Friday, November 5, 2010

பட்டாசு வெடிச்சாச்சா?

தோ இன்னுமொரு தீபாவளி வந்துவிட்டது. முன்னெல்லாம் தீபாவளி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் ஆரம்பித்துவிடும். விடியற்காலையிலேயே பட்டாசு வெடிக்கத் துவங்கிவிடுவார்கள். அதிகாலை ஐந்துமணி ஆவதற்குள்ளாகவே யாராவது ஒருவர் பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி. உடனடியாக அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் காதைப்பிளந்துவிடும். யாராலும் தூங்கமுடியாது. இந்தக் களேபரங்கள் அந்த மூன்று நாட்களும் தொடரும். தீபாவளியன்று உச்சக்கட்டத்தில் இருக்கும். பெரிதான சத்தத்துடன் வெடிக்கும் வெடிக்கு லட்சுமி வெடி என்று பெயர். பாவம் லட்சுமி! காதுகளைச் செவிடாக்கும்....இதய நோயாளிகளைத் தூக்கிவாரிப்போடச்செய்யும்......குழந்தைகளைத் திடுக்கிடச்செய்யும் பயங்கர வெடிக்கு லட்சுமி வெடியென்று அந்தம்மாவின் பெயரை எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதன்முதலாக யாரோ ஒரு கம்பெனிக்காரன் லட்சுமி படத்தைச்சுற்றி அந்த பிராண்டில் இந்த வெடியைக்கொண்டு வந்திருப்பான். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கொண்டாட்டங்களுக்கு மக்கள் வெடிச்சத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சத்தங்களை விரும்புகிறார்கள். திருமண ஊர்வலங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். திருவிழாக்களில் பட்டாசு வெடிக்கிறார்கள். அரசியல் கூட்டங்களுக்கு சரம்சரமாய்ப் பட்டாசு கொளுத்துகிறார்கள். படங்கள் ரிலீசாகும்போதும் பட்டாசு.....சாவு ஊர்வலங்களுக்கும் பட்டாசு..............


நடுத்தரவர்க்கத்துத் தந்தைமார்களின் நிலைமைதான் பரிதாபம். போனஸ் வாங்கி கடன் வாங்கி தீபாவளிச்செலவை எப்படியோ ஒப்பேற்றுகிறார்கள். துணிமணிகள் பலகாரங்களுக்கு ஈடான ஒரு பெரிய தொகை பட்டாசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஆன செலவு இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆகிறது. எத்தனை ஆயிரமாக இருந்தால் என்ன எல்லாமே அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் கரியாகப் புகையாகப் போய்விடுகிறது. இதிலுள்ள பொருளாதார ரீதியிலான சிந்தனை நிறையப் பேருக்கு வந்துவிட்டது. ‘கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஒரு மணி நேரத்துல எதுக்குக் கரியாக்கணும்? இனிமேல் பட்டாசுக்குச் செலவழிக்க மாட்டோம்’ என்று முடிவெடுத்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால் அத்தனைப்பேராலும் இந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடிக்க முடிவதில்லை. தாய்க்குலங்கள் இம்மாதிரியான உறுதிகளுக்கெல்லாம் கணவர்களை அனுமதிப்பதில்லை. “ஊர்பூராவும் பட்டாசு வெடிச்சுக்கொண்டாடும்போது நம்ம பிள்ளைங்க மட்டும் வெடிக்காம இருக்கமுடியுமா? உங்க கஞ்சத்தனத்துக்கு எதுக்காக வெட்டியாய் என்னென்னமோ சால்ஜாப்பெல்லாம் பேசறீங்க?” என்று சொல்லி உறுதியைக் கலைத்துவிடுவார்கள்.
ஆனாலும் ஒன்று நிச்சயம். முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. பொருளாதாரக் கணக்குகளுக்கு அடுத்து பெரியார் போன்றவர்களின் பகுத்தறிவு வாதங்கள்.....நரகாசுரனை எரித்த கதையெல்லாம் ஆரியத்தரப்பின் பித்தலாட்டங்கள். தீபாவளி நம் பண்டிகையல்ல.. அதனைப் புறக்கணிக்க வேண்டும்.” என்பதுபோன்ற தீவிரப்பிரச்சாரங்களின் மூலம் தீபாவளி கொண்டாடுவது அறவே நிற்கவில்லையாயினும் பட்டாசு கொளுத்துவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பட்டாசு மோகம் குறைய நல்லாசிரியர்கள் காரணம். காசு கரியாவது ஒருபுறம், சுற்றுச்சூழல் மாசடைவது ஒருபுறம், குழந்தைத் தொழிலாளர்களையே பெருமளவில் உபயோகித்து வேலை வாங்கப்படுவதால் பட்டாசுகளைப் புறக்கணியுங்கள் என்று சில ஆசிரியர்களின் அறிவுறுத்தல் நல்ல பலன்களைத் தந்துள்ளது
என்னுடைய நண்பர் ஒருவர் செலவில்லாமல் தீபாவளி கொண்டாடுவது பற்றிச் சொல்லுவார். “தீபாவளியன்றைக்குச் சாயந்திரம் ஆறுமணி அளவில் எங்கள் வீட்டு மொட்டைமாடி மீது நானும் என் குடும்பத்தினரும் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவோம். எங்களைச் சுற்றிலும் எல்லா வீடுகளிலும் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் பல்வேறு வாணவேடிக்கைகளையும் கொளுத்துவார்கள். ஒரே கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். பட்டாசு கொளுத்துகிறவனைத்தவிர மற்றவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கிறவர்கள்தானே! நாங்கள் மொத்தப்பேரின் சந்தோஷத்திலும் பங்கேற்ற திருப்தியுடன் தீபாவளியைக் கழிப்போம்” என்பார்.
இந்தியாவின் எல்லாக் கமிஷனர்களும் தீபாவளி தவறாமல் நிருபர்களிடம் பேசுகிறார்கள்...சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் எந்தக்குடிமகனும் எதையும் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடுகிறான். எங்கேயாவது தப்பிதம் நிகழ்ந்துபோக தினத்தந்தியிலும் சன்டிவியிலும் கரிக்கட்டையாகக் காட்சியளித்து அனுதாபம் பெற்று மறைந்துபோகிறான்.

கல்வி வளர வளர பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறையும் என்று மகிழ சந்தர்ப்பம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இடம்பெயர்ந்திருக்கிறதே தவிர மாறவோ குறையவோ இல்லை என்பதைத்தான் இன்னொரு கோணம் காட்டுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் படித்த இளைஞர்கள் பட்டாசுகளை தீபாவளிக்குக் கொளுத்துவதில்லை. அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள். எப்போதெல்லாம் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா பூராவுக்கும் கொளுத்துகிறார்கள். அது விடியற்காலையா நள்ளிரவா என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களுக்கு ஆண்டெல்லாம் தீபாவளிதான். கிரிக்கெட்டிற்காக பட்டாசு கொளுத்துவது பற்றியெல்லாம் சுப்ரீம் கோர்ட் ஒன்றும் சொல்லவில்லை போலிருக்கிறது. அல்லது சொல்லியும் இவர்கள் கேட்பதில்லையா என்பதும் தெரியவில்லை.
பட்டாசுகளுக்கு அடுத்து நமக்கெல்லாம் தீபாவளியென்றாலேயே நினைவுக்கு வருவது தீபாவளி மலர்கள்தாம். அந்தக்காலத்தில் விகடன் கல்கி தீபாவளி மலர்கள் பார்ப்பதற்கே அவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தும். கலைமகளும் அமுதசுரபியும்கூட நல்ல கனமான மலர்களைத் தருவார்கள். கல்கி, விகடன் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஏராளம். இத்தனைக்கும் ஐந்து ரூபாய்தான் விலை. அந்த மலர்களை எல்லாராலும் வாங்க முடியாது. அந்தக்கால பொருளாதார நிலை அப்படி. அதனால் தீபாவளியன்று பத்திரிகைக் கடைகளில் அந்த மலர்களை வாங்கிப்போகிறவர்களை ஒரு ஹீரோ அளவுக்குப் பார்ப்பார்கள் சாமானியர்கள். இப்போதும் கல்கி விகடன் இரண்டு பத்திரிகைகளுமே தீபாவளி மலர்களை வெளியிடுகின்றன. ஆனாலும் அந்தக்கால மலர்களிலிருந்த ‘கனம்’ இப்போதைய மலர்களில் நிச்சயமாக இல்லை. ஏனோ அன்றையிலிருந்தே குமுதம் பெரிய சைஸ் தீபாவளி மலர்களை வெளியிடுவதே இல்லை. ஆனால் ஒருமுறையோ இரண்டு முறையோ கல்கண்டு இதழ் ஒரு ரூபாய் விலைக்கு பெரிய அளவில் தீபாவளி மலர் வெளியிட்டிருந்தார்கள். தமிழ்வாணன் அந்த தீபாவளி மலரை மிக அழகாகவும் சுவாரஸ்யமாகவும் வெளியிட்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம் தீபாவளி மலர்களில் பெரும்பாலும் தீபாவளி சம்பந்தமான சிறுகதைகள் இருக்கும். ஒரு முறை நா.பார்த்தசாரதிதான் “தீபாவளி மலர் என்றால் தீபாவளியன்று வெளியிடப்படும் மலர் என்றுதான் அர்த்தமே தவிர அதில் தீபாவளியைப் பற்றிதான் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைக்கத் தேவையில்லை”என்று சொன்னார். அதன்பிறகுதான் அந்தப்பாணி குறையத்தொடங்கியது.

தீபாவளி மலர்களுக்கு அடுத்து திரைப்படங்கள்தாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. ஒரு கன்னட இலக்கிய நண்பர் ஒருமுறை “தமிழர்களுக்கு தீபாவளியென்றால் பூஜை பண்டிகை பட்டாசு என்பதற்கடுத்து அன்றைக்கு கட்டாயம் ஒரு புதிய சினிமா பார்த்தாகவேண்டும் என்பதாக ஒரு சடங்கு இருக்கிறதாமே” என்று கேட்டார். “சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் கிடையாது. சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அப்படியொரு பழக்கத்துக்கு தமிழர்கள் அடிமையாகி விட்டார்கள் என்பதென்னமோ உண்மைதான்” என்கிறமாதிரி நான் சொன்ன பதிலை அவர் கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை.”இல்லை சார் அப்படி ஒரு சாஸ்திரமே இருக்கிறதாமே” என்று அந்த நண்பர் பிடிவாதமாக இருந்தார். யோசித்துப்பார்த்தால் இதையும் தமிழர்கள் ஒரு சாஸ்திரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பாதித்தமிழர்கள் தியேட்டர்களில் புதுப்படங்களையும் மீதித்தமிழர்கள் தொலைக்காட்சிகளில் நடிக நடிகையர்களின் ஞானோபதேசத்தையும் கேட்டுத்தான் தீபாவளியன்று தங்களை உயிர்ப்பித்துக்கொள்கிறார்கள்.

இதோ இன்னுமொரு தீபாவளியும் வழக்கம்போல் கடந்துவிட்டது.

Tuesday, October 26, 2010

வாருங்கள் அறிவுமதி


மந்திரப் புன்னகைப் படத்தின் அந்தப் பாடல் இதமாய் ஒலிக்கிறது. ‘சட்டச்சட சடவென’ என கார்த்திக்கின் குரலிலும் ஸ்வேதாவின் குரலிலும் ஆரம்பிக்கிற பாடல் காதில் நுழைந்து இதயத்தை வருடுகிறது.
இந்தக் காதலை நான் அடைய
எத்தனைக் காமம் கடந்து வந்தேன்
இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களைக் கடந்து வந்தேன்
.........................................................
.........................................................
இருவரே நெரிசலாய் முதன்முறை உணர்கிறேன்
ஒருவரிக் கவிதையாய் ஆனவனாலே...... என்று மனதுக்குள் ரகசியம் பேசியபடி தொடர்hshsகிறது பாடல். இந்தப் பாடல் மட்டுமல்ல, மற்ற பாடல்களும் அப்படியே..இதயத்தை மயிலிறகு கொண்டு வருடும் அழகுச் சொற்களால் பாடல்கள் கோர்க்கப்பட்டு மெல்லிய இனிமையைக் குழைத்து இசைச் சேர்க்கப்பட்டு மிதந்து வருகிறது.
இன்னொரு பாடலைப் பாருங்களேன்.
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் ..........போகாது..
அட, அட..யார் இந்தக் கவிஞர் என்று யோசிப்பதற்குள் விடை கிடைக்கிறது.......அறிவுமதி!
ஆமாம் அறிவுமதியேதான். சேது படத்தில் ‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ எழுதியவர். சிறைச்சாலை படத்தின் அத்தனைப் பாடல்களும்..குறிப்பாக ‘செம்பூவே’. ஜெயம் படத்தில் ‘கவிதையே தெரியுமா’, திருமலை படத்தில் ‘அழகூரில் பூத்தவளே’, ரன் படத்தில் ‘பொய் சொல்லக்கூடாது காதலி’, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று’,ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உதயா படத்தில் ‘உதயா உதயா உளறுகிறேன்’,தில் படத்தில் ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி’, தூள் படத்தில் ‘மதுரவீரன்தானே’ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதிய அதே அறிவுமதி...
திடீரென்று ஒருநாள் ‘இனிமேல் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதப்போவதில்லை’ என அவர் அறிவித்தபோது அதிர்ந்தவர்களில் நானும் ஒருவன். அறிவுமதியை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் உலகம் பூராவும் உண்டு. திரைப்படத்துறையில் கொள்கை கோட்பாடு என்றெல்லாம் வைத்துக்கொண்டு செயல்படுவது கடினம். ஆனால் அப்படிச்சில கோட்பாடுகளுடன் செயல்படுபவர் இவர். “ஆங்கிலச் சொற்கள் கலவாமல்தான் பாட்டெழுதுவேன்” என்று அறிவித்துவிட்டு அதன்படியே ஏறக்குறைய நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி வெற்றிகரமாக உலா வந்துகொண்டு இருப்பவர். திடீரென்று எதற்காக இப்படியொரு முடிவு?
நான் உட்பட எத்தனையோ நண்பர்கள் எடுத்துச்சொல்லியும் தம்முடைய முடிவில் உறுதியாக இருந்தவரை எப்படியோ மனம் மாற்றி மறுபடியும் பாடல்கள் எழுத அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன் தாம் இயக்கி நடிக்கும் மந்திரப்புன்னகை படத்திற்காக.
இளைய தலைமுறை இயக்குநர்களில் மிகச்சிறப்பாக ஒரு படத்தைத் தந்துவிட்டு அடுத்த படத்திலேயே முகவரி தொலைத்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில் அடுத்தடுத்துத் தம்மை நிரூபிக்கிறவர்களே சாதனையாளர்கள். அந்த வரிசையில் நிற்பவர் கரு.பழனியப்பன். ‘பார்த்திபன் கனவு’ படத்திற்குப்பின் ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ என்று தமது இருப்பை நீரூபித்தவர் அவர். கதை சொல்லும் விதமும், காட்சி அமைப்புக்களும், செறிவான வசனங்களும் அவரது பலங்கள்
. இவையில்லாமல் முன்னாள் பத்திரிகையாளர், உணர்வுள்ள தமிழ் ஆர்வலர், தெளிவான சொல், தெளிவான செயல் என்று உழல்பவர் என்பதும் அவரை வெற்றியாளர்கள் வரிசையில் என்றைக்கும் நிறுத்தப்போதுமானவை. மந்திரப் புன்னகைப் படமே ஒரு வித்தியாசமான கதைக்களம்தான். அறிவுமதியை “நீங்கதான் எல்லாப் பாடல்களும் எழுதணும். வித்யா சாகரும் நீங்கதான் வேணும் என்கிறார்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக மறுபடியும் பாடலெழுத கூட்டிவந்திருப்பதற்காகவே கரு.பழனியப்பனை தாராளமாக வாழ்த்தலாம்.
மந்திரப்புன்னகையின் இசை வித்யா சாகர்! ‘மொழி’ படத்தின் ‘காற்றின் மொழி ஒலியா இசையா’,உயிரோடு உயிராக படத்தின் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களின் மூலம் காதுகளில் தேன் தடவும் வசீகரம் தெரிந்த வித்தைக்காரர் அவர்.
இவர்கள் இருவரின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப மணிமணியாக நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார் அறிவுமதி.....’மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
கூச்சம் அவிழ்கையிலே
உடல்மாற்றி நுழைந்துவிட்டேன்’ என்று அற்புதக்காதல் பேசுகிறது பாடல்.
சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் வந்திருக்கும் கண்ணன் பாட்டு உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு ஆயிரம் செய்திகளைச் சொல்லக்கூடும். குறிப்பாக ‘உண்டு எனலாம் இல்லை எனலாம்- இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்’ என்ற வரிகளில் புதைந்திருக்கும் ரகசியம் என்னவென்பதை அறிவுமதியே ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தார்.”கண்ணன் என்ற சொல் வரும் இடத்தில் எல்லாம் அண்ணன் என்று போட்டுப்பாருங்கள். பொருள் புரியும்”.
அறிவுமதியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நான் அறிவேன். அன்பைப் பொழிவதில் இவரைப்போல் இன்னொருவரைப் பார்க்க முடியாது. குழந்தையைப் போலப் பழகுவார். தாயைப்போல அன்பு காட்டுவார். பிலிமாலயா ஆசிரியரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் ‘தைப்பொங்கல்’ படத்தை இயக்க ஆரம்பித்து படப்பிடிப்பிற்காக பெங்களூர் வந்தபோது அவருடன் உதவி இயக்குநராக வந்தவர் அறிவுமதி. அதன்பிறகு அந்தப் படம் முடியும்வரை அடிக்கடி மண்டியாவில் சந்தித்துக்கொள்வோம்.
பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றினை நடத்தினார்கள். அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்தபோது முதுகில் கொஞ்சம் பலமான அடி விழுந்தது. அதிர்ந்து திரும்புவதற்கு முன்னால் அப்படியே வந்து கட்டிக்கொண்டார் அறிவுமதி. “என்ன எங்க ஊருக்கு வந்துட்டு என்னை இன்னும் பார்க்காம இருக்கீங்களா?” என்றபடி. அன்று மாலை நானும் அறிவுமதியும் கவிஞர் சுரதாவுடன் பூம்புகார் கலைக்கூடம் சென்றுவந்தோம்.
தமிழ்க்கவிஞர்களிலேயே அதிகமான உலக நாடுகளுக்குச் சென்று வந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். தமிழர் வசிக்கும் நாடுகளுக்கெல்லாம் சென்று தமிழ் மணத்தையும் தமிழ் உணர்வையும் பரப்பி வந்திருக்கிறார் இவர். அந்தவகையில் இவரை உலகத்தமிழர்கள் தங்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடுகிறார்கள். எத்தனை நாடுகள் சுற்றி வந்தபோதும் இவரது பேச்சும் பழக்க வழக்கங்களும் மண் சார்ந்தவை; மரபு சார்ந்தவை. தன்னுடைய வேர்களைத் தமிழ்நாட்டு கிராமங்களில் பதித்து கிளைக்கரங்களால் உலகு தழுவும் கவிஞனாகவே விளங்குவதுதான் இவரின் தனிச்சிறப்பு.
முப்பத்திரண்டு பக்கங்களுக்கும் குறைவான மிக ஒல்லியான ஒரு புத்தகம்
என் பிரிய வசந்தமே’. அந்தப் புத்தகத்தின் மூலம்தான் தமிழ் இலக்கிய உலகில் நுழைகிறார் அறிவுமதி. அதிலுள்ள காதல் கவிதைகளை அப்போது நான் சாவியில் எழுதிக்கொண்டிருந்த ‘கங்கையெல்லாம் கோலமிட்டு.......’ நாவலில் பயன்படுத்துகிறேன். கையெழுத்துப் பிரதியில் அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர் சாவி எனக்கு போன் செய்து”யார் அது அறிவுமதி? அவர் எழுதிய கவிதைகளை முழுவதும் படித்துப்பார்க்காமல் பிரசுரிக்க முடியாது” என்கிறார். உடனடியாக அவருக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்த சாவி,”அருமையா எழுதி இருக்கார் சார். பின்னாடி பெரிய ஆளா வருவார்” என்று சொல்லிப் பிரசுரம் செய்கிறார்.
அப்போது பெங்களூரில் இருந்த சுஜாதாவுக்கு அந்த நூலைக்கொடுத்தேன். “யோவ் பிரமாதமா எழுதறாருய்யா. ரொம்ப நல்லாருக்கு” என்கிறார்.
பாரதிராஜாவிடமும் பாலுமகேந்திராவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டே கவிதை உலகில் நடை போடுகிறார் அறிவுமதி. ஒரு கட்டத்தில் இவரை உச்சிமுகர்ந்து தம் சொந்தப் பிள்ளைப் போலவே தூக்கிவைத்துக்கொண்டாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். அப்துல் ரகுமானின் பயிற்சி அறிவுமதியை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது. அவரே பாராட்டும் வண்ணம் ஹைக்கூ கவிதைகளை எழுத ஆரம்பிக்கிறார். ஹைக்கூவுக்குப் புதிய முகவரி கிடைக்கிறது.
இவரது ‘நட்புக் காலம்’ என்ற கவிதை நூல் தமிழின் இளைய தலைமுறையினரின் தேசிய நூலாக அறியப்படுகிறது. இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று பிரதிகள் விற்றுத்தீர்கின்றன.
இப்படியிருந்த நிலையில் திடீரென்று திரைக்கு எழுதுவதை நிறுத்துகிறேன் என்று அறிவிப்பதா?.................................................
போட்டி, பொறாமை, சூழ்ச்சி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் வஞ்சகம் என்றெல்லாம் அறியப்பட்ட
திரையுலகில் ஒரு அபூர்வ மனிதர் இந்த அறிவுமதி. 73, அபிபுல்லா சாலை அலுவலகம்(புதிய எண்;189) திரைத்துறையில் நுழைவதற்கென வரும் இளங்கவிஞர்களுக்கு ஒரு அடைக்கல ஆலமரம். அங்கு அடைக்கலம் தந்ததோடு நில்லாமல் பல தம்பிமார்களைக் கவிஞர்களாகத் திரையுலகில் பவனிவர ஏற்பாடு செய்தவர் அறிவுமதி. இன்றைய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரும் தமிழர்கள் பெருமையை தேசிய அளவில் தூக்கி நிறுத்தியவருமான இயக்குநர் பாலாவைத் திரையுலகிற்குக் கூட்டி வந்தவரும் அறிவுமதிதான். அறிவுமதியின் இத்தகைய வெள்ளந்தியான உள்ளம்தான் நடிகர் சிவகுமார் போன்ற பெரிய மனிதர்களின் அன்பை அறிவுமதி பெறவும் காரணமாக இருந்திருக்கிறது.
மந்திரப்புன்னகை நல்ல செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது. மீண்டும் வந்திருக்கிறார் அறிவுமதி.

Sunday, September 19, 2010

வைரமுத்துவின் சர்ச்சையைத் தூண்டும் பேச்சுக்கள்.


ந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கிறிஸ்தவர்களின் மனதைப் புண் படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ரஜினியை வானளாவப் புகழும் உரிமை வைரமுத்துவுக்கு நிச்சயம் உண்டு. அதற்கான தேவைகள் அவருக்கு இருக்கலாம். அதற்காக அவர் வரம்பு தாண்டிய நிலையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனம்போன போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப்போகலாம் என்று நினைத்துப் பேசியிருப்பது இங்கிதமற்றதாகவே இருக்கிறது.
பிரச்சினையே, தன்னுடைய வழக்கமான விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரங்களைச் சொல்லிப் பேச்சைத்தொடராமல் ரஜினிகாந்த் பாணியில் குட்டிக்கதை சொல்லிப்பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்று வைரமுத்து நினைத்ததுதான் ஏடாகூடமாகப் போய்விட்டது. ரஜினி பிரபலமானவர், மிகமிகப் பிரபலமானவர் என்று சொல்லவந்த வைரமுத்து இதற்காக அமிதாப் பச்சன், ஒபாமா என்று ஆரம்பித்து போப் ஆண்டவர்வரை அத்தனைப் பேரையும் இழுத்து அவர்களின் தலைகளையெல்லாம் உருட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் சாய்த்துவிட்டு இவர்கள் அத்தனைப்பேரையும் விட ரஜினி பிரபலமானவர் என்று முடிக்கிறார். இதற்கென அவர் தேர்ந்தெடுத்தது ஒரு குட்டிக்கதை. இந்தக் குட்டிக்கதையும் கூட இவரது சொந்தச் சரக்கு கிடையாது. ஏற்கெனவே வழங்கி வருகிற ஒன்றுதான். யாருக்காகச் சொல்கிறோமோ அவருடைய பெயரைச் செருகி மற்ற கதாபாத்திரங்களையெல்லாம் அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்ற வகை கதைதான் அது.
அமிதாப் பச்சனும் ரஜினியும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார்களாம். அமிதாப்பை யாரென்று தெரியாததால் ரஜினியை மட்டும் தேநீருக்கு அழைத்தாராம் ஒபாமா. அமிதாப் ஆச்சரியத்தில் அதிர்ந்து போய்விட்டாராம். இதுவாவது பரவாயில்லை. அடுத்து அமிதாப்பும் ரஜினியும் வாடிகன் நகருக்குச் சென்றார்களாம். அங்கிருந்த போப் ஆண்டவர் ரஜினியை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு அவரை மட்டும் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றாராம். அமிதாப் மயங்கிக் கீழே சரிந்துவிட்டாராம். அவர் மயங்கியதற்குக் காரணம் போப் ஆண்டவர் ரஜினியைத் தெரிந்து வைத்திருந்தது அல்ல, மாறாக அமிதாப் பக்கத்திலிருந்த ஒருவர் அமிதாப்பிடம் “மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினி. வெள்ளை ஆடையுடன் நிற்கிறாரே அவர் யார்?” என்று வினவியதுதானாம்.
இதுதான் வைரமுத்துவின் குட்டிக்கதை. போப் ஆண்டவரை இதைவிடவும் மோசமாக அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
ரஜினி என்ற தான் பாட்டெழுதும் படத்துக் கதாநாயகனைப் புகழ வேண்டும் என்பதற்காக உலகத்தலைவர்களெல்லாம் அனுமதி பெற்றுச்சென்று வணங்கும் ஒரு பெரியவரை –ஒரு மிகப்பெரிய மதத்தின் தலைவரை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா?
வைரமுத்துவுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை மட்டும்தானா?
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுபோல் பதில் சொல்வாரெனில் வைரமுத்துவுக்கு ஒரு பணிவான கேள்வி.
இதே கதையை அமிதாப் என்ற கதாபாத்திரத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கலைஞரைக் கதாபாத்திரமாக வைத்து இதே கதையைச் சொல்ல வைரமுத்து தயார்தானா?
அப்படி உருவாகும் இந்தக் கதையில் கலைஞர் பிரபலமானவரா, ரஜினி பிரபலமானவரா?
என்ன பைத்தியக்கார ஒப்புமைக் கதை இது?
இப்படியெல்லாம் அபத்தக்கதைகள் சொல்லக்கூடாது என்பதுகூடவா வைரமுத்துவுக்குத் தெரியாது?
போப் ஆண்டவரை வெவ்வேறு வகைகளில் அவமானப்படுத்திய பிரிட்னி ஸ்பியர்சும், மடோன்னாவும் பிற்பாடு மன்னிப்புக் கேட்ட கதைகளையெல்லாம் வைரமுத்து தெரிந்து வைத்திருக்கக் கூடும். தெரிந்தும் இம்மாதிரிக் கதையைச் சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஆனால் வைரமுத்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசுவது இது முதல் முறை அல்ல. கண்ணதாசனுக்கு அடுத்து இலக்கியச் சாரத்துடன் பாடல் எழுத வந்தவர் புலமைப்பித்தன். அவருக்கு அடுத்து புதுக்கவிதைப் பாசறையிலிருந்து கவனத்துக்குள்ளானவர் வைரமுத்து. கொஞ்சம் பிரபலமானதுமே “ நான் கண்ணதாசனைவிட உயரமானவன். ஏனெனில் நான் கண்ணதாசனின் தோள்மீது உட்கார்ந்திருக்கிறேன்” என்று பேசினார்.
“வைரமுத்து இப்படியெல்லாம் அபத்தமாக உளறக்கூடாது. அப்படியானால் பழனிபாரதி உன்னைவிட உயரமானவன். ஏனெனில் அவன் உன் தோள் மீது உட்கார்ந்திருக்கிறான்” என்று பதில் சொன்னார் ஒரு கவிஞர்.
சில நாட்கள் சென்றதும் “ இவ்வளவு நாட்கள் தமிழ் எனக்குச் சோறு போட்டது; இனிமேல் தமிழுக்கு நான் சோறு போடுவேன்” என்று பேசினார். தமிழ் அறிஞர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். பிறகு வருத்தம் தெரிவித்தார்.
பிறகு திடீரென்று, “ என்னை என்னுடைய மகன் கபிலன் மட்டும்தான் வெல்லமுடியும்” என்று பேசினார்.
பேசி முடிப்பதற்கு முன்பேயே கபிலன் என்ற வேறொரு கவிஞன் புறப்பட்டுவந்து “உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா?” என்ற பாட்டெழுதி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினான். இன்றைக்கும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து வைரமுத்துவை விடவும் அதிகமான நல்ல பாடல்களை எழுதிவருகிறான் அந்தக் கவிஞன்.
இதோ இப்போது போப் ஆண்டவர் பற்றிய பேச்சு. இன்னொரு சர்ச்சைக்கான திரியை வைரமுத்து கொளுத்திப் போட்டிருக்கிறார். என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.

Wednesday, September 1, 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்-ஒரு விமர்சனம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரை முழுவதுமாகப் படித்துவிட்டேன். அறுநூறு ரூபாய் விலைக்கு நல்ல கனமான புத்தகம்.கன்னியாகுமரியில் கடலில் நிற்கும் வள்ளுவர் இங்கே அட்டையில் நிற்கிறார். மலரைத் திறந்ததும்....வேறு யார்? கலைஞர்தான். எழுதுகின்ற போஸில்..உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடல்..அதுவேதான். “தமிள் மொளி தமிள் மொளி ...........தமிள் மொளியாஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்” என்று கமலஹாசன் மகள் கத்துகின்ற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தொடங்குகின்ற பாடல். தமிழின் இலக்கிய மேடைகளில் சொல்லப்படும் எல்லா வரிகளும் வருகின்றன. “கலாஜ் என்று அழைக்கப்படும் ஓவியம் பார்த்திருக்கிறோமே, அழகழகான வண்ணப்படங்களையெல்லாம் வெட்டியெடுத்து ஒரே இடத்தில் ஒட்டி வேறொரு உருவ ஓவியமாகச் செய்வது.. அதுபோல் இது கலாஜ் கவிதை. கலைஞர் கவிதையிலும் புதுமை செய்திருக்கிறார்” என்று சுபவீ இதற்கு விளக்கமளித்தார். ஆனால் தமிழ்ப்படங்களைக் கிண்டலடித்து ‘தமிழ்ப்படம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் “ஓ மஹ ஸீயா ஓ மஹ ஸீயா நாக்குமுக்க நாக்கா ஓ ஷகலாகா ஓ ரண்டகா” என்றொரு பாட்டு வரும்.
இன்றைய தமிழ்ப்பாடல்களில் வரும் இம்மாதிரியான இலக்கிய நயம் ததும்பும் செந்தமிழ் வரிகளையெல்லாம் தொகுத்து ஒரு பாடல் செய்திருப்பார்கள். அந்தப் பாடல் எதற்காகவோ நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இளமையான தமிழ்த்தாயை ஓவியர் மணியம் செல்வன் அழகாக வரைந்திருக்கிறார். அரசு சம்பிரதாயப்படி குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி, கவர்னர், முதல்வர் எல்லாரும் வாழ்த்துச் செய்தி சொல்கிறார்கள். செம்மொழி அங்கீகாரம் கிடைத்த வரலாற்றைக் கலைஞர் சொல்லியிருக்கிறார்.
கலைஞரின் ஓ மஹ ஸீயா பாடலுக்கு – மன்னிக்கவும்-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலுக்கு , கனிமொழி விளக்கம் தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து செம்மொழித் தமிழ் பற்றிய சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. பரிதிமாற் கலைஞர், கால்டுவெல், ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டு, வா.செ. குழந்தைசாமி, ஜி.ஜான் சாமுவேல், இரா.குமரவேலன், ம.ர.பொ.குருசாமி, ப.மருதநாயகம், ஆகியோரின் கட்டுரைகள் ஒரு மொழிக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கான தகுதிகளையும் அந்தத் தகுதி தமிழுக்கு இருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். செம்மொழி மாநாடு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானதிலிருந்து பெரிதும் பேசப்பட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற கட்டுரையும் இருக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரையை வாசிக்கும்போதுதான் இவருக்குத் தேவைக்கும் அதிகமான விளம்பரம் கொடுக்கப்பட்டதோ என்ற ஐயம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
இதற்கடுத்து கவிதைகளின் அணிவகுப்பு துவங்குகிறது. அப்துல் ரகுமான், வாலி, வைரமுத்து துவங்கி முப்பத்து நான்கு கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். இன்றைய தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான அறிவுமதி தவிர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர்க்கப்பட்டதற்கு ஒருவேளை செம்மொழி பற்றிய அவருடைய இந்தக் கவிதை காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
சென்ற இடமெல்லாம்
செருப்படி வாங்கி
உதடுகளில் குருதி கசிய
பேசப்படுவதால்
எம்மொழி
செம்மொழியாயிற்று.
மற்றபடி, இந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பான கவிதையாக எதையும் குறிப்பிட முடியவில்லை.
அடுத்தது கலையும் பண்பாடும் என்ற தலைப்பில் சில அரிய கட்டுரைகள் உள்ளன. கொங்குக் கலைவளம், நாடக உத்திகள், கொங்குநாட்டுச் செப்புத்திருமேனிகள், நாட்டுப்புறக் கலைகள், சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கலை, நாடகக் கலையும் நிகழ்த்துகலையும் சிலப்பதிகாரமும், பழந்தமிழிசையும் இன்றைய இசையும், தமிழக ஆடற்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை என்று முயன்று அரிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட கட்டுரைகளாக இவற்றைச் சொல்லலாம்.
அடுத்தது தமிழும் சமயங்களும் பற்றிய கட்டுரைகள்... இதிலும் சில கட்டுரைகளில் முயன்று நல்ல தகவல்கள் தந்திருக்கிறார்கள். சைவம், வைணவம்.....இவற்றைத்தாண்டி, மடங்கள் வளர்த்த தமிழ் ,பௌத்தம், கிறிஸ்துவம், இசுலாமியம், சமணம் என்று வரிசையாக நிறைய கருத்தாக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. எஸ்.ஜெகத்ரட்சகன், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு ஊரன் அடிகளார் ஆகியோரின் கட்டுரைகள் நல்ல செறிவுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கு சமணத்தின் பங்குபற்றி முன்னாள் காவல்துறை அதிகாரி சு.ஸ்ரீபால் எழுதியுள்ள கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. கிறிஸ்தவத்தின் தமிழ்க்கொடை என்ற கட்டுரையில் முனைவர். சூ.இன்னாசி ஆச்சரியப்படும் அளவு தகவல்களைத் தந்திருக்கிறார். கட்டுரையை முடிக்கும்போது, “இவையெல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்தவர்களின் தமிழ்க்கொடை ஒன்று உள்ளது. அது வேறு எச்சமயத்திலும் காணப்படாத கொடையாகும். கிறிஸ்துவச் சமய வழிபாடுகளில் மட்டும்தான், தமிழகத்தில் எவ்விடத்தும், எக்கிறிஸ்துவப் பிரிவிடத்தும், எவ்வகை வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் , தாய்மொழியாம் தமிழிலேயே நடைபெறுவது என்பதாகும் எனலாம்” என்று முடிக்கிறார். முனைவர் க. நெடுஞ்செழியனின் ‘தமிழர் மெய்யியலில் இன்மை’ கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘ஆரியர் வருகைக்கு முற்பட்டதும் வேதங்களுக்கு மாறானதுமான சிந்தனை மரபு ஒன்று உண்டு’ என்று கூறி மெய்யியல் தென்னக மரபிற்கு மட்டுமே உரிய அதிலும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய கோட்பாடு’ என்று குறிக்கிறார்.
‘பாட்டும் படமும்’ என்ற தலைப்பில் சங்கத்தமிழ் வரிகளுக்குப் பிரபல ஓவியர்கள் படங்கள் வரைந்திருக்கிறார்கள். எல்லாருமே பிரபல வாரப்பத்திரிகைகளில் படங்கள் வரைகிற ஓவியர்கள். எம்மாதிரி பாத்திரங்கள் என்றாலும் ஒரேமாதிரி படம் வரையும் ராமு இதில் கொஞ்சம் வித்தியாசமாக வரைந்திருக்கிறார்.
அடுத்தது இலக்கியக் கட்டுரைகள். வெ. இறையன்புவின் ‘கம்பரும் உடலசைவு மொழிகளும்’ கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு நின்றுவிடுவது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் கோட்பாடு.

இவர்கள் கண்ணோட்டத்தில் தமிழின் இலக்கிய வளர்ச்சி என்பது பாரதிதாசனோடு முடிந்து போய்விடுகிறது. அதனால் கண்ணதாசனின் பெயர் தவறிப்போய்க்கூட வந்துவிடக்கூடாது என்பதில் திராவிடக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதிகள் மிகுந்த கவனமாயிருப்பது இந்த நூலிலும் தெரிகிறது. ஆனாலும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. கவிஞர் சக்திக்கனல், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், க.திருநாவுக்கரசு ஆகியோர் கண்ணதாசனைக் குறிப்பிடுகின்றனர். ‘கவிஞரின் திரைப்பாடல் ஒவ்வொன்றும் காவியம்’ என்கிறார் சிற்பி.

பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு ஓரத்தில் கட்டம் கட்டி இடம் ஒதுக்குவதுபோல ஒரு ஓரத்தில் ‘வாழ்க’ என்று தலைப்பில் கவிஞரின் ‘தமிழனெங்கிருந்தானேனும் தமிழனே பிறப்பால் நெஞ்சால் அமிழ்தெனும் மொழியின் பிள்ளை’ என்ற கவிதையின் ஒரு அடியை மட்டும் போட்டு வைத்திருக்கின்றனர். இதனை இங்கே இவ்வளவு விரிவாக குறிக்கக் காரணம் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணர்வில் கலந்துவிட்ட ஒரு கவிஞனைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
‘இலக்கணமும் மொழியியலும்’, ‘தொல்லியல்’, ‘ஆட்சித்தமிழ்’, ‘அறிவியல் தமிழ்’ ஆகிய தலைப்புக்களில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன.

சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள், தமிழர்களின் பழங்காசுகள், தமிழ் மாந்தர் தோற்றம், தமிழக நில ஆய்வுகள், அரிக்கமேடு அகழாய்வு, கடல் ஆய்வுகள், அயல்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள், பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடுகளும் என்ற வசீகரமான தலைப்புகளில் நிறைய ஏக்கப்பெருமூச்சுக்கள்தாம் உள்ளன.
அறிவியல் தமிழ்- தலைப்பிலான கட்டுரைகளும் மேலோட்டமான உணர்வில் மாநாட்டு மலருக்கு சீக்கிரம் எழுதித்தரவேண்டுமே என்ற அவசரத்துக்கு எழுதப்பட்டன போன்றே தெரிகின்றன.
முனைவர்கள் கே.பி.அறவாணன், ஏ.ராமசாமி, டி.என். ராமச்சந்திரன், என்.அருள், ஏ.தட்சணாமூர்த்தி, எம்.சோலயன், அமுத பாண்டியன் மற்றும் திரு எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இப்படியான கட்டுரைகளை இம்மாதிரி மலர்களில் எழுதுவதில் பெரிய அளவில் பயன்கள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில ஊடகங்களில் இவர்களுடைய கட்டுரைகள் தமிழைப் பற்றியவை-திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். கன்னடத்தைச் சேர்ந்த மொழி அறிஞர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் எப்படியேனும் அங்குள்ள ஆங்கிலப்பத்திரிகைகளில் ஊடுருவி கர்நாடகத்தைப் பற்றியும் கன்னடத்தைப் பற்றியும் எழுதிக்குவிக்கிறார்கள். சரக்கு கொஞ்சமாயிருந்தாலும் அடுத்தவனிடம் சென்று சத்தம்போடுவதைத் தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த நம்ம ஆள் என்ன செய்கிறான் என்றால் இவனும் ஒரு ஆங்கிலேயனைப்போல் வேடம் போட ஆரம்பித்துவிடுகிறான். தமிழாவது, மண்ணாங்கட்டியாவது.......நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் கன்னடத்துக்கு ஏழு ஞானபீடப் பரிசுகள். தமிழுக்கு இரண்டே இரண்டு.
தமிழனுக்கு யாரைக்கொண்டாடுவது என்பதில் இடியாப்பச் சிக்கல். இந்த மலரையே எடுத்துக்கொண்டோமென்றால் இக்காலத்தமிழ் இலக்கியத்துக்கு என்ன இடம் என்று பார்த்தோமானால் ஒன்றுமே இல்லை. ‘படைப்பிலக்கியம்’ என்பது இவர்களுக்கு பராசக்தி, மனோகரா, ஓர் இரவு என்பதோடு நின்று விடுகிறது. கவிதைகளுக்கு வெறும் பாரதிதாசன். ஆயிற்றா? அச்சு ஊடகங்கள் வர ஆரம்பித்ததிலிருந்து தமிழை வீடுவீடாகக் கொண்டுசென்று வளர்த்தார்களே கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,நா.பா., ராகி.ரங்கராஜன், சாண்டில்யன், கோவி.மணிசேகரன் .........இவர்களுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விஞ்ஞானமும் ஆங்கிலமும் படித்த தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா அந்த வித்தக எழுத்தாளனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..........கோடிக்கணக்கான மக்களைத் தன்னுடைய தமிழைப் பாடவைத்துக்கொண்டிருக்கும் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை.
இவர்களைப் பற்றிய தனித்தனியான கட்டுரைகள் மலரில் அணிவகுத்திருக்க வேண்டாமா?
தமிழ் என்றால் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆரம்பித்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்களும் இலக்கிய மலர்களும் தயாரித்துக்கொண்டிருந்தால் தற்கால இலக்கியத்துக்குக் கொடுக்கப்படும் எந்தப் பரிசும் எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ன?
இப்போது புரிகிறதா வங்காளத்துக்கு ஐந்து ஞானபீடம், கன்னடத்துக்கு ஏழு, மற்ற பல மொழிகளுக்கு நான்கிற்கும் மேல்.

தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு. மாநாட்டைப்போலவே மலரையும் தற்காலப்படைப்பிலக்கியம் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையைப் பெயருக்குப்போட்டு மற்றபடி எந்த விவரமும் வந்துவிடாதபடிக்கு பத்திரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சிவகுமாரும் சூர்யாவும் கபிலர் குறிப்பிட்ட நூறு மலர்களைக் கூட்டங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்த நூறு மலர்களின் அரிய புகைப்படங்களும் இந்த மலரில் இருக்கின்றன. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
மொத்தத்தில் மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................

Tuesday, August 17, 2010

பத்திரிகையாளர் ஞாநியின் விலகலும் அதுபற்றிய பரபரப்புக்களும்.........


ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ வலைத்தளங்களில் பெரிய அளவில் பரபரப்பான பகிர்வுகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது.
ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால் சோவுடைய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் அல்ல. அவருடைய அபரிமிதமான நகைச்சுவை உணர்வினாலும் அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பதனாலும் அவரது எழுத்துக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை நிறையப்பேர் படிப்பார்களே தவிர அவரது கருத்துக்களை யாரும் சீரியஸாகக் கருதுவதில்லை.
சின்னக்குத்தூசி சளைக்காத புள்ளிவிவரங்களுக்குச் சொந்தக்காரர். தாம் எடுத்துக்கொண்ட கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வாதங்களை அடுக்குவதில் கைதேர்ந்தவர். ஆனால் அவர் குறிப்பிட்ட இயக்கத்துக்கு மட்டுமே வார்க்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்.
சுதாங்கன் இந்த வரிசையில் நன்றாக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் வேறுபக்கம் போய்விட்டார்.
அந்தக்காலத்தில் டி.ஆர்.ஆர் என்றொரு எழுத்தாளர் இருந்தார். மக்கள் குரலில் எழுதுவார்.மகா போரடிக்கும் விதத்தில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர் அவராகத்தான் இருக்கும்.
சோலை, ஜென்ராம் போன்றவர்களின் ஆழ்ந்த விவரங்களுக்கும் இயல்பான மொழிநடைக்கும் இணையானதல்ல ஞாநியின் எழுத்துக்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பது போன்ற சோர்வைத் தோற்றுவிக்கும் எழுத்து நடை இவருடையது. இருந்தும் ஏன் பிரபலாமானார் என்றால் அவருக்கு இடம் தந்த பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.
குமுதத்திலும் விகடனிலும் பிரபலமானவர்கள் எழுதினால்தான் பரபரப்படையும் என்பதில்லை. கோனநாயக்கன்பட்டி குரங்குசாமி என்று யாரோ ஒருவர் எழுதினாலும் உடனடியாகப் பிரபலமாகிவிடும். வெகுஜன ஊடகத்தன்மை அத்தகையது. ரஜினி படத்துப் பாடல்கள் பிரபலாக 'செய்யுள்பேரரசுவோ', 'பெரும்பேரரசு'வோ பாடல்கள் எழுதவேண்டுமென்பதில்லை. 'டிக்கி டுக்கி டோக்கா டிம்மா டும்மா மோக்கா' என்று யாரோ ஒரு புறம்போக்கு கிறுக்கி அதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துத் தள்ளிவிட்டால் மறுநாளே இதற்கு இணையான குத்துப்பாட்டு இதுவரை வந்ததில்லை என்று பதினெட்டு உலகமும் கொண்டாடத் துவங்கிவிடும். ஊடக வளர்ச்சி அப்படி.
அப்படியொரு ஊடக வளர்ச்சியின் அபத்தமான தாக்கம்தான் இந்த அங்கலாய்ப்புகள் என்று தோன்றுகிறது.
ஞாநிக்கு ஏதோ மிகப்பெரிய வாசகர்வட்டம் இருப்பதாகவும் இவர் தலையைச் சுற்றி அறிவு வட்டம் ஒளிவீசிக் கொண்டிருப்பதாகவும் இவரும் இவரது நண்பர்கள் வட்டமும் நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தாம் எழுத்துலகின் ஏகபோக சக்கரவர்த்தி என்பது போலவும் இவர் நினைப்பதுபோல்தான் பிரதமரிலிருந்து மாநில முதல்வர்வரை நடந்து கொள்ள வேண்டும் என்பதுபோலவும் நினைத்துக்கொண்டு எழுதும் மனமயக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கிறது.
எல்லாவற்றையும் விமர்சிப்பதும் குறைகாண்பதும் வேறு; எல்லாவற்றிலும் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று சட்டாம்பிள்ளைத்தனமாகக் கட்டளை இடுவதென்பது வேறு. இரண்டாவதைத்தான் இவர் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தார். அதில் சின்னப்பிள்ளைகள் கணக்காய் சொப்பு விளையாட்டு வேறு.' இந்த வாரம் இவருக்குக் குட்டு; இந்த வாரம் இவருக்குப் பூச்செண்டு' என்று வாராவாரம் இவர் உளறிக்கொட்டிக்கொண்டிருந்தது கிறுக்குத்தனங்களின் உச்சம். "இவர் இதனை இப்படிச் செய்தாரென்றால் இவருக்கு அடுத்த வாரம் பூச்செண்டு கொடுக்கத் தயங்கமாட்டேன்" என்ற பூச்சாண்டி அறிவிப்புக்கள் வேறு;
சமூகத் தளத்தின் எல்லாக் கூடாரங்களிலும் எப்படியாவது நுழைந்துவிடுவது...... அவர்கள் விரும்புகிறமாதிரியே கொஞ்ச நாட்களுக்குப் பேசிச் செயல்படுவது, அல்லது எழுதிக்கொண்டிருப்பது....சில நாட்களுக்குள்ளாகவே இவரது சுயரூபம் கலையத்துவங்கியதும் அந்த முகாமிலிருந்து இவராகவே வெளியேறிவிடுவது, அல்லது அவர்கள் வெளியேற்றுவது.........அப்படி வெளியே வந்ததும் இவர் தன்னுடைய தனித்தன்மைப் பற்றிப் பேசுவது - என்ற இந்தக் கதை அவ்வப்போது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சங்கிலியின் ஒரு தொடர்தான் இப்போதும் நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
விகடனில் எதையெதையோ எழுதிக்கொண்டிருந்து அப்படியும் தாம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனவுடன் , பதிவுலகில் சிலர் செய்வது மாதிரி (பதிவுலக நண்பர்களுக்காவது ஒரு நேர்மை இருக்கிறது.18+ என்று போட்டுவிட்டுத்தான் அவர்கள் ஜோக்குகளும் பிறவும் எழுதுவார்கள்)இவர் விகடன் பக்கங்களில் கொக்கோக புத்தகங்களை விடவும் கேவலமாக எழுத ஆரம்பிக்க , விகடனின் பாரம்பரிய வாசகர்களின் அதிர்ச்சி அலைகள் விகடன் இவரது எழுத்துக்களுக்குக் கடிவாளங்கள் போடுவதற்குக் காரணமாக அமைந்தது.
பரபரப்பாய் இருக்கிற எதையும் அல்லது பரபரப்பாய் இருக்கிற யாரையும் பயன்படுத்திக்கொள்வது வெகுஜனப் பத்திரிகைகளின் இயல்பு. ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதை விடவும் எதிர்த்து எழுதுகிற எழுத்துக்களுக்கு மவுசு அதிகம். ஆனால், இங்கேயும் சூட்சுமமான ஒரு இறுதிக்கோடு உண்டு. ஆட்சியாளர்களைச் சீண்டலாம். அவர்களின் கவனம் கவர்ந்து அவர்களிடமிருந்து ரியாக்ஷன் வருவதுமாதிரி சீண்டலாம். மறுப்பு அறிக்கை வருகிற அளவுக்குச் சீண்டலாம். அத்துடன் நிற்க வேண்டும்.
அவர்களுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் வாங்கிக் கட்டிக்கொள்ளக் கூடாது. இந்த சூட்சுமம் தெரிந்து இயங்குகிற நிறைய விமர்சகர்கள் இருக்கிறார்கள். இந்த சூட்சுமங்களெல்லாம் ஞாநிக்குத் தெரியாது என்பதில்லை. அவரது கணக்குகளும் சூட்சுமங்களும் வேறு; இந்தக் கூடாரத்தில் இரை கிடைக்காவிட்டால் அடுத்த கூடாரம் என்பதுதான் அவர் கணக்கு.
இவர் கிடந்து என்னத்தையோ எழுதி வைக்க, ஆட்சியாளர்களின் கோபம் பத்திரிகைகளின் மீது திரும்ப நிர்வாகம் இவரைக் கழற்றி விட்டுவிடும். எப்போதும் இதுதான் நடக்கும் . இப்போதும் இதுதான் நடந்திருக்கிறது.
சுயமரியாதைக் கருத்துக்களுடன் பெரியார் கூடாரத்துக்குள் ஊடுருவி , அங்கிருந்து கழகக் கூடாரத்திற்கு வந்து , பிறகு அங்கிருந்தும் வெளியேறி கழக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, தமிழ் இன எதிர்ப்பு, ஈழ எதிர்ப்பு, பிரபாகரன் எதிர்ப்பு என்பதாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஞாநி.இதற்கு 'அச்சமறியா சமூக நீதிக் காவலர்' என்ற முகமூடி வேறு.
தமிழில் ஞானி என்ற பெயரில் கோவையில் அறிஞர் ஞானி இருக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் தமிழ்ச்சமூகத்துக்கானவை. அவரது ஆழ்ந்த அறிவும் அழகான சொல்லோட்டமும் படித்துக்கொண்டே இருக்கலாம், கேட்டுக்கொண்டே இருக்கலாம் வகையைச் சார்ந்தவை.
ஆனால் ஞாநியின் சிந்தனையும் கண்ணோட்டமும் பொதுவான விஷயங்களில்கூட பல சமயங்களில் நாகரிக நெறிகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
ஒரு சமயம் ஒரு பிரபல எழுத்தாளரைக் குமுதம் இணையதளத்துக்காக பேட்டி காண்கிறார் ஞாநி. அந்த எழுத்தாளர் இரு மணம் புரிந்தவர். “நீங்கள் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இரண்டாவது திருமணம் புரிந்துகொண்டது போலவே இப்போது உங்கள் இரண்டு மனைவியரில் ஒருவர் யாராவது உங்களை வைத்துக்கொண்டே இன்னொரு கணவரைத் தேடிக்கொள்ள முன்வந்தால் அதற்கு ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டு அவரை அதிர வைக்கிறார்.அந்த எழுத்தாளரும் எவ்வளவோ நாகரிகமாக பதில் சொல்லி அடுத்த கேள்விக்குள் நுழையப் பார்த்தால் இவர் பிடிவாதமாக அந்தக்கேள்வியையே மடக்கி மடக்கிக் கேட்டு நாகரிக எல்லைகளைக் கடக்கப்பார்க்கிறார். ஆண் பெண் சமத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமாம் இது. தவறு செய்த ஆண் இனத்தின் முகத்தில் அறைந்ததுபோல் கேள்வி கேட்டு நிலைகுலைய வைத்தார் ஞாநி என்று நேயர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாம்.
நியாயம் பேசுகிறேன் என்று கிளம்பிவிட்டு கலைஞரை எதிர்க்காவிட்டால் எப்படி? ஞாநியும் எதிர்ப்பார்.எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகவோ, ஜெயலலிதாவின் ஆதரவாளராகவோ இருந்துகொண்டு கலைஞரை விமர்சிப்பவர்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடுநிலை முகமூடி மாட்டிக்கொண்டு கலைஞரை எதிர்க்கிறேன் என்று கிளம்புகிறவர்கள் தங்களின் சட்டைக்கு உள்ளே நாற்றமெடுத்த அழுக்கு பனியன் போட்டிருப்பதை மறைக்கமுடியாது. ஞாநியும் அழுக்குபனியன்காரர்தான்.
இவர்கள் எல்லாருமே ஒரேமாதிரியான தந்திரவாதங்களையே எப்போதும் முன்வைப்பார்கள். கருணாநிதி தவறு செய்தாரா- கன்னாபின்னாவென்று குடும்ப உறுப்பினர்களிலிருந்து எல்லாரையும் இழுத்துப்போட்டுத் தாக்குவது-
அதே போன்ற தவறை எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ செய்திருக்கிறார்களா அதனை அப்படியே போட்டுக்கவிழ்த்து 'இந்தக் கழகங்களே இப்படித்தான்' என்று ஆரம்பித்து மறுபடியும் கருணாநிதியையே இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டியது..இந்த மாய்மாலத் தந்திரத்தை இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த அழுக்குபனியன்காரர்கள் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.
இந்த விஷயத்தில் நெஞ்சுறுதியும் நேர்மைத்திறமும் கொண்டவராக தமிழருவி மணியன் ஒருவரைத்தான் சொல்ல வேண்டும். அவர் மட்டும்தான் கருணாநிதி செய்த தவறுகளைப் பெயர் சொல்லி விமர்சிப்பார். அதே போல ஜெயலலிதாவின் தவறுகளையும் பெயர் சொல்லியே விமர்சிப்பார்.
கலைஞரை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஞாநி அவருடைய முதிர்ந்த வயதுக்குரிய மரியாதையைக்கூட தராமல் அவரது உடல் நலிவைக் குறிப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருந்தது ஆபாசத்தின் அநாரிக அடையாளம் என்றே சொல்லவேண்டும்.தமிழக முதல்வரை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்யும் ஞாநியை முதல்வர் எந்த அளவு பாதித்திருக்கிறார் என்பதற்கான நிகழ்வு ஒன்றை நண்பர் சொன்னது வேடிக்கையாக இருந்தது.
ஒருசமயம் ஞாநியின் மனைவியை நண்பரிடம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய மகளின் பெயரைச்சொல்லி 'எனது மகளின் தாயார் இவர்" என்று அறிமுகப்படுத்தினாராம். " என்னுடைய மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்" என்பது கலைஞரின் புகழ்பெற்ற சர்க்காரியா பதில்களில் ஒன்று .
ஞாநி தமது கடையைக் கல்கியில் திறக்கப்போகிறாராம். கல்கிக்கு என்ன தொந்தரவு கொண்டுவருகிறார் பார்ப்போம்.

Saturday, July 17, 2010

தமிழுக்குக் கிடைத்த முதல் ஞானபீடம்

தமிழைச் செம்மொழி என்றெல்லாம் நாம் மட்டும்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மற்றவர்களும் பார்த்து வியக்கும் அங்கீகாரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் நம்முடைய மொழிக்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் ஞானபீடம் இரண்டே இரண்டுமுறைதான் கிடைத்திருக்கிறது. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு. கன்னடம் போன்ற மொழிகளெல்லாம்கூட ஏழுதடவை எட்டுத்தடவையெல்லாம் ஞானபீடப்பரிசை வென்றிருக்கின்றன. இம்மாதிரியான சிறப்புக்களையெல்லாம் கோட்டைவிட்டுவிட்டு நமக்குள்ளே பெருமை பேசிக் கைதட்டிக்கொண்டிருப்பதிலேயே நாம் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.

அகிலன் தமிழுக்கு முதன்முதலாக ஞானபீடம் பெற்ற அந்த அற்புதமான நாளில் அவருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அகிலனுடைய மகன் அகிலன் கண்ணனும் நானும் அவருடன் டெல்லி சென்றிருந்தோம், ஞானபீடம் பரிசு நிகழ்ச்சியை ஆனந்த விகடனில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதனை 14.7.2010 விடகன் பொக்கிஷம் பகுதியில் மீண்டும் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். அந்தக் கட்டுரை இது;

ஞானபீடத்தில் தமிழ்
அகிலன் எழுதிய சித்திரப்பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்.” நாலரைக்கோடித் தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது. தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று வானபீடம் அளவுக்குல்லவா உயர்ந்துவிட்டது!”


அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப்பரிசு தமிழுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூல் மிகச்சிறந்தது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்தப் படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டார். “ பாரதத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் 'எங்கே போகிறோம்?' நாவலுக்கென ராஜாசர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்" என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசளிப்புவிழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும்(இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய் அகிலனுக்கு வழங்கினார். "இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை" என்று 'ஞானபீடம் அகிலன்' குறிப்பிட்டார். அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு,”தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச்செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளைவிடச் சிறந்த மொழி . இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால் இந்தியாவில் 60 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள்" என்று பிரதமர் ரொம்பவும் நாசுக்காக இந்திப் பிரச்சினையை நினைவுபடுத்தினார்.
"சித்திரப்பாவை இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்" என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்
இப்போது நினைத்துப்பார்க்கும்போது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த பத்து நிமிடம் கழித்து கலைந்த தலையும் சவரம் செய்யப்படாத முகமுமாக வியர்த்து விறுவிறுக்க தோளில் ஒரு ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடிவந்து என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்தார் ஒருவர்.”நிகழ்ச்சி ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார் இந்தியில்.
"இல்லை. இப்போதுதான் ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்" என்றேன்.
"இன்னும் பிரதமர் பேசவில்லைதானே" என்றார்.
"இன்னும் இல்லை" என்றேன். 'ஸ்ஸ் அப்பாடா' என்று நிம்மதியாகி உட்கார்ந்தார். அதற்குள் அதிகாரிகள் ஓடிவந்து இரண்டாவது வரிசையிலிருந்த அவரை அதிக பட்ச மரியாதையுடன் முதல் வரிசைக்குக் கூட்டிச்சென்றார்கள்........அவர் அப்போதைய பீகார் முதல்வர் கர்பூரி தாகூர். அகிலனின் விழாவில் பங்கேற்பதற்காகவே தனி விமானம் மூலம் டெல்லிக்கு வந்திருந்தாராம் அவர். அகிலனின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படித்தே அந்த அளவு ரசிகராயிருந்திருக்கிறார் தாகூர்.
நம்முடைய ஆட்சியாளர்கள் இன்றைய எழுத்தாளர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதைப் பார்த்தோமானால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறுவழியில்லை.

Friday, July 16, 2010

ஆக்டோபஸூக்கு ஒரு வேண்டுகோள்

நடந்துமுடிந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது நட்சத்திர வீரர்களை விடவும் ஜெர்மனியின் ஆக்டோபஸ் அதிகமான புகழையும் கவனத்தையும் ஈர்த்ததை சாதாரண விஷயமாகச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் எந்த அணி வெற்றிபெறும் என்பதை மிகச்சரியாக கணித்தது அந்தக் கடல்வாழ் உயிரினம்.
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியான எந்தக் காரணத்தையும் சொல்வதற்கில்லை. பகுத்தறிவு இங்கே பயன்படாது. அதிகபட்சமாக இது தற்செயல் என்று சொல்லலாம்.ஆனால் இந்த விஷயத்தில் தற்செயல் என்ற சமாதானமும் எடுபடாது. ஏனெனில் தற்செயல்கள் ஏழுமுறை எட்டுமுறையெல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ஆக்டோபஸ்ஸைப் பொறுத்தவரை இம்மாதிரியான கணிப்புக்கள் இது முதல்முறை அல்லவென்றும் ஏற்கெனவே ஈரோ2008 போட்டிகளின்போதும் இதே போல அத்தனைப் போட்டிகளிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை மிகச்சரியாக அந்த ஆக்டோபஸ் கணித்ததாகவும் அந்தக் காரணத்தினால்தான் இப்போதும் அதன் கணிப்புகளை இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்தார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஆக, இது நிச்சயம் தற்செயல் நிகழ்வல்ல என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
இப்படிச்சொல்வதால் அந்த ஆக்டோபஸ் ஏதோ தெய்வத்தன்மை வாய்ந்தது அது ஒரு அபூர்வப் பிறவி என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் அதெல்லாம் ஏமாற்றுவேலை எல்லாமே வெறும் புருடா என்கிறமாதிரியும் பிதற்றத் தேவையில்லை. அப்படிச்சொல்லவும் முடியாது. ஏனென்றால் அத்தனை நிகழ்வுகளும் ஏராளமான பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் டி .வி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில்தான் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நடந்தது.
அப்படியானால் இந்த நிகழ்வை எந்த வகையில் சேர்க்கலாம்?
அறிவியல்ரீதியாக இதற்கு பதில் சொல்லமுடியாது. பகுத்தறிவு ரீதியிலும் இதற்கு நியாயமான பதில் இல்லை. சிலர் இதனை மதரீதியாக அணுகி தீவிரமான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். எல்லா விஷயங்களையும் எதற்காக மதரீதியாக அணுக வேண்டும் என்று புரியவில்லை. எல்லாவற்றையும் மதரீதியாக அணுகியதால்தான் மீளவே முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
உலகில் நடக்கும் சில ஆச்சரியங்களுக்கு பதில் இல்லை. ஆச்சரியங்களை ஆச்சரியங்களாகவே பார்க்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தெய்வீகம் அது இதுவென்று கிளம்பினால் மூடநம்பிக்கைகள் வந்து புகுந்துகொண்டு முடைநாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். அல்லது பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டு பிராண்டிக்கொண்டிருந்தால் இருக்கிற ரசனையும்போய் வாழ்க்கையே வறட்டுத்தனமாகிவிடும்.
அதனால் உலகில் பல்வேறு விஷயங்களுக்கும் இடமிருப்பதைப்போல் ஆச்சரியங்களுக்கும் இடமிருக்கின்றன. ஆச்சரியங்களையும் ரசிப்போம்-சில சமயங்களில் கேள்விகளே கேட்காமல். சர்க்கஸையும் மேஜிக்கையும் ரசிப்பதில்லையா அதுபோல் ரசிப்போம்.
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

சில கணிப்புகளை அந்த ஆக்டோபஸ் மிகச்சரியாக கணித்திருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஆக்டோபஸ்ஸிடம் ஒரேயொரு கேள்வி. ஆக்டோபஸ் இனிமேல் ஜோசியம் சொல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்.
உலகத்தமிழர்கள் அத்தனைப்பேரிடமும் தொக்கிநிற்கும் அந்தக் கேள்விக்கான பதிலை யாராவது வாங்கித்தருவார்களா?

இதுதான் அந்தக் கேள்வி.
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?”