கே; நினைவாற்றலுக்குப் பெயர் போனவர் நீங்கள்.... உங்கள் பால்யகால அனுபவங்களின் நினைவுகள் எங்கிருந்து தொடங்குகின்றன?
சிவகுமார்;- பூஜ்ஜியத்தில் என் பிறப்பு துவங்கினாலும் சாகசங்கள் நிறைந்ததாக உள்ளது மட்டுமின்றி இன்னும் வாழ வேண்டும், முழுமையாக இதை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற வேட்கை என்னுள் கூடிக்கொண்டே போகிறது
வறுமையில் கழிந்த இளமையும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஓவியக்கலை நாட்களும் ஆரம்பகாலத் திரையுலகில் பெற்ற அடித்து வீழ்த்தும் அவமானங்களும் அழகிய படிப்பினையாக எதையும் துணிந்து எதிர்கொள்ளும் துணிவையும் தந்தன.
கோவை திருச்சி சாலையில் பள்ளி முடித்து வீட்டுக்குப் போகும் வழியில் சீனிவாசா காபி கிளப் ஓட்டல் இருக்கும்.உள்ளே இருந்து வீசும் உருளைக்கிழங்கு போண்டா வாசனை உயிரையேவருடி அழைக்கும். உருளைக்கிழங்குபோண்டா நாலணா என்று விலைப்பட்டியலிம் போட்டிருக்கும். ஒரு போண்டா நாலணாவா, இரண்டு போண்டா நாலணாவா?......................தட்டில் இரண்டு போண்டா வைத்துத் தருகிறார்கள். கையில் இருப்பதோ நாலணா மட்டுமே. சாப்பிட்டு முடித்தவுடன் இரண்டு போண்டா விலை எட்டணா என்று சர்வர் சொல்லிவிட்டால் மீதி நாலணாவுக்கு எங்கே போவது? இந்தத் தயக்கத்திலேயே உருளைக்கிழங்கு போண்டாவை நான் ஒரு நாளும் சாப்பிடவே இல்லை.
மாரியம்மன் கோவிலை ஒட்டிய கந்தசாமித்தேவர் பெட்டிக்கடையில் கைமுறுக்கும் குச்சிமிட்டாயும் வாங்கிச் சாப்பிட்டு மனதைத் தேற்றிக்கொள்வேன்.
பொழுது விடியுமுன் அம்மாவுடன் தோட்டம் சென்று இடுப்பில் நாலுமுழ வேட்டி கட்டி, அதை மடியாக மாற்றி இரண்டு மடி பருத்தி எடுத்து அம்பாரத்தில் சேர்த்துவிட்டு, பரபரப்பாக பூக்குடலை எடுத்துக்கொண்டு நாலு பர்லாங் தூரத்திலுள்ள மிளகாய்க்கார பெரியம்மா தோட்டத்திற்கு ஓடி வெள்ளரளி, செவ்வரளி, சாமந்தி, அந்திமல்லிப் பூக்கள் என்று பறித்துக்கொண்டு வந்து வாழை நாரில் மாலை கட்டி மொட்டையாண்டி முருகனுக்குச் சாற்றி-
அன்பே அப்பா அம்மையே அரசே அருட்பெரும் சோதியே
அடியேன் துன்பமெலாம் தொலைத்த துறைவனே
இன்பனே எல்லாம்வல்ல சித்தாகி என்னுளே இயங்கிய பொருளே
வன்பனேன் பிழைகள் பொருத்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே – என்ற வள்ளலார் வரிகளைச் சொல்லி வேண்டிக்கொண்டு நேற்றைய சோளச்சோற்றில் கட்டித்தயிர் விட்டுக் கரைத்துக்குடித்துவிட்டு, உள்ளே ஈயம் பூசியிருக்கும் பித்தளைத் தூக்குப் போசியில் அக்கா செய்து கொடுக்கும் அரிசியும் பருப்பும் சோற்றைப் போட்டுக்கொண்டு வெறும் காலில் விரைசலாய் நடந்து எட்டு முப்பது மணிக்கு சூலூர் போர்டு உயர்நிலைப்பள்ளி போய்ச் சேருவேன்.
கே ; ஆரம்பநாட்களில் சினிமா மீது ஒரு ஈர்ப்பு இருந்ததா உங்களுக்கு?
சிவகுமார் ; சினிமா பார்க்கும் வாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறையே கிடைக்கும் என்பதால் திருச்சி ரோடு கலங்கல் பிரிவில் சொக்கப்பன் பீடிக்கடையை ஒட்டி இரண்டு மரக்கட்டைகளில் தொங்கும் சினிமா தட்டிகளில் சிவாஜியின் பராசக்தி போஸ்டர்களையும், மனோகரா போஸ்டர்களையும், தேவதாஸில் தாடியுடன் காட்சியளிக்கும் நாகேஸ்வரராவ் போஸ்டர்களையும், கவர்ச்சிகரமான ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ போஸ்டரையும் பார்த்து பொங்கியெழும் சினிமா ஆசையை அடக்கிக் கொள்வேன்.
வெள்ளிக்கிழமை பள்ளிவிட்டதும் சூலூர் ஷண்முகதேவி தியேட்டரில் புரொஜக்டரை ஒட்டிய காம்பவுண்டுக்கு வெளியே வெட்டி எறியப்பட்ட துண்டுப் பிலிம்களை நானும் நண்பர்களும் பொறுக்கி எடுப்போம். சங்கிலியால் பிணைத்த சிவாஜியும், குஷ்டரோகியாக எம்.ஆர்.ராதாவும், மலைக்கள்ளனாக தலையில் ஸ்கார்ஃபும் இடுப்பில் பெல்டுமாக இருக்கும் எம்ஜிஆர் படமும் கிடைக்கும். புதையல் எடுத்த சந்தோஷத்தில் ஊர் சென்று பூதக்கண்ணாடிக்கு பதிலாக பியூஸ் ஆன மின்சார பல்பின் உள்ளே நீர் ஊற்றிவைத்து இருண்ட வீட்டிற்குள் சாவித்துவாரத்தின் வழி முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம் சூரிய வெளிச்சம் பாய்ச்சி நாலு அடிக்கு மூணு அடி சைஸில் சுண்ணாம்புச் சுவற்றில் தெரியும் நடிகர்களைப் பார்த்துச் சிலிர்ப்போம்.
கூட்டணி சேர்ந்து சினிமா காட்டியது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி சண்டையில் முடிந்துவிட்டது.
பல்ப் என்னுடையது, கண்ணாடி அவனுடையது, பிலிம் உன்னுடையது என்று பாகப்பிரிவினை நடந்தது. அடுத்து பள்ளி இறுதி ஆண்டுவரை ஐந்து ஆண்டுகள் ஊரிலிருந்து புறப்படும் ஐந்து மாணவர்கள் ஒரு கட்சி, நான் தனிக்கட்சி என்று வைராக்கியமாக பகைமைத் தொடர்ந்தது. என்னமாதிரி பகைமை தெரியுமா?
அக்காவுக்கு பதினைந்து வயதில் திருமணம். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை முகூர்த்த நேரம். தாலி கட்டி சடங்குகள் முடிந்ததும் சும்மா இருக்கப் பிடிக்காமல் அன்றும் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். சண்டைப் போட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவனின் அண்ணன்தான் என் அக்கா கழுத்தில் தாலி கட்டினார். அதனால் இதோடு சமாதானம் ஆகிவிடுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்கள். அக்காவை மணந்து கொண்டார் என்பதற்காக
மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று எஸ்எஸ்எல்சி முடியும்வரை பிடிவாதம் காட்டினேன்.
கே ; சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததா? கோவில்களுக்கு அடிக்கடி போவீர்களா?
சிவகுமார் ; மாதத்தில் ஒரு கிருத்திகைத் தவறாமல் என் அப்பா பழனிமலை சென்று முருகனைத் தரிசித்து வந்தார். முப்பத்து மூன்று வயதில் அவர் விடைபெற்றுக் கொண்டார். அவர் வாங்கிவைத்துக் கும்பிட்ட மொட்டை ஆண்டி படம் எண்பது ஆண்டுகள் கழித்து இன்னமும் பூஜை அறையில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மாவோடு பழனிக்குப் பயணமாவேன். இரவு பத்துமணி தாண்டி கோவை ரயிநிலையத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் திண்டுக்கல் பாசஞ்சர் புறப்படும். கோவை வழி எல்லா ரயில்களும் வந்துபோனபின் கடைசியாகப் புறப்படும் ரயில் அது.
பாக்குமட்டையைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவி பக்குவமாய்ச் செய்த புளிச்சாதத்தை அதில் கொட்டி பார்சல் செய்து எடுத்துப்போவோம். பாசஞ்சர் ரயில் என்பதைவிட நடைவண்டி என்று சொல்லலாம். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதேயே வழியிலே இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு ஓடிப்போய் ஏறிக்கொள்ளலாம். அவ்வளவு வேகம்.
அதிகாலை நாலு மணிவாக்கில் பழனிரயில் நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு திண்டுக்கல் நோக்கி அது நகரும். குழந்தைகள் கூட கிழவர்கள்போல கிடுகிடுவென்று நடுங்கும் குளிரில் பற்கள் தடதடக்க அரை டிராயர்வழி குளிர் உடம்பைத் தாக்க ரோமக்கால் குத்திட ஓட்டமும் நடையுமாக அடிவாரம் செல்வோம். கருப்பட்டிச் சத்திரம், மங்கம்மா சத்திரம் என்று தனவான்கள் தர்மசத்திரங்களை அரண்மனைப்போலக் கட்டிப்போட்டிருப்பார்கள். திருமலை நாயக்கர் மகால் தூண்கள் போன்று பல தூண்கள் தாங்கிய அகண்ட ஹாலில் ஒரு மணிநேரம் சுருண்டு படுப்போம் விடியுமுன் புறப்பட்டு மலையைச் சுற்றி நடக்க ஆரம்பிப்போம். தென்பகுதியில் வரத்தாற்றில் சிலிர்க்கும் தண்ணீரில் விழுந்து எழுவோம். திரும்பிய பக்கமெல்லாம் ஜடாமுடியும் காவியுமாய் சாமியார்கள். மலை ஏறுமுன் தேங்காய் பழம் பிரம்புத்தட்டில் வாங்கி எடுத்துப் போவோம்.
அனுமன் இலங்கையை அடைய ஆகாயத்தில் பறந்ததுபோல எங்கிருந்தோ பறந்துவரும் குரங்குகள் – கழுகு கோழிக்குஞ்சைப் பறித்துச் செல்வதுபோல் ஒரே தாவில் பழக்கூடையைப் பறித்துக்கொண்டு மதிற்சுவர் மீது ஏறி அமர்ந்து அழகு காட்டும். வெறும் கையோடு வியர்வை சொட்டச்சொட்ட ஆயிரம் படிகளைத் தாண்டி உச்சி செல்வோம். தென்கிழக்குப் பகுதி காம்பவுண்டில் ஒரு சிறு வழி...கீழே இறங்கினால் ‘ராமர் பாதம்’ என்றொரு கல்வெட்டு.
கொடைக்கானல் மலையிலிருந்து வீசும் கூதல் காற்று, நெஞ்சுக்குள் புகுந்து நனைந்த ஆடையை ஐந்து நிமிடத்தில் காயவைக்கும்.
முருகன் சந்நிதிக்குள் அனுபவித்த அந்த விபூதி வாசனையும் பஞ்சாமிர்த சுவையும் இன்னமும் அச்சு அசலாக மனதிற்குள் பதிவாகி இருக்கின்றன.
பன்னிரண்டு மணிக்கு பாக்கு மட்டையைப் பிரித்தால் அசுரப்பசியில் புளிசாதம் அமிர்தத்தை மிஞ்சும் ருசியில் இருக்கும்
கே ; உங்களால் மறக்கமுடிசிவகுமார் ; எங்கள் ஊருக்குள் மிகவும் பழமையானது பிள்ளையார் கோவில், அடுத்து மாகாளியம்மன் கோவில், மூன்றாவது அரச மரத்தடியில் வேல் குத்தி பாம்புப் புற்றுடன் விளங்கும் பரமசிவன் கோவில். மாதம் ஒண்ணாம்தேதி ஆனால் மில் முதலாளி படியளப்பதால் எதிர்காலம் பற்றிய பயம் எங்கள் மக்களுக்கு இருக்கவில்லை. ஆகவே இறை பக்தி தேவைப்படவில்லை. ஆடிக்கு ஒரு பூஜை, அமாவாசைக்கு ஒரு பூஜை மட்டுமே கோவில்களில் நடைபெறும். மற்ற நேரங்களில் இவை பாழடைந்த கோவில்கள்தாம்.
ஒரு நாள் பக்கத்து வீட்டிலிருந்த தச்சு ஆசாரி மகன் என்னுடைய தோழன் – சாமி கும்பிட பிள்ளையார் கோவிலுக்குள் நான் போக பின்னால் வந்தவன், விளையாட்டாக மரக்கதவை உதைத்துச் சாத்திவிட்டான்.
மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கம் காட்டும். உதைத்த உதையில் கதவுகள் வலுவாகக் கோர்த்துக் கொண்டன. உள்ளே இருந்து இழுத்துத் திறக்க கைப்பிடி எதுவுமில்லை.
உட்சுவர் உயரம் பதினைந்து அடி. அதற்குமேல் ஓடு வேய்ந்த கூரை. கதவே ஏழு அடி உயரம். மாட்டிக்கொண்ட இடம் இப்போது சவுண்ட் புரூஃப்.
நாங்கள் கத்த ஆரம்பித்தோம்.
இது விசேஷ நாளில்லை. சாமி கும்பிட யாரும் வரமாட்டார்கள். என்ன கத்தினாலும் பாதையில் போகிறவர்களுக்கு எங்கள் கூக்குரல் எட்டவில்லை. அகப்பட்டுக் கொண்டது காலை பதினோரு மணிக்கு. அப்போதிருந்து ஆரம்பித்து மாலைவரை கூச்சல் போட்டு தொண்டைக்கட்டிச் சுவற்றில் சரிந்து விட்டோம். மின்சார வசதி கிடையாது. மாலையிலும் கோவிலுக்குள் விளக்கேற்ற யாரும் வர மாட்டார்கள். அழுகை வந்தது.
நேரம் சென்றுகொண்டே இருந்தது. பூஜை அறையும் இருண்டது. கண்களும் இருண்டன. முதன்முதலாக மரணபயம் தொற்றியது. அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்ற எண்ணம் வந்தது.
அந்தி மயங்கிய நேரம்...காடு கரைகளில் வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரின் குரல்கள் மங்கலாகக் கேட்டது.
இதுதான் கடைசி சந்தர்ப்பம். சாவிலிருந்து விடுபடும் முயற்சியாக ஓங்கிக் குரலெடுத்து – “அக்கா....அம்மா.....அய்யா........கோவிலுக்குள்ளே நாங்க மாட்டிக்கிட்டிருக்கோம். வந்து கதவைத் திறந்து விடுங்கோ” என்று கத்தினோம்.
ஏதோ ஒரு மகராசி காதில் எங்களின் குரல் விழுந்து ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டார். ஒரு வழியாக உயிர்பிழைத்து வெளியில் வந்தோம்.
அன்றைக்கு அடைபட்டு அவதிப்பட்ட அந்தப் பிரமை, அந்த திகில், அந்த தவிப்பு பின்னாளில் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், விமானத்தின் கதவை ஏர்ஹோஸ்டஸ் மூடியதும் வந்துவிடும். ‘ஓ, நாம் அகப்பட்டுக்கொண்டோம். இப்போது முயன்றாலும் வெளியே போக முடியாது. அதோ ஏணியையும் அகற்றிவிட்டார்கள். கூச்சல் போட்டாலும் திறக்க மாட்டார்கள்’ என்று ஆழ் மனத்தில் ஒரு பய உணர்ச்சி பதட்டத்தை ஏற்படுத்தும். ஏ.சி குளிரிலும் உடம்பு வியர்க்கும்.
‘பயப்படாதே, அடங்கு. நீ பாதுகாப்பாக இருக்கிறாய். உனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாய் இரு’ என்று உணர்ச்சிவசப்படும் மனதை அறிவு அடக்கப் போராடும். பல நாட்கள் போராடித்தான் இதிலிருந்து மீண்டிருக்கிறேன்.
கே ; ஆரம்ப நாட்களில் ஒரு ஓவியராக வருவதுதான் உங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஓவியராக வருவது என்ற பொறி முதன்முதலாக உங்களுக்குள் எப்போது விழுந்தது என்பது நினைவிருக்கிறதா?
சிவகுமார் ; ஒண்ணாங்கிளாசில் அ , ஆ , எழுதிப் பழகும் போதே பூனை, மாடு, ரயில் என்றெல்லாம் வரைந்த நினைவு. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது முதுகுத்தண்டை நான் வரைந்த வேகத்தைப் பார்த்து வகுப்பே ஆச்சரியப்பட்டது. அதிகப் பட்சமாக ஐந்து நிமிடத்தில் தண்டுவடத்திலுள்ள அத்தனை எலும்புகளையும் அச்சாக வரைந்தபோது என் முதுகு நிமிர்ந்து நின்றது. நாம் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் என்ற எண்ணம் அப்போதுதான் ஏற்பட்டது.
கே ; நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்ட முதல் தருணம் என்று எதைச் சொல்வீர்கள்?
சிவகுமார் ; ஆயிரம் முறை என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்திருந்தாலும் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் விஜயராகவ அய்யங்கார் என்னை உட்கார வைத்து இடது பக்க முகத்தோற்றத்தை பென்சிலால் வரைந்து காட்டியபோது – கந்தன்கருணையில் முருகனாக நடித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமாக உணர்ந்தேன்.
கே ; உங்களிடம் எப்போதுமே எச்சரிக்கை உணர்வு ரொம்பவும் அதிகம். இது எப்படி சிறுவயதிலிருந்தே வந்ததா?
சிவகுமார் ; சென்னைக்கு ரயில் ஏறும்போது பாக்கெட்டில் இருக்கிற பத்துப் பதினைந்து ரூபாயை யாராவது பிக்பாக்கெட் செய்துவிடுவார்கள் என்று என் தாய்வழிப் பாட்டி டிராயரின் உள் பகுதியைத் திருப்பி பின் ஊசியால் பாக்கெட் வழியை ‘டாக்கா’ போட்டு அனுப்புவார்கள். ஐந்தரை ரூபாய் கட்டணச் சலுகையில் சென்னையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்த காலத்திலும் சரி, ஏ.சி முதல்வகுப்பில் 1800 ரூபாய் டிக்கெட்டில் பயணம் செய்த நாட்களிலும் சரி என்றுமே நான் ரயிலில் தூங்கியதே இல்லை.... எச்சரிக்கை உணர்வு!
கண்களை மூடி படுத்திருந்தாலும் ரயில் நிற்கும் இடங்களில் இது அரக்கோணம், இது காட்பாடி, இது ஜோலார்பேட்டை, இது சேலம் என்று மூளைக்குள்ளே மணி அடித்துக்கொண்டே இருக்கும். அப்படி எச்சரிக்கையாக இருக்கும் என்னிடமே கோவை ராஜா தியேட்டரில் 1956-ல் வணங்காமுடி படம் பார்க்கச் சென்றபோது டிக்கெட் கவுண்ட்டரை நோக்கி கூட்டம் மோதிய தருணத்தில் யாரோ ஒருவன் நாலணாவை என் டிராயர் பாக்கெட்டிலிருந்து திருடிவிட்டான். மூன்று நாட்களுக்கு அழுதேன்.
நண்பன் கிருஷ்ணசாமி தன் பணத்தில் டிக்கெட் வாங்கிக் கொடுத்தான். ஆனாலும் என் மனம் ஆறவில்லை. நாம் மனமுவந்து நாலணா தானம் செய்வது வேறு; நம்மை ஏமாற்றி ஒருவன் திருடிச்செல்வது வேறு.
அன்று அலட்சியமாக இருந்த என்னை என்னால் மன்னிக்க முடியாது. –(தொடரும்)
29 comments :
அற்புதம். அற்புதமான அனுபவங்கள். என்னுடைய இளமைக்காலத்தை தட்டி எழுப்புகிறது. ஒரு ஓவியக் காட்சி போல தனது அனுபவத்தையும் பகிர்கிறார். படங்கள் அருமை.
சிவகுமார் அவர்களின் அந்நாளைய நினைவுகள் படிக்க வெகு சுவாரசியம். பகிர்வுக்கு நன்றி. இனிதே தொடருங்கள்.
ஊருக்கு போய் வந்தாற் போலிருக்கிறது....காசிகவுண்டன்புதூரின் ஒவ்வொரு தெருமண்ணிலும் விளையாண்டு பழகிய எம்போன்றவர்களுக்கு ஊரின் நினைவுகளை எங்க ஊர்க்காரர் அதுவும் பிரபலம் சொல்லும்போது புல்லரிக்கிறது.
கடந்த முறை கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும்போது இன்ப அதிர்ச்சியாய் இரண்டு இருக்கைகள் தள்ளி திரு.சிவக்குமார்...
முக்கியமாக இக்காலத் தலைமுறையினருக்கான
[நமக்கும் தான் ]அருமையான
படிப்பினை ஊட்டும் பதிவு .
வறுமை அதிலும் இளமையில் வறுமை என்றால் என்ன
என்பதை தெளிவாகப் படம் பிடித்து காட்டுகிறது.
மனஉறுதி , எதிர்நீச்சல் போன்ற பண்புகளை
வளர்க்கும் முகமாக அமைந்துள்ளது பாராட்டுக்கள்.
திரு. சிவக்குமார் அவர்களை மனம் திறந்து பேச வைத்த
உங்கள் தனித்திறமைக்கு சபாஷ்.
வித்தியாசமான கேள்விகள், உண்மையான பதில்கள், கருத்தையும் கண்ணையும் கவரும் ஒவியங்கள் என்று ராஜபாட்டையில் தொடங்கியிருக்கும் சிவகுமார் அவர்களின் பேட்டி வித்தியாசமானது. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கச் செய்திருக்கிறது.
//மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று எஸ்எஸ்எல்சி முடியும்வரை பிடிவாதம் காட்டினேன்.//
சரியான பிடிவாதக்காரர்தான் :))\\
\\நாம் மனமுவந்து நாலணா தானம் செய்வது வேறு; நம்மை ஏமாற்றி ஒருவன் திருடிச்செல்வது வேறு. \\
ரொம்ப சரியாத்தான் சொல்லி இருக்கிறார். தொடரும் என்பதால் காத்திருக்கிறேன் :)
பகிர்வுக்கு நன்றிகள் அமுதவன்.
//ஒரு ஓவியக்காட்சியைப்போல தனது அனுபவத்தையும் பகிர்கிறார்//
ஆமாம் வெண்புரவி அவரது வார்த்தைச் சித்திரங்களும் அவர் வரைகின்ற சித்திரம் போலவே இருப்பது தனி அழகுதான். பாராட்டிற்கு நன்றி.
//சிவகுமார் அவர்களின் அந்நாளைய நினைவுகள் படிக்க வெகு சுவாரசியம்//
வருகைக்கு நன்றி கீதா. நாளையும் படித்துவிட்டு எழுதுங்கள்.
'காசிக்கவுண்டன் புதூரின் ஒவ்வொரு தெருமண்ணிலும் விளையாண்டு பழகிய எம்போன்றவர்களுக்கு ஊரின் நினைவுகளை எங்க ஊர்க்காரர் சொல்லும்போது புல்லரிக்கின்றது'..........மற்றவர்கள் படித்தாலேயே புல்லரிக்கின்றமாதிரியான விஷயங்களைத்தான் சொல்கிறார். அவருடைய ஊர்க்காரர்கள் என்னும்போது தனிவிதமான சிலிர்ப்புத்தானே இருக்கும். மீதிப்பகுதிகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள் மதிபாலா.
சரியான விஷயங்களை சரியான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள் ஸ்ரவாணி. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.
வாருங்கள் ஆர்எஸ்கே, அவருடன் பழகியிருக்கும் உங்களுக்கே வித்தியாசமான தகவல்கள் கொண்டாதாகத்தான் இருக்கும் அவருடைய இந்தப் பேட்டி. உங்கள் பதில்களை அவரும் படித்துப்பார்ப்பார்.நாளையும் சந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா....முழுவதுமாகப் படித்துவிட்டுக் கருத்துச்சொல்லுங்கள் நன்றி.
உங்கள் நினைவுகள் கிராமத்து வாழ்க்கை அறியாத இனிவரும் தலைமுறைக்கு அதிசயம்
பதில்கள் சுவையாக உள்ளன. எப்படித்தான் பேச்சிலும் உரையிலும் கேட்பவர் மனம் கவரும் (மனதை ஈர்க்கும் படி) படி பேசி\எழுதுறாரோ? இரண்டாம் பாகத்துக்கு காத்திருக்கிறோம்.
Each & every word teach us a good lesson & we r learning a lot from your experience Anna...You are our Role Model...Thank u so much Mr.Amudhavan & waiting for more....
Vasanthi Babu
soooper
Romba azagana interview. Thiru Sivakumar inraya thalaimurai makkalukku oru azagana roll modl. ENNA IRUNTHALUM ENGA KONGU MAN ILLAYA.... lAKSHMI NATARAJAN.. TIRUPUR
Sir ur biography should be prescribed as a lesson for students at university and +2 level to realise the dignity of labour and value of life.
Dr.M.RAJARAM I.A.S.
செல்வி சுப்பிரமணியத்தின் கூற்று முற்றிலும் உண்மை. கிராமத்து வாழ்க்கையை இளைய தலைமுறையினரிடத்தில் பரப்புவதில் இவருடைய பங்களிப்பு மிகவே அதிகம்.
சிவகுமாருடைய கடிதங்களைப் பார்க்கவேண்டுமே குறும்பன்....ஒவ்வொரு கடிதமும் ஓராயிரம் செய்திகளைப் பேசும். அவர் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்தாலே பல செறிவான விஷயங்களையும் அன்றைய திரைப்பட உலகம் பற்றிய சரியான கண்ணோட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
ஆமாம் வசந்தி அவர் ஒரு நேசிக்கத்தகுந்த வாத்தியார்தான். பல பேருக்கான ரோல்மாடல்தான். தங்கள் பாராட்டுக்கு நன்றி.
சூப்பர்..........கமெண்ட்டுக்கு நன்றி அனானிமஸ்.
உங்க கொங்கு மண்ணைப்பற்றி கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருப்பது.........'நீலகிரிக்காற்று நீளத்தவழ்ந்தாடும் கோலமிகு நகரம் கோவை. இங்குள்ள மக்களின் மரியாதைக்கும் உபசரிப்புக்கும் ஈடு இணை கிடையாது.'அப்படிப்பட்ட உங்க கொங்குமண்ணின் சிறப்புக்களில் இவரும் ஒன்று அல்லவா.
மேலேயுள்ள கமெண்ட்டில் உங்கள் பெயர் விடுபட்டுப்போய்விட்டது லக்ஷ்மி நடராஜன்.நன்றி.
டாக்டர்.ராஜாராம் மூர்த்தி ஐஏஎஸ்....ஐயா நீங்கள் சொல்லியிருப்பது போன்று இவருடைய புத்தகங்களை பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்படும் நாட்கள் விரைந்துவரவேண்டும் என்று உங்களைப் போன்றே நானும் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளும் உங்களைப் போன்றவர்களால் எடுக்கப்பட்டால்தான் நடைமுறைப் படுத்தப்படும் அல்லவா!
Your life experience will give insights to younger generation people. It will boost confidence level to young kids.I can only read and imagine village life. Your are lucky to experience this village life since childhood.
I like to share this interview in Facebook and twitter. So that more people can learn from your experience.
Dr.krishna kumar PhD, Germany
நன்றி டாக்டர் கிருஷ்ணகுமார்.
எனக்கு பிடித்த மனிதர்களில் இரண்டாவது மாமனிதர் நீங்கள் தான் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்
முதல் மாமனிதர் யார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே.
Post a Comment