Sunday, November 4, 2012

ரெயில்வேக்குச் சில கேள்விகள்



ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால் சென்னை சென்றுவிட்டு பிருந்தாவன் ரெயிலில் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயில் மிகச்சரியான நேரத்திற்கே சென்ட்ரலைவிட்டுப் புறப்பட்டது. வாணியம்பாடி வரும்வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. ஒரு இரண்டு நிமிடம் கழித்துப் புறப்படும்போலும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போகவே சரி ஏதோ கிராஸிங்கிற்காக நிறுத்தியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டிருந்ததும் பொய்யானது. நீண்ட நேரமாகியும் ரயில் புறப்படவில்லை.

எல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கீழே இறங்கி நிற்பதுவும் கிராஸிங்கிற்காக சிக்னல் எதுவும் மாறுகிறதா என்று தூரத்தில் எட்டிப் பார்ப்பதுவுமாக இருந்தனர். இப்படியே இன்னமும் சிறிது நேரம் சென்றது. இதற்குள் அடுத்த மார்க்கத்திலிருந்த பாதையிலிருந்து நான்கைந்து ரயில்கள் சென்னை நோக்கிச் செல்லும் திசையில் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிப்போகவே கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாருக்கும் பொறுமை விடைபெற்றுக்கொண்டு இருக்க கூடைகளுடன் வண்டிக்குள் ஏறும் சிறு வியாபாரிகளுக்கான வியாபாரம் படு விமரிசையாக நடைபெற்றபடியே இருந்தது. என்ன ஆனது என்று ரயில்வே ஊழியரைப்போல் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது மனிதர் கேள்வியையே கண்டுகொள்ளாதவர்போல் அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.

இன்னமும் சிறிது நேரக் காத்திருப்பு..... சென்னை நோக்கிச் செல்லும் இன்னும் சில ரயில்களின் ஒரு வழிப்போக்குவரத்து என்று இன்னொரு அரைமணி நேரம் செல்ல ஒரு வழியாக பிருந்தாவன் ரயில் பெங்களூரை நோக்கிப் புறப்பட்டது. செல்போன் மகானுபாவர்கள் யாவரும் வீட்டிற்கு போன் போட்டு வண்டி ஒன்றரை மணி நேரம் லேட் என்ற செய்தியைச் சொன்னோம்.

வாணியம்பாடியிலிருந்து தடதடத்து ஓடிவந்த ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் நின்றது. ஜோலார்ப்பேட்டையில் வழக்கமாக இரண்டு நிமிடங்கள்தானே நிற்கவேண்டும்? இரண்டு நிமிடம் ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று. ஒரு மணி நேரம் ஆயிற்று. வண்டி கிளம்புகிறபாடாகத் தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்ப்புறம் போகின்ற வண்டிகள் வருகின்ற செய்தியையும் நின்று புறப்பட்டுப் போகின்ற செய்தியையும் அறிவித்துக்கொண்டே இருக்க அதன்படி அந்த வண்டிகள் யாவும் போய்க்கொண்டே இருந்தன. பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இத்தனையாவது பிளாட்பாரத்துக்கு வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்தான் எல்லாருக்கும் சந்தேகம் முளைத்தது. ஏனெனில் அந்த ரயில் இத்தனை நேரம் சென்னை சென்ட்ரலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கப்போகிறது.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. சம்திங் ராங் என்ற எண்ணம் பயணிகள் எல்லாருக்கும் ஏற்பட்டது. இதற்குள் பெங்களூரில் இறங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் வண்டி எப்போது புறப்படும் எத்தனை மணிக்குப் போய்ச்சேரும் என்ற தகவலும் தெரியவில்லை. பசி எடுக்கிறது. ஏதாவது வாங்குங்களேன் என்ற ஒரு பெண்ணிற்கு இரும்மா இங்கிருந்து சரியாக இரண்டுமணி நேரம்தானே பெங்களூர்? வீட்டிற்கே போயிரலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு கணவர்.

நேரம் ஆகிக்கொண்டே இருக்க நாங்களிருந்த பெட்டிக்குள் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு டிக்கெட் பரிசோதகரை நிறுத்தி என்ன ஆச்சு சார்? எதுக்காக லேட்? என்றேன்.

வேறொரு வண்டி டீரெயிலாயிருக்கு

எங்கே சார்? எந்த வண்டி?

நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்க அவர் தயாரில்லை. எதிரே நடந்துகொண்டிருந்தவர்களைத் தள்ளாத குறையாக முட்டி மோதிக்கொண்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார். பெட்டிக்குள்ளிருந்தவர்கள் எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் சொன்னதை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. எங்கேயாம்? எந்த வண்டியாம்? இந்த வண்டி எப்போது புறப்படுமாம்? என்று சுற்றிலுமிருந்த பயணிகளின் எந்தவிதமான கேள்விக்கும் என்னிடம் எப்படி பதிலிருக்க முடியும்? ஆனால் எல்லாரும் அதைத்தான் என்னிடம் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நான் ஒரு யோசனை செய்தேன். வீட்டிற்கு போன் போட்டு சன் நியூஸ் கலைஞர் செய்திகள் புதிய தலைமுறை என்று ஏதாவது செய்தி சேனல்களைப் பார்த்து ரயில் ஏதாவது எங்காவது தடம் புரண்ட செய்தி இருக்கிறதா பார்த்துச் சொல்லுஎன்று சொன்னேன். இரண்டாவது நிமிடத்தில் மகளிடமிருந்து போன் வந்தது. ஆமாம்ப்பா குப்பத்துக்கு அருகில் மைசூர்-சென்னை காவிரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டிருக்கிறதாம். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சென்னை மார்க்கமாகச் செல்லும் எல்லா வண்டிகளும் தாமதாமாக் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள் இந்தச் செய்தியை நான் சொல்லவும்தான் அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அதற்கு அடுத்த பெட்டியிலிருந்த பயணிகள் என்று இந்தச் செய்தி மளமளவென்று பரவத்தொடங்கிற்று.

இப்போது வண்டி நின்றிருப்பதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. வண்டி எப்போது கிளம்பும், பெங்களூர்ப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும் இதுபோன்ற தகவல்களெல்லாம் தெரியவேண்டாமா? என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் நண்பர் தம்முடைய மனைவிக்கு போன்செய்ய காருடன் பெங்களூர் சிடி ரெயில்நிலையத்தில் காத்திருக்கும் அந்தப் பெண்மணி ஓரளவு சரியானத் தகவல்களைத் தெரிவித்தார். சென்னை மார்க்கத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் எல்லா ரயில்களும் தாமதமாக வந்துகொண்டிருப்பதாகவும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஐந்து மணிநேரம் தாமதமாக மாலை ஆறுமணிக்குத்தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிடி ரெயில் நிலையத்தில் அறிவிக்கிறார்கள் என்ற செய்தியைப் பெற்று எல்லாருக்கும் தெரிவித்தார் அவர்.

ஆக, இரண்டு மணிநேரம் தாமதம் மூன்று மணி நேரம் தாமதம் என்பதையெல்லாம் கடந்து ஆறு மணிக்கோ ஏழு மணிக்கோ தான் இந்த வண்டி பெங்களூர்ப் போய்ச்சேரும் என்பது தெரிந்தவுடன் அவரவர்களுக்கும் முதலில் வயிற்றுப்பிரச்சினைக்கு வழி தேடுவது முதன்மையான காரியமாக மாறிப்போனது. சாப்பாடு ஏதாச்சும் இருக்காப்பா? என்று கேண்டின் சிப்பந்தியிடம் கேட்டபோது எல்லா சாப்பாடும் தீர்ந்துருச்சி. பஜ்ஜியும் மசால்தோசையும்தான் இருக்கு என்றார்.

கட்டையிலப் போறவனுங்க. வண்டி லேட்டாப் போகும்ன்றதை அறிவிச்சுத் தொலைச்சா என்ன? நாம் ஏதாவது வாங்கி சாப்பிட்டிருக்கலாமே என்று சாபமிட்டார் ஒரு பெரியம்மா.
அவரவர்களும் வண்டியிலிருந்து இறங்கி ஓடுவதும் பழங்களையும் பிஸ்கட்டுகளையும் வாங்கிவருவதுமாகவும் இருந்தனர். என்னதான் பிருந்தாவனில் பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டிருந்தாலும்   வீட்டிற்குப்போய்த்தான் சாப்பிடுவது என்று பிடிவாதமாக இருப்பவர்கள் ஒவ்வொரு ரயிலிலும் என்னைப்போல் நூறுபேராவது இருக்கக்கூடும். ஆனால் இம்மாதிரி சமயங்களில் என்ன செய்வது? எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

அடுத்த அரை மணி நேரத்தில் சூடாக ஏராளமான எலுமிச்சை சாதத்தை சமைத்து பொட்டலம் கட்டி எல்லாப் பயணிகளுக்கும் கிடைக்கிறமாதிரி செய்த அந்த கேண்டின் சமையல்காரப் புண்ணியவானுக்குக் கோடி நமஸ்காரம். அத்தனைச் சூடாகவும் அவ்வளவு நன்றாகவும் இருந்தது அந்த எலுமிச்சை சாதம்.

ஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் ஜோலார்ப்பேட்டையிலிருந்து கிளம்பிய ரயில் அதற்கு அடுத்து காடுபோலிருந்த ஏதோ ஒரு ஸ்டேஷனில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நின்றது. அந்த நீண்ட காத்திருப்பிற்குப்பின் அங்கிருந்து கிளம்பி இரவு ஏழு மணிக்கு பெங்களூரை வெற்றிகரமாக வந்து அடைந்தது.

இப்போதைய கேள்வியெல்லாம் வண்டிகள் ஓடுவதும் தடம் புரளாமல் மோதிக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று சேருகின்ற மாதிரி திறம்பட நிர்வகிப்பதும் பயணிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும் ரயில்வே துறையின் மகத்தான சேவைதான் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இம்மாதிரி தாமதங்கள் ஆகும்போது எதற்காக இப்படியொரு தாமதம்? என்ன நடந்திருக்கிறது? என்ன நடக்கவேண்டி இருக்கிறது? தாமதம் சரியாக இன்னமும் எவ்வளவு நேரமாகும்? போன்ற தகவல்களை பயணிகளுக்கு அறிவிக்க வேண்டுமா வேண்டாமா? அதனைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒரு பயணிக்கு இல்லையா என்ன?

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலோ வழியில் எங்காவது நிறுத்திவைத்திருக்கும் ரயிலிலோ அறிவிப்பிற்கான வழிவகைகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு ரயில் ஜோலார்ப்பேட்டை போன்ற சகல வசதிகளும் நிறைந்த ஜங்ஷனில் நின்றிருக்கும்போது கூடவா அறிவிக்கக்கூடாது? அதாவது போகட்டும். செய்தி தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய பெட்டியில் இருப்பவர்களிடம் கூடவா இத்தகைய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது? இல்லை இதெல்லாம் ராஜ ரகசியங்களா?

நாட்டிலிருக்கும் பொதுமக்களுக்கெல்லாம் டிவி செய்திகள் மூலம் அந்தத் தகவல்கள் தெரியும்போது குறிப்பிட்ட அதே வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் அதுவும் எத்தனையோ வேலைகளை முடிப்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருக்கும் பயணிகளுக்கு அந்தத் தகவல்கள் தெரியக்கூடாதா? ரயில் குறிப்பிட்ட ஊர் போய்ச்சேர நீண்ட நேரம் ஆகும் என்றால் எத்தனையோ பேர் சில ரயில்வேஸ்டேஷன்களில் இறங்கி பஸ் பிடித்தோ அல்லது தனி டாக்சி வைத்துக்கொண்டோ போகிறவர்கள் இருப்பார்கள். குறைந்தபட்சம் வயிறைப் பட்டினிபோடாமல் பார்த்துக்கொள்ளவாவது இத்தகைய தகவல்கள் உதவும் இல்லையா?

என்ன பொறுப்பற்றதனம் இது?

இன்னமும் ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்பதை வாணியம்பாடியிலேயே தெரிவித்திருந்தால் நான் அங்கேயே இறங்கி ஒரு டாக்ஸி வைத்து பெங்களூர்ப் போயிருப்பேன். சாயந்திரம் மகளுக்கு கல்யாண ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கேன். இப்படி ஆகிவிட்டதே என்று அழாத குறையாய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு தந்தை.

நான் நாலரை மணிக்கு ஒரு இன்டர்வ்யூவில அட்டெண்ட் பண்ணுவதற்காகப் போய்க்கிட்டிருக்கேன் சார் என்று பரிதாபமாகச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

ரயில்வேத்துறை இம்மாதிரி சம்பவங்களின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறது?

Wednesday, September 26, 2012

தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா!


ஜெயலலிதா தமது விருப்பத்திற்கேற்ப நடத்தி முடித்த மெல்லிசை மன்னர்களுக்கான பாராட்டுவிழாவின் இரண்டாவது பாகத்தையும் ஜெயா டிவி 23-09-2012 அன்று ஒளிபரப்பிற்று. இதுவரை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே சாலச்சிறந்த நிகழ்ச்சியாக இதனையே சொல்லமுடியும். ரஜனியின் பேச்சை குளறுபடி செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியிருந்தார்களெனில் அவர்களின் பெருமை நிச்சயம் இன்னமும் கூடியிருக்கும்.(விஸ்வநாதன் ஆரம்ப காலத்தில் நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார் என்று சொல்லி யாரோ ஒருவருடைய படத்தைக் காட்டினார்கள். சி.ஆர்.சுப்பராமன் குழுவில் இருந்தார் என்று சொல்லி கிவஜவின் படத்தைக் காட்டினார்கள். இந்த இரண்டு தவறுகளையும் மன்னித்துவிடலாம்)

இப்படியொரு விழாவை திரைப்படத்துறையின் ஆகச்சிறந்த கலைமகன்களுக்காகவும் தலைமகன்களுக்காகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்த ஜெயலலிதாவை இதற்காக எத்தனைப் பாராட்டினாலும் தகும். ஏனெனில் நமக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்காக அவர் எது செய்தாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு துளியும் அரசியல் கலக்காமல் எடுக்கப்பட்ட ஒரு பாராட்டு விழாவாகவே கொள்ள வேண்டும்.

அவரே தமது உரையில் குறிப்பிட்டதுபோல் சின்னக்குழந்தையாக இருந்தபோது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து – அறியும் பருவம் வந்தபிறகு அந்த பாடல்களின் இசையனுபவத்தில் மூழ்கி – இன்றைய நாள்வரை அந்தப் பாடல்களின் இனிமையுடன் அவற்றுக்கான நிஜமான அனுபவங்களுடனும் பயணிக்கிறவர் அவர். ‘என்னுடைய உயிர் பிரியும்வரை இவர்கள் இசையமைத்த பாடல்கள் என்னுடன் கலந்திருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பாடல்களில் தோய்ந்தவராக மனம் பறிகொடுத்தவராக இருக்கிறார் அவர். 

இந்த விஷயத்தில் ஜெவின் கருத்துக்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போகிறபோக்கில் சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டுப் போகிற விஷயமாக இதனைக் கொள்வதற்கில்லை. கலைத்துறையில் திரைப்படக் கதாநாயகியாக ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த ஒரு கலைஞர்; கலைத்துறை சார்ந்த குடும்பச்சூழல் என்பதால் திரைப்படத்தில் அடியெடுத்து வைக்குமுன்னரே வீட்டிலேயே சங்கீதம், நாட்டியம் என்று கற்றுத் தேர்ந்தவர்; கர்நாடக இசை பற்றியும் நாட்டிய நாடகங்கள் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் மிக்க ஒருவர், தாம் ஈடுபட்ட ஒரு பிரிவு குறித்து – அந்தப் பிரிவில் மகத்தான சாதனைகள் புரிந்த இரு மகான்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை அவர் நினைத்த அளவில் பிரமாதமாய் பிரமாண்டமாய் செய்து முடித்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.


அவரது இந்த முடிவு ஒன்றும் சாதாரணமாக வந்ததாக நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் ஒருவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்து பிற்பாடு அதையே விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு தொடரும் மௌடிக ரசனை சார்ந்தது அல்ல அவருடைய இந்த ரசனை. அந்த விழாவிலேயே சிவகுமார் சொன்னதுபோல்  சென்னையில் அலிகான் என்பவரிடம் ஏராளமான இசைப்பாடல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து சுமார் அறுபதாயிரம் பாடல்களை (சரியாகப் படியுங்கள்- அறுபதாயிரம் பாடல்கள்) பதிவுசெய்து வாங்கிவைத்துக் கேட்டு உய்த்துணரும் உயர் ரசனைக்கு சொந்தக்காரராகத்தான் ஜெயலலிதா இந்த விழாவை எடுத்திருக்கிறார் என்பதையும் நாம் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.

சாதனையாளர்கள் வாழ்கின்ற காலமெல்லாம் பேசாமலிருந்துவிட்டு அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர் அவர்களுக்கென விழாவெடுத்து சிலைவைத்து தெருக்களுக்கும் கட்டடங்களுக்கும் அவர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்கள் பெயரால் விருதுகள் வழங்குவதும் அவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவதும் என்று தொடரும் இம்மாதிரி சம்பிரதாயங்களுடன் ஒப்பிடும்போது ஜெவின் இந்தச் செயல் மிகப்பெரும் பாராட்டுக்குரியது.

அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் ஜெவின் இந்தச் செய்கையில் துளிக்கூட அரசியல் கிடையாது. அவர் அரசியலில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுக்காலமும் பேசிய பேச்சுக்களை வைத்துப் பார்த்தாலும் ‘பத்ம விருதுக்கு இவர்களை நான் சிபாரிசு செய்தால் அதனை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தும் இடத்துக்கு நிச்சயம் வருவேன்” என்று குரல் உயர்த்திய அந்த ஒரு பாராவை விட்டுவிட்டுப் பார்த்தால் பேச்சு நெடுகிலும் துளிக்கூட அரசியல் இல்லை.

ஒரு நல்ல கலா ரசிகர் ஆட்சிபுரியும் இடத்திற்கு வந்தபிற்பாடு தாம் இத்தனைக் காலமும் கண்டு கேட்டு அனுபவித்து பிரமித்த அந்த உயர் கலைஞர்களுக்குத் தன்னுடைய அன்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் வெகுமதியையும் எப்படி நம்முடைய பாணியில் செலுத்தலாம் என்று தெரிவிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த விழா.
யோசித்துப் பாருங்கள்…………… இன்றைக்கு விசுவநாதன் ராமமூர்த்திக்குப் பாராட்டு விழா எடுப்பதனால் ஜெயலலிதாவுக்கு ஆகப்போவது என்ன?
இதிலே அரசியல் ரீதியாக அவருக்கு என்ன ஆதாயம் இருக்கப்போகிறது?

இந்தக் காயை நகர்த்துவதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் அவர் எந்தக் காயை வீழ்த்தப் போகிறார்? அவருக்குக் கிடைக்கப்போகும் வெற்றி என்ன?

ஒன்றுமே இல்லை.

ஆக, ஆத்மார்த்தமாக செலுத்தப்பட்ட நன்றி நவிலும் நிகழ்வாகவே இது பரிமளிக்கிறது. இதனை அவர் ஸ்டைலில் ஆளுக்கு ஒரு காரும் தங்கக் காசுகளாகவும் பொழிந்து தமது மரியாதையைத் தெரிவித்தார். இதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டும் அதே சமயத்தில் இளையராஜாவையும் வேறொரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும்.
முதல்வர் மட்டுமல்ல இளையராஜாவும் இதனை ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தும் விழாவாகவே மாற்றிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 
                                  

இங்கே பதிவுகளில் இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது நிறைய பதிவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான் என்றே தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் மட்டுமல்ல பிற ஊடகங்களும் இதே தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுவிழாவை ஒரு மிகப்பெரும் நிகழ்வாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவேண்டிய ஊடகங்கள் ரஜனி கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய ஒன்றுமில்லாத விஷயத்தை மட்டுமே ‘பேனைப் பெருமாளாக்கிய’ கதையாகச் சொல்லி  ஏதோ ஒரு பரபரப்புத் தேடுவதாக நினைத்து வெற்று உரலைக் குத்தி சில்லைப் பேர்த்திருக்கிறார்கள்.

இளையராஜா நிற்கும் இடம் எது என்பது இளையராஜாவுக்குத் தெரிந்திருக்கிறது. பாவம் இவர்களுக்குத் தெரியவில்லை.
தன்னுடைய உயரம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு அது தெரியவில்லை.

தம்மிடம் இருக்கும் சொத்து சொத்து எவ்வளவு என்பதற்கான சரியான கணக்கை அவர் வைத்திருக்கிறார். பாவம் ரசிகர்கள் ‘உலகமே உன்னுது தாண்ணே’ என்றே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசையில் சாதித்த முன்னோர்கள் நிறைய இருக்கிறார்கள். ஜி.ராமனாதன் நிறைய மாறுதல்களைச் செய்தவர். அதற்கு அடுத்தும் நிறையப்பேர் இருக்கிறார்கள். முதலில் பாடல்களை எழுதவைத்து அந்தப் பாடல் வரிகளுக்கு மட்டுமே மெட்டமைத்தவர் கே.வி.மகாதேவன். அது மட்டுமின்றி நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் தமிழ்த்திரையில் பெருக்கெடுத்தோடச் செய்தவர் அவர்தான்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகளோ இன்னமும் மகத்தானவை. இனிமை ததும்பிய ஓராயிரம் பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மட்டுமே. வேறு யாருடைய இசையிலும் ‘நின்று நிலைக்கும்’ பாடல்கள் இத்தனைத் தேறாது. தவிர மற்றவர்கள் ஒரு படம் இசையமைக்கிறார்கள் எனில் அதில் ஒரு பாடலோ இரண்டோ அல்லது மூன்று பாடல்களோ மட்டும்தான் தேறும். அவைதான் கொஞ்ச நாட்களுக்கேனும் வலம் வரும். மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் எந்தவொரு இசையமைப்பாளரின் படங்களாக இருந்தாலும் இதுதான் இயல்பு. தமிழில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த படங்களிலும் சரி, அதன்பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த பல படங்களிலும் சரி - அத்தனைப் பாடல்களும், ஆமாம் அத்தனைப் பாடல்களும் - தெவிட்டாத தேனமுதாய் நின்று 
நிலைக்கும் பேறு பெற்றவையாக இருந்தன, இருக்கின்றன! இம்மாதிரியான படங்கள் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதாவது இருக்கும்.

எண்பத்தாறு படங்களுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்கள் நானூற்று ஐம்பதுக்கும் மேல். தனியாய்ப் பிரிந்தபின்னர் ராமமூர்த்தியால் பெரிதாகத் தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. இருபது படங்கள்தாம் தனியாக இசையமைத்தார் என்றே தெரிகிறது.
ஆனால் அந்தக் காம்பினேஷன்……………………!

அற்புதங்களை இசையில் விதைத்துச் சென்ற சேர்க்கை அவர்களுடையது.

அவர்கள் பிரிந்து இன்றைக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து உட்காரவைத்து இருவருக்குமாக இந்தத் தமிழகம் விழா எடுக்கிறது என்றால் அவர்கள் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். 

அவர்கள் பிரிந்தது 1965-ல்! இப்போது விழா நடந்திருப்பது 2012-ல்.

தமிழ்த்திரை இசை என்றால் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, டிஎம்எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், பிபிஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி, சந்திரபாபு, ஜமுனாராணி, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் ராஜேஸ்வரி, ஏஎல் ராகவன் என்று இத்தனைப் பேரின் பங்களிப்புடன் வலம்வரும் சாகாவரம் பெற்ற பாடல்கள்தாம் நம்முடைய அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள். தமிழ்த் திரையின் அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள் இவர்கள் சம்பந்தப் பட்டவைதாம். இந்த - அத்தனை ஜாம்பவான்களின் பின்னணியிலும் இருக்கும் இசை முகவரிக்குச் சொந்தக்காரர்கள் இரட்டையர்கள் மட்டுமே.
இன்னமும் நூறு வருடங்கள் அல்ல, ஐநூறு வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்த்திரையின் சாதனையாளர்களாக சிவாஜியும் எம்ஜிஆரும் கண்ணதாசனும் கொண்டாடப்படுவார்கள் என்றால் அப்போதும் பேசப்படக்கூடியவர்களாக இருக்கப்போகிறவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியுமே.

ஏதோ இருபது பதிவர்கள் திட்டுவார்களே என்பதற்காக நாம் வரலாற்றை விட்டு ஓடிவிட முடியாது. அப்படித் திட்டுபவர்களால் எந்தப் புதிய வரலாற்றையும் உருவாக்கவும் முடியாது. இதற்கும் கண்ணதாசன் எழுதி இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல் வரிகளே பதில் சொல்கிறது; ‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது’

இளையராஜாவை மட்டுமே ரசிக்கிறவர்கள் ரசித்துக்கொண்டு போங்கள். ஆட்சேபணையே கிடையாது. “இளையராஜா ‘மட்டும்தான்’ நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர்” என்பது உங்கள் கருத்தா?

பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தில் குறுக்கிடும் எண்ணமே நமக்குக் கிடையாது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இளையராஜா மட்டும்தான் தமிழின் ஒரே இசையமைப்பாளர் என்பதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தைப் பொதுவெளியில் பரப்ப முயலாதீர்கள் என்பதை மட்டும்தான் வலியுறுத்துகிறோம்.

“மொழி படத்தில் ‘காற்றின் மொழி’ பாடலை என்றைக்குக் கேட்டேனோ அன்றிலிருந்து நான் வித்யாசாகரின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். இனி வித்யாசாகர்தான் என்னுடைய ஃபேவரிட்”

அப்படியா? மகிழ்ச்சி.

“மின்னலே படத்தில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்’ கேட்ட மாத்திரத்திலிருந்து எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்”

ரொம்பவும் மகிழ்ச்சி.

“ரோஜா படத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் பிடித்தது. காதலன் படம் வந்தது பாருங்க………அதுல சூப்பர் ஹிட்ஸ் தந்தாரு பாருங்க. அடட………, ஏ.ஆர்.ரகுமானுக்கு இணை யாருமே இல்லைங்க”

அப்படியா? ஓகே. வைத்துக்கொள்ளுங்கள்.

“ரொம்பச் சின்னப் பையன்சார் இவன். வெயில் படத்திலும் மதராசப் பட்டிணம் தெய்வத்திருமகள் படத்திலும் என்னமா ஸ்கோர் பண்ணியிருக்கான் தெரியுமா? இந்த வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார்? இளையராஜா ரகுமானையெல்லாம் ஒண்ணுமில்லாம செய்திருவான் போலிருக்கே”
ஜி.வி.பிரகாஷ்குமாரைப் பற்றி இப்படியொரு சிலாகிப்பு.

மாறுபாடான ரசனைகளும் மனநிலைகளும் கொண்ட மக்களிடமிருந்து இப்படியெல்லாம் விமரிசனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்பவை வேறு. உனக்குப் பிடித்தது இர்விங் வாலஸாக இருக்கலாம். உன்னுடைய பிள்ளைக்குப் பிடித்தது ஹாரிபாட்டராக இருக்கலாம். ஆனால் ஆங்கில இலக்கிய உலகம் அங்கீகரித்துக் கொண்டாடுவது சாமர்செட் மாமையும் பெர்னார்ட்ஷாவையும் மில்டனையும் இன்னும் வேறு பல முன்னோர்களையும் என்பதை மறந்துவிடக்கூடாது. இர்விங் வாலஸின் இடம் இவர்களுக்கு மிகவும் பின்னால்தான் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

இந்தக் கருத்தைச் சொன்னாலேயே நண்பர்கள் சீறுகிறார்கள். இவர்கள் சீறலையும் கோபத்தையும் தாண்டி டிஎம்எஸ்ஸும் பி.சுசீலாவும் கண்ணதாசனும் கணந்தோறும் தமிழர்கள் உள்ள இடங்களில் அவர்கள் பாட்டுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரஜனி சொன்னமாதிரி போனால் போகட்டும் போடா சட்டிசுட்டதடா எல்லாம் இன்னமும் கன்னடர்களாலும் உச்சரிக்கப்படும் பாடல்கள்.

இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லட்டும். நமக்கும் சம்மதமே. ஆனால் தமிழனுக்குக் காதுகள் முளைத்ததே இளையராஜா பாடல்கள் போட்டபிறகுதான் என்கிற மாதிரி பிதற்றித்திரிவதைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது.
ஆனால் நம்முடைய கவலையைக் களைகிற மாதிரியான நடவடிக்கைகளை இளையராஜாவும் கங்கை அமரனுமே எடுத்திருக்கின்றனர். ராஜா ரசிகர்களின் மருளையும் மருட்சியையும் போக்கும் விதமாக அவர்கள் இருவருமே முத்தாய்ப்பாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்பதனால் அதற்குப் போட்டியாக அன்றைய தினம் காலையில் மெகா டிவியில் இதைப் போன்றே ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும் மெகா டிவியில் அதன் உரிமையாளர் திருமதி ஜெயந்தி தங்கபாலு நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.(பார்ரா இங்கேயும் இவர்கள் இருவருக்கும்தான் பாராட்டுவிழா!) அந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன் பேசிய பேச்சு முக்கியமான ஒன்றாக இருந்தது.

“நாங்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் ஒலித்த பாட்டெல்லாம் இவங்களுடையதுதான். முதன்முதலாக விஸ்வநாதன் இசையில் மலர் எது  பாடலுக்கு அண்ணன் இளையராஜா வாசித்துவிட்டு வந்தார். அவ்வளவுதான்… எங்கள் கிராமம் பூராவும் கொண்டாடியது அதை. கிராமம் பூராவும் இதான் பேச்சு. எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டே ‘காலமகள் கண்திறப்பாள் சின்னையா’ பாட்டுத்தான். எங்களுக்குத் தெரிஞ்ச இசையெல்லாம் இவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான். கோரஸ் எப்படிப் பாடணும், தபலா எப்படித் துவங்கணும், எப்படித் தொடரணும் வாத்தியக்கருவிகளை எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும் எல்லாமே இவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். அவங்ககிட்ட யார் யார் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாசிச்சாங்களோ அவங்கதான் பிற்பாடு மியூசிக் டைரக்டர்ஸ். அவங்களுக்கு நாங்களெல்லாம் சரண்டர்தான். எங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அவங்கதான்” என்று பேசிக்கொண்டே வந்தவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னார். “இந்த சூட், இந்தக் கார், இந்த பங்களா எல்லாமே இவங்க போட்ட பிச்சை”.

இதை அப்படியே கவனத்தில் பதித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா நடத்திய விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கு வருவோம்.

“அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ. அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்” என்று உற்சாகமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் இளையராஜா. பிற்பாடு அவர் பேசியதும் ஏறக்குறைய கங்கை அமரன் பேச்சினை ஒட்டியே இருந்தது. “என்னுடைய மனசு நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக்கிடப்பது இவருடைய இசைதான். இதெல்லாம் அவர் போட்ட பிச்சை” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக அடுத்து சொன்னதுதான் மிகப்பெரிய வார்த்தை. நிச்சயமாக மிக மிகப் பெரிய வார்த்தை.

“அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது”-

என்று சொன்ன இளையராஜா அதற்குமேல் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றவராக ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.
ஜெயலலிதா எப்படி ஆத்மார்த்தமாக இந்த விழா எடுத்தார் என்று சொல்கிறோமோ அதே போல இளையராஜாவும் மிகவும் ஆத்மார்த்தமாக தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் இப்படிச் சொல்வதால் இளையராஜாவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

இளையராஜா அவர்கள் மீது மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் இரண்டு விஷயங்களில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. முதலாவது, விஸ்வநாதன் மீதான அவருடைய வெளிப்படையான என்றைக்கும் மாறாத இந்தக் கருத்திற்காக.

இரண்டாவது சம்பவத்தை நண்பர் ஒருவர் சொன்னார். கவியரசர் கண்ணதாசன் பிறந்த இடத்தைத் தரிசிப்பதற்காக சிறுகூடற்பட்டி கிராமத்துக்குப் போனாராம் இளையராஜா. அந்த கிராமத்தை அடைந்ததும் காரை அங்கேயே நிறுத்தி “அந்த மகாகவிஞன் பிறந்த ஊர் எனக்குப் புனிதமானது. இந்த மண்ணில் செருப்பு அணிந்து நடக்கமாட்டேன்” என்று சொல்லி செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடுதான் மொத்த கிராமத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாராம்.

Friday, August 31, 2012

ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டக்கூடியதாய் இருக்கிறது. ஒரு சமூகம் என்பது வெறும் அரசியலோடு முடிந்துவிடுவதில்லை.  

இலக்கியம்,கலை,நாகரிகம்,பண்பாட்டு அடையாளச்சின்னங்கள் என்று பல்முனை சார்ந்து ஒரு கூட்டு அடிப்படைத்தளத்தில்தான் இயங்கவேண்டியிருக்கிறது.

அதனால்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது என்னும்போது நாம் கொதிப்பதும் கண்டிப்பதும் நிகழ்கிறது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டபோதும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டபோதும் கலைஞரை தமிழ் உணர்வாளர்கள் கொண்டாடியதும் இந்த பண்பாட்டு அடிப்படையைச் சார்ந்ததுதான். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அதே மன உணர்வில்தான் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பியனுப்பியபோது கொதித்ததும் கிளர்ந்தெழுந்ததும்கூட (கிளர்ந்தெழுந்தார்களா?) பண்பாடு மற்றும் மனிதாபிமானம்  அடிப்படையிலானதே. இதற்கும் அரசியலுக்கும்கூட சம்பந்தம் கிடையாது.

ஆனால் இங்கே, குறிப்பாகத் தமிழகத்தில் மழை பெய்வதும் அணையில் தண்ணீர் திறந்துவிடுவதும் மின்சாரம் உற்பத்தி செய்வதும் ஒரு இலக்கியவாதி புத்தகம் எழுதுவதும் அவனுக்கு ஒரு விருது அளிக்கப்படுவதும் ஏன், ஒரு சினிமா ஓடுவதும்கூட அரசியலாக்கப்பட்டு விட்டது.

இங்கே எல்லாமே அரசியல்.

தொடர்பு இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையுமே கொண்டுபோய் அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இதில் ரொம்பவும் மாட்டிக்கொண்டு பரிதவிப்பது கலையுலகமும் இலக்கிய உலகமும்தாம். கலையுலகத்திற்கும் அரசியலுக்கும் இங்கே வேறுபாடே இல்லை. இரண்டும் பின்னிப்பிணைந்து ஒன்றுபோலவேதான் காட்சியளிக்கின்றன. இது அண்ணாவின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இந்த நிலையை ஆரம்ப காலத்தில் பெரியாரும் காமராஜரும் எதிர்க்கவே செய்தனர். ‘கூத்தாடிகளை நம்பி ஆட்சியதிகாரத்தை எல்லாம் வழங்கிடாதீங்க. அப்புறம் எல்லாமே நாசமாப்போயிடும்’ என்று காமராஜர் ஆரம்பத்தில் சொல்லிப்பார்த்தார். இதற்காக அவர் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்டார். ‘ஆஹா கலைஞர்களைப்போய் கூத்தாடிகள் என்று விமர்சிக்கிறாரே இவர்’ என்பதாக காமராஜர்மீது இகழ்ச்சியும் கண்டனங்களும் பாய்ச்சப்பட்டன. காமராஜர்  மீதான இந்த தாக்குதல்களை அன்றைய இளைஞர் சமுதாயம் வெகுவாக ரசிக்கவே செய்தது. அடுத்து நேரப்போகும் ஆபத்துக்களை உணராமல் கூடச் சேர்ந்து ஆரவாரித்தது.

அரசியலும் கலையுலகமும் இணைந்த ஒரு அபின் கலவை தமிழகத்தின் மூச்சுக்காற்றோடு கலக்கப்பட்டது. அரசியலும் சினிமாவும் பின்னிப்பிணைந்திருக்கின்றன என்பது வெளியே தெரியாத வண்ணம் அரசியலும் இலக்கியமும், அரசியலும் தமிழர் நாகரிகமும், அரசியலும் சங்க காலத்தமிழர் பண்பாடும் மட்டுமே கலந்திருக்கிறது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாவும் அவருடைய தம்பிமார்களும் மிக அழகாகவும் மிக வெற்றிகரமாகவும் ஏற்படுத்தினர். இதன் முதல் அறுவடை அண்ணாவுக்கே கிடைத்தது. அவரது உடல்நலக் கோளாறால் நீண்ட காலம் அவரால் ஆட்சி செய்யமுடியாமல் போய்விட அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் அவரைத் தொடர்ந்து எம்ஜிஆரும் அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் சங்கிலித் தொடராய் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றனர். இதன் நீட்சியே இப்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நடிகர் விஜயகாந்த் வீற்றிருப்பது. இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதனால்தான் சில நடிகர்கள் இரண்டு படங்கள் வெற்றிபெற்றவுடனேயே அடுத்த படத்தின் வசனங்களில் தங்களை எதிர்கால முதல்வராகப் பிரகடகனம் செய்துகொள்ளும் அவலமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அவலங்கள் இத்தகைய அசிங்கங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் நடைபெறுவதில்லை. அங்கே அரசியலும் மற்ற மற்ற விஷயங்களும் வேறுவேறாகப் பகுத்துப் பார்க்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் அததற்கான தளங்களில் அவற்றுக்குரிய சிறப்பான அடையாளங்களுடன் தனித்தே இயங்குகின்றன. கலையுலகின் இலக்கிய உலகின் சாதனையாளர்கள் அவர்களின் சாதனைகளுக்காக மட்டுமே அங்கே கொண்டாடப்படுகிறார்கள். யாரும் யாருக்கும் அரசியல் சாயம் பூசிப்பார்ப்பதில்லை. இலக்கிய உலகிலோ கலை உலகிலோ ஒரு சாதனையாளனை தேடிச்சென்று கொண்டாடுவது மட்டுமே அங்கே ஆட்சிக்கு வருபவர்கள் செய்கின்ற வேலை.

தமிழகத்திலே என்ன நடக்கிறது?

யோசித்துப் பாருங்கள். வங்காளத்திலும் மலையாளத்திலும் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் படைப்பாற்றல்கொண்ட எந்த படைப்பாளியாவது எந்த இலக்கியவாதியாவது அந்தந்த அரசினால் கொண்டாடப்படாமல் கௌரவிக்கப் படாமல் விடுபட்டுப் போயிருக்கிறார்களா என்று! அந்தந்த அரசுகள் மட்டுமின்றி மத்திய அரசின் மூலமாக அந்தந்த சாதனையாளர்களுக்குச் சேரவேண்டிய கௌரவங்கள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனையையும் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன மாநில அரசுகள்.

மற்ற மாநிலங்களின் அத்தனை சீனியர் எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இலக்கியவாதிகளும் மாநில அரசுகளின் கௌரவங்களைப் பெற்றது போக மத்திய அரசின் அத்தனை விருதுகளையும் தவறாமல் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியம் சினிமா சங்கீதம் ஓவியம் நாடகம் நாட்டியம் என்று கலை தொடர்பான எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை.
சிவாஜிகணேசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக்கூட அவமதித்து அவருக்குச் சேரவேண்டிய விருதுகளையோ கௌரவங்களையோ கிடைக்கவிடாமல் செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது?

கண்ணதாசன் போன்ற ஒரு பெருங்கவிஞன் திரைஇசை, இலக்கியம் என்று இரண்டு தளங்களிலும் அபரிமிதமான சாதனைகளுடன் உழன்ற ஒரு கவிஞனை இவர்கள் சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமல் புறக்கணித்தார்கள் என்பதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது?
மற்ற விஷயங்களை வேண்டுமானால் விட்டுவிடுவோம். சிவாஜிபோன்ற ஒரு மகாநடிகனுக்கு இந்தியாவின் அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்கிறது என்பது மிகமிகச் சாதாரண விஷயம். அதனைக்கூட கிடைக்கவிடாமல் செய்ய இங்கிருந்து அன்றைக்கு அமைச்சரவையில் இரண்டாம் நிலையில் இருந்த நெடுஞ்செழியன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அவர் அங்கு போய் லிஸ்டிலிருந்த சிவாஜியின் பெயரை அடித்துவிட்டு அதற்கு பதிலாக அப்போது அவர்களுக்கு வேண்டியிருந்த எம்ஜிஆரின் பெயரைச் சேர்த்து ‘ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகர் விருது’ என்று அறிவிக்கச்செய்த சாதனையுடன் திரும்பி வந்ததை என்னவென்று சொல்வது?

கண்ணதாசனைப் புறக்கணிக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் செய்த இலக்கிய மோசடி என்ன தெரியுமா? திராவிட இலக்கியவாதிகள் அத்தனைப்பேரும் சங்க கால இலக்கியம் என்று தொடங்குவார்கள். 
புறநானூறு அகநானூறு என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம்வரை வந்து பாரதியை கவனமாகத் தவிர்த்துவிட்டு பாரதிதாசனுக்கு வருவார்கள். அவர் எழுதிய சமுதாய சீர்திருத்தப் பாடலையும் தமிழ் உணர்வுப் பாடலையும் சொல்லிவிட்டு பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கிவிடுவார்கள். எழுத்திலும் இவ்வளவுதான். பாரதிதாசனுக்குப் பிறகு யாரும் கவிதையே எழுதவில்லையா? அவருடன் தமிழ் இலக்கியம் முடிந்து போய்விட்டதா? கவிதைக்கும் பாடல்களுக்கும் இரும்புத்திரைப் போடப்பட்டுவிட்டதா? எந்த அரசாங்கமாவது தமிழ்க்கவிதைகளைத் தடை செய்துவிட்டதா? தெரியவில்லை.

சரி கண்ணதாசனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் அபிப்பிராயப்படி அவன் ஒரு ‘குடிகாரக் கவிஞன்’. கண்ணதாசனைத் தவிர்த்து சுரதாவையோ அப்துல் ரகுமானையோ மேத்தாவையோ மீராவையோ சிற்பியையோ ஞானக்கூத்தனையோ குறிப்பிட்டுப் பேசலாம் இல்லையா? இவர்களெல்லாம் தமிழ்க்கவிதை எழுதவில்லையா? ஹீப்ரூவிலும் பிரெஞ்சிலுமா கவிதை எழுதுகிறார்கள்?......பேச.மாட்டார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்க்கவிதை என்பதும் பாரதிதாசனுடன் முடிந்துபோய்விடுகிறது.
‘தமிழ் உரைநடை இலக்கியம்’ என்பதும் திருவிகவில் ஆரம்பித்து அண்ணாவுக்கு வந்து முவவைத் தொடர்ந்து கலைஞர் எழுத்துக்களுடன் நின்றுபோய் விடுகிறது. அதற்கு முன்னாலும் யாரும் உரைநடை எழுதவில்லை. அதற்குப் பின்னாலும் யாரும் தமிழில் உரைநடை எழுதவில்லை.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன், நாபா, தி,ஜானகிராமன், சாண்டில்யன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ராகி,ரங்கராஜன் கி.ராஜநாராயணன் இவர்களெல்லாம் யார்? இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு இதுவரை இத்தனை ஆண்டுகளாக என்ன மரியாதை செய்தது, எப்படியெல்லாம் கௌரவித்திருக்கிறது என்பதையெல்லாம் யோசித்துப்பாருங்கள்.

கண்களில் ரத்தம் வரும்.

மேற்கண்டவர்கள் எல்லாம் பிரபல வாரப்பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் காசு சம்பாதித்தவர்கள் என்று மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைப்பு.

மேற்கண்டவர்களில் ஜெயகாந்தன் ஒருவருக்கு ஏதோ ஒரு விருதும் மருத்துவச்சேவையும் செய்ததைத் தவிர (அதற்கான காரணம் என்னவென்பது வேறு விஷயம்) எந்த மரியாதையோ மத்திய அரசின் எந்தவொரு  விருதோ இதுவரையிலும் கிடைத்ததில்லை.
தமிழில் எந்தவொரு எழுத்தாளருக்காவது பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கின்றனவா? இல்லை. ஆனால் இதே தகுதிகள் உடைய மற்ற மாநில எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இத்தகைய விருதுகளுடன் பவனி வருகிறார்களே எப்படி?

தமிழின் மகத்தான இலக்கியவாதிகளும் கலையுலகின் உண்மையான சாதனையாளர்களும் ‘உங்களுக்கு மாநில அரசின் அல்லது மத்திய அரசின் விருதுகள் ஏதேனும் கிடைத்திருக்கிறதா?’ என்ற கேள்வி முன்வைக்கப்படும்பொழுது “எனக்கு மக்களுடைய ஆதரவு கிடைத்திருக்கிறதே இதுவே போதும். இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன இருக்கின்றது?” என்று சிரித்துக்கொண்டே சொல்லும்போது அந்த ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வழிந்து உறைந்துபோன ரத்தத்தின் வாசம் ஆட்சியாளர்களின் மூக்கைத் தொட்டிருக்கிறதா தெரியவில்லை.

இங்கே இந்தப் பதிவுகளில் மறுபடி மறுபடி கண்ணதாசனைச் சொல்லக் காரணம் அந்தக் கவிஞன்தான் ஏடுகளைத் தாண்டிவந்து மனிதர்களை – தமிழர்களைத் – தொட்டவன்! படித்தவர்களுக்கு மட்டுமென்று இருந்த இலக்கியத்தை படிக்காத ஏழைகளுக்கும் கொண்டுசென்று சேர்த்தவன். அதிகபட்சம் ‘ஆத்தா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே’ என்று மட்டுமே இலக்கியம் பாடிக்கொண்டிருந்த ஏழைகளின் வாயில் “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்றும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்றும் செந்தமிழ் வார்த்தைகளை உட்கார வைத்தவன். ‘எங்கள் திராவிடப்பொன்னாடே’ என்று பழந்தமிழ் வரலாறு சொன்னவன். போனால் போகட்டும் போடா, சட்டிசுட்டதடா கை விட்டதடா என்று சித்தர் தத்துவம் ஆரம்பித்து ‘ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்’ என்று ஒற்றை வரிக்கே பிஎச்டி பண்ணுமளவுக்கு மிக அனாயாசமாய் மனோதத்துவம் புகுத்தியவன். காதல் மயக்கம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவந்து ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய இருளினைப்போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே’ என்று இரண்டு வரிகளில் சர்வசாதாரணமாக இலக்கியம் பேசத்தெரிந்தவன், மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று தமிழ்மூலம் உலகுக்கு நெறிகள் சொன்னவன். ‘காத்துக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி’ இரண்டு இரண்டு வார்த்தைகளில் ஓராயிரம் சிந்தனைகளை விதைக்க முடிந்தவன்…..இப்படிப்பட்ட ஒருவன் எந்த மொழிக்குக் கிடைத்திருக்கிறான்? இந்தியாவில் கண்ணதாசனைப் போன்ற கவிஞன் வேறு மொழிக்குக் கிடைத்திருந்தால் அவனை இந்நேரம் ரவீந்திரநாத தாகூரை விடவும் மேம்பட்ட கவிஞனாக உயரத்தில் தூக்கிவைத்து அந்த மாநிலமும் இந்தியாவும் கொண்டாடியிருக்கும்.

இங்கே என்ன நடக்கிறது?

கவியரசர் என்று அவரை அழைக்கிறார்களாம். ஆட்சியாளர்களுக்கும் அவருக்கும் தகராறு. அப்படி அழைக்கலாமா கண்ணதாசனை…. அழைத்தல் தகுமா? இதனை மாற்ற என்ன செய்யலாம்?

தற்போது பிரபலமாக இருக்கும் வேறொருவருக்கு அந்தப் பட்டத்தை நாமே சூட்டிவிடலாம்.

வைரமுத்து ‘கவியரசர்’ ஆக்கப்படுகிறார்.

கண்ணதாசனுக்கு இருக்கும் பட்டம் அது. வைரமுத்துவுக்கு அதனை எப்படி வழங்கலாம் என்று எதிர்ப்பு வலுக்கிறது.

எதிர்ப்பு தாங்காமல் வைரமுத்துவே அதனைக் கைவிடுகிறார்.

எல்லாக் களேபரங்களையும் தமக்கேயுரிய ‘நமட்டுச்சிரிப்புடன்’ பார்த்துக்கொண்டிருக்கும் சூத்திரதாரியான கலைஞர் கருணாநிதி இப்போது அறிவிக்கிறார். “கவியரசர் என்று சொன்னால்தானே எதிர்ப்பு? இதோ இப்போது சூட்டுகிறேன் இவர் கவிப்பேரரசு. இனிமேல் வைரமுத்துவைக் கவிப்பேரரசு என்று அழைப்போம்” இப்படியொரு சூழ்ச்சியான தீர்ப்பை அறிவிக்கிறார்.

இதற்குப் பிறகு இரண்டுமுறை ஆட்சி பீடம், மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் ரீதியாக கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு, கருணாநிதி மட்டுமின்றி டி.ஆர்.பாலு மற்றும் திரைப்படத்துறையிலும் ஊடகங்களிலும் இருக்கும் வைரமுத்துவின் செல்வாக்கு அனைத்தும் சேர்ந்து இப்போது கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு நிரந்தரமானது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் இந்த அரசியல் மிக அருவெறுப்பானதாகவே இருக்கும். வைரமுத்து ஏதோ ஒரு பட்டம் பெறுவதிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதிலும் நமக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. ஆனால் கவியரசரின் புகழைக் குறிபார்த்து எய்யப்பட்ட இந்த அம்பு வைரமுத்துவின் வெற்றிப் பதாகையில் வீற்றிருப்பதைப் பார்க்கும்போதுதான் இதையெல்லாம் சொல்லத்தோன்றுகிறது.  

அரசியல் ரீதியாகத் தமது வாழ்க்கையில் மிகப்பெரும் ராஜதந்திரங்களையும் ராஜதந்திரங்கள் என்று நினைத்து பல தவறுகளையும் செய்த கலைஞர் கருணாநிதி இலக்கிய ரீதியாகச் செய்த மாபெரும் தவறும் மோசடியும் இதுவென்றே படுகிறது.

இப்படி கண்ணதாசனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைத்தால் அவரை முற்றாகப் புறக்கணிக்கவேண்டியதுதானே? அதுதான் இல்லை. தமக்குத் தேவையான இடத்தில் ‘மட்டும்’ கண்ணதாசனைச் சேர்த்துக்கொள்கிறார். கண்ணதாசன் எழுதிய அத்தனை ஆயிரம் பாடல்களையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டியதுதானே? சன் டிவி கலைஞர் டிவி மட்டுமில்லாமல் ‘முரசு’ டிவியையும் ஆரம்பித்து கண்ணதாசன் எழுதிய பாடல்களை முதன்மையாக வைத்துத்தான் காலத்தை ஓட்டவேண்டியிருக்கிறது. இன்று மட்டும் அல்ல பின்வரும் நாட்களிலும- என்னே காலத்தின் கொடுமை!

திராவிட ஆட்சிக்காலத்தில் திரைத்துறையிலேயேகூட எத்தனையோ சாதனையாளர்கள் பத்ம விருதெல்லாம் கிடைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார்கள். முத்துராமன் எஸ்எஸ்ஆர் நாகேஷ் போன்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படவில்லை.

ஏன் இன்றைக்கு உலகத்தமிழர்கள் மத்தியில்  தமது வித்தியாசமான உரைவீச்சால் தமிழ்த்திரை விற்பன்னர்களின் சாதனைகளை வரலாற்றுப்பதிவுகளாகப் பதியவைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மத்தியில் தாமே  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகுமாருக்குக்கூட பத்மஸ்ரீ உட்பட எந்த விருதுமே வழங்கப்படவில்லை. 

சரி, நாம் ஜெயலலிதாவுக்கு வருவோம்.

அரசியல் ரீதியாக அம்மையார் மீது நமக்கு கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனால் சில விஷயங்களில் அவர் எடுக்கும் தடாலடி முடிவுகள் பாராட்டுக்குரியதாகவே உள்ளன. மழைக்கால நீர் சேமிப்பு போல ஒரு சில அரசாங்க கொள்கை முடிவுகளும் சரி, செய்கிறாரோ இல்லையோ ‘நான் வந்தால் தமிழ் ஈழம் கிடைக்கச் செய்வேன்’ என்று போகிற போக்கில் ஒரு அணுகுண்டு வீசியதையும் சரி ரசிக்கவே முடிந்தது. இதோ இப்போது விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கான பாராட்டு விழா பற்றியதும் அப்படியான ஒன்றாகவே படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாக அரசியல் இருக்கிறதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியை இப்படித்தான் நடத்தவேண்டும் என்று தீர்மானித்ததில் அரசியல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முதலமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு ரசிகை தான் நேசித்த இரு மாபெரும் கலைஞர்களுக்கு ஆத்மார்த்தமாகச் செய்த மரியாதை என்பதாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி முடிவுக்கு வர முடிகிறது.
அதுவும் மரியாதை என்ற பெயரில் வெறும் பொன்னாடைப் போர்த்தி அனுப்பிவிடாமல் இருவருக்கும் தலா அறுபது பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும் ஃபோர்டு பியஸ்டா கார் ஒன்றையும் வழங்கியதுடன் நில்லாமல் ‘திரை இசைச் சக்கரவர்த்திகள்’ என்ற பட்டமும் கொடுத்து கௌரவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சும் எவ்வித பகட்டும் பாசாங்கும் இல்லாமால் படு நேர்மையுடன் இருக்கிறது.
“இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகாவரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒருமுறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில் குழந்தையாக இருந்தபோது அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர்மூச்சு உள்ளவரை ,அந்தப் பாடல்கள் என் மனதைவிட்டு அகலாது” என்ற முதல்வரின் வார்த்தைகள் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் சார்பாக சொல்லப்பட்ட வார்த்தைகளாகவே படுகின்றன.

அடுத்து முக்கியமான கட்டத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. “இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலத்தைத்தான் ‘பொற்காலம்’ என்று சொல்வார்கள். அதுபோல விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.”
இதனைத்தான் இந்தக் கருத்தைத்தான் நானும் இங்கே பல்வேறு பதிவுகளின் வாயிலாக இணையத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எண்பதுக்குப் பின்னர் பிறந்து தன்னுடைய பிறப்பிற்கு முன்னால் உலகம் என்ற ஒன்றே இல்லையென்பதுபோலும் தான் பிறந்த பிறகுதான் உலகம் இயங்க ஆரம்பித்து திரைப்படம் என்ற ஒன்றும் திரையிசை என்ற ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு அது  இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தீர்மானித்துக்கொண்டு மாய உலகத்தில் இருக்கும் ஒரு கூட்டம் வேறொரு இசையமைப்பாளர்தான் இசையையே கண்டுபிடித்தார் என்பதுபோல் நினைத்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இளையராஜாவுக்கு முந்தைய தமிழ்த்திரை இசையை ரசிக்காதவர்கள் தங்கள் ரசனை வாழ்க்கையின் மிகப்பெரும் பகுதியை இழந்த பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள். இவர்களைத் தாண்டியும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசைப்பிரவாகம் இன்னமும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த விழாவை நடத்திய விதத்தில் அரசியல் இல்லையே தவிர நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்த விதத்தில் ஒரு நுண்ணிய அரசியல் இருந்ததாகச் சொன்னார்கள். இது எங்கிருந்தோ கேள்விப்பட்ட ஒரு சமாச்சாரம்தான் எந்த அளவு உண்மையோ தெரியாது.
விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு என்னென்ன பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன என்று விசாரித்தாராம் ஜெயலலிதா. இதுவரை ஒரு விருதுகூடக் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டதாம். அதிர்ந்து போனவர் ‘ஐம்பது ஆண்டுகாலமாய் இசையமைத்துக்கொண்டிருப்பவர் அதுவும், முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழில் நம்பர் ஒன் என்ற இடத்திலேயே இருந்தவருக்கு எதற்காக இந்த விருதுகள் இன்னமும் வழங்கப்படவில்லை?’ என்று கேட்டாராம்.

‘விஸ்வநாதன் கண்ணதாசனோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததாலும் அவரை உயிர்மூச்சாய் கொண்டிருப்பவர் என்பதாலும் விருதுகள் தடுக்கப்பட்டன’ என்று பதில் சொல்லப்பட்டதாம். இதனைக் கேட்டு மனம் கொதித்துப்போன முதல்வர் இப்படியொரு விழாவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் என்பதாகவும் ஒரு செய்தி கசிந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியின் நம்பகத்தன்மைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் முதல்வரின் பேச்சில் இந்த விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது. “இவர்களுக்கு தேசிய விருது பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. …………………………….நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்”

கட்சி சார்ந்தவர்களை அதுவும் கழகம் சார்ந்தவர்களை மட்டுமே மதிப்பது கொண்டாடுவது என்பது கலைஞரின் வழக்கம். அதைத் தாண்டி மக்கள் கொண்டாடுபவர்களை கௌரவிப்பது மதிப்பது என்று எம்ஜிஆர் மக்களிடம் நேரடியாக வந்தார். கவியரசரை அரசவைக்கவிஞராக நியமித்தது பிரபாகரனை ஆதரித்தது என்று மக்களின் மன ஓட்டத்தை மதிக்கும் கலை அவருக்குத் தெரிந்திருந்தது.


இதில் எந்தவகை அரசியலை அம்மையார் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஐம்பதாண்டுகால திரை இசைக்கு அவர் செலுத்தியிருக்கும் மரியாதைக்கு இசை ரசிகர்கள் சார்பாக அவருக்குப் பெரிய பூங்கொத்து கொடுத்துப் பாராட்டவேண்டும்.

Saturday, July 28, 2012

ஒலிம்பிக்ஸில் இளையராஜா


தற்போது உலகின் மொத்த கவனமும் பதிந்திருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இளையராஜாவின் இசையமைப்பும் இருக்கிறது என்ற செய்தி கடந்த இரண்டு மாத காலங்களாகவே இணையத்தில் இறக்கை கட்ட ஆரம்பித்துவிட்டது. நாம் பாட்டுக்கு நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளையராஜா பாட்டிற்கு அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதில் நம்முடைய இரண்டுபக்க கவனத்தையும் திசைதிருப்புகிற மாதிரியான இப்படியொரு செய்தி வந்ததுமே சரி இளையராஜா மறுபடி புதிதாக எதையோ சாதிக்கப்போகிறார் என்பதாகவும், அல்லது அவரது மேதைமைக்கு மரியாதை செய்யும்விதமாக ஒலிம்பிக்ஸ் கமிட்டி அவரைத் தேடிவந்து புதியதோரு பொறுப்பைக் கொடுத்து மறுபடி அவரையும் அவரது பாடலை விரும்பிக்கேட்ட கோடானுகோடி ரசிகர்களையும் அவரைத்தவிர இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் சில நூறு இணைய ரசிகர்களையும் பெருமையின் உச்சிக்கே கொண்டுசென்று உட்காரவைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கைப் புதியதாகத் துளிர்விட ஆரம்பித்தது.

நிறைய ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் இயக்குநர் டானி பாயில்தான் தொடக்கவிழாவின் கலை நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சரி ரகுமானுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பினால் ஏ.ஆர்.ரகுமானை அழைத்து ஏதாவது இசைக்கோர்ப்பு வேலைகளைத் தருவதற்கு வாய்ப்பிருக்கிறது இவர் எப்படி இளையராஜாவைக் கூப்பிட்டு எந்த அஸைன்மென்ட்டும் தருவார் என்ற சந்தேகம் எழவே செய்தது. ஆனால் இணைய இளையராஜா ரசிகர்களின் இசையறிவைக் கணக்கில்கொள்ளும்போது இளையராஜாதானே ஒரேயொரு இசைச்சக்கரவர்த்தி இவரைப் புறக்கணித்து உலகில் பெரிய எந்த நிகழ்ச்சியும் களைகட்ட முடியாதே என்பதனால் இந்தச் செய்திக்கும் சாத்தியம் இருக்கும்போலும் என்ற நினைப்பு ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது.
இதை மெய்ப்பிக்கும் விதமாகப் பத்திரிகைகளிலும் சில செய்திகள் வந்தன.
இளையராஜாவின் ஏதோ ஒரு பழைய பாடலிலிருந்து ஒரேயொரு அடியை மட்டும் எடுத்துப்போட்டு ஒரு இசைக்கோர்ப்பு செய்யப்படும் என்று ஒரு செய்தி வந்தது. வேறொரு கலைக்குழுவினர் அங்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அவர்கள் ஆடும் ஒரு பாட்டில் இளையராஜா இசையமைத்த ஒரு பிட்டுக்கு ஆடப்போவதாகவும் சொல்லியிருந்தனர். ஏதோ நம்ம ஆளுடைய இசை எப்படியாவது உலகை அசைத்துப்பார்க்கட்டுமே என்ற எண்ணம்தான் இருந்தது.

ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு பிரிட்டிஷ் தேசப்பாடல் பாடப்பட்டபோதும் சரி; மிஸ்டர் பீனைக் கதாபாத்திரமாக வைத்து ஸ்டார்வார்ஸ் இசையமைப்பாளர் சிம்பொனி இசையமைப்பை வழங்கியபோதும் சரி நம்ம மாஸ்டரின் பாடல் இன்னமும் வரவில்லையே என்றுதான் மனம் எண்ணியது. பிரதான நிகழ்ச்சியில் ஒன்றும் வரவில்லை. பின்னர் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் யாரும் அறியாதவண்ணம் ஒரு ஓரத்தில் எங்காவது இளையராஜா பாடலை நுழைத்துவிடும் சாகசத்தை எந்தக் கலைக்குழுவாவது செய்துவிட்டு வருமா என்பது தெரியவில்லை. அப்படி வந்தால் அவர்களுக்கு இணையத்தில் நடைபெறும் பாராட்டுக்கள் இமயத்தையும் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

இது இப்படியிருக்க தொலைக்காட்சியில் பார்த்த நமக்குத்தான் எதுவும் சரிவரப் பார்க்கவோ கேட்கவோ கிடைக்காமல் போயிருக்கலாம் லண்டனில் இருக்கும் என்னுடைய நண்பர் முனிராஜு நேரில் ஒலிம்பிக்ஸிற்குப் போயிருக்கிறார். அவரையாவது கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக தொலைபேசியில் அவரை அழைத்துக்கேட்டேன். "பிரதான நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த பாடல் எதுவும் இடம் பெற்றதா?" என்று கேட்டேன்.

"ஓ....இடம் பெற்றதே நான் கேட்டேனே" என்றார் அவர்.

"அப்படியா எப்போது?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"நிகழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியதா? அந்தச் சமயத்தில் இளையராஜா பாடல் இல்லாவிட்டால் எப்படி என்பதற்காக நானே அன்னக்கிளி உன்னத்தேடுதே என்று மெதுவாக என் காதுக்கு மட்டுமே கேட்கிறமாதிரி  பாடிக்கொண்டேன். அப்படியானால் இளையராஜா இசையுடன் ஒலிம்பிக்ஸ் துவங்கியதாகத்தானே அர்த்தம்!" என்றார் அவர்!

Monday, July 2, 2012

சகுனி சொல்லும் சேதிகள்!


ஒரு படத்தைப் பற்றிய விமரிசனங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் படத்தின் ஓட்டமும் வசூலும்தாம் திரைப்படத்துறையில் ஒரு பிரபலத்தின் புகழை அல்லது செல்வாக்கை – அது நடிகராக இருந்தாலும் சரி, இயக்குநராக அல்லது இசையமைப்பாளராக யாராக இருந்தாலும், நிர்ணயிக்கின்ற விஷயங்களாக இருக்கின்றன.

நல்ல கதை, நல்ல படம் என்ற அளவுகோல்கள் மட்டுமே ஒரு படம் வெற்றிபெற போதுமானவை அல்ல. சுமாரான கதையோ மோசமான கதையோ, சுமாரான நடிப்போ மோசமான நடிப்போ அந்தப் படம் ஓடுவதைப் பொறுத்துத்தான் அந்தப் படத்தின் தலைவிதியும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலைவிதியும் தீர்மானிக்கப்படுகின்றன. நல்ல கதை, நல்ல படம், நல்ல நடிப்பு என்பவை மட்டுமே ஒரு வெற்றிப்படத்திற்கான அளவுகோல்களாக இருந்திருந்தால் எம்ஜிஆர் ரஜினிகாந்த்தெல்லாம் இத்தனைக்காலம் தாக்குப்பிடித்து இருந்திருக்கவே முடியாது. எப்படியோ ஓடிவிடும் படங்கள் அந்த ஓட்டத்திற்கான வெற்றிக்குப் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து நாளடைவில் அவற்றையே வெற்றிக்கான அளவுகோல்களாகவும் தீர்மானித்து அவற்றை அங்கீகரித்தும்விடுகின்றன.

ஒரு கதாநாயகனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் செல்வாக்கிற்கும் புகழிற்குமான காரணங்கள் மிகமிக எளிமையாக்கப்பட்டுவிட்டன. படம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை – படம் ஓடுகிறதா ஓடுவதற்கான விஷயங்கள் படத்தில் இருக்கின்றனவா என்பது மட்டுமே பார்க்கப்பட்டு போதுமான வசூலை அள்ளிக்குவிக்கிறதா அதுபோதும் அவன் வெற்றிக்கதாநாயகனாகப் பவனிவர என்கிற அளவுக்கு வந்துவிட்டது.

சகுனி விஷயமும் அப்படித்தான். படம் சரியில்லை, கதை சரியில்லை, படத்தில் லாஜிக் இல்லை ஒளிப்பதிவில் பிரமாதமில்லை என்றெல்லாம் விமரிசகர்கள் விழுந்து புரண்டுகொண்டிருக்க படம் பாட்டுக்குப் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு கதாநாயகன் பெருமைப்பட்டுக்கொள்ள படத்தின் ஓட்டமும் இரண்டாவது அம்சம்தான்.
 முதல் அம்சம் என்ன தெரியுமா?
படத்தின் ரிலீஸ்.

ரிலீஸ்தான் முதல் அம்சம் என்கிற கோட்பாடு சமீப காலமாக நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சகுனி ரிலீஸ் கார்த்தி மட்டுமல்ல, கார்த்தி நிலையில் இருக்கும் யாராக இருந்தாலும் முழுக்கப் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஒரு படம் 1154 தியேட்டர்களில் ரிலீஸ் என்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல; இதற்கு முந்தைய கணக்கின்படி, தமிழில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்தான் உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட படம் என்று சொல்கிறார்கள். அதுதான் இதுவரையிலும் உள்ள ரிகார்ட். ஆனால் இங்கே எந்திரனின் பின்னணியைப் பார்க்கவேண்டும். தமிழில் சிவாஜி எம்ஜிஆருக்கடுத்து ஆகப்பெரும்நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். 

திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே நாற்பது வருடங்களைக் கடந்தவர். அந்த ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யாராய், பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் ஷங்கர், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இத்தனை படாபடா பின்புலங்களுடன் சன் டிவி என்ற வர்த்தக ராட்சசன் என்ற இத்தனையும் சேர்ந்துதான் எந்திரனின் பிரமாண்ட ரிலீஸுக்குக் காரணமாக அமைந்தன.
இங்கே இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.

கார்த்தி என்ற ஒரேயொரு சின்னப்பையன் கதாநாயகன், அவ்வளவுதான்!
இயக்குநர் சங்கர் தயாள் யாரென்றே தெரியாது. விகடன் மாணவப்பத்திரிகை நிருபராயிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர் என்று சொல்கிறார்கள்.

கதாநாயகி ப்ரணிதாவுக்கும் எந்த அடையாளமும் இல்லை ஓரிரு கன்னடப் படங்களில் நடித்தவர் என்பதைத்தவிர.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளம் இசையமைப்பாளர்.

சந்தானம் மட்டும்தான் ‘பேசப்படும் நடிகர்களில் ஒருவர். அதுவும் கவுண்டமணி வடிவேல் என்று யாரும் களத்தில் இல்லாததால் விவேக்கா சந்தானமா என்று வரும்போது ‘சந்தானமே இருக்கட்டும் என்று விநியோகஸ்தர்களால் சொல்லப்படும் ஒருவர்தானே தவிர விநியோகஸ்தர்களால் பிரமாதமாக விலைபேசப்படுபவர் அல்ல.

இப்படியொரு சர்வசாதாரணக் கூட்டணியுடன் களமிறங்கி தான் நடித்த ஆறாவது படமே ஆயிரத்து நூற்றைம்பத்து நான்கு தியேட்டர்களில் வெளியாகின்ற பெருமையுடன் வலம்வர கார்த்தியால் முடிகிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

சகுனி - விமரிசன அளவுகோல்களுடன் பார்க்கும்போது கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடும் அளவுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். சரியான திரைக்கதை இல்லை, படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லை, பாடல் காட்சிக்கு உடன் ஆட்டம்போடுவதற்கு ஒரு பெண் வேண்டும் என்பதைத்தவிர கதாநாயகிக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, இது வெறும் ஒரு காமெடிப் படமா என்பது தெரியவில்லை, மிகப்பெரிய பிரமாண்டம் இல்லை, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் இல்லை, இந்தப் படத்தை ஒரு நல்ல பொலிட்டிகல் திரில்லராகச் செய்திருக்கலாம் செய்யப்படவில்லை........இத்தனை ‘இல்லைகள்இருந்தபோதும் கணிசமான வசூலுடன் இந்தப் படம் ஓடுகிறது. 

என்ன காரணமாம்? படத்தைப் பார்த்துவந்த ஒரு பெண்மணி சொன்னார் “லாஜிக் அது இதெல்லாம் தெரியாதுங்க. படம் ஜாலியா ஓடுதுங்க. 

கார்த்தி சந்தானம் அடிக்கும் லூட்டி கலகலன்னு இருக்குதுங்க. அது போதும்
ஆக கார்த்தி மக்களின் மனதில் ஜாலியான படங்களுக்கான நம்பகமான ரசிக்கத்தக்க கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பிடித்துவிட்டார். இங்கிருந்துதான் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் ஆரம்பிக்கிறது.

சூர்யாவை சாதாரணமாக எடைபோட முடியாது. மிகமிக அழுத்தக்காரராக இறுக்கமாக இருந்து எந்தச் சமயத்தில் எதில் எப்படி ஸ்கோர் செய்யவேண்டுமோ அப்படி இறங்கி அடிக்கும் களவீரராகத் தம்மை மாற்றிக்கொண்ட வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. 

அதனால்தான் அமைதியாக இருந்து இருந்தாற்போலிருந்து திடீரென்று இறங்கி எந்த ஆட்டம் வேண்டுமானாலும் ஆட முடிகிறது அவரால். அதற்கான சூத்திரம் அவருக்குக் கைவந்த கலையாகியிருக்கிறது. 

அகரம் பவுண்டேஷனாகட்டும், போதிதர்மர் ஆகட்டும், கணிணி முன்னால் சூட்கோட் அணிந்து கோடிரூபாய்க்கான கேள்விகள் கேட்டுத் தமிழகத்தைக் கட்டிப்போடும் மாஸ்டராகட்டும் எந்த பிரம்மாண்டத்தையும் அவரால் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டுப் போய்விடமுடிகிறது. 

காரணம் சூர்யாவின் பாதை அவருக்குள்ளாக மிகத் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ‘My steps are measured’ என்ற உறுதியான முடிவும் அவரால் எடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் கார்த்தி விஷயத்தில் இதற்குமேல்தான் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற வரையறையை சகுனி நிர்ணயித்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில் ஆபத்தான சில சமயங்களில் நாமே எதிர்பாராத வெற்றிகள் நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடும். அதுபோன்ற ஒரு வெற்றிதான் இது என்பதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது.

ஏனெனில் நிறைய ஓட்டைகளுடனான இந்தக் கப்பல் மிக வெற்றிகரமாகக் கரை சேர்ந்திருக்கிறது.


இனி நல்ல கப்பல்களை மட்டுமே கார்த்தி தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. சகுனி சொல்லும் சேதி இதுதான்.

Tuesday, May 15, 2012

கண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு?

கண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அத்தனைப் பேருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய பாடல்களில் ஒன்று இது. இந்தப் பாடல்கூட முழுவதும் கண்ணதாசனால் எழுதப்பட்டது அல்ல. முக்கால்வாசிப் பாடலுக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதியார். கால்வாசிப் பாடல் மட்டும்தான் நம்முடைய கவிஞருடையது. பாரதியின் பாடலுக்குக் கவிஞரின் விளக்கம் இது என்றும் சொல்லலாம், பாரதியின் பாடலுக்கு இவர் செய்த பகடி என்றும் சொல்லலாம்.

பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் சிறப்புக்களைப் புகழ்ந்து போற்றி பாரதி பாடிய பாடல் அது. இன்னமும் பாரதியின் அந்தப் பாடல் வரிகளைச் சொல்லிச்சொல்லித்தான் நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறோம். 

பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் பேசுவதற்கு அந்தப் பாடலிலிருந்துதான் வரிகளைப் பெறுகிறோம். அந்தப் பாடலைக் கேட்ட கண்ணதாசனுக்கு ‘என்னடா இது பாரதி இப்படிப் பண்ணிவிட்டாரே என்று தோன்றியிருக்கலாம். எது எதையோ பெருமைகளாகச் சொல்கிறாரே நிஜ வாழ்க்கையில், நடைமுறையில் இவையெல்லாம் வேறாக இருக்கின்றனவே என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் இவர் என்ன செய்கிறாரென்றால் பாரதி பாடிய அந்த வரிகளை அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாவது வரியில், மூன்றாவது வரியில் அல்லது ஈற்றடியில் தமது கருத்தைப் பாடலிலே பொதிந்து வைக்கிறார்.

செந்தமிழ் நாடு என்ற பாரதியார் பாடலுக்குப் புதுவுரைச் சொல்லவந்த கண்ணதாசன் தமது பாடலுக்குப் ‘புதிய தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியிருக்கிறார். கேலியும் கிண்டலும் பரிகாசமும் எள்ளலும் கண்ணதாசனின் வரிகளில் விரவுகின்றன. அதைவிடவும் ‘நடைமுறை இதுவே என்பதுதான் கவிஞர் சொல்லவரும் சேதி.

பாடலைப் பார்ப்போம்.

முதலாவதாக பாரதியின் பாடல் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே....... என்று ஆரம்பிக்கிறது. இந்த வரியையே ஆட்சேபிக்கிறார் கண்ணதாசன்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள்வந்து கொட்டுது காதினிலே.....என்று ஒரே போடாகப் போடுகிறார்.


அடுத்தது பாரதியின் வரி -‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.... என்று வீரத்தைப் பறை சாற்றுகிறது.
இங்கே அப்படியே ஒரு யூ டர்ன் அடிக்கிறார் கண்ணதாசன்.
தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்பதை விட்டுவிட்டு
‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே என்று நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....வந்தவர், ‘கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இந்த ஒரு வரி விமரிசனத்தில் இங்கே நிறைய தலைகள் உருளக் காத்திருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டோமானால்கூட பிரபலமான அமைச்சரவை என்று காமராஜருடைய அமைச்சரவையை மட்டும்தான் சொல்லமுடியும். 
அந்த அமைச்சரவையில் காமராஜர், கக்கன், மஜீத் போன்ற ஓரிருவரை மட்டுமே சிறப்பானவர்களாக உயர்த்திப் பிடிக்கமுடியும்.  
அதற்கு அடுத்த அமைச்சரவையில் அண்ணாவையும் சாதிக்பாட்சாவையும் மட்டுமே நல்ல அமைச்சர்களாகச் சொல்லமுடியும். 
கலைஞர் அமைச்சரவையிலும் மறுபடி சாதிக் பாட்சா மட்டுமே தனித்து நிற்கிறார்.


அடுத்து எம்ஜிஆர் அமைச்சரவை. இந்த அமைச்சரவையிலும் எந்த அமைச்சரையும் –கவனியுங்கள், எம்ஜிஆர் உட்பட எந்த அமைச்சரையும்- சிறப்பானவர்கள் பட்டியலில் வைக்கமுடியாது.


பிறகு ஜெயலலிதா அமைச்சரவை. எம்ஜிஆர் அமைச்சரவையிலேயே யாரும் தேறவில்லை என்னும்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சிறப்பானவர்களை எங்கே போய்த்தேடுவது? 


அதனால் கண்ணதாசன் சொல்வதுபோல ‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே- கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்ற விமரிசனம் அத்தனை அமைச்சர்களுக்கும் பொருந்தும். இதனை அப்படியே ஒப்புக்கொண்டு அடுத்த அடிக்குச் செல்வோம்.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு- தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பல ஓடத் –திரு
மேனி செழித்த தமிழ்நாடு..... என்பது பாரதியின் வரிகள்.


இதனைக் கண்ணதாசன் எப்படிச் சொல்கிறார் பார்ப்போம்.
‘காவிரி தென்பெண்ணைப் பாலாறு –தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பலவினிலும் –உயர்
வெள்ளை மணல்கொண்ட தமிழ்நாடு – எப்படி கவிஞர்?


அடுத்து பாரதியின் வரிகள்;
நீலத்திரைக்கட லோரத்திலே –நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.......


இந்த வரிகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் தெரியுமா கண்ணதாசன்?
‘நீலத் திரைக்கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு
அட, அட.. என்று பாராட்டத் தோன்றுகிறதா இல்லையா?


கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ் நாடு......இது பாரதியின் பாடல்.


இதனை மாற்றி எழுதவந்த கண்ணதாசன்,
‘கல்வி சிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவருடைய கோடரி அடுத்த வரியில்தான் இறங்குகிறது.
‘நல்ல பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு........ என்பது கண்ணதாசன்.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு –நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் –மணி
ஆரம்படைத்த  தமிழ்நாடு என்பது பாரதியின் பெருமிதம்.


இதனையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார் கண்ணதாசன்.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளையெனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு....என்கிறார்.


‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு..... என்பது பாரதியின் பெருமை.


கண்ணதாசனின் பார்வையில் நடைமுறையில் இதுவும் நிஜமில்லையே என்கிற வருத்தம்.
‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி –அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு – என்று நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறார்.

‘விண்ணை யிடிக்கும் தலையிமயம் –எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் –சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு...என்கிறார் பாரதியார்.


அது கண்ணதாசனின் பார்வையில் இப்படி வருகிறது.
விண்ணை இடிக்கும் தலைஇமயம்-எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!

சரி இப்போது கவிஞரின் முழுப்பாடலையும் ஒருமுறைப் பார்த்துவிடலாமா?

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!


இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!