Tuesday, October 26, 2010

வாருங்கள் அறிவுமதி


மந்திரப் புன்னகைப் படத்தின் அந்தப் பாடல் இதமாய் ஒலிக்கிறது. ‘சட்டச்சட சடவென’ என கார்த்திக்கின் குரலிலும் ஸ்வேதாவின் குரலிலும் ஆரம்பிக்கிற பாடல் காதில் நுழைந்து இதயத்தை வருடுகிறது.
இந்தக் காதலை நான் அடைய
எத்தனைக் காமம் கடந்து வந்தேன்
இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களைக் கடந்து வந்தேன்
.........................................................
.........................................................
இருவரே நெரிசலாய் முதன்முறை உணர்கிறேன்
ஒருவரிக் கவிதையாய் ஆனவனாலே...... என்று மனதுக்குள் ரகசியம் பேசியபடி தொடர்hshsகிறது பாடல். இந்தப் பாடல் மட்டுமல்ல, மற்ற பாடல்களும் அப்படியே..இதயத்தை மயிலிறகு கொண்டு வருடும் அழகுச் சொற்களால் பாடல்கள் கோர்க்கப்பட்டு மெல்லிய இனிமையைக் குழைத்து இசைச் சேர்க்கப்பட்டு மிதந்து வருகிறது.
இன்னொரு பாடலைப் பாருங்களேன்.
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் ..........போகாது..
அட, அட..யார் இந்தக் கவிஞர் என்று யோசிப்பதற்குள் விடை கிடைக்கிறது.......அறிவுமதி!
ஆமாம் அறிவுமதியேதான். சேது படத்தில் ‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ எழுதியவர். சிறைச்சாலை படத்தின் அத்தனைப் பாடல்களும்..குறிப்பாக ‘செம்பூவே’. ஜெயம் படத்தில் ‘கவிதையே தெரியுமா’, திருமலை படத்தில் ‘அழகூரில் பூத்தவளே’, ரன் படத்தில் ‘பொய் சொல்லக்கூடாது காதலி’, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று’,ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உதயா படத்தில் ‘உதயா உதயா உளறுகிறேன்’,தில் படத்தில் ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி’, தூள் படத்தில் ‘மதுரவீரன்தானே’ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதிய அதே அறிவுமதி...
திடீரென்று ஒருநாள் ‘இனிமேல் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதப்போவதில்லை’ என அவர் அறிவித்தபோது அதிர்ந்தவர்களில் நானும் ஒருவன். அறிவுமதியை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் உலகம் பூராவும் உண்டு. திரைப்படத்துறையில் கொள்கை கோட்பாடு என்றெல்லாம் வைத்துக்கொண்டு செயல்படுவது கடினம். ஆனால் அப்படிச்சில கோட்பாடுகளுடன் செயல்படுபவர் இவர். “ஆங்கிலச் சொற்கள் கலவாமல்தான் பாட்டெழுதுவேன்” என்று அறிவித்துவிட்டு அதன்படியே ஏறக்குறைய நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி வெற்றிகரமாக உலா வந்துகொண்டு இருப்பவர். திடீரென்று எதற்காக இப்படியொரு முடிவு?
நான் உட்பட எத்தனையோ நண்பர்கள் எடுத்துச்சொல்லியும் தம்முடைய முடிவில் உறுதியாக இருந்தவரை எப்படியோ மனம் மாற்றி மறுபடியும் பாடல்கள் எழுத அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன் தாம் இயக்கி நடிக்கும் மந்திரப்புன்னகை படத்திற்காக.
இளைய தலைமுறை இயக்குநர்களில் மிகச்சிறப்பாக ஒரு படத்தைத் தந்துவிட்டு அடுத்த படத்திலேயே முகவரி தொலைத்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில் அடுத்தடுத்துத் தம்மை நிரூபிக்கிறவர்களே சாதனையாளர்கள். அந்த வரிசையில் நிற்பவர் கரு.பழனியப்பன். ‘பார்த்திபன் கனவு’ படத்திற்குப்பின் ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ என்று தமது இருப்பை நீரூபித்தவர் அவர். கதை சொல்லும் விதமும், காட்சி அமைப்புக்களும், செறிவான வசனங்களும் அவரது பலங்கள்
. இவையில்லாமல் முன்னாள் பத்திரிகையாளர், உணர்வுள்ள தமிழ் ஆர்வலர், தெளிவான சொல், தெளிவான செயல் என்று உழல்பவர் என்பதும் அவரை வெற்றியாளர்கள் வரிசையில் என்றைக்கும் நிறுத்தப்போதுமானவை. மந்திரப் புன்னகைப் படமே ஒரு வித்தியாசமான கதைக்களம்தான். அறிவுமதியை “நீங்கதான் எல்லாப் பாடல்களும் எழுதணும். வித்யா சாகரும் நீங்கதான் வேணும் என்கிறார்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக மறுபடியும் பாடலெழுத கூட்டிவந்திருப்பதற்காகவே கரு.பழனியப்பனை தாராளமாக வாழ்த்தலாம்.
மந்திரப்புன்னகையின் இசை வித்யா சாகர்! ‘மொழி’ படத்தின் ‘காற்றின் மொழி ஒலியா இசையா’,உயிரோடு உயிராக படத்தின் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களின் மூலம் காதுகளில் தேன் தடவும் வசீகரம் தெரிந்த வித்தைக்காரர் அவர்.
இவர்கள் இருவரின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப மணிமணியாக நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார் அறிவுமதி.....’மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
கூச்சம் அவிழ்கையிலே
உடல்மாற்றி நுழைந்துவிட்டேன்’ என்று அற்புதக்காதல் பேசுகிறது பாடல்.
சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் வந்திருக்கும் கண்ணன் பாட்டு உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு ஆயிரம் செய்திகளைச் சொல்லக்கூடும். குறிப்பாக ‘உண்டு எனலாம் இல்லை எனலாம்- இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்’ என்ற வரிகளில் புதைந்திருக்கும் ரகசியம் என்னவென்பதை அறிவுமதியே ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தார்.”கண்ணன் என்ற சொல் வரும் இடத்தில் எல்லாம் அண்ணன் என்று போட்டுப்பாருங்கள். பொருள் புரியும்”.
அறிவுமதியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நான் அறிவேன். அன்பைப் பொழிவதில் இவரைப்போல் இன்னொருவரைப் பார்க்க முடியாது. குழந்தையைப் போலப் பழகுவார். தாயைப்போல அன்பு காட்டுவார். பிலிமாலயா ஆசிரியரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் ‘தைப்பொங்கல்’ படத்தை இயக்க ஆரம்பித்து படப்பிடிப்பிற்காக பெங்களூர் வந்தபோது அவருடன் உதவி இயக்குநராக வந்தவர் அறிவுமதி. அதன்பிறகு அந்தப் படம் முடியும்வரை அடிக்கடி மண்டியாவில் சந்தித்துக்கொள்வோம்.
பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றினை நடத்தினார்கள். அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்தபோது முதுகில் கொஞ்சம் பலமான அடி விழுந்தது. அதிர்ந்து திரும்புவதற்கு முன்னால் அப்படியே வந்து கட்டிக்கொண்டார் அறிவுமதி. “என்ன எங்க ஊருக்கு வந்துட்டு என்னை இன்னும் பார்க்காம இருக்கீங்களா?” என்றபடி. அன்று மாலை நானும் அறிவுமதியும் கவிஞர் சுரதாவுடன் பூம்புகார் கலைக்கூடம் சென்றுவந்தோம்.
தமிழ்க்கவிஞர்களிலேயே அதிகமான உலக நாடுகளுக்குச் சென்று வந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். தமிழர் வசிக்கும் நாடுகளுக்கெல்லாம் சென்று தமிழ் மணத்தையும் தமிழ் உணர்வையும் பரப்பி வந்திருக்கிறார் இவர். அந்தவகையில் இவரை உலகத்தமிழர்கள் தங்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடுகிறார்கள். எத்தனை நாடுகள் சுற்றி வந்தபோதும் இவரது பேச்சும் பழக்க வழக்கங்களும் மண் சார்ந்தவை; மரபு சார்ந்தவை. தன்னுடைய வேர்களைத் தமிழ்நாட்டு கிராமங்களில் பதித்து கிளைக்கரங்களால் உலகு தழுவும் கவிஞனாகவே விளங்குவதுதான் இவரின் தனிச்சிறப்பு.
முப்பத்திரண்டு பக்கங்களுக்கும் குறைவான மிக ஒல்லியான ஒரு புத்தகம்
என் பிரிய வசந்தமே’. அந்தப் புத்தகத்தின் மூலம்தான் தமிழ் இலக்கிய உலகில் நுழைகிறார் அறிவுமதி. அதிலுள்ள காதல் கவிதைகளை அப்போது நான் சாவியில் எழுதிக்கொண்டிருந்த ‘கங்கையெல்லாம் கோலமிட்டு.......’ நாவலில் பயன்படுத்துகிறேன். கையெழுத்துப் பிரதியில் அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர் சாவி எனக்கு போன் செய்து”யார் அது அறிவுமதி? அவர் எழுதிய கவிதைகளை முழுவதும் படித்துப்பார்க்காமல் பிரசுரிக்க முடியாது” என்கிறார். உடனடியாக அவருக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்த சாவி,”அருமையா எழுதி இருக்கார் சார். பின்னாடி பெரிய ஆளா வருவார்” என்று சொல்லிப் பிரசுரம் செய்கிறார்.
அப்போது பெங்களூரில் இருந்த சுஜாதாவுக்கு அந்த நூலைக்கொடுத்தேன். “யோவ் பிரமாதமா எழுதறாருய்யா. ரொம்ப நல்லாருக்கு” என்கிறார்.
பாரதிராஜாவிடமும் பாலுமகேந்திராவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டே கவிதை உலகில் நடை போடுகிறார் அறிவுமதி. ஒரு கட்டத்தில் இவரை உச்சிமுகர்ந்து தம் சொந்தப் பிள்ளைப் போலவே தூக்கிவைத்துக்கொண்டாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். அப்துல் ரகுமானின் பயிற்சி அறிவுமதியை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது. அவரே பாராட்டும் வண்ணம் ஹைக்கூ கவிதைகளை எழுத ஆரம்பிக்கிறார். ஹைக்கூவுக்குப் புதிய முகவரி கிடைக்கிறது.
இவரது ‘நட்புக் காலம்’ என்ற கவிதை நூல் தமிழின் இளைய தலைமுறையினரின் தேசிய நூலாக அறியப்படுகிறது. இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று பிரதிகள் விற்றுத்தீர்கின்றன.
இப்படியிருந்த நிலையில் திடீரென்று திரைக்கு எழுதுவதை நிறுத்துகிறேன் என்று அறிவிப்பதா?.................................................
போட்டி, பொறாமை, சூழ்ச்சி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் வஞ்சகம் என்றெல்லாம் அறியப்பட்ட
திரையுலகில் ஒரு அபூர்வ மனிதர் இந்த அறிவுமதி. 73, அபிபுல்லா சாலை அலுவலகம்(புதிய எண்;189) திரைத்துறையில் நுழைவதற்கென வரும் இளங்கவிஞர்களுக்கு ஒரு அடைக்கல ஆலமரம். அங்கு அடைக்கலம் தந்ததோடு நில்லாமல் பல தம்பிமார்களைக் கவிஞர்களாகத் திரையுலகில் பவனிவர ஏற்பாடு செய்தவர் அறிவுமதி. இன்றைய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரும் தமிழர்கள் பெருமையை தேசிய அளவில் தூக்கி நிறுத்தியவருமான இயக்குநர் பாலாவைத் திரையுலகிற்குக் கூட்டி வந்தவரும் அறிவுமதிதான். அறிவுமதியின் இத்தகைய வெள்ளந்தியான உள்ளம்தான் நடிகர் சிவகுமார் போன்ற பெரிய மனிதர்களின் அன்பை அறிவுமதி பெறவும் காரணமாக இருந்திருக்கிறது.
மந்திரப்புன்னகை நல்ல செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது. மீண்டும் வந்திருக்கிறார் அறிவுமதி.

13 comments :

Unknown said...

நல்ல கவிஞரைப் பற்றிய மிக நல்ல பதிவு. அவருடைய கவிதைகளுக்கு என்றுமே நான் ரசிகன்.தெனாலியில் அவர் எழுதிய பாடல்கூட மிக நன்றாக இருக்கும்.

இனியா said...

nalla pathivu ayyaa...

Amudhavan said...

கீர்த்தனா நீங்கள் ரசிகன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் தங்களின் திருமதி பெயரா இது? தங்கள் கருத்துக்கு நன்றி.

Amudhavan said...

வருகைக்கு நன்றி இனியா..நல்ல கவிஞரைப் பற்றிய பதிவு அதனால் நல்ல பதிவாகத்தானே இருக்கமுடியும்...

இம்பார் said...

அருடைய வார்தைகளில் தமிழ் தித்திக்கிறது, அறிவும் மதியும் உலகை ஆழட்டுமே...அவர் வாழ்நாள் இன்னும் நீலட்டுமே..... உங்களுடை பகிர்வ்வுக்கு நன்றி....இப்படிக்கு இம்பார்

Unknown said...

ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் அறிவுமதி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவரும் "தை" கவிதையிதழ் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் உங்கள் பதிவில் இணைத்திருக்கலாம்.
நல்லதொரு பதிவுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்.

ம.தி.சுதா said...

சகோதரம் இவர் தமிழுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஸம்....

Amudhavan said...

நன்றி இம்பார்....அறிவுமதியின் தமிழ் மட்டுமில்லை, உங்களின் தமிழும் தித்திக்கும் தமிழ்தான்..நீங்கள் ஆங்கிலவழி தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

Amudhavan said...

கவிதை புத்தகங்களை மிக அழகிய புகைப்படங்களுடனும் மிக அழகிய ஓவியங்களுடனும் முதன்முதலில் வெளியிட்டு அந்தப் பாணியைத் தமிழுக்குக் கொண்டுவந்தவரே அறிவுமதிதான். அந்தக் கண்ணோட்டத்துடனேயே அவரது 'தை' இதழ்களும் வெளிவருவதை அறிவேன். கடந்த'தை' இதழில் என்னுடைய கவிதை ஒன்றும் வந்திருந்ததே.....

Amudhavan said...

செல்வராஜ் ஜெகதீசனுக்கும்,ம.தி.சுதாவுக்கும் நன்றி.

தமிழ் அலை said...

சிறப்பான பதிவு, கவிஞரே அசந்துபோகும் அளவுக்கு இருக்கிறது. உங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துகளுடன்
இசாக்

tamilan manam said...

nalla pathivu sir.

Unknown said...

சிறப்பான பதிவு, நன்றி வாழ்க தமிழ்...........

Post a Comment