Saturday, January 7, 2012

தமிழ்மணத்திற்கு நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி- சூர்யா, கார்த்தி,தாயார்,துணைவியார் பற்றித் தொடர்கிறார். –பகுதி ; 2






க்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றான இணைய தளத்துக்கு நடிகர் சிவகுமார்வழங்கும் முதல் சிறப்புப் பேட்டி இது. தமதுபால்யகால நினைவுகளைப் பற்றிப் பேசிய சிவகுமார் தொடர்ந்து தமது மகன்கள், இலக்கியம், மேடைப்பேச்சு, உடல் ஆரோக்கியம், கடவுள் நம்பிக்கை என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார்

கே ; பொதுவாக நடிகர்கள் என்றால் தம்மைச்சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அது நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்களைப் பொருத்தவரை அப்படி ஒரு கூட்டத்தை எப்போதுமே வைத்திருப்பதுபோல் தெரியவில்லை. உங்களுடைய நட்பு வட்டம் மிகப்பெரியது என்றாலும் அவர்களிடம்கூட ஒரு வரைமுறையுடன்தான் பழகுவீர்கள் என்றே தோன்றுகிறது. இது எப்படி நீங்களாக அமைத்துக்கொண்டதா? திரையுலகில் பட்டும்படாமலும் நட்பு பாராட்டுவது எப்படி சாத்தியமாயிற்று?

சிவகுமார் ; எளிமையான கிராமத்து வாழ்க்கை ஏழைகளை நேசிக்கப் பழக்கியது. இயற்கையோடு இணைந்து எட்டு மணிநேரம் பத்து மணிநேரம் என்று ஓவியங்கள் தீட்டிய காலங்களில் தனியே இருந்தது தனிமை வசப்பட காரணமாக அமைந்தது. அந்தத் தனிமை உள்முகப் பார்வை பார்ப்பதற்கு என்னைப் பழக்கிவிட்டது. உடன் படிப்பவர்களாயினும், உடன் நடிப்பவர்களாயினும் அவர்களை எட்ட நின்று கூர்ந்து கவனித்து அவர்கள் பலம் என்ன, பலவீனம் என்ன நம்மிடம் இருக்கும் தகுதிகள் என்ன என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க தனிமை வசதியாக இருந்தது. Loneliness என்பது வேறு; alone என்பது வேறு. வேறு யாரும் நம்மோடு இல்லாமல் நாம் மட்டும் தனியாக இருப்பதுஒன்று. மற்றவர்களால் கைவிடப்பட்டுத் தனிமையில்வாடுவது வேறு. Loneliness என்ற சோகம் என்னைத் தீண்டியதே இல்லை. பத்தாயிரம் பேரை மகிழ்விக்க பல மணிநேரம் பேசவும் தெரியும், பத்து நாட்கள் யாரோடும் பேசாமல் தனிமையில் இனிமை காணவும் முடியும்.

கே ; உங்களைத் திரையுலக மார்க்கண்டேயன் என்கிறார்கள். அதற்கேற்ப எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறீர்கள். இதற்கு உங்களுடைய கட்டுப்பாடான வாழ்க்கை மற்றும்யோகா இவைதான் காரணமா அல்லது மனம் ஒரு பெரிய பங்கைச் செலுத்துகிறதா?


சிவகுமார் ; உயிரும் அறிவும் இணைந்த சூக்கும் உடல் வேறு, ஐந்து புலன்களுடன் கூடிய இந்த உடல் வேறு. நான் என்ற வார்த்தை இந்த இரண்டு உடம்புகளின் கூட்டு வடிவம். முதலில் சொன்ன உயிரும் அறிவும் இணைந்த ‘நானுக்கு வயதாவதே இல்லை. அது என்றும் சுறுசுறுப்பாகச் செயல்பட, ஆரோக்கியமாக இருக்க பௌதிக உடம்பை நாம் தளர்ச்சியடையவிடாமல் உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி யோகா செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.எனக்கு என்றுமே வயதாகாது. வயோதிகம் எனக்கு வராது. காலண்டரில் பிறந்த வருடம் கூடிக்கொண்டே போகலாம். நான் என்றும் இளமையாக நிரந்தரமாக இருப்பேன். என்னைச் சுற்றியுள்ளோர் வயதாகி இறக்கலாம். பூமிக்கும் அழிவு ஏற்படலாம். நான் அழிவற்றவன், நிரந்தரமானவன் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுதான் எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இளமைத்தோற்றத்தைக் காப்பாற்றத் தூண்டுகிறது. அறிவு பூர்வமாக யோசித்தால் இது முட்டாள்தனம் என்று எனக்குத் தெரியும். இங்கு நான் அறிவைப் பயன்படுத்துவதில்லை. மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்டதைபபெற்றுக்கொடுக்கும். மனது லாஜிக் பார்க்காது. மனதில் நீ ஒரு நாள் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது முயற்சியாகி ஒரு நாள் உன்னைப் பணக்காரனாக்கிவிடும். மனதில் நீ உன் நண்பனைக் கொலை செய்யப்போகிறாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நீ நிச்சயம் கொலைகாரனாகிவிடுவாய் என்று காப்மேயரும் தம்முடைய நூலில் சொல்கிறார்.
ஒரு நாள் நான் போற்றப்படுவேன் என்றுபதினாறு வயது முதல் ஒரு குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முடிந்தவரை நல்லவனாக, அனைவரையும் நேசித்து அன்பு காட்டுபவனாக வளர்வேன் என்பதையும் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய ஆழ்மனதின் லட்சியம்தான்.


கே ; சரி, திரைபடத்துறையிலிருந்து சட்டென்று தொலைக்காட்சிக்கு வந்த பெரிய கதாநாயகன் நீங்கள்தான். தொலைக்காட்சி சீரியல்களில் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே அதிலிருந்து வெளிவந்து மேடைகளில் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்போது இதையே தொடரவும் செய்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கும் மனம்தான் காரணமா?

சிவகுமார் ; ஆமாம் மனம்தான் காரணம்....... உனக்கு எழுபது வயதாகிறது. நீ என்ன பெரிதாகச் சாதித்துவிட்டாய்? நீ காந்தியில்லை, காமராஜர் இல்லை, கம்பன் இல்லை. உன்னுடைய துறையில் எம்ஜிஆரும் சிவாஜியும் அரசியலிலும் கலையுலகிலும் சாதித்ததை நீ நெருங்க முடியாது என்று தலையில் அடித்துச் சொல்கிறது மனம்.

ஏழு ஆண்டுகள் ஓவியம் தீட்டியவன், நாற்பது ஆண்டுகள் ஐம்பது இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவன், எண்பத்தேழு கதாநாயகிகளோடு இணைந்து நடித்தவன் என்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காதே. பழைய குப்பைகளை மூட்டைகளாக்கிச் சுமக்காதே. புகழுக்கு மயங்காதே. இன்னமும் நீ போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நூறு படங்களில் நீ காட்டிய திறமையை உன் பிள்ளைகள் பத்தே பத்து படங்களில் காட்டிவிட்டார்கள். இருநூறு படங்களில் நீ சாதித்ததை இருபத்தைந்து படங்களில் அவர்கள் தாண்டிவிட்டார்கள்.

பிள்ளைகள் புகழில் குளிர் காயாதே.உனக்கு என்று ஒரு வழியைத் தேர்ந்தெடு. யாரும் போகாத வழியாக, எளிதில் யாரும் நெருங்க முடியாத வழியாகப் பார் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் நாற்பது வருடங்கள் நடித்தது போதும். அடுத்தவர் எழுதிக்கொடுத்த வசனங்களை கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்துக் காசு வாங்கியது போதும். உனக்கு நீயே எசமான். உனக்கு நீயே படைப்பாளி. இலக்கியங்களைப் படி; வரலாற்றைப் படி; வாழ்க்கையைப் படி; உன்னுடைய கோணத்தில் அதனை உரையாக்கு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிதொட்டியெல்லாம் போய் ஆயிரம் நாடகங்களில் நடித்த அனுபவம் உனக்கு இருக்கிறது. மக்களை – இந்தியாவின் பல பகுதி மக்களை – மேடை நடிப்பில் மகிழ்வித்தவன் நீ. இப்போது நீயே உரையை எழுது! என்றும் உலகுக்குப் பயன்படும் இலக்கியத்தை, வரலாற்றை, உண்மைச் சம்பவங்களை உரையில் கொண்டு வா என்கிறது.அதன் விளைவுதான் பத்தாயிரத்திற்கும்மேலான கம்பனின் பாடல்களில் ஆயிரம் பாடல்களைப் படித்து, அவற்றில் நூறு பாடல்களைத் தேர்வுசெய்து கம்ப ராமாயணக் கதையை அந்த நூறு பாடல்களுக்கிடையேயும் நூலிழைப்போல் வரவழைத்து பேச்சுமொழியில் இரண்டு மணி பத்து நிமிட நேரத்தில் சொல்லிமுடித்தேன்.

இதற்குக் கிடைத்த பாராட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தியாவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த 2011-ல் முன்னணி நாடாக ஊ.ழலில் திளைக்க வைத்து உலகின்முன் தலைகுனியவைத்த இன்றைய அரசியல்வாதிகளைக் கண்டு உடைந்து நொறுங்கி அன்றைய அரசியல் தலைவர்கள் ஏழு பேரைப்பற்றி ‘தவப்புதல்வர்கள் என்ற தலைப்பில் பதினாறாயிரம் பேர் முன் ஒரு உரை நிகழ்த்தி டிவிடி வடிவமாக்கினேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது போக பள்ளி கல்லூரிகளில் அதனைத் திரையிட்டுக்காட்ட ‘அகரம்முயற்சி செய்துவருகிறது.

கே ; அடுத்து மகாபாரதத்தையும் கம்பராமாயணம் போல் பேச நீங்கள் தயாராகி வருகிறீர்கள் என்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே....மகாபாரதம் கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் அல்லவா......?

சிவகுமார் ; ஆமாம் மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து, படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்று மணி நேரத்தில் சொல்லவேண்டும் என்பதற்காக அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

கே ; உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; எனக்கென்று தெளிவான, முடிவான, முழுமையான அடையாளம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எதிலும் நான் பூரணத்துவம் பெற்றுவிடவில்லை.

நான் ஓவியன்தான். ஆனால் சரித்திரம் படைத்த ஓவியனல்ல. நான் நடிகன்தான். ஆனால் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவனல்ல. நான் யோகா பயிற்சியாளன்தான். ஆனால் என்னைவிட அதிகம் யோகாசனங்கள் செய்து என்னைவிடவும் ஆரோக்கியமாக இதே எழுபது வயதில் இருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். நான் புத்தகங்கள் வழி அறிவை அதிகம் வளர்த்துக்கொண்டவனல்ல. வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் பெற்றவன். ஆனால் சிவாஜியும் எம்ஜிஆரும் பெற்ற அனுபவங்கள் இன்னமும் கடுமையானவை. ஆழமானவை.நான் படித்தவனல்ல, படிக்கிறவன்.படிக்கப் படிக்க என் அறியாமையின் விஸ்தீரணம் கூடிக்கொண்டே போகிறது. அறிய வேண்டிய எல்லை தொடுவானமாகத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.என்னை நல்ல பேச்சாளனாக நான் கருத முடியாது. உயர்ந்த தமிழ் நடையில் உணர்வுபொங்கப் பேசி மக்களை மயக்கும் பேச்சாளர்கள் இங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

என்னுடையது பேச்சு மொழி. கம்பனின் கரடுமுரடான கவிதை வரிகளை கைவண்டி இழுப்பவனும் புரிந்துகொள்ளும் எளிய பேச்சு மொழியில் சொல்லியுள்ளேன் என்பதே உண்மை...............ஆகவே, எதிலும் நான் முழுமை அடைந்துவிடவில்லை. இந்த வயதில் இன்னமும்கூட ஆரோக்கியமாக இருந்திருக்கலாம். இன்னும் மிகச்சிறந்த ஓவியங்கள் தீட்டியிருக்கலாம். இன்னும் ஆழமான வேடங்கள் ஏற்று அற்புதப் படைப்புகளைத் திரையில் தந்திருக்கலாம். ஆக நானே என் முதுகைத் தட்டிக்கொள்ளக்கூடிய சாதனை எதையும் நான் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கே ; உங்களுடைய பேச்சுக்களில் பெண்களைக் கொஞ்சம் அதிகமாகத் தூக்கிவைத்துப் பேசுகிறீர்கள் என்பதுபோன்ற தொனி இருக்கிறதே......?

சிவகுமார் ; உண்மைதான். நான் பெண்களை அதிகமாகப் போற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்கள். அது பாராட்டா விமர்சனமா என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும் பெண்களை நான் படைத்து, காக்கும்- பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும்தான் பார்க்கிறேன். பஞ்சம் நிரம்பிய காலத்தில் என்னைப் பெற்று, கணவனைப் பறிகொடுத்தபின், பாழும்வெயிலில் காய்ந்து, கூலி வாங்காத வேலைக்காரியாய் பொழுது புலர்ந்ததிலிருந்து மறையும்வரை மண்ணோடு மல்லாடி என்னை உருவாக்கிய தாய் தனக்கென்று எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை.

எனக்கு மனைவியாக வந்தவளும் மாமியார் வழியில் நின்று ஏணிமீது நான் மென்மேலும் ஏறிட துணை நின்றாளே தவிர, தன் தேவை, தன்னுடைய விருப்பம், தன்னுடைய சுகம் என்று நினைத்து அதற்காக அவள் எதுவும் செய்துகொள்ளவில்லை. எதையும் என்னிடம் இதுவரைக் கேட்டதும் இல்லை. சாதாரணத் தோற்றத்துடன் ஒரு சராசரிப் பெண்ணாக இறைவன் என்னைப் படைத்துவிட்டான் என்று சலித்துக்கொண்டாலும் இரண்டு அசாதாரணமான பிள்ளைகளை உருவாக்கியதன் மூலம்இன்று பெருமைக்குரிய தாயாக உயர்ந்துவிட்டாள். இன்று அந்தப் பிள்ளைகளிடம் காணப்படும் அத்தனைச் சிறப்புக்களுக்கும் இந்த அம்மையாரே பெரிதும் காரணம்.

கே ; முத்தாய்ப்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; இந்த வீடு, வாசல், குடும்பம், குழந்தைகள் அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, உன்னுடைய ஓவியங்களாலும் உன்னுடைய சிறந்த படைப்புக்களாலும் கிடைக்கின்ற பெருமிதம் இதெல்லாம் மாயை அல்ல, இதுதான் உண்மை. பிறவிகளில் மகத்தானது, முழுமையானது, உயர்வானது, மனிதப்பிறவிதான். தேவர்கள், கடவுளர்கள் எல்லாம் நம் முன்னோர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களே. வானுலகம் சென்று தேவர்களுடன் கைகுலுக்கி கடவுள் பாதத்தில் பூப்போட்டு வணங்கிவிட்டு வந்தேன் என்றெல்லாம் யாரும் இங்கு சொல்லிவிட முடியாது. சென்ற பிறவியில் என்னவாக இருந்தோம், என்னவெல்லாம் செய்தோம் என்பதையோ, அடுத்த பிறவியில் யாராகப் பிறக்கப்போகிறோம் என்ன செய்யப்போகிறோம் என்றோ யாரும் சத்தியமாகச் சொல்லிவிட முடியாதுமகத்தான இந்த மனிதப்பிறவியில் மண்ணுலக வாழ்வில் மக்கள் போற்றும் மனிதனாக, சமுதாயத்திற்குப் பயன்படும் சத்தியவானாக அன்பு கருணை வடிவமாக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதைத்தான் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

33 comments :

R.S.KRISHNAMURTHY said...

கேள்விகளும் பதில்களும் ஒன்றையொன்று மிஞ்சும்படி உயர்ந்த தரத்தில் அமைந்தது நிச்சயமாகத் தற்செயலல்ல! தன்னைத் தாழ்த்தினவன் உயர்த்தப்படுவான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், சிவகுமார்.வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால் என்றும் இன்பமே என்பதைத் தன் மனைவியையும், மக்களையும் பற்றிய மதிப்பீடுகளில் உணர்த்தும் போது சிலிர்க்கிறது. இது போன்ற பல காரணங்களினால் தான், பெரிய, சிறிய திரைகளிலிருந்து இவர் விலகிய போது மக்களை ’ஏன், இன்னம் தொடர்ந்து நடிக்கலாமே?’என்று கேட்க வைத்திருக்கிறது போலும்! மகாபாரத விருந்துக்குக் காத்திருக்கிறோம்! இன்னொன்று, இவ்வளவு அழகான பேட்டியை சிவகுமாரிடமிருந்து பெற்றுத்தந்த உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் நன்றி! வாழ்க், வளர்க!

Anonymous said...

வாராந்தர சஞ்சிகைகளில் காணக்கிடைக்காத பேட்டியும் புகைப்படங்களும்.மிக ‌அருமை.
-Muraleetharan,Switzerland

Anonymous said...

வாராந்தர சஞ்சிகைகளில் காணக்கிடைக்காத பேட்டியும் புகைப்படங்களும்.மிக ‌அருமை.
Muraleetharan,Swiss

ஜீவன்பென்னி said...

Thanks sir...

Amudhavan said...

ஆமாம் வாராந்த பத்திரிகைகளில் வராத புகைப்படங்களாகப் பார்த்துத்தான் இந்தப் பதிவில் வெளியிட்டிருக்கிறோம். அதனை கவனித்துக் குறிப்பிட்டிருக்கும் உங்களுக்கு நன்றி முரளிதரன்.

Amudhavan said...

நன்றி ஜீவன் பென்னி.

Unknown said...

வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் அற்புதமான பேட்டி. எவன் ஒருவன் குடும்பத்தைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறானோ அவனே பூரண மகிழ்ச்சி அடைந்தவனாகிறான். இத பல பேர் அறியாப் பேருண்மை. அதை போகிற போக்கில் வாழும் உதாரணமாக இருக்கிறார் சிவகுமார். வாழ்க அவரும் அவரது குடும்பமும்.

கீதமஞ்சரி said...

\\மகத்தான இந்த மனிதப்பிறவியில் மண்ணுலக வாழ்வில் மக்கள் போற்றும் மனிதனாக, சமுதாயத்திற்குப் பயன்படும் சத்தியவானாக அன்பு கருணை வடிவமாக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதைத்தான் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.\\

முத்தாய்ப்பாய் சொல்லியிருக்கும் கருத்தே இன்றைய காலகட்டத்துக்கு உடனடித் தேவை. தேடலே வாழ்க்கையின் தூண்டுகோள் என்பதை அழகாக விளக்குகின்றன சிவகுமார் அவர்களின் பதில்கள். அருமையான பதில்களை வெளிக்கொணர்ந்த கேள்விகள் எழுப்பிய தங்களுக்கும், சிறப்பான கருத்துக்களை வழங்கிய சிவகுமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றி.

கபீஷ் said...

பேட்டி அருமை. மனசுல தோணினத சென்சார் செய்யாம, போலி தன்னடக்கம் இல்லாம சொல்லிருக்கார் :)
நன்றி அமுதவன் :))

Amudhavan said...

தங்களின் மனப்பூர்வமான பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆர்எஸ்கே.

Amudhavan said...

\\எவன் ஒருவன் குடும்பத்தைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருக்கறானோ அவனே பூரண மகிழ்ச்சி அடைந்தவனாகிறான். இது பல பேர் அறியாப் பேருண்மை\\ சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெண்புரவி. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

Amudhavan said...

நல்ல புரிந்துணர்வுடன் கருத்துச்சொல்லி பாராட்டவும் செய்த கீதா அவர்களுக்கு என்னுடைய நன்றி.

Amudhavan said...

சிவகுமார் எப்போதுமே தம்மை இயல்பாகவே வெளிப்படுத்தும் குண இயல்பு கொண்டவர்தானே. தங்கள் வருகைக்கு நன்றி கபீஷ்.

Rathnavel Natarajan said...

அருமையான, பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி.

Amudhavan said...

ரத்னவேல் ஐயாவுக்கு மிகவும் நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

அருமையான காணக்கிடைக்காத படங்கள், நிறைவான கேள்விகளுக்கு நிஜமான பதில்கள் அற்புதம்.

பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

Amudhavan said...

நன்றி ஏஆர்ஆர்.

ராஜ நடராஜன் said...

கதாநாயக சூர்யா,கார்த்தியின் பிம்பங்களை விட இங்கே அசலான குழந்தை முக புன்சிரிப்பில் மயக்கம்.

நடிகர் சிவக்குமாரின் இன்னொரு முகமான ஓவியன் என்பது துவக்க காலத்தில் பளிச்சிட்டிருந்தாலும் அதனை இன்னும் பட்டை தீட்டவோ அல்லது மார்க்கெட்டிங் செய்வதில் தவறவிட்டு விட்டார் என்பேன்.முந்தைய பதிவில் உள்ள மண்டபத்தூண்களை கீழே உள்ள மனித வடிவங்கள் இல்லாமல் பார்த்தால் காமிராவுக்கு கண் முளைத்த மாதிரியான தோற்றம்.உங்களின் இணைய பகிர்வில்லாமல் ஓவியம் குறித்த இந்தக் கருத்து சாத்தியமா?

ராஜ நடராஜன் said...

ஓய்!கபிஷ்!தேடிப்புடிச்சுத்தான் பின்னூட்டம் போடுவீங்களாக்கும்:)

ராஜ நடராஜன் said...

இதயபூர்வமாகவும் நட்பு ரீதியாகவும் வெளிவந்துள்ள எழுத்துக்காணல் பொதுவெளியில் கிடைக்காத தமிழ்மண நட்சத்திர வாரப் பொக்கிசம்.நட்சத்திர அந்தஸ்தை நிறைவு செய்துள்ளீர்கள்.

எழுத்து நடை சொக்குப்பொடிக்கும், தொடர் பகிர்வுக்கும் நன்றி.

Anonymous said...

சோவின் மகாபாரதமா//
சுத்தம்!!! சிவக்குமார் போவது சிவனியம், மாலியம் சார்ந்த தமிழ் ஆன்மிகப் பாதை என நினைத்தேன்.. இது வைதிக, ஆரிய பாசிசத்தில் போய் முடியும் என்று தோன்றுகிறது. இதற்கு அவர் 70,80களில் பெரும் நடிகர்களின் ஆரவாரங்களின் நடுவிலும் அமைதியாக வந்து சொலித்துச் சென்ற ஒரு விண்மீனாகவே எம் நினைவில் இருந்துவிட்டுப் போகலாம்!!!!

Amudhavan said...

ராஜநடராஜன் தங்களின் சின்னச்சின்ன அழகிய விமரிசனங்கள் அணிவகுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் பதிவுகள் பின்னூட்டங்கள் அத்தனையையும் சிவகுமார் படிக்கிறார். அவரது சார்பில் நானே அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

-/சுடலை மாடன்/- said...

அன்புள்ள திரு. அமுதவன் அவர்களுக்கு,

வணக்கம். அதிக நேரம் செலவழித்து மிகச் சுவையான இடுகைகளை வழங்கி இந்த வார நட்சத்திரப் பகுதியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

சொ.சங்கரபாண்டி

Amudhavan said...

அனானிமஸ் தங்களின் கருத்துக்கள் நேரடியாக சிவகுமார் அவர்களின் பார்வைக்கு............

R.S.KRISHNAMURTHY said...

மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுவது தேவையா என்று தோன்றினாலும், திரு(?) அநானிமஸ் (பெயர் தெரியாத அல்லது இல்லாத) போன்றவர்கள் எங்கும் எதிலும் பார்ப்பனத் துவேஷம் தேடி அலைவது வியப்பாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.ஏன், ஒருவன் பார்ப்பனனாகப் பிறந்ததனாலேயே அவன் வாழும் உரிமையை (குறிப்பாகத் தமிழகத்தில்) இழந்துவிடுகிறானா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? ஒரு ஜோக் சொன்னால் முடிந்தால் ரசிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு ஆராயப் புகுந்தால் என்றுமே சிரிக்க முடியாது!இது எல்லாக் கருத்துக்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

அமுதவன் மன்னிக்க! கிருட்டிணமூர்த்தி அவர்களுக்கு,
துவேசம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை... அதற்குப் பொருள் தேடின், மனுசுமிருதியைப் புரட்டிப் பார்க்க வேண்டும்! அல்லது ஆயிரமாயிரம் ஆண்டுகள் சேரிகளில் வதிந்து மலம் அள்ள பணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சோ போன்ற இனவெறியனை பொதுவெளி ஒன்றில் மேற்கோளிட்டால் இது போன்ற எதிர்ப்பு வராதா போய்விடும்? அண்ணன் சிவக்குமாருக்கு வேண்டுமானால் அவருடன் நடித்த சகநடிகராக இருக்கலாம், ஏனையோருக்கு சோவின் யோக்கியதை தெரிந்ததே. தமிழகத்தில் ஈழத்துப் போராளியர் பயிற்சி பெற்ற போது, அவர்கள் முகாம்கள் இருந்த இடங்களை விலாவாரியாகப் படம்வரைந்து செயவர்த்தனாவுக்குக் கொடுத்தது முதற்கொண்டு, இன்று வரை வட இந்திய ஆங்கில ஊடகங்களில் தமிழ் மக்கள் கருத்து, தமிழ்ப் இதழாளர் கருத்து என பார்ப்பனக் கருத்துக்களை வாயவிழ்த்துக் கொண்டு இருப்பவரைப் பற்றிக் கருத்துப் பதிந்தால், துவேசம் அது இது எனத் தாங்கள் வருவது நகைப்புக்குரியதாகவே இருக்கிறது.
நிற்க, சோவின் தமிழர் விரோதம் தமிழர் அனைவரும் அறிந்ததே! நான் பரிதிமாற் கலைஞர், மருதைய்யன், பொறிஞர் அகன், வரலாற்றிஞர் இராமநாதன், நீலகண்ட சாத்திரியார் போன்றோரின் எழுத்துக்களில் துவேசம் காணவில்லை. மாறாகத் தொன்றுதொட்டு விசம் கக்கி வரும் ஒருவரை இட்டுத் தான் பின்னூட்டிட்டேன். சோவின் ஒரு வசனத்தில் கூட தமிழர் விரோத, மக்கள் விரோதக் கருத்து மறைந்தோ மறையாதோ இருக்கும் என்பதாலே, மேலுள்ள பின்னூட்டு. சோவுக்கு சாதா செய்தி கிடைத்தாலே அல்வா, இதில் புராணம் கிடைத்தால்... !
மூத்த நடிகர்களில் சத்தியராசுக்கு அடுத்து தமிழ், தமிழர், மக்கள் நலனில் அக்கறையுள்ள நடிகர் அண்ணன் சிவக்குமார் என்பதால் மட்டுமே ஏமாற்றத்தால் இக்கருத்து பதியப்பட்டது. இவ்விடுகையின் கருப்பொருளாக சிவக்குமார் அவர்களின் நேர்காணல் இருக்க வேண்டும். என் பின்னூட்டு அல்ல! அதைத் திசை திருப்பியதாக என் பின்னூட்டு இருப்பின் மன்னிக்க!!!!

ஜீவா ஓவியக்கூடம் said...

அருமையான நேர்காணல்....உறுதியும் எளிமையும் தொனிக்கும் கருத்துக்கள்..தங்களுடன் பழகுவது ஒரு அற்புத வாய்ப்பு!

Amudhavan said...

வாருங்கள் அனானிமஸ் தங்கள் கருத்துபற்றி திரு சிவகுமார் அவர்களிடமே பதில் கேட்டேன். தருகிறேன் என்றிருக்கிறார். அவரது பதில் வந்ததும் தனியாகப் பதிவிடுகிறேன். நன்றி.

Amudhavan said...

ஓவியக்கூடம் ஜீவாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Anonymous said...

அருமையான பதிவு ...இன்றய இளைய சமுதாயம் கட்டாயமாக வாசிக்கவேண்டிய ஒரு பதிவு

இராஜராஜேஸ்வரி said...

மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்டதைபபெற்றுக்கொடுக்கும். மனது லாஜிக் பார்க்காது.

சிறப்பான தன்னம்பிக்கை தரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

Amudhavan said...

தங்களின் வருகைக்கு நன்றி பிரசாந்தன்.

Amudhavan said...

நன்றி ராஜேஸ்வரி.

Post a Comment