Thursday, April 8, 2010

பி.எஸ். என்.எல்லின் பகல்கொள்ளை

தனியாரின் தொலைத்தொடர்புகளை விடவும் பி. எஸ்.என்.எல்லின் தொலைத்தொடர்புகளை பலபேர் உபயோகிக்கக் காரணம் இது அரசாங்க நிறுவனம் என்பதால் ஏமாற்றப்பட மாட்டோம் என்கின்ற நம்பிக்கைதான். தனியாரின் மற்ற மொபைல் தொடர்புகளைக் காட்டிலும் பல்வேறு வகையிலும் பல்வேறு விஷயங்களில் இது பின்தங்கியிருந்தபோதிலும் விடாப்பிடியாக பலபேர் பிஎஸ்என்எல்லை இந்த ஒரு காரணம் பற்றித்தான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். 'அட்லீஸ்ட், தனியார் நிறுவனங்கள் ஏதேனும் முறைக்கேட்டில் ஈடுபட்டால் நம்மால் தட்டிக்கேட்க முடியாது. ஆனால் அரசாங்க நிறுவனம் என்பதால் நம்மால் கேள்விகேட்க முடியும்' என்ற இற்றுப்போன நம்பிக்கைதான் பிஎஸ்என்எல்லைப் பலபேர் இன்னமும் உபயோகிக்கக் காரணம். ஆனால் மக்களின் இந்த நம்பிக்கையில் கூடைக்கூடையாய் மண்ணைக் கொட்டிக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல்.
பிஎஸ்என்எல்லின் பிரீபெய்ட் திட்டத்தில் இருக்கும் எனக்கு மாதக்கணக்காய் அவ்வப்போது நிறுவனத்தின் புரமோஷனல் மெஸேஜஸ் வந்துகொண்டேயிருக்கும். மொபைல் போன் என்றால் பேசுவதற்கு மட்டுமே என்ற பழைய சித்தாந்த வகுப்பைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். மொபைலில் சந்திராயன் போகலாம் ஆடுபுலி ஆடலாம் பாத்திரம் வைத்து பாயசம் சமைக்கலாம் என்கின்ற அதிவேகத் தொழில் நுட்பம் எல்லாம் அறியாதவன். இந்த நிலையில் ஏதாவது செய்தி வந்தால் மொபைல் சத்தம் போடும் அதை எடுத்து அழுத்திப் பார்க்கும்போது அந்தச் செய்தியின் விரிவு வரும் இல்லையா? இங்கே அப்படி இல்லை. மொபைல் சத்தம் போடும். அதை எடுத்துப் பார்த்தால் திரை பூராவும் ஏதோ ஒரு செய்தி விழுந்து விரவியிருக்கும். என்னடா இது இழவு என்று பட்டனை அழுத்தினால் போதும். உடனே 'வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு மாதத்துக்கு எங்களுடைய மியூசிக் ஸ்டேஷனைக் கேட்கலாம். உங்கள் அக்கவுண்டிலிருந்து ரூ.இருபத்தொன்பது கழிக்கப்படுகிறது.நன்றி' என்று இருக்கும். போனால் போகிறது என்று விட்டுவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து இதே பாணியில் எப்போதோ வந்த ஒரு செய்தி திரையில் விழுந்து கிடக்கும். போனை எடுத்து ஆன் பண்ணியவுடன் இன்னொரு செய்தி 'வாழ்த்துக்கள். நடைபெற இருக்கும் கிரிக்கெட் ஸ்கோரை நீங்கள் கேட்கலாம்.உங்கள் அக்கவுண்டிலிருந்து ரூ.பத்தொன்பது கழிக்கப்படுகிறது நன்றி' என்று இப்படியே மூன்று அல்லது நான்கு பெயர்களில் மாதம் நூறு ரூபாய்க்காவது ஆட்டையைப் போட்டு முடித்துவிடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த மெசேஜை அழிக்க எந்த பட்டனை அழுத்தினாலும் அது அழிபடாமல் மீண்டும் மீண்டும் அப்படியே வந்து பதிந்து அக்கவுண்டைக் காலி செய்துவிட்டுத்தான் ஓய்கிறார்போன்ற கொலைக்காரத் தொழில்நுட்பம் ஏதோவொன்றை அதில் புகுத்தியிருக்கிறார்கள். (ஒரேயொருமுறை கணிணி தொழில்நுட்ப விற்பன்ன இளைஞரொருவர் அந்த நேரத்தில் வீட்டிற்கு வர, அவர் என்னென்னமோ வித்தைகள் செய்து பணத்துக்கு சேதாரமின்றி அந்த மெசேஜை அழித்தார். ஒவ்வொரு முறையும் அவரைத்தேடி எங்கே போவது?)
சில மாதங்கள் சில நூறுரூபாய்கள் இழந்த பின்னர் கஸ்டமர் கேரில் கேட்டபோது "நீங்கள் இதுபற்றி எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் " என்றார்கள். கடிதம் எழுதிக்கொண்டு போனபோது இங்கே போங்கள் தலைமையகம் போங்கள் என்று இழுத்தடித்தார்கள். தலைமையகம் போனபோது சம்பந்தப்பட்ட செய்திகள் எங்கிருந்து வந்தன என்ற போன் நம்பர்கள் இருந்தால்தான் இதை நிறுத்த முடியும். போன் நம்பர்களைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். நிறுவனப்பெயர்களைச் சொல்லி இந்தப் பாவிகள்தாம் அதனைச் செய்தார்கள் என்று சொன்னபோது "அப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியாது சார்" என்ற பதில் வந்தது. "சரி, பணப்பிடித்தம் என்பது நம்முடைய ஒப்புதல் பெற்றபிறகுதானே செய்ய வேண்டும். அவர்களாகவே ஒரு செய்தி அனுப்பி அதைத் திறந்து பார்த்தாலேயே பணப்பிடித்தம் என்பதும், அந்தச் செய்தி வேறு வகையில் அழிக்க முடியாத மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உரிமை மீறல் இல்லையா? ஒரு அரசாங்க நிறுவனம் இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறது?” என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. செல் நம்பரைக்குறித்துக்கொண்டு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு பதினைந்து நாட்களுக்குப்பிறகு மீண்டும் அதே கதை ஆரம்பித்தது.
இப்போது மறுபடியும் தொடர்பு கொண்டதற்கு கஸ்டமர் கேரின் ஏதோ ஒரு நம்பரைத் தந்து அதில் உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள் என்றார்கள். பதிவு செய்ததற்கு 1909 என்ற எண்ணிலிருந்து ஒரு தகவல் வந்தது. 'உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் விரைவில் வழங்கப்படும்' என்று ஒரு தகவல் வந்தது. நாட்கள் ஓடினதுதான் மிச்சம். பதிவு எண்ணும் வரவில்லை. ஒரு மண்ணும் வரவில்லை. திரும்ப அதே பழைய, தொட்டவுடன் வாழ்த்துக்கள் சொல்லி பணத்தைப் பிடுங்கும் பழைய பாணிச்செய்தி. கேட்டால் சார் அம்மாதிரி செய்தி வந்தால் நீங்கள் ரிசீவிங் பட்டனை அழுத்தாதீர்கள். அதை அழித்து விடுங்கள்' என்று போகாத ஊருக்கு வழி சொல்கிறார்கள்.
நான் பெங்களூரில் இருக்கிறேன். கர்நாடகத்துக்குத்தான் இந்தக் கொடுமையா இல்லை எல்லா ஊரிலுமா என்று தெரியவில்லை.
என்ன செய்யலாம் என்பதை நண்பர்களும் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் சொன்னால் தேவலை.

Saturday, March 27, 2010

பெண்ணின் உடல்மொழி ஆபாசமா ?

லீனா மணிமேகலையின் கவிதைகள் பரபரப்பான விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன . நவீன இலக்கியம் என்பதே பாலியல் உறவுகளைப் பச்சையாக எழுதிச்செல்லுதல் என்பதாக மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் பெண் எழுத்தாளர்கள் அதுபோல எழுதும்போது கவனம் ஈர்ப்பது சுலபமாகிவிடுகிறது. (எழுத்தில் ஆண் எழுத்தென்ன பெண் எழுத்தென்ன என்றொரு கிளை விவாதம் வேறு இருக்கிறது.இது அவரவர் சௌகரியத்தையொட்டி அவ்வப்போது லேபிள்களைத் தரித்துக்கொள்ளும்.) பாலியல் அனுபவங்கள் பெரும்பாலும் ஆணின் பார்வை சார்ந்தே இருப்பதால் , பெண்ணின் பார்வையில் அனுபவங்களோ அல்லது விமர்சனங்களோ வெளியாகும்போது கூடுதல் கவனம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பெண்ணின் உடல்மொழியைப் பெண்ணே சொல்லும்போதுதான் யதார்த்தத்தின் பதிவுகள் சரிவரக் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். இதில் இன்னமும் கவனம் பெறுவது அந்த உடல் மொழிகள் எல்லாம் 'தன்னுடைய உடலுடையதே' என்கிற அறிவிப்போடு வருகிற எழுத்துக்கள். இத்தகைய எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும் அருவெறுக்கத்தக்கவை என்றும் தடை செய்யப்பட வேண்டியவை என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறமோ "ஆபாசம் என்று சொல்ல இவர்கள் யார்? இவர்களெல்லாம் என்ன கலாச்சாரக் காவலர்களா? பெண்ணியல் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் குறுக்கே நிற்கும் பிற்போக்குவாதிகள்" என்று பதிலிறுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட எழுத்துக்குரியவரோ "இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றிக் குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. இது தனியொரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சீண்டிப்பார்க்கும் வேலை. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச்சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னிடம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துக்கள் தொடரந்து இதே வீச்சோடுதான் இருக்கும்" என்றிருக்கிறார்.
மேம்போக்காகப் பார்க்கும்போது படைப்பாள இனத்தையே காபந்துபண்ணும் பதில் மாதிரி தோற்றமளித்தாலும் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்களுடன் கூடிய பதிலாகத்தான் இது இருக்கிறது. முதலாவதாக இதைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் இவரைக் கட்டாயப் படுத்தவில்லை. இப்படியா எழுதுவது இப்படியெல்லாம் எழுதலாமா என்பதுதான் கேள்வியே தவிர, நீ இமயமலையைப் பற்றி எழுது, பாஞ்சாலங்குறிச்சிப் போரைப்பற்றி எழுது என்றா சொன்னார்கள்? 'உலகின் அழகிய முதல்பெண் ' என்ற தலைப்பில் 'நான் லீனா, இலங்கை இந்தியா சீனா' என்ற வரிகளுடன் ஆரம்பித்திருக்கும் கவிதைகளைப் பற்றித்தான் ஆட்சேபமே தவிர, ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சுற்றிவளைத்து வந்திருக்கும் ஆட்சேபங்கள் அல்ல. குறிப்பிட்ட அந்தக் கவிதையிலும் சரி தொடரும் இன்னும் சில கவிதைகளிலும் சரி பாலியல் அங்கங்களின் பச்சைக் காட்சிகள் கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, பாலியல் அத்துமீறலின் எந்த 'வேதனை' வெளிப்பட்டிருக்கிறது என்றும் புரியவில்லை.
மாறாக, பாலியல் ரீதியான இத்தகு வெளிப்பாடுகள் அவ்வப்போது சில பெண்களிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சாவித்திரி என்ற பெண் பெங்களூரில் தன்னை நிர்வாணமாக வரைந்துவைத்து ஒரு ஓவியக் காட்சி நடத்தினார். பல்வேறு கோணங்களில் அவர் தன்னுடைய உடலைக் காட்சிப் பொருளாக்கி இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள். நிற்பது, படுப்பது, புரள்வது, உட்கார்ந்திருப்பது என்பதாக அவரின் பல்வேறு நிர்வாணக் கோலங்கள் . பெரிதாக உணர்வின் வெளிப்பாடுகளோ கலையின் பிரதிபலிப்புக்களோ இல்லாத, உடம்பின் அங்க அவயங்களைக் காட்டும் வெற்று ஓவியங்கள்தாம் அவை. “எதற்காக இப்படி வரைந்திருக்கிறீர்கள் இதன் நோக்கம் என்ன?” என்றதற்கு , “என்னை வரைந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது,வரைந்தேன். இரண்டாவதாக ஒரு மாடலை வைத்து இப்படியெல்லாம் வரைவதற்கு பதில் நாமே ஏன் மாடலாக இருக்கக்கூடாது என்று தோன்றிற்று.பெரிய அளவு கண்ணாடி வைத்து கண்ணாடியில் என்னையே நான் பாரத்துக்கொண்டு வரைந்தேன்" என்றார். இதனை ஒருவிதமான மனப்போக்கு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய அங்க அவயங்களைத் திரையில் காட்ட மனதார விரும்பும் நடிகைகளின் விருப்பிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை. பிரஷ்ஷும் கான்வாஸும் ஓவியத்திறமையும் மட்டுமே பெரிதான கலாபூர்வமான பிம்பத்தை ஏற்படுத்தித்தரும் என்றும் சொல்வதற்கில்லை.
உடல்மொழிகளின் உணர்வுகளை எந்த மாதிரியான வார்த்தைகளில் என்ன மாதிரியான வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அவற்றுக்கான முக்கியத்துவமும் அங்கீகாரமும் வரையறுக்கப்படுகின்றன.
சந்துமுனைகளிலும் குழாயடிச்சண்டைகளிலும் பெண்களோடு பெண்கள் சண்டையிடும்போது வெளிப்படும் உடல்மொழி வாக்குவாதங்களையெல்லாம் தடையில்லாத கருத்துச் சுதந்திரம் என்றோ, ஆஹா என்ன அழகாக உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றோ கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அதே சமயம் அவர்கள் தங்கள் மொழிகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதையும் தடுத்து நிறுத்தவும் முடியாது.
அந்த காலக்கவிஞன் கூந்தலின் வாசம் பற்றி எழுதினான். இவர்கள் அந்தரங்க வீச்சம் பற்றி எழுதுகிறார்கள். கூடவே, “ என்னுடைய சிந்தனைகள் இதே பாணியில்தான் இருக்கும் என்னை யாரும் தடுக்க முடியாது" என்றெல்லாம் வீறாப்பு பேசுவதற்கும் சவால் விடுவதற்கும் பின்னணியில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது.
இத்தனைப் பட்டவர்த்தனமாக எழுதத் தொடங்கிவிட்ட பிறகு அதிகமாக எழுதுவதற்கு மேற்கொண்டு ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதுதான் அது.

சிவகுமாரின் புதிய அவதாரம்



தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் தங்கள் ஆண்டு விழாவுக்கு இரண்டுபேரின் வருகைக்காக மட்டுமே காத்திருக்கின்றன. ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நடிகர் சிவகுமார்.
அப்துல்கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர். விண்வெளி ஏவுகணைத் துறையில் உலகம் கவனிக்கத் தகுந்த விஞ்ஞானி. தாம் வகித்த பதவிக்கு கௌரவம் சேர்த்த அந்த மனிதர் 'முன்னாள் குடியரசுத் தலைவர்' என்ற வசதிகளோடு ஒரு குட்டி மாளிகையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு நாடு பூராவும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் இளம் பருவத்தினரைச் சந்திப்பது. அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நல்லெண்ணெங்களை விதைப்பது; எதிர்காலச் சிந்தனைகளை உயர்ந்த நெறிகளாக மாற்றுவது; அதன் மூலம் இளம் சந்ததியினரை வல்லரசு நாட்டின் குடிமக்களாக மாற்றுவதற்காக அவர்களை 'லட்சியக் கனவு' காணவைப்பது. இந்தப் பின்புலத்தில் அப்துல்கலாம் நாடெங்கும் பயணம் செய்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இளம் பருவத்தினரைச் சந்தித்து வருகிறார்.
சிவகுமாரின் பயணம் வேறுமாதிரியானது.
இருப்பதிலேயே மிகவும் கவர்ச்சிகரமான திரைப்படத்தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர் சிவகுமார். அவரது இரு மகன்களில் ஒருவரான சூர்யா தமிழின் மிக முன்னணி நடிகர்களில் ஒருவர். இரண்டாவது மகனான கார்த்தியும் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர். மருமகளான ஜோதிகாவும் பிரபல நடிகையாயிருந்தவர். 'தமிழ்த்திரைப்படங்களின் பொற்காலம் ' என்று சொல்லப்படும் சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டத்து நடிகர்களில் ஒருவர் சிவகுமார். சிவாஜியோடு நிறையப் படங்களிலும் ,எம்ஜிஆருடன் சில படங்களிலும் இணைந்து நடித்தவர். தமிழின் புராணப் படங்களில் முருகனாகவும் வேறு சில தெய்வப் பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவர். தாம் இருநூறு படங்கள்வரை நடித்திருந்த போதிலும் பரபரப்பான கதாநாயகனாக இல்லாமல் நிதானமாய் அடியெடுத்து வைக்கும் கதாநாயகனாகவே இருந்து நிலையான ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அடையாளம் அவருக்குக் கிடைத்திருந்தது. நடிகர்களில் மிகச்சிறந்த ஓவியக்கலைஞராக அறியப் பட்டிருந்தவர் அவர். இதைவிடவும் பெரிதான இன்னொரு அடையாளமும் அவருக்கிருந்தது. நீக்குப் போக்குகள் நிறைந்த திரைப்பட உலகில் பண்பாட்டு நெறிகள் கொண்ட மனிதராகவும் , ஒழுக்க சீலமிக்க கலைஞராகவும் அவர் மதிக்கப்பட்டார். அதனால்தான் இயக்குநர் கே. பாலச்சந்தர் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் "நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி; நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்" என்றார்.
திரைப்படத்துறையில் தமக்கான இடம் நழுவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தது சின்னத்திரையை. திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் சின்னத்திரையை மிகச் சாதாரணமாகவும் கேவலமாகவும் பேசிக்கொண்டிருந்த காலட்டம் அது. சிவகுமார் துணிந்து சின்னத்திரையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்துதான் பெரிய பெரிய ஜாம்பவான்கள்கூட சின்னத்திரைப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தத் தொடங்கினர். ஆக சின்னத்திரையையும் திரைப்படக்கூட்டம் மொய்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் அங்கிருந்து அடுத்த தளத்திற்குச் செல்ல விரும்பியிருக்கிறார் சிவகுமார். அவர் தேர்ந்தெடுத்த துறைதான் ஆச்சரியம் மிகுந்தது. அது பேச்சு........மேடைப் பேச்சு!
திரைபடத்துறையில் இருந்த காலத்திலிருந்தே மற்றவர்கள் கவனிக்கத் தகுந்த ஒரு பேச்சாளராகத்தான் அவர் விளங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான விழாக்களில் நல்ல பேச்சு தேவைப்படும் மேடைகளில் 'சிவகுமாரைக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்' என்று கலைஞர் போன்றவர்கள் குறிப்பட்டுச் சொல்லும் அளவுக்குத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் அவர். அதிலும் குறிப்பாக சிவாஜியின் புகழ்பெற்ற வசனங்களை சிவாஜியே வியக்குமளவுக்கு மேடைகளில் அற்புதமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பொருத்தமான இடங்களில் பேசிக்கொண்டிருந்தவர். திரைப்படத்துறையின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவர். இந்தப் பின்புலத்தில் தம்மை ஒரு பேச்சாளராக வரித்துக்கொண்டு தமிழகத்தில் மைக் முன் வந்து நிற்கிறார்.
பேசிப் பேசியே தமிழகத்தைக் கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு பலபேரின் மீதும் பரவலாக வந்திருக்கும் நிலையில் சிவகுமாரின் பேச்சுக்களம் ஆரம்பமாகிறது. மேடைப்பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருக்கிறது தமிழ் இனம். அரசியல் மேடைகளுக்கென்று ஒரு பாணி. அலங்கார வார்த்தைகள் ; பொய்யான வாக்குறுதிகள், வெற்றுக்கூச்சல்கள், சாரமற்ற சவால்கள்..........
இலக்கியப் பேச்சுக்களுக்கென்று ஒரு பாணி. மனப்பாடம் செய்த சில செய்யுள்கள் ; குட்டிக்கதைகள், வறண்டுபோன நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள்..........
இவை இரண்டும் கலந்த குழப்பமான கலவையில் பொதுவான சில பேச்சுக்கள்..........
இதே சப்பையான பாணியில் எல்லாப் பேச்சுக்களும் மக்களைச் சுற்றிவளைக்க ஆரம்பித்ததில் இப்போதெல்லாம் பேச்சுக்கேட்க வரும் கூட்டம் சுத்தமாய் அற்றுப்போய் விட்டது. பல கூட்டங்களுக்கு எண்ணி எட்டுப்பேர் பத்துப்பேர்கூட வருவதில்லை என்ற நிலைமை. இந்தச் சூழலில்தான் சிவகுமார் 'பேச' வருகிறார்.
ஈரோட்டு புத்தகச் சந்தை அவருக்குக் களம் அமைத்துத் தருகிறது. பல்லாயிரக்கணக்கில் கூட்டம். 'திரை வளர்த்த தமிழ்' என்று ஆரம்பிக்கிறார். இளங்கோவன் துவங்கி அண்ணா, கலைஞர்,ஏ.பி.நாகராஜன், சக்தி கிருஷ்ணசாமி, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர்வரை தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று விவரிக்கிறார். அவர் பேசப் பேச ஒவ்வொரு காட்சியும் மக்கள் மனதில் நாடகக் காட்சிகளாய்த் திரைக்காட்சிகளாய் விரிகின்றன. வசனங்கள் மட்டுமின்றி பாடல்களில் தமிழ் எவ்வாறு பயன்பட்டது என்பதை விவரிக்கிறார். பாபநாசம் சிவன் தஞ்சை ராமையா தாஸ் துவங்கி கண்ணதாசன் வைரமுத்துவரை தமிழை எப்படியெல்லாம் கையாண்டார்கள் என்பதை எடுத்துரைக்கிறார். பண்பட்ட நடிகராக இருந்ததனால் குரலில் ஏற்ற இறக்கங்களும் உச்சரிப்பு சுத்தங்களும் கேட்போரைக் கட்டிப் போடுகின்றன. பேசும்போது கையில் ஒரு சிறிய குறிப்புக்கூட வைத்திருப்பதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.
தொடர்ந்து மூன்று வருடங்கள் ஈரோட்டு புத்தகச் சந்தையில் பேச்சு. ஒவ்வொரு வருடமும் கூட்டம் பெருகிக்கொண்டே போனது. இதற்கிடையில் ஒரு பேச்சின் பதிவு விஜய் டிவியின் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பாக ஆதரவு அதிகரித்தது. அடுத்த பதிவையும் அடுத்த பண்டிகைக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி. இதன் தலைப்பு;'பெண்-தாய், மனைவி , மகள் ' இதில் தன்னுடைய தாயாரை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகளை முன்னிருத்தி பெண்களைப் பற்றிய தமது மதிப்பீட்டை தமது மரியாதையை சமூகத்தின் முன் வைக்கிறார் சிவகுமார். எந்தவித ஜோடனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பட்டவர்த்தனமாய்த் தம்மையே படையலிட்டிருந்த சிவகுமாரின் நேர்மை கேட்டவர்களை உலுக்கிற்று. விளைவு, தொலைக்காட்சியின் பிரபலத்தைத் தாண்டி பிரபல மோசர்பியர் நிறுவனம் சிவகுமாரின் பேச்சுக்களை சிடிக்களாக வெளியிட ஆரம்பித்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களின் வியாபார உத்தியாக குறிப்பிட்ட தொகைக்குமேல் தங்களிடம் துணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிவகுமாரின் சி.டி.க்களை போனஸாக விநியோகிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்தார் சிவகுமார். 'கம்பன் என் காதலன் ' என்ற தலைப்பில் கம்பனின் நூறு பாடல்கள் வழியாக மொத்த இராமாயணக் கதையையும் ஒரே பரப்பில்- ஆங்கிலத்தில் at a stretch என்பார்களே அதுபோல் விவரித்தார். "ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு. பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித்தரும் உன்னத காவியம் இராமாயணம். அது இளையதலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி இது" என்றார். இதனை ஒரு புராண நோக்கிலோ கதா காலாட்சேப நோக்கிலோ இல்லாமல் இலக்கிய நோக்கில் சொன்னதும், வழக்கம்போல் கையில் ஒரு சின்னக்குறிப்பும் இல்லாமல் இலக்கிய நடையை எளிய தமிழில் அதுவும் அங்கங்கே தமது விமர்சனங்களையும் இணைத்துச் சொன்னதும்தான் இவரின் சிறப்பு. இதனைப் பெண்கள் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு கல்லூரி விழாவில் அரங்கேற்றினார் அவர். பேசினார் என்று சொல்லமுடியாது. 'அரங்கேற்றம்'தான். இதற்கு அவர் எடுத்துக் கொண்டது இரண்டரை மணிநேரம். அந்த இரண்டரை மணிநேரமும் ஒரு சின்னச் சலனமோ அசைவோ இன்றி விக்கித்து விதிர்விதிர்த்துப்போய் செவி மடுத்த கூட்டம், சிவகுமார் பேசி முடித்துக் கீழே மண்டியிட்டுத் தரையைத்தொட்டு வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று ஐந்து நிமிடத்திற்கும் மேலாகக் கைத்தட்டியது இதுவரை யாருக்கும் கிடைக்காத பெருமை என்றே சொல்லலாம்.
அடுத்தது இன்னொரு கல்லூரி வளாகம். சேலத்தில் நடந்த இந்த விழாவில் 'என் கண்ணின் மணிகளுக்கு' -என்று பேச ஆரம்பிக்கிறார். இந்த தடவை அவரது பேச்சு முழுக்கவும் இளைய சமுதாயத்தைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு தந்தையாக, ஒரு ஆசானாகச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு தோழனின் தொனியில் சொல்லிச் செல்கிறார். வேறு யார் சொல்லியிருந்தாலும் நல்லுரைகளாக, உபதேசங்களாக எரிச்சல் ஊட்டியிருக்கக்கூடிய விஷயங்கள் இவரது மொழிநடையில் கவனமாகச் செவிமடுக்கும் உரையாக மாற்றம் கொள்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அழுகையை அடக்க முயலும் பெண்களையும் தேம்பியழும் இளையதலைமுறையினரையும் கவனமாகப் பதிவு செய்கிறது காமிரா.
நாமக்கல் பாவை எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷனில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டம். இங்கே 'ஒரு கிராமத்து இளைஞனை கலைஞனாக மனிதனாக மாற்றியவர்கள்' என்ற தலைப்பில் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அப்பட்டமான கிராமத்தின் படப்பிடிப்பு.ஏதோ தி.ஜானகிராமன் நாவலையோ, கி. ராஜநாராயணன் நாவலையோ படித்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை. அத்தனை அசலாய் கிராமம் பற்றிய வர்ணனைகள். அதற்கடுத்து குடும்பச்சூழல், ஓவியக் கல்லூரி, திரைப்பட நுழைவு, தாம் சந்தித்த பெரிய மனிதர்கள் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்று பேசிச்செல்கிறார். எல்லாம் புதிய புதிய தகவல்களாய் வந்து விழுகின்றன. மெய்மறந்து கேட்கிறது கூட்டம்.
எல்லாப் பேச்சுக்களிலுமே அடிநாதமாய் ஓடும் இழை ஒன்றே ஒன்றுதான். 'நீ வளர்ந்த சமுதாயத்தின் வேர்களை விட்டுவிடாதே . பெற்ற தாய் தந்தைக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள். உலகம் உன்னுடையது. ஒவ்வொரு நாளையும் ரசனையுடன் வாழக்கற்றுக்கொள்.' - இந்தச் செய்தியைத் தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே தொகுத்துச் சொல்கிறார். ஒளிவு மறைவில்லாத பட்டவர்த்தனமான உண்மைகள் சர்வசாதாரணமாய் வருகின்றன. தாம் சந்தித்த தோல்விகளையும் அவமானங்களையும்கூட சத்திய சோதனைபோல் சொல்லிச் செல்வதனால் இந்த மனிதரின் பேச்சிலுள்ள நேர்மை கேட்பவர்களைக் கட்டிப்போடுகிறது.
திரையுலகின் புகழ்பெற்ற அத்தனைப் பெரிய மனிதர்களோடும் பழகியவர் என்பதனால் அவர்களைப் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிய வருகின்றன.அவை எல்லாமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன. பேசி முடிக்கும்போது கனமான ஒரு இறுக்கம் கவிந்தது போன்ற உணர்வு தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு பேச்சைக் கேட்டுவிட்டு வந்தோம் என்பதுபோல் இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்று வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதில் சுலபமான வெற்றிபெறுகிறார் சிவகுமார்.
ஒரு ஓவியராக, நடிகராக, மக்கள்முன் பிரபலமடைந்த சிவகுமார் இன்றைக்கு ஒரு சிறந்த பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு பிரபலமான பேச்சாளர் என்றோ இலக்கியப் பேச்சாளர் என்றோ வகைப்படுத்த முடியாது. தமிழின் நல்லெண்ணத் தூதுவர்களில் ஒருவர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

Friday, March 5, 2010

சடுதியில் விழுந்த நித்யானந்த பிடுதி!

நித்தியானந்தாவை இந்தக் கோலத்தில் வீடியோவில் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ,பாலும் பழமும் படத்தில் சிவாஜி சரோஜாதேவிக்கு 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்று பாடிக்கொண்டே பணிவிடை புரிந்து பேணிப்பாதுகாப்பதுபோல் அவ்வளவு சாவதானமாகக் கண்ணின் மணிபோல் பாவித்து பால் கொடுத்து, உணவு கொடுத்து, மாத்திரைக் கொடுத்து, கால் அமுக்கிவிட்டு அப்புறம் காதல் வயப்பட்டவளாய் மேலே விழுந்து பற்றிப் படர்ந்து சேவை செய்கிறார் என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அந்த நடிகை " சாமி,கடவுள் இதுமேலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.நான் சாமியெல்லாம் கும்பிடமாட்டேன்" என்று எப்போதோ பெரிய பகுத்தறிவுவாதிபோல பேட்டி கொடுத்திருந்ததாக ஞாபகம்.

நித்தியானந்தா பெங்களூரில் வந்து காலூன்ற பெருமளவு உதவி புரிந்தவர் மறைந்த சண்முக சுந்தரம். பெங்களூர்த் தமிழர்களாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் அன்புடன் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்பட்டவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டுவரக் காரணமாயிருந்தவர். பெங்களூர்த்தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்தவர். அவருக்கு உடல்நிலையில் பாதிப்புவர கைகளால் சக்தி பாய்ச்சுவதன் மூலம் குணப்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா. அந்த வகையில் அவரால் கவரப்பட்ட அண்ணாச்சி நித்தியானந்தாவுக்கு பெங்களூரில் ஆசிரமம் அமைத்துத் தர பெருமளவில் உதவிகரமாக இருந்தார். தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேவே கௌடாவிடமும் ,எஸ். எம். கிருஷ்ணாவிடமும் பேசி பெங்களூர் - மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் (கன்னடத்தில் பிடுதி என்றால் விடுதி என்று பொருள்) இடம் அமைத்துத் தந்தார். ஆரம்பத்தில் நித்தியானந்தாவும் அண்ணாச்சிக்கு மிகவும் விசுவாசமானவராகவே இருந்தார். அண்ணாச்சியின் உதவிகள் பல்வேறுவகையிலும் அன்றைக்கு நித்தியானந்தாவுக்கு அவசியமானதாக இருந்தன.

"உங்களை அவரிடம் கூட்டிப்போகிறேன் அவரைச் சந்தியுங்கள். பக்தி இலக்கியத்தில் நித்தியானந்தாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் சரி, நோய்களை குணமாக்குவதில் அவருக்கு இருக்கும் ஆற்றலும் சரி உங்களுக்குப் பெருமளவு உதவும்" என்று சொல்வார் அண்ணாச்சி.
"சரி போகலாம்" என்று சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் நித்தியானந்தாவின் பெயரோ புகழோ அந்த அளவுக்குப் பரவியிருக்கவில்லை. மேலும் எனக்கு இம்மாதிரி சாமியார்களிடமெல்லாம் பெரிய அளவில் மதிப்போ நம்பிக்கையோ இருந்ததுமில்லை. ஆனால் அவருக்கு இவர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.அவரது நம்பிகையைச் சிதைக்க வேண்டாமென்று பேசாமல் இருந்துவிடுவேன்.சந்திக்க நேரும்போதெல்லாம் நித்தியானந்தரின் நோய்களை குணமாக்கும் ஆற்றல் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்வார் சண்முக சுந்தரம்.
ஒருமுறை அவரிடம் "கையை வைப்பதன் மூலம் நோய்களை குணமாக்கும் கலையைத்தான் நானும் செய்துவருகிறேன். 'ரெய்கி' என்ற பெயரில் மிக்காவோ உசூயி என்ற ஜப்பானியர் வடிவமைத்த கலை இது. இன்றைக்கு உலகம் பூராவும் பரவியிருக்கிறது. சாதாரண மனிதர்களால் இருநூறு கிலோ எடையைத் தூக்க முடியாது. ஆனால் அதற்கென்று விசேஷப் பயிற்சி பெற்ற பளு தூக்குபவர்கள் இருநூறு கிலோ எடையைத் தூக்கிவிட முடியும். சாதாரண ஒரு ஆளால் ஒரு விமானத்தை ஓட்ட முடியாது. ஆனால் அதற்கான பயிற்சியும் யுக்திகளும் கற்றால் விமானத்தை ஓட்ட முடியும். ரெய்கியும் அப்படித்தான். அதற்குரிய தீட்சைப்பெற்று சில விசேஷப் பயிற்சிகள் பெற்றால் கைகளை வைத்து ஒருவருடைய நோய் களை குணமாக்கும் கலையைச்செய்ய முடியும். இதனை ஆன்மிகத்துடன் சம்பந்தப்படுத்தி தெய்வ வரம் பெற்றதால்தான் செய்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை. இயற்கையோடு நம்மைப் பிணைத்துக் கொண்டாலேயே இது சாத்தியம்தான் " என்ற என்னுடைய விளக்கம் அன்றைய நிலையில் அண்ணாச்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது "உங்களுக்கு வலம்புரி ஜானிடம் பழக்கம் உண்டா? உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் நித்தியானந்தரிடம் வந்து மிக வேகமாகத் தேறிவருகிறார். பெங்களூரிலேயே தங்கியிருந்து சாமிகளிடம் சிகிச்சைப் பெற்று வருகிறார். முடிந்தால் வலம்புரிஜானைச் சந்தியுங்கள். நாம் மூணுபேரும் சேர்ந்தே நித்தியானந்தரைச் சந்திப்போம்" என்றார்.

"சரி" என்றேன். ஆனால் அண்ணாச்சியின் தொடர் பணிகளினால் அது இயலாமல் போய்விட்டது. இந்த நிலையில் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் திருவாசகம் சம்பந்தமாக நித்தியானந்தரும் வலம்புரிஜானும் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாகவே வந்துவிட்ட வலம்புரிஜானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “ நான் இப்போது உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமே சாமிகள்தாம். அவரால்தான உயிர்பிழைச்சிருக்கேன். நடமாடும் தெய்வம்னா இவர்தான்" என்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது. கூட்டத்தில் பேசும் நிலையில் ஜான் இருக்கவில்லை. நடக்கவே இயலாமல் இருந்தார். “உடம்புக்கு முடியாத நிலையில் எதுக்காக கூட்டத்தில் பேசுறீங்க?” என்றேன்.

"கூட்டத்தில் பேச முடியலைன்னா உடம்பு இருந்து -உயிர் இருந்து என்ன பயன்?” என்றார்.
சற்று நேரத்தில் நித்தியானந்தர் வர கூட்டம் ஆரம்பித்தது. வலம்புரிஜானும் நித்தியானந்தரும் பேசினார்கள். கூட்டம் முடிந்ததும் "சாமி பேசினதை கவனிச்சீங்களா" என்றார் வலம்புரிஜான். “கவனிச்சேன். நல்லா இருந்தது" என்றேன்.
"திருவாசகம் பற்றிப் பேசினார். ஆனால் ஒரேயொரு செய்யுளாவது சொன்னாரா? ஒரு சாதாரணப்பேச்சாளனோ இலக்கியப் பேச்சாளனோ எத்தனை செய்யுளைச் சொல்லியிருப்பான். அதுதான் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவர் ஞானிகூட இல்லை. கடவுளின் அவதாரம்" என்றார்.சொல்லிக்கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தவர் "நான் சென்னை சென்று திரும்பியதும் உங்களுக்கு போன் செய்கிறேன் அப்போது சந்திப்போம்"என்று சொல்லிச் சென்றார்.

ஒரு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் இதழில் நித்தியானந்தரைப் பற்றிய கடுமையான அட்டைப்படக் கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் அந்தப் பேட்டியைத் தந்திருந்தவரே வலம்புரிஜான்தான்.நித்தியானந்தாவைப் பற்றியும் அவருடைய ஆசிரமத்தைப் பற்றியும் பல நிழலான விஷயங்களைப் பூடகமாகத் தெரிவித்திருந்தார் வலம்புரிஜான்.
மேலும் ஒரு மாதம் சென்றிருக்கும். சிவாஜி நகர் கன்னிங்காம் சாலைக்கருகில் நித்தியானந்தரின் ஆசிரமக் கிளையில் சிகிச்சைகள் பிரபலமாகி வருகிறது என்றும் "நீங்கள் வேண்டுமானால் அங்கே சென்றுசிகிச்சை அளிக்கிறீர்களா நான் அவரிடம் சொல்கிறேன்" என்றும் கேட்டார் சண்முகசுந்தரம். “ரெய்கி சிகிச்சை என்றால் நான் அளிக்கத் தயார்" என்றேன். சில நாட்கள் கழித்து "அவர்கள் முறைப்படியான சிகிச்சைதான் அங்கே ஒப்புக் கொள்வார்களாம். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் தீட்சைப்பெற்றுக் கொண்டு அங்கே சிகிச்சை அளிக்கலாம். யோசிச்சுப் பாருங்க" என்றார். “இருக்கட்டும் ஐயா. அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லித் தவிர்த்துவிட்டேன்.

மேலும் சில நாட்கள் சென்றன. வேறொரு நிகழ்ச்சியில் அண்ணாச்சி சண்முகசுந்தரத்தைச் சந்திக்க நேர்ந்தது. “பிடுதிக்குப் போகலாம் நித்தியானந்தாவைச் சந்திக்கலாம்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன் இல்லையா? இப்ப நானே அங்க போறதை நிறுத்திட்டேன். அங்க நடக்கறது ஒண்ணும் சரியாயில்லை. முதல்ல காதுக்கு வந்தப்ப நானும் நம்பலை.அப்புறமா தெரிஞ்ச விஷயம் ரம்ப மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சி.எதுக்காக இத்தனைச் சிரமப்பட்டு தேவேகௌடாவையெல்லாம் சந்திச்சு அந்த இடம் கிடைக்க பாடுபட்டேனோன்னு ரம்ப வருத்தமா இருக்கு..ம்ம்ம் இப்ப நாமெல்லாம் ஒண்ணும் செய்யறதுக்கில்லை.அவங்க எங்கேயோ போயிட்டாங்க. இண்டர்நேஷனல் லெவலுக்குப் போயிட்டாங்க, அந்த ஆளை நான் ரம்பப் பெரிய ஆன்மிகத் தலைவரா வருவார்னு எதிர்பார்த்தேன். ப்ச்ச் எல்லாம் போயிருச்சி" என்றார். என்ன ஏதென்ற உள் விவகாரத்துக்கெல்லாம் நான் போகவில்லை. எதையும் கிளறிப்பார்க்கவும் விரும்பவில்லை. தவிர, அண்ணாச்சி சண்முகசுந்தரம் அப்படியெல்லாம் எதையும் சொல்லி விடுகிறவரும் இல்லை. அதனால் பேசாமல் இருந்துவிட்டேன்.
இன்றைக்கு அவரும் உயிருடன் இல்லை. பிடுதி ஆசிரம விவகாரங்கள் இன்றைக்கு தூள் பறந்து கொண்டிருக்கின்றன. மொத்த விவகாரத்தையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. எல்லாமே சட்சட்டென்று மாறும் நாடகக் காட்சிபோல் வந்தார்,ஆசிரமம் தொடங்கினார், புகழ் பெற்றார் புகழின் உச்சத்துக்குச் சென்றார்,அகில உலகிலும் கிளைகள் பரப்பினார், எங்கேயோ போயிருக்கவேண்டியவர் தொபுகடீர் என்று விழுந்தார் என்று இவ்வளவு வேகமான காட்சிகள் எந்த திரைப்படத்திலும் நாவலிலும்கூட வந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒரு திரைப்படம் பார்க்க ஐந்து கைக்குட்டைகள்


பிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. “நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்" என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.


கோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர்.
இவரது அன்புப் பட்டியல் மிகப்பெரியது. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.

மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …....எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர். “ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”
' நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்" என்கிறார்.

"சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா " என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.
இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக்ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.
எழுத்துக்களில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மனம் பறிகொடுத்தவர். எந்த அளவு ஈடுபாடு எனில் எண்பதுகளின் மத்தியில் நான் கோவையில் இவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிப் பேசினோம். “ அவரைச் சந்திக்க வேண்டுமே ஏற்பாடு செய்ய முடியுமா ?” என்று கேட்டார்.
"அதற்கென்ன பெங்களூர் சென்றதும் ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். பெங்களூர் வந்ததும் சுஜாதாவிடம் சொன்னேன். “அழைத்து வாருங்களேன்" என்றார் சுஜாதா. மாதம்பட்டிக்காரருக்குத் தெரிவித்தேன் . அவ்வளவுதான். அடுத்த ஃபிளைட் பிடித்து பெங்களூர் வந்தார். சுஜாதாவைச் சந்தித்துப் பேசினார்.மறு ஃபிளைட்டில் கோயம்புத்தூர் திரும்பிவிட்டார்.
எண்பதுகளில் 'கிராமர் வெர்ஸஸ் கிராமர்' என்றொரு ஆங்கிலப்படம் வந்தது. பாசத்தைப் பிழிந்துதரும் படம். 'பாசமலர் அளவுக்கு மனதை உருக்குகிறது. படம் பார்த்து அழாமல் வரமுடியாது ' என்ற விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிகரமான படம் அது. “இங்கே வர தாமதாகும்போல் தெரிகிறது. பெங்களூருக்குப் படம் வந்தால் தெரிவியுங்கள்" என்று கடிதம் போட்டிருந்தார் மாதம்பட்டி சிவகுமார். படம் பெங்களூர் வந்ததும் தெரிவித்தேன். அடுத்த நாளே காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்துவிட்டார் என்பது முக்கியமல்ல. படத்திற்குக் கிளம்பும்போது சூட்கேஸைத் திறந்து ஆறேழு கைக்குட்டைகளை எடுத்துக்கொண்டார். “எதுக்குசார் இவ்வளவு கைக்குட்டைகள் ?” என்றேன்.
"படம் ரொம்ப சோகமாயிருக்கும். நிறைய அழுகை வரும் என்றார்களே" என்றார்.
அந்த ரசனையுள்ள குழந்தை படத்தின் பல இடங்களில் கேவிக்கேவி அழுததை கலைக்க விரும்பாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நல்ல ரசனை உள்ளவர்கள் தாம் ரசித்ததை அழகாக மற்றவர்களிடம் விவரிப்பதைக் கேட்பது ஒரு தனி அனுபவம். கண்ணதாசன் பாடல் எழுதிய நாளில் உடனிருந்து அதனை அனுபவித்த விவரத்தை இவர் சொல்வதைக் கேட்க வேண்டும். …....
"சிவகுமார் அண்ணன் நடிச்ச படம் 'சந்ததி'. அந்தப் படத்திற்கான ஒரு பாடல் கம்போசிங்கிற்
காக நானும் உடன் சென்றிருந்தேன். கவிதா ஓட்டல்ல கவிஞர் வந்து உட்கார்ராரு. நாங்கள்ளாம் அவர் முன்ன உட்கார்றோம். டைரக்டர் கதையைச் சொல்றாரு. நடிகர்கள் யார் யாருன்னு கேட்கறார் கவிஞர். பாட்டு எந்த சிச்சுவேஷன், இரவு எஃபெக்டா பகல் எஃபெக்டான்னு கேட்கறாரு. பாட்டு பிக்சரைஸ் பண்ணும்போது காட்சியில யார்யார் இருக்காங்கன்னு கேட்கறார். தொகையறா வேணுமா அல்லது பல்லவியிலிருந்தே ஆரம்பிச்சுரலாமான்னு கேட்கறார்.

அந்த சமயத்துல டைரக்டருக்கும் அவர் உதவியாளருக்கும் தொகையறா வேணுமா வேணாமான்னு சொல்லத்தெரியலை. “இல்ல இந்தப் பாட்டுக்குத் தொகையறா போட்டுக்கங்க" என்கிறார் கவிஞர். டைரக்டர் சரின்றாரு.
அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்.......ஒரேயொரு நிமிஷம் டைரக்டர் சொன்ன கதையை மைண்ட்ல ஓட்டறார். அவருடைய உதவியாளரைப் பார்த்து "எழுதிக்க" என்கிறார்.
இறைவன் எழுதிய கடிதம் ஒன்று
கையினில் கிடைத்தது இன்று
அது கால்பக்கக் கடிதம்
ஆரம்பம் முடிந்து அந்திக்கு வருகின்றது-உண்மை
சந்திக்கு வருகின்றது
எழுதி முடித்ததும் டைரக்டர் பாட்டில் புற்றுநோய் வரணும் என்கிறார்.
"அது அவ்வளவு நல்லா இருக்காதே" என்கிறார் கவிஞர்.
"இல்லைங்க கதை அதுதான். கதாநாயகனுக்கு ப் புற்றுநோய். ரத்தப் புற்றுநோய். அவன் சாகப்போறான். அந்த வார்த்தைப் பாடலில் வரணும்" என்கிறார் டைரக்டர்.
அப்படியா என்று யோசிக்கிறார் கவிஞர். ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்தான்.
'என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன்
சந்ததியில் விருப்புற்று நோய் தந்தான் தந்தை
அப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம்
இப்போது வருகிறது இறைவனவன் கடிதம்-
அப்படின்னாரு. அப்படியே மலைச்சு மந்தரிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தோம். அந்தப் படத்தின் கதை என்னன்னா, வாடகைக்கு ஒரு விலைமாதைக் கொண்டுவந்து சந்ததிக்காக அவள் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது...பின்னர் அவளுக்குக் காசு கொடுத்து அவளை அனுப்பிவிடுவது. இவருக்கு யாரும் சொந்தத்துல பொண்ணுதர மாட்டாங்க. அதுக்காக வாடகைத் தாயார் அப்படின்றது கதை. வாடகைத்தாயா ஸ்ரீபிரியா நடிச்சிருந்தாங்க. இதைச் சொல்லி முடிச்சதுதான் தாமதம்.
'இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி
உறவுக்கு வந்தது என்வீடு-அதில்
வரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே
செலவில் முடிந்தது என் ஏடு
வேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி
யார்கடன் முதலில் நான் கொடுப்பேன்-என்
வேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்
வானத்தில் இருந்தே நான் பார்ப்பேன்'
அப்படீன்னார்.அந்தக் கணம், அந்தக் கணத்தில் எழுதியது. ரூம் போட்டோ, நேரம் எடுத்துக்கொண்டோ, வீட்டுக்குப்போய் யோசிச்சோ எழுதியதில்லை. அப்போதே அந்த நேரத்திலேயே எழுதியது. டைரக்டர் புற்றுநோய் வரணும்னு சொன்னதுக்காக என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன், விருப்புற்று நோய்தந்தான் தந்தை என்று அற்புதமாக அந்தச் சொல்லை வரவழைத்தார். தொடர்ந்து-
ஒருதுளி நீரில் ஆறடி உருவம்
உலகினில் வந்தது அவனாலே
அந்த ஆறடி உருவம் ஆறடி நிலத்தில்
அடங்கப் போவதும் அவனாலே- என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதையையும் காட்சியையும் சொன்ன மாத்திரத்தில் அருவிபோலக் கொட்டிமுடித்ததை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குது" என்றார் மாதம்பட்டி சிவகுமார்.
கோவைத் தங்கங்களில் மாதம்பட்டியும் ஒன்று!

Thursday, February 18, 2010

கேள்வி - பதில்

கே : ஆனந்த விகடன் இப்போதைய வடிவம் எப்படி இருக்கிறது?
ப: நன்றாக இருக்கிறது. அவர்கள் புதிதாய் அறிமுகப்படுத்தியிருக்கும் பகுதிகளும் , பெரிய அளவிலான வடிவமும் வண்ணமயமாய்க் காட்சியளிக்கும் படங்களும் , பளபள காகிதமும் , புதிய லே-அவுட்டும் ஒரு புதிய இதழைப் படிக்கிறோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகின் றன. இந்த வடிவம் வெற்றியும் பெற்றுவிட்டது. அதனால் அவர்கள் இந்த ஆல்நியூ விகடனை அப்படியே வைத்துக்கொண்டு பழையபடி பழைய விகடனை ஆரம்பிக்கலாம். அதே பழைய பொருளடக்கத்துடன் அதே பழைய சைஸில்!
கே: கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தீர்களா ?
ப: இல்லை. அவரது முந்தைய படமான தசாவதாரத்தில் பெற்ற அதிர்ச்சியிலிருந்தே இன்னமும் வெளியே வர முடியவில்லை. தான் ஈடுபடும் திரைப்படத்திற்கென கமலின் ஈடுபாடு அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை என்பது வேறு விஷயம். ஒரு கலைஞனின் ஈடுபாடு மற்றும் திறமையை மட்டும் அளவுகோலாக வைத்துப் பலன்களோ தாக்கங்களோ கிடைப்பதில்லை. படத்தின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் வெற்றிகளும் அதற்கான தாக்கங்களும் கிடைக்கின்றன. தசாவதாரத்தைப் பொறுத்தவரை முதல் வேடமான ரங்கராஜநம்பியைத்தவிர, பல்ராம் நாயுடு வேடத்தை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அது கூட அவர் ஏற்கெனவே வேறுசில படங்களில் செய்த வேடங்களின் நீட்சிதான். மற்ற வேடங்களெல்லாம் வேடங்களே அல்ல. இந்த வேடங்களைப் போட்டுவிடுவதற்கு மேக்கப் கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்களாம். நம்ம ஊர் ஒப்பனைக் கலைஞர்களே இதைவிடவும் அருமையான ஒப்பனையைப் போட்டிருப்பார்கள். NDTV-யில் மன்மோகன் சிங், அத்வானி,வாஜ்பாய், லாலு பிரசாத் போன்ற தலைவர்களை மாஸ்க் போட்ட பொம்மை களாகச் சித்தரித்து ஒரு நிகழ்ச்சி வரும். ஏறக்குறைய அதில் வரும் கேரக்டர்கள் மாதிரியே தான் இருந்தன கமலுக்குப் போடப்பட்டிருந்த வேடங்கள். மூன்றங்குல வேடத்திற்கு முகத்தில் மாஸ்க் அளவுக்குப் பூசிவிட்ட பிறகு உணர்ச்சிகளை எங்கிருந்து வெளிப்படுத்து
வது? கமலுடைய நோக்கம் -நவராத்திரியில் சிவாஜி போட்ட வேடங்களை விடவும் அதிகமாகப் போடுவது என்பது.... கமல் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம். ஏனெனில், சிவாஜியின் அந்தச் சாதனை 'தொடப்படாமல்' அப்படியேதான் உள்ளது.

கே: சமீபத்து அதிசயமாக எதைக் கருதுகிறீர்கள்?
ப: பரபரப்பாக இருக்கும் மனிதர்களைப் பற்றித்தான் பிரபலமான வார இதழ்களில் அடிக்கடி எழுதுவார்கள். சமீபத்திய ஆறு மாதங்களின் குமுதம் அல்லது ஆனந்த விகடன் இதழ்களை எடுத்துப் பாருங்கள். ஒரு இதழ் விட்டு இன்னொரு இதழ், அல்லது சில வாரங்களில் ஒவ்வொரு இதழிலும் என்று தவறாமல் ஒரு மனிதரைப் பற்றின தகவலோ, புகைப்படமோ, துணுக்கோ, கட்டுரையோ, கேள்விபதிலோ, அனுபவமோ ஏதோ ஒரு பதிவு என்று தவறாமல் வந்திருக்கிறது. அந்த மனிதர் ; கண்ணதாசன்! அவர் 1981-ல் மறைந்தார். ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குப் பிறகும் அவரை நாள்தோறும் ரேடியோவும் டி. வி. சேனல்களும் காசெட்டுகளும் சிடிக்களுமாய்த் தமிழ்ச் சமூகம் இடைவெளியே இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த மகத்தான மனிதன் எல்லாருடைய இல்லங் களிலும் இதயங்களிலுமாய் எவ்வளவு வலுவாய்க் குடிபுகுந்திருக்க வேண்டும் பாருங்கள். எங்கேயோ படித்த ஒரு புள்ளிவிவரம் நினைவுக்கு வருகிறது. “ இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேரின் குரல்கள்தாம் இருபத்திநான்கு மணிநேரமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் - லதா மங்கேஷ்கர் , இன்னொருவர் -கண்ணதாசன்!”

கே: தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு ரகுமான்இசையில் கலைஞர் பாடல் எழுதியிருக்கிறாரே ?
ப: ஏ.ஆர். ரகுமான்இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்று கலைஞர் ஆசைப்பட்டது தவறா என்ன?
கே: நீங்களும் கேள்வி பதில் ஆரம்பித்துவிட்டீர்களே.........?
ப: இந்தியாவில் கேள்விபதில்களை முதன்முதலில் பிரபலமாக்கியவர் பாபுராவ் படேல். அவருடைய மதர்இந்தியா பத்திரிகை கேள்வி பதில்களுக்காகவே பரபரப்பாக ஓடியது. எதையும் துணிச்சலாக எழுதுவார். இந்திராகாந்தியைக் கூட 'திஸ் கேர்ள்', 'தட் கேர்ள்' என்றெல்லாம் எழுதுவார். சோ கூட பாபுராவ் படேல் அளவுக்கு வரலாம் என்று நினைத்துத் தான் எழுத ஆரம்பித்தார். தமிழில் கேள்வி பதில்களைப் பிரபலமாக்கியவர் தமிழ்வாணன். ஆனால் கேள்விபதில்களை மிகவும் சுவாரஸ்யமாக்கியவர் என்று எஸ்.ஏ.பியைத்தான் சொல்ல வேண்டும். அரசு என்ற புனைப்பெயரில் ஒளிந்துகொண்டு உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் மிகமிக சுவாரஸ்யமாக்கியவர் அரசுதான். பின்னர் அதே குமுதம் இதழில் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்றொரு பகுதி ஆரம்பித்து பிரபலமான
வர்களைக் கொண்டு கேள்வி பதில்களை எழுத வைத்தார்கள். மிகுந்த வரவேற்பைப் பெற்ற பகுதி அது. ஆனால் சில இதழ்களோடு நிறுத்திவிட்டார்கள். அந்த வடிவம் பிடித்துப்போகவே அதே பாணியில் அப்போது பரபரப்பாக வந்து கொண்டிருந்த 'பிலிமாலயா' இதழில் கேள்வியும் நானே பதிலும்நானே என்று ஒரு இதழில் எழுதினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் அந்தப் பகுதிக்கு வரவேற்பு இருக்கவே திரைப்பட பிரபலங்களை வைத்து அந்தப் பகுதியைத் தொடர நினைத்தார்கள். ஒரேயொரு பிரபலம் மட்டுமே பங்குபெற்றார். தொடர்ந்து சரியாக வரவில்லை என்பதனால் பிலிமாலயா ஆசிரியராக இருந்த எம்.ஜி.வல்லபன் மேலும் சில இதழ்களுக்கு அதனைத் தொடர்ந்து எழுதச் சொன்னார். நானும் சில இதழ்களுக்கு எழுதினேன். அவருடைய 'ஜீனியஸ்' பதில்களும் அதே இதழில் வந்துகொண்டிருந்ததனால் ஒரே இதழில் இரண்டு கேள்வி பதில் பகுதிகள் வேண்டாமே என்பதற்காக என்னுடைய பகுதி நிறுத்தப்பட்டது.
கேள்வியும் நானே பதிலும்நானே என்ற வடிவம் ரொம்பவும் சௌரியமான ஒன்று. ஆனால் தொடர்ச்சியான சுவாரஸ்யம் மிகவும் அவசியம். இந்த வடிவத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு 'ரவுண்டு கட்டி' ஆடிக்கொண்டிருப்பவர் கலைஞர். பல வருடங்களாக கேள்வியும் நானே பதிலும்நானே எழுதிக்கொண்டிருக்கிறார் அவர். இப்போது வலைத்தளத்திலும் நிறையப்பேர் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் மறுபடி ஆரம்பித்து விட்டேன்.

கே: இப்போதைய நடிகர்களில் யாருடைய நடிப்பு பிடித்திருக்கிறது?
ப: 'கார்த்தி... '! விக்ரம் தன்னை நிரூபிக்க 'சேது' வரவேண்டியிருந்தது. சூர்யா, பாலாவின் 'நந்தா'விலிருந்துதான் தம்முடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். இதற்குள் மேற்படி இருவரும் பல படங்களைக் கடந்து வந்திருந்தார்கள். ஆனால் முதல் படமான 'பருத்தி வீர'னி
லேயே மிக அனாயாசமான நடிப்புத் திறமையை நிரூபித்திருந்தார் கார்த்தி. இரண்டாவது படமான ஆயிரத்தில் ஒருவனில், 'நடிக்க ஆரம்பித்த ஒரு நடிகனின் இரண்டாவது படம்' போலவா நடித்திருக்கிறார்? பல படங்கள் நடித்த ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்புக்கு இணையான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கும் கார்த்தி வியக்கவே வைத்திருக்கிறார். தமிழில் இதற்குமுன் முதல் படத்திலிருந்தே அனாயாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஒரேயொருவர்தானே.

Wednesday, February 10, 2010

இளைய ராஜாவா.....? ரகுமானா......?

இளைய ராஜாவுக்கும் ரகுமானுக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சில காலமாகவே இளையராஜாவா ரகுமானா என்ற வாக்குவாதங்களும், பட்டிமன்றங்களும் இணையதளம் உட்பட பல்வேறு தளங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி சில வருடங்களின் முன்புவரையிலும் -குறிப்பாகச் சொல்லப்போனால் ரோஜாவின் வருகை வரையிலும் இளையராஜாவின் ஆதிக்கமும் தாக்கமும் மிகுதியாகவே இருந்தன. இளையராஜாவின் அன்னக்கிளி எப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவந்ததோ அதே போன்ற ஒரு மாறுதலை, அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு மாறுதலை ஏ.ஆர்.ரகுமானின் ரோஜாவும் கொண்டு வந்தது. இரண்டு படங்களின் பாடல்களும் பெருவாரியான அளவில் மக்களைப்போய்ச் சேர்ந்தன. இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்குச் சேர்ந்ததோ அதைவிடவும் அதிகமான அளவில் ரகுமானின் பாடல்கள் மக்களிடம் சேர்ந்தன. இந்த அதிகப்படியான சென்றடைதலுக்கு ரகுமானின் பாடல்களில் இருந்த இனிமையை விடவும்,அவர் பாடல்களில் செய்திருந்த மாற்றங்களை விடவும், முக்கியமான காரணம் -அந்தந்த காலகட்டங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். அன்றைய தினம் இளையராஜாவின் பாடல்கள் திடீரென்று அத்தனைப் பரவலான வளர்ச்சியைப் பெற்றதற்கும் இதே தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையான இயற்கை விதியினைக் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் அந்த படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் இதுதான் அளவில் பெரியது ,இதுதான் சிறந்தது என்றெல்லாம் கச்சைக் கட்டிக்கொண்டிருப்பது சரியான முறைமையாக இருக்காது. இந்த ஒரு விதியைக் காரணம் காட்டியே அந்தந்த படைப்புக்களில் ஒன்றுமே இல்லை எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று சுட்டுவதும் அறிவுடைமை அல்ல. சில படைப்பாளர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது வர்த்தகரீதியான விஷயங்களுக்கு அப்பால் அவை சமூகரீதியாக மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் முக்கியம். இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் தாக்கங்கள் என்பதனை அவை எந்த அளவுக்கு மனதில் ஊடுருவிப் பதிந்திருக்கின்றன , எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கின்றன மனதிலே தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையிலே எந்த அளவுக்கு தொடர்ந்திருக்கின்றன,எத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கின்றன என்பதையெல்லாம் அளவுகோல்களாகக் கொள்ளலாம்.
இந்தக் கோணத்திலிருந்து திரைஇசைப்பாடல்களை அணுகும்போதுதான் காலத்தைத்தாண்டி அவை நிற்கின்றனவா என்பதும் , காலத்தைத்தாண்டி நிற்கின்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கின்றார்களா என்பதையும் கணிக்க முடியும். இந்த அளவுகோல்களெல்லாம் இல்லாமல் அவர்களின் வணிகரீதியான வெற்றிகளை மட்டும் கணக்கிட்டு இவர்தான் எல்லாமே என்பதும்,அவரை இவர் வென்றுவிட்டார் என்பதும் இவரை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறக்கவில்லை என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டுவதும் சரியான ஒப்பீடுகள் ஆகாது.
இதுபோன்ற விஷயங்களில் விடுபட்டுப் போகின்ற இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் ஒருவரைப் பற்றிச்சொல்லும்போது அதே துறையில் இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்த, அல்லது கோலோச்சிக் கொண்டிருந்த இன்னொரு முக்கிய மேதையை மிகச்சௌகரியமாக மறந்துவிடுவது ,அல்லது வேண்டுமென்றே விடுபட்டுப் போய்விட்டதான பாவனைக் காட்டுவது. இந்தச் செயலும் வர்த்தகரீதியான நடைமுறைக்கு
மிகவும் உதவுகிறது என்பதனால் இத்தகு செயல்பாடுகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த முந்தைய மேதை இப்போதைய 'ஒளி வட்டத்து' மேதை நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளை இத்தனைக் காலமும் உயிரைக் கொடுத்துச் சாதித்து முடித்திருப்பார். அவர் சிரமப்பட்டுப் போட்ட ரோட்டில் இந்தச் சாதனையாளர் சர்வசாதாரணமாக சாரட்டு வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பார். எல்லாவிதமான சாதனைகளுக்கும் தான்தான் சொந்தக்காரன் என்பதாக இவரது பாவனைகளும் நடவடிக்கைகளும் இருக்கும். இவரை ரசிக்கின்ற கூட்டமும் இதற்குத் தோதாக நடந்துகொள்ளும். அந்தக் கூட்டத்திற்கு அதனைத் தாண்டிய எந்த நோக்கமும் இருக்காது. தொடந்து ஒரே செய்திகளைச் சொல்லிக்கொண்டு ,ஒரே விதமான புகழுரைகளை முழங்கிக்கொண்டு சலிப்பு ஏற்படுகின்றவரைக்கும் இவர் பின்னாலேயே பயணம் போய்க் கொண்டிருக்கும். அடுத்த ரசனைக்குரிய சாதனையாளர் கிடைக்கிறவரை இந்தக் காட்சிகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.. இதில் பரிதாபம் என்னவென்றால் சில நாட்களுக்குப்பின் நடைபெறுகின்ற அத்தனையையும் அதுதான் உண்மை என்பதுபோலவும் ,அதுதான் நிதர்சனம் என்பதுபோலவும் குறிப்பிட்ட அந்தச் சாதனையாளரே நினைக்க ஆரம்பித்துவிடுவார் என்பதுதான். இன்றைய பொதுவான நிலைப்பாடு இதுதான். இதே பாதையில்தான் இன்றைய பல்வேறு ஒளிவட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி; அங்கீகா
ரங்களும் சரி; புகழ் வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகிறவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்தவொரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் ,அதைச்சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ் வெளிச்சமும், கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதைவிடவும் முக்கியம் இத்தனைப் புகழ் வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ, கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை.அவ்வளவு சாதாரணமாக எந்தவொரு மனிதரிடத்தும் அல்லது எந்தவொரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது. அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும், நூறு கிராம்மிகளும் தாராளமாகத் தரலாம்.
பரிசுகளும் அதனைத் தொடர்ந்த அங்கீகாரங்களும் எப்படிக் கிடைக்கின்றன அவை நியாயமானவர்களுக்கு நியாயமான நேரங்களில் கிடைக்கின்றனவா என்பவையெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள். அவை எப்படிக்கிடைக்கின்றன என்பது இங்கே பேசுபொருள் இல்லை. இந்த இருவரில் யார் வித்தகர்? இந்த இருவரில் யார் விற்பன்னர்? என்பதாக இங்கே முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்குள்ளே இருக்கின்ற நியாய அநியா
யங்களுக்குள்ளே சென்று பார்ப்பதுதான் நமது நோக்கமே.
இன்றைக்கு ஏ.ஆர்.ரகுமான் எட்டியிருக்கும் உயரம் என்பது சாதாரணமானது அல்ல.இசைத்துறையில் என்றில்லை, திரைப்படத்துறையில் இருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த எந்தக் கலைஞனாலும் இத்தனை உயரத்தையும் இனிமேலும் தொடரந்து ரகுமான் எட்டப்போகும் உயரங்களையும் தொடமுடியுமா என்பதுவும் சந்தேகம்தான். இது ஒருபுறமிருக்க, இந்தக் காரணங்களாலேயே ரகுமான் யாரை விடவும் மிகப்பெரிய இசை மேதை ஆகிவிடமுடியுமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி. ரகுமான் காலத்தைக் கடந்த இசைமேதையா என்பது நம்முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி.
இந்த இடத்தில் வேண்டுமானால் நாம் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர இயலும். 'காலத்தைக் கடந்த இசை ' என்ற ஒற்றை வரி விதியொன்றை அளவுகோலாக வைத்துக்கொண்டு ரகுமானையும் , இளையராஜாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நிச்சயம் இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. மாறுபட்ட இசை , புதுமையான இசை, மேல்நாட்டுப் பாணியிலான இசை, நவீன உத்திகளில் கோர்க்கப்பட்ட நவநாகரிக இசை, இதுவரை நாம் கேள்விபட்டேயிராத வாத்தியக்கருவிகளின் லயம் சேர்ந்த இசை, என்று இன்னும் என்னென்னவோ சொல்லி வகைப்படுத்தலாம். அத்தனையும் உண்மைதான், ஆனால் காலத்தைக்கடந்து நிற்கவும், மனதை ஊடுருவிச்சென்று மனதைக் கரைக்கவும் உயிருள்ள வரை உங்களுடனேயே தொடர்ந்து வரவும் ,இத்தனைப் பக்கத்துணைகள் ஒரு நல்ல இசைக்கோர்வைக்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல இசை என்பது ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலிலிருந்துகூட வெளிப்படக்கூடும். அந்த இசையில் தோய்ந்துள்ள சுகமான இனிமைதான் அடிப்படை.
அத்தகைய இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான். இளையராஜா தந்திருக்கும் இனிமையான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். ரகுமான் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது. இனிமையான சுகானுபாவம் என்பது மிகவும் குறைவானது. ஆகவே, இந்த வகையில் ரகுமானைப் பின்னே தள்ளிவிட்டு நிற்பவர் இளையராஜாதான். எனவே ரகுமானை மிஞ்சி நிற்பவர் இளையராஜாவே என்று சொல்லி விலகிக்கொள்ள முடியுமா என்று பார்த்தால் 'முடியாது'என்பதுதான் பதில்.காரணம் இளையராஜா பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே சொல்லவேண்டிய பெயர்கள் சில இருக்கின்றன என்பதுதான்.
இளையராஜா தமிழில் சில சாதனைகள் புரிந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதற்காக ,சாதனைகள் புரிந்த ஒரேயொருவர் இளையராஜாதான் என்பதுபோலவும், அல்லது சாதனைகள் புரிந்த முதலாமவர் இளையராஜாதான் என்பதுபோலவும் ஒரு கற்பிதம் ஏற்படுத்த முயல்வதையும் ஏற்பதற்கில்லை. தமிழ் இசையை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்றெல்லாம் சிலபேர் எழுதிவருவதைப் பார்க்கும்போது அவர்கள்மீது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னொருவர் எழுதுகிறார் 'இளையராஜா அளவுக்குச் சாதனைகள் புரிந்தவர்கள் அவருக்கு முன்னும் இல்லை. பின்னாலும் வரப்போவதில்லை.' இம்மாதிரியான கருத்துக்களெல்லாம் ஒன்று அறியாமையால் வருவது- அல்லது அவர்மீது கொண்ட அதீத ரசிப்புக்கொண்ட்டாட்டத்தால் வருவது. உலகில் எம்.ஜி.ஆர் படத்துக்கு இணையான இன்னொரு படம் வரவே வராது என்றும் வேறு யாருடைய படத்தையும் பார்க்கவே மாட்டேன் என்றும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் கருத்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பாகும் இது. இத்தகைய கருத்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்கள் இருப்பதுபற்றி இளையராஜா வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர, அந்த வாதங்களுக்கு எவ்விதமான முக்கியத்துவமோ அங்கீகாரமோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதாலோ, முந்தையவரை விடவும் வசூல் சாதனைகள் செய்தார் என்பதனாலோ அவருக்கு முன்பு இதே சாதனைகளை செய்த அவரது அப்பன் பாட்டனையெல்லாம் தூக்கிக் குப்பைக்கூடையிலே போடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை. சொல்லப்போனால் இது அதிகாரம் பற்றிய பிரச்சினைக்கூட இல்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். தனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதற்காக, "இந்தியா என்றாலேயே இந்திராதான் .இவருக்கு முன்பு இவர் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் தோன்றியதே இல்லை. காந்தி, நேரு போன்றவர்களுக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை" என்றெல்லாம் அறியாமையால் சொல்வதற்கு ஒப்பாகும்.
இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் நிற்கிறார் என்பது போலவே இளையராஜா யாருக்குப் பின்னால் நிற்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறை. அப்படிப் பார்க்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பின்னால்தான் இளையராஜா நிற்கிறார் என்பது சாதாரண குழந்தைக்குக் கூடத்தெரியும் . தமிழ் இசை உலகில் , இன்னமும் சொல்லப்போனால் திரைஇசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. விஸ்வநாதனின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இளையராஜாவின் சாதனைகள் முழங்காலுக்குக்கூடக் காணாது. விஸ்வநாதன் இசையமைத்து வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கையும் சரி; விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த பாடல்களின் எண்ணிக்கையும் சரி; இளையராஜாவின் இசையமைப்பில் வந்த பாடல்களுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புகள் கூறுவது விஸ்வநாதனின் மேதைமைக்கு இழுக்காகவே இருக்கும். இந்த ஒப்பீடுகூட தனிப்பட்ட விஸ்வநாதனின் சாதனைகளை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதானே தவிர, அவரது முந்தைய அடையாளமான 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி ' என்ற இருவர் கட்டியமைத்துச் சாதித்த பிம்பத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டது அல்ல.
விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு முன்புவரையிலும் தமிழ்த்திரையை ஆதிக்கம் செலுத்திவந்த இசையமைப்பாளர்களாக எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன். ஆதிநாராயணராவ், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ஆகிய விற்பன்னர்கள் பலர் இருந்தார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பாடல்களுக்கெல்லாம் கூட இசையமைத்துத் தந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். எஸ்.வி.வெங்கட்ராமனைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கால் பணிந்து வணங்குவார் எம்.எஸ் .என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஜி.ராமனாதன் அந்தக்கால இசையமைப்பில் செய்யாத புதுமைகள் இல்லை.ஒரு பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் ஜி.ராமனாதன். இவர்கள் அத்தனைப் பேரும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் வருகை நிகழ்கிறது. ஒரு புதிய பிரளயம் பாய்ந்ததுபோல் அத்தனை நாட்களும் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த பாடல்களின் போக்கு சத்தமில்லாமல் மாற்றியமைக்கப்படுகிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாணியிலான மெல்லிசை புதிய பாணி திரைஇசையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றைக்குப் பிரவாகமெடுக்கத்தொடங்கிய அந்த இசை சின்னச் சின்ன மாறுதல்களுடன் இன்றைக்கும் பிரவாகமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மாற்றங்களுக்கும் அந்த மாறுதல்களை நிகழ்த்தும் சாதனையாளர்
களையும் மீறியதொரு புறக்காரணம் இருக்கும். அந்தக் காரணத்தோடு ஒன்றிணைந்துதான் சாதனையாளர்களுக்கும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். திரையுலகில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக 1952-ஐக் குறிப்பிட வேண்டும். திரையுலகில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் வருகை நிகழ்ந்த வருடம் அது. அந்த வருடத்திலிருந்துதான் நடிப்பு, கதை, வசனம், இசை, இயக்கம், என்று ஆரம்பித்து திரையின் அத்தனைத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்த அற்புதம் நடந்தேறியது. 52-க்கு முந்தைய படங்களையும், அதற்குப் பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடியும். கலைஞர் கருணாநிதிகூட அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்தே திரைக்கதை வசனங்கள் எழுதி வந்தபோதிலும் 52-ன் பராசக்தி படத்திற்குப் பிறகுதான் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அவராலும் போட முடிந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவரையிலும் தயாரிக்கப்பட்டு வந்த பழைய பாணிப்படங்களுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய பாணியில் படங்கள் வர ஆரம்பித்தது அந்த ஆண்டிலிருந்துதான். ஆக, அந்த ஆண்டிலிருந்து ஒரு புதிய திருப்பம் நிகழ ஆரம்பித்தது.
இந்தத் திருப்பம் திரையுலகில் மட்டுமல்ல. ஊடகத்துறையிலும் நிகழ ஆரம்பித்தது. தமிழில் வெவ்வேறு புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சொல்லப்போனால் திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு இதழ்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அதுவரையிலும் இதழ்களில் ஆதிக்கம் செலுத்திவந்த 'ஐயராத்துத் தமிழும்', பண்டிதர்களின் தமிழும் விடைபெற்று ,புதிய -எளிய-இயல்பான -இலக்கியத்தமிழ் அரியாசனம் ஏறியது.அதிகக் கல்விக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதிகமான பொதுக்கூட்ளும் அதிகமான இலக்கியக் கூட்டங்களும் மக்களிடையே நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில் சமூகச் சூழலுக்கான ஒரு மாறுதல் பெரிய அளவில் நிகழ்கிறது.
'பணம்' என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசைப்பயணம் ஆரம்பிக்கிறது.ஆரம்பம் சாதாரணமானதாக இருந்தபோதிலும் மொத்த ஊரையும் போர்த்தும் பனிபோர்வையைப்போல தமிழக மக்களைச் சுற்றிக் கவிகிறது அந்த இசை மழை. பொழுது போக்கிற்காக ஏதோ இரண்டு பாடல்களைக் கேட்டோம் அடுத்த வேலையைப் பார்க்கப் போனோம் என்றில்லாமல் ஊனில்,உணர்வில், உயிரில் கலந்து மக்களுடன் நிலைத்து நிற்க ஆரம்பிக்கிறது அவர்களின் பாடல்கள். படுத்தால் எழுந்தால் நிமிர்ந்தால் உட்கார்ந்தால் நடந் தால் அவர்களின் இசையோடுதான் என்கிற அளவுக்கு அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கிறது. அந்த நாளை முடித்து இரவு படுக்கைக்குச் செல்வதற்குக்கூட அவர்களுடைய பாடல்களை ஒருமுறைக் கேட்டுவிட்டே நித்திரையின் வசப்படுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது அவர்களின் இசை.
அவர்களின் இந்தச் சாதனைக்கு ஆணிவேராய், அஸ்திவாரமாய், உயிராய் இருந்தது இன்னொரு மகாகலைஞன். அந்தக் கலைஞனின் பெயர்; 'கண்ணதாசன்!' ஆம் நண்பர்களே, இந்த மூன்றுபேரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இசை சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது. அளவிட முடியாதது. இன்னொருவராலோ அல்லது இன்னும் சிலர் சேர்ந்துகொண்டோ இதனை மிஞ்சும் ஒரு இசை சாதனையை இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்த்திவிட முடியாது. இந்தக் கூட்டணி உடைந்த பின்னால் அதில் இருந்த இரண்டுபேர் சேர்ந்து அவர்களின் முந்தைய சாதனைகளுக்கு நிகரான இன்னொரு சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்தாகவேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பிரிந்த பின்னால் விஸ்வநாதன் -கண்ணதாசன் இணைந்தோ, அல்லது ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்தோ முந்தைய அளவுக்கு ,அந்த உயரத்திற்கு அவர்களால் மீண்டும் வரமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்ததற்குப்பின் அந்த இரட்டையர் ஏற்படுத்தியிந்த தாக்கத்தின் பலன் இசையமைப்பாளர் என்ற முறையில் விஸ்வநாதன் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் அமைந்துவிட்டது. வணிகப்போட்டியில் விஸ்வநாதனுக்கு ஈடுகொடுத்து ஓடி வரமுடியாமல் மிகவே பின்தங்கிப் பின்னர் ஒதுக்கப்பட்டவராகவே மாறிப்போனார் ராமமூர்த்தி. திரைப்பட வணிகச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு தம்முடைய இசைஞானத் திறமையால் தனியரசராய் அதற்குப் பின்னரும் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத சக்தியாய் ஆட்சி செலுத்தினார் விஸ்வநாதன். பல ஆயிரம் பாடல்கள் அவரது இசைப்பிரவாகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தியாய் இருந்து எழுப்பிய இசைக்கோயிலுக்கு இணையான இன்னொன்று கிடையாது.
அவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த இசைக்கோர்வைகளில் யாருடைய பங்கு அதிகம் என்பதான ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த இருவருமாகச் சேர்ந்திருந்து உருவாக்கியபோது கிடைத்த அந்த ஒருங்கிணைப்பு, அந்தப் பக்குவம், அவர்களில் இருந்த அந்தப் புரிந்துணர்வின் பலன், அந்த ஒருங்கிசையின் வெளிப்பாடு, இரண்டுபேரின் திறமையும் எந்த அளவுக்குச் சேர வேண்டுமோ அந்தக் கலவையின் சரியான சதவிகிதம் இவையாவும் ஒரு அற்புதப் படைப்பின் ரகசியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இருவரின் பங்களிப்பில் உருவான பாடல்கள்தாம் இன்றைக்கும் தமிழ்ப்பாடல்களின் அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்படங்களின் உன்னத அடையாளங்களாகவும் மிகப்பெரும் சிகரங்களாகவும் இருந்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இவர்களின் மிகப்பிரபலமான பாடல்கள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இந்த மண்ணில் நிலைத்து நிற்கப்போகும் சாகாவரம் பெற்றவை. அந்தப் பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இவர்கள்தாம்.
இவர்களின் காலத்திய பாடல்கள்தாம் தமிழில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள் என்பதற்கான அடையாளங்கள் ஆரம்பமுதலே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்தில் வரும் பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் பிரபலமாவதற்கே என்னென்னமோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் வேறு என்னென்னமோ செய்து அதனைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகவும் பிரபலமாகவும் உருவாக்கும் அதிசயம் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு படம் இரண்டு படத்தில் அல்ல; சுமார் நூறு படங்களிலாவது அவர்களின் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபூர்வ சாதனை அந்தக் காலத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ; சில இந்திப் படங்களிலும் அன்றைக்கு இருந்த சில இந்தி இசையமைப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களும் இனிமையாகவும் பிரபலமாகவும் இருக்கும் இந்தச் சாதனைகளை இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பொருத்திப் பார்த்தோமானால் அவர்கள் இசையமைத்த படங்களில் ஒரு பத்துப் படங்களோ அல்லது இன்னும் இரண்டொன்றோ தேறலாம். நூற்றுக் கணக்கான படங்கள் விஸ்வநாதனுக்குப் பின்னர் யாருக்குமே தேறாது.
இவர்களின் இசைவெற்றிகளுக்கு கண்ணதாசன் பெருமளவு காரணமாக இருந்ததுபோலவே பின்னணிப் பாடகர்கள் சிலரும் காரணமாக இருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழிகோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோரின் பல்வேறுபட்ட திறமைகள் பட்டைத் தீட்டப்பட்டுப் பிரகாசப்படுத்தப்பட்டன. வேறு பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை 'செந்தமிழ்த் தேன் மொழியாள்' மூலமும் 'எங்கள் திராவிடப்பொன்னாடே' மூலமும் வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்தனர். என்றைக்கும் மறக்கமுடியாத இன்னொரு பாடல்தளம் சந்திரபாபுவுடை யது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு இன்னொரு மாற்றுக்குரல் இதுவரையிலும் வரவில்லை. பின்னணிப் பாடகர்களைப் பொறுத்தவரையில் யாரை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களெல்லாம் இன்றைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் சேர்த்தே இவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமாவின் பொதுவான நியதியே பெரிய படங்களுக்குச் சிறப்பாகச் செயல்படுவது என்பதுதான்.அந்தக் கணக்குப்படி பார்த்தால் சிவாஜி படங்கள், எம்.ஜி.ஆர். படங்கள் மற்றும் வேறுசில பெரிய படங்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசைக்கோர்வை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரட்டையரின் பட்டியலைப் பார்த்தோமானால் இவர்கள் ஈடுபடும் எல்லாப்படங்களுக்குமே தங்களின் திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான இசையையே வெளிப்படுத்தும் தொழில் நேர்மை இவர்களுக்கு இருந்திருக்கிறது.அதனால்தான் அவ்வளவு வெற்றிபெறாத பல படங்களின் பாடல்கள்கூட இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்கும் பாடல்களாக இருந்துவருகின்றன.
இவர்களின் அன்றைய பாடல்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், ஜெமினிகணேசன் பாடல்கள் , பீம்சிங் பாடல்கள், ஸ்ரீதர் பாடல்கள் என்று தனித்தனியாகப் பிரித்து இனம் காணக்கூடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையல்லாமல் கண்ணதாசனின் படைப்புக்கள் எல்லாருக்கும் பொதுவானவை. அவற்றில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள் உறவு பற்றிய பாடல்கள்,குடும்பம் பற்றிய பாடல்கள், பாசத்தைச் சொல்லும் பாடல்கள் என்று வாழ்க்கையின் அத்தனைக் கட்டங்களுக்குமான பாடல்கள் அற்புதச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டு என்றென்றைக்குமான பாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைத் தவிர்த்து இவர்களின் இசையில் மிகப்பிரபலமான பாடல்களாகவும் ,அதே சமயத்தில் மிகப் பிரமாதமான பாடல்களாகவும் அமைந்த சில படங்களின் பட்டியலைப் பார்ப்போம். மாலையிட்ட மங்கை, அமுதவல்லி, ஆளுக்கொரு வீடு, கவலையில்லாத மனிதன், பாக்கியலக்ஷ்மி, மணப்பந்தல், காத்திருந்த கண்கள், சுமைதாங்கி, வீரத்திருமகன், இது சத்தியம், கற்பகம், இதயத்தில்நீ, மணிஓசை, கலைக்கோயில், கறுப்புப் பணம், சர்வர் சுந்தரம், வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக்கிளி, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்று பட்டியல் நீள்கிறது.இவற்றில் ஸ்ரீதரின் மற்ற படங்களையும் சேர்த்தால் பட்டியல் எங்கேயோ போய் நிற்கும்.
1952-ல் பணம் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம் பதின்மூன்று ஆண்டுகள் 1965-ல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் வரையிலும் கொடிகட்டிப் பறந்து முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் படத்தின் மூலம் தமது தனிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்கிறார் எம். எஸ்.விஸ்வநாதன். அவருடைய நீண்ட பயணம் இன்னொரு இருபது ஆண்டுகளுக்கான சாதனையாக விரிகிறது.
இத்தனை ஆண்டுகளின் சாதனையில் மக்கள் மனதில் என்றென்றைக்கும் பசுமையாய் நிற்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் யாவும் வெறும் பட்டியல் போடுவதற்குப் பயன்படுபவையோ அல்லது புள்ளிவிவரம் காட்டுவதற்குப் பயன்படுபவையோ அல்ல. மாறாக மக்களிடையே இத்தனை ஆண்டுக் காலமும் புழக்கத்தில் இருந்து, இன்னமும் பல நூறு ஆண்டுக்காலமும் புழக்கத்தில் இருக்கப்போகும் பாடல்கள். செந்தமிழ்த் தேன்மொழியாள், அச்சம் என்பது மடமையடா, காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், அத்தைமடி மெத்தையடி, போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மலர்ந்தும் மலராத பாதிமலர்போல, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, வீடுவரை உறவு வீதிவரை மனைவி, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ,பாலிருக்கும் பழமிருக்கும், கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள், கட்டோடு குழலாட ஆட, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், நானொரு குழந்தை நீயொரு குழந்தை, உள்ளத்தில் நல்ல உள்ளம்....என்றிப்படி எத்தனைப் பாடல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு பட்டியலை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் போடமுடியாது. இவர்களுடைய காலத்திலேயே கே.வி.மகாதேவன் உட்பட இன்னமும் சில இசையமைப்பாளர்களின் சிரஞ்சீவித் தன்மைப் பெற்ற பாடல்கள் உள்ளன, ஆனால் அவை யாவும் எண்ணிக்கையில் குறைவே.' தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்பார்களே, அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் மூவரும் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. இப்படிப்பட்ட பொற்காலங்கள் ஏதாவது ஒருமுறைதான் வரும்.தமிழுக்கு வந்து முடிந்துவிட்டது. தமிழ்ப்படங்களைப் பற்றிய கிராஃப் ஒன்று போட்டோமானால் அம்புக்குறி உச்சத்தைத் தொட்டு நிற்கும் காலகட்டம் அது. நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள், நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இசை, நல்ல பாடல்கள் என்று காலத்தைக்கடந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் திரைப்படங்கள் வந்த காலம் அது. அதனால்தான் அந்தக் காலத்தில் திரையில் பரிணமித்த எல்லாக் கலைஞர்களுமே - சிவாஜி எம்.ஜி.ஆர் முதல் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் துவங்கி பீம்சிங், ஸ்ரீதர் என்று தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , டி.எம்.சௌந்தர ராஜன் ,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி ,சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா,நாகேஷ்,மனோரமா என்று இன்றைக்கும் வரலாறு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைக்குத் திறமைசாலிகள் இல்லையா, இன்றைய சாதனையாளர்கள் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் வரும் திறமையாளர்கள் காலத்துக்கு ஏற்றாற்போல் வெற்றிக் கொடிகளை நாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் காலத்தைக்கடந்து நிற்பார்களா என்பதைச் சொல்வதற்கில்லை. நாட்டில் எத்தனையோ மகால்கள் வந்திருக்கலாம். ஆனால் தாஜ்மஹாலுக்கு இன்னொன்று வரவில்லை. வரவும்போவதில்லை. எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழனுக்கு இன்னொருவன் ஈடாக முடியாது. அதுபோன்றதொரு காலகட்டம்தான் ஐம்பதுகளில் துவங்கி எழுபதுகளில் முடிந்த காலகட்டம். அது திரும்பி வராது.
இளையராஜாவின் திறமைகளையும், ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளையும் மனமுவந்து ஒப்புக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் இடங்களை அவரவர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய இளைஞர்களுக்கு இர்விங் வாலசைப் பிடித்திருக்கலாம். ஹாரிபாட்டரின் புத்தக விற்பனை உலகின் எல்லா எழுத்தாளர்களையும் மிஞ்சினதாக இருக்கலாம். அதற்காக யாரும் இவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரை மிஞ்சிவிட்டார்கள் என்று எந்தப் பைத்தியமும் சொல்லிக்கொண்டு அலைவதில்லை. தமிழில் திரைஇசையில் சாதித்தவர்களுக்கான இடங்களை வணக்கத்துடன் அவர்களுக்குத் தந்துவிடு
வோம். இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் எந்த இடம் உள்ளதோ அதனை இவர்களுக்குத் தந்து இவர்களைக் கொண்டாடுவோம் . இந்த இடத்தில் இளையராஜாவைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழில் நாட்டுப்புற இசையை முதன்முதலில் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்று பலபேர் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயா, உங்களின் தவறான கருத்துக்களை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் நாட்டுப்புற இசையை குளங்களாக ஏரிகளாகக்கூட அல்ல; பெரிய பெரிய அணைக்கட்டுக்களாகவே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் கே.வி. மகாதேவன். மதகுகளைத் திறந்து உங்கள் கவனத்தை அங்கே கொஞ்சம் திருப்புங்கள். இளையராஜாவே அடிக்கடி 'வாழையடி வாழையாக வந்த ' என்ற சொற்பிரயோகத்தை உபயோகிப்பார். அந்த அடிப்படையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்த விஸ்வநாதனின் தனி ராஜாங்கம் , அதே சமயத்தில் இன்னொரு ராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த கே.வி.மகாதேவன் இவர்களை ஒட்டி , இவர்கள் வந்த பாதையில் வந்து வெற்றிபெற்றவர்தான் இளையராஜாவே தவிர, தமிழ் திரைப்பட இசையே இளையராஜாவிலிருந்துதான் துவங்குகிறது என்று தவறான கற்பி தங்களை யாரும் கற்பித்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எல்லாக்கணக்குகளையுமே தப்பும் தவறுமாகவே போடவேண்டியிருக்கும். தமிழின் முதல் பிரம்மாண்டப் படத்தைத் தயாரித்தவரே செல்வராகவன்தான் என்று சொல்ல வேண்டியிருக்கும. எஸ்.எஸ்.வாசனை யெல்லாம் சௌகரியமாக விட்டுவிடலாம். மூன்று நான்கு வருடங்களாகவே மிகவும் பிரபலமான பாடல்களை எழுதுபவர் நா.முத்துக்குமார். எனவே, நா. முத்துக்குமாரிலிருந்து
தான் தமிழ்ப்பாடல்களின் வரலாறு ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை , வாலி ஆகியோரையெல்லாம் விட்டுவிடலாம். விக்ரமும் சூர்யாவும் சமீப காலத்தில் மிகுதியான திறமையை நடிப்பின் மூலம் நிரூபித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட நடிகர்கள் தமிழுக்கு இதுதான் முதல் என்று கூறிவிடலாம். சிவாஜி, கமலையெல்லாம் கண்டுகொள்ளவே வேண்டாம்........எப்படி சௌகரியம்? இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு அவரது வருகையின் சமயத்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட டேப் ரிகார்டர்களின் வளர்ச்சி. வீடுகளிலும் கார்களிலும் டேப்ரிகார்டர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கத்தொடங்க , காசெட்டுகளாகப் புதிய பாடல்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். பழைய பாடல்களில் இருந்த இனிமையை விடவும் புதிய பாடல்களின் ரிகார்டிங்கில் இருந்துவந்த புதிய ஒலிகள் வசீகரிப்பவையாய் இருந்தன. மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு ஒலிகள் மாறியபோது ஸ்டீரியோ ரிகார்டிங்குகளில் வெளிவந்த பாடல்கள் இளையராஜாவுடையவை. இந்த தொழிற்புரட்சியும் இளையராஜா அதிகமாகப் பரவ ஒரு காரணம்.
இதே காரணத்தை நாம் ரகுமானுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. இளையராஜா பாடல்கள் மிக வேகமாய்ப் பரவியதற்கு காசெட்டுகளும் ஸ்டீரியோவும் பெருமளவு காரணம் என்பதுபோலவே ரகுமானின் பாடல்கள் அதைவிட அசுர வேகத்தில் பரவியதற்கு இன்றைக்கிருக்கும் விஞ்ஞானத் தொழிற்புரட்சிதான் மிகப்பெரிய காரணம். அன்றைக்கு டேப்ரிகார்டர்களும் காசெட்டுகளும் என்றால் இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது. இன்னமும் வாஷிங்டனில் பாடல் பதிவு முடிந்தது என்றதும் நம் காதோரம் இருக்கும் ஏதாவதொரு தலைமுடியில் பொருத்தப்பட்டிருக்கும் மயிரிழையைவிட மெல்லிய ரிகார்டரில் பாடல் பதிந்து நம் காதுகளில் அதுவாகவே ஒலிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த அசுர விஞ்ஞான யுகத்துக்கு இசைமூலம் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் இசையமைப்பாளராகத்தான் ரகுமானைப் பார்க்க வேண்டும்.
இந்த தொழிற்புரட்சிகளைப் பற்றிக் கவலையே படாமல் அந்த இரட்டையர் போட்ட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாடல்கள் நாள்தோறும் உலகம் பூராவும் தினமும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன என்பதுதான் எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம்! இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னம் எத்தனை லட்சக்கணக்கான பேர் அந்தக் காலத்துப் பழைய பாடல்களைக் கேட்கிறார்கள் தெரியுமா? அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்........

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

************************