Monday, January 2, 2012

சுஜாதா – கமல் முதலாவது சந்திப்பு!


டிகர் கமலஹாசனை அவருடைய மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பின் சமயத்திலிருந்து அறிமுகம். குடிசை படத்தின் இயக்குநர் நண்பர் ஜெயபாரதி மூலம் பழக்கம். கமல் அந்த நாட்களிலிருந்தே இலக்கியம், விஞ்ஞானம், திரைப்படம், செக்ஸ், அரசியல் என்று எல்லா விஷயங்களும் பேசுவார். அவருடைய பொதுஅறிவு வியக்கவைப்பதாக இருக்கும். பெங்களூரில் முதன்முறையாக அவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிய பேச்சு வந்தது. “அமுதவன் அவரைச் சந்திக்கவேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். என்னைக் கூட்டிப்போகிறீர்களா? என்று கேட்டார்.

“வாருங்கள் இப்போதே போவோம் என்றேன்.

மைசூர் பக்கம் படப்பிடிப்பிற்குப் போவதற்காக பெங்களூர் வந்திருந்தார் கமல். படப்பிடிப்பு நிர்வாகிகளிடம் கேட்டதற்கு உடனடியாக மைசூர் கிளம்பவேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் “எப்படியும் அடுத்தமுறை சந்தித்துவிடுவோம். அவரிடம் சொல்லிவைத்திருங்கள் என்றார். சரியென்று சொல்லியிருந்தேன்.

அடுத்தமுறை திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தபோது நான் சென்னை வந்திருக்கும் செய்தி தெரிந்து நண்பர் எம்.எஸ்.பெருமாள் மூலம் தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அதன்படி கமலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தேன்.

அது எமர்ஜென்சி நேரம். இந்திரா காந்தியின் இருபது அம்சத்திட்டத்தை அப்போது முன்னணியிலிருந்த எல்லாக் கலைஞர்களும் பாராட்டிப் பேசுவது போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு கமல் முறை. அவருக்குத் தரப்பட்டிருந்த நிகழ்ச்சியை செய்துமுடித்துவிட்டு வந்தவர் “காரில் ஏறுங்கள். நமக்கு முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்றார்.

“என்ன? என்றேன்.

“ஒன்று, இப்போது படப்பிடிப்புத் தளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். ஜெமினி கணேசன் டைரக்ட் செய்யும் ‘லலிதா படத்தின் ஷூட்டிங். ஒரேயொரு காட்சி. அரை மணி நேரத்தில் முடிந்துவிடும். அங்கிருந்து வீட்டிற்குப் போகிறோம். வீட்டிலிருந்து ஏர்போர்ட். உங்களுக்கும் டிக்கெட் போடச்சொல்லிவிடுகிறேன். இருவரும் உங்க ஊருக்கு அதான் பெங்களூருக்குப் போறோம். அங்கே கிரிஷ்கர்னாடையும், பி.வி. காரந்த்தையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதுவும் எப்படியும் அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு நான் ஃப்ரீதான். நேரே சுஜாதா வீட்டிற்குப் போய்விடுவோம். அவரை எப்படியும் இன்றைக்கு இரவே சந்தித்துவிடலாம். நாளைக் காலை முதல் விமானம் பிடித்து சென்னை வந்துவிடுவோம். நீங்கள் கலந்துகொள்ளும் திருமணத்தில் நாளைக் கலந்துகொள்ளலாம் என்றார்.

கமலின் வேகமும் அவருடைய ஆர்வமும் மிகவும் பிடித்து இருந்தபோதிலும் என்னால் அவருடைய திட்டத்திற்கு உடன்பட முடியவில்லை. காரணம் நான் சென்னை வந்திருந்தது நண்பர் கண்ணனுடைய திருமணத்தில் கலந்துகொள்வதற்காக. கண்ணன் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகன். எனக்குச் சென்னையில் ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தந்ததே கண்ணன்தான். அவர் திருமணத்தின்போது முழுவதும் அவர் கூடவே இருப்பதற்காக வந்திருக்கிறேன். அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். இப்போது திடீரென்று காணாமல் போய்விட்டு நாளைக்காலை தாலி கட்டும் நேரத்திற்குத் திரும்பிவந்தால் நன்றாயிருக்காது என்று காரணம் சொல்லி மறுத்தேன். ஓரளவு வற்புறுத்திய கமல் என்னுடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். “சரி இந்த முறையும் சுஜாதாவைச் சந்திக்கமுடியாமல் போகிறது. அடுத்தமுறை எப்படியும் சந்தித்துவிடுவோம் என்றார். அவருடைய முகத்தில் லேசாக ஏமாற்றம் படிந்திருந்ததை உணரமுடிந்தது. ஆனாலும் விமானநிலையம் செல்லும் அவசரத்திலும் என்னை நான் இறங்கவேண்டிய திருமண மண்டபத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போனார்.

கொஞ்ச நாட்கள் சென்றிருக்கும். அப்போதெல்லாம் இப்போதுபோல் தொலைபேசி வசதிகள் பரவலாக இல்லாமலிருந்த நேரம். நான் பணிபுரிந்துகொண்டிருந்த தொலைபேசித்தொழிற்சாலையின் அலுவலகத்திற்குச் சென்னையிலிருந்து தொலைபேசி வந்திருந்தது. கமலுடைய அப்போதைய செயலாளர் சேஷாத்ரி என்பவர் பேசினார். “ஒரு நிமிடம்..... கமல் பேசுவார்என்றார். மறுநொடி கமல் போனில் வந்தார். “அமுதவன் வர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை வரமுடியுமா? என்றார்.

“சொல்லுங்க என்ன விஷயம்? என்றேன்.

“ஒண்ணுமில்லை உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அன்றைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு தேவநேயப்பாவாணர் அரங்கத்துல ‘தமிழின் பதினொன்று சிறுகதைகள் அப்படின்னு ஒரு புத்தக வெளியீட்டு விழா இருக்கு. பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ,மாலன் இவங்கல்லாம் சேர்ந்து எழுதின சிறுகதைகள் வெளியீட்டு விழா. அந்த விழாவில் எம்.பி.சீனிவாசன், பாலுமகேந்திரா கலந்துக்கறாங்க. நான் கலந்துக்கறேன். முக்கியமான விஷயம் என்னன்னா புத்தகத்தை வெளியிடறவர் சுஜாதா. அதனால சுஜாதாவை சந்திக்கிறதுக்கான சந்தர்ப்பம் தானாகவே வந்திருக்கு. அவரை பொதுமேடையில் வைச்சு முதன்முதலாக சந்திக்கிறதை நான் விரும்பலை. அங்கே போவதற்கு முன்பே அவருடைய அறிமுகம் இருக்கணும்னு விரும்பறேன். அதனால நீங்க என்ன செய்யறீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை அவரோடெயே நீங்களும் சென்னைக்கு வந்துர்றீங்க. ஒரு பத்துமணி அல்லது பதினோருமணி அளவுக்கு அவரைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா மதியம் இங்கேயே லஞ்ச் முடிச்சுப்போம். பிறகு மாலை புரோகிராம் அட்டெண்ட் பண்ண வசதியாக இருக்கும். அவரோட பேசிட்டு ஏற்பாடு பண்ணிடுங்க என்றார்.

“சரி..அப்படியே செய்திருவோம் என்றேன்.

சுஜாதாவிடம் சொன்னதற்கு “ஆமாய்யா இன்விடேஷன்ல கமலோட பேரும் இருந்துச்சி. நீங்க ஏற்கெனவே கமல் பத்திச்சொல்லியிருக்கீங்களே அதனால அங்கேயே மேடையிலேயே சந்திக்கலாம்னு இருந்தேன். இப்ப நீங்களும் சென்னைக்கு வர்றதாயிருந்தா வாங்க ரெண்டுபேரும் போய்வந்துருவோம் என்றார்.

மறுநாள் சுஜாதா போன் செய்து “அப்புறம் ஒரு சின்ன திருத்தம். மத்தியானம் லஞ்சுக்கு வரமுடியாது. பகல் உணவுக்கு கல்கி ராஜேந்திரன் கூப்பிட்டிருக்கார். தொடர்கதை எழுதறது சம்பந்தமா அவரோட பேச வேண்டியிருக்கு. அதனால அதுக்கு முன்னாடி வேணும்னா கமல் வீட்டுக்குப் போய் வந்துருவோம். பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்குக் கிளம்பிருவேன்னு சொல்லிடுங்க என்றார்.

கமலுக்கு போன் செய்து சொன்னதற்கு “சரி, பத்து மணிக்கு அவரோட வந்துருங்க. அவர் சொன்னமாதிரியே ஒரு மணிக்கெல்லாம் அவர் கிளம்பிடலாம் என்றார்.

நானும் சுஜாதாவும் சென்னை சென்று இறங்கினோம். நான் வழக்கம்போல் கண்ணன் வீட்டிற்கும் சுஜாதா மயிலாப்பூரிலிருந்த அவரது மாமனார் வீட்டிற்கும் சென்று தங்கினோம். “கமலிடம் பேசிவிட்டுச் சொல்லுங்க. எங்கே வரணுமோ நான் வந்துர்றேன் என்று சொல்லிச் சென்றிருந்தார் சுஜாதா.

காலை எட்டுமணி அளவில் நாங்கள் சென்னை வந்துவிட்ட செய்தியைக் கமலிடம் சொல்லியபோது அவர் குரலில் வழக்கமாயிருந்த உற்சாகம் இல்லை. “வந்துட்டீங்களா.. சரி, அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்து போன் செய்யுங்களேன். அல்லது உங்க நம்பர் கொடுங்க நானே பேசறேன் என்றார். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. என்னடா இது இத்தனை நாட்களும் இவ்வளவு ஆர்வமாக இருந்து நம்மை இங்கே இந்த நிகழ்வுக்காகவே வரச்சொல்லிவிட்டு இப்போது இப்படி சுரத்தில்லாமல் பதில் சொல்கிறாரே என்றிருந்தது. அவர் கேட்டபடியே நான் தங்கியிருந்த வீட்டு போன் நம்பரைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.

சொன்னபடியே சற்றுநேரம் கழித்து போன் செய்தார் கமல். “இல்லை ஒரு சின்ன சங்கடம். எனக்கு திடீரென்று ஷூட்டிங் வைத்துவிட்டார்கள். மலையாளப் படம். ஆக்சுவலி இன்றைக்கு எந்தப் படப்பிடிப்பும் இருக்கவில்லை. சுஜாதா சந்திப்பு என்பதற்கு மட்டுமே நேரம் ஒதுக்கி வைத்திருந்தேன். ஹீரோயின் கால்ஷீட் இன்றைக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஒரு பாடல் காட்சி..அதுவும் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன செய்தும் தவிர்க்க முடியாது. ஒன்று செய்யுங்களேன். சுஜாதாவை மகாபலிபுரம் கூட்டிவந்திருங்களேன். அங்கேயே சந்திப்பை வைத்துக்கொள்வோம் என்றார்.

இதெல்லாம் சாத்தியமாகிற காரியம் இல்லை என்று தோன்றிற்று. “இல்லை, சுஜாதா அப்படியெல்லாம் வருவார் என்று தோன்றவில்லை. ஒன்று செய்வோம். மாலை கூட்டம் முடிந்ததும் வேண்டுமானால் நாம் எங்காவது சந்தித்துப் பேசுகிற மாதிரி வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அதுவும் எந்த அளவு சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் இரண்டு பேருமே ஒன்றாகத்தான் பெங்களூர் கிளம்புகிறோம். மெயிலில் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறோம் என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் “அதுவும் சரிதான். அவரை சந்திக்கணும் என்று வரவழைத்துவிட்டு நான் எங்கோ போய்விட என்னைத்தேடி அவர் அலைகிற மாதிரி இருக்கக்கூடாது. சரி ஒன்று செய்வோம். நான் இப்ப காலையிலேயே ஷூட்டிங் போய் முடிந்தவரை என்னுடைய காட்சிகளை எடுக்கிறமாதிரி பார்த்துக்கொள்கிறேன். மற்ற காட்சிகளையும் ஹீரோயினையும் அவர்கள் தனியாப் படமெடுக்கும் அந்த இடைவேளையில் ஒரு அவசர வேலை என்று சொல்லி ஒரு மணிநேரம் பர்மிஷன் வாங்கி வந்திடறேன். சுஜாதாவைச் சந்தித்துவிட்டு மறுபடி சென்று ஷூட்டிங் கலந்துக்கறேன். நீங்கள் ஒரு பதினொன்றரை மணிக்கு சரியாக வீட்டுக்கு வந்துருங்க. நானும் கரெக்டாக பதினொன்றரைக்கு வீட்டுக்கு வந்துர்றேன் என்றார்.

“நீங்கள் இதற்காக மகாபலிபுரத்திலிருந்து இத்தனை தூரம் வந்துவிட்டுத் திரும்பவும் மகாபலிபுரம்வரை போகவேண்டுமே என்றேன்.

“என்ன செய்யறது சந்தர்ப்பம் அந்த மாதிரி...ஏதாவது சொல்லி பர்மிஷன் வாங்கி வரணும். இன்றைய தினத்தை மிஸ் பண்ண வேண்டாம். நான் எப்படியும் வந்துர்றேன். நீங்க அவரைக்கூட்டிட்டு வீட்டுக்கு வந்துருங்க என்றார்.

கமல் அப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம். அவருடைய இந்த செய்கை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. இது சராசரி நடிகர்களுக்கு வரமுடியாத இலக்கிய தாகம். அப்போது மிக உச்சத்திலிருந்த எழுத்தாளர் சுஜாதா. அவரை ஒரு நடிகர் இப்படியெல்லாம் முயன்று பார்க்கத்துடிப்பார் என்பதே வியப்பை உண்டுபண்ணுகிற விஷயம்தான். ஆனால் கமல் ஒரு புதுமை விரும்பி. அவரைத் தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற எண்ணம் இருந்தபோதும் அதையும் தாண்டி ஆச்சரியமாகவே இருந்தது.

சுஜாதாவிடம் போன் செய்து விஷயம் சொல்லியபோது “யோவ் வருவாராய்யா? அப்புறம் அவர் பாட்டுக்கு வராமலிருந்துட்டார்னா என்னுடைய புரோகிராம் எல்லாம் வேஸ்ட்டாயிரும். எனக்கு சாவியை சந்திக்க வேண்டியிருக்கு. போன தடவை கூட அவரைப் பார்க்கலை. அதற்கே அவர் கோவிச்சுட்டார் என்றார்.

“இல்லை நிச்சயம் வந்துருவார். உங்களை சந்திக்க அவர் ரொம்பவும் துடிச்சிட்டிருக்கார் என்றேன்.

“சரி எல்டாம்ஸ் ரோட்டுல அந்தக் கார்னர் வீடு தானே? அதான் கமல் வீடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கே வந்துர்றேன். நீங்க அங்க வந்துருங்க. கொஞ்சம் வெளிலயே நில்லுங்க. நான் வந்துர்றேன் என்றார்.

மிகச்சரியாக பதினொன்றே கால் மணிக்கெல்லாம் நானும் நண்பர் அகிலன் கண்ணனும் கமலஹாசன் வீட்டிற்குச் சென்றோம். கமல் வந்துவிட்டாரா என்று பார்ப்பதற்காக உள்ளே போனபோது வீட்டிற்குள் ஏதோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நல்ல வேளை கமல் இங்கேயே நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று பார்த்தால் இது கமல் நடிக்கும் படம்தான். ஆனால் இன்றைய படப்பிடிப்பில் கமல் இல்லை. கே.பாலச்சந்தரின் படம். கேபியும் அன்றைக்கு அங்கே இருக்கவில்லை. அவருக்கு பதிலாக அனந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவர்களிடம் சென்று கேட்டதற்கு கமல் மகாபலிபுரம் போயிருக்கிறார் என்றும் இப்போது வரக்கூடும் என்றும் சொன்னார்கள். சரிதான் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறதென்று தோன்ற காம்பவுண்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டோம்.

சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு ஆஸ்டின் கார் வந்தது. (ஆஸ்டினா மாரிஸ் மைனரா என்பது நினைவில்லை.)பழைய மாடல் கார். சுஜாதாதான் ஓட்டிவந்தார். ஏற்கெனவே அந்தக் காரைப்பற்றி அவர் சொல்லியிருந்ததாலும் பத்திரிகைகளிலும் எழுதியிருந்ததாலும் தூரத்திலிருக்கும்போதே கண்டுபிடிக்க முடிந்தது. சுஜாதாவும் எங்களைப் பார்த்து சைகை செய்தார். எங்களருகில் வந்ததும் கார் நின்றது. “என்னய்யா கமல் வந்துட்டாரா? என்றார் சுஜாதா.

“இல்லை வந்துருவார் என்று சொன்னார்கள். வாங்க உள்ளே போயிருவோம்என்றேன்.

“காம்பவுண்டுக்குள்ள காரை நிறுத்தலாம் இல்லை?

“ஓ...தாராளமாய் நிறுத்தலாம். ரொம்பப் பெரிய காம்பவுண்ட் என்றேன்.

சுஜாதா காரைக் கிளப்பினார்.

கார் நகரவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. கார் நகர மாட்டேன் என்றது.

“எப்பவாச்சும் இப்படி ஆயிரும். மாமனாருடையது. மாமனார் யாரையும் தொடவிட மாட்டார். எனக்கு மட்டும்தான் அனுமதி. நல்ல கண்டிஷன்லதான் இருக்கு. ஆனா எப்போதாவது மக்கர் பண்ணும். இப்பப்பார்த்து....... என்று சொல்லிக்கொண்டே இன்னமும் ஏதேதோ செய்தார்.

கொஞ்சம் குலுங்கி அதிர்ந்து நிறைய புகை விட்டுவிட்டு அமைதியானதே தவிர கிளம்பவில்லை.

மொத்தமாக அணைத்து திரும்பவும் ஆன் செய்து இக்னிஷனைப் போட்டு கியரை மாற்றி எந்த சாகசம் செய்தபோதும் அந்தக் கார் பிடிவாதமாய் மறுத்துவிட்டது.

ஒரு சங்கடச் சிரிப்புடன் “மெல்க்யூ கொஞ்சம் தள்ளுறீங்களா என்று கேட்டார் சுஜாதா. அவர் எப்போதும் என்னுடைய இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்.

சரியென்று சொல்லி நானும் கண்ணனும் காரின் பின்புறம் வந்து காரைத் தள்ள ஆரம்பித்தோம். ஒரு முப்பது அடி தூரம் தள்ளினால் கேட் வந்துவிடும். கேட்டிற்குள் நுழைய வேண்டும்.

தள்ளினவுடன் ஸ்டார்ட் ஆகும் என்று பார்த்தால் ஆகவில்லை. முழுவதும் தள்ளிக்கொண்டுதான் போகவேண்டும் போலிருந்தது. எங்களுடைய புஜபலம் அவ்வளவாகப் போதவில்லை போலிருக்கிறது. எவ்வளவு தள்ளியும் அங்குலம் அங்குலமாகத்தான் கார் நகர்ந்தது.

இதோ ஆயிற்று. இன்னமும் ஒரு ஐந்தடி தள்ளினால் கேட் வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டே தள்ள, சர்ர்ர்ரென்று பின்புறம் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க கண் இமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தார் கமல்.

எங்களுக்கு நடுவில் வந்தவர் சட்டென்று காரைப்பிடித்துத் தள்ள ஆரம்பிக்க திடீர் வேகத்தில் சரசரவென்று நகர்ந்தது கார்.!

காருக்கு திடீரென்று வேகம் வந்தவுடன் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த சுஜாதா கமல் காரைத் தள்ளிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தவுடன் பதறிவிட்டார். “கமல் நீங்க.....நீங்க....வேணாம் விட்டுருங்க என்று ஏதேதோ சொல்லவந்தவரை-

“சார் பிரேக்கை கீக்கைப் பிடிச்சுரப் போறீங்க. காரு நின்னுருச்சின்னா அப்புறம் தொந்தரவாயிரும் பேசாம வாங்க என்று வந்ததும் ஜோக் அடித்தார் கமல்.

நல்லவேளையாக கார் நிறுத்துமிடம் உடனடியாக வந்தது. காரிலிருந்து இறங்கிய சுஜாதா “சாரி கமல்..நீங்க வந்து என்று திணற-

“நோ......இட்ஸ் எ ப்ளஷர் என்று கைகுலுக்கினார் கமல். “ஒரு பிரபல எழுத்தாளரின் காரைத் தள்ளுகின்ற பாக்கியம் எந்த நடிகனுக்குக் கிடைக்கும்? எனக்குக் கிடைச்சிருக்கு என்ற கமல் அப்போதே ஏதோ நெடுநாள் பழகியவரிடம் பேசுவதைப் போல மிக இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

எல்லோரும் கமலுடைய அறைக்குள் சென்றோம்.

கமலுடைய அறையைப் பார்த்ததும் எல்லாருக்கும் அதிர்ச்சி; வியப்பு! அத்தனை சாதாரணமாக இருந்தது அறை. வெள்ளை விரிப்பு மெத்தையுடன் கூடிய சின்னதொரு கட்டில், தண்ணீர் பானை, நிறைய புத்தகங்கள், சுவரில் மைக்கேல் ஜாக்சன் படம் என்று மிக எளிமையாக இருந்த அறையைப் பார்த்து வியப்பு.

கட்டிலின் தலைமாட்டில் மாட்டப்பட்டிருந்த ‘அலங்காரப்பொருளைப் பார்த்து அதிர்ச்சி.என்னய்யா இது இதை எதுக்கு வச்சிருக்கீங்க?” என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சுஜாதா.

“சும்மாதான் ஒரு வித்தியாசத்துக்கு இருக்கட்டுமேன்னு வெச்சிருக்கேன் என்றார் கமல்.

காரணம் கமலின் கட்டிலின் தலைமாட்டில் இருந்தது ஒரு மண்டை ஓடு. நிஜ மனிதனின் மண்டை ஓடு! மிகவும் சிரமப்பட்டு எங்கோ ஒரு சுடுகாட்டில் இருந்து வாங்கிவந்து மாட்டி வைத்திருந்தாராம்.

பின்னர் இருவருக்குமிடையிலான பேச்சு மிகவும் சுவாரசியமாய் அமைந்திருந்தது. வீட்டிற்குள் சென்று தன்னுடைய அண்ணன் சாருஹாசனையும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த அனந்துவையும் கூட்டிவந்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் கமல்.

அன்று அப்படி ஆரம்பித்த கமல் – சுஜாதா நட்பு சுஜாதாவின் இறுதிக்காலம்வரை மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 'விக்ரம்' படம் ஆரம்பித்து நிறைய படங்களில் இருவரும் இணைந்திருந்தது மட்டுமல்லாமல் கமல் முதன் முதலாகத் தம்முடைய வீட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியபோது சுஜாதாவைக் கூப்பிட்டுத்தான் பொருத்தித் தரச்சொன்னார் என்பதுவரை மிக நெருக்கம்.

அன்றைக்குப் பேசிக்கொண்டிருந்து விடை பெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பிய கமல் “சார் நானும் கூடவே வரட்டுமா? என்றார்.

“இல்லை நீங்க ஷூட்டிங் போகணுமில்லையா? என்று கேட்ட சுஜாதாவிடம்-

“இல்லை வழியில கார் நின்னுருச்சின்னா தள்ளணுமில்ல என்று கமல் கேட்டது கமலின் அக்மார்க் குறும்பு!

Sunday, January 1, 2012

தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ப் பதிவர்களும்


ரண்டாயிரத்து ஒன்பதில்தான் இணையத்தின் பக்கம் வந்தேன். ஆரம்பத்தில் தமிழ் இணையம என்பது தமிழின் இலக்கியங்களை, படைப்புக்களைப் பதிந்து வைப்பது, எந்தத் தகவல் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வது, சங்க இலக்கியம் பூராவையும் இணையத்தில் பார்க்கமுடியும், தற்கால இலக்கியத்தையும் கொண்டுவந்துவிடலாம், வீட்டிலேயே ஒரு மிகப்பெரிய நூலகமோ, என்சைக்ளோபீடியாவோ இருப்பதற்கு சமம் என்ற அளவில்தான் அறிந்துகொண்டிருந்தேன்.

கம்ப்யூட்டரின் வருகை என்பதே முதன்முதலாக எல்லாரைப் போலவும் மானசிக எதிர்ப்புடன்தான் எனக்கும் அறிமுகம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அரசாங்கப் பணியாளர்களில் பெரும்பகுதியினர் இந்தியாவில் கம்ப்யூட்டரின் வருகையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். கம்ப்யூட்டர்

வந்துவிட்டால் பலருக்கு வேலைப் போய்விடும். பலரும் தங்கள் பணிகளை இழக்கவேண்டிவரும் என்ற கோஷம்தான் மக்கள் முன் வைக்கப்பட்டது. “ஒரு கம்ப்யூட்டர் இருநூறு பேரு வேலையைச் செய்யுமாம்லே......அப்ப நமக்கெல்லாம் வேலைப் போயிருமில்லே. திரும்ப ஊருக்குப் போயி களைப் புடுங்க வேண்டியதுதான். கம்ப்யூட்டர் வேணாமின்னு எதிர்த்து இன்னைக்கி ஆர்ப்பாட்டம். லீவு போட்டுப் போயி கலந்துக்க வேண்டியதுதான் என்று சொல்லி லீவு போட்டுட்டுப் போன பணியாளர்களை நான் அறிவேன்.

கம்ப்யூட்டரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் எல்லாம் நடந்தன. தொழிலாளர் யூனியன்கள் முறுக்கேறிய முஷ்டியுடன் கம்ப்யூட்டர் பெட்டியை உடைத்துவிட சகல ரௌத்ரங்களுடனும் தயாராக இருந்தன. ‘இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகமான நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லை. நூற்றுக்கணக்கான பேர் செய்யும் வேலையை ஒரேயொரு ‘பொட்டி செய்யிதுன்னா அப்ப இவனெல்லாம் மாற்று வேலைக்கி எங்கே போவான்? ஒண்ணு கம்ப்யூட்டர் நம்ம நாட்டுக்கு வேணாம், இல்லேன்னா ஒரு இருவது வருஷம் தள்ளி வரட்டும் என்று சில மிதவாதிகள் நியாயம் பகிர்ந்தனர். ஆனால் யாருக்காகவும் காத்திருக்காமல் எந்த எதிர்ப்பினையும் சட்டை செய்யாமல் கம்ப்யூட்டர் அது பாட்டுக்கு ஜம்மென்று வந்து இறங்கியது.

அடுத்த கட்டம் வேறொரு பரபரப்புடன் ஆரம்பித்தது.

“பரசுராமன் தன்னுடைய மகனை கம்ப்யூட்டர் படிக்க வச்சுட்டானாமில்லே........பத்தாயிரம் ரூபாய் சம்பளமாமில்லே என்ற குசுகுசு விசாரணை தொடங்கியது. கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பாடத்திட்டங்கள் புகுத்தப்பட்டு க்ம்ப்யூட்டர் சயின்ஸ் என்று அழைக்கப்பட்டது. நகரங்களில் பல்வேறு காதல்களுக்கும் இளைஞர்களின் மோதல்களுக்கும் களமாயிருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் விடைபெற்று கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டுகள் முளைத்தன.

ஆரம்ப காலத்தில் லட்சரூபாய் கட்டணத்துடன்தான் கம்ப்யூட்டர் கோர்ஸுகள் ஆரம்பிக்கப்பட்டன. கோர்ஸ் முடிந்ததும் சொந்தமாக ஒரு கணிணியும் ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உடனடி வேலை என்றும் கல்லூரி முடித்த இளைய தலைமுறைக்கு வலை விரிக்கப்பட்டது.

பின்னர் லட்ச ரூபாய் என்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு முப்பதாயிரம் ரூபாய்க்கு வந்தது. அதன்பின்னர் மேலும் குறைந்து இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பேஸிக் பாடங்கள் ஒரு சில ஆயிரங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.

வீடுகளிலும் கம்ப்யூட்டர் லேண்ட் லைன் டெலிபோன் அளவுக்கு வந்துவிட்டன. எல்லார் கைகளிலும் செல்போன் என்பதுபோல் எல்லார் வீடுகளிலும் கம்ப்யூட்டர், எல்லார் கைகளிலும் லேப்டாப் என்பது இன்னும் சில வருடங்களில் வந்துவிடலாம்...........கம்ப்யூட்டர் பயன்பாட்டை ரயில்வே புக்கிங் கவுண்டரிலும் சில வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டிலும்தான் நேரடியாகப் பார்க்க முடிந்தது. இங்கிருந்து ஊருக்குப் போவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறோம் சரி; அங்கிருந்து திரும்பி வருவதற்கும் இப்போதே இந்த ஸ்டேஷனிலேயே டிக்கெட் எடுக்க முடியும்னா கம்ப்யூட்டர் என்பது ‘படா ஆசாமியாகத்தான் இருக்கமுடியும் என்று நண்பர் ஒருவர் வியந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

இடுப்பிற்குக் கீழே எந்தவித சுவாதீனமும் இல்லாமல் வெறுமனே ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு துவண்ட கால்களுடைய பெண்மணி அவர். பெங்களூரில் வசிக்கிறார் ஜானகி என்று பெயர். துவண்ட கால்களையுடைய அந்தப் பெண்மணி இங்கிலீஷ் கால்வாயை நீந்திக்கடந்து சாதனை படைத்திருக்கிறார். இந்தச் சாதனை கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் பெண்மணியைப் பேட்டி கண்டு கல்கி பத்திரிகையில் எழுதினேன். அட்டைப்படக் கட்டுரையாகப் போட்டிருந்தார்கள். சில மாதங்கள் கழித்து ‘அந்தக் கட்டுரையை எங்கள் நாட்டுப் பாடபுத்தகத்தில் பயன் படுத்திக்கொள்ளப் போகிறோம். தங்கள் அனுமதி தேவைஎன்று சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதம் மிகவும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருந்தது. நம்முடைய கட்டுரையைப் பாடநூலில் வைக்கப்போகிறார்கள் என்ற நிறைவுடன் ஒப்புதல் தெரிவித்து சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுத நினைத்தேன். நான் பணிபுரிந்த டெலிபோன் தொழிற்சாலையின் சேர்மனுக்கு உதவியாளராயிருந்தவர் நண்பர் தேசிகன். முக்கியமான கடிதங்களையெல்லாம் அவரிடம்தான் டைப் பண்ணித்தரச்சொல்வேன். அருமையான ஆங்கிலத்தில் எழுதி எலெக்ட்ரானிக் டைப்ரைட்டிரில் மிக நேர்த்தியாக டைப் செய்து தருவார். இந்தக் கடிதத்தையும் அவரிடம் கொண்டுபோனேன். மளமளவென்று டைப் அடித்து உருவி கறுப்புப்பேனா தந்து கையெழுத்துப் போடச்சொன்னார். போட்டேன். எழுந்து அவரது சேம்பரில் புதிதாய் இடம்பிடித்திருந்த ஒரு இயந்திரத்தில் பதிந்தார். இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு ஊடுருவிய பேப்பரை உருவி எடுத்து என்னிடமே தந்து “உங்க பதில் சிங்கப்பூர் அமைச்சகத்துக்குப் போய்விட்டது என்றார்.

“என்னது? என்றேன் அதிர்ந்துபோய்!

FAX என்றார்.

கம்ப்யூட்டருக்குத் தங்கை போலும்.

இத்தனை விரைவில் இப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துக்கூட பார்த்திருக்கமுடியாது. சென்னையிலிருந்து பெங்களூருக்கு டிரங்கால் போட்டுவிட்டு அந்த போன் தொடர்பு கிடைத்ததும் நான்கு ஊருக்குக் கேட்கும்படிக் கத்தினால்தான் அந்த முனைக்கு சன்னமாகவாவது கேட்கும். வெளிநாட்டு தொடர்புகளுக்குக் கேட்கவே வேண்டாம். அந்தக் கால மாரியப்பா, ஜீவா அளவுக்குக் கத்த வேண்டும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் இருக்கும் மகள் ஜி மெயிலில் காமிராவுக்கு முன் உட்கார்ந்து பிஸா சாப்பிட்டுக்கொண்டே மணிரத்தினம் படத்து மெல்லிய குரலில் பேசினாலும் பெங்களூரோ சென்னையோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டே நாமும் ஆற அமர கம்ப்யூட்டர் மானிட்டரில் முகம் பார்த்து பதில் சொல்லிக்கொண்டிருக்க முடிகிறது.

கணிணியில் தமிழைக் கொண்டுவர முடியும் என்பதை நீண்ட நாட்களாக பார்க்கப்போகும் போதெல்லாம் சுஜாதா சொல்லிக்கொண்டே இருப்பார். முதல்முறை அமெரிக்கா சென்று அங்கு பார்த்துவந்ததைப் பற்றிப் பேசும்போது அவருடைய பேச்சு முழுக்க கம்ப்யூட்டர் பற்றியதாகவே இருந்தது. “இன்னும் கொஞ்ச நாள்ல டைப்ரைட்டிங் மெஷின் எல்லாம் போயிரும்யா. நான் கூட கம்ப்யூட்டர்லயே எழுத ஆரம்பிச்சுருவேன் என்றார்.

“தமிழ்ல எழுத முடியுமா? என்றேன்.

“ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழ்தான் கம்ப்யூட்டர் துறையில மிக வேகமாக வளர்ந்துட்டிருக்கு. சிங்கப்பூர்ல எல்லாம் கம்ப்யூட்டருக்குள்ள தமிழ் வந்தாச்சு. நமக்குத்தான் இன்னமும் கம்ப்யூட்டரே சரியா வரலையே என்றார்.

அடுத்து ஒருமுறை நண்பர் பாவை சந்திரன் மற்றும் ஒரு நண்பருடன் சென்றிருந்தபோது எங்கள் மூவரையும் அறைக்குள் அழைத்துச்சென்று புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த கம்ப்யூட்டரைக் காட்டினார். “தமிழ் சாப்ட்வேர் போட்டாச்சு. இப்பல்லாம் தமிழ்லயே டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். என்றவர் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ‘இங்கு வருகை தந்திருக்கும் நண்பர்கள் பாவைசந்திரன், அமுதவன், குமார் ஆகியோருக்கு நல்வரவு என்று டைப் அடித்துக்காட்டினார். அதுதான் கம்ப்யூட்டரில் நான் பார்த்த முதல் தமிழ்!

அதற்கு சற்றுமுன்னால் என்று நினைக்கிறேன். ஒரு நாள் சிங்கப்பூரிலிருந்து நண்பர் நா.கோவிந்தசாமி வீட்டிற்கு வந்திருந்தார். அகிலன் கண்ணன் மூலம் பழக்கமான நல்ல நண்பர் அவர். கம்ப்யூட்டரில் தமிழ் கொண்டுவருவதற்கு பாடுபட்ட முக்கயஸ்தர்களில் ஒருவர் அவர். “இன்னமும் கொஞ்ச நாட்களில் கம்ப்யூட்டர்தான் எல்லாம் என்று ஆகப்போகிறது. தமிழை கம்ப்யூட்டரில் முழுக்க முழுக்க கொண்டுவருவதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எல்லாவற்றிலும் பின்தங்கிப் போய்விடுவோம். இதற்கான திட்டங்களையும் சாப்ட்வேர்களையும் கொண்டுவந்து தமிழக ஆட்சியாளர்களிடம் விளக்கம் தந்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துச்சொல்லி அவர்களை செயல்படவைக்கலாம் என்று பார்த்தால் அதிகாரிகள் மட்டத்திலும் சரி, ஆட்சியாளர்கள் மட்டத்திலும் சரி போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. முதல்வரிடம் எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் அவர் புரிந்துகொள்ள மறுக்கிறார். “சரி...சரி...அதையெல்லாம் பல்கலைக்கழகங்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்றே பதில் சொல்கிறார். கம்ப்யூட்டர் என்பது வெறும் கல்வி சம்பந்தப்பட்டது என்று மட்டுமே அவர் நினைக்கிறார். அவர் எப்போது புரிந்துகொண்டு எப்போது சரியான நடவடிக்கைகள் எடுப்பாரோ தெரியவில்லை. ஏனெனில் இதில் அரசு செய்யவேண்டிய வேலைகள்தாம் நிறைய இருக்கின்றன. நம் ஆட்சியாளர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்பதே தெரியவில்லை என்று நிறைய வருத்தப்பட்டார். தமிழ் மூலம் கம்ப்யூட்டரில் என்னென்ன செய்யமுடியும் என்பதையெல்லாம் மிக விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர்!

இன்று கம்ப்யூட்டரில் தமிழ் வந்தே விட்டது. சமையல் ஜோசியம் வாஸ்து பகுத்தறிவு சாதிச்சண்டை மதச்சண்டை காதல் கவிதை, சிறுகதை, மொக்கை, புனைவு என்றெல்லாம் எழுதுகிறார்கள். சாருநிவேதிதா எழுதாத கெட்டவார்த்தைகளைக்கூட சர்வசாதாரணமாய் பதிவு என்ற பெயரிலும் பின்னூட்டம் என்ற பெயரிலும் எழுதுகிறார்கள். எழுத்துக்களில் வசீகரமும் அறிவுசார்ந்த வாதங்களும் எப்படி முன்வைக்கப்படுகிறதோ அதே அளவுக்கு வன்மமும் முன்வைக்கப்படுகிறது. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாம் என்பதற்கு எல்லாவிதமான வசதியையும் கம்ப்யூட்டர் தமிழ் செய்துகொடுத்திருக்கிறது. எழுதுகிறவர்கள் முகம் தெரியாதவாறு தம்மை மறைத்துக்கொள்ளலாம் என்பதும் தம்முடைய விலாசத்தை அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாதவாறு செய்யலாம் என்பதும் இதிலுள்ள வசதிகள். ஒரு சில உண்மையான பிரச்சினைகளைப் பற்றிய கருத்துக்களையோ தகவல்களையோகூட சொல்வதற்கு ஊடகங்கள் முன்வருவதில்லை என்கிற நிலைமை நிறையவே இருக்கின்ற சந்தர்ப்பங்களில் மிகவும் தைரியமாக அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கின்ற பணியையும் கம்ப்யூட்டர் மிகச்சுலபமாக நிறைவேற்றிவிடுகிறது.

சீரியஸான விஷயங்கள்தாம் என்றில்லாமல் சர்வசாதாரணமான நமக்குத்தேவையில்லாத ஆனால் நம்மைத் தேடிவந்து தொந்தரவு செய்கின்ற விஷயங்களைப் பற்றிய எரிச்சல்களையும் மனவிகாரங்களையும் கொட்டுவதற்கும் கம்ப்யூட்டர் தமிழ் நிறையவே பயன்படுகிறது(உதா; நயன்தாரா பிரபுதேவா மற்றும் பிரகாஷ்ராஜ் மறுதிருமணங்கள்)

விக்கிலீக்ஸ் அளவுக்குத் தமிழ் இணையம் இன்னமும் நாட்டைப் புரட்டிப்போடவில்லையே தவிர அப்படிப் புரட்டிப்போடுவதற்கான எதிர்கால அடையாளங்கள் நன்றாகவே தெரிகின்றன. நிறைய ஊடகங்கள் நாட்டு நடப்பின் அக்கறையோடு செயல்படுவதை சுலபமாக ஊகிக்க முடிகிறது. தமிழில் சமூக அக்கறையோடு தனிமனிதர் துதியில்லாமல் செயல்படும் இரண்டு ஊடகங்களாக வினவு மற்றும் சவுக்கு ஆகிய தளங்களைச் சொல்லலாம். (சவுக்கில் தனிமனித துதி இல்லையே தவிர தனி மனித எதிர்ப்பு மிகவும் பலமாக உள்ளது.) திரட்டிகளின் பணி மிகவும் மகத்தானது. இத்தகைய திரட்டிகள் மட்டும் இல்லையென்றால் ஈழம் மற்றும் முள்ளிவாய்க்கால் சம்பந்தமான பல தகவல்கள் தெரியாமலேயே போயிருக்கும். பல விஷயங்கள் வெளிஉலகுக்குத் தெரிந்துவிட்டதனாலேயே மேலும் பல அட்டூழியங்களைப் புரிய சம்பந்தப்பட்டவர்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்பது தமிழ் இனத்திற்கு இணையத்தினால் ஏற்பட்ட நன்மை என்றே சொல்லலாம்.

கலைஞரின் ஆட்சி சென்ற தேர்தலில் மண்ணைக்கவ்வியதற்கும் இணையத்தின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. அவரை மோசமாக அல்லது கேவலமாகத் திட்டிய பணியினையும் இணையம் வஞ்சனையில்லாமல் செய்தது. இந்த அளவு திட்டுக்களை அவர் அதிமுக மேடைகளின் மூன்றாந்தர பேச்சாளர்களிடம்கூட வாங்கியிருக்க சாத்தியமில்லை. அவரைக் குப்புறத்தள்ளிவிட்டு ஜெயலலிதாவை ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்வதற்கான பங்களிப்பைச் செய்து இன்றைக்கு ஜெயலலிதாவை ஒன்றும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருப்பதும் அதே இணையம்தான்.

தமிழ் இணையத்தில் திரட்டிகளின் பங்கு மிகவும் மகத்தான ஒன்றாகத் தோன்றுகிறது. இருபது பத்திரிகைகளின் பணியை ஒரு திரட்டி செய்துவிடுகிறது. பத்திரிகைகளுக்கு இருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் திரட்டிகளுக்கு இல்லை. அதுவும் தவிர பெரும்பாலான திரட்டிகள் தானியங்கி முறையில் செயல்படுவதால் எழுத்தின் சுதந்திரத்திற்குத் தடையே இல்லை. தமிழர்களுக்கு சுயகட்டுப்பாடு சிறிது குறைவு என்பதால் ‘கேட்க நாதியில்லை மகனே இஷ்டத்துக்கு ஆடு கதைதான். அதனால் சிலரின் அளவு மீறிய ஆட்டத்துக்கும் எல்லையில்லாமல் போய்விடுகிறது. தனிமனித விவகாரங்களும் விகாரங்களும் மிக மோசமான முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஒருவருக்கொருவர் மோசமான வசவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் இணையம் விளையாட்டு மைதானமாக இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது இணையத்தில் உள்ள சௌகரியம் என்பதால் மட்டுமல்ல யார் எத்தனைப்பெரிதாக எவ்வளவு சிரமப்பட்டு மாளிகையே கட்டிவைத்திருந்த போதிலும் நான் சுலபமாய் கல்லெறிந்து கண்ணாடியை உடைத்துவிடுவேன் என்ற மனவிகாரமும் ஒரு காரணம்.

தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10, தமிழ்வெளி, உலவு போன்ற திரட்டிகளின் பங்கு மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற இவற்றைத்தவிர வேறு பல திரட்டிகளும் செம்மையான முறையில் செயல்பட்டு வருகின்றன. படிப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் ஒரு திரட்டியைச் சார்ந்து உட்கார்ந்துவிட்டால் ஒரு முழு நாளைக்கூடக் கழித்துவிடமுடியும். அந்த அளவுக்குக் கைச்சொடுக்கிலேயே முழு உலகையும் கொண்டுவந்துவிடுகின்றன தமிழ் திரட்டிகள். கம்ப்யூட்டருடனேயே முழுநாளும் வாசம் செய்யும் தொழிலதிப நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் இந்தத் திரட்டிகளை அறிமுகம் செய்துவைத்தேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். “கம்ப்யூட்டரில் தமிழில் படிக்க இத்தனைப் புதுவிஷயங்களா? நான் இவ்வளவு நாட்களும் சில ஆங்கில வெப்சைட்டுகளைப் பார்வையிட்டுக்கொண்டும் படம் பார்த்துக்கொண்டும்தான் இருந்தேன். இனி தமிழை விடவே மாட்டேன்.என்று பரவசப்பட்டுப் போனார். ஆக, தமிழ் இணையம் என்பது இன்னமும் நிறைய பரவ வேண்டியதிருக்கிறது.

இணையத்தில் எழுதும் பதிவர்களில் நிறையப்பேருக்கு பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களின்மீது ஒரு துவேஷம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இலக்கியவாதி என்று ஒருவரைச் சொல்லப்போக “ஓஓஓ, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா நீயி? இலக்கியவியாதியா? அப்படின்னா இங்கே உனக்கு இடமில்லை. தூரப்போயிரு என்ற வாதம் கேட்கிறது. இன்னொருவர் கட்டுரை என்று சொல்லப்போக ‘இனிமேல் பதிவு என்று சொன்னால்தான் இங்கே இடம். அம்மாதிரி சொற்களையெல்லாம் இங்கே பயன்படுத்தினால் இனிமேல் பின்னூட்டத்தில் கூட உங்களை அனுமதிக்கமாட்டோம் என்ற எச்சரிக்கையைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதெல்லாம் மாறிவிடும். பத்திரிகைகளில் எழுதி அனுப்பி அங்கே அவதிப்பட்ட அல்லது அவமானப்பட்ட வடுக்கள் ஆறுவதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்.

தமிழ் இணையத்தில் சில வலைப்பூக்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நிச்சயமாக பல புதிய எழுத்தாளர்களை இனம் காட்டியிருக்கிறது இணையம். புதிதாய்ப் பிறப்பெடுக்கும் எதுவொன்றும் தனக்கென புதிய வழித்தடங்களையும் புதிய வழிமுறைகளையும் புதிய கோட்பாடுகளையும் கொண்டு இயங்குவதுதான் இயல்பு. அப்படி புதிதாகத் தோன்றிய இணையமும் புதிய வழிகளில் தமிழைப் பரப்புவதை நாம் மகிழ்வுடன் கொண்டாடத்தான் வேண்டும். பத்திரிகைகள் திரட்டிகள் ஆகிவிட்டன. கதைகள் புனைவுகளாகிவிட்டன. கட்டுரைகள் பதிவுகளாகிவிட்டன. ஆசிரியருக்குக் கடிதங்கள் பின்னூட்டங்களாகி விட்டன. புத்தகங்கள் வலைத்தளங்களாகிவிட்டன. பத்திகள் வலைப்பூக்களாகிவிட்டன.

இப்படிப் புதிய தளங்களைக்கொண்டு இயங்கும் இணையம் சில புதிய கண்ணோட்டத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். பத்திரிகைத் துறையிலேயே செல்லரித்துப்போன பல விஷயங்களை விட்டு விலகி இருந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே பத்திரிகைகள் தூக்கிச்சுமந்து கொண்டிருக்கும் சில கிளிஷேக்கள் அப்படியே தொடர்கின்றன இன்னமும் மோசமாய்.

ரஜினியை பத்திரிகைகளை விடவும் மோசமாய் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது இணையம்.

இளைய ராஜா மட்டும்தான் இசையமைப்பாளர் அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்கிறது.

தமிழகத்தைக் காக்க வந்த ஒரே புரட்சித்தலைவன் எம்ஜிஆர்தான் என்கிறது.

கருணாநிதி காலில் போட்டு மிதிக்கப்படவேண்டியவர்.

விஜய் என்ற நடிகரை ஏகத்துக்கும் தரம்தாழ்ந்து கிண்டலடிக்கிறது.

தமிழில் எழுத்தாளர்கள் என்றால் மூன்றே மூன்று பேர்தான் என்று கட்டியம் கட்டி வளையம் சுற்றுகிறது.

இந்தக் கிளிஷேக்களிலிருந்து விடுபட்டு வெளிவரவேண்டியதைப் படித்த இளைஞர்கள் செய்யவேண்டும். படித்த இளையதலைமுறைக்கு கொலவெறியை இன்னமும் புகழ்மிக்கதாகச் செய்ய என்ன செய்யலாம் என்ற கவலைதான் அதிகம் போலும்.

இதையெல்லாம் ஒதுக்கிவைத்துத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது பல புதிய சிந்தனைகள் தமிழில் இணையம் மூலம் வந்துகொண்டிருக்கின்றன. இப்படி புதிய வார்ப்புகளைக் கொண்டுவந்துள்ள இணையத்தையும் இணைய எழுத்தாளர்களையும் பெரிய பத்திரிகைகள் அங்கீகரிக்கவேண்டும்.இணையத்திற்கும் பத்திரிகைகளுக்கும் நிலையான உறுதியான பாலம் ஏற்படுத்தப்பட வேண்டும். இணைய எழுத்தாளர்களை இனம்கண்டு பத்திரிகைகள் ஆதரித்துக் கைதூக்கிவிட வேண்டும். பத்திரிகைகளில் எழுதிப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இணையத்திற்கு வர வேண்டும். இதில் பெரிய பத்திரிகை, சிறிய பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை என்ற பாகுபாடெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் இணைப்பு அவசியம்.

பத்திரிகைகளை விடவும் இணையம் மூலம் உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் நொடியில் சென்று சேர முடிவது ஒரு விஞ்ஞான ஆச்சரியம். இதனை உணர்ந்துதான் இணையத்தில் எழுத வந்தேன். பத்திரிகைகள் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஜரா.சுந்தரேசன், அகஸ்தியன் என்ற கடுகு, உட்பட இன்றைய முன்னணி எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரும் இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னமும் நிறைய பத்திரிகை எழுத்தாளர்கள் இணையத்திற்கு வரவேண்டும்.

வாருங்கள் நண்பர்களே எல்லாரும் சேர்ந்து தமிழ் வளர்ப்போம்!

சிக்மகளூரில் ஒரு நாள்!

அந்த மலைப்பிரதேசம் முழுக்க இருள் கவிழ்ந்திருக்க மழை அமர்க்களமாய்க் குதூகலித்துக்கொண்டிருந்தது.

வளைந்து வளைந்து

வழுக்கிச்செல்லும் இக்கட்டான சாலையில் சாமர்த்தியமாகச் செலுத்தப்பெற்ற ஜீப் , எஸ்டேட்டின் அந்தப் பெரிய வீட்டை அணுகியதும் நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கிய உடன் குளிர் தாக்கியது.வழுக்கிச்செல்

ஒரு போலீஸ் அதிகாரி ஓடி வந்து ‘யார், எ

ன்ன, ஏது, எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்....எங்கே த

ங்கப்போகிறீர்கள்? என்பது போன்ற எங்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் ஜாதகப்பலன்களையும் கேட்டுவிட்டு அந்த வீட்டின் சொந்தக்காரர்களுடன் அவர்கள் ஜீப்பிலேயே நாங்கள் வந்ததால் உள்ளே நுழைய அனுமதித்துவிட்டுப் போய்விட்டார்.

‘நாங்கள் எனில், குமுதம் பால்யூ, புகைப்பட நண்பர் யோகா, இன்னொரு புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நான்!


அது 1978-ம் ஆண்டு.

*** *** *** ***

வீட்டின் ஹாலில் அந்தப் பெரியவர் உட்கார்ந்திருந்தார். ரொம்ப நேரமாய் அதே இடத்தில் அதே சாய்மானத்தில் உட்கார்ந்திருப்பாரென்று தோன்றியது. பழுத்த பழம். அந்தக் காலத்து மனிதர்.....எங்களை எதிரில் உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். கிராமத்துக் கன்னடம்........

அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு எத்தனை மரக்கால் நெல் விற்றது என்பதில் ஆரம்பித்து இன்றைய விலைவா

சி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதுவரை நிறுத்தி நிதானமாகப் பேசினார்.

நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு முழுக்கக் காலையிலிருந்து அலைந்து கொண்டிருந்ததில் அசதியும் தளர்ச்சியும் சேர்ந்து தூக்கம் கண்களைச் சுழற்றியது. பசி வயிற்றைப் பிடுங்கியது. பெரியவரின் பேச்சுத் துணைக்கு வருஷக்கணக்காக ஆட்கள் கிடைக்கவில்லையோ என்னவோ, எங்களை விடாமல் பிடித்துக்கொண்டு விட்டார்.


“சாப்பாடு தயார் என்று சொன்னார்கள்.


“இல்லை.....அவர் வரட்டும். ‘அவரைச் சந்தித்த பி

ன் ‘அவரிடம் பேசியபின்தான் படுக்கை. சாப்பாட்டை வேண்டுமானால் முடித்துக்கொள்வோம். என்றார் பால்யூ.

*** *** *** *** ***

ர வேண்டிய பிரமுகர் இன்

னமும் வரவில்லை. அவருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். எங்களோடு இருந்த பெரியவர் பொறுத்துப் பார்த்தார். மழையும் நின்றபடியாக இல்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவரால் முடியவில்லை. “சரி நான் போய்ப்படுத்துக்கறேன். அவர் வந்ததும் எழுப்புங்கள். என்று வீட்டாரிடம் சொல்லிவிட்டு எங்களிடமும் விடைபெற்றுக்கொண்டு போய்ப்படுத்துக் கொண்டுவிட்டார்.

இன்னொரு மணி நேரம் சோம்பலாய் நகர்ந்தது. பத்துமணி தாண்டியிருக்கும்.

திடீரென்று ஒரு வெளிநாட்டுக் கார் வாசலில் வந்து நிற்க-

அந்தப் பிரமுகர் இறங்கினார்!

ஒல்லியான உருவம். காலை முதல் இவ்வளவு நேரமும் அலைந்த சோர்வு உடலெங்கும் வியாபித்திருக்க, ‘நமக்கு இப்படியொரு

நிலை வந்துவிட்டதே என்ற அடிமனதின் சோகம் முகத்தில் துல்லியமாய் எழுதப்பட்டிருந்தது. புதியவர்களைப் பார்த்ததும் செயற்கையாய் ஒரு சிரிப்பு. செயற்கைப் பணிவுடன் கைகூப்பி ஒரு ‘நமஸ்தே...............முன்னந்தலை அவசரமாய் நரைத்திருக்க.........சில மாதங்களிலேயே பத்து வயது கூடியிருந்தது.

நாங்கள் இருந்த வீட்டில் திடீரென்று சுறுசுறுப்பு பற்றிக்கொள்ள வீட்டுப்பெண்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். தயாராய் வைக்கப்பட்டிருந்த பூமாலை அந்த அகால வேளையில் போடப்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்டு இனிமையான ராகத்தில் கன்னட நாட்டுப்பாடல் ஒன்று பாடப்பட்டு ஒரு பெண்மணி திலகம் வைத்துவிட, உள்ளே நுழைவதற்கு முன் எல்லோரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

வீட்டின் பெரியவரை(கொஞ்ச நேரம் முன்புவரை அந்த ஹாலில் காத்திருந்தவரை) தூக்கம் கலைத்து எழுப்பிவந்து “இவர்தான் எங்க குடும்பத்திற்கே பெரியவர் என்று சொல்லி அறிமுகப்படுத்த-

அவருக்கும் ஒரு அவசர ‘நமஸ்தே!’

விடுவிடென்று வீட்டுக்குள் நுழைந்தார் அவர். நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலுக்குப் பக்கவாட்டு அறைதான் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தவம் கிடந்த எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நேரே சென்று அறைக்குள் நுழைந்துகொண்டார்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“என்ன நாளைக் காலைப் பேசிப்போமா?” என்றேன் பால்யூவிடம்.

பால்யூ என்னை ஒரு கணம் பார்த்தார். அந்தப் பிரமுகர் சென்று மூடிக்கொண்ட கதவை ஒருதரம் பார்த்தார். “இல்லை. இப்போதே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இந்த மனிதருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது என்று யோசித்தேன். என்னுடைய யோசனையை எல்லாம் பொருட்படுத்துகிறவராக இல்லை பால்யூ.

விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி நடந்தார். கூடவே நானும் கிருஷ்ணமூர்த்தியும் சென்றோம்.

தைரியமாய் அந்தக் கதவைத் தட்டினார்.

இந்த ‘தைரியம் எந்தப் பத்திரிகையாளனுக்கும் ஏன் அந்தப் பிரமுகருடைய சொந்தக்காரர்களில் எவருக்கும்கூட வந்திருக்கமுடியாத தைரியம் அது. அவ்வளவு சுலபமாக பத்துமணி தாண்டிய இரவில் அவருடைய கதவைத் தட்டிவிட முடியுமா என்ன?

ஏனெனில் பால்யூ தட்டியது இந்திரா காந்தி நுழைந்த அறையின் கதவை!

கோபத்துடன் கதவு திறக்கப்பட்டது. திறந்தவர் இந்திரா காந்தியேதான்.

“மேடம் ஐயம் பால்யூ ஃப்ரம் குமுதம்-தமிழ் மேகஸீன்.. எடிட்டர் எஸ்ஏபி உங்களைப் பேட்டி எடுத்தாரே. திரு மூப்பனார் உங்களைச் சந்திக்க கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் எங்களுக்காக ஒதுக்கினீர்கள் என்றால் போதுமானது என ஆங்கிலத்தில் சொல்ல-

இந்திரா காந்திக்கே ஒரு குழப்பம் வந்திருக்கவேண்டும். எங்களையெல்லாம் பார்த்தபடியே மிகவும் நிதானமாய் “நான் இப்போது மிகவும் டயர்டாய் இருக்கிறேன். பேட்டிக்கோ புகைப்படத்திற்கோ இப்போது முடியாது. ஒன்று செய்யுங்கள். காலையில் மறுபடியும் சந்திப்போம். அப்போது உங்கள் பேட்டியை வைத்துக்கொள்ளலாம். குட் நைட்

கதவு சாத்தப்பட்டு விட்டது.

***** ***** *****

அந்த மலைப்பிரதேசத்தின் சற்று தூரத்திலுள்ள இன்னொரு வீட்டில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கம் வந்துவிடவில்லை. அன்றைக்கு இந்தியா பூராவிலும், ஏன் உலக அரங்கத்திலும்கூட எல்லாருடைய கவனமும் நாங்கள் அடுத்த நாள் சந்திக்கவிருக்கும் அவர் மீதுதான் இருந்தது. பாரதத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் இருந்த பத்திரிகைகளின் பிரதிநிதிகள் யாவரும் கர்நாடக மாநில மலைப்பிரதேசங்களில் ஒன்றான சிக்மகளூரில்தான் குழுமியிருந்தனர். திடீரென்று உலகின் கவனத்தை ஈர்க்கும் புகழ்பெற்ற பிரதேசமாக சிக்மகளூர் அன்றைக்கு மாறியிருந்தது. அகில உலகிலும் புகழ்பெற்ற அந்தப் பிரமுகர் குளிர் கவிந்து கிடந்த அந்த மலைப்பிரதேசத்தின் முன்பின் தெரியாத ஏற்ற இறக்கங்களில் பரிதாபத்திற்குரியவராய் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்.

ஆனந்த பவனத்தின் அற்புத அறைகளிலும் வேற்றுநாட்டு மாளிகைகளின் வியப்புக்குரிய பளிங்கு மண்டபங்களிலும் காஷ்மீரக் கம்பளம் விரிக்கப்பட்டு பதமாகவும் இதமாகவும் பதிந்து கொண்டிருந்த பட்டுப்பாதங்கள்- சாதாரண ஹவாய் செருப்பு அணிந்து காப்பித் தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றைக் குடியிருப்புகளைக்கூடத் தேடிச்சென்று கைகுவித்து ஓட்டுக்கேட்டதைப் பார்க்க நேர்ந்தபோது ‘அடப்பாவமே என்ற கழிவிரக்கம் வரவே செய்தது.

ஆயிரம் கசப்புகளும் வெறுப்புகளும் அவர்மீது இருந்தாலும் சிக்மகளூர் இடைத்தேர்தலில் இந்திராகாந்தி ஓட்டுவேட்டையாடிய காட்சியை உடனிருந்து பார்த்த அந்த அனுபவம் இப்போது நினைத்தாலும் உருக்கமானதாகத்தான் தோன்றுகிறது.

***** ***** *****

சிக்மகளூரில் அவர் இடைத்தேர்தலுக்கு நின்றிருந்தபோது ஒரு இரண்டு நாட்கள் அவரது அருகிலேயே இருந்து கவனிக்கும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. அவருடைய காருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான கார்களின் பவனியை வாழ்க்கையில் அன்றைக்குத்தான் முதன்முதலாகக் காண்பது மிகவும் புதிதாக இருந்தது. (இப்போதுதான் இதனை எல்லாப்பிரமுகர்களுக்கும் டிவியில் பார்க்கிறோமே) அன்றைக்கு இது மிகவும் ஆச்சரியமூட்டிய அபூர்வக்காட்சி. காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர்கள், தவிர வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் அத்தனைப் பேரும் அந்தக் கார்களில் இருந்தனர். இருந்தபோதிலும் இந்திரா காந்தி காருக்கு அடுத்த மூன்றாவது கார் எங்களுடையது. காரணம் இந்திரா காந்திக்காகப் பதவியை ராஜினாமா செய்து வழி தந்திருந்த சந்திரே கௌடாவின் உறவினர் ஒருவருக்கு நாங்கள் மிகச்சிறிய உதவி ஒன்றைச் செய்யப்போக- மற்ற யாரும், எந்தப் பத்திரிகையாளரும் நெருங்கமுடியாத அண்மை எங்களுக்கு வாய்திருந்தது. இந்திரா காந்தியுடன் இரண்டு நாட்களுக்கு கிட்டத்தட்ட நிழல் போலத் தொடர முடிந்தது.

ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பது முப்பத்தைந்து கூட்டங்களில் இந்திரா காந்தி பேசினார். ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாமே சாலையோரக் கூட்டங்கள் தாம். பெரிய கூட்டங்கள் என்பது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மட்டுமே. மற்றவை எல்லாம் சின்னச்சின்ன கூட்டங்கள். சாதாரணமாய் அவர் பேசிய தெருவோரக் கூட்டங்களில் கூடியிருந்த மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

பல கூட்டங்களில் வெறும் இருபது இருபத்தைந்து பேர் கூட இருக்கமாட்டார்கள். ஆமாம், வெறும் இருபது பேர் மட்டுமேதான். அவ்வளவுதான் கூட்டத்தின் தொகை. இந்திரா காந்தியின் காரைத் தொடர்ந்துவரும் கார்களின் எண்ணிக்கையோ நூறைத் தொட்டிருக்கும். ஆனால் கார்களில் இருப்பவர்கள் யாரும் இந்தச் சின்னக்கூட்டங்களுக்கு இறங்க மாட்டார்கள். அந்த மலைப்பிரதேச வளைவு சுழிவுகளில் அத்தனைப்பேர் இறங்கவும் மறுபடி ஏறவுமான வசதிகளும் அவ்வளவாக இல்லை. இந்திரா காந்தி மட்டும்தான் இறங்குவார். கூடவே சந்திரே கௌடா இறங்குவார். இந்திரா காந்திக்குத் துணையாக மோட்டம்மா என்ற பெண்மணி. அப்போதுதான் அந்த ஏரியாவில் ரிசர்வ் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றிபெற்றிருந்தார்.(தற்போது காங்கிரஸ் கட்சியில் கர்நாடகத்தில் சிறுபான்மை இன மகளிர் தலைவியாக முக்கியப்பதவி வகிக்கிறார்) கூடவே நாங்களும் இறங்கி இந்திரா காந்தியின் உடன் செல்வோம்.

பல இடங்களில் அவசரமாய் ஒரு கீற்றுப்பந்தல். சில இடங்களில் பந்தல் கூட இல்லாமல் வெறும் இரண்டு நாற்காலி மற்றும் ஒரு மேஜை. வேறு சில இடங்களில் அதுவும் இருக்காது. வெறும் அங்குள்ள குடிசைகளில் இருக்கும் மக்கள் மட்டுமே.

நைந்து மெலிந்த உருக்கமான குரலில் ஆரம்பிப்பார். “நான் உங்களைச் சேர்ந்தவள். ஜவாஹர்லால் நேருவின் மகள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சிக்மகளூரின் சொந்தப்பெண்ணாக நீங்கள் என்னைக் கருத வேண்டும். இந்த ஊரின் பெயரே சிக்கமகளூர். அதாவது சின்ன மகளின் ஊர். அந்தச் சின்ன மகள் நான்தான்...(ஒரு சின்னச்சிரிப்பு) உங்களை நம்பித்தான் நான் தேர்தலில் நின்றிருக்கிறேன். நீங்கள் என்னை ஆதரிக்கவேண்டும். நமஸ்காரா அவ்வளவுதான். சுருக்கமான இரண்டு நிமிடப் பேச்சு. சந்திரே கௌடா மொழிபெயர்ப்பார்.

***** ***** *****

திரும்பவும் நாம் இந்திரா காந்தி தங்கியிருக்கும் வீட்டிற்கு வருவோம்.

அன்றைக்கு இந்திரா தங்கியிருந்தது சந்திரே கௌடாவின் பெரியப்பா வீடு. சந்திரே கௌடா சிக்மகளூரைச் சேர்ந்தவர். நீண்ட காலமாக கர்நாடக அரசியலில் முக்கியமான சக்தி வாய்ந்த தலைவராக இருப்பவர். மாணவர் தலைவராக இருந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர். ஏகப்பட்ட எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். ஏற்கெனவே எம்பியாக இருந்தபோதிலும் இந்திரா காந்திக்குத் தன்னுடைய தொகுதியை விட்டுக்கொடுத்ததிலிருந்து அவருடைய அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. (மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டியவர் என்ற போதிலும் அடிக்கடி கட்சி மாறினவர் என்ற பெயர் அவரை எப்போதும் இரண்டாம் மட்டத்தலைவர் அளவிலேயே வைத்திருக்கிறது.)

சந்திரே கௌடாவின் பெரியப்பாதான் அவர்கள் குடும்பத்திலேயே பெரிய தலை. உள்ளூரில் மதிப்பும் மரியாதையும் மிக்க பெரியவர். அதனால் அவரது வீட்டில்தான் இந்திரா காந்தி தங்குவதற்கு ஏற்பாடு.

அருகிலேயே இன்னொரு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். இரவு பூராவும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக விடியற்காலையிலேயே மழை நின்றுவிட்டது.

இரவு பூராவும் தூக்கமே வரவில்லை. ஏனெனில் அடுத்த நாள் காலைச் சிற்றுண்டியின்போது- எங்களுக்கும் இந்திரா காந்தியுடனேயே சிற்றுண்டி – அருந்தியபடியே அவரைப் பேட்டியும் புகைப்படமும் எடுப்பது என்பதாக ஏற்பாடு.

விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்துகொண்டோம். வெந்நீர் தயாராக இருந்தது. அவசர அவசரமாய்க் குளித்து முடித்தோம். இந்திரா காந்தி விடிகாலையிலேயே குளித்து முடித்துத் தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்துவிடுவார் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் சடுதியில் கிளம்பினோம்.

கிளம்பவிருந்த சமயம் காலைச் சிற்றுண்டி வந்தது. எங்கள் மனதிற்குள் லேசான மறுப்பு. தயங்கினோம். சந்திரே கௌடாவின் பெரியப்பா வீட்டில் உலகப் புகழ்பெற்ற இந்திரா காந்தியுடன் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று எதிர்பார்த்திருக்க........என்ன இது?

ஜாடை மாடையாய் மறுத்துப் பார்த்தோம். ..............ம்ஹூம் முடியவில்லை..............பிடிவாதம் பிடித்து சாப்பிடச்சொன்னார்கள். சரி, பண்பாடு கருதி பேருக்குச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று கிளம்பியபோது-“எதற்காக இவ்வளவு சீக்கிரம்? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். உங்களைக் கூட்டிப்போக ஆள் வரும். அதன்பிறகு போகலாம் என்றார்கள்.

“இல்லை இல்லை....இந்திரா காந்தியுடன் பேட்டி எடுக்க வேண்டும். இப்போது கிளம்பினால்தான் சரியாயிருக்கும். மேடம் நேரம் தவறாதவர். உங்கள் விருந்தோம்பலுக்கெல்லாம் ரொம்ப நன்றி. நாங்கள் புறப்படுகிறோம் என்றார் பால்யூ.

“இல்லை....வந்து......அங்கிருந்து வந்து உங்களைக் கூப்பிடுவார்கள். அப்போது நீங்கள் போகலாமே

“அந்தச் சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். வந்த வேலை முடியணும் நாங்க போறோம்

அந்த வீட்டுக்காரர் கொஞ்சம் தயங்கியபடி சொன்னார் . “இல்லை......இப்போது ......அங்கே..............அந்த வீட்டிற்கு நீங்கள் போகவேண்டாம்

“ஏன்.....? என்ன விஷயம்..............?

“இல்லை............வந்து..........அங்கே. என்று மறுபடியும் தயங்கினார்கள்.

“என்ன சொல்லுங்கள்

“இல்லை.........ஒரு துக்ககரமான நிகழ்ச்சி நடந்துவிட்டது..............பெரியவர் இறந்துவிட்டார்

“என்னது...... எந்தப்பெரியவர்?

அவரே தான்! இந்திரா காந்தி தங்கியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரரான பெரியவர். சந்திரே கௌடாவின் பெரியப்பா. இரவு நீண்ட நேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தாரே அவர். சந்திரே கௌடாவின் மொத்தக் குடும்பத்திற்கும் மூத்தவரான அந்தப் பெரியப்பா.

எப்படி இறந்தார்?

தங்கள் வீட்டிற்கு இந்திரா காந்தியே வந்து தங்கியிருக்கிறார் என்ற நம்ப முடியாத மகிழ்ச்சி அவரைத் தாக்கியிருக்கக்கூடும். நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு அந்தப் பெரியவரை பலிவாங்கி விட்டிருக்கிறது.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வதென்று யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.

அதைவிட அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் அவர்கள் இருந்தார்கள். “இன்னமும் மேடத்திற்குத் தெரிவிக்கவில்லை. மேடம் அறைக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். எழுந்தவுடன் எப்படிச் சொல்வது என்பது தயக்கமாக இருக்கிறது. வீட்டின் நடு ஹாலில் உடலைக் கிடத்தியிருக்கிறோம். மேடம் அறைக் கதவைத் திறந்தார்களென்றால் சாவுதான் தென்படும். தான் வந்து தங்கிய வீட்டில் சாவு விழுந்து விட்டதை அவர்கள் எப்படி ஃபீல் பண்ணுவார்களோ

அவர்களுடைய தயக்கம் எங்களுக்குப் புரிந்தது. கொடுமையான சங்கடம் புரிந்தது. நள்ளிரவிலிருந்து சாவைக் கிடத்திவைத்துக்கொண்டு சின்ன சப்தம் கூட பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் இந்திராவை எழுப்பிவிடும் என்பதற்காக அழுகையை நெஞ்சிற்குள்ளேயே அடக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் தவிப்பு புரிந்தது. அது மட்டுமின்றி நாங்கள் தங்கியிருந்த அவர்கள் உறவினர் வீட்டிலும் எங்கள் காதுக்கு சாவுச்செய்தி எட்டிவிடாமல் பார்த்துக்கொண்டு எங்களையெல்லாம் குளிக்கவைத்து, காலைச் சிற்றுண்டியும் சாப்பிடவைத்து அதன் பின்னரே விஷயம் சொல்லிய அந்த மக்களின் பண்பாடு உடலைச் சிலிர்க்க வைத்தது.

கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல் பொடி நடையாக நடந்து அந்த வீட்டை வந்தடைந்தோம்.

சந்திரே கௌடா மிகுந்த தயக்கத்துடன் கதவு தட்டி உள்ளே சென்று திருமதி காந்தியிடம் விஷயம் சொல்லி வெளிவந்தார்.

கதவு திறக்கப்போகும் அந்தப் பரபரப்பான நிமிடத்திற்காக எல்லாரும் காத்திருந்தோம்.

கதவு திறந்து அதிர்ந்துபோன திகிலான முகத்துடன் இந்திரா காந்தி வெளிவந்தார்.

குடும்பத்து உறுப்பினர்களிடம் துக்கம் விசாரித்தார்.

அவ்வளவு விரைவாக அவர் இறுதி மரியாதை செலுத்துவதற்கான பூமாலை கொண்டுவரப்பட்டிருந்தது. இறுகிய முகத்துடன் மாலையை உடல்மேல் வைத்து வணங்கினார்.

அதற்குள்ளாக அவர் கிளம்பிச்செல்ல வாகன அணிவகுப்பு காத்திருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார். ஒரு காப்பியோ சிற்றுண்டியோ இல்லாமல் அன்றைய தேர்தல் சுற்றுப்பயணம் ஆரம்பித்தது.

ஒரு பத்து மணி வாக்கில் வழியில் ஒரு இளநீர் பருகினார் என்று ஞாபகம்.

Thursday, December 8, 2011

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டிய ஏழாம் அறிவின் வெற்றி


ஏழாம் அறிவு படத்தைப்பற்றிய பல்வேறு விஷயங்களும் பேசியாகிவிட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட படங்களில் ஒன்றாகவும் புகழைக்குவித்த படங்களில் ஒன்றாகவும் மட்டுமின்றி வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றிகளைப்பெற்ற படங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது. ஒரு நடிகனுக்கு இதைவிடவும் என்ன தேவை? தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பேசப்படும், அண்ணாந்து பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் சூர்யா.

80-வருட தமிழ்த்திரைப்பட வரலாற்றில் வசூலில் மூன்றாவது இடம் என்கிறது விளம்பரம். ரஜினியின் எந்திரனுக்கும் சிவாஜிக்கும் பூஜைக்கு முன்னாலிருந்தே விளம்பரம் ஆரம்பித்துவிட்டார்கள். எந்திரன் படம் நடுவில் நின்றுபோக கலாநிதியுடன் கைகோர்த்ததில் மீண்டும் அசுர பலத்துடன் விளம்பர யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. சன் டிவியின் இரவு ஏழு மணிச் செய்தியில் இரண்டு நாட்கள் தலைப்புச் செய்தியே எந்திரன் என்றானது. தொண்டுக்கிழத்திலிருந்து வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைக்கூட நெட்டித்தள்ளிக்கொண்டு தியேட்டருக்குக் கொண்டுபோய் உட்கார வைக்குமளவுக்கு விளம்பரமோ விளம்பரம் என்று போட்டுத்தாக்கினார்கள்.

‘தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனும் எந்திரன் பார்க்காவிட்டால் மனிதப்பிறவியே அல்ல என்று குற்றமனப்பான்மையைத் தோற்றுவிக்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்கிறவிதமாக விளம்பர வியூகம் வகுக்கப்பட்டது. ரஜினி என்பவர் ஏதோ கலியுகம் காக்க வந்த கடவுள் என்பதுபோன்ற பிரமை உருவாக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.

ஏழாம் அறிவுக்கு இதுபோன்ற பில்டப்புகள் ஏதும் கிடையாது. ‘போதி தர்மன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன் என்ற வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லப்பட்டு – சாதாரணமாக மற்ற எல்லா சூர்யா படங்களுக்கும் செய்யப்படும் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு இந்தப் படம் வெளியானது. ‘இந்தப் படத்துல நீங்க என்ன எதிர்பார்க்கறீங்களோ அதைவிட எல்லாமே மேலே மேலே மேலே என்ற ஏ.ஆர்.முருகதாஸின் ஆர்வக்கோளாறான வாசகம் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான வாசகம். உண்மையில் அவர் அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லியிருக்காவிட்டால் இந்தப்படம் இன்னமும் அதிகமான பரபரப்பை உண்டுபண்ணியிருக்கவும் கூடும். இப்படி ஒரு சராசரியான விளம்பரத்துடன் வெளியான இந்தப்படம் வசூலில் இத்தனைப்பெரிய சாதனை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் இதுதான் முதன்மையான சாதனை என்றே சொல்லத்தோன்றுகிறது.

முருகதாஸ் - பாதி தர்மன்.

சூர்யா - பாதி தர்மன்....இரண்டும் சேர்ந்தால் முழுமையான போதி தர்மன்!

இந்தப்படத்தை ஒரு சராசரிப்படமாகப் பார்க்கத்தோன்றவில்லை. கலை உணர்வுகளையும் வர்த்தக சமன்பாடுகளையும் தாண்டி ஒரு இனத்துக்கான சில சேதிகளை, தான் வாழும் சமுதாயத்துக்குச் சில குறிப்புகளைச் சொல்ல வேண்டுமென்று இயக்குநர் நினைத்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் ‘இந்தப் பார்வை படத்தில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிந்திருக்கிறது.

பாடல் காட்சிகளையும் வேறு சில சினிமாத்தன காட்சிகளையும் தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகிறது. ஆனால் ஒரு திரைப்படமென்பது ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகனை விட்டு முற்றிலுமாக விலகிப்போய்விடுவதற்கில்லை. தவிர இப்படி நினைக்க வைப்பதே ஒரு வித்தியாசமான படத்தின் சாதனைதான். எந்தப் படத்தில் வழக்கமான விஷயங்களைத் தவிர்த்த சில உன்னதமான கூறுகள் இருக்கின்றனவோ அப்போதுதான் இப்படியெல்லாம் நினைக்கத்தோன்றும்.

படத்தின் பல இடங்களில் நாம் வேறொரு மொழிப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. தமிழ் சினிமா உலகப்படங்களை நோக்கி நகர்கின்ற அடையாளமாக இதனை நாம் கொள்ளலாம்.

நடிப்பின் மூலம் பல்வேறு உயரங்களைத் தொட்ட சூர்யா இந்தப் படத்தில் உடல்மொழி மூலம் மற்ற நடிகர்கள் போட்டிக்கு வர முடியாத மிகமிக உயரத்தில் போய் நின்றுகொள்கிறார்.

வேறு எந்த நடிகருக்கும் வராத சில அற்புத பாவங்கள் மின்னல் வெட்டுப்போல நடிகர் திலகத்தின் பார்வையில் தெறித்து விழும்-

அந்தச் சில கீற்றுக்கள், சூர்யாவின் கண்களில் தெறித்து விழுவது ஒரு இனிய ஆச்சரியம்.

உடம்பை முறுக்கேற்றி வைரம் பாய்ந்த கட்டையாய்த் தோற்றம் தருவது வேறு நடிகர்கள் முயற்சித்தாலும் சாத்தியமே. ஆனால் கனிவும் சாந்தமும் கருணையும் தரும் தோற்றத்திற்கும் பார்வைக்கும் முகத்தில் தெரியும் அந்த தெய்வக்களை தேஜஸுக்கும் இயற்கையாய் அமையும் சில வரங்கள் தேவை. அந்த வரம் சூர்யாவுக்கு அமைந்திருக்கிறது.

ரௌத்ரம் காட்டும் முகம் சூர்யாவுக்கானது-

கனிவும் சாந்தமும் கருணையும் காட்டும் முகம் கந்தன் கருணையில் முருகனாக வருபவருக்கானது.

உண்மையில் கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பான் என்பது தெரியாது. ஆனால் கட்டபொம்மன் என்றால் சிவாஜி, கர்ணன் என்றால் சிவாஜி – என்பதுபோல் போதிதர்மன் என்றால் சூர்யா என்ற பிம்பம் அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவிட்டது!

இனிமேல் இதனை மாற்றுவதற்கில்லை.

போதிதர்மன் தமிழனா தெலுங்கனா கன்னடனா களப்பிரனா பிரஞ்சுக்காரனா ஆப்பிரிக்கனா என்பது பற்றியெல்லாம் வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். முடிந்த முடிவான வரலாற்றுச் செய்திகள் இங்கே எதுவுமே இல்லை. கனகச்சித்தனும் கல்லுகப்பித்தனும் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் சொன்னால், யார் சொன்னது? அவர்கள் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னொருவர் சொல்லுவார். அவர்கள் தமிழர்களே அல்ல தெலுங்கர்கள் என்று இன்னொருவர் ஓடிவருவார். தெலுங்கர் அல்ல; கன்னடக்காரர் என்பார் மற்றவர். எதற்கு வம்பு?

நம் கண் முன்னால் நடக்கும் எத்தனையோ விஷயங்களுக்கான பூர்வாங்கமே நமக்குத் தெரிவதில்லை. பத்திரிகைகளில் வரும் எத்தனையோ சம்பவங்களின் மர்மங்கள் கடைசிவரை விளங்குவதும் இல்லை, விளக்கப்படுவதும் இல்லை.நேற்றைக்கு நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைக்கூட ஒவ்வொரு ஊடகம் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைச் சொல்லித்தான் முன்வைக்கின்றன. ராஜிவ் காந்தி கொலையின் மர்ம முடிச்சுக்களையே அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆளுக்கொன்றாய்ச்சொல்லி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும்போது 1600 ஆண்டுகளுக்கு முந்தைய சரியான தகவல்களுக்கு எங்கிருந்து போவது?

அப்படியே போதிதர்மன் தமிழன் இல்லையென்றாலும் அவன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. உலக சமுதாயத்திற்கு நல்லது செய்த ஒருவனை நம்மவனாகக் கொண்டாடுவதில் என்ன தவறு?

எம்ஜிஆரை நாம் நம்மவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?

ரஜினியை உச்சிக்கு மேல் வைத்து உயர்த்தவில்லையா?

முருகதாஸும் சூர்யாவும் போதிதர்மனைத் தமிழனாக ‘ஏற்றுக்கொண்டே இந்தப் படைப்பை ஆக்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் தமக்குக் கிடைத்த ஒரு தகவலை வைத்து நல்லதொரு படைப்பைக் கொடுக்க முனைந்திருக்கிறார். அந்த படைப்புக்குத் தன்னுடைய பங்களிப்பைத் தன்னால் முடிந்த அளவு மட்டுமின்றி மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு ஒரு கலைஞனாக நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சூர்யா.

கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் இது நம்முடைய குருநாதரின் படம்என்று சொல்லி கராத்தே ஆசிரியர்கள் அனுப்பிவைக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுதுதான் படத்தின் தாக்கமும் சூர்யாவின் உழைப்பிற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் தெரியவருகிறது.

சங்க காலத்திலிருந்து இதுவரை வேறு யாராவது தமிழனோ தமிழ் மன்னனோ குறிப்பிட்டுச் சொல்லும்படி கிடைக்கின்றானா யாருடைய வாழ்க்கையாவது சொல்லாமல் விடுபட்டுப்போயிருக்கிறதா, ஏதாவது ஒரு சிறு குறிப்பாவது கிடைக்கிறதா என்பதாக தமிழ் இலக்கியத்தையும் தமிழர்களின் வரலாற்றையும் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிறையப்பேரைத் தேடச் செய்திருக்கிறது இந்தப் படம்.

வணிகரீதியான வெற்றியை விடவும் இந்தத் தாக்கம்தான் இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்லலாம்.