ஒரு முன் அறிவிப்பு ; இது ஒரு மீள் பதிவுதான். இன்னமும் சொல்லப்போனால் நான் பதிவுலகத்திற்கு வந்ததும் எழுதிய முதல் பதிவு இது. எதிலும் பின்னோக்கிப் பார்ப்பது, இன்று என்ன நமக்குக் காட்டப்படுகிறதோ அதுமட்டுமே உண்மை, அது மட்டுமே உயர்ந்தது அது மட்டுமே நிரந்தரம் என்று நினைத்துவிடும் ஆட்டுமந்தைச் சிந்தனைக்குஆண்டாண்டுக் காலமாய்ப் பழகிவிட்ட காரணத்தினால் சில விஷயங்கள் சொல்லும்பொழுது அதனை ஏற்றுக்கொள்வது கடினமானதாயிருக்கும். அம்மாதிரி நண்பர்கள் விலகிவிடுங்கள். சட்டென்று மேலோட்டமாய்ப் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடலாம் என்று இருக்கிறவர்களும் கொஞ்சம் தயங்குங்கள். நிறுத்தி நிதானமாய்ப் படித்துப் பின்னர் விவாதம் செய்யலாம் என்றோ மூளைக்குள் படிந்திருக்கும் படிமத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றோ தயாராயிருப்பவர்கள் மட்டும் வாருங்கள். நமக்கு யார் மீதும் விருப்போ வெறுப்போ இல்லை. ஆனால் ஊடக பலத்தால் முன்நிற்பவரைத் தள்ளிவிட்டு இன்னொருத்தருக்குச் சென்று கிரீடம் சூட்டப்படுவதை ஏற்பதற்கில்லை. இப்போது கட்டுரை..................
இளைய ராஜாவுக்கும் ரகுமானுக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சில காலமாகவே இளையராஜாவா ரகுமானா என்ற வாக்குவாதங்களும், பட்டிமன்றங்களும் இணையதளம் உட்பட பல்வேறு தளங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி சில வருடங்களின் முன்புவரையிலும் -குறிப்பாகச் சொல்லப்போனால் ரோஜாவின் வருகை வரையிலும் இளையராஜாவின் ஆதிக்கமும் தாக்கமும் மிகுதியாகவே இருந்தன. இளையராஜாவின் அன்னக்கிளி எப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவந்ததோ அதே போன்ற ஒரு மாறுதலை, அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு மாறுதலை ஏ.ஆர்.ரகுமானின் ரோஜாவும் கொண்டு வந்தது. இரண்டு படங்களின் பாடல்களும் பெருவாரியான அளவில் மக்களைப்போய்ச் சேர்ந்தன. இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்குச் சேர்ந்ததோ அதைவிடவும் அதிகமான அளவில் ரகுமானின் பாடல்கள் மக்களிடம் சேர்ந்தன. இந்த அதிகப்படியான சென்றடைதலுக்கு ரகுமானின் பாடல்களில் இருந்த இனிமையை விடவும்,அவர் பாடல்களில் செய்திருந்த மாற்றங்களை விடவும், முக்கியமான காரணம் -அந்தந்த காலகட்டங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். அன்றைய தினம் இளையராஜாவின் பாடல்கள் திடீரென்று அத்தனைப் பரவலான வளர்ச்சியைப் பெற்றதற்கும் இதே தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையான இயற்கை விதியினைக் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் அந்த படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் இதுதான் அளவில் பெரியது ,இதுதான் சிறந்தது என்றெல்லாம் கச்சைக் கட்டிக்கொண்டிருப்பது சரியான முறைமையாக இருக்காது. இந்த ஒரு விதியைக் காரணம் காட்டியே அந்தந்த படைப்புக்களில் ஒன்றுமே இல்லை எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று சுட்டுவதும் அறிவுடைமை அல்ல. சில படைப்பாளர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது வர்த்தகரீதியான விஷயங்களுக்கு அப்பால் அவை சமூகரீதியாக மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் முக்கியம். இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் தாக்கங்கள் என்பதனை அவை எந்த அளவுக்கு மனதில் ஊடுருவிப் பதிந்திருக்கின்றன , எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கின்றன மனதிலே தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையிலே எந்த அளவுக்கு தொடர்ந்திருக்கின்றன,எத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கின்றன என்பதையெல்லாம் அளவுகோல்களாகக் கொள்ளலாம்.
இந்தக் கோணத்திலிருந்து திரைஇசைப்பாடல்களை அணுகும்போதுதான் காலத்தைத்தாண்டி அவை நிற்கின்றனவா என்பதும் , காலத்தைத்தாண்டி நிற்கின்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கின்றார்களா என்பதையும் கணிக்க முடியும். இந்த அளவுகோல்களெல்லாம் இல்லாமல் அவர்களின் வணிகரீதியான வெற்றிகளை மட்டும் கணக்கிட்டு இவர்தான் எல்லாமே என்பதும்,அவரை இவர் வென்றுவிட்டார் என்பதும் இவரை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறக்கவில்லை என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டுவதும் சரியான ஒப்பீடுகள் ஆகாது.
இதுபோன்ற விஷயங்களில் விடுபட்டுப் போகின்ற இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் ஒருவரைப் பற்றிச்சொல்லும்போது அதே துறையில் இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்த, அல்லது கோலோச்சிக் கொண்டிருந்த இன்னொரு முக்கிய மேதையை மிகச்சௌகரியமாக மறந்துவிடுவது ,அல்லது வேண்டுமென்றே விடுபட்டுப் போய்விட்டதான பாவனைக் காட்டுவது. இந்தச் செயலும் வர்த்தகரீதியான நடைமுறைக்கு
மிகவும் உதவுகிறது என்பதனால் இத்தகு செயல்பாடுகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த முந்தைய மேதை இப்போதைய 'ஒளி வட்டத்து' மேதை நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளை இத்தனைக் காலமும் உயிரைக் கொடுத்துச் சாதித்து முடித்திருப்பார். அவர் சிரமப்பட்டுப் போட்ட ரோட்டில் இந்தச் சாதனையாளர் சர்வசாதாரணமாக சாரட்டு வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பார். எல்லாவிதமான சாதனைகளுக்கும் தான்தான் சொந்தக்காரன் என்பதாக இவரது பாவனைகளும் நடவடிக்கைகளும் இருக்கும். இவரை ரசிக்கின்ற கூட்டமும் இதற்குத் தோதாக நடந்துகொள்ளும். அந்தக் கூட்டத்திற்கு அதனைத் தாண்டிய எந்த நோக்கமும் இருக்காது. தொடந்து ஒரே செய்திகளைச் சொல்லிக்கொண்டு ,ஒரே விதமான புகழுரைகளை முழங்கிக்கொண்டு சலிப்பு ஏற்படுகின்றவரைக்கும் இவர் பின்னாலேயே பயணம் போய்க் கொண்டிருக்கும். அடுத்த ரசனைக்குரிய சாதனையாளர் கிடைக்கிறவரை இந்தக் காட்சிகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.. இதில் பரிதாபம் என்னவென்றால் சில நாட்களுக்குப்பின் நடைபெறுகின்ற அத்தனையையும் அதுதான் உண்மை என்பதுபோலவும் ,அதுதான் நிதர்சனம் என்பதுபோலவும் குறிப்பிட்ட அந்தச் சாதனையாளரே நினைக்க ஆரம்பித்துவிடுவார் என்பதுதான். இன்றைய பொதுவான நிலைப்பாடு இதுதான். இதே பாதையில்தான் இன்றைய பல்வேறு ஒளிவட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி; அங்கீகாரங்களும் சரி; புகழ் வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகிறவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்தவொரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் ,அதைச்சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ் வெளிச்சமும், கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதைவிடவும் முக்கியம் இத்தனைப் புகழ் வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ, கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை.அவ்வளவு சாதாரணமாக எந்தவொரு மனிதரிடத்தும் அல்லது எந்தவொரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது. அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும், நூறு கிராம்மிகளும் தாராளமாகத் தரலாம்.
பரிசுகளும் அதனைத் தொடர்ந்த அங்கீகாரங்களும் எப்படிக் கிடைக்கின்றன அவை நியாயமானவர்களுக்கு நியாயமான நேரங்களில் கிடைக்கின்றனவா என்பவையெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள். அவை எப்படிக்கிடைக்கின்றன என்பது இங்கே பேசுபொருள் இல்லை. இந்த இருவரில் யார் வித்தகர்? இந்த இருவரில் யார் விற்பன்னர்? என்பதாக இங்கே முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்குள்ளே இருக்கின்ற நியாய அநியா
யங்களுக்குள்ளே சென்று பார்ப்பதுதான் நமது நோக்கமே.
இன்றைக்கு ஏ.ஆர்.ரகுமான் எட்டியிருக்கும் உயரம் என்பது சாதாரணமானது அல்ல.இசைத்துறையில் என்றில்லை, திரைப்படத்துறையில் இருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த எந்தக் கலைஞனாலும் இத்தனை உயரத்தையும் இனிமேலும் தொடரந்து ரகுமான் எட்டப்போகும் உயரங்களையும் தொடமுடியுமா என்பதுவும் சந்தேகம்தான். இது ஒருபுறமிருக்க, இந்தக் காரணங்களாலேயே ரகுமான் யாரை விடவும் மிகப்பெரிய இசை மேதை ஆகிவிடமுடியுமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி. ரகுமான் காலத்தைக் கடந்த இசைமேதையா என்பது நம்முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி.
இந்த இடத்தில் வேண்டுமானால் நாம் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர இயலும். 'காலத்தைக் கடந்த இசை ' என்ற ஒற்றை வரி விதியொன்றை அளவுகோலாக வைத்துக்கொண்டு ரகுமானையும் , இளையராஜாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நிச்சயம் இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. மாறுபட்ட இசை , புதுமையான இசை, மேல்நாட்டுப் பாணியிலான இசை, நவீன உத்திகளில் கோர்க்கப்பட்ட நவநாகரிக இசை, இதுவரை நாம் கேள்விபட்டேயிராத வாத்தியக்கருவிகளின் லயம் சேர்ந்த இசை, என்று இன்னும் என்னென்னவோ சொல்லி வகைப்படுத்தலாம்.
அத்தனையும் உண்மைதான், ஆனால் காலத்தைக்கடந்து நிற்கவும், மனதை ஊடுருவிச்சென்று மனதைக் கரைக்கவும் உயிருள்ள வரை உங்களுடனேயே தொடர்ந்து வரவும் ,இத்தனைப் பக்கத்துணைகள் ஒரு நல்ல இசைக்கோர்வைக்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல இசை என்பது ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலிலிருந்துகூட வெளிப்படக்கூடும். அந்த இசையில் தோய்ந்துள்ள சுகமான இனிமைதான் அடிப்படை.
அத்தகைய இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான். இளையராஜா தந்திருக்கும் இனிமையான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். ரகுமான் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது. இனிமையான சுகானுபாவம் என்பது மிகவும் குறைவானது. ஆகவே, இந்த வகையில் ரகுமானைப் பின்னே தள்ளிவிட்டு நிற்பவர் இளையராஜாதான். எனவே ரகுமானை மிஞ்சி நிற்பவர் இளையராஜாவே என்று சொல்லி விலகிக்கொள்ள முடியுமா என்று பார்த்தால் 'முடியாது'என்பதுதான் பதில்.காரணம் இளையராஜா பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே சொல்லவேண்டிய பெயர்கள் சில இருக்கின்றன என்பதுதான்.
இளையராஜா தமிழில் சில சாதனைகள் புரிந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதற்காக ,சாதனைகள் புரிந்த ஒரேயொருவர் இளையராஜாதான் என்பதுபோலவும், அல்லது சாதனைகள் புரிந்த முதலாமவர் இளையராஜாதான் என்பதுபோலவும் ஒரு கற்பிதம் ஏற்படுத்த முயல்வதையும் ஏற்பதற்கில்லை. தமிழ் இசையை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்றெல்லாம் சிலபேர் எழுதிவருவதைப் பார்க்கும்போது அவர்கள்மீது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னொருவர் எழுதுகிறார் 'இளையராஜா அளவுக்குச் சாதனைகள் புரிந்தவர்கள் அவருக்கு முன்னும் இல்லை. பின்னாலும் வரப்போவதில்லை.' இம்மாதிரியான கருத்துக்களெல்லாம் ஒன்று அறியாமையால் வருவது- அல்லது அவர்மீது கொண்ட அதீத ரசிப்புக்கொண்ட்டாட்டத்தால் வருவது. உலகில் எம்.ஜி.ஆர் படத்துக்கு இணையான இன்னொரு படம் வரவே வராது என்றும் வேறு யாருடைய படத்தையும் பார்க்கவே மாட்டேன் என்றும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் கருத்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பாகும் இது. இத்தகைய கருத்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்கள் இருப்பதுபற்றி இளையராஜா வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர, அந்த வாதங்களுக்கு எவ்விதமான முக்கியத்துவமோ அங்கீகாரமோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதாலோ, முந்தையவரை விடவும் வசூல் சாதனைகள் செய்தார் என்பதனாலோ அவருக்கு முன்பு இதே சாதனைகளை செய்த அவரது அப்பன் பாட்டனையெல்லாம் தூக்கிக் குப்பைக்கூடையிலே போடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை. சொல்லப்போனால் இது அதிகாரம் பற்றிய பிரச்சினைக்கூட இல்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். தனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதற்காக, "இந்தியா என்றாலேயே இந்திராதான் .இவருக்கு முன்பு இவர் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் தோன்றியதே இல்லை. காந்தி, நேரு போன்றவர்களுக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை" என்றெல்லாம் அறியாமையால் சொல்வதற்கு ஒப்பாகும்.
இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் நிற்கிறார் என்பது போலவே இளையராஜா யாருக்குப் பின்னால் நிற்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறை.
அப்படிப் பார்க்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பின்னால்தான் இளையராஜா நிற்கிறார் என்பது சாதாரண குழந்தைக்குக் கூடத்தெரியும் .
தமிழ் இசை உலகில் , இன்னமும் சொல்லப்போனால் திரைஇசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. விஸ்வநாதனின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இளையராஜாவின் சாதனைகள் முழங்காலுக்குக்கூடக் காணாது.
விஸ்வநாதன் இசையமைத்து வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கையும் சரி; விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த பாடல்களின் எண்ணிக்கையும் சரி; இளையராஜாவின் இசையமைப்பில் வந்த பாடல்களுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புகள் கூறுவது விஸ்வநாதனின் மேதைமைக்கு இழுக்காகவே இருக்கும். இந்த ஒப்பீடுகூட தனிப்பட்ட விஸ்வநாதனின் சாதனைகளை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதானே தவிர, அவரது முந்தைய அடையாளமான 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி ' என்ற இருவர் கட்டியமைத்துச் சாதித்த பிம்பத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டது அல்ல. (தொடரும்)
33 comments :
இக்கட்டுரையை வாசித்த்தப்பின் தங்கள் மேல் வைத்து இருக்கும் மரியாதை இன்னும் கூடுகிறது.நேர்மையான பதிவு.வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்து(க்)கள்.
முதலில் நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள். இசையமைப்பில் ஒப்பீடு என்பதே சரியா தெரியவில்லை.இசையை ரசிப்பதில் வயசும் ஒரு பங்கு வகிக்கும் என்பது என் கருத்து. நீங்களே சொல்வதுபோல காலகட்டமும் டெக்னாலஜியும் முக்கிய பங்கு வகிக்கும். யாருடையதாக இருந்தாலும் இன்னிசை ரசிப்பதற்கே. மீண்டும்வாழ்த்துக்கள்.
Barari அவர்களுக்கு நன்றி. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.
துளசிகோபால் அவர்களின் வாழ்த்திற்கு நன்றி.
ஐயா ஜிஎம்பி அவர்களின் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். இம்மாதிரியான காரணங்கள் எதுபற்றியும் தெரியாமல் அல்லது அவை பற்றி அறிந்துகொள்ளும் முயற்சிகளும் இல்லாமல் சிலரைப்பற்றிய அதி மோகக்கருத்துக்கள் தவறான கற்பிதங்களை ஏற்படுத்திவிடுகின்றன என்பதுதான் நான் சொல்ல வருவது. இரண்டாவது இப்போதைய பிரபலத்தைக் கொண்டாடுவதற்காக இத்தனைக் காலமும் சாதனை புரிந்தவரைக் கீழே தள்ளிவிடக்கூடாது என்பதும்தான். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
முதலில் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.
ரசனை என்பது ஆளுக்கு ஆள், காலத்திற்கு காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடும். ஒருவரால் ரசிக்க முடிந்த ஒரு கலை வடிவம் வேறொருவரால் நிராகரிக்கப்படும். இது காலத்தின் நியதி.
நான் ராஜாவின் இசை கேட்டு வளர்ந்தவன். என்னால் ராஜாவை தவிர்த்து வேறொருவர் இசையை மட்டும் கொண்டாட முடியாது.
இன்று தமிழகத்தில் அதுவும் நகர் புறங்களில் ராஜாவின் இசை கேட்பவன் கிராமத்தான் என்றும், ரெஹ்மானின் இசை கேட்பவன் நகரத்தான் என்றும் ஒரு தோற்றம் நிலவி வருகிறது. பல ரெஹ்மான் ரசிகர்கள் அதை ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக பார்க்கிறார்கள்.
ராஜாவின் இசையில் இருக்கும் வெர்ஸடாலிட்டி நிச்சயம் ரெஹ்மானின் இசையில் கிடையாது. கிராமிய இசையையோ, சாஸ்த்ரிய இசையையோ ராஜா அளவிற்கு ரெஹ்மானால் தர முடியாது. மெலடிகள் மற்றும் குத்துப் பாடல்களில் இருவருமே ஒரே நிலை. மேல் நாட்டு இசையில் ரெஹ்மான் கிங்.
ரெஹ்மான் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைய முக்கியமான கேள்வி, அடுத்தது யார்?
இந்த வாதப்பிரதி வாதங்களை ஒரு புறம் தள்ளிவைத்து விட்டு நேரடியாக ரகுமானிடமே கேட்டால் அவரே உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் கூடும் யார் கண்டது?!
நல்ல வாசிப்பனுவங்களில் ஒன்றென இந்தப் பதிவைக் கூறுவேன்.ரயில் தண்டவாள்மாக இளையராஜாவையும்,ரகுமானையும் மட்டுமே தொட்டு வருகிறீர்களே என்ற சந்தேகப் பார்வையுடனே ரகுமானின் உச்சத்தையும்,உச்சத்திலும் காட்டும் நிதானத்தையும்,ராஜாவின் அத்தனை வாத்தியக் கருவிகளுக்கும் உயிர் கொடுத்ததை சிலாகியத்தையும் படித்துக்கொண்டே வந்தேன்.எம்.எஸ்.வி=ராமமூர்த்தியை தொட்டு கச்சேரியை நிறைவு செய்துள்ளீர்கள்.
வாசிப்பனுவத்திற்கு நன்றி.
சத்யப்பிரியன் முதலில் தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.அவரவருக்கும் தனிப்பட்ட ரசனை இருக்கலாம்.நான் ரஜனி ரசிகன், நான் கமல் ரசிகன்,விஜய்,அஜித்,சூர்யா,சிம்பு,தனுஷ்....என்பது போல. ஆனால் பொதுக்கருத்து என்று உருவாகும்போது தனிப்பட்டவர்களின் ரசனைமனப்பான்மையைச் சார்ந்து மட்டுமல்லாது குறிப்பிட்ட கலைஞரின் திறமை, அவர் சாதித்த சாதனை அவர்களுக்கு முந்தையவர்களை இவர்கள் எப்படி மிஞ்சினார்கள் அல்லது மிஞ்சாமல் போகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் அளவுகோள்களாக வருகின்றன. இவற்றையெல்லாம் பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. இவை போதாதென்று இப்போது ஊடகங்கள் தாங்களாகவே அவ்வப்போது பல்வேறு கதாநாயகர்களை உருவாக்கி பூதாகாரமாக உலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு சுதா ரகுநாதனைப் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் ரொம்ப நல்லது கேளுங்கள் என்று சொல்லலாம். 'சுதா ரகுநாதன்தான் கர்நாடக சங்கீதத்தின் உச்சம், கடவுள்' என்றெல்லாம் சொல்லப் புகுந்தால் அன்பரே, எம்.எஸ், எம்எல்வி,டிகேபட்டம்மாள் இவர்களையெல்லாம் கேட்டிருக்கிறீரா? என்ற கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.இந்த உதாரணம் எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.
காலக்கிறுக்கன் அவர்களுக்கு நன்றி. உங்கள் யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது. அப்படியே ரகுமானை விசாரித்ததாகவும் சொல்லுங்கள்.
வாருங்கள் நடராஜன் உங்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். உங்களின் அழகிய அலசல் எப்போதும் எனக்குப் பிடித்த ஒன்று.கட்டுரை முடியவில்லை. இன்னமும் பாக்கியிருக்கிறது. முடிந்தபிறகு தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
நல்ல அருமையான பதிவு. நுணுக்கமாகக் கவனித்து எழுதி இருக்கீங்க. இனிய பாராட்டுகள்.
பாடல்கள், இசை என்று ரசிக்கப் புகுந்தால் ஆர்ப்பாட்டமான இரைச்சலான இசையைவிட மெலோடியாக இருப்பவைதான் மனசுலே நிக்குதுங்க.
கலியாண வீடுகளிலும் சரி, இப்போது தொலைக்காட்சிச் சேனல்களில் நடக்கும் பாடகர் போட்டியிலும் சரி 95 சதமானம் எல்லோரும் பழைய பாடல்களையே பாடுவதைக் கவனிச்சால்...... இப்போது இசை என்ற பெயரில் வரும் இரைச்சலுக்கு மக்கள் மனசில் எவ்ளோ மதிப்புன்னு தெரிஞ்சு போயிருதுல்லே?
தொழில் நுட்ப வசதிகள் அவ்வளவா வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் மனசில் நிற்கும் பாடல்களை வழங்கியவர்கள் எம் எஸ் வி & ராமமூர்த்தி ரெட்டையர்கள் என்பதில் சந்தேகம் என்ன?
ஆனா...ஒன்னு பாருங்க இவுங்க காலத்தைவிடவும் இன்னும் பழமைக்குப்போனால்....சலபதி ராவ், கண்டசாலா, இன்னும் பல இசையமைப்பாளர்கள் நினைவுக்கு வர்றாங்க. அப்பெல்லாம் தெலுகு & தமிழ்படங்கள் ஒரே சமயத்தில் இருமொழியிலும் எடுப்பதும் தெலுகு மக்களே தமிழுக்கும் இசை அமைப்பதும் தெலுகுப் பாடகர்களே தமிழிலும் ( சொற்களைக் கடிச்சுக்குதறினாலும்) பாடுவதும் சகஜமாத்தான் இருந்தது.
நம்ம எம் கே டி, சுந்தராம்பாள் காலக்கட்டங்களில் பிழை இல்லாத தமிழில் கணீரென்ற குரலில் பாடல்கள் வந்து மக்களை மெய் மறக்கச் செய்ததுன்னு பலதும் சொல்லிக்கிட்டே போகலாம்.(இந்தப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யாரோ????)
புதுக்குரலை அறிமுகப்படுத்தறேன்னு சில இசையமைப்பாளர்கள்....... ப்ச்.
என்னவோ போங்க...... சொல்லப்புகுந்தால் எங்கியோ கொண்டுட்டுப்போயிருது.
திருமதி துளசி அவர்களுக்கு நல்வரவு. தங்கள் கருத்துக்களும் ஆதங்கமும் மிகவும் சரியே. பல பேருடைய முரட்டுத்தனமான முடிவுகளுக்கு அவர்களின் அறியாமை மட்டுமே காரணம் அல்ல. அவர்களுக்கு வாய்த்த வாய்ப்புகள் அவ்வளவுதான் என்பதும் ஒரு காரணம். இன்னொன்று, தேடல் எதுவும் இன்றி என்ன கிடைத்ததோ அதன் மீது மட்டுமே அபிப்பிராயம் உருவாக்கிக்கொள்வது...........இதனை அவர்கள் பொதுவில் வைக்கும்போதுதான் பிரச்சினையே.
//
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு சுதா ரகுநாதனைப் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் ரொம்ப நல்லது கேளுங்கள் என்று சொல்லலாம். 'சுதா ரகுநாதன்தான் கர்நாடக சங்கீதத்தின் உச்சம், கடவுள்' என்றெல்லாம் சொல்லப் புகுந்தால் அன்பரே, எம்.எஸ், எம்எல்வி,டிகேபட்டம்மாள் இவர்களையெல்லாம் கேட்டிருக்கிறீரா? என்ற கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.இந்த உதாரணம் எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.
//
தங்கள் கருத்தில் இருந்து நான் சிறிது மாறுபடுகிறேன் அமுதவன். இளையராஜா தான் தமிழ் திரை இசை உலகின் உச்சம் என்று நான் கருதுவதோ இல்லை அதை வெளிப்படையாக சொல்வதோ ஒன்றும் தவறில்லை என்றே நான் கருதுகிறேன். அதே போல MSV யோ இல்லை KVM ஓ தமிழ் திரை இசை உலகின் உச்சம் என்று அமுதவன் கருதுவதோ இல்லை கூறுவதோ தவறில்லை.
தவறு எங்கே இருக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றால் எனது ரசனையே உயர்ந்தது அமுதவனின் ரசனை தாழ்ந்தது என்று நான் கருதுவதோ இல்லை அதை வெளிப்படையாக கூறுவதோ தான்.
அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறொன்றும் இல்லை. எனது ரசனை எனக்கு உங்கள் ரசனை உங்களுக்கு என்ற நிலையில் இருந்தால், நான் ரசிக்கும் கலை படைப்பை உருவாக்கியவனை நான் கொண்டாடுவதோ இல்லை நீங்கள் ரசிக்கும் கலை படைப்பை உருவாக்கியவனை நீங்கள் கொண்டாடுவதோ தவறே இல்லை.
சத்யப்பிரியன் உங்கள் கூற்றுக்கு என்னுடைய பதிவிலேயே மிகவும் தெளிவான பதில் இருக்கிறது.
தங்கள் மீள் கட்டுரையை (பதிவை?!) மீண்டும் படித்ததில் ஏற்பட்ட சிந்தனைகள் இவை. முதலில், இந்த ஆட்டத்திற்கான விதிமுறைகளை உங்கள் முன்னுரையில் அழுந்தச் சொன்னதற்கு நன்றி. அந்த வரைமுறைகள் தெரியாமல் பேச/எழுதப் புகுவது முதல் கோணல்! எனக்கு வயது உடலுக்கு எழுபது. உள்ளத்தில் ‘கொலவெறி’யிலும் சங்கீத நுணுக்கம் கண்டுபிடித்து ரசிப்பவன்! எனக்குத் தெரிந்து தமிழ்த் திரை இசையமைப்பாளர் என்றால் பாபநாசம் சிவன் எல்லாருக்கும் முன்னே நிற்கிறார். ஏனென்றால் ஒரு பாடலை எழுதி அதற்கான ராகம் கற்பனை செய்து மெட்டும் போட்டவர் அவர்தான். தொன்மொழியில் ‘வாக்கேயக் காரர்’ என்பார்கள். தியாகராஜ சுவாமிகள் போல. சற்றுப் பின்னாளில் இசைப்பதிவைப்பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தவர் என்பதால் ஜி.ராமனாதன், சிவனின் எல்லா (எம்.கே.தியாகராஜபாகவதர் பாடியிருக்கும்) பாடல்களையும் இணைப்பிசையோடு பதிவு செய்து அந்தந்தப் பாடல்களின் இசையமைப்பாளர் என்று அறியப்பட்டார். பின்னாளில் படம் எடுத்த நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை செய்த மூன்று, நான்கு இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் வேலை செய்தார்கள்.இப்படி, முன்னோடிகளான இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு ஒருவர் என்று பணி செய்தது காலத்தின் கட்டாயம்.இவர்கள் அனைவரின் இசையை (கவனிக்க: இசையை!) ரசித்தவன் எனும் முறையில் எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்: இசையை ”மட்டும்” ரசித்தால், ரசனை வளரும் மீறி மற்ற விஷயங்களில் புகுந்தால் ‘பிடி’வாதமே மிஞ்சும்.அமுதவனின் பதிப்பின் உட்கருத்தும் இதேதான் என்று நினைக்கிறேன். என்னுடைய நீண்ட் கருத்தைப் பொறுத்துக் கொண்டதற்கு நன்றி.
உங்களது நீண்ட கருத்தைப் 'பொறுத்துக்கொள்வது' என்ன இருக்கிறது? இம்மாதிரி விஷயதானங்களுடன் பேசுபவர்கள் மிகவும் குறைவே. எந்த விஷயம் பற்றியும் ஒன்றும் தெரியாமலேயே கருத்து உருவாக்கிக் கொள்பவர்கள்தாம் அனேகம். தனக்கு என்ன தெரியுமோ அது தான் சரியென்று நினைப்பதும், அதுவே போதும் என்று நினைப்பதும்தாம் இங்கே பெருவாரியாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்ததுதான் சரியென்று நினைப்பது ஒரு மாணவக்கண்ணோட்டம். சரியென்று நினைத்துத்தான் தாளில் எழுதிவிட்டு வருகிறான். அது சரியா தவறா என்பதைத் திருத்தத்தான் ஆசிரியர் தேவைப்படுகிறார். பள்ளிவிட்டு வந்ததும் இந்த சிஸ்டத்திற்கான தேவை இல்லாமல் போய்விடுகிறது.
அதனால்தான் உலகத்தை தினசரி படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்வது. கற்றது கைம்மண் அளவு என்று சொல்லியிருப்பதும் இதற்குத்தான். நாமெல்லாம் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பிலேயே ஓடிக்கொண்டிருப்பவர்கள்.நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.
வணக்கம் அமுதவன் அவர்களே !
மீண்டும் புதிய பீடிகையுடன் மீள் பிரசுரம் ஆகியிருக்கும் கட்டுரை.நான் ஏற்கனவே சில கருத்தகளை தெரிவித்தேன்.அவர் கூட இவர் குறைவு என சொல்ல வேண்டாம் என பொத்தாம் பொதுவாக கூறப்பட்டாலும் கட்டுரை யார் எப்படி? என்ன ? சாதனைகளை இசையுலகில் நிகழ்த்தியிருக்கிரார்கள்.என்பதை சொல்லவில்லை.கர்நாடக இசை பற்றிய விவாதம் இங்கு இல்லை.அதில் சாதனை செய்யா ஏதுமில்லை.18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கீர்த்தனைகளை அப்படியே ஒப்புவிக்கும் வித்தைதான் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.புதுமை என்றால் சக்சபோனில் மென்டலீனில் வாசிப்ப்ததை தான் சொல்ல முடியும்.புதுமைக்கு இடமில்லை என்பது தான் கர்னாடக இசையின் அடிப்படை.அதன் குறியீடாக விமர்சனத்துறையில் வாழ்ந்தவர் தான் மறைந்த சுப்புடு.
தமிழ் திரையிசை தான் இங்கே பாடு பொருள்.அதில் பாபநாசம் சிவன் ,ராஜகோபால அய்யர், ஜி.ராமநாதன் ,எஸ்.எம் சுப்பைய்யா நாயுடு .எஸ்.வீ.வெங்கட்ராமன் ,சி.ஆர் .சுப்பராமன். சி.என்.பாண்டுரங்கன்.எஸ்.ராஜேஸ்வரராவ் .பெண்டலாயா,ஆதி நாராயணராவ் ,எஸ்.ஹனுமந்த ராவ் ,அஸ்வத்தாமா { வீணை காயத்ரியின் அப்பா },ஆர்.சுதர்சனம்,கண்டசால , எச் ஆர் ,பத்மநாபசாச்திரி ,தி.ஆர். பாப்பா , எம்.எஸ். ஞானமணி,கே .வீ. மகாதேவன் ,ஏ .எம் .ராஜா ,ஜி.கே .வெங்கடேஷ் ,ஜி.தேவராஜன் ,டி.சலபதி ராவ் .எம்.பீ.ஸ்ரீனிவாசன் ,விஸ்வநாதன் - ராமமூர்த்தி , வே.குமார் ,வேதா ,எம்.எல்.ஸ்ரீகாந்த் ,ஷங்கர் கணேஷ் ,குன்னக்குடி வைத்தியநாதன் ,இளையராஜா ,சந்திரபோஸ்,கங்கை அமரன் , தேவாஇன்னும் பலர் ...
இங்கே குறிப்பாக பேசப்படுபவர்கள் ஜி. ராமநாதன் ,கே .வீ. மகாதேவன்,விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா.
இவர்கள் செய்த புதுமை என்ன?
இவர்கள் செயல் பட்ட தளம் கர்னாடக இசை ,நாட்டுப்புற இசை , மேற்கத்தேய இசை . இந்த மூன்று இசைவகைகளையும் எப்படி கொடுப்பது என்பதில் அவர்கள் திறமையும் தனித்துவமும் காட்டியிருக்கிறார்கள்.1940 களிலும் , 1950 களிலும்
1960 களிலும் , 1970 களிலும் ஹிந்தி திரைப்பட பாடலகள் தமிழ் திரையிசையை ஆட்டிபடைத்துக் கொண்டிருந்தது.அதை தாண்ட பல முயற்சிகள் நடந்து கொண்டுதானிருந்தது. 1950 களில் வாராய் நீ வாராய் [மாதிரி குமாரி ] நீலவானும் நிலவும் போல [ பொன்முடி] ஜி.ராமநாதனின் மிக சிறந்த ,இனிமையான் பாடல்கள் [ பின்னாளில் அம்பிகாபதி .கப்பலோட்டிய தமிழன் பட்டியல் நீளும் ] சி.ஆர் சுப்பராமன் இசையமைத்த மனதுக்கிசைந்த ராஜா [மர்மஜோகி ] வாராயோ எனை மறந்தனையோ , எனது உயிர் உருகும் நிலை[ லைலா மஜ்னு ], சின்னசிறு கிளியே கண்ணம்மா போன்ற அற்புதமான பாடல்கள்.அந்த கால் தயாரிப்பாளர்களும் ஹிந்தி திரைப்பட பாடலகள் பிரதி பண்ணுங்கள் என்றே பணித்தார்கள்.இசையமைப்பாளர்கள் பெரும் முயற்சி எடுத்து தம்மை நிரூபிக்க வேண்டி கண்டிமாக உழைக்க வேண்டியிருந்தது.
அதை அறுபதுகளில் ஓரளவு சாதித்தவர்கள் மகாதேவனும் ,விஸ்வநாதன் -ராமமூர்த்தியும் தான்.குறிப்பாக எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ன்ற வெற்றி நாயகர்கள் படங்களும் கை கொடுத்தன.கர்னாடக இசை ,நாட்டுப்புற இசை , மேற்கத்தேய இசை . இந்த மூன்று இசைவகை எவ்வாறு கலப்பது [ fusion ]என்பதில் சிரமப்பட்டு சாதனைகளை எட்டினார்கள்.
தாஸ்
22.01.2012
ktthas@yahoo.co.uk
தொடர்ச்சி ....
அமுதவன் சொல்வது போல அவர் முழங்காலுக்கு கீழே அவர் மேலே என்பது இசை ஒப்பீடல்ல. விஸ்வநாதன் என்ன மாதிரியான சாதனை செய்தார் என்பதும் விளக்கப்படவில்லை.
இளையராஜா செய்த சாதனை.
1 .தமிழ நாட்டுற , மெல்லிசையால் இசையால் ஹிந்தி பாடல் மோகத்தை முறியடித்தது.இது விஸ்வநாதனோ வேறு எந்த ஜாம்பவானுக்கோ சாத்தியபடவில்லை.அதற்க்கு பின்னாலேயே ஓட்ட வேண்டி இருந்தது.இதுதான் மிகப்பெரிய சாதனை.இதை யாரும் தாண்ட முடியாது.இதனை யாரும் சிபார்சு செய்ததில்லை எனபதுதான் மிக முக்கியமானதாகும்.
2. மேலைத்தேய இசை நுணுக்கங்களை குறிப்பாக [ counterpoint ] மெட்டுக்குள் மெட்டு களை பயன் படுத்த்தியது.இந்த முறை J.S.BACH என்கிற இசை மேதையால் 17 ஆம் நுற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே யாரும் பயன் படுத்தியதில்லை.மேலும் ராஜாவின் இசை நுணுக்கங்களை நான் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் ரசிகர்க்களுமில்லை அவருடைய ஒவ்வொரு பாடலிலும் இடையிசையை கேட்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
3. ஒலிப்பதிவு தொழ்லில் நுட்பம் சாராரத வெற்றி.அன்னக்கிளி யில் அன்று சாதாரன் மோனோ ஒலிப்பதிவு தான் இருந்தது.1978 இல் பிரியா படத்தில் STEREO ஒலிப்பதிவு முறை பயன் படுத்தப்பட்டது.அவரது சிறப்பான இசைக்கு ஒலிப்பதிவு நுட்பம் உதவியது.அவ்வளவே.
அவரது இசைச் சாதனைகளை பட்டியல் போட்டால் அதுவே தனி பதிவாகி விடும்.இதில் நிறுத்தி தொடர்கிறேன்
ரகுமானின் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் .பாட்டு அவ்வளவு நல்ல இல்லைத்தான்.ஆனால் சவுண்டு நல்லயிருக்கு.அதுவும் காரில் கேட்க சூப்பராய் இருக்கு !
விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்றால் பெரும்பான்மையனவ்ர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த ப, பா வரிசைப்படப் பாட்லகளைத்தான் குறிப்பிட்டு பேசுவார்கள்.பேசும் போது ராமமூர்த்தியை கழட்டி விடுவார்கள்.இரட்டையர்களாக இருந்து இசையைமத்த பாடல்கள் மிக இனிமையானவையே.அவர் தனித்து இசையமைத்த இனிய பாடல்களும் உண்டு மறுப்பதற்கு இல்லை.
நாட்டுப்புற இசை , கர்னாடக இசை , மேலைத்தேய இசை . இந்த மூன்று இசையிலும் சிறந்து விளங்குபவர் இளையராஜா.இவரைப் போல இது வரை யாருமில்லை.இனிமேல் தான் பொருந்த்திருந்து பார்ப்போம்.இதற்காக விஸ்வநாதனையோ ,ராமனாதனையோ ,மகாதேவனையோ குறை கூறி பயனில்லை.அவர்கள் இவ்வளவு புகழ் பெறவே பெரும் பாடுபட்டார்கள்.அவர்கள் காலத்தில் எம்.ஜி,ஆர் , சிவாஜி தான் ஹீரோக்கள்.இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.அவர்கள் அடைய வேண்டிய புகழை எல்லாம் ஹீரோக்கள் வாங்கியது மிகக் கொடுமை.இசை பற்றிய விழிப்புணர்வு கிடையாது.அவர்கள் பல கஷ்டங்கள் பட்டு [ எம்.ஜி.ஆர். சிவாஜியின் தலையீடுகளை கடந்து ]வருவதே பெரும்பாடாக இருந்தது.
அந்த விழிப்புணர்வு இளையாராஜாவின் பன்முக இசை ஆற்றலின் விளைவாகவே ஏற்ப்படுகிறது.இசை இளையராஜாவை அறிமுகம் செய்தது. அதனால் இசை புது அங்கீகாரம் பெற்றது.இதை எந்த ஒரு நபரோ ,இயக்கமோ PROMOTE செய்யவில்லை.அவரது இசை என்ற பேராற்றல தான் அதை நிகழ்த்தியது அல்லவா.அவரது இசையால் தான் இசை ஹீரோ ஆனது இல்லையா ? இதை மனம் திறந்து ஒப்புகொண்டால் அவரின் விஸ்வரூஅப்ம் தெரிய வரும்.யார் யாரின் முழம் காலுக்கு கீழே என்பதும் புரியும்.
தாஸ்
22.01.2012
ktthas@yahoo.co.uk
தொடர்ச்சி .....
ரகுமானை எடுத்துக்கொண்டால் மேலை போப் இசையை அப்பட்டமாக காப்பி அடிப்பது. அவரை கைகொடுத்து தூக்கி விட மணிரத்தியம் பாலசந்தர் வகையறாக்கள்.மேலைத்தேய நாடுகளுக்கு இந்தியாவை விற்கும் இந்திய அரசு ,இவர் போன்றவர்களை கை தூக்கி விடுவது ,இப்படியான் கலாசார அடிமைகளை வைத்து மக்களை மயக்குவது ஒன்றும் புதிதில்லை.கொலைவெறி பாடல் இன்று பலரையும் கண் திறக்க வைத்துவிட்டது.ஒரே நாளில் உலக புகழ் பெற்றுவிட்டார் " கொலை வெறி " பாடகர் தனுஷ்.இது ரகுமானை விட சாதனை தான். இந்திய பிரதமருடன் விருந்தும் உண்டு விட்டார் .இந்த பெருமை ரகுமானுக்கு கிடைத்ததா?
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு. - கண்ணதாசன்
இன்றும் எட்டப்பன் மன்னர் பரம்பரைக்கு இந்திய அரசு மக்கள் வரி பணத்தில் மானியம் வழங்குகிறது.ஏன் ? வெள்ளைக்காரன் அரசுதான் கொடுத்தது.இவர்கள் ஏன் கொடுக்கவேண்டும்? தனுஸ் ,ரகுமான் போன்ற சீரழிவுக் கலாச்சரத்தை பரப்புபவர்கள் தான் அவர்களுக்கு தேவை.கலாச்சாரத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம்.கோலா உலக அழகி ஐஸ்வர்யா ராய் , பெப்சி உலக அழகி சுஸ்மிதா சென் ,இதுபோலவே கார்ப்பரேட் கண்டுபிடித்து கொடுத்த இசையமைப்பாளர் தான் ரகுமான்.
வெள்ளைக்காரனை பொறுத்தவரையில் மக்களை சுரண்டவேண்டும்.இந்திய அரசும் அதன் எடுபிடிகளும் அந்நிய நாடுகளுக்கு சேவை செய்யும் அடியாட்களை தான் உருவாக்குகிறது.
கோகோ கோலா 100 வருட பழமையானது.மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைப்பது.அது இன்றும் நிலை பெற்றிருப்பதற்கு காரணம் அதற்க்கு கிடைக்கும் விளம்பரம்.இந்த உத்தியால் தான் கோக் இன்றும் நிலை பெற்றுள்ளது.
விளம்பரம் கிடைப்பதை வைத்து நாம் " தண்ணீரை விட சிறந்தது கோகோ கோலா " என்று சொல்ல முடியாது.தண்ணீர் இளையராஜா என்றால் கோகோ கோலா ரகுமான்.
இந்திய அரசின் பரிசுகளும் ,விருதுகளும் கேலிக்கிடமானவை.தமிழ் நாட்டு செய்தி ஊடகங்களையும் சொல்லி மாளாது.கண்ணுக்கு தெரியாமல் மாயைகளை உருவாக்குவதில் வல்லவர்கள்.கமலகாசனை விகடன் எப்படி உருவாகியது என்பதை அவரே நன்றியுடன் எழுதியிருந்தார்.[ விகடனும் நானும் ]
ஜி.ராமநாதன் அவரது உதவியாலாராக் இருந்த சுந்தரம் என்பருக்கு சொன்ன அறிவுரை: " எங்கே இசையமைச்சாலும் நம்ம பாரம்பரிய இசையிலிருந்து விலகாதே . எல்லா இசையையும் தெரிஞ்சுக்கோ .ஆனால் உன் பாதையை விட்டு மாறாதே. கேட்டா எங்க அப்பா ,அம்மா தமிழர் தான்.வெள்ளைக்காரா இல்லைன்னு சொல்லு ".
தமிழனாக பிறந்து விட்டு வெள்ளைக்காரன் ஆகத் துடிக்கும் ரகுமான் தன கையலாகதனத்தை மறைக்க கொண்டு வந்த REMIX
பற்றி கவிஞர் புலமைப்பித்தன் மிக அழகாக சொன்னதை கூறி முடிக்கிறேன் .
" தலை வாழை இல்லை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாரிக்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு நாய் வந்து அசிங்கம் செய்து விட்டு போவது போல கேவலமானது."
எல்லா இசையையும் கேட்டு பார்த்ததில் எல்லா இசையமைப்பாளர்களின் பேராற்றல் இளையராஜாவின் இசையில் வெளிப்படுவதால் தற்போதைக்கு அவருக்கு இணை யாருமில்லை என்பதை ஒத்து கொள்ள வேண்டியிருக்கிறது.
மீண்டும் சிந்திப்போம்.
வணக்கம்.
தாஸ்
22.01.2012
ktthas@yahoo.co.uk
நீண்ட நாட்களானாலும் வந்து கருத்துத் தெரிவித்திருக்கும் தாஸ் அவர்களுக்கு நன்றி. நன்றி நண்பர்களே நன்றி என்ற என்னுடைய இன்னொரு பதிவினைச் சரியாகப்படித்துப் புரிந்துகொண்டிருந்தீர்களானால் இந்த மறுப்பை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஜி.ராமனாதன் காலத்தில் அவர் என்ன புதுமைகள் செய்ய வேண்டியிருந்ததோ அதனைச் செய்தார். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அவர்கள் காலத்தில் என்ன புதுமைகள் செய்யமுடியுமோ அதனைச் செய்தார்கள்.இளையராஜா காலத்தில் தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சியும் பல நவீன சாதனங்களும் மேலைநாட்டில் நடப்பதை உடனுக்குடன் 'வாங்கிப்போட்டு'என்னென்ன செய்யமுடியுமோ அந்த வகையில் அவர் பார்த்துக்கொண்டார்.
ரகுமான் ராஜாவை விடவும் பலமடங்கு இந்த விஷயத்தில் அதிகமாகப்போய் சாதித்துவருகிறார். காரணம் அவருக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப அறிவும் நவீன சாதனங்களும் மிக அதிகம். பியூசன் வகையும் வேறு சில நவீன மோஸ்தர்களையும் இளையராஜா இறக்குமதி செய்தது போலவே சுஃபி போன்ற அரபிவகை இசையையும் ஆப்பிரிக்க தென்அமெரிக்க இசையையும் தமது பாடல்களில் புகுத்து ராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார் ரகுமான். அதனால் புதுமையைப் புகுத்தியவர்கள் என்று பார்த்தோமானால் ரகுமானுடையது அதிகம்.
அதைவிட முக்கியம்....விஸ்வநாதனுடையதைப்போலவே இளையராஜாவின் சாதனை முடிந்துவிட்டது. ரகுமான் இப்போதுதான் மத்தியில் இருக்கிறார். இன்னமும் அவர் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இன்னமும் அவர் என்னென்ன செய்வார் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால் இப்போதே ரகுமான் மீதான கோபத்தை அவருடைய சாதனைகளை முடித்துவைத்துப் பேசுவது போன்ற தொனிக்குக் கொண்டுவராதீர்கள்.
உங்கள் வாதப்படியே பார்த்தாலும் இளையராஜாவுக்குத் தெரிந்த அளவும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கும் இசைபற்றி வேறு யாருக்கும் தெரியாமல்கூட இருக்கலாம்- பாண்டுரங்க வாத்தியாரைத்தவிர. பாண்டுரங்க வாத்தியார் எனக்குத்தெரிந்த ஒரு இசை மேதை. நூறு செம்மங்குடி,நூறு பாலமுரளிகிருஷ்ணா,நூறு விஸ்வநாதன் ஆயிரம் இளையராஜா இரண்டாயிரம் ரகுமானுக்கு இணையானவர். என்ன பிரயோசனம், யாருக்குத் தெரியும் அவரைப்பற்றி?
அதனால் உங்கள் கண்ணோட்டத்தில் இளையராஜா அளவுக்குத் தெரிந்தவர்கள் உலகிலும் இந்தியாவிலும் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்த்திரை இசை என்பது காலங்காலமாக சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் டிஎம்எஸ் பி.சுசீலா பிபிஎஸ் டிஆர்மகாலிங்கம் சந்திரபாபு இவர்களின் பாடல்களையெல்லாம் தாண்டித்தான் இளையராஜா ரகுமான் தளத்திற்கு வரவேண்டும். இவர்கள் பாடல்களிலெல்லாம் ரகுமானையும் ராஜாவையும் எங்கே தேடுவது?
சொன்னதையே வெவ்வேறு வகையாக மாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதில் உங்களுக்கு சலிப்பதில்லை போலும். எனக்கு சலிப்பாக இருக்கிறது. வாருங்கள் தாஸ் நாம் வேறு வேலைப் பார்ப்போம்.
வணக்கம் அமுதவன் அவர்களே !
கானா பாடல் என்றால் தேவா.சூபி இசை என்றால ரகுமான் என்று ஏன் முழக்க வேண்டும்.இந்த சூபி இசையையும் ,பங்க்ரா,கானா பாடலகளையும் தமிழா சினிமாவில் சத்தம் போடாமல் ஏற்க்கனவே பல இசையமைப்பாளர்கள் [ எஸ்.எம் சுப்பையாநாயுடு, எம்.எஸ். விஸ்வநாதன் ,வி .குமார் ,இளையராஜா] செய்து விட்டார்கள்.
பங்க்ரா பாடல்கள் முறையே தடுக்காதே என்னை தடுக்காதே [ ஜே .பி. சந்திரபாபு]1958 எஸ்.எம் சுப்பையாநாயுடு
ஆடலுடன் பாடலை கேட்டு [ T.M.S + சுசீலா ]1967 எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா பங்க்ரா பாடல்கள்: நேற்று ரத்திரியம்மா 1982 [இந்த பால்டளிலும் புதுமை உண்டு ] , நாட்டுகோட்டை செட்டியாரு [ மனோ +சுவர்ணலதா ]
கானா பாடல்கள். வி .குமார் கல்யாண சாப்பாடு போடவா [ மேஜர் சந்திரகாந்த ] T.M.S வெத்தல போட்ட சொக்கிலே [ ஆதித்தியன் ] கும்தலக்கடி கும்தலக்கடி [ இளையராஜா ]
அரேபியாவில் மேலைத்தேய போப் இசையும் கலந்து [ WESTREN RYTHM ] ஒரு புது வித இசை உருவானது 1990 களில் , இந்த இசை வடிவத்தின் முன்னோடிகளில் ஒருவர் NURAT FATEH ALI KHAN என்கிற பாகிஸ்தான் இசை கலைஞர்.peter gabriel என்கிற ஆங்கில பாடகர் ஊக்கம் கொடுத்து NURAT FATEH ALI KHAN உடன் இணைத்து இந்த புது வகை FUSION இசை உருவாக்கப்பட்டது. இவர் கவாலி இசையுடன் மேலை போப் இசையின் தாளத்தை இணைத்து உருவாக்கிய இசை பாணியை காப்பி அடித்தார் ரகுமான். NURAT FATEH ALI KHAN பாடிய பாடல்களில் ஒன்று தான் "மாமா நீ மாமா " என்ற சிற்பியின் பாடல்.
சூபி இசைய ரகுமான் தான் பயன்படுத்தினார் என்பது தவறு.
அவர் செய்த "புதுமை " என்று காட்டுவதற்கு தான் இது போன்ற கட்டு கதைகள் சொல்லப்படுகின்றனவே தவிர உண்மை அது அல்ல.
சூபி இசையின் ஒரு வகை கவாலி இசை மற்றது ஹசல் இசை.
கவாலி இசையில் எம்.எஸ். விஸ்வநாதன் " இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி " [ சித்தி பட பாடல் ], வேதா இசையமைத்த்" பாரடி கண்ணே கொஞ்சம் " [ T.M.S + சீர்காழி ] வல்லவனுக்கு வல்லவன் போன்ற பாடல்களை சொல்லலாம்.இதெல்லாம் முன்பு இருந்த இசையமைப்பாளர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.
ஹசல் பாடல்களைத்தான் ஹிந்தி இசையமைப்பாளர்களும் ,அவர்களை பின் பற்றி தமிழ் இசையமைப்பாளர்களும் காதல் பாடல்களாகவும் ,தனிப்பாடல்களாகவும் மெல்லிசைப்பாடல்கள் என்று போற்றி வருவது.
வெற்றி பெற்ற மனிதர்" எல்லாம் "புத்திசாலியில்லை .... என்ற சந்திரபாபுவின் பாடல தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.அப்படி வெற்றி பெற்ற மனிதர் மனிதர் தான் புத்திசாலி என்றால் ரஜனி காந்த் தான் அதி சிறந்த புத்திசாலி ஆகா தமிழ் நாட்டில் விளங்க முடியும்.
கானா பாடல் , சூபி என்று வீணாக அலட்டிக்கொள்ள வேண்டும்.
கதை கட்ட சில பேர் இருந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பற்ற சில பேர் இருந்து விட்டால் [ பத்திரிகைகள் ,அந்நிய நாடுகளுக்கு செம்பு தூக்கும் இந்திய அரசு ]
கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு.
ரகுமான் பச்சையாக செய்யும் இசை மோசடிக்கு விருது , புகழாரம் ,அதையே தேவா செய்தால் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கிறார் { விகடன் ,குமுதம் காமெடிகள் ]
பட்டுக்கோட்டையின் வாத்தியில் சொன்னால் ...
பட்ட பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு [ ரகுமான் ]
பஞ்ச்சயைத்தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்று உதைக்குது [தேவா ]
தமிழ் சினிமா 1950 களில் இருந்த நிலைமை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து விட்டது.அந்த நாளில் ஹிந்தி பாடல் மேட்டுக்கு கன்னா , பின்ன என்று வார்த்தைகளை போட்டு கொலை செய்தார்கள்.இன்றும் அதே நிலைக்கு வந்து விட்டது. மோகனசுந்தரம் படத்தில் டி .ஆர். மகாலிங்கம் பாடிய " பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா " என்ற பாட்டின் சரணத்தில்
வடநாட்டு மேட்டில் நல்ல தமிழை பொருத்தி
தொல்லை தரும் பாட்டு வேணுமா .....................தமிழ் சினிமா பாடல்கள் இன்று சீரழிந்து பரிதாபத்துக்குரிய நிலை உள்ளது.வருத்தமளிக்கிறது.
ராமநாதனும் , மகாதேவனும் விஸ்வநாதனும், இளைய ராஜா...... இன்னும் பிற மேதைகளும் கடினப்பட்டு வளர்த்து எடுத்த இசை இன்று கிழிந்து தொங்குகிறது.காப்பற்ற யாருமில்லாமல்.
வாய்ப்புக்கு நன்றி .விடை பெறுகிறேன்.
அன்பன்
தாஸ்
KTTHAS@YAHOO.CO.UK
இப்போதுதான் நீங்கள் உங்கள் ஒரிஜினாலிடியுடனும் விரோத மனப்பான்மையின்றியும் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றுடனும் எனக்கும் ஒப்புதலே. அதிகபட்ச இளையராஜா மோகமும் அதைவிட அதிகபட்ச ரகுமான் எதிர்ப்பும் மட்டும் இன்னமும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.(இந்த ரகுமான் எதிர்ப்புக்காக வேண்டித்தான் இளையராஜாவை அதிகமாகப்போற்றுவது என்ற பாவனை) இது இரண்டையும் கழற்றிவைத்துவிட்டீர்களானால் நீங்களும் நானும் சொல்வது ஒன்றுதான் என்பது உங்களுக்கே புரியும்.நன்றி.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அவரவரது சாதனைகள்
குறிப்பிடப்பட வேண்டியதே. ஆனாலும் மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளதில்தான் இளையராஜா, ரகுமான் போன்றோர்கள் தனது ராஜாங்கத்தை நடத்தினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
அதை விடுத்து வேறொன்று சொல்வது - நமது வடிவேலுவின் வசனத்தைபோல - கட்டிடம் ரொம்ப ஸ்ட்ராங். ஆனால் ........... என்று சொல்வது போலத்தான்.
எனது கருத்துக்களை முழுமையாக வெளிய்ட்டமைக்காக நன்றிகள்..நமது கருத்துக்களில் சில முரண்பாடுகள் இருந்தாலும் தங்கள் ஜன நாயக பண்பையும் ,பக்குவத்தையும் மதிக்கிறேன்.
தங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.வணக்கம்.
அன்புடன்
தாஸ்
ktthas@yahoo.co.uk
அமுதன் உனக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்கா.. முதலில் ஒன்றை தெரிஞ்சிக்கோ ,,இளயராஜா வருகைக்கு பின்னல் msv காணாமல் போய்விட்டார்,,அதுக்கு காரணம் ராஜாவின் தெய்வீக இசை,,,ஆனால் ரகுமான் வருகைக்கு பின்னால் ஒன்றும் ராஜா காணாமல் போய்விடவில்லை...குரங்கு நமக்கு முன்னால இருந்தது என்பதற்காக மனிதன் அதற்கு கீழானவனா,,ரோபோ வந்ததற்கு பின்னால் அந்த ரோபா என்ன மனிதனை விட பெரியதா,,,குரங்கும் ,,ரோபோவும் நீங்கள் சப்போர்ட் பண்ணுற மனிதர்கள் ,,,,மனிதன் என்பவர் ராஜா ,,,,வேண்டுமானால் ஒரு child கிட்ட msv பாடலும் ராஜா பாடலும் play பண்ணிபாரு ...அது சொல்லும் msv யா ராஜாவா என்று ?,,,வீட்டை விட்டு கொஞ்சம் வெளியா வா ,,t ஷாப் ,,பஸ் etc எங்கும் ராஜா பாட்டு தான் .by arun
உங்கள் மரியாதையும் தமிழும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது அருண். உங்களைப் போன்றவர்களின் ஜட்ஜ்மெண்ட் எப்படியிருக்கும் என்பதற்கு உங்கள் தமிழே சான்று.குழந்தைகிட்டே play பண்ணிப்பார்த்தற்கு அந்தக் குழந்தை ரகுமான் பாடல்தான் best ன்னு சொல்லிருச்சி.
Can i post the link in twitter please?
டுவிட்டரில் இவ்வளவு நீளக் கட்டுரையை வெளியிடமுடியுமா என்ன?
நிறைய பேர் எழுதுவதால் நானும் எழுதலாம் என்று வந்திருக்கிறேன். இது நான் முதல் முதலாக படித்த உங்களின் பதிவு. இப்போது அது முக்கியமில்லை. திரு தாஸ் என்பவரின் பின்னூட்டத்தை படித்துவிட்டு நான் ஏதும் எழுதாமல் இருந்தால் அதுதான் இயல்புக்கு எதிரானது. இளயராஜா என்பவரையே சுற்றி மற்றவர்கள் எல்லாம் சிந்திக்க வேண்டும் என்று மற்றவர்களை நிர்பந்திக்கும் மனபோக்கு கொண்டவர்களே இந்த இளையராஜா அபிமானிகள். வெகு எளிதாக இளையராஜாவுக்கு முன் இருந்தவர்களையும் அவருக்கு பின் வந்தவர்களையும் சகட்டுமேனிக்கு அநாகரீகமாக பேசுவது இவர்களுக்கு ஒரு யுக்தி என்பது மட்டுமே எனக்கு தெரிகிறது. இவர்களின் ஒரு தனி மனித வழிபாடு சலித்துப்போய் விட்டது. மடையர்களா இளையராஜாவைதாண்டி வாருங்கள் என்று கதற வேண்டும்போல இருக்கிறது.
திரு. அமுதவன், காரிகன் அவர்களே! திரும்ப திரும்ப நீங்கள் சொன்ன சொல்லை இடுகை இட்டுக்கொண்டால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகாது. இளையராஜா அவர்களுக்கு முன் வந்த அனைத்து இசையமைப்பாளர்களின் சாதனைகளை தமிழ் இசை அறிந்த யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் இட்டு சென்ற பாதையில் சென்றாலும் அதனை கட்டிலும் ஒரு படி உயர்த்தியவர்தான் இசைஞானி. இன்றைக்கும் என்ன சொல்கிறார்கள் ஹிந்தி மோகத்தில் இருந்த தமிழ் மக்களின் இசை அறிவை தமிழ் இசைக்கு திருப்பிய பெருமை ராஜா சார் என்று தான் அவரை அறிமுக படுத்துகிறார்கள். இசையில் டெக்னாலஜி புகுத்தி இசைபுரட்சி செய்து அதனை இன்றைய கேவலமான தமிழ் இசைக்கு இட்டு சென்ற நிலைக்கு கொண்டு சென்றது யார் என சொல்லாமல் தெரியும். தமிழ் இசையை ராஜாவுக்கு பின் யாருமில்லை. தமிழ் இசையை இரண்டாக பிரித்தால் இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்கு பின் என்று தான் பிரிக்க வேண்டும். உங்களை போன்றர்வர்களால் உருவாக்க பட்டவர்தான் ரகுமான்.
ilayarajavin rasigarkaley ungal raja vai orey oru aaskar vanga soli konjam sollungal apparam vanthu kilikalam..
Post a Comment