Saturday, May 9, 2015

ஜெயகாந்தன்……………. ஜெயகாந்தன்……………… ஜெயகாந்தன்!






(நக்கீரன் வெளியீடான ‘இனிய உதயம்’ இலக்கிய மாத இதழ் மே 2015 இதழில் 'ஜெயகாந்தனுக்கு சேவகம் புரிந்த எழுத்து' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் என்னுடைய கட்டுரை)
                            


எழுத்துலகிற்கு வருவதற்கு முன்னால் அகிலன், ஜெயகாந்தன், கல்கி, நாபா, தி.ஜானகிராமன் என்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே என்னுடைய ஆதர்ச கதாநாயகர்களாக எழுத்தாளர்களே இருந்தார்கள். பிறகுதான் சிவாஜிகணேசன், கண்ணதாசனுக்கெல்லாம் மனதில் சிம்மாசனங்கள் உருவாகின. அகிலன் நாபா இவர்களுடனான சந்திப்புகளெல்லாம் நடந்தபிறகும் ஜெயகாந்தன் சந்திப்பு மட்டும் நடைபெறாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. 1980-க்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜெயகாந்தன் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது. 

பெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக South Indian Writers Conference ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் மூன்று நாட்களுக்கான கருத்தரங்கம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அங்கே அழைத்திருந்தார்கள்

ஒவ்வொரு மொழியிலும் அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் யார்யாரோ அவர்கள் அத்தனைப்பேரையும் அழைத்திருந்தார்கள். தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, நீலபத்மனாபன், ஸ்ரீவேணுகோபாலன், ஜி.நாகராஜன், ராஜம் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்ததால் நானும் கலந்துகொண்டேன்

மலையாளத்தில் தகழியைத் தவிர மற்ற பெரிய எழுத்தாளர்கள் அனைவரும் வந்திருந்தனர். அதேபோல கன்னடத்திலிருந்தும் தெலுங்கிலிருந்தும் அன்றைக்குப் புகழோடு இருந்த அத்தனைப் பெரிய எழுத்தாளர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர். கருத்தரங்கம் பெங்களூரிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் நடந்தது

இன்றைக்கு ஒயிட்ஃபீல்டை நிறையப்பேருக்குத் தெரியும். ஏனெனில் .டி பூங்காவே அங்குதான் உள்ளது. அன்றைக்கு அது ஒரு வனாந்தரம். இந்த அமைப்பின் கட்டிடம் மட்டும் பெரிதாக இருக்க சுற்றிலும் அடர்த்தியான காடுபோல் இருந்த பிரதேசம் அது

கருத்தரங்கம் துவங்குவதற்கு முதல் நாளே அகிலன், நாபா, வல்லிக்கண்ணன் ஆகியோர் வந்துவிட்டனர்

வேறு மாநில எழுத்தாளர்களும் வந்திருந்தனர்

அகிலனையும் நாபாவையும் பார்த்தவுடனேயே மற்ற மொழி எழுத்தாளர்கள்............மிஸ்டர் அகிலன், ......மிஸ்டர் பார்த்தசாரதிஎன்று கூப்பிட்டுக்கொண்டே வந்து கைகுலுக்கி அறிமுக வணக்கம் செய்துகொள்வார்கள். “எப்படி இருக்கிறீர்கள்......? எப்போது வந்தீர்கள்.........?” என்பதுபோன்ற சம்பிரதாயக்கேள்வி கேட்பார்கள்

மெட்றாஸிலிருந்துதானே வருகிறீர்கள்?” என்பார்கள்

இந்தக் கேள்விகளெல்லாம் முடிந்தபிறகு அவர்கள் தவறாமல் வேறொரு கேள்வியைக் கேட்பார்கள் “ஜெயகாந்தன் வரவில்லையா?” என்பதுதான் அந்தக்கேள்வி

இந்தஜெயகாந்தன் வரவில்லையா?’ என்ற இந்தக்கேள்வி கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அனைவரிடமும் கேட்கப்பட்டது

நம்ம பெயர்போட்ட பேட்ஜை சட்டையிலே குத்தியிருப்பதற்கு பதில் ‘Jayakanthan not yet come’ என்பதுபோல ஒரு பேட்ஜ் குத்திக்கொள்ளலாம் போலிருக்கிறதேஎன்று ஜோக் அடித்தார் நாபா.

 “ஜேகேவிற்கு இங்கே இத்தனை எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்த்தால் மொத்தக் கருத்தரங்கத்திற்கும் அவர்தான் ஹீரோவாக இருப்பார் போலிருக்கு. ஆனா அவர் வருவாரா என்பது தெரியலை. பல இடங்களுக்கு வருவேன் என்று ஒத்துப்பார். ஆனா வரமாட்டார். இங்கே வருவாரா என்பது தெரியலை. வந்து சேர்ந்தாரானால்தான் நிச்சயம்என்றார் இன்னொரு தமிழ் எழுத்தாளர்

ஆனால், அன்று மாலையே ஜெயகாந்தன் வந்து இறங்கிவிட்டார்
                    
ஜெயகாந்தனை ஏற்கெனவே தமிழ்ப்புத்தகாலயத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன். அதிகம் பேசினதில்லை. இங்கே இன்னமும் மூன்றுநாட்கள் தங்கியிருப்பார் என்பதனால் தனிமையில் சந்தித்து நிறையப் பேசவேண்டும் என்று ஆசை

ஆனால் அவரைப்பற்றிய பிம்பம் பயமுறுத்தியது

அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவர். யாரையும் மதிக்கமாட்டார். எடுத்தெறிந்து பேசுவார்........எதற்காக நாமாக அவரிடம் வலியப்போய் அவமானப்படவேண்டும் என்கிற தயக்கமும் இருந்ததனால் உடனிருந்த பழம்பெரும் எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஜேகேவின் சுபாவம் எப்படி? என்று வல்லிக்கண்ணன் அவர்களைக் கேட்டேன்

ஏனெனில் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அகிலன் நாபா ஆகியோருடன் வல்லிக்கண்ணனும் அன்று மதியம் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்தார். 

ஜெயகாந்தன் சுபாவம் பற்றிக்கேட்டதற்குஅப்படியெல்லாமில்லை. கொஞ்சம் முரடர் போலத்தோன்றும்தான். ஆனால் அருமையான மனிதர். நீங்க வாங்க....நான் உங்களை அறிமுகப்படுத்தறேன். எப்படிப் பழகறார் என்பதை நீங்களே பாருங்கஎன்று சொல்லி ஜெயகாந்தன் அறைக்கு அழைத்துச்சென்றார் வல்லிக்கண்ணன்

நாங்கள் போன சமயம் குளியலறைக்குப் போவதற்குத் தயாராக இருந்தார் ஜெயகாந்தன். இடுப்பில் ஒரேயொரு துண்டு மட்டுமே கட்டியிருந்தார். வாயில் வைத்திருந்த பைப்பிலிருந்து கடைசிப் புகையை இழுத்துவிட்டு பைப்பை உதவியாளரிடம் நீட்டிவிட்டு வந்தார்

வல்லிக்கண்ணனைப் பார்த்ததும் முகமெல்லாம் சந்தோஷமாய் என்னென்னவோ பேசினார். என்னை வல்லிக்கண்ணன் அறிமுகப்படுத்தி வைக்கஏற்கெனவே பார்த்திருக்கேனே இவரைஎன்றார்

"பெங்களூர்ல என்ன பண்றீங்க? கிளைமேட் எப்படி?" என்பதுபோல் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்துவிட்டு குளிக்கச்சென்று விட்டார்

அடுத்த நாள் கருத்தரங்கம் துவங்கிற்று. நிறையப்பேர் கட்டுரை வாசித்தார்கள். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடந்தன. கேள்விகள் கேட்கப்பட்டன

அந்த வருடம் ஞானபீடப் பரிசு அகிலனுக்குக் கிடைத்திருந்ததனால் அவருக்கு விசேஷ மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன

அவரது கட்டுரையைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விடையளித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் சம்பிரதாயமான ஒன்று என்பது போன்றே இருந்தன. மதியம் வேறு மொழி எழுத்தாளர்கள்................ அவர்களுடனான விவாதம் என்று கழிந்தது. 

அன்று இரவு சுமார் ஏழு மணி இருக்கும். ஞானசேகரன் என்பவர் அகிலன் நாபா இருவரும் தங்கியிருக்கும் அறைக்கு ஓடி வந்தார்

ஞானசேகரன் அந்த அமைப்பின் செயலாளர். அவர்தான் மொத்த ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக்கொண்டிருந்தவர். “சார் நாளைக்குக் காலையில ஜெயகாந்தன் பேப்பர் படிக்கணும். அவர் என்ன சப்ஜெக்ட் படிக்கணும் என்பதையெல்லாம் அவருக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி இருக்கோம். இப்ப அவரிடம் போய் உங்க கட்டுரையைக் கொடுங்க சைக்ளோஸ்டைல் பிரதியெடுத்து(அப்போதெல்லாம் ஜெராக்ஸ் கிடையாது) எல்லாருக்கும் விநியோகிக்கணும். நீங்க கட்டுரைப் படிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரிடமும் அந்தப் பிரதி இருக்கணும். நீங்க எழுதிட்டுவந்திருக்கற பேப்பர் கொடுங்கன்னு கேட்டாபேப்பரா என்ன பேப்பர்?” அப்படின்னு திருப்பிக்கேட்கறார் சார். 

'இங்க படிக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் எழுதிக்கிட்டு வரலை. நீங்க என்ன சப்ஜெக்ட் எழுதுனீஙன்றதே தெரியாது. மறந்து போச்சு. நான் வெறும் கையோடத்தான் வந்திருக்கேன்'. அப்படின்றார்

அப்ப நாளைக்கு உங்க பேப்பர் செஷனுக்கு என்ன பண்றது?” ன்னு கேட்டாஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொல்லிச் சிரிக்கறார்

இப்ப என்ன சார் பண்றது?’ என்று பதட்டத்துடன் கேட்டார்

அகிலன் புன்னகைத்துஅதான் ஜெயகாந்தன்என்றவர்அந்த நேரத்துக்கு வேறு யாரையாவது பேச வையுங்கள் கடைசி நாள் வேணும்னா ஜெயகாந்தனை வச்சுக்கலாம்என்று யோசனை தெரிவித்தார்

அதான் சார் நாளை சாயந்திரத்துக்குள்ள கட்டுரைத் தந்துட்டார்னாக்கூட நாளை மறுநாள் அவர் நிகழ்ச்சியை வச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிடுவேன்என்று விடைபெற்றுப்போனார் ஞானசேகரன்

மறுநாள் மாலை. திரும்பவும் அகிலன் அறைக்கு அதே விதமான பதட்டத்துடன் வந்தார் அவர். “சார் இன்னைக்கும் இந்த நிமிடம்வரை கட்டுரை தரலைசார். கேட்டா அதெல்லாம் பிரிபேர் பண்ணமுடியாது அப்படின்றார். இப்ப என்ன செய்யட்டும் சார்?” 

என்ன செய்யமுடியும்? விட்டுர வேண்டியதுதான்என்றார் அகிலன்

அதுவும் முடியாதே சார், மற்ற மொழி ரைட்டர்ஸுக்கு என்னால பதில் சொல்லி மாளலை. எங்கே ஜெயகாந்தன் செஷன்? அவருடைய கட்டுரை எப்போன்னு கேட்டுத் துளைச்சு எடுக்கறாங்களே சார்” 

விஷயத்தை அவர்ட்டயே எடுத்துச்சொல்லிப் பேசிப்பாருங்க” என்றார் அகிலன். 

ஜெயகாந்தன் அறைக்குச் சென்றுவிட்டு அரைமணி நேரம் கழித்துத் திரும்பினார் ஞானசேகரன். “ஜெயகாந்தன்கிட்ட பேசிட்டேன் சார்...........கட்டுரை எழுதி வெச்சுக்கிட்டுப் படிக்கவெல்லாம் முடியாது. வேணும்னா ஒரு அரை மணிநேரம் பேசறேன்றார்” 

சரி, அப்படியே செய்யுங்க”- அகிலன்

அதுல ஒரு சிக்கல் சார்என்றார் அவர். “இந்தக் கருத்தரங்கத்திற்கு எல்லா மொழிகள்ள இருந்தும் எல்லாப் பெரிய எழுத்தாளர்களும் வந்திருக்கீங்க...............  எல்லாரும் எழுதி எடுத்துவந்த கட்டுரையைப் படிப்பது, அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களுக்கு பதிலளிப்பது...............  என்கிறமாதிரிதான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கு. ஞானபீடம் பெற்ற உங்களைப்போன்ற எழுத்தாளர்கள்கூட அதுக்கு உட்பட்டுத்தான் நடந்தீங்க.........,  அப்படியிருக்கும்போது இவர் மட்டும் பேப்பர் எதுவும் படிக்கமாட்டார். வேணும்னா லெக்சர் கொடுப்பார் என்று அறிவிப்பு செய்வது எந்த அளவுக்கு சரிப்படும் என்பது தெரியவில்லை. ‘இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?’ என்று யாராவது கேட்டுட்டா என்ன செய்வது சார்?” என்றார் அவர் பதட்டத்துடன்

நீங்க நினைக்கிறமாதிரி யாரும் அப்படிக்கேட்க மாட்டாங்க. ஆனாலும் ஒரு அமைப்பாளர்ன்ற முறையில உங்க தயக்கம் நியாயமானது. ஒண்ணு செய்யுங்க ஞானசேகரன், மற்ற மொழியைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களை சந்திச்சு விஷயத்தைச் சொல்லிப்பாருங்க. அவங்க ஒப்புதல் தந்தாங்கன்னா ஜெயகாந்தன் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருங்கஎன்றார் அகிலன். 

புறபட்டுச்சென்ற அந்த அமைப்பாளர் சிறிதுநேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். சார் மத்தவங்க கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் சார். We are eager to hear him னு சொல்றாங்க. அவர் பேச்சைக்கேட்க அவ்வளவு ஆர்வமா இருக்காங்க சார்............... நாளைக்காலையில அவருடைய ஸ்பீச்சிற்கு ஏற்பாடு பண்ணிடறேன்என்று சொல்லிப்போனார்

மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்ற அறிவிப்பு சைக்ளோஸ்டைல் பண்ணப்பட்டு அன்றைய இரவே எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது

காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் கருத்தரங்க ஹால் முழுக்க முழுமையான கூட்டம். ஏறக்குறைய வந்திருந்த அத்தனைப் பிரதிநிதிகளும் நிறைந்திருந்தனர்

தமிழில் ஜி.நாகராஜன் மட்டும் ஊருக்குக் கிளம்பிவிட்டிருந்தார்

கோட் சூட் சகிதம் கையில் பைப்புடன் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயகாந்தன்

சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின்னர் ஜெயகாந்தன் பேசுவதற்கு எழுந்தார். எல்லாரும் ஆர்வத்துடன் உட்கார்ந்திருக்க......... “நான் தமிழ்ல பேசட்டுமா?” என்று கேட்டார்

யெஸ்என்று சில குரல்களும்இங்கிலீஷ்என்று சில குரல்களும் ஒலித்தன

சரி தமிழ்ல பேசறேன்........முடிஞ்சா இங்லீஷ்லயும் பேசறேன். இங்கிலீஷ் சரியாக வராவிட்டால் தமிழுக்கு வந்துவிடுவேன்என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பித்தார்

எடுத்த எடுப்பிலேயே அந்த முரட்டு அடி எல்லார் மீதும் விழுந்தது

எனக்கு எப்போதுமே இந்தக் கருத்தரங்கு, செமினார், கான்ஃபரன்ஸ், மீட்டிங்..............இவைகள் மீதெல்லாம் நம்பிக்கையும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இவைகளில் கலந்துகொள்வதிலோ பங்குபெறுவதிலோ எனக்கு உடன்பாடோ விருப்பமோ கிடையாது. இம்மாதிரி கருத்தரங்குகளில் உட்கார்ந்துகொண்டு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று பொழுது போக்குவதைக் காட்டிலும் தெருவிலே போகின்ற ஒருவனை நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் சந்தோஷமும் அதிகம். பயனும் அதிகம்.” என்றார்

தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் நெளிய ஆரம்பிக்க.......மற்ற மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புருவம் சுருக்கி இன்னமும் அதிகமாய் கவனிக்க ஆரம்பித்தார்கள்

தொடர்ந்து அடுத்த சம்மட்டி விழுந்தது

எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்ற ரீதியில் ஆரம்பமாயிற்று அவருடைய பேச்சு

ஆரம்பம்தான் இப்படி இருந்ததே தவிர அதன்பிறகு சீரியஸான விஷயத்துக்குப் போய்விட்டார். தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து ஏறக்குறைய முக்கால் மணிநேரத்துக்குத் தொடர்ந்தார்

அவரது உரை முடிந்ததும் அவரைக் கேள்விகள் கேட்டார்கள்.

பொதுவாக அவரது படைப்புக்கள் பற்றியும் சிறுகதைகள் பற்றியும் கேள்விகள் இருந்தன

இந்த நிகழ்ச்சி முடிந்தது

இது முடிந்ததும் அடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டொரு ஜெயகாந்தனின் நூல்களை அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.(அதன் பதிப்பாளர் திரு முத்து என்பதாக ஞாபகம்)

ஜெயகாந்தனின் பேச்சு முடிந்ததும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தைச் சுற்றி ஒரே கூட்டம். கருத்தரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த நூல்களை வாங்குவதற்குப் போட்டியிட்டனர்

Joseph wept (தமிழில், ‘யாருக்காக அழுதான்?’) என்ற புத்தகம் ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது

வேறு இரண்டொரு புத்தகங்களும் அதே வேகத்தில் முழுமூச்சாக விற்றுத்தீர்ந்தன

அடுத்து இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது

போட்டி போட்டுக்கொண்டு புத்தகங்களை வாங்கிய அந்த மகா மகா எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர்

அவரிடம் கையெழுத்து வேட்டை

தங்களுக்குப் பிடித்த அபிமான நடிகரையோ எழுத்தாளரையோ சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும் சாதாரண ரசிகர்களைப்போல நமது ஜெயகாந்தனைச் சூழ்ந்துகொண்டு மற்ற மொழியைச் சேர்ந்த பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது

ஒன்றை கவனிக்க வேண்டும்

அவர்கள் யாருமே வெறும் ரசிகர்களோ வாசகர்களோ கிடையாது...........அனைவருமே எழுத்தாளர்கள்

அதுவும் அவரவர் மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்

அந்த எழுத்தாளர்கள் இவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு சாதாரண ரசிகர்களைப்போல இவரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால் இவரது பெருமைஇவரது புகழ் என்னவென்பதை நினைத்தபோது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது. 

கையெழுத்து வேட்டையெல்லாம் முடிந்தபிறகு வாயில் பைப் புகைய ஹாலை விட்டு வெளியில் வந்தார் ஜெயகாந்தன். நான் வாசலில் காத்திருந்தேன். 
                           
வணக்கம் சொன்னதும் சிநேகமாகப் புன்னகைத்தார்

வாங்க...........இந்தப் பக்கமா நடந்துட்டு வரலாம்....சாப்பாட்டுக்குத்தான் இன்னும் நேரமிருக்கேஎன்று சொல்லியபடியே என்னுடைய தோள் மீது கையைப் போட்டுக்கொண்டார். “எப்படி இருந்தது பேச்சு?’ என்று கேட்டபடியே நடக்க ஆரம்பித்தார்

பிரமாதமாயிருந்தது....உங்களுடைய பேச்சும் சரி எழுத்துக்களும் சரி என்றைக்குமே இன்னொருவரால் வெல்ல முடியாத ரீதியில்தானே இருக்கும்........உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, அல்லது ஒப்புக்கொள்வதே இல்லை என்று வைத்துக்கொண்டாலும் நீங்கள் சொல்லும் அந்தக் கருத்தை நீங்கள் சொல்லும் ரீதியில் மறுக்கமுடியாது. அப்படி ஒரு கோணம் உங்களுக்கு. அது போன்ற ஒரு பார்வை உங்களுடையதுஎன்றேன்.

 “எப்படிச் சொல்றீங்க?” என்றார்

வேறெதுவும்கூட வேண்டாம். என்னுடைய இந்தக் கூற்றுக்கு உதாரணம் உங்கள் புத்தகங்களின் முன்னுரைகள். அந்த முன்னுரைகளில் நீங்கள் வைக்கின்ற வாதங்கள். எந்த விஷயம் பற்றியும் நீங்கள் செய்யும் வாதங்களும் சரி அந்தக் கோணத்தில் அதை மீறி ஒரு பதில் வந்துவிட முடியாது என்பதுபோல்தான் இருக்கின்றன....அப்படியே வரும் பதில்களும் உங்கள் வாதங்களுடன் மோதிப்பார்க்க இயலாதவையாய் வலுவிழந்து பரிதாபம் காட்டுவதோடு நின்றுவிடுகின்றன. இதற்கு ஒரு விஷயம் காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்பேசிக்கொண்டே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்

நான் பேச்சில் சிறிது இடைவெளி விட.... “ம்ம்..மேலே சொல்லுங்கஎன்றார்

நான் சொன்னேன். “வெல்லும் சொல்!............தமிழில்மங்களச்சொற்கள்இருப்பதைப் போலவேவெல்லும் சொற்களும்உள்ளன. இந்தவெல்லும் சொல்ஒரு சிலருக்கு மட்டுமே கைவருகிறது. அவர்களுக்கு மட்டுமே கைகட்டிச் சேவகம் புரிகிறது. அவர்களுடைய நாக்கிலும் கையிலும் மட்டுமே புரள்கிறது. அவை ஒன்றாகக்கூடி கம்பீரமாகவோ அழகாகவோ அணிவகுத்து வருகையில் மற்ற சொற்கள் எதுவும் அவற்றுக்கு ஈடாக நிற்க முடியாமல் விழுந்துவிடுகின்றன. இன்றைக்கு இந்தவெல்லும் சொற்கள்தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு
ஒன்று கலைஞர்.....
இன்னொன்று கண்ணதாசன்............
மூன்றாமவர் நீங்கள்.....!
இந்த 'வெல்லும் சொல்' ஒன்றும் புதியதல்ல, திருவள்ளுவர் சொல்லிவைத்திருப்பதுதான். ‘சொல்லுக சொல்லை அச்சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து’- என்கிறாரே அந்தவெல்லும்சொல்லைவைத்திருப்பவர் நீங்கள்” 

ஓஹ்ஹோஎன்று பெரிதாகச் சத்தமெழுப்பி அட்டகாசமாகச் சிரித்தார் ஜெயகாந்தன்

எந்த பதிலும் சொல்லவில்லை

எல்லாம் ஓகே...உங்களிடமும் சரி ; கண்ணதாசனிடமும் சரி ஏகப்பட்ட முரண்பாடுகள். அவைகளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லைஎன்றேன்

குறிப்பாக என்ன முரண்பாடு?” 

குமுதத்தில் ஒரு பக்கம் எழுதினீர்களே அவற்றிலேயே எவ்வளவு முரண்பாடு....இப்போது நீங்கள் பேசிய பேச்சில்கூட நிறைய முரண்பாடுகள் இருந்தனவே” 

முரண்படுகிறவன்தான் மனிதன் என்றார் ஜெயகாந்தன் அழுத்தமாக

உண்மைதான்..ஆனாலும்” 

இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”என்றார். 

புரியலைஎன்றேன்

புரியலை?” என்றார் குரலை உயர்த்தி

இல்லை” 

சொல்கிறேன்.......நேற்று மாலை நீங்கள் என்னைப் பார்க்க வல்லிக்கண்ணனுடன் என்னுடைய அறைக்கு வந்தீர்கள் அல்லவா............அப்போது நான் என்ன உடுத்தியிருந்தேன்?” 

துண்டு

 “என்ன துண்டு? கோவணம் என்று சொல்லுங்கள்......நேற்றைக்கு நான் கோவணம் கட்டியிருந்தேன். காரணம் அது என்னுடைய அறை. இப்போது இந்தக் கருத்தரங்க ஹாலுக்கு எப்படி வந்திருக்கிறேன்? கோட் சூட் உடுத்தி............! 

அங்கே கோவணத்துடன் இருந்தவன் இங்கே கோட்டும் சூட்டும் உடுத்தி டை கட்டி வந்திருக்கிறேன் எனில் இது என்னுடைய முரண்பாடு........அதாவது என்னளவில் நான் முரண் பட்டிருக்கிறேன் என்று அர்த்தம்

இங்கே கருத்தரங்க ஹாலுக்குள்ளும் நான் கோவணத்துடன் வந்து நின்றிருந்தேன் என்றால் மற்றவர்களை முரண்படுத்துகிறேன் என்று அர்த்தம்” 

அவர் பேசுவதைக் கேட்டபடியே நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது

சுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த அந்த வனாந்திரத்தில் அவர் பாட்டுக்குத் தம்மை மறந்து பேசிக்கொண்டே வந்தார். பாரதி வள்ளுவர் என்று நிறையப்பேர் அவர் பேச்சில் வந்தனர்.

அவரது அறை வந்தது. அறை வந்ததும் சிரித்துக்கொண்டேஅதிகம் பேசி போரடிச்சுட்டேனா?” என்றார்

அதிகம்தான் பேசினீர்கள்...........ஆனால் போரடிக்கவில்லை” என்றேன்.

எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம்என்றார்.

அதுதான் ஜெயகாந்தன்

(இது ஒரு மீள் பதிவுதான். ஏற்கெனவே என்னுடைய வலைத்தளத்தில் உள்ளது)









23 comments :

”தளிர் சுரேஷ்” said...

ஒரு பெரிய எழுத்தாளருடனான உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

வருண் said...

நான் இப்போத்தான் இக்கட்டுரையை வாசிக்கிறேன் சார். என்ன சொல்றது, ஜெயகாந்தன் தன் மனசாட்சிக்கு உண்மையானவனாகத்தான் இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த நல்லவைகளை நாம் நிச்சயம் எடுத்துக்கணும். அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார். ஏன் "சரியாகச் சொன்னீர்கள், நானும் கேவலம் மனிதன் தான். என்னை நீங்கள் வணங்க வேன்டியதில்லை"னு அவர்களை தட்டிக் கொடுப்பார் என்றுதான் நம்புகிறேன். :)

Amudhavan said...

தளிர் சுரேஷ், தங்களின் கருத்திற்கு நன்றி.

Amudhavan said...

\\அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார்.\\

அப்படித்தான் இருந்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன் வருண். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவைதான் நிறைய இருக்கின்றன. நேரடி சந்திப்புக்கள் குறைவுதாம். இந்தச் சந்தர்ப்பத்திற்குப் பிறகு இன்னமும் ஒரேயொருமுறை ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும்
அவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்யமாகவே இருந்தது.
த.ம.1

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் அனுபவப் பகிர்வு அருமை ஐயா
படித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

"பட் பட்" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்...

சம்மட்டி அடி யப்பா...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.
//“எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்”//
இப்படி சொல்வதற்கு உண்மையில் நெஞ்சுரம் வேண்டும்.

ஜாம்பவான்களுடனான உங்கள் நேரடி அனுபவங்களை விவரிக்கும் பாங்கு அருமை.

Amudhavan said...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
\\ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும் அவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்!\\
முஹம்மது நிஜாமுத்தீன், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்யமாகவே இருந்தது.\\
தங்களின் கால்வலி எப்படி இருக்கிறது சார்? தங்களின் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

கரந்தை ஜெயக்குமார் said...
\\படித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு\\

ஒரு கட்டுரையோ, கதையோ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்னதைத்தான் உதராணமாகச் சொல்வாராம் எஸ்ஏபி. சுவாரஸ்யமாக இருந்தது என்பது உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது. நன்றி ஜெயக்குமார்.



Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\"பட் பட்" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்... சம்மட்டி அடி யப்பா...!\\

நன்றி தனபாலன்.


Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

\\ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.\\

முரளிதரன் தங்களின் இந்தக் கருத்தும் சரி, விவசாயிகள் பற்றிய ஜெயகாந்தனின் கருத்திற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் மிகவும் சரியானவையே. அப்படிச் சொல்ல தனி நெஞ்சுரம் வேண்டும் என்பது உண்மைதான். அதுவும் அத்தனை எழுத்தாளர்கள் நிரம்பிய சபையில்.....

சார்லஸ் said...

சார்

ஜே. கே யுடன் உங்களின் சந்திப்பு அருமை . அவரை பலர் முரண்பட்டவராகவே பார்க்கின்றனர். ஆனால் அவருடைய சிந்தனையும் எழுத்தும் தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு எழுச்சியை கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது . அவருடைய எழுத்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியதை மறைக்கவும் முடியாது. பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.

Amudhavan said...

சார்லஸ் said...
\\பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.\\
வாருங்கள் சார்லஸ், உங்களுடைய இந்தக் கருத்தை நான் ஜெயகாந்தனுக்கானது என்று மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். இங்கிருந்து நூல் பிடித்த மாதிரி வேறு எங்கும் இந்தக் கருத்து போய்விடக்கூடாது. ஏனெனில், ஜெயகாந்தன் சிறுவயதிலிருந்தே- அதுவும் புகழ் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படித்தான் நடந்துகொள்வார் என்று அவருக்கு நெருங்கியவர்கள் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலரைப் போல புகழ் பெறுவதற்கு முன்பு பணிவும் பதவிசுமாக இருந்துவிட்டு ஓரளவு புகழ் வந்தபிறகு அடாவடியாக நடந்துகொள்வதும், அப்படி நடந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஞானச்செருக்கு இருப்பதாக உலகம் நினைக்கட்டும் என்று அவர்கள் நினைப்பதும்கூட இங்கே வழக்கமாயிருக்கிறது.

காரிகன் said...

அமுதவன் சார்,

ஜே கே ஒரு சகாப்தம் என்பதில் அவரைப் பிடிக்காதவர்கள் கூட உடன்படும் ஆளுமை கொண்டவர் அவர். முரண்பாடுகளின் அட்டகாசம். ரசிக்கக் கூடிய எழுத்தில் வந்திருக்கும் நல்ல கட்டுரை. மீள் பதிவாக இருந்தாலும் இப்போதுதான் படிக்கிறேன். பாராட்டுக்கள்.

சைக்கிள் கேப்பில் என்று சொல்வதுபோல ஞான செருக்கு என்று ஒரு நண்பர் எதையோ நுழைக்க முயன்தற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் படித்து ரசித்தேன். கடைசியில் ஜே கே வின் அடையாளமாக இந்த திமிர் தான் நிலை பெறப் போகிறது. ஞான செருக்கு புகழாரங்கள் எல்லாம் வேலைக்காகாது.

சார்லஸ் said...

ஜே. கே அவர்கள் சிறு வயதில் ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் பிரிவில் சில காலம் வேலை செய்ததாக அறிந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் அவரிடம் வந்த பலரின் படைப்புகளை வாசிக்க வாசிக்கத்தான் அவருக்குள் இருந்த எழுத்தாளன் வெளியே வந்தான் . பிறப்பில் வந்த அந்த எழுத்தாற்றல் அப்போதுதான் பிறந்தது. அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் செருக்குடன் பேசிக் கொண்டிருந்தால் என்றைக்கோ வேலையை விட்டு துரத்தப்பட்டிருப்பார் . எழுத்தாளனாகி ஒரு பெரிய கௌரவம் வந்த பிறகுதான் கர்வமே வந்திருக்கும் . பிறந்ததிலிருந்தே செருக்குடன் எவரும் இருக்க முடியாது. படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் . நீங்கள் எனக்காக யாரைக் குறிப்பிட வந்தீர்களோ அவருக்கும் அப்படிதான் நிகழ்ந்திருக்கும் . இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் . புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் . எழுத்துக்கு செருக்கு இருந்தால் இசைக்கும் செருக்கு இருந்துவிட்டு போகட்டுமே!

Amudhavan said...

சார்லஸ் said...
\\படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் .\\
கண்ணதாசன் பாடினாலும் பாடினார், கண்டபடி எல்லாருமே அதனை எடுத்தாள ஆரம்பித்துக் கொச்சைப் படுத்திவிட்டார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
\\இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் .\\
நிச்சயம் இவருக்கு ஒரு பார்வையும், மற்றவர்களுக்கு அவர்கள் யார் என்ன சாதித்திருக்கிறார்கள் அவர்களின் துறையில் அது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துத்தான் மற்றவர்களுக்கு என்ன மாதிரி பார்வை என்பதை நான் தீர்மானித்துக்கொள்கின்றேன்.

\\புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் .\\
எல்லாருக்கும் செருக்கு வருவதில்லை என்பதுதான் உண்மை. இதே கட்டுரையில் அகிலனைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறேன். அவருக்கு அதே கருத்தரங்கில் எந்தமாதிரியான மரியாதை இருந்தது என்பதையெல்லாம் நேரில் பார்த்தவன் நான். அதுமட்டுமல்ல, அகிலன் வீட்டிற்கு அப்போது ஆர்.வியும், ஓ.வி.அளகேசனும்,கா.ராஜாராமும் சர்வசாதாரணமாக வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள். அவருடைய காலத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து ஞானபீடம் வரையிலும் அத்தனை விருதுகளையும் தமது படைப்புக்களுக்காக வென்றவர் அவர். மிகச்சாதாரண மனிதர்களையும் அந்த அளவு மதித்து மரியாதைக் கொடுத்துத்தான் நடத்துவார். 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' என்பதும் அதே கண்ணதாசன் வரிதான்.
'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று எழுதிய கண்ணதாசன்கூட மனிதர்களை மிகவும் அதிகமாக மதித்து மரியாதையுடன் பழகுபவரே.





மணவை said...

அன்புள்ள திருமிகு.அமுதவன் அய்யா,

‘ஜெயகாந்தன்’ பற்றி நக்கீரன் வெளியீடான ‘இனிய உதயம்’ இலக்கிய மாத இதழ் மே 2015 இதழில் 'ஜெயகாந்தனுக்கு சேவகம் புரிந்த எழுத்து' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும்
தங்களின் கட்டுரையை வலைத்தளம் மூலம் படிக்கின்ற வாய்ப்பைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

பெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஜெயகாந்தனுடம் அனுபவப் பதிவு உயிரோட்டமாக இருந்தது.

நான் விரும்பும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்கு முக்கிய இடம் உண்டு. மிகவும் இரசித்துப் படித்தேன்.

‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்.....!

-முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....!’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம்.

“முரண்படுகிறவன்தான் மனிதன்”

“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”

-நன்றி.

த.ம. 6.

-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in








Amudhavan said...

manavai james said...
\\‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்.....! -முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....!’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம்.
“முரண்படுகிறவன்தான் மனிதன்”
“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”\\
மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கு நன்றி. நான் எழுதிய இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த வரிகளை நீங்களும்- உங்களுக்கும் பிடித்த வரிகளாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தங்கள் வலைத்தளத்தில் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக உள்ளன.



ஜோதிஜி said...

கூட்டம் குறித்து அவர் சொன்னது முற்றிலும் உண்மை. பல இடங்களில் நானும் இப்படி அவஸ்த்தைப்பட்டு பாதியில் எழுந்து வந்துள்ளேன். நான் சந்தித்த மனிதர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு புத்தகம் எழுத நீங்க நினைத்தால் என் கணக்குப்படி ஆயிரம் பக்கங்கள் வரக்கூடும். நீங்க மனசு வைக்க மாட்டுறீங்களே?

Amudhavan said...

உங்களையும் சந்தித்தபிறகு அதையும் சேர்த்து எழுதிருவோம். சரியா?

Post a Comment