்கவும் வைப்பார்\\

\\கின்னஸ் புகழ் பெரும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் நடித்தவர். அந்த சாதனையை யாராலும் இனி தொட முடியாது. பெண் சிவாஜி என்று அவரை அழைத்தாலும் மிகையில்லை. உண்மைதான். அந்த அளவிற்கு திறமைகள் காட்டியவர்.\\

வாங்க சார்லஸ், தங்களுடைய கருத்துக்கள்பெருமளவில் ஏற்புடையனவே. சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்து ஒரு சில இடங்களில் கண்கலங்கவும் வைக்கும் நடிப்பை அவரால் வழங்க முடிந்தது என்பது உண்மைதான்.
என்னதான் சச்சு, ரமாபிரபா இன்னமும் ஒரு சிலர் என்று வந்தபோதும் தன்னுடைய இடத்திற்கு யாருமே வரமுடியாது என்ற நிலையில் அவரது காமெடி பெண் கதாபாத்திரத்திற்கு போட்டியே யாரும் இல்லை என்ற அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் அவரால் நடித்து சோபிக்கமுடிந்தது என்பதும் உண்மைதான். அதனாலேயே மனோரமாவைப் பெண் சிவாஜி என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. போகிறபோக்கில் சோ சொல்லிவைத்த வாசகம் இது.

சிவாஜி இயங்கிய தளங்களும், மாற்றியமைத்த டிரெண்டுகளும், நடிப்பு நவரசத்தில் அவர் பயன்படுத்திச் சென்றிருக்கும் நுணுக்கமான யுக்திகளும், பாடலுக்கு நடிப்பதில், பின்னணி பாடுகிறவர்கள் வந்துவிட்டபிறகு அதற்கேற்ப ஒரு நடிகர் எப்படி தம்மை வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அவர் நிரூபித்துத் தந்திருக்கும் நடைமுறைகளும், வசன உச்சரிப்பில் அவர் காட்டியிருக்கும் மேதைமைகளும், நடிப்புலகில் அவர் வகுத்துத்தந்திருக்கும் பல்வேறு இலக்கணங்களும், அவர் போட்டுச்சென்றிருக்கும் ராஜபாட்டைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

அதுபற்றிய விவரங்கள் பலருக்குத் தெரியாது என்பதனால் அவர் மீது அரசியல்ரீதியான வெறுப்பை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் பலரும் அவரைப் பற்றி ஏதும் அறியாமலேயே அவரை மிகவும் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது அந்த வகை மதிப்பீடு அல்லவென்றாலும் மனோரமாவை ஆம்பிளை சிவாஜி என்றால் அவரை என்ன சொல்லுவீர்கள்? அவரை ஒரு பொம்பளை மனோரமா என்று சொல்லும் அளவுக்கு அவரது உயரம் குறைவு என்று மட்டும் தயவுசெய்து கருதிக்கொள்ளாதீர்கள்.





Jayadev Das said...

இன்னைக்கு உங்க இடத்தை ஜோதிஜி பிடிச்சிட்டார். விறு விருப்பான, சுவராஷ்யமான தகவல். அனைத்துக்கும் நன்று ஜோதிஜி.

மனோரமாவுக்கு கூடிய கூட்டத்தில் அவர் உடல்நிலை நலிவுற்றபோது நேரில் போய்ப் பார்த்தார்கள் என்று பார்த்தால் வேதனையே மிஞ்சும். இதை மனோரமாவே, "என்னை யாரும் வந்து பார்க்கவில்லையே" என்று சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார். உசிரோடு இருக்கும் போது கண்டு கொள்ளாமல் செத்தபின் டெட் பாடிக்கு சக மாலை மரியாதை வைப்பது என்ன கலாச்சாரமோ..........

Amudhavan said...

ஜோதிஜியை நீங்கள் சரியாகவே பாராட்டியிருக்கிறீர்கள்.

மனோரமா என்றில்லை, பல விஐபிக்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான சிக்கலுக்கு சரியான -முறைப்படியான தீர்வில்லை என்றுதான் தோன்றுகிறது. தன்னை யாருமே வந்து பார்க்கவில்லையே, கண்டுகொள்ளவில்லையே என்று வருந்தும் அவர்கள் தங்களைப் பார்க்க விரும்பும் முக்கால்வாசிப்பேரை வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
தங்களை வேறொரு 'கோணத்தில்' பார்த்த இந்த உலகம் இப்போது தாங்கள் நோய்வாய்ப்பட்டு, நலிந்து மெலிந்து உடல் சோர்ந்து பலஹீனமாய் இருக்கும் இந்த நிலையில் பார்ப்பது வேண்டாமே என்ற கோணத்தில்தான் தம்மைப் பார்க்க விரும்பும் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினரை வேண்டாம் என்று சொல்லி அவர்களே தடுத்துவிடுவார்கள். கூடவே, தங்களை யாரும் வந்து பார்க்கவில்லையே என்று வருந்தவும் செய்வார்கள்.

எம்ஜிஆர் படுக்கையில் இருந்தபோதெல்லாம் தம்மை யாரும் வந்து பார்ப்பதை விரும்பினவரில்லை.
சிவாஜிகூட வீட்டில் இருந்தபோது தாம் தனித்துவிடப்பட்டிருந்ததாக சிலரிடம் புலம்பியிருக்கிறாரே தவிர, பார்க்கவருகிறோம் என்று சொன்ன பலபேரிடம் வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
மனோரமா இறுதி அஞ்சலியில் பேசிக்கொண்டிருந்த ஒரு பிரபலம் மனோரமாவைப் பார்க்க வருகிறேன் என்றதற்கு வரச்சொல்லிவிட்டுத் தாம் பாதி வழி சென்றிருந்தபோது அவர்களிடமிருந்துவந்த தொலைபேசியில் இப்போது வேண்டாம் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதால் நான் திரும்பிவிட்டேன் என்றும் நேரலையில் சொன்னார்.
இப்போது சோ மருத்துவமனையில் இருக்கிறார். எத்தனைப் பேரைப் பார்க்க அனுமதித்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

மோகன்ஜி said...

அமுதவன் சார்! ஒரு நகைச்சுவை சகாப்தமாக வாழ்ந்து மறைந்த மனோரமா ஆச்சிக்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த அஞ்சலி. ஜோதிஜியும் பல தகவல்களையும் இங்கே கருத்திட்டு பங்களித்திருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்னர், சபரிமலை சந்நிதானம். தரிசனம் முடிந்து, அம்பலத்தின் கூட்டத்தில் நுழைந்து ஒரு தோளில் பையும் மறுதோளில் வாட்டர் பாட்டிலுமாய் வந்து கொண்டிருக்கிறேன். "தம்பி! கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுப்பா!" என்ற தொண்டைகட்டிய பெண்குரல் என்னை நிறுத்தியது. 'இருமுடியை என்னிடம் குடுங்கம்மா' என்றபடி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் வாடர்பேக்கை நீட்டினேன். அண்ணாந்து வாயில் நீரை சரித்துக் கொண்டவர் மனோரமா ஆச்சி. கறுப்புப் புடவையில், வெய்யிலில் தாமிர வர்ணத்தில் மேக்கப் இல்லாத அந்த முகம் எனக்கு மறக்கவேயில்லை.

Amudhavan said...

வாங்க மோகன்ஜி, தங்களின் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்டது மாதிரியான அனுபவங்கள் என்றைக்குமே மறக்காது. மிகப்பெரிய விஐபிக்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் நம்மிடம் -மிகமிகச் சாதாரண ஒன்று என்றபோதிலும்- ஒரு சிறிய உதவியைக் கேட்க நேருவதும் நாம் அதனைச் செய்வதும் நமக்கு வாய்த்த ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருப்பது சிறப்பு.

Anonymous said...

மிக சிறப்பாக பல விவரங்களை அறிய முடிந்தது. மனோரமா மட்டுமல்லாமல் மற்ற பலரை பற்றியும் அறிய முடிந்தது.

Post a Comment